In சுந்தர ராமசாமி பிரமிள் புத்தகங்கள்

பிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள்

இதுதான் நான் படித்த முதல் பிரமிளின் கவிதையாகயிருக்கும். இந்தக் கவிதை ஏற்படுத்திய நெருக்கம் பிரமிளைத் தேடத் தொடங்கினேன். அந்தச் சமயம் பிகே சிவக்குமார் எழுதியிருந்த சுந்தர ராமசாமியின் சவால் கவிதை இடுகையும்,

"ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின்வாங்கல் அல்ல பதுங்கல்

எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்."

என்ற கவிதை வரிகளும் "சுந்தர ராமசாமியின் சவால் என்ற இந்தக் கவிதை பிரமிளுக்குப் பதிலாக எழுதப்பட்டது என்று ந. முத்துசாமி சுந்தர ராமசாமி அஞ்சலிக் குறிப்பொன்றில் எழுதியிருந்தார். பிரமிளுக்கும் சுந்தர ராமசாமிக்குமான சண்டை தமிழ் இலக்கிய உலகில் பரிச்சயம் உடையவர் அறிந்தது." பிகேஎஸ்ஸின் இந்த வரிகளும் என்னை வெகுவிரைவாக சுந்தர ராமசாமி - பிரமிள் - இலக்கிய சர்ச்சையை நோக்கி இழுத்தது.

இடையில் ஜெயமோகன், "...ஆயினும் சுந்தர ராமசாமி தமிழ் வரலாற்றின் சுடர்களில் ஒன்று. அவரது பிற்காலச் சிறு சரிவுகளில் பெரும்பாலானவை தன் குழந்தைகள்மீது தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட பெரும்பாசம் கொண்ட இந்தியத்தந்தை அவர் என்பதிலிருந்து முளைத்தவையே. ஒரு கோணத்தில் அவையும் அவரது மகத்துவத்தின் அடையாளங்களேயாகும்..." மரத்தடியில் எழுதியதைப் படித்திருந்தேன் - இதை ஜெ.மோ எழுதிய பொழுது சு.ரா உயிருடன் இருந்தாரா எனக்குத் தெரியாது ஆனால் நான் படிக்கும் பொழுது அவர் இல்லை. மேலும் ஜெ.மோ நினைவின் நதியில் என்ற சுந்தர ராமசாமியின் நினைவுகளைப் பற்றி எழுதியிருந்த சமயம். பெரிய உரையாடல் - கருத்துப் பரிமாற்றம் அந்தப் புத்தகத்தைப் பற்றி நடந்துகொண்டிருந்தது.

நான் கேள்விப்பட்டிருந்தது ஜெயமோகனுக்கும் சுராவிற்கு என்னமோ பிரச்சனை என்றும் பணம் பண்ணுவதற்காக உயிர்மையும் ஜெ.மோகனும் சு.ராவின் மரணத்தின் தாக்கம் குறைவதற்குள்ளேயே புத்தகத்தை வெளியிட்டுவிட்டதாகவும். மனுஷ்யபுத்திரனுக்கும் காலச்சுவட்டிற்கும் காண்டு என்று இதற்கு முன்னமே கூட படித்திருந்தேன். ஜெயமோகனின் "தமிழ் வரலாற்றின் சுடர்களில் ஒன்று" வரிகள் மற்றும் மேற்சொன்னவையெல்லாம் சேர்த்து என்னை இதைப்பற்றி நிறைய படிக்கவைத்தது.

இதற்குப்பின் நேரடியாக புத்தகத்தில் இருந்து படிக்காமல் இணைய நண்பர்கள் கிடைக்கும் தகவல்கள் என்று பிரமிள் பற்றியும் சுந்தர ராமசாமி பற்றியும் படித்துக்கொண்டுதான் இருந்தேன். சமீபத்தில் நடந்த பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகனின் நினைவின் நதியில் புத்தகமும் சுந்தர ராமசாமியின் "நினைவோடை - பிரமிள்" புத்தகமும் வாங்கினேன். இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்கியிருந்தாலும் முதலில் எடுத்தது பிரமிள் நினைவோடை - சுந்தர ராமசாமிதான்.

சொல்லப்போனால் இந்தப் பதிவை - நினைவோடை பிரமிள் - சுந்தர ராமசாமியின் புத்தக விமர்சனமாக பார்க்கலாம் தான்; பிரமீளைப் பற்றி நிறையப் படிக்காததாலும் புத்தகம் சுந்தர ராமசாமியினுடையது என்பதாலும் ஒருபக்கச் சார்பு வந்திருக்கலாம் என்றே நினைக்கிறேன்.



"பிரமிளை நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர் மீது சுந்தர ராமசாமிக்கு ஒரு கவர்ச்சியும் மானசீக உறவும் ஏற்பட்டிருந்தன. ஆனால் அவரைச் சந்தித்து நெருங்கிப் பழகிய இரண்டாண்டுகளிலேயே பிரமிளின் விசித்திரமான நடவடிக்கைகளாலும் பேச்சுகளாலும் அந்தக் கவர்ச்சியும் மானசீக உறவும் கருகி உதிர்ந்துவிட்டன. அந்த வலியையும், அதன் பின்னான பிரமிளின் வக்கிரமான தாக்குதல்களின்போது மௌனம் காத்ததற்கான காரணங்களையும் சமன்நிலை குலையாத நிதானத்துடன் இந்நூலில் சுந்தர ராமசாமி நினைவுகூர்ந்துள்ளார்."

- புத்தகத்தின் பின்பக்க வரிகள்.

இந்தப் புத்தகத்தை முதலில் படித்து முடித்ததும் இப்படிப்பட்ட விஷயத்தையும் சுவாரசியமாக எழுத முடியுமா என்ற எண்ணம் தான் முதலில் எழுந்தது. இதைத் தொடர்ந்து படித்தனாலோ என்னமோ நினைவின் நதியில் பற்றி எனக்கிருந்த சில எண்ணங்கள் இல்லாமல் போய்விட்டது. ஒருவேளை இது இலக்கியச் சண்டையைப் பற்றியதாக இருந்ததாலும் இதைப் பற்றி வெகுகாலமாக நான் தனிப்பட்ட முறையில் தேடிக்கொண்டிருந்ததாலும் சுவாரசியமாகப் பட்டதா தெரியவில்லை. முன்னமே கூட ரமேஷ் - பிரேம்ன் பேச்சும் - மறுபேச்சுமில் வந்த உரையாடல்கள் எனக்கு சுவாரசியமாகத்தான் இருந்தது.

இந்தப் புத்தகத்தில் சுந்தர ராமசாமி, பிரமிளை சந்திப்பதற்கு முன்பு, அவரைச் சந்தித்து உரையாடி இரண்டு ஆண்டு ஒன்றாய் இருந்தது பின்னர் அவருடனான கருத்து வேறுபாட்டின் பொழுதான காலங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

"சிவராமூ எழுத்துவில் எழுதியிருந்த எஸ்.பொவின் 'தீ' பற்றிய கடிதம் மனதில் நன்றாகப் பதிந்திருந்தது. அது ஒரு விளாசல் கடிதம். விளாசல்கள் மீது எனக்கும் நம்பிக்கும் அந்த வயதில் ரொம்பக் கவர்ச்சி இருந்தது எல்லாவற்றையும் நொறுக்கி எறியவேண்டும்! அந்த ஆவேசம் தான் மனதிற்குள். ஆவேசம் ஏற்படும்போது சந்தோஷமாக இருந்தாலும் பின்னால் தனியாக நான் யோசிக்கும்போது குறையாக இருந்தது. 'தீ' என்ற நாவலை நான் அப்போது படித்ததில்லை..." இப்படித்தான் சு.ரா. பிரமிளைப் பற்றிய தன்னுடைய நினைவோடையைத் துவங்குகிறார்.

பிரமிளுக்கு எண்கணிதத்தின் மீது நம்பிக்கையிருந்ததால் அவருடைய பெயர் அவ்வப்பொழுது மாறுபட்டுக் கொண்டே வந்திருக்கிறது. தருமூ அரூப் சிவராமூ என்பது தான் அவருடைய பெயர், அவர் இதை பெரும்பான்மையான சமயங்களில் வெவ்வேறான ஸ்பெல்லிங்கில் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். ஏன் சட்டென்று எண் கணிதத்தில் நுழைந்தேன் என்றால் இதில் ஒரு பெரிய மேட்டர் உண்டு; வருகிறேன்.

சின்ன ப்ளாஷ்பேக் உடன், அதாவது பிரமிள் சுந்தர ராமசாமியுடன் தங்கியிருந்த பொழுதுகளில் அவருடைய பணத்தை சு.ராவிடம் கொடுத்து வைத்திருந்திருக்கிறார். அதைப் பற்றி சு.ராவின் வார்த்தைகளில்...

"...நான் கடைக் கணக்குப் புத்தகத்தில் அவருக்கு ஒரு பக்கத்தை ஒதுக்கி அதில் அந்தத் தொகையைக் குறித்து வைத்துக் கொண்டேன். ஒரு நாள் அந்தப் பேரேட்டைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். கணக்குகளைச் சரிபார்க்க அல்ல. அன்று காலையில் அவர் தன் பெயரை மாற்றிக் கொண்டுவிட்ட்டிருக்கிறார். பழைய பெயரை மாற்றிவிட்டுப் புதிய பெயரில் கணக்கைப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார். நான் 'ஒரு தடவை என்றால் செய்யலாம். நீங்கள் வாரத்திற்கு ஒரு பெயரை வைத்துக் கொள்கிறீர்கள். நண்பர்களுக்கு எழுதும் போது, பிறக் பத்திரிகைகளுக்கு எழுதும்போது வேண்டுமானால் அந்தப் புதிய பெயரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்றேன். அதற்கு அவர், 'அப்படியில்லை. எனக்கு ஒரு பெயரை மாற்றுவதானால் என் சம்மந்தப்பட்ட எல்லாப் பதிவேடுகளிலும் அதை மாற்றிவிட வேண்டும்' என்று சொன்னார்..."

அதைப் பற்றி இன்னும் விளக்கமாகச் சொல்லும் முன்னால், பெயரிலியின் இந்தப் பதிவு நினைவில் வந்தது. இதுவும் சொல்லப்போனால் பிரமிளின் இந்த பெயர் மாற்றும் வழக்கத்தை நையாண்டி செய்து வந்ததுதான்.

ஏன் நான் பிரமிளின் இந்த எண்கணித ஆர்வத்தை முதலில் எடுத்தேன் என்றால், பிற்பாடு சுராவுக்கும் பிரமிளுக்கும் பிரச்சனை வந்த பிறகு பிரமிள் சுராவின் மீது வைத்த கடுமையான குற்றச்சாட்டில் ஒன்று சுரா தனக்கு பணம் பாக்கி தரவேண்டும் என்பது, இதில் எண்கணிதம் எங்கே வந்தது என்றால்; எண்கணித முறைப்படி சுராவிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பெயர் மாற்றம் செய்து தந்ததற்காகத்தான் அந்தப் பணம் கொடுக்க வேண்டும் என்று பிரமிள் சொன்னதுதான் அது. சு.ராவின் வார்த்தைகளில்,

"...ஒரு நாள் எனக்கு ஒரு பெரிய பில் அனுப்பியிருந்தார். என்ன என்று பார்த்தால் எங்கள் குடும்பத்தில் இருந்த எல்லோருடைய பெயரையும் எண் கணித சாஸ்திரப்படி அவர் மாற்றிக் கொடுத்ததற்கான பில் அது. அவர் மாற்றிக் கொடுத்தது வாஸ்தவம் தான். அதற்கு பில் அனுப்பியிருந்தார். கமலாவுக்கு 900 ரூபாய். எனக்கு ஆயிரம். நான் அவளைவிட வயதில் மூத்தவன். உயரமாகவும் வேறு இருக்கிறேன். அதனால் எனக்கு நூறு ரூபாய் அதிகம். இப்படி வீட்டில் இருந்த எல்லோருக்கும் பெயரை மாற்றிய கணக்கில் ரூபாய் முப்பத்தைந்தாயிரம் நான் தரவேண்டும் என்று பில் அனுப்பியிருந்தார். நான் அதற்குப் பதில் போடவேயில்லை. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. நாங்கள் சொல்லி அவர் பார்க்கவில்லை என்பதெல்லாம் அவருக்கு நன்கு தெரியும் இருந்தாலும் அப்படி எழுதினார்..."

இதே போன்ற கடிதத்தை பிரமிள் சுராவையும் பிரமிளையும் தெரிந்த நண்பர்களுக்கு அனுப்பியிருந்திருக்கிறார். சுரா பணம் தரவேண்டிய பாக்கி இருக்கிறது என்று சொல்லி...

"...அவருடன் தங்கியிருந்தபோது அவர் உனக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் அதோடு அவருக்கு இந்த விஷயங்களில் நம்பிக்கை கிடையாது. அவரிடம் போய் இப்படிக் கேட்பது சரியல்ல என்று எனக்குத் தெரிந்து ஒருவர்கூட எழுதியிருக்கவில்லை. ஆனால் பணத்தைக் கொடுத்துவிடும்படி பல எனக்குக் கடிதம் போட்டார்கள். தமிழ்ச் சூழல் மோசமாக இருக்கிறது என்பதுதான் எனக்கு உறுதிப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அந்தக் காரியத்தைச் செய்துவந்தார். என்னுடைய எல்லாக் கஷ்டங்களுக்கும் ராமசாமி பணம் தராததுதான் காரணம் என்று பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் சொன்னார். ஒரு நாள் கூட நானோ நம்பியோ அவருக்குச் செய்த நல்ல காரியங்களில் ஒன்றைக்கூட யாரிடமும் சொன்னது கிடையாது. நாங்கள் அவரைக் கவனித்துக்கொண்ட நாட்களில் சின்னச்சின்ன குறைகள், தவறுகள் நடந்திருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. முழுத்தவறும் அவர் பக்கம்தான் இருக்கிறது; எங்கள் பக்கம் தவறே இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால் ஒரு மனித உறவில் அடிப்படையாகச் சில விஷயங்கள் இருக்குமே அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவர் செய்துவந்தது குறித்து எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது..."

சுராவுக்கும் பிரமிளுக்குமான பிரச்சனை நடந்துகொண்டிருந்த பொழுது சுரா அதைப்பற்றி வாயையே திறக்கவில்லை. இன்றும் கூட மக்கள் சுராவின் மோனநிலை என்று நக்கல் செய்வதைப் பார்க்கமுடியும். அதற்கான விளக்கம் கூட இந்தப் புத்தகத்தில் அவர் சொல்லியிருக்கிறார்.

"...அவர் பலரைப் பற்றித் திட்டி நிறைய எழுதியிருக்கிறார். செல்லப்பா பற்றி, சாமிநாதன் பற்றி, ஞானக்கூத்தன் பற்றி, என்னைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். நானொரு முடிவு செய்திருந்தேன். அவர் என்ன சொன்னாலும் நாம் அதற்குப் பதில் எழுதக்கூடாது என்று. அதற்கான சக்தி எனக்குக் கிடையாது. நான் ஏதாவது பதில் எழுதினால் அதை வைத்துக்கொண்டு இன்னும் பல அஸ்திரங்களை அவர் பிரயோகிக்க ஆரம்பிப்பார். எனக்கு மட்டும் புரியும்படியாகச் சில விஷயங்களைச் செய்வார். அதன் பின் எல்லோருக்கும் புரியும்படியாக ஒன்றைச் செய்வார். 'அவர் ரொம்பவும் அழுகியவர், அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லோருமே அப்படிப்பட்டவர்கள்' என்று சொல்ல ஆரம்பிப்பார். எனவே நான் அவற்றைத் தவிர்க்க விரும்பினேன். அவர் இந்தியாவுக்கு வந்து தங்கி அவர் கடைசியில் மறையும் வரை அவரைப்பற்றி ஒரே ஒரு நெகட்டிவ்வான வாக்கியம்தான் நான் எழுதியிருக்கிறேன். யாத்ராவில் வெங்கட் சாமிநாதனைப் பற்றிச் சொல்லும் போது ஒரு இடத்தில் குழந்தைகளைக் கள்ளம் கபடமற்றவர்களாகச் சித்தரிப்பது பற்றி எழுதியிருந்தேன். அதில் குழந்தைகள் கள்ளம் கபடமற்றவர்கள் என்று சொல்வதானால் யாத்ரா இதழை எடிட் செய்யும் பொறுப்பை என் குழந்தை தங்குவிடம் தந்துவிடலாம் என்று சொல்லிவிட்டு சிவராமூவைப் பற்றி அதில் இணைத்துப் பேசியிருந்தேன். அந்த வாக்கியத்தைக் கிட்டத்தட்ட இருநூறு பேரிடமிடமாவது சிவராமூ சொல்லிக் காட்டியிருப்பார். ஏதோ நான் கத்தியால் குத்தியதுபோல் அதை ஆக்கிவிட்டார். அவர் சொல்வதைக் கேட்கும் பலருக்கும் நான் சொன்னது தவறு என்றுதான் பட்டிருக்கும். நான் அவர் சொன்ன விஷயங்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. ஜெயமோகன் என்னுடன் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் அவருடன் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்..."

நகுலனைப் பற்றியும் கொஞ்சம் விரிவாகப் பேசுகிறார் சு.ரா.

"...நகுலனுடைய படைப்புக்கள் சிவராமூவின் உலகத்தோடு நெருக்கமுடையவையாகத்தான் எனக்குத் தோன்றியது. அவர்கள் இருவருக்குமே பொதுவான பார்வை, அக்கறைகள் இருப்பது போலாத்தான் எனக்குப் படுகிறது. என்ன காரணத்தினாலோ சிவராமூவுக்கு நகுலனின் கவிதைகள் பேரிலும் சரி, கதைகளின் பேரிலும் சரி நல்ல அபிப்ராயம் இருந்திருக்கவேயில்லை. நகுலனுக்கு சிவராமூ பேரில் ஆர்வம் இருந்தது..."

நகுலன், பிரமிளைச் சந்திக்க விருப்பமுடன் இருந்ததாக சு.ரா. சொல்கிறார் அப்படி ஒரு சமயம் பிரமிள் சு.ராவின் வீட்டில் தங்கியிருந்த சமயம் நகுலன் பிரமிளைச் சந்திக்க விருப்பம் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். சுராவும் பிரமிளின் பெயரில் உரிமையெடுத்து அவரை பார்க்க வரச்சொல்லி நகுலனுக்கு கடிதம் அனுப்ப பிரமிளுக்கு கோபம் வந்திருக்கிறது.

"...'நீங்கள் எப்படி என்னைக் கேட்காமல் எழுதிப் போடலாம்' என்று கேட்டார் அவர் வந்து உங்களைப்ப் பார்த்துவிட்டுப் போகப்போகிறார் அவ்வளவுதானே என்று சொன்னேன். 'அவரைப் பார்க்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது நான் தானே தவிர நீங்கள் அல்ல. நீங்கள் அவருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள், சிவராமூவுக்கு உங்களைப் பார்ப்பதில் விருப்பம் இல்லை என்று எழுதிப்போடுங்கள்' என்றார் நான் சொன்னேன், 'வேண்டாம். அவர் என்னைவிட வயதில் மூத்தவர். நான் உங்களைக் கேட்காமல் எழுதிப் போட்டது தவறுதான். அந்த உரிமையை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்துத்தான் எழுதிப்போட்டுவிட்டேன். அவர் வரட்டும். நீங்கள் ஒரு அரைமணிநேரம்ம் இருந்து பேசிவிட்டுப் போங்கள். வரவேண்டாம் என்று சொல்லிக் கடிதம் எழுத என்னை வற்புறுத்தாதீர்கள் என்று சொன்னேன்'...

நகுலன் ரொம்பவும் பிரயாசைப்பட்டு, திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்திருக்கிறார். ஆனால் பிரமிள் அந்த முறை நகுலனைச் சந்திப்பதை தவிர்த்துவிட்டாராம். இதனால் நகுலனுக்கு சுராவின் பெயரில் சந்தேகம் இருந்திருக்கிறது. அவர்தான் ஏதோ விளையாடுகிறார் என்று. இப்படியே விரிகிறது இந்தப் புத்தகம் வெங்கட் சாமிநாதனுக்கும் பிரமிளுக்குமான உறவைப் பற்றிக் கூட இந்தப் புத்தகம் பேசுகிறது.

பிரமிளைப் பற்றிய வேறு சில நல்ல விஷயங்களையும் பேசுகிறது.

"...ஒருதடவை அவர் டெல்லியில் இருந்தபோது க.நா.சுவைப் பேட்டி கண்டு எழுதியிருந்தார். அந்தப் பேட்டியை அருமையக எடுத்திருந்தார். அந்தப் பிரதியை என்னிடம் தந்து வைத்திருந்தார். நான் எங்கேயோ கை தவறி வைத்துவிட்டேன். சில காலம் கழித்து அவர் அந்தப் பேட்டியைத் தாருங்கள் என்று கேட்டபோது, இரண்டு நாட்களில் தருகிறேன் என்று சொல்லிவிட்டு எனக்கு எப்போதெல்லாம் ஓய்வு கிடைத்தததோ அப்போதெல்லாம் தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை. அந்தக் கட்டுரையை நான் ஒளித்து வைத்துக் கொண்டிருப்பதாக அவர் சொல்லலாம்; அல்லது கிழித்துப் போட்டுவிட்டதாகச் சொல்லலாம்; அது வெளிவரவிடாமல் தடுக்க முயல்வதாகச் சொல்லலாம் என்று எனக்குள் பயம் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அவரிடம் தயங்கியபடி, தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. கிடைத்ததும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னேன். 'கிடைக்கவில்லையென்றால் பரவாயில்லை. விட்டுவிடுங்கள் என்று சொன்னார். அப்போது எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே கிடையாது. நானாக இருந்தால் 'எவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியிருந்தேன், இப்படிக் கவனக் குறைவாக இருந்துவிட்டீர்களே' என்று கேட்டிருக்கத்தான் செய்திருப்பேன். ஆனால் அவர் பெருந்தன்மையோடு விட்டுவிட்டார். அந்தக் கட்டுரை அதன் பின் கிடைக்கவேயில்லை. நிச்சயமாக அது ஒரு இழப்புதான். அவரும் க.நா.சுவை அதன் பின் பேட்டி கண்டு எதுவும் வெளிவிட்டிருக்கவும் இல்லை. நான் என் கைவசம் இருக்கும் பொருட்களைப் பத்து பதினைந்து வருடங்களுக்கு ஒரு தடவை அலசிப் பார்த்து வேண்டாதவற்றை எரிப்பது வழக்கம். அப்படி எத்தனையோ தடவை தேடிப் பார்த்தபோதும் அந்தக் கட்டுரை எனக்குக் கிடைக்கவேயில்லை.

அவர் என்னிடம் கொடுத்த ஆங்கில நாவலை அவரிடம் பத்திரமாகத் திருப்பிக் கொடுத்த ஞாபகம் இருக்கிறது. அந்த நாவலை நான் படுத்துப்படித்துப் பார்த்தபோது ஆபாசமான விஷயங்களைப் பேசுவதிலிருந்துதான் அந்த நாவலே ஆரம்பமானது. அப்போது அந்த விதமான நாவல்களைப் படித்த அனுபவம் இருந்திருக்கவில்லை. ஹென்றி மில்லர் போன்றோரின் படைப்புகளை எல்லாம் அதன் பின் தான் படித்தேன். மேற்கத்திய படைப்பாளிகள் பலர் ஆபாசத்திலிருந்து ஆரம்பித்து அதிலிருந்து உயர்ந்த ஒரு தளத்திற்கு நகர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். தமிழில் பெரும்பாலும் அப்படியான ஒன்று நடக்கவில்லை. வெறும் ஆபாசத்தைத் தூண்டுவது என்பதாகவே அது முடிந்திருக்கும். சிவராமூவின்ன் அந்த நாவல் அப்படியான வேறொரு தளத்திற்கு நகர்ந்ததா என்று என்னால் சொல்ல முடியவில்லை. நான் அந்த நாவலை முழுவதுமாகப் படிக்க முடிந்திருக்கவில்லை..."

இப்படி அவரைப் பற்றிய நல்ல விஷயங்களையும் நிறையவற்றை சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார்தான்.

"அதிகம் அவரைப் பற்றி எதிர்மறையான அனுபவங்களைப் பற்றி மட்டுமே சொன்னதுபோல் தெரிகிறது. அவருடனான உறவில் இருந்த சாதகமான அம்சங்கள் ஏதாவது சொல்லமுடியாமா?" என்ற கேள்விக்கு

"நான் திட்டமிட்டு அவர் மீதான எதிர்மறையான விஷயங்களைச் சொல்லவில்லை. அவருடனான என் உறவு அப்படியான சம்பவங்களால்தான் நிறைந்திருக்கிறது. இது ஏதோ என் அனுபவம் மட்டுமல்ல. பெரும்பாலோனோருக்கு அப்படியான அனுபவங்கள் தான் இருந்திருக்கின்றன. அளவுகள் வேண்டுமானால் வித்தியாசப்படலாம். வெங்கட் சாமிநாதன் பேரிலும் சிவராமூவுக்கு ஏகதேசம் இதே அளவு வெறுப்பு இருந்தது. நாங்கள் இருவர் மட்டும்தான் அவரை நம்பி ஏமாந்திருந்தோம். மற்றவர்களுக்கு அப்படியான ஒரு நிலை இருந்திருக்கவில்லை. மற்றவர்கள் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள், அதில் முறிவு ஏற்பட்டிருக்கிறது அவ்வளவு தான். நாங்கள் இருவர்தான் சிவராமூவை நாம் பாதுகாத்து வரவேண்டும் என்று தீர்மானித்து அதற்கான செயல்களைச் செய்தும் வந்தோம். அவர் மீது மிகுந்த நம்பிக்கை, எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. எனவே ஏமாற்றமும் வருத்தமும் எங்களுக்கு அதிகமாக இருந்தது..." என்று பதில் சொல்கிறார் சு.ரா.

இந்தப் புத்தகத்தைப் பற்றிய overall opinion ஆக இதையே சொல்லலாம். இந்தப் புத்தகத்தில் இருந்து நான் மேற்கோள் காட்டியிருக்கும் பகுதிகள் என்னுடைய விருப்பு வெறுப்பு காரணமாக அமைந்தது என்று என்னால் சொல்லமுடியவில்லை. ஆனாலும் புத்தகத்தைப் பற்றியோ சு.ரா. & பிரமிளைப் பற்றியோ தெரிந்துகொள்ள புரிந்துகொள்ள விரும்புபவர்கள் புத்தகத்தை வாங்கி முழுவதுமாகப் படிக்க வேண்டுகிறேன். வெட்டி ஒட்டும் பகுதிகள் பல சமயங்கள் தவறான பொருளைக் கொண்டுவந்துவிட்டுவிடும் என்பதால் இந்த டிஸ்கி.

பிரமிளின் கவிதை ஆளுமை பற்றி பெரிய அளவில் இந்த புத்தகம் விவரிக்கவில்லை, ஆனால் அங்கங்கே பிரமிளின் திறமையைப் பற்றி சுரா சொல்லி வந்திருக்கிறார் தான். பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் இடையேயான உறவைப் பற்றியதாகவே பிரமிளின் கவிதைகள் இருந்திருக்கின்றன என்கிறார். ஆரம்பத்தில் இருந்தே பிரமிளின் திறமையில் கவரப்பட்டவராகவே சு.ரா இருந்திருக்கிறார். ஆனால் அவருடனான நேரடிப்பழக்கம் அந்தத் திறமையை கருத்தில் கொள்ள முடியாத அளவிற்குச் செய்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.

இன்னும் கொஞ்சம் பதிவுகள் பிரமிளைப் பற்றி...

ரோசா வசந்தின்
மொழியின் தீராத பக்கங்களில் கவிதையின் வாழ்வை எழுதிச் சென்ற பிரமீள்.
அறைகூவல்

மு. சுந்தரமூர்த்தியின்
பிரமிள் கவிதைகள் - 1
பிரமிள் கவிதைகள் - 2
பிரமிள் கவிதைகள் - 3
பிரமிள் மேலும் சில குறிப்புகள்

PS: வலையுலகிலும் பிரமிள் - சுரா சார்ந்து காலச்சுவடு - எதிர் அரசியல் உண்டு. எனக்கு இவை இரண்டிலுமே ஆர்வம் இல்லையென்று சொல்லிவிடுகிறேன்.

Related Articles

29 comments:

  1. //அந்த நாவலை நான் படுத்துப் பார்த்தபோது ஆபாசமான விஷயங்களைப் பேசுவதிலிருந்துதான்//

    ;-)

    ReplyDelete
  2. அனானி ரொம்ப வேகமா படிக்கிறீங்க போலிருக்கு அதேசமயம் நச்சுன்னு பிடிச்சீங்க பாருங்க ;)

    ReplyDelete
  3. //எனக்கு இவை இரண்டிலுமே ஆர்வம் இல்லையென்று சொல்லிவிடுகிறேன்.//
    ஆர்வமில்லாமலேயே எதை எதை பத்த வைக்க வேண்டுமோ அதை எல்லாம் பத்த வைத்துவிட்டு கடைசியில் நல்ல பிள்ளையாகி விட்டீர்கள்.

    ReplyDelete
  4. //ஆர்வமில்லாமலேயே எதை எதை பத்த வைக்க வேண்டுமோ அதை எல்லாம் பத்த வைத்துவிட்டு கடைசியில் நல்ல பிள்ளையாகி விட்டீர்கள்.//

    வித்யா ஏற்கனவே மாட்டிக்கொண்டிருக்கும் முகமூடிகளே போதுமெனக்கு இன்னுமொன்று வேண்டாம்.

    ReplyDelete
  5. "காவியம்:சிறகிலிருந்து பிரிந்த
    இறகு ஒன்று
    காற்றின்
    தீராத பக்கங்களில்
    ஒரு பறவையின் வாழ்வை
    எழுதிச் செல்கிறது"

    மேலே குறிப்பிட்ட அதே கவிதையைப் பற்றி நண்பர் ரோஸா வசந்த் அவ்ர்கள் ஒரு பதிவு போட்டுள்ளார். பார்க்க
    http://rozavasanth.blogspot.com/2004/10/blog-post_109877978221018657.html#comments
    அதற்கு நான் இட்டப் பின்னூட்டங்களும், ரோஸா அவர்களின் பதில்களும் கீழே கொடுத்துள்ளேன்.

    இதே கவிதையை என் நண்பர் ஸ்ரீராம் அவர்கள் 1979-ல் பிரெஞ்சில் அழகாக மொழி பெயர்த்து ஒரு பிரெஞ்சுக் காரரிடம் காட்ட, அவர் இக்கருத்தை புகழ் பெற்ற ப்ரெவெர் என்ற பிரெஞ்சுக் கவிஞர் எழுதியிருக்க வேண்டும் என்று அடித்துக் கூறினார். பிரெஞ்சில் அக்கவிதை பின் வருமாறு:

    "Isolée de l'ail, s'envole une plume
    écrivant la vie d'un oiseau dans
    les pages vides du ciel"

    11/20/2004 12:38 AM
    ROSAVASANTH said...
    நன்றி டோண்டு, (கடந்தமுறை பெயரை தப்பாய் குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்).

    இது மிகவும் ஆச்சரியமளிக்கும் செய்தியாக இருக்கிறது. பிரமீளின் இந்த பிரபலமான கவிதை குறித்து இதுவரை இப்படி ஒரு செய்தியை நான் கேள்வி பட்டதில்லை. (ஸ்ரீராம் என்று நீங்கள் குறிப்பிடுபவர், `குட்டி இளவரசன்' உள்ளிட்ட பல பிரஞ்சு படைப்புகளை பொருத்தமான தமிழில் மொழிபெயர்த்த அதே ஸ்ரீராமா?).

    அந்த பிரஞ்சுகாரரின் தகவல் உண்மையாய் இருக்கும்பட்சத்தில் இயற்கையான சில கேள்விகள் எழுகிறது. பிரமீள் காப்பியடித்திருக்க கூடுமா, எனபது உடனடியாய் எழக்கூடியது. அப்படி இல்லாத படசத்தில் இந்த `எதேச்சையான ஒரே நிகழ்வு' மிகவும் ஆச்சரியமானது.

    பிரமீளின் கவிதையில் காற்றின் தீராத(unfinished) பக்கம் என்று வருவது `ப்ரேவரின் கவிதை'யில் வானத்தின் வெற்று பக்கம் என்பதாக இருக்கிறது. பிரமீளின் கவிதை தரும் படிமத்தில் சிறகு கீழ்நோக்கி வீழ்வதாகவோ, காற்றின் போக்கில் செல்வதாகவோ எனது வாசிப்பு. ப்ரேவரின் சிறகு மேலே வானத்தில் பறந்து கொண்டிருக்கிறது. இந்த சாதாரண வித்தியாசம் மிக வேறுபட்ட interpretationsக்கு கொண்டு செல்ல கூடும்.

    இதை ஸ்ரீராம் பல ஆண்டுகளுக்கு முன்னால்(பிரமீள் உயிருடனிருந்தபோது) வெளிபடுத்தியிருந்தால் பிரமீளுக்கு இருந்த இலக்கிய விரோதத்தில் பெரிய பிரச்சனை ஆகியிருக்கும். ஏன் வெளிபடுத்தவில்லை என்று புரியவில்லை.

    அன்புள்ள வசந்த்.

    11/20/2004 4:35 PM
    dondu(#4800161) said...
    "அந்த பிரஞ்சுகாரரின் தகவல் உண்மையாய் இருக்கும்பட்சத்தில் இயற்கையான சில கேள்விகள் எழுகிறது. பிரமீள் காப்பியடித்திருக்க கூடுமா, எனபது உடனடியாய் எழக்கூடியது. அப்படி இல்லாத படசத்தில் இந்த `எதேச்சையான ஒரே நிகழ்வு' மிகவும் ஆச்சரியமானது.

    மன்னிக்கவும் ரோசா அவர்களே, நீங்கள் மேலே எழுதியப் பின்னூட்டத்தை யதேச்சையாக இன்றுதான் (12-05-2005)பார்த்தேன். நான் வலைப்ப்பூவில் சேர்ந்த புதிதில் நான் பின்னூட்டமிட்ட இடங்களைத் திரும்ப கண்டுபிடிப்பதில் அவ்வளவு பயிற்சியில்லாததே காரணம். ஆகவே நான் கூறவந்ததை சரியாகக் கூறவில்லை என்பதை இப்போதுதான் பார்த்தேன்.

    ஸ்ரீராம் (நீங்கள் சொன்ன அதே ஸ்ரீராம்தான்) பிரெஞ்சுக்காரரிடம் தன் மொழிபெயர்ப்பைக் காட்டியிருக்கிறார். பிரெஞ்சுக்காரர் ப்ரெவெரில் அதாரிட்டி. ஆகவே அவர் ஆச்சரியப்பட்டிருக்கிறார். பிறகு ஸ்ரீராம் அவரிடம் அது தமிழிலிருந்து தன்னால் மொழிபெயர்க்கபாட்டது என்பதைக் கூறியிருக்கிறார். சுதாரித்து கொண்ட பிரெஞ்சுக்காரர் கவிதையின் தரம் ப்ரெவரின் தரத்தில் உள்ளது என பாராட்டியிருக்கிறார். அதுதான் நடந்தது.

    "pages vides" என்பதற்கு பதில் "pages iépuisables" என்று எழுதலாமா என்று நான் ஆலோசனை ஸ்ரீராம் தான் எழுதியது சரியே என்பதை எனக்கு பொறுமையாக விளக்கினார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    5/13/2005 1:18 AM
    ROSAVASANTH said...
    விளக்கத்திற்கு நன்றி. இதை நீங்கள் விளக்கியது முக்கியமானது. அதாவது மேலே உள்ள பிரஞ்சு வடிவம் பிரமீள் எழுதியதன் மொழிபெயர்ப்பே அன்றி, பிரேவரின் கவிதை அல்ல என்று புரிந்துகொள்கிறேன். பிரமீள் மீதான அபிமானம் கூடுகிறது. நன்றி.
    5/13/2005 1:54 PM"

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. டோண்டு நன்றி.

    ஆச்சர்யமாயிருக்கிறது மொழிபெயர்ப்பு என்பது பல மாயங்களைச் செய்யக்கூடுமென்று நீங்கள் சொல்வதில் இருந்து புரிகிறது. பாருங்கள் பிரமிளின் அந்தக் கவிதை உலகத்தரம் வாய்ந்தது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அப்படித்தான் என்று பிறர் சொல்லும் பொழுது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    சிரமம் எடுத்து யாராவது நிறைய கவிதை, கதை, புராணங்களை மொழிபெயர்க்க முன்வரவேண்டும்.

    அதை புத்தகமாக வெளியிடவேண்டும்.

    ம்ம்ம் இதெல்லாம் நடக்கும் காலத்தில் நான் உயிருடன் இருக்க வேண்டும் :(.

    ReplyDelete
  7. ///நான் கேள்விப்பட்டிருந்தது ஜெயமோகனுக்கும் சுராவிற்கு என்னமோ பிரச்சனை என்றும் பணம் பண்ணுவதற்காக உயிர்மையும் ஜெ.மோகனும் சு.ராவின் மரணத்தின் தாக்கம் குறைவதற்குள்ளேயே புத்தகத்தை வெளியிட்டுவிட்டதாகவும். மனுஷ்யபுத்திரனுக்கும்///

    இல்லை, இல்லை. சு.ரா வின் நினைவை வைத்து பணம் சம்பாதிக்கும் அளவுக்கு அவர்கள் இருவரும் தரம் தாழ்ந்தவர்கள் அல்ல. மேலும், 1000 பிரதிகளே அச்சிடப்படும் புத்தகங்களில் சில ஆயிரங்களே வருமானம் வரும் சூழல் இங்கு. ஜெய மோகனின் நினைவுகளை படித்துப்பாருங்கள், உண்மை புரியும்.

    சாருவிடம் ஒருமுறை பேசியபோது, அவர் சு.ராவை கடுமையாக தாக்கினார் : பிரமிள் மற்றும் நகுலன் படைப்புகளை சு.ரா இருட்டைப்பு செய்தார் என்று. ஆனால், இருவருக்கும் ஆரம்ப காலங்களில் சு.ரா மிகவும் உதவியுள்ளார. அவர் மீது கடுந்தாக்குதல் நடத்தியாதால் அவர், இவர்களின் படைப்புகளை பற்றி பேசுவதை தவிர்தார். யாரும், யாருடைய படைபையும், இருட்டடிப்பு செய்ய முடியாது. கால ஒட்டத்தில் நல்ல படைப்புகள் மட்டும் நிலைக்கும் என்பதே யதார்த்தம்...

    ReplyDelete
  8. //மேலும், 1000 பிரதிகளே அச்சிடப்படும் புத்தகங்களில் சில ஆயிரங்களே வருமானம் வரும் சூழல் இங்கு. ஜெய மோகனின் நினைவுகளை படித்துப்பாருங்கள், உண்மை புரியும்.//

    அதியமான் இந்தப் பதிவிலேயே இப்படி எழுதியிருக்கிறேன்.

    //இந்தப் புத்தகத்தை முதலில் படித்து முடித்ததும் இப்படிப்பட்ட விஷயத்தையும் சுவாரசியமாக எழுத முடியுமா என்ற எண்ணம் தான் முதலில் எழுந்தது. இதைத் தொடர்ந்து படித்தனாலோ என்னமோ நினைவின் நதியில் பற்றி எனக்கிருந்த சில எண்ணங்கள் இல்லாமல் போய்விட்டது.//

    பதிவை முழுசா படிங்கப்பே!

    ReplyDelete
  9. //இந்தப் புத்தகத்தை முதலில் படித்து முடித்ததும் இப்படிப்பட்ட விஷயத்தையும் சுவாரசியமாக எழுத முடியுமா என்ற எண்ணம் தான் முதலில் எழுந்தது. இதைத் தொடர்ந்து படித்தனாலோ என்னமோ நினைவின் நதியில் பற்றி எனக்கிருந்த சில எண்ணங்கள் இல்லாமல் போய்விட்டது.//

    //பதிவை முழுசா படிங்கப்பே!//

    இரணடு புத்தகங்களை பற்றி ஒரே நேரத்தில் வந்தால் நேர்ந்த குழப்பம்..

    ஜெய மோகனின் நினைவின் நதியை நான் பல முறை வாசித்கிறேன். அவ்வளவு தூரம் கவர்ந்தது. சு.ராவின் மரணச்செய்தியை கேள்விப்படவுடன், பல நாட்கள் தூங்காமல், ஒரே மூச்சில் எழுதப்படா நினைவுகள் இவை. பல நுட்பமான், ஆழமான பார்வைகள், சமவங்களின் கோர்வைகள், தத்துவ விவாதங்ளின் சாரங்கள், உணர்சியுடனும், மெல்லிய நகைசுவையுடனும் அருமையாக எழுதப்பட்டுள்ளது.

    ReplyDelete
  10. தவறா சொல்லலை அதியமான்; நேற்று எழுதியிருந்த பதிவிலும் சொல்லியிருந்தேன் நினைவின் நதியில் - ஜெயமோகன், பிரமிள் நினைவோடை - சுரா ஒரே நேரத்தில் தொடர்ச்சியாகப் படித்தேன் என்று.

    எனக்கும் மிகவும் பிடித்த புத்தகமாகயிருக்கிறது நினைவின் நதியில், அதைப்பற்றி விரைவில் எழுதணும் என்னுடைய நேரம் ஒத்துழைத்தால் எழுதுவேன்.

    எனக்கு ஜெமோ வின் தத்துவங்களில் பலவற்றைப் பற்றி வேறுகருத்து உண்டு. பார்ப்போம். எழுதுகிறேன்...

    ReplyDelete
  11. தாஸு,

    // ஒரு பறவையின் வாழ்வை
    எழுதிக்கொண்டிருக்கிறது.//

    "எழுதிச் செல்கிறது" எனபதே சரியானது என நினைக்கிறேன். முடிந்தால் சரிபார்த்து மாற்றி விடுங்கள்.

    "அஃக்" சிற்றிதழ்களின் தொகுப்பு வெளிவந்துள்ளது. 8 ஆண்டுகால இதழ்களில் தொகுப்பு. 1950களின் சுவாரசியமான இலக்கியச் சண்டைகளுக்கு உத்திரவாதமளிக்கும் புத்தகம். அதிலிருக்கும் அக்கால கட்டுரைகள் அப்படியே நம்ப தமிழ்மணம் படிக்கற மாதிரியே இருக்கும். ஒரே வித்தியாசம் விசயங்கள் நிறைந்த சண்டையாக இருக்கும்! :)

    முடிந்தால் அதனையும் (கல்யாணமாவதற்கு முன்னாடி )வாங்கிப் படிங்க.

    ReplyDelete
  12. இளவஞ்சி திருத்திட்டேன்; எங்கனப் பார்த்து எழுதினேன்னு நினைவில் இல்லை. திருத்தியதற்கு நன்றி.

    //முடிந்தால் அதனையும் (கல்யாணமாவதற்கு முன்னாடி )வாங்கிப் படிங்க.//

    இன்னிக்கு இதைப்பற்றி ஏதாவது சொன்னால் ***ல சிரிப்பீங்க ;) எனக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் பேசுவோம் இதைப்பத்தி. ;)

    ReplyDelete
  13. http://tamilcircle.net/unicode/puthiyakalacharam_book/book_2/book_23u.html

    http://tamilcircle.net/unicode/puthiyakalacharam_book/book_2/book_24u.html

    http://tamilcircle.net/unicode/puthiyakalacharam_book/book_2/book_2stalin.html

    http://tamilcircle.net/unicode/puthiyakalacharam_book/book_2/book_27u.html

    You said you have great respect on Su.ra and Jayamohan. These are some chapters from "Ninaivin nathiyil - kanavin kuttai" a book released by puthiya kalacharam. Do you have any thing to say about these Criticism?

    To read the full book go to www.tamilcircle.net -> noolgal(ma.ka.i.ka) search for "kanivin nathiyil ninaivin kuttai"

    Expecting a comment from you!

    Chinnadurai

    ReplyDelete
  14. பிரமிள் என்று அறியப்படும் தர்மு சிவராமுவின் மிக இளமைக்கால நண்பர்களில் நானும் ஒருவன்.
    இலங்கையில் திருகோணமலைதான் அவரது சொந்த ஊர்.வயதில் பார்த்தால் 15 வயது இடைவெளியிருந்தாலும் அவர் வரையும் ஓவியங்களில் ஒரு ஈர்ப்பு இருந்தது. பல படங்கள் பெண்களை வெளிப்படையாக காட்சிப்படுத்துவதாக இருக்கும். அவர்தான் கணையாளி போன்ற இலக்கிய ஏடுகளையும் அறிமுகம் செய்தவர். அவருடைய எழுத்துக்கள் அதிகம் புரியாததுபோல் அவருடைய பல செயல்களும் புதிராகவே இருந்தது.


    அவருடை வீட்டிற்கு அருகில் எங்கள் கல்லூரியும் இருந்தது. வழமைபோல்
    ஒரு நாள் கல்லூரி செல்லும் வழியில் அவரை அவரது வீட்டிற்கு அருகில் சந்தித்தேன். வழமைபோல பல இலக்கிய விடங்களை பேசிவிட்டு ஏதோ நினைத்தவர் போல் அலட்டல் இல்லாமல் " ஆ சொல்ல மறந்திட்டேன் என் அம்மா இன்று காலையில் இறந்துவிட்டார்" என்றார். தயக்கத்துடன் வீட்டை எட்டிப்பார்த்தேன். உண்மைதான். சிலர் ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார்கள்.

    சரவணன்

    ReplyDelete
  15. பெங்களூரில் நடந்த ரகசிய சந்திப்பில் பங்கேற்ற மகஇக தோழர் தானா நீங்கள்? இல்லாவிட்டாலும் சரி.

    நான் ஜெமோ சுரா மீது கட்டற்ற மதிப்பு வைத்திருப்பதாக எங்கே எழுதினேன் காட்டலாம்.

    சுஜாதா பற்றிய கேள்விகள் வந்த பொழுது எழுதியதை திரும்பவும் எழுதுகிறேன் தோழர்! யாரையும் defend செய்யும் நோக்கம் மற்றும் அவசியம் என்னிடம் இல்லை. அவரவர்களுடைய கருத்துக்களுக்கு அவரவர்களே ஜவாப்தாரி அவ்வளவே. மேலும் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன் நான் இந்தப் பதிவை எழுதியிருப்பதன் காரணமாகவே என்னை எந்தக் கோஷ்டியிலும் சேர்ப்பதை நான் விரும்பவில்லை என்று.

    நேரம் கிடைத்தால் இன்னும் விரிவாக எழுதுகிறேன்.

    ReplyDelete
  16. சரவணன் வாங்க. உங்கள் பிரமிளின் அறிமுகம் ஆச்சர்யத்தைத் தருவதாய் இருக்கிறது.

    நீங்களும் எழுதுங்களேன் பிரமிள் பற்றி.

    ReplyDelete
  17. மோகன்தாஸ்!! நிச்சயமாக, சில தகவல்களை தேடித் தருகிறேன். எழுபதுகளின் தொடக்கத்திலேயே இந்தியா சென்றுவிட்டார். அவருடை தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. ஊரில் பலர் அவரை மறந்துபோனாலும், அவர்களூடைய கல்லூரித் தோழர்கள் அவர் நினைவுகளை எழுதுகின்றார்கள். டாக்டர் இராமச்சந்திரன் தர்மு சிவராமு அவர்களின் மறைவைத் தொடர்ந்து சில பிரசுரங்களை வெளியிட்டிருந்தார்.
    கிடைத்ததும் தெரியப்படுத்துவேன்


    சரவணன்

    ReplyDelete
  18. Thanks for the explanations Mohan.

    I felt a single dimentional view on su.ra and J.M from your post. I just want to show the readers that apart from the decorative imaginations of these writers, there is always a hiden class nature.

    I am not suspecting you in anyway ;-).

    But we have a responsibility to expose the dark side of all the "great" writers.

    Please do write an article about the book which I have mentioned in my earlier comment.

    By the way, I am not the one whom you are mentioning. :-)

    - Chinnadurai

    ReplyDelete
  19. சரவணன் நேரம் கிடைத்தால் நிச்சயம் எழுதுங்கள்.

    ReplyDelete
  20. சின்னதுரை,

    கைவசம் புத்தகமாகக் கிடைத்தால் படித்துப்பார்த்து விரும்பினால் எழுதவும் தயார் தான்.

    //But we have a responsibility to expose the dark side of all the "great" writers.//

    எல்லா மனிதர்களுக்குமே ஒரு இருண்ட பாகம் இருக்கும் பொழுது எழுத்தாளர்களுக்கு இருக்கக்கூடாது என்று நினைப்பது தவறுதான். நீங்கள் அதை வெளிச்சப்படுத்திக் காட்டுவதாகச் சொல்கிறீர்கள். அந்த வகையில் நலமே!

    கம்ப்யூட்டரில் படிப்பதற்கு இப்பொழுதெல்லாம் பொறுமை இல்லாமல் போய்விட்டது. :(

    ReplyDelete
  21. மோகன்

    விவாதத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். நீங்கள் குறிப்பிட்ட எந்த நூல்களையும் நான் பார்த்ததில்லை. காரணம் இங்கு அவைகள் கிடைக்காது. குறிப்பிட்ட சில புத்தகங்கள் விடுமுறையில் எடுத்து வந்தால் அவற்றை மட்டுமே வாசிப்பதுதான் நிலமை. பிறகு இணையம், பதிவுகள் வழியாக. நிற்க.

    இவ்விவாதங்கள் யாத்ரா, இலக்கிய வெளிவட்டம், படிகள் போன்ற பத்திரிக்கைகளின் காலகட்டங்களை நினைவூட்டுகின்றன.

    பொதுவாக பிரமிள் எப்பொழுதுமே சர்ச்சைக்குரிய நபராகத்தான் இருந்து வந்துள்ளார். குறிப்பாக மெளனி பற்றிய அவரது கருத்துக்கள்கூட கால ஓட்டத்திற்கு ஏற்ப மாறி மாறி வந்தன. இதிலும்கூட அவரது நிலைபாடுகள் அப்படி இருக்கலாம்.

    பொதுவாக இலக்கிவாதி என்கிற பெயரில் சூடிக்கொள்ள விரும்பும் ஒளிவட்டங்கள் இதுபோன்று சர்ச்சைகளின் வழியாகவும் கட்டமைக்கப்படுகிறது. உங்களது நிலைபாடு அப்படியானது அல்ல என்பதை விளக்கியுள்ளீர்கள். நீங்கள் விஷயங்களை அதன் தளத்தில் புரிய முயற்சிக்கிறீர்கள். இலகக்கிய வாசகர்களுக்குகு உங்கள் பதிவு முயற்சி பயனுள்ளதாக உள்ளது.

    ReplyDelete
  22. தாஸு,

    "ஒரு பறவையின் வாழ்வை
    எழுதிக்கொண்டிருக்கிறது"

    என்பதே சரியானது. பலவருடங்களுக்கு முன்னால் எங்கேயோ மாற்றிப்படித்தது அப்படியே மனதில் தங்கிவிட்டது. இக்கவிதை முதன்முதலில் வெளிவந்தது அஃக் இதழில்தான். நேற்றிரவு சந்தேகத்தின் பேரில் அஃக்கைப் புரட்டி சரிபார்க்க நீங்கள் முன்னர் எழுதியதே சரியானது எனக்கண்டேன்.

    தவறான தகவலுக்கு வருந்துகிறேன்! :(

    ReplyDelete
  23. ஹாஆஆஆங்,

    வேறென்ன செய்ய திரும்பவும் மாத்திடுறேன். என்கிட்ட அஃக் இதழ் இல்லை :(

    ReplyDelete
  24. You could have written this after reading the works of Brmil. His essays, poems, fiction and non-fiction works are available now.
    Regarding what Sundara Ramasamy
    wrote on Brmil and vice versa
    we moght never know the truth as
    both would project their views as the correct one. Same applies to Jayamohan's writing on Sundara Ramasamy. In my view they are
    pettier than normal people when
    it comes to ego clashes. In any
    case why waste time on this silly
    quarrels and petty fights.

    ReplyDelete
  25. ஜமாலன் - பக்கத்தில் நண்பரொருவர் என்னிடம் பிரமிள் - சுரா விஷயம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார் அவர் சொன்ன விஷயங்களை politically correct statement களாக வைப்பது ரொம்பவும் கஷ்டமான விஷயம்.

    //பொதுவாக இலக்கிவாதி என்கிற பெயரில் சூடிக்கொள்ள விரும்பும் ஒளிவட்டங்கள் இதுபோன்று சர்ச்சைகளின் வழியாகவும் கட்டமைக்கப்படுகிறது. //

    இதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் நான் அதற்காக முயலவில்லை என்று நீங்கள் சொல்லியிருப்பது சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

    ஆனால் பின்னூட்டமாக இல்லாமல் விமர்சனம் செய்யும் நண்பர்கள் சிலர் அறிவுஜீவித்தனமாக நான் நடக்க முயல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். ;)

    ReplyDelete
  26. //Same applies to Jayamohan's writing on Sundara Ramasamy.//

    அந்தப் புத்தகம் படிச்சிட்டுத்தான் சொல்றீங்களா இதை.

    எனக்கென்னமோ ஜெமோ சுராவிடம் செய்த சண்டைகள், வைத்த விவாதங்கள் எல்லாவற்றையும் நம் முன்னால் வைக்க நாம் ஒரு முடிவுக்கு வரமுடிகிறது.

    உதாரணமாக கடவுள் நம்பிக்கையைப் பற்றி, ஸ்டாலின் பற்றி, கம்யூனிஸம் பற்றி, ஸ்டைல் ஆஃப் ரைட்டிங் இப்படி நிறைய விஷயங்களை.

    சைக்கிள் கேப்பில் "நான் சுராவை விட பெரிய எழுத்தாளன்னு" சுரா கிட்டையே சொல்லியிருக்கேன்னு சொல்வதைப் போன்ற சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறதுன்னாலும், எனக்கு ரொம்பவும் Odd ஆத் தெரியலை.

    இதைப் பின்னூட்டத்தில் விளக்கு முடியாது; பதிவு வேண்டுமானால் எழுதுகிறென்.

    ReplyDelete
  27. //ஆனால் பின்னூட்டமாக இல்லாமல் விமர்சனம் செய்யும் நண்பர்கள் சிலர் அறிவுஜீவித்தனமாக நான் நடக்க முயல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். ;)//

    அப்படி நடப்பதுகூட சமூகவிரோத நடவடிக்கையோ அல்லது கெட்ட செயலோ அல்ல.

    ReplyDelete
  28. //அப்படி நடப்பதுகூட சமூகவிரோத நடவடிக்கையோ அல்லது கெட்ட செயலோ அல்ல.//

    ஜமாலன் நீங்க சொல்றது சரிதான்.

    ReplyDelete
  29. //தாஸு,

    "ஒரு பறவையின் வாழ்வை
    எழுதிக்கொண்டிருக்கிறது"

    என்பதே சரியானது. பலவருடங்களுக்கு முன்னால் எங்கேயோ மாற்றிப்படித்தது அப்படியே மனதில் தங்கிவிட்டது.//

    //இளவஞ்சி திருத்திட்டேன்; எங்கனப் பார்த்து எழுதினேன்னு நினைவில் இல்லை. திருத்தியதற்கு நன்றி.//

    பார்த்து எழுதியது சமீபத்தில் ஆனந்த விகடனில் வந்திருந்த அஃக் பரந்தாமனின் ஆர்ட்டிக்கிளில் இருந்து.

    அவர் தவறாக எழுதியிருக்க வாய்ப்பில்லை.

    ReplyDelete

Popular Posts