In சினிமா சினிமா விமர்சனம்

சாமுராய்கள் & Last Samurai, The (2003)



சாமுராய்கள் பற்றி நான் முதன்முதலில் அறிந்தது பள்ளிப்பருவத்தில் இரண்டாம் உலகப்போரைப் பற்றி ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்த பொழுது அமேரிக்கா ஜப்பானின் மீது அணுகுண்டு போட்டதற்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிட்டது எனக்கு மிகுந்த ஆச்சர்யமளித்தது. அதாவது ஜெர்மானியர்களையோ இத்தாலியர்களையோ போலில்லாமல், ஜப்பானியர்கள் இறக்கும் வரை போரிடுபவர்கள் என்றும் 1945ன் இறுதிகளில் ஜெர்மனி, மற்றும் இத்தாலி சரணடைந்துவிட ஜப்பானியர்கள் மட்டும் சரணடையாமல் இறக்கும் வரை சண்டையிட முடிவுசெய்ததாகவும். அமேரிக்கா ஜப்பானிற்குச் சென்று தரைவழியாகவோ, கடல்வழியாகவோ ஜப்பானை வீழ்த்துவதன் பொருட்செலவும் நேரத்தையும் கருத்தில் கொண்டு ஜப்பானை சரணடையச்செய்யவே அணுகுண்டு போட்டது என்பதான ஒன்றை என் வரலாற்று ஆசிரியர் சொல்லியிருந்தார்.



அந்தக்காலத்தில் ஆசிரியர் சொல்வதே வேதவாக்கு, எதிர்த்து கேள்வி கேட்கவோ, இல்லை அதற்கு எதிரான ஒன்று இருக்குமென்றோக்கூட அறியாத வயது அது. அப்படி ஜப்பானியர்கள் சண்டை செய்ததற்கு முக்கிய காரணமாக ஆசிரியர் சொன்னது, ஜப்பானியர்கள் அனைவரும் சாமுராய்கள் என்று அதாவது தோல்வியை ஏற்றுக்கொள்ளாதவர்கள், சாகும்வரை போராடுபவர்கள். அதே போல் சரணடைந்தபிறகு ஜப்பானிய மன்னர், மக்களிடம் அவர்களை காப்பாற்ற முடியாததற்கு மன்னிப்பு கேட்டதாகவும் சொல்ல மனதில் ஜப்பானியர்கள் பற்றிய மதிப்பு அதிகமானது. உண்மையில் ஜப்பானியர்களைப்பற்றியோ, சாமுராய்களைப்பற்றியோ எதுவுமே தெரியாத நிலையில் ஏற்பட்ட ஒரு ஆர்வம் அது.

சாமுராய்

சாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழிற்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய ராணுவத்தில் இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இந்த வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். புஷிடோ என்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகளை எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது.



சாமுராய்களின் மிகப்பிரபலமான செயலான, தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ கொல்லப்படுவது கூட அவர்களுடைய சட்டதிட்டங்களில் ஒன்றே. இதில் செபுக்கு என குறிப்பிடப்படும் முறையில் அவர்களின் வயிற்றில் இடத்திலிருந்து வலமாக வெட்டி சரணடையாமல் கொல்லப்படுவர். இதுவே பெண்கள் இந்த செபுக்குவை செய்யும் முறை வேறுபடும், அவர்கள் தங்களின் வாய்வழியாக வாளை நுழைத்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அதற்கு முன்னர் அவர்களுடைய கால்கள் கயிற்றால் பிணைக்கப்படும், ஏனென்றால் அவர்களின் இறப்பிற்கு பிறகு அவர்களின் உடல் தவறான பார்வைக்கு உள்ளாவதைத் தடுக்கவே. சாமுராய்களின் ஒழுக்க முறைகளில் மிகவும் முக்கியமானது ஒரு தலைவருக்கு கீழ்படிந்து வாழ்வது, சுயக்கட்டுப்பாடு, மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய, புராதனக் கோட்பாடுகளுடன் வாழ்வது. இவர்கள் பெரும்பாலும் மன்னர்களின் பாதுகாவலர்களாகவும் அவர்களின் சேவகர்களாகவுமே இருந்து வந்தனர்.



ஹியான் காலம் (794 – 1185)

சாமுராய்களின் தேவை இந்தக்காலத்தில் அதிகரித்தது, நிலச்சுவாந்தார்கள் அவர்களுடைய உடைமைகளைப்பாதுகாக்க இதுபோன்ற சாமுராய்களை வேலைக்கு அமர்த்தினர். இந்தக்காலத்தின் முடிவில் இருபெரும் சாமுராய் இனம் இருந்துவந்தது. ஒன்று மினமோட்டோ இனம், மற்றொன்று டைய்ரா இனம். இவர்கள் ஜப்பானின் பெரும்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பிறகு தங்களுக்கிடையில் ஆதிக்கத்திற்கான போட்டியில் ஈடுபட்டுவந்தனர்.

கமாகுரா காலம்(1192 – 1333)

கி.பி. 1185ல் மினமோட்டா இனத்தினர் டைய்ரா இனத்தினரை வென்றனர். இதன் காரணமாக மினமோட்டா யோரிட்டோமோ ஒரு இராணுவ ஆட்சியை காமகுரா காலத்தில் தோற்றுவித்தார். ஷோகுன் எனப்படும் இராணுவத்தின் உயர்ந்த அதிகாரியாய் இருந்ததால் அவர் ஜப்பானின் மன்னராக தன்னை அறிவித்துக்கொண்டார்.

முரோமச்சி காலம்(1333 – 1573)

இந்தக் காலத்தில் ஜப்பானின் பல உள்பிரிவுகளாக பிரிந்து தனித்தனியா சாமுராய் இனங்களின் கையில் இருந்துவந்தது. இவர்கள் தங்களுக்கிடையில் பெரும்பாலும் போரிட்டு தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்தனர். இந்தக்காலத்தில் சாமுராய்களின் ஆதிக்கம், அல்லது தேவை அதிகமாகயிருந்தது. போர்காலத்தைத்தவிர இடைப்பட்ட காலத்தில் சாமுராய்கள் நிலங்களில் விவசாயமும் செய்துவந்தனர்.

அகிரா குரோசோவா எடுத்தப்படங்கள் பெரும்பான்மையானவை இந்தக்காலத்தைப்பற்றியதுதான்.

அழுசி-மோமோயாமா காலம்(1573 – 1603)

டோயோடோமி ஹிடேயோஷி ஜப்பானின் சிறுசிறு பகுதிகளை ஒன்றிணைத்தப்பின், மக்களை இனவகைப்படுத்தும் முறையை தோற்றுவித்தார். இதுபின்னர் டோகுகவா லேயாசு என்பவராலும் அவருடைய வழித்தோன்றல்களாலும் நிறைவேற்றப்பட்டது. ஹிடேயோஷி சாமுராய்களை வகைப்படுத்தினார் அதாவது விவசாயம் செய்யும் சாமுராய்களையும், போரிடும் சாமுராய்களையும் வேறுபடுத்தினார். அதற்குப்பின்னர் போரிடும் சாமுராய்கள் மட்டும் தான் வாளை அணிந்திருக்கலாம் என்ற சட்டத்தையும் கொண்டுவந்தார்.

இடோ காலம்(1603 – 1868)

இந்தக்காலத்தில் மக்களின் இனப்பாகுபாட்டில் முதல் இடத்தில் இருந்தவர்கள் சாமுராய்கள், இவர்களுக்குப்பின்னர் விவசாயிகள், கலைஞர்கள், மர மற்றும் இரும்பு வேலை செய்பவர்கள் என ஜப்பானிய இனப்பாகுபாடு இருந்துவந்தது.

அவர்களின் நிரந்தர குடியிறுப்பு பிரதேசத்தை உருவாக்கிக் கொள்ள கட்டுப்படுத்தப்பட்டார்கள் சாமுராய்கள். பின்னர் அவர்களுக்கான கூலி தானியங்களாய் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் அவர்களின் நிரந்தரக்குடியிறுப்பு சிறிது சிறிதாக அழிக்கப்படத்தொடங்க, 1615ல் டோகுகவாவின் எதிரி அழிக்கப்பட்டுவிட, ஒருவகையான அமைதியான சூழ்நிலை ஜப்பானில் தொடங்கப்பட்டது. பின்னர் இது 250 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக சாமுராய்களின் தேவை இல்லாமல் போனது. சாமுராய்கள் போரிடுவதை விட்டுவிட்டு மற்ற தொழில்களை செய்பவர்களாக மாறினர். கிட்டத்தட்ட 1868ல் ஜப்பானில் சற்றேறக்குறைய சாமுராய் இனம் வழக்கொழிந்தது.

சாமுராய்களின் கொள்கை

ஆரம்பக்காலத்தில் இருந்து புத்த மதக்கொள்கை மற்றும் ஜென் கொள்கைகளைப் பின்பற்றி வந்தனர் சாமுராய்கள் அதேசமயம், மிகக்குறைவாக கன்பூஷியஸின் மற்றும் ஷின்டோவின் கோட்பாடுகளும் இவர்கள் வாழ்க்கையில் பின்பற்றப்பட்டிருக்கிறது.

ஆயுதங்கள்



சாமுராய்களைப்பற்றிய கதைகளைப்போலவே அவர்களுடைய ஆயதங்களைப்பற்றிய கதைகளும் அதிகம். ஆரம்பத்தில் பார்த்த புஷிடோவின் வழிகாட்டுதலில் சாமுராய்களின் ஆத்மாவானது அவர்கள் பயன்படுத்தும் கடனா என்ற முக்கியமான வாளில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல் சாமுராய்கள் அந்த வாளுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களை வழிபடுத்துவதின் ஒரு முக்கிய பங்கு அவர்களின் வாளிற்கு உண்டென்பதைப்போன்ற தத்துவங்கள் ஜப்பானில் நிறைய இருந்துவந்துள்ளது.



இந்த கடானா என்றழைக்கப்படும் வாளை உருவாக்குவதற்கு சில குறிப்பிட்ட முறைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர் சாமுராய்கள். அதன் நீளம், அகலம், வலிமை பற்றிய நிறைய விதிமுறைகள் இருந்துவந்துள்ளது. சாமுராய்களைப்போலவே கடானாவின் வடிவமும் ஆரம்பக்காலத்தில் இருந்தே நிறைய மாறுபாடுகளை சந்தித்துவந்துள்ளது.



இந்த கடானாவைத்தவிர வில், பிச்சுவா, சிறிய கத்திகள் போன்றவற்றை சாமுராய்கள் பயன்படுத்திவந்துள்ளனர்.

த லாஸ்ட் சாமுராய்



இந்தப்படம் 2003ல் வெளிவந்தது, பெரும்பாலான டாம் படங்களைப்போலவே இந்தப்படத்தையும் நான் வெளியான சில வாரங்களில் பார்த்திருந்தேன். சில படங்கள் நமக்குள் தீவிரமான ஒரு அதிர்வை உருவாக்கும் என்னைப்பொறுத்தவரை என்னில் கொஞ்சம் அதிர்வை உண்டாக்கிய படம் இந்த த லாஸ்ட் சாமுராய்.

இந்தப்படம் நான் பார்த்த டாம் படங்களில் மிகச்சிறந்ததொன்றும் கிடையாது, போர்க்காட்சிகள் சம்மந்தபட்ட காட்சிகளின் படியும் நான் பார்த்த மிகச்சிறந்த படமாக இதைச்சொல்லமுடியாது. ஆனால் இதையெல்லாம் மீறிய ஒன்று இந்தப்படத்தில் எனக்குப்பிடித்திருந்தது.

நாதன் அல்கெரன், ஜார்ஜ் ஆர்ம்ஸ்டிராங் கஸ்டர்(உண்மை கதாப்பாத்திரம்) என்னும் கமெண்டரின் கீழுள்ள இராணுவத்தின் ஒரு தளபதி, படத்தில் அவருடைய மிகப்பிரபலமான ‘பாட்டில் ஆப் லிட்டில் பிக்ஹார்ன்’ ல் பங்குபெற்றதாக அறியப்படுபவர். இவர்களுடைய ராணுவம் அமேரிக்க சிவில் யுத்தம் மற்றும் இந்தயப்போர்களில் பங்குபெற்றது. குறிப்பிட்ட அந்தப்போரில் மிகக்குறைவான தன்னுடைய படையை அமேரிக்கப்பழங்குடியினரின் பெரும் படையை எதிர்த்து போரிடவைக்க அவரின் படை நிர்மூலமாக்கப்பட்டது. தோல்வி முன்பே தெரிந்திருந்தும் இந்தப்போரில் கலந்துகொண்ட கஸ்டரின் ஒரு படைப்பிரிவு தளபதி தான் நாதன் அல்கெரன். நன்றாகத்தெரிந்தும் இப்படி சக போர்வீரர்களை இழந்ததால் தன்னுடைய ஏதோவொன்றை தொலைத்ததைப்போல் இருக்கும் அல்கெரன் தன்னுடைய தளபதி பதவியில் இருந்து விலகி, துப்பாக்கிகள் பற்றிய காட்சிகளை நடத்துபவராக இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஜப்பானின் மன்னர், தன்னுடைய படைகளுக்கு துப்பாக்கி பயிற்சியளிக்க விரும்ப அதற்காகச் செல்லும் அல்கெரனின் மற்றுமொறு முன்னால் கமெண்டர் அவரையும் தன்னுடன் வருமாறு அழைக்க சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அல்கெரன் ஜப்பான் வருகிறார். இங்கே தொடங்கும் கதை.

இங்கே ஜப்பான் வந்ததும் மன்னரின் படைகளுக்கு அல்கெரன் பயிற்சியளித்துக் கொண்டிருப்பார். பயிற்சியின் ஆரம்ப நிலையிலேயே மன்னர் தன்னுடைய படைகளை தன்னுடைய எதிரியான சாமுராய் கட்ஸுமோட்டோவிற்கு எதிராக போர்புரிய அனுப்புவார். அல்கெரன் எவ்வளவோ தடுத்தும் அனுப்பும் படைகள், துப்பாக்கிகள் கைவசம் இருந்தும் சண்டையில் சாமுராய்களின் வாள், அம்பு, மற்றும் வேல்களுக்கு பலியாகி பாதிபேர் சண்டையிலிருந்த உயிர்பிழைக்க ஓடிவிடுவார்கள். கடைசிவரை சண்டை செய்யும் அல்கெரனை கொல்ல வரும் சாமுராயின் மருமகன் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் அல்கெரனால் கொல்லப்படுவார்.

பின்னர் அல்கெரனை பழிக்குப்பழி வாங்காமல், சாமுராய் கட்ஸுமோட்டோ தன்னுடன் பிணைக்கைதியாக அழைத்து சென்றுவிடுவார். பின்னர் சாமுராய்களின் இடத்திற்கு வந்ததும் அவருக்கு சண்டையில் கிடைத்த காயங்களை குணப்படுத்தப்பட்டு, சிறிது சிறிதாக அவர் சாமுராய்களின் நல்லெண்ணத்தைப்பெறுவார். பின்னர் கடைசியில் சாமுராய்களுக்கும் மன்னரின் படைகளுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் சாமுராய்களின் சார்பாய் பங்கேற்பார். சண்டையில் அல்கெரன் தவிர மற்ற அனைவருமே கொல்லப்படுவார்கள் சாமுராய் உட்பட. இதுதான் கதை.



எனக்கு இந்தப்படத்தில் டாமின் நடிப்பைவிட, கட்ஸுமோட்டோவாக நடித்த கென் வாட்டனபேவின் நடிப்பு பிடித்திருந்தது. தன்னுடைய இருப்பை மிகப்பிரமாதமாக படத்தில் வெளிப்படுத்தியிருப்பார் வாட்டனபே, அதுவும் குறிப்பாக அல்கெரனுக்கும் கட்ஸJமோட்டோவிற்கும் இடையில் நடக்கும் அந்த உரையாடல்களில் பிரமாதப்படுத்தியிருப்பார். சாமுராய்களின் வாழ்க்கை முறைகளை இயக்குநர் மிகஅழகாக வெளிப்படுத்தியிருப்பார். இந்தப்படம் படமாக்கப்பட்ட விதத்திலும் அழகாகயிருக்கும்.



டாம் வாள்பயிற்சியில் ஈடுபட்டிக்கும் பொழுது செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி கட்ஸJமோட்டோவின் மகன், சொல்லும் விஷயங்கள் நன்றாக இருக்கும்."Mind the sword, Mind the people, Mind the Enemy, three many minds." அதேபோல் தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு உதவி செய்துவருவது. சண்டையில் தான் கொன்ற சாமுராயின் மனைவிதான் எனத்தெரிந்து கொண்டவுடன் டாம் படும் அவஸ்தைகள் நன்றாகயிருக்கும்.



கட்ஸுமோட்டோவை அவருடைய இருப்பிடத்தில் வந்து கொல்ல முயலும் காட்சியின் பொழுது நடக்கும் சண்டையும், பின்னர் ஜப்பானிய மன்னரிடம் சென்று தன்னுடைய சேவையைப் பெற்றுக்கொள்ளக்கேட்கும் கட்ஸுமோட்டோவைக் கைது செய்து வைத்திருக்க அவரைக்காப்பாற்ற நடக்கும் சண்டையும் இந்தப்படத்தில் எனக்குப்பிடித்த சண்டைக்காட்சிகள். இந்தப்படம் பெரும்பான்மையான இடங்களில் அல்கெரன் கதைசொல்வதாக நகரும். கடைசியில் அவருடன் ஜப்பானுக்கு வரும் டிமோத்தி ஸ்பெல் சொல்வதாக முடியும், டிமோத்தியின் கதாப்பாத்திரமும் மிகஅழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். படத்தின் இயல்பிற்கு மிகஅழகாக இவர் செய்யும் சில நகைச்சுவைக்காட்சிகள் இருக்கும்.

சாமுராய்களைப்பற்றிய என்னுடைய ஆர்வமும் இந்தப்படம் எனக்கு பிடித்திருந்ததற்கான ஒரு முக்கிய காரணமம். முன்பே சொன்னதுபோல் படமாக்கப்பட்ட முறைதான் இந்தப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒருமுறை நிச்சயமாக பார்க்கவேண்டிய படம்தான் த லாஸ்ட் சாமுராய்.



இயக்கம் எட்வேர்ட் ஸ்விக், கதை ஜான் லோகன், மார்ஷல் எர்க்ஸ்கோவிட்ஸ், எட்வேர்ட் ஸ்விக், கதை ஜான் லோகன் எழுதிய ஒரு கதையின் தழுவலில் எடுக்கப்பட்டது. டாம் குரூயிஸ், டிமோத்தி ஸ்பெல், கென் வாடனபே, கொயுகி ஆகியோர் இந்தப்படத்தில் நடித்திருந்தனர்.

Related Articles

1 comments:

  1. ///கஸ்டரின் ஒரு படைப்பிரிவு தளபதி தான் நாதன் அல்கெரன். நன்றாகத்தெரிந்தும் இப்படி சக போர்வீரர்களை இழந்ததால் தன்னுடைய//

    இது அல்ல.கஸ்டரின் ஒரு சமயத்தில் அப்பாவி செவ்விந்திய இன கூட்டத்தை அழித்திடுவான் அதில் பல பேர் பெண்கள், குழந்தைகள அடங்கும். அதனால் நாதன் அல்கெரன் மன உழைச்சலில் இருப்பான்.

    சமுராய் வாள்கள் பல்வேறு தொழில், கலைநுட்பமுடையது.

    ஒரு வாளால் இன்னொரு வாளை வெட்டலாம். சரியாக பயன்படுத்தினால்.

    ReplyDelete

Popular Posts