In இந்தி சொந்தக் கதை டெல்லி

'மென்டாலிட்டி' மாற்றப்படுமா?

ஒரு மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலைப் பார்ப்பதால் 'மென்டாலிட்டி' மாற்றப்படுமா?

இந்தக் கேள்விக்கு நேரடியாக வருமுன்னர், நான் டெல்லிக்கு சென்ற பொழுது எப்படியிருந்தேன் என்பதைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். அது ஒரு கல்லூரி வகுப்பு நாள் தமிழாசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார், அப்படியானால் இரண்டாம் ஆண்டாக இருக்கவேண்டும். அவர் பெயர் 'கோடையிடி' கோபாலகிருஷ்ணன், தமிழில் டாக்டரேட் வாங்கியவர்(அவர் சொன்னது உண்மையென்னும் பட்சத்தில் இன்னும் பலர் வாங்க பேப்பர் எழுதிக்கொடுப்பவர்.) திருச்சி பட்டிமன்றங்களில் நீங்கள் சர்வசாதாரணமாய் கேள்விப் பட்டிருக்கக்கூடிய ஒருவர்.

எடுத்துக்கொண்டிருந்த பாடம், "தமிழர்களின் வீரம்" உதாரணம் சொல்லிக்கொண்டிருந்தது கம்பராமாயணத்தின் ராமனைப் பற்றி, கொஞ்சமும் கவலைப்படாமல் நான் கேட்டேன் 'சார் தமிழனுக்கும் ராமனுக்கும் என்ன தொடர்பு' என்று. இது உண்மை நடந்தந்து. அப்பொழுதெல்லாம் பட்டிமன்றங்களில் பேசிக்கொண்டிருந்தவன். பாரதிதாசனின் 'தென் திசையைப் பார்க்கின்றேன்' என்ற பாடலின் மொத்த வரிகளையும் சொல்லி வேறேதொபாடலில் வரும், 'மறைந்திருந்து அம்பெய்திய ராமனின் வீரத்தைப் பாரட்டுவதால் தான் நாம் கோழைகளாகிவிட்டோம்' என்று வரும் பாடல் வரிகளையும் சொல்லி ராமனின் வீரத்தை எப்படி தமிழனின் வீரத்துக்கு மதிப்பிடலாம் என்று கேட்டேன்.

நான் அந்தக் காலத்தில் ரொம்ப 'ரா'வானவன். அதற்கு அந்த ஆசிரியர் சொன்ன பதில் ஒருபக்கம் இருக்கட்டும் இன்று இதே போன்ற ஒரு சூழ்நிலை ஏற்படுமானால் 'முகத்தில் ஒரு அலட்சிய புன்னகை' ஏற்படுமே ஒழிய நிச்சயம் எதிர்த்து கேட்டிருக்க மாட்டேன். இது உண்மை, அந்த நிகழ்ச்சியால் நான் இழந்தது அதிகம் அந்த பேராசிரியர், வெளியில் என்னைத் தட்டிக் கொடுத்து தம்பி நீ இதை என்னிடம் தனியில் கேட்டிருக்கணும் உன்னை பெரிய அளவில் பட்டிமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருப்பேன், அற்ப சந்தோஷத்துக்காக ஸ்டூடண்ஸ் மத்தியில் பெயர் எடுப்பதற்காக அங்கே சொல்லி ஒரு நல்ல வாய்ப்பை இழந்திட்ட' இதுவும் அவர் சொன்னது. உண்மை சுட்டது என்னை அவர் என்னிடம் பேசிய இந்த வார்த்தைகள் மாணவர்களிடம் பரப்பட்டது, அவர் தமிழில் பாடம் எடுக்க முடியாத அளவிற்கு நான் பிரிபேர் செய்து வந்து தமிழில் கேள்விகள் கேட்பேன்.

நல்ல வேடிக்கையாய் இருக்கும், இருவரும் பாடல்களால் சண்டை போட்டவாரு இருப்போம். ஆனால் இன்று வேதனையாக இருக்கிறது, நான் இழந்தது என் கண்ணில் தெரிகிறது.(இதற்கும் காரணம் டெல்லிதான்.)

நான் இப்படிப்பட்டவனாய்த் தன் டெல்லிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஏறினேன், 'ரா'வாக, என்னை ஒரு பொரடக்ட் ஆக மாற்றியது டெல்லி, மற்றும் டெல்லி வாழ் உறவினர்கள், அந்த பழக்கவழக்கங்கள்.

அதுவரைக்கும் அடுப்பாங்கரைப் பக்கமே போகாத எனக்கு நான் சாப்பிட்ட தட்டை கழுவக் கூட கற்றுக்கொடுத்தது டெல்லிதான், ருசியில்லாத சாப்பாடாயிருந்தாலும் சாப்பிட்டால் தான் உயிர் வாழமுழியும் என்ற வாழ்க்கையின் ரகசியம் சொல்லித்தந்தும் டெல்லிதான். மனிதர்களிடம் பழகுவதற்கும் ஒரு பிரச்சனையை அணுகும் விதத்தை சொல்லித்தந்ததும் டெல்லிதான்.

ரோட்டில் சிகரெட் குடிக்கும் பெண்ணை உங்களால் மரியாதையாய் பார்க்க முடியுமா? புருஷனுடன் சேர்ந்து போட்டிப்போட்டுக்கொண்டு தண்ணியடிக்கும் ஒரு கொலிக்கை தப்பான பார்வையில்லாம் பார்க்க முடியுமா? மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் அய்யர் பார்த்துட்டு அந்தப் பெண் 'தேவிடியா' இல்லைன்னு வாதாட முடியுமா? இது எல்லாம் நடந்தது எனக்கு. நான் ஒன்றும் சினிமாவில் வருவது போல ஒரு பாடலில் மாறிவிடவில்லை நிச்சயமாய். அடிபட்டு உதைபட்டு, பித்துபிடித்தவைப் போல் அலைந்து திரிந்து எனக்கு வாக்கப்பட்டுது இவைகள். இன்னும் இவைகள் பலருக்கு தவறானவைகளாக இருக்கமுடியும் தான்.

டெல்லி ஒரு வித்தியாசமான நகரம், கேளிக்கைகள் நிறைந்தது, வெகுசுலபமாக பெண்டாளும் வாய்ப்பு கிடைக்கும் ஒரு ஊர் தான். தனிமனித உரிமைகள் என்ற ஒரு விஷயம் எனக்கும் அடிமுதல் கற்பிக்கப்பட்ட ஊர். புருஷன் பெண்டாட்டி இடையே கூட இந்த உரிமைகளை எதிபார்க்கும் மக்கள் இருக்கும் ஊர். என் அம்மா அப்பாவை, அம்மா அப்பாவாகத்தான் எனக்குத் தெரியும். அவர்களையும் கணவன் மனைவியாக அறிமுகம் செய்து வைத்த ஊர். என் அப்பாவிடம் அம்மாவைப் பற்றி இருக்கும் 'பொசசிவ்நஸ்' புரிய வைத்த ஊர். அவர்களுடைய தனிமனித உரிமைகளில் தலையிடுவதை சுத்தமாக விரும்பாத பல மனிதர்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நான் அவர்களுடைய உறவினனாக இருந்த பொழுதிலும் பல விஷயங்களில் என் தலையீட்டைக் கூட விரும்ப மாட்டார்கள் தான்.

இதை புரிந்து கொள்வது கஷ்டம், என் மாமா, என் அத்தை என்பதே கிடையாத ஒரு ஊரில் என் தமிழன் என்பதை தேடிக்கொள்வதை என்னவென்று சொல்வது. டெல்லி மாதிரியான ஒரு நகரத்தில் பெரிய வேலையில், அரை லட்சம்(நன்றி குழலி) மேல் மாத சம்பளம் வாங்குபவர்கள் கூட சனிக்கிழமைகளில் வேலை பார்க்கவேண்டியிருக்கும். அவர்களை பொறுத்தவரை மீதமுள்ள விடுமுறையை கொஞ்சமும் பாழாக்க விரும்பமாட்டார்கள் அது என்னவாக இருந்தாலும். நாம் சென்று 'நான் டெல்லிக்கு வந்து ஒரு மாசம் கூட ஆகலை, இந்தியும் அவ்வளவா தெரியாது, இங்கிலீஷும் மெதுவடை(நன்றி 'செந்தழல்' ரவி) மாதிரி, நார்த் டெல்லியில் இன்டர்வியூ இருக்கு கொஞ்சம் வந்து உதவ முடியுமா?' என்பது போன்ற கேள்விகள் டெல்லியில் முட்டாள்த்தனமானவை தான். கையில் மேப்பைக் கொடுத்து வண்டி நம்பர்களை கொடுத்து, என்ன பேசவேண்டும் எப்படி பேசவேண்டும் என்பதையும் எழுதிக் கொடுப்பார்களே ஒழிய வந்து வெயிட் பண்ணி உங்களை இன்டர்வியூ முடித்து அழைத்துச் செல்ல மாட்டவேமாட்டார்கள்.

அவர்களுக்கு உங்கள் மீது பாசம் கிடையாதா என்றால் அப்படியில்லை அந்த பாசத்தை விடவும் முக்கியமான விஷயம் இருக்கிறது பார்ப்பதற்கு என்பதுதான் அதற்கு பொருள். இப்படியிருக்க 'சார் நான் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன், இங்கிருக்கிற தமிழ்ச்சங்கம் எங்கேயிருக்குன்னு தெரியலை கொஞ்சம் வண்டியில் இறக்கி விட்டுர்றீங்களா?' என்பது போன்ற கேள்விகளுக்கு எந்த மாதிரியான ரியாக்ஷன் கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

நான் ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தை எழுதி உணர்த்தவில்லை அது நான் டெல்லி வரும் மக்களிடம் தமிழில் உரையாடுவேனா உதவுவேனா என்பதைப் பற்றியது அதற்கான விடையை நான் சொல்லாமல் நீங்களே ஊகித்துக்கொள்ள விட்டுவிடுகிறேன். ஆனால் ஒரு விஷயம் இந்த 'தனிநபர்' கான்சப்டை அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ள முடியாதுதான்.

நான் இளங்கன்றாய் இருந்தாலும் எதைப்பற்றியுமே ஒரு ஒப்பீனியன் பெரும்பாலும் இல்லாமல் இருந்ததாலும் அந்த சூழலுக்கு மாறிக்கொள்ள முடிந்தது. தமிழ்நாட்டு சூழலில் தாம்பத்தியம் நடத்தி பின்னர் டெல்லி வந்தால் வரும் பிரச்சனைகளை என்னால் சொல்லாமலே விளங்கிக்கொள்ள முடிகிறது.

உண்மைதான் இங்கிருக்கும் டெல்லி வாழ் மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு(குறிப்பாக பெண்களுக்கு) டெல்லி வாழ்க்கை முறை தெரிந்த, இங்கே வாழ்ந்தவர்களின் பையனைத்தான் விரும்புகிறார்கள். வண்டியில் ஒன்றாய் பயணம் செய்வது, ஹக்கிக் அண்ட் கிஸ்ஸிங் வெற்ய்ம் எழ்யுத்தாய் இருக்காமல் சர்வ சாதாரணமாய் இருக்கும் ஊர் பெண்களை தமிழ்நாட்டு பாரம்பரிய மணமகன் புரிந்துகொள்வதில் உள்ள பிரச்சனை அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து தான் இருக்கிறது.

இதைத் தான் நான் மங்கையின் பதிவில் மென்டாலிட்டி மாறாமல் டெல்லியில் வாழ்வது வேஸ்ட், நீங்களும் கஷ்டப்படுவீர்கள் மற்றவர்கள்யும் கஷ்டப்படுத்துவீர்கள் என்று கூறினேன். பல சமயங்களில் இந்த விஷயத்தை புரிந்து கொள்வதற்கு உங்கள் படிப்பறிவு போதாது பட்டறிவு அவசியம்.

ஒரு பெண் இன்று என்னுடனும் அடுத்த நாள் இன்னொரு பையனுடனும் பைக்கில் பயணம் செய்வதும், என்னுடனும் அந்தப் பையனுடனும் உரசிப் பேசுவதும் உங்களுக்கு தேவிடியாத்தனமாகத் தெரியலாம். ஆனால் அந்த ஊரில் வளர்ந்த பெண்ணுக்கு அது சர்வ சாதாரணம்.

நான் இந்தப் பதிவில் எங்கேயும் கற்பைப்(???) பற்றி குறிப்பிடவில்லை. அதுமட்டுமில்லாமல் இவைகள் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் மட்டுமே, இதை பொதுப்படுத்த முடியாது. ஒன்றே ஒன்று, இவையெல்லாம் இல்லாமல் தமிழ் தமிழ் என்று உயிரைக் கொடுக்கக்கூடியவர்கள் டெல்லியில் மிக அதிகம் பேர் இருக்கிறார்கள். மிக அதிகம் பேர், அவர்கள் ஏன் அப்படியிருக்கிறார்கள் என்று கேட்பதுவும் தவறு, மற்றவர்கள் ஏன் அப்படியில்லை என்று கேட்பதுவும் என்னைப் பொறுத்தவரையில் தவறுதான்.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In இந்தி சொந்தக் கதை டெல்லி

இந்தி இந்தியாவின் தேசிய மொழியா???

இது பெரும்பாலும் இந்தியாவின் வடமாநிலங்களில் வேலை பார்த்த அனைத்து தமிழ் நாட்டு மக்களுமே தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது யாராவது அவர்களிடம் கேட்டிருக்ககூடிய கேள்விதான். என்னிடமும் இந்தக் கேள்வி பலமுறை கேட்கப்பட்டிருக்கிறது. தேசிய மொழி தெரியலைன்னு சொல்ரியே கேவலமாயில்லையான்னு, நிறைய முறை மறுத்து பேசியிருக்கிறேன் என்றாலும் மனதின் ஒரத்தில் ஒரு முழுமையான நிறைவு இல்லாமல் தான் அப்படி பேசியிருப்பேன் காரணம்.

ஒரு வகையில் சொந்தமாக இந்தி படித்துவிட்டு, சும்மா பேருக்கு இந்தியை எதிர்த்துக்கிட்டு ஆனால் சொந்தக்காரங்களை இந்தி படிக்கவைக்கும் சில அரசியல் வாதிகளுக்கும் எனக்கும் பிறகு என்ன வித்தியாசம் இருக்க முடியும். ஆனால் முட்டாள்த்தனமாக இந்திக்காரர்கள் இந்தி தெரியாதவனை கேவலமாப் பேசினா எதிர்த்து சண்டை போட்டிருக்கேன், போட்டுக்கொண்டிருக்கிறேன் நிச்சயம் இனிமேலும் போடுவேன்.

ஆனால் யாரோ ஒரு ப்ளாக்கர் சொன்ன மாதிரி, அமேரிகாவுக்கு போறிங்கன்னா கொஞ்சமாவது இலக்கணப் பிழையில்லாம ஆங்கிலம் பேசக்கத்துக்கிட்டு போறது பெட்டர் மாதிரி. உங்களுக்கு தேவையிருக்கும்னு தெரிஞ்சால், பிற்காலத்தில் உங்களுக்கு இந்தியாவின் வட மாநிலங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்பாவது இருக்கும்னு தெரிந்தால் இந்தி படித்து வைத்துக்கொள்வது நல்லது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து நேராய் அமேரிக்கா போகும் அளவிற்கு தகுதியிருப்பவர்களுக்கு இந்தப்பிரச்சனையெல்லாம் கிடையாது.

உண்மையை சொல்றேனே, நான் படிச்சது பிஎஸ்ஸி, நான் மெட்ராஸில் தான் வேலைக்கு போவேன்னு உட்கார்ந்திருந்தால் ஒருவேளை என் திறமைக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டு வேலை கிடைத்திருக்கும். ஆனால் நானெல்லாம் முடிச்ச சோட்டுல, டெல்லியைப்பார்க்க போய்ட்டேன். சுலபமா வேலை கிடைத்தது. முதலில் எனக்கு பிஎஸ்ஸி முடித்ததும், மாஸ்டர்ஸ் படிக்காமல் வேலைக்கு போய்விட முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தது என்னுடைய கணிணித்திறமையென்றால், அதற்கு உதவியது டெல்லியில் இருக்கும், இருந்த என் சொந்தக்காரர்கள் என்றால், ஒரு சதவீதமாவது உதவியது என்னுடைய, டெல்லியில் எனக்குத்தெரிந்த இந்தி பேசி சமாளித்துவிடமுடியும் என்ற ஒரு கான்பிடன்ஸ்.

நீங்கள் தமிழ்நாட்டில் உட்கார்ந்திருந்தால் வேலை கிடைக்காதென்றொ இல்லை கஷ்டப்படுமென்றோ சொல்லவில்லை. ஆனால் நீங்கள் தமிழ்நாட்டில் வேலை கிடைக்காமல் இருக்கும் சமயத்தில் டெல்லிக்கு சென்று வேலை தேட நினைக்கிறீர்களா? டெல்லியில் உங்களுக்கான வேலை காத்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இந்தி தெரிந்தால் ஒரு மாதம் யோசிக்கும் நீங்கள் அந்த முடிவை இன்னும் சீக்கிரத்தில் எடுக்க முடியும்.

அதற்கு எனக்கு உதவியது டெல்லியில் இருக்கும் உறவினர்கள் கொஞ்சம் என்றாலும் நானெல்லாம் தைரியமாய் அம்மா, அப்பாவை விட்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் உட்கார்ந்தது நாலு வார்த்தை இந்தியில் பேசி சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தான். இதேபோல் கூட இல்லை என்னை விட மேல் படிப்பு படித்துவிட்டு வேலையில்லாமல் உட்கார்ந்திருக்கும் என் உறவினர்களையும் அழைக்கத்தான் செய்கிறார்கள் டெல்லியிலிருந்து. ஆனால் போகாமலிருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் என்றால் அதில் இந்தி தெரியாதென்பது ஒன்றாகயிருக்கிறது.

அங்கே போய் இந்தி படித்துக்கொள்ளலாம் என்பதெல்லாம் உண்மைதான். இதெல்லாம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் முன்னுக்கு வரணும் என்று நினைக்கும் கேட்டகிரியினருக்கு சரிவரும். சி, சி++, ஜாவா படித்தாலே வேலை கிடைக்கும் நிலை இன்றும் இருக்கும் பொழுது, அதன் அட்வான்ஸ்ட் டெக்னாலஜிக்களை படித்து வைத்துக்கொள்வதில்லையா, J2EE, Struts, EJB இப்படி.

இதெல்லாம் வேலையில் சேர்ந்த பிறகு படிக்க முடியாதா என்றால். நிச்சயம் முடியும். எனக்குத்தெரிந்து எத்தனை பேர் வட இந்தியாவில் மூன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் வேலைசெய்துவிட்டும் கூட இந்தியில் நாலு வார்த்தை பேச முடியாமல், துணிவாங்கணும்னா, கடையில் போய் காய்கறி வாங்கணும்னா, சலவைக்கு போட்ட துணிகளை திரும்ப வாங்கணும்னா, இல்லை ஆட்டோவில் போகணும்னா, நாலுவார்த்தை இந்தி தெரிந்த ஆட்களை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழ்நிலையை நிறையப் பார்த்திருக்கிறேன்.

இன்னும் ஒரு விஷயம், என்னுடன் வேலை செய்த எத்தனையோ நண்பர்களுக்கு அவர்களுக்கு கிடைப்பதை விட, கூடுதலாய் 30% ஹைக், டெல்லிக்கு வந்தால் கிடைக்கும் என்ற நிலையில் டெல்லிக்கு போக மனமில்லாமல், இங்கேயே இருக்கிறார்கள் சிலசமயம் அவர்களுடைய மனநிலை வினோதமாகயிருக்கும். புனேவில் சமாளித்துவிட முடியும் என நினைத்து வருபவர்கள் கூட டெல்லிக்கு போக பயப்படுகிறார்கள். கேட்டால் இது பக்கம் என்று பதில் வேறு.

இன்றும் நான் வேலை செய்யும் கம்பெனியில் அது ஒரு இன்டர்நேஷனல் கம்பெனியாக இருக்கும் பொழுதும், எங்களுடைய டீம் மீட்டிங்கள் இந்தியில் போய்க்கொண்டிருப்பது தான் உண்மை, சில சமயம் ஆன்சைட் குவார்டினேட்டர்களுடனான மீட்டிங்குகள் கூட, தமிழ் நாட்டில் மீட்டிங்குகள் தமிழில் செல்வதாக நான் கேள்விப்பட்டதில்லை(நான் இதுவரை தமிழ்நாட்டில் வேலை பார்க்கவில்லை).

ஒரு ப்ரொஜக்ட் டீமில் இருக்கும் எட்டு ஒன்பது பேரில் ஒருவர் தமிழராக இருக்கப்போய், அவருக்காக அந்த டீம் முழுவதும் இந்தியை விட்டுவிட்டு கம்பெனியின் மொழி ஆங்கிலம் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசுவார்கள் செய்துகொண்டு வரும் தமிழர்கள் படும் பாடு வேடிக்கையாகயிருக்கும். ஒரு விஷயம் மட்டும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் நிச்சயமாக நடக்கும் அது அவர்கள் டீமிலிருந்து தனிமைப்படுத்தப்படுவார்கள். சிறுபான்மை சமுதாயம் எங்கும் உண்டு அதாவது அப்படி ஒருவர் இருக்கும் பொழுது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கும் டீம் லீடுகள் இங்கேயும் உண்டு ஆனால் பர்சன்டேஜ் குறைவு. மிகவும்.

என்னைப் பொறுத்தவரை. இன்று வடமாநிலத்தில் இருக்கப்போகிறேன் என்று தெரிந்ததால் இந்தி கற்றுக்கொண்டது போல் நாளை ப்ரான்சிற்கொ இல்லை ஜெர்மனிக்கோ போக நினைக்கும் பொழுது அந்த மொழிகளை கற்றுக்கொள்ள நிச்சயம் முனைவேன். அந்த மொழியில் மாஸ்டர் ஆக நினைக்காமல் நாலுவார்த்தை பேசவும் அந்த மொழியை புரிந்து கொள்ளவும் என்னால் ஆன முயற்சி நிச்சயமாக செய்யப்படும் அது ப்ரான்ஸிற்கோ இல்லை ஜெர்மனிக்கும் போன பிறகாக நிச்சயம் இருக்காமல் இங்கிருக்கும் பொழுதே செய்யப்படும் முயற்சியாக இருக்கும்.

யாரையும் இந்தி படிக்கச் சொல்லும் படி நான் நிச்சயமாக வலியுறுத்தவில்லை, இன்று வரை என்னை பொறுத்தவரை இந்தி இந்தியாவின் தாய்மொழி கிடையாது தான். நிச்சயமாக. ஆனால் உங்களுக்கு தேவையிருக்குமானால் அது இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறேதும் இல்லை.

Read More

Share Tweet Pin It +1

42 Comments

In இந்தி சொந்தக் கதை டெல்லி

ஹாஞ்ஜி அச்சாஜி டீக்கேஜி

//அவசியத்தை உணர்ந்து ஒரு மீள்பதிவு, இது மொத்தம் இரண்டு பாகமா நான் எழுதியது. நாளை மற்ற பாகத்தை மீள்பதிவிடுகிறேன். அவசரமென்றால் தேடிப் பார்த்துக்கொள்ளலாம்.

தலைப்பு இந்தி இந்தியாவின் தேசிய மொழியா?//

கொஞ்சம் இந்தியாவிற்கு மேல்புறமாய் வேலை செய்திருப்பவருக்கு இந்த மூன்றும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அச்சாஜியும் டீக்கேஜியும் கொஞ்சம் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருந்தாலும் ஹாஞ்சி பெரும்பாலும் தெரியாது. இது வட இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் அதிகமாய்ப் பயன்படுத்தப்படும் ஒரு இந்தி வார்த்தை.

நான் முதன் முதலில் டெல்லியில் போய் இறங்கியதும் எனக்கு சொல்லித்தரப்பட்டவை இந்த வார்த்தைகள் தான். இதற்கு பெரும் முன் உதாரணங்கள் எல்லாம் சொன்னார்கள். எப்படியென்றால், இந்த மூணே மூணு வார்த்தைகளை மட்டும் வைச்சிக்கிட்டு டெல்லியை சமாளிச்சிடலாம். பெரும்பாலும் தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு நாங்கள் இதைத்தான் முதலில் சொல்லித்தருவோம் என்று பெரும் பீடிகையெல்லாம் வேறு.

நான் ஒன்றும் இந்தி தெரியாதவன் அல்ல, எனது மாமாக்கள் டெல்லியில் முன்பே இருந்ததாலும் நான் கம்ப்யூட்டர் தான் படிக்கப்போகிறேன் என்பது நான் எட்டாவது படிக்கும் பொழுதே முடிவு செய்யப்பட்டதாலும், இந்தி படிக்கும் படி திணிக்கப்பட்டேன். ஏன்னா நமக்குத்தான் செகண்ட் லேங்குவேஜ் தேர்ட் லேங்குவேஜ் ஒரு இழவும் கிடையாதே. படிச்சதோ தமிழ்மீடியம், மேடைக்கு மேடை 'தமிழ் பழித்தானை தாய் தடுத்தாலும் விடேன்' 'பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் நன்னாள்' இவைகளை சொல்லாமல் விட்டவன் இல்லையாகையால். எனக்கு முதலில் இந்தி என்மீது திணிப்பதாகவேப் பட்டது.

அதுவும் கிரிக்கெட்டின் மீதான கவர்ச்சி அதன் உச்சத்தில் இருந்த நேரம் எட்டாவது ஒன்பதாவது படிக்கும் நாட்கள். கொஞ்சம் விவரம் தெரிந்து வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும் நாட்கள் அவை, அந்த சமயத்தில் சாயந்திரம் ஆறு டூ எட்டு இந்தி கிளாஸ்னு சொல்லப்போக, எதிர்கால, டெல்லி அதனைத்தொடர்ந்த அமேரிக்க வாழ்க்கையின் மோகத்தில் கொண்டு செல்லப்பட்டேன்.

அப்படி இப்படின்னு நானும் படிச்சேன் அதுக்கு பாடம் எடுத்த இந்தி டீச்சரும் ஒரு காரணம். அங்கேயும் ஒரு நல்ல ஆசிரியை. ஆனாலும் நான் பிராத்மிக் கூட முடிக்கலை.(அது இந்தியில் ஒன்னாம் வகுப்பு மாதிரி.) இருந்தாலும் எனக்கு எழுத படிக்க வரும். பேச மட்டும் தான் ஆரம்பகாலத்தில் டெல்லி போயிருந்தப்ப வராது.

அப்புறம் மறந்துட்டேனே அந்த மூன்று ஜீக்கள். இவங்க அஜித்தோட அண்ணா தம்பிகள் கிடையாது, (இதை சொல்வதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். ) இந்த மூன்று ஜீக்களுமே ஒருவாறு சுத்திவளைச்சு மையமா ஒரே மீனிங்தான் வரும்னு வச்சுக்கொங்களேன். யாரவது உங்கக்கிட்ட வந்து ஏதாவது கேட்டா இந்த மூன்று ஜீக்களில் எதையாவது ஒன்னை சொல்லணும் இப்படித்தான் முதலில் சொல்லித்தந்தாங்க. எப்படின்னா,

"ஆப் கஹான்சே ஆரஹேஹே?"("நீங்க எங்கிருந்து வரீங்க?")
ஹாஞ்ஜி. (ஒரு மாதிரி தமிழில் சரிங்க.... இல்லை ஆமாம்...)

"ஆப்கோ இந்தி ஆத்தா ஹேக்கி நஹி ஹே??"
டீக்கேஜி (ஒரு மாதிரி பார்த்தால் சரிங்க இல்லை ஆமாம்...)

து பாகால் ஹேக்க்யா( நீ பைத்தியமா....)
ஹாஞ்ஜி... (ஒரு மாதிரி தமிழில் சரிங்க இல்லை ஆமாம்.)

இப்படித்தான் ஆரம்பிக்கும் நீங்கள் மேற்சொன்ன வழியை பாலோ பண்ணினால், இந்திக்காரன் சாலே மதராஸி அப்படின்னு சொல்லிட்டு திரும்பிக்கூட பார்க்காம ஒட்டம் எடுத்துறுவான். ஆனால் சில சமயம் நீங்க நல்லா இந்தி பேசுறவறாக் கூட இந்த மூன்று வார்த்தைகளை மாற்றி பேசுவதால் சூழ்நிலை உருவாக்கிவிடும். அப்படித்தான் நிகழ்ந்தது நண்பர் ஒருவருக்கும் அதாவது, அவரும் அப்பொழுதுதான் படித்து முடித்துவிட்டு வேலை தேடி டெல்லி வந்திருந்தவர். ஆனால் பக்கா தமிழன் (நானெல்லாம் அரைவேக்காடு) அதாவது இந்தின்னா அப்படின்னான்னு கேக்குறவரு.

எங்க ஆளுங்க அவருக்கும் இதே மூணுவார்த்தையை சொல்லிக்கொடுத்திருக்க, ஒருநாள் முனிர்க்காவிலிருந்து கனாட்ப்ளேஸ் போகும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த நண்பரின் அருகில் ஒரு பஞ்சாபி உட்கார்ந்திருக்கிறார். நம்மாளோ பார்க்கிறது கொஞ்சம் மாநிறமா பீகார்க்காரங்க போல இருப்பாரு. அவனும் முதலில் ஏதோ கேட்கப்போய் இவரும் ஹாஞ்ஜின்னு சொல்லியிருக்காரு, இப்படி வைச்சுக்கோங்களேன்

ஆப் கனாட் ப்ளேஸ் ஜாரேக் கியா? (நீங்க கனாட் ப்ளேஸ் போறீங்களா?)
இவரு ஹாஞ்ஜீன்னு சொல்ல அப்ப ஆரம்பிச்ச கூத்து, சுமார் ஒரு மணிநேரம் பஞ்சாபி தன்னோட குடும்பக்கஷ்டத்தையெல்லாம் சொல்லப் போக இவரும் இந்த மூணு வார்த்தைகளை திருப்பி திருப்பி போட்டு பேசியிருக்காரு. அதுவும் சந்தர்ப்பம் ஒருமாதிரி ஒத்துப்போக போய்க்கிட்டிருக்கிறது. கடைசியில் கனாட்ப்ளேஸில் இறங்குவதற்கு முன்னர் பஞ்சாபிக்கு எப்படியோ சந்தேகம் வந்து விசாரிக்க நம்ம ஆளு இந்தி தெரியாதுன்னு ஒரு மாதிரி சொல்ல பஞ்சாபிக்கு பலமா கோபம் வந்து கீழே இறக்கிவிட்டு ஒரு அரைமணிநேரம் கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி திட்டியிருக்காரு. நம்ம ஆளுக்குத்தான் அந்த மேற்சொன்ன மூணைத்தவிர வேறொன்னும் தெரியாதா இவரும் தேமேன்னு முழிக்க கொஞ்ச நேரம் திட்டிய பஞ்சாபி இது ஒன்னுக்கும் தேறாதுன்னு நினைச்சுக்கிட்டே போய்ட்டாராம்.

இதை நண்பர் எங்களிடம் சொல்லப்போய் பின்னர் ரொம்ப நாளைக்கு அந்த நபரை வம்பிழுத்துருக்கிறோம் இதைச்சொல்லி.

டெல்லியில் பெங்களூரில் புனேயில் என்று இந்தி பேசிக்கொண்டு மூன்றாண்டுகள் ஓடிவிட்டதால், எனக்கேற்ப்பட்ட சில இந்தி சார்ந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்துள்ளேன் ஆரம்பத்தில் காமடி பின்னர் மேட்டர். அடுத்த பதிவு காமடியாவா இல்லை மேட்டரான்னு முடிவு செஞ்சுட்டு அப்புறம் போடுறேன். அதுக்கு முன்னாடி கீழ்க்கண்ட பதிவுகளை படித்துக்கொள்ளுங்கள்.

holyox.blogspot.com/2006/01/blog-post_31.html
muthuvintamil.blogspot.com/2005/10/blog-post_28.html
kuzhali.blogspot.com/2005/08/blog-post_13.html

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சினிமா விமர்சனம்

லஹே ரஹோ தாஸ் பாய்

முன்னாபாய் எம்பிபிஎஸ், வசூல்ராஜா எம்பிபிஎஸ், சங்கர்தாதா எம்பிபிஎஸ் என ஒருவாறு எல்லோருக்குமே நன்றாய் அறிமுகமான படம்தான். அதனுடைய ஸெக்யூல் வெர்ஷன் ரிலீஸ் என்றவுடன் எல்லோரையும் போல் எனக்கும் ஆஹா சும்மா பெயரில் இருக்கும் ரெபுடேஷனை வைத்து காசு பார்க்கப் பார்க்கிறார்கள். ஏன் தான் இப்படி நல்லபடத்தின் ஸெக்யூல் வெர்ஷன் ரிலீஸ் பண்ணி முதல் பாகத்தின் பெருமையையும் குலைக்கிறார்கள் என்று நினைத்தேன் முதலில். ஆனாலும் இந்த படத்திற்கு இன்று சென்றததற்கான காரணம் ரொம்பவே முக்கியமானது.

சஞ்சய் தத்திற்குள் இருக்கும் காமெடியனை முன்னாபாயில் பார்த்ததாலா இல்லை அந்த பொண்ணு பேரு என்ன வித்யா பாலனைப் பார்த்து கொஞ்சம் ஜொள்ளிவிட்டுட்டு வரலாமான்னா என்று கேட்டால், இருக்கலாம் இவையெல்லாம் ஒரு பக்கம் நிச்சயமாய். முக்கியமான காரணம் ஒன்று உண்டு, தொடர்ச்சியாய் என்னுடைய இந்தி சினிமா விமரிசனங்களைப் படிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். எங்கள் ப்ரொஜக்ட்டின் மிக முக்கியமான கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம் என்பது.



எனக்கு முன்னால் யூஸ்கேஸை இம்பிளிமெண்ட் செய்த புண்ணியவான் அல்லது புண்ணியவதி என்ன நினைத்துக்கொண்டு இம்ப்ளிமெண்ட் செய்தார்களோ ஒரு ப்ளோ மொத்தமாக தவறாக இருந்தது. எஸ்ஐடி மொத்தமாக முடிந்து யூஏடி ஆரம்பிக்க இருந்த சமயத்தில் இதைக் கண்டுபிடித்ததால் கடைசி மூன்று நாட்களாக வீட்டிற்கே போகாமல் கம்பெனியின் டோர்மென்ட்டிரியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டு கோட் சேஞ்சஸ் செய்ய வீக் எண்ட் ஏதாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயம்.

இல்லையென்றால் திரும்பவும் திங்கட்கிழமை வரும் பிரஷரை சமாளிக்க முடியாது அதனால் சற்றும் முடியாத சூழ்நிலையில்(மூன்று நாளாய் சுத்தமாய் தூக்கம் இல்லை) வேண்டுமென்றே என்னை வற்புறுத்தி சென்ற படம் லஹேரஹோ முன்னாபாய், முன்னாபாய் எம்பிபிஎஸ் இன் ஸெக்யூல் வெர்ஷன். என் சூழ்நிலையை உணர்ந்திருக்கலாம், கொஞ்சம் கம்ப்யூட்டர் பக்கம் பழக்கம் இருந்தால் கூட, என்னதான் சஞ்சய் தத், அர்ஷத்(ஆந்தனி கோன் ஹை, முன்னாபாய் எம்பிபிஎஸ்) அப்புறம் கொஞ்சம் ஜொள்ளுவிட வித்யாபாலன் இருந்தாலும். கொஞ்சம் பிசிறு தட்டியிருந்தாலும் தியேட்டரில் இருந்த அடுத்த நிமிடமே வீட்டிற்கு வந்து தூங்கியிருப்பேன்.

ஆனால் என்னை முழுவதுமாக தங்கி பார்க்கவைத்து, பின்னர் லேப்டாப் திறந்து விமர்சனம் எழுதவைத்து அப்லோட் செய்கிறேன் என்றால் முழுபெருமை, படத்திற்கு உண்டு. பெரும்பாலும் நகைச்சுவை சம்மந்தப்பட்ட படத்திற்கு, முகமூடிகளைக் கழட்டிவிட்டுத்தான் செல்வேன். அதனால் தான் என்னால் மைக்கேல் மதன காமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ்ஸை ரசிக்க முடிந்தது. எனக்குத்தேவை விடுதலை கடுமையான கம்ப்யூட்டர் பணிகளுக்கு மத்தியில் உண்மையில் சப்தமாய் சிரித்து மகிழ ஒரு படம். அப்படிப்பட்ட படமாய் இருந்தது லஹே ரஹோ முன்னாபாய்.

கதையொன்னும் அப்படி பெரியவிஷயம் இல்லை, நம்ப முன்னா பாய்க்கு ரேடியோ ஸ்டேஷனில் வேலை பார்க்கும் ஜான்வியின் குரலில் மயங்கி காதல். இப்படியாக அவர் அந்தக் குரலிலேயே மயங்கிக் கிடக்கும் வேலையில் ஒரு வாய்ப்பு வருகிறது அவரை சந்தித்து நேரடியாக ரேடியோவில் உரையாட, அதை நம்ப முன்னாபாய் தன்னுடைய சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி செஞ்ர்ராரு. அப்படி செய்வதனால் வரும் இன்னல்களைத் தீர்த்து எப்படி அந்த ரேடியோ பார்ட்டியைக் கைப்பிடிக்கிறார் என்பதை அதன் முந்தைய வெர்ஷனைப் போலவே, இன்னும் சொல்லப்போனால் இன்னும் நல்ல முறையில் செய்திருக்கிறார்கள்.

முகமூடியை இன்டீட் மூளையைக் கழட்டி வைத்து விடுவதால், படத்தில் லாஜிக் பெரும்பாலும் நான் பார்ப்பதில்லை, அப்படி லாஜிக் எல்லாம் பார்த்தும் படம் பார்ப்பதுண்டு அப்படிப் சமீபத்தில் பார்த்த இன்னொரு படம், ஓம்காரா. பெரும்பாலும் ஒருவர் ஒரு விஷயத்தைப் பற்றிய விமர்சனத்தை எழுதி அது எனக்கு மிகவும் பிடித்திருந்தால், அதைவிட நன்றாய் எழுதமுடியுமென்றால் மட்டுமே எழுதுவேன் ஏற்கனவே ஆசாத்பாய் அதைச் செய்துவிட்டதால் அப்படியே மூடிக்கொள்கிறேன்.

அப்புறம் தலைப்புக்கு, லஹே ரஹோ தாஸ் பாய் தலைப்பு என் பெயருக்காக வைத்துக் கொண்டதல்ல, லஹே ரஹோ முன்னாபாயில் முக்கியமான கதாப்பாத்திரம் காந்தி தாத்தா. ஒரு தாதா(அட நம்ம முன்னாபாய்) காந்தியப் பத்தி படிச்சி அதனால கொஞ்சமே கொஞ்சம் மென்டல்(?) ஆனதால் காந்தி அவருக்கு கண்களில் தெரிகிறார். உண்மையில் மென்டலா இருக்கிறவங்களுக்கும் காந்திக்கும் ஏதாவது தொடர்புண்டா என்பது போன்ற கேள்வியை நான் முகமூடியை மாட்டிக்கொண்டு விமர்சனம் எழுதினால் நிச்சயம் கேட்பேன். தலைப்புக்கு காரணம் படத்தில் காந்தி தன்னை மூன்று நான்கு முறையாவது இன்ட்ரொடுயூஸ் செய்து கொள்கிறார், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக. இப்பல்லாம் இதுதானே பேஷன், முன்பே படித்த கமலின் “மோகனுக்கு ஒரு கவிதை” அப்புறம் இணையத்தில் எங்கோ காந்தியை மோகன் என்று விழித்த ஒரு கட்டுரை. அப்புறம் “மோகன்தாஸ் வெர்ஸஸ் காந்தி”(இது நாடகம் தானே?) இப்படியாக காந்தியை அவரைப் பற்றி அறியாத ஒரு பெயரில் விளிக்க நான் நினைத்தேன் கண்டறிந்தது தான். லஹே ரஹோ தாஸ் பாய், தாஸ்னு சர்நேம் சொல்றது தப்புன்னா லஹே ரஹோ மிஸ்டர் தாஸ் பாய்னு சொல்லலாம். ஆனால் இது என் பெயரும் ஆதலால் என்னை ரொம்பவும் அறிந்தவர்கள் தாஸ் என்று என்னைக் கூப்பிடுவதுதான் எனக்கு பிடிக்குமென்பதால் ‘ப்யாராஸே’ லஹே ரஹோ தாஸ் பாய் தான். (அப்பாடா தலைப்பிற்கு விளக்கம்னு சொல்லி ஒரு பத்தி வளர்த்தாச்சு.)



தியேட்டரில் மக்கள் கைத்தட்டிப் பார்த்து நெடுங்காலம் ஆகிவிட்டிருந்தது, பெரும்பாலும் திருச்சி தியேட்டர்களில் நான் இதைப் பார்த்ததில்லை. பிட் பார்ப்பதற்காக படத்திற்குப் போய்விட்டு, இன்டர்வெல் வரைக்கும் காத்திருக்கும் பொறுமையில்லாமல் மக்கள் விசிலடிப்பதைப் பார்த்திருக்கிறேன். ரஜினி, விஜய் க்கு பாலாபிஷேகம் பண்ணும் விஷயத்தை நான் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. ஸ்டேண்டிங் ஓயேஷன் மட்டும் தான் இல்லை நான் பார்த்த இந்த திரைப்படத்தில்.



காந்தி வழியைப் பின்பற்றுவதால் ஏற்படும் சில நன்மைகளை ப்ராக்டிகலாச் சொல்ல அதன் ரியாலிடியை உணர்ந்ததாலோ என்னவோ மக்கள் கைத்தட்டி உற்சாகப் படுத்தினார்கள். நான் கைத்தட்டினேனா என்ற கேள்விக்கு பதில் கடேசியில். ஹர்ஷத் வர்ஷியின் முகபாவனைகள் எப்பொழுதும் தண்ணியிலேயே இருப்பதாய் இருக்கும் காட்சிகள் முகபாவனைகளுடனான அவருடைய டயலாக் டெலிவரி ம்ம்ம் அருமை. வித்யா பாலன் “குட்மார்னிங் மும்பை”யை நம்ம நிர்மலா பெரியசாமி மாதிரி சொல்கிறார். கொஞ்சம் நடிக்கிறார், ஸ்கிரீனில் அருமையாக இருக்கிறார். இதைப் படிக்கும் அக்காவுக்கு ஒரு நோட், கொஞ்சம் பர்ஸனல் அதனால எல்லோரும் அடுத்த பேராவுக்கு போயிருங்க, “எனக்கு பொண்ணு பார்த்தா வித்யா பாலன் மாதிரி பாருங்க.” (வழியும் ஜொள்ளுடன் மோகன்தாஸ்.)

எப்பொழுதும் போல சஞ்சய்தத் தனது ஆகிரிதியுடன் சிரிக்காமல் நம்மை சிரிக்கவைக்கிறார். அதை விட சோகக்காட்சிகளில் அவருடைய சினிமா எக்ஸ்பீரியன்ஸ் தெரிகிறது.



கமல், தசாவதாரம் படத்திற்குப் பின்னர் உங்கள் பைனான்சியல் ஸ்டேட்டஸ்ஸை உயர்த்தும் நோக்கத்தில் காமெடிப்படம் பண்ணும் ஐடியா வருமானால் ப்ளிஸ் கோ பார், வசூல்ராஜாஸ் ஸெக்யூல் வர்ஷன்.

படத்தில் வரும் காந்தி பற்றிய காட்சிகளில் கைத்தட்டல் இருந்ததென்று சொல்லிவிட்டு நான் கைத்தட்டினேனா என்று கடேசியில் சொல்கிறேன் என்று சொன்னேன், காமெடிப்படமென்றாலும் மெஸேஜ் சொல்வதாய் வரும் சமயத்தில் கழட்டப்பட்ட இன்ட்டலெக்ட்சுவல் தன்மை, தானாய் மீண்டும் புகுந்து கொள்வதால் படத்தில் சொல்வதைப் போல் செய்யமுடியாமா என்று நான் யோசிக்கும் நேரத்தில் அடுத்த காட்சி வந்துவிடுவதால் சாரி கைத்தட்டவில்லை.


Credits,

famecinemas.com

Read More

Share Tweet Pin It +1

10 Comments

Popular Posts