அடுத்து நான் மதுமிதாவை அடுத்த நாள்தான் பார்த்தேன். உடல் முழுவதும் தங்கநகை போட்டுக்கிட்டு, பட்டுபுடவை கட்டிக்கிட்டு, பார்க்கவே சூப்பராகயிருந்தாள். நானும் போனிடைலை கட் செய்துவிட்டு, சாதாரணமான ஸ்டைலில் முடி வெட்டியிருந்தேன். பின்னர் அரண்மனை வழக்கப்படி, கோட், சூட் போட்டிருந்தேன். அருகில் வந்தவள், "ரவி, எனக்கு ஆரம்பத்தில் ஒரு எண்ணம் இருந்தது. நாம அழகா இருக்கிறதாலதான் உங்களுக்கு என்னை பிடிச்சிருந்ததுன்னு, இங்க வந்து பார்த்தா உங்க அக்கா பெண்ணு என்னமா இருக்கா. அவளையே பார்த்துக்கிட்டிருக்கணும் போல இருக்கு." இன்னமும் அவளுக்கு ஆச்சர்யம் அடங்கவில்லை.
"உனக்கு புடவையெல்லாம் கட்டத்தெரியுமா, நான் தெரியாதுன்னுல்ல நினைச்சேன். இப்ப ஒரு இருபது கிலோ கூடுனமாதிரி இருக்க, அப்பிடியே தூக்கிட்டு என் கட்டிலுக்கு போயிரலாம்னு பார்க்கிறேன், வேண்டாம் அக்கா சொல்லியிருக்காங்க, சரி உனக்கு பிரச்சனை ஒன்னும் இல்லையே?"
"பிரச்சனையில்லையா, உங்க வீட்டில சில கிழவிங்கல்லாம் இருக்காங்கல்ல, அவங்க என் ட்ரெஸ்ஸையெல்லாம் கழட்டிட்டு பார்க்கிறாங்க, கமெண்ட் வேற, பரவாயில்லைன்னு அப்புறம் உங்க அக்காபெண்ணுதான் வந்து அவங்களையெல்லாம் அதட்டி என்னை காப்பாத்தினா. நான் உண்மையிலே பயந்திட்டேன், பத்து பொம்பளங்க முன்னாடி ட்ரெஸ் இல்லாம. உண்மையிலே பயந்திட்டேன்."
"அவங்க எப்பவுமே அப்பிடித்தான். வானதி உன்கிட்ட தமிழில் தானே பேசுறா?"
"ஆமா ஆனால் வானதியும் உங்க அக்காவும் பேசிக்கும் போது காஷ்மீரியில் தான் பேசுறாங்க, ஒன்னுமே புரியமாட்டேங்குது. என்னாயிது ஆளே மாறியிருக்கீங்க, முடியெல்லாம் வெட்டிட்டு, ஒழுங்கா ட்ரெஸ்ஸெல்லாம் போட்டுக்கிட்டு, ம்ம்ம் நீங்களும் சூப்பராத்தான் இருக்கீங்க."
அங்கே வந்த அக்கா, "என்னடா சொல்றா உன் பெண்டாட்டி?" காஷ்மீரியில் கேட்க.. "அக்கா தமிழ்..." சொன்னதும் திரும்பவும் அதே கேள்விளை தமிழில் கேட்க.. "ஒரே புலம்பல், பாட்டியெல்லாம் இப்பிடி பண்ணலாமா. நீங்க கேட்கக்கூடாதா. இந்த வானதிகிட்ட சொல்லித்தான் விட்டுட்டுப்போனேன். அப்பிடியும்னு" சொல்லி பக்கத்தில் நின்றிருந்த வானதியின் தலையில் குட்டினேன். அவள் ஒன்றுமே சொல்லவில்லை, ஆனால் அக்கா, "டேய் என் பொண்ணை அடிச்சே அவ்வளவுதான். நாங்க வெளியே போயிருக்கிற நேரமா பார்த்து அவங்க வந்துட்டாங்க. நாங்க என்ன பண்ணுறது. சரி இனிமேல் பத்திரமா பார்த்துக்கிறேன்."
அடுத்த ஒரு மாதத்தில் எங்களுக்குக் கல்யாணம் நடந்தது; எல்லா தொழில் அதிபர்களும் வந்திருந்தார்கள். சொல்லப்போனால் அரண்மனையில் பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் கல்யாணம், அப்பா நிறைய செலவு செய்திருந்தார். நான் அதில் தலையிடமுடியாது, மாமாவும் அக்காவும் தான் மதுமிதாவை கன்னிகாதானம் செய்து கொடுத்தார்கள். மதுமிதா உடம்பு முழுவதும் வெறும் நகைகள் தான். அம்மாவிற்குப் பிறகு ராணிக்குரிய எல்லா நகைகளும் சும்மாதான் இருந்தன. அவள் கட்டியிருந்த அந்த கல்யாணப்புடவை மட்டுமே பத்து கிலோ இருக்கும். அன்று மிகவும் அழகாக இருந்தாள், அவளால் அவள் போட்டிருந்த சுமைகளை சுமக்கமுடிந்ததே எனக்கு ஆச்சர்யமாயிருந்தது, கல்யாணம் முடிந்து நாங்கள் மேடையில் உட்கார்ந்தோம். ஒவ்வொரு விருந்தாளியாக வந்து பரிசுப்பொருள் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
நான் ஒவ்வொரு தொழில் அதிபர் பக்கத்தில் வரும் பொழுதும் அவள் காதருகில் அவரைப் பற்றி சொல்வதை போல் ஏ ஜோக் சொல்லிக்கொண்டிருந்தேன். அவளால் தாங்க முடியவில்லை, சிரிக்கவும் முடியாமல், என்னைக் கண்டிக்கவும் முடியாமல், தர்மசங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்தாள். நான் அதைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தேன். அக்கா இந்த விஷயங்களை தூரத்திலிருந்து பார்த்துவிட்டு என் கழுத்தில் உள்ள மாலையை சரிசெய்வதுபோல் பக்கத்தில் வந்து யாருக்கும் தெரியாமல் என் தலையில் கொட்டிவிட்டு, "என்ன விளையாட்டு இது, என்னடா சொல்லிக்கிட்ருக்க அவகிட்ட, நெளியிறா?"
"அண்ணி தப்பு, தப்பா பேசுறாரு. ரொம்ப கஷ்டமாயிருக்கு. நீங்களே சொல்லுங்கண்ணி..." அக்காவிடம் சொல்லிவிட்டு என்னிடம் திரும்பி பழிப்பு காட்டினாள்.
அக்கா என் தொடையில் நறுக்கென்று கிள்ளிவிட்டு, வானதியைக் கூப்பிட்டு எங்களுக்கு இடையில் நிற்க வைத்துவிட்டார்கள்.
இப்படி ஒருவாறு எங்கள் கல்யாணம் முடிந்தது, அன்றிரவு எங்களுக்கு முதலிரவு. ஆனால் உண்மையில் மூன்றாம் இரவு.
கல்யாணம் முடிந்ததும் அன்று மாலை ரிஷப்ஷன் இருந்தது; இரண்டு மணிநேர ரிஷப்ஷனுக்குப் பிறகு, நான் என் படுக்கையறையில் அவளுக்காகக் காத்திருந்தேன். என் தாத்தா பரிசளித்த காஷ்மீரத்து பட்டுபுடவையணிந்து வந்தாள். கையில் பால் டம்ளரும் வைத்திருந்தாள். நேராக என் அருகில் வந்தவள். பக்கத்தில் இருந்த மேஜையில் பால் டம்ளரை வைத்துவிட்டு, என் அருகில் வந்து கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்; கொடுத்துவிட்டு, "ம்ம்ம், இங்கப் பாருங்க நல்லப்புள்ளையாம் பாலை குடிச்சிட்டு தூங்குவீங்களாம். எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு, அதனால நான் தூங்குறேன்." சொல்லிவிட்டு கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டாள்.
"ஏய் என்னாடி இது, முதலிரவு அதுவுமா தூங்குறேன்னு" நான் கத்தினேன்.
கண்ணை கூடத் திறக்காமல், "முதலிரவா? அதெல்லாம் எப்பவோ முடிஞ்சிருச்சு, அன்னிக்கு படம் வரையரேன்னு சொல்லிவிட்டு, படம் மட்டும்தான் வரையலை. நானா சொன்னேன், இவ்வளவு நகை போட்டுக்கிறேன்னு, இவ்வளவு வெயிட்டான புடவை கட்டிக்கிறேன்னு... எனக்கு ரொம்ப அசதியா இருக்கு. ப்ளீஸ் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க, நான் தூங்குறேன்." சொல்லிவிட்டு ஐந்து நிமிடத்தில் தூங்கிப்போனாள்.
நான் அவள் பக்கத்தில் வந்து படுத்துக்கொண்டேன், அவளிடமிருந்து ஒரு அற்புதமான வாசனை வந்து கொண்டிருந்தது, எனக்கு ஆச்சர்யமாயிருந்தது இவளை முதல் முதலில் ஆஸ்பிடலில் பார்க்கும் போது நான் நிச்சயமாக நினைத்திருக்கவில்லை, எங்களுக்கு கல்யாணமாகும், இவள் முதலிரவில் எனக்கு தூக்கம்வருது நான் தூங்குறேன்னு சொல்லி தூங்குவான்னு. ஆனால் எனக்கு அதனால் தான் அவளைப் பிடித்திருந்தது. நான் சொல்வதையும் மறுத்துப் பேச ஒரு ஆள் இருக்கவேண்டும் என நினைக்கும் எனக்கு அவளைப் பிடித்திருந்ததில் அர்த்தம் இருந்ததாகபட்டது எனக்கு. சிறிது நேரத்தில் நானும் தூங்கிவிட்டேன். பிறகு சிறிது நேரத்திற்கு பிறகு யாரோ எழுப்பவது போல் இருந்ததால் திடுக்கென்று எழுந்தேன்.
"சே, நான் அப்பவே நினைத்தேன் நீங்க இப்பிடித்தான் எழுந்திருப்பீங்கன்னு; அதனாலத்தான் எழுப்பாம இருந்தேன். ஏன் ரவி, இப்பிடி திடுக்கினு எழுந்திருக்கிறீங்க, நான் பயந்திட்டேன் தெரியுமா?"
"என்னடி விளையாட்டா, யாராவது தொட்டா எழுந்திருக்க மாட்டாங்களா? ஆமா மணியென்ன ஆகுது. நீ தூங்கலை?"
"நாலு இருக்கும்னு நினைக்கிறேன். என்னடா இது முதலிரவுல போய் இப்பிடி தூங்கிட்டமேன்னு நினைச்சிக்கிட்டிருந்தேன், அதுவும் நான் சொன்னதும் ஒன்றும் சொல்லாம அழகா தூங்குற உங்களைப்பார்த்தா பாவமா இருந்தது. அதான் எழுப்பலாம்னு பார்த்தா, இப்பிடி பயமுறுத்துறீங்க." சொன்னவுடன் நான் அவளை இழுத்து பக்கத்தில் இறுக்கிக் கொண்டேன். பிறகு, "இங்கப்பாரு நானே உனக்கு சொல்லணும்னு நினைச்சேன்; நமக்கு கல்யாணம் ஆனாலும் உன்னுடைய உரிமைகள் எதையும் நீ இழந்திடலை, இதுக்காக மட்டும் இல்லை. உன்னுடைய வேறு எந்த விஷயத்திலும் உன் விருப்பம் இல்லாம நான் நடந்துக்கமாட்டேன்னு. ஆனா அதுக்கு முன்னாடி நீயே எடுத்துக்கிட்ட அந்த உரிமையை, அதில் சந்தோஷம் தான். ஆனா முதலிரவில நீ இந்த உரிமையை கேட்பேன்னு நினைக்கலை; இருந்தாலும் சந்தோஷம் தான்."
"ரவி உங்களைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும்; இருந்தாலும் என்னடா இது ராணி மாதிரி இல்லை ராணியாவே வாழ்க்கை கொடுத்திருக்கோம்; இருந்தாலும் நமக்காக இவ இதைக் கூட பண்ண மாட்டேங்கிறாளேன்னு நினைச்சிருவீங்களோன்னு பயந்தேன். பரவாயில்லை நீங்க நான் நினைச்சமாதிரியே தான் நினைக்கிறீங்க."
"சரி நிம்மதியா தூங்கினியா?"
"ம்ஹூம் தூக்கமே வரைலை, ஒரு நல்ல பையனை பட்டினி போட்டுட்டு தூங்குறமேன்னு நினைச்சிக்கிட்டே தூங்கினேனா, ஒரே கெட்ட கெட்ட கனவா வருது. நீங்க நிஜத்தில தான் நல்லவரு, கனவிலே ம்ஹூம் ரொம்ப மோசம். எந்திருச்சி பார்த்தா ஜோரா தூங்குறீங்க, என்னையத் தூங்கவிடாம பண்ணிட்டு நீங்க தூங்குறதப் பார்த்ததும்தான் எழுப்பினேன்."
"ஏய் கனவிலே நான் என்னா பண்ணினேன் சொல்லு, சொல்லு?"
"சீய், அதெல்லாம் சொல்ல முடியாது. வெக்கமா இருக்கு..."
அதற்கு பிறகு எங்கள் வாழ்க்கை திரும்பவும் பழைய நிலைக்கே வந்துவிட்டது. அதாவது சரியான நிலைக்கே, நான் அப்பாவின் கம்பெனியை பார்க்கத் தொடங்கியிருந்தேன். சில நாட்களிலேயே கம்பெனிக்கு ஒரு ஃபோன், மதுமிதா மயக்கம் போட்டு விழுந்திட்டான்னு. நான் நேரா வீட்டுக்கு வந்து டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போனேன். அன்றைக்கு முழுவதும் சாப்பிடாமல் இருந்ததால் மயக்கம் போட்டு விழுந்ததாக சொன்ன டாக்டர் ஒரு குண்டையும் வேறு தூக்கி என் தலையில் போட்டார். மதுமிதாவிற்கு ஆன ஆக்ஸிடெண்டால் அவள் கர்ப்பப்பை கொஞ்சம் வீக்காயிருக்கு, அதனால் கொஞ்ச நாளுக்கு குழந்தை பெத்துக்காம தள்ளிப்போடுங்கன்னு சொன்னார்.
நான் டாக்டரிடம், "கொஞ்ச நாளெல்லாம் ஒன்றும் வேண்டாம் டாக்டர், அவளுக்கு பிரச்சனைன்னா குழந்தையே வேண்டாம் எங்களுக்கு..."
"ரவி, நீங்க நினைக்கிற மாதிரி பெரிய பிரச்சனையில்லை. ரெண்டு மாசம் நல்லா சாப்பிட்டு, நிம்மதியா தூங்கி கொஞ்சம் உடற்பயிற்சி செஞ்சாங்கன்னா எல்லாம் சரியா போயிடும். ஒரு முக்கியமான விஷயம், இதைப்பத்தி அவங்ககிட்ட சொல்லாதீங்க, என்னதான் பெண்ணு கொஞ்சம் தைரியமானதா இருந்தாலும் குழந்தை சம்மந்தப்பட்ட விஷயத்தை தாங்க மாட்டாங்க. அதனால நீங்க கொஞ்சம் எச்சரிக்கையா, கவனமா இருங்க அதுபோதும்!" டாக்டர் சொல்லவந்தது புரிந்தது எனக்கு. நான் ஜாக்கிரதையா இருக்கத் தொடங்கினேன். அவளிடம், "என்னம்மா இது, டாக்டர் என்னைத் திட்டுறார். உங்களை பிடிச்சித்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அவங்கன்னு கேட்கிறார். ஏம்மா சாப்பிடாம இருந்த?"
"என்ன ரவி இதுமாதிரியெல்லாம் கேட்டு கஷ்டப்படுத்துறீங்க, உண்மையிலேயே ஞாபகமே வரைலை, எதையெதையோ யோசித்துக்கிட்டே இருந்துட்டேன், வானதிகூட இரண்டு முறை வந்து கூப்பிட்டா. மறந்திட்டேன். இனிமே கவலைப்படாதீங்க நிறைய சாப்பிட்டு, வானதி மாதிரி அழகா ஆகாட்டியும் பரவாயில்லை, உடம்பையாவது அவளை மாதிரி கொண்டுவந்திர்றேன்."
நான் சிரித்துக்கொண்டே, "உனக்கு வானதிய பார்த்து பொறாமையா இருக்குள்ள?" திரும்பி என்னைப் பார்த்தாள்.
"உண்மையை சொல்லணும்னா ஆமாம், என்னா அழகா, அம்சமா இருக்கா. நீங்கதான் அடிக்கடி என்னை கேட்பீங்களே என்னாடி ஒன்னையுமே காணோம்னு, சொல்லப்போனா அதில் தான் பொறாமையேன்னு வைச்சுக்கோங்களேன்." சிறிது இடைவெளி விட்டு, "அப்பிடியே உங்களோட ட்வின் மாதிரியே வேற இருக்காளா, நான் அவளையே சிலதடவை பார்த்துக்கிட்டிருப்பேன், உடனே பக்கத்தில் வந்து, உங்காளு கம்பெனியல் இருக்காரு; நான் வானதி, விட்டாக் கடிச்சி தின்னுடுவீங்க போலிருக்குன்னு ஒரு தடவை கேட்டா. நான் பெரும்பாலும் பெண்கள் கூட பழகவேமாட்டேன் எப்பப் பார்த்தாலும் புடவை, நகைன்னு தான் பேசுவாங்க, ஆனா அப்பிடியில்லாம அவ வேற மாதிரி இருக்கா; ம்ஹும், ஆனா எனக்குத்தானே நீங்க கிடைச்சிருக்கீங்க, அதுவே போதும் எனக்கு. ரவி, ஒரு சந்தேகம் நீங்க ஏன் உங்க அக்கா பெண்ணை கல்யாணம் பண்ணிக்கலை?" நான் சிறிது நேரம் யோசித்தேன்.
"அதுக்கு ஒரேயொரு காரணம் தான் இருக்க முடியும். நான் உன்கிட்ட முன்னையே சொல்லியிருக்கேன், நான் பிறந்த ஒரு மாதத்திலேயே எங்கம்மா செத்து போயிட்டாங்கன்னு, அதுனால என்னைய வளர்த்தது எல்லாம் அக்காதான்னு. அக்காவுக்கு ஒரு மாசத்தில குழந்தை பிறந்ததால எனக்கும் வானதிக்கும் சேர்த்துதான் அக்கா பால் கொடுத்து வளர்த்தாங்களாம். நான் இதை நினைவு தெரிஞ்ச கொஞ்ச நாள்களில் தெரிந்து கொண்டேன். அதற்குபிறகு கூப்பிடுறதுதான் அக்காவே தவிர, அவங்க என்னோட அம்மாதான். என்னால வானதிய, பெண்டாட்டியா கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாது."
"ஏன் இன்னும் வானதிக்கு கல்யாணம் பண்ணாம இருக்காங்க?"
"எங்க வழக்கப்படி சொந்தத்தில் மாப்பிள்ளை இருந்தால் அவனுக்கு குடுக்காம கல்யாணம் பண்ணக்கூடாது. அதான் இதுவரை ஏற்பாடு பண்ணலை, இனிமே பண்ணீருவாங்க."
அதன் பிறகு நான் அவளை நெருங்கும் பொழுதெல்லாம் ஒரு நாள்கணக்கு என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ஒரு காலத்தில் சாமியாராக இருந்தவன்தான் என்றாலும் அப்பொழுது உள்ளதுக்கும் இப்பொழுது உள்ளதுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருந்தது. அது எனக்கு முன்பு கல்யாணம் ஆகியிருக்கவில்லை, முன்பு நான் பெண் இன்பத்தை உணர்ந்ததில்லை. இதனால் சிலசமயம் நாள்கணக்கு கூடாது என்று சொன்னாலும் மனம் கூடு என்று சொல்லிக்கொண்டிருந்தது. இதனால் நான் என் குரு சொல்லித்தந்திருந்த யோகக் கலைகளை உபயோகப்படுத்த ஆரம்பித்திருந்தேன்.
ஆனால் இந்தக் கலைகளை குறிப்பாக, பிராணயாமம் மற்றும் மூச்சுப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்யும் பொழுது ஏற்படும் ஒரு மன நெகிழ்வு, மனிதனை அவனுடைய இல்லறப் பாதையை விட்டு அகலும்படி செய்துவிடும். அதற்குத்தான் நான் பயந்தேன். அதாவது இந்த விஷயங்களை செய்வதன் காரணமாக எங்கே நான் மீண்டும் இமயமலைக்குப் போய்விடுவேனோ என்ற பயம் இருந்தது. ஆனால் கல்யாணம் ஆன பெண்டாட்டியை விட்டுவிட்டுப் போகமாட்டோம் என்ற ஒரு நம்பிக்கையும் மனதின் ஒரு ஓரத்தில் இருந்தது.
நான் என்னை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கு முயன்றாலும், மதுமிதாவின் செயல்கள் என்னைக் கட்டுப்பாட்டை மீறச்செய்துவிடும் என்று எண்ணம் இப்பொழுது மேலோங்கி வரத்தொடங்கியது. அன்றைக்கு மதுமிதா பாத்ரூமிலிருந்து, "ரவி இங்க வாங்களேன்..." நான் உள்ளே சென்றேன். பாதி உடுத்தி நின்றிருந்தாள்.
"என்னம்மா இது இப்பிடி நின்னுட்டு கூப்பிடுற?"
"ஏன் நின்னா என்னா, நீங்க புருஷன் தானே, சரி அதெல்லாம் இருக்கட்டும். மார்ல கட்டிமாதிரி இருக்கு ரவி, ஆனா வலியே இல்லை. ஒரே பயமா இருக்கு. இந்த மாதிரி கட்டியிருந்தா கேன்ஸர் வரும்னு சொல்றாங்க..."
"பார்த்தா அப்பிடித் தெரியலையே?"
"பார்த்தா எப்பிடி தெரியும், தொட்டுப்பாருங்கன்னா..."
பார்த்துவிட்டு, "அதெல்லாம் ஒன்னும் இல்லை, எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டே இருக்க வேண்டியது." தலையில் லேசாய் கொட்டிவிட்டு வந்தேன்.
மனதுக்குள் டைம்ஷீட் ஓடிக்கொண்டிருந்ததால், வேறு எதுவும் பண்ணமுடியாத சூழ்நிலை. மனது அலைபாய்ந்து கொண்டிருந்தது. இதுபோன்று அடிக்கடி நிகழத் தொடங்கியிருந்ததால்தான் நான் மிகத் தீவிரமாக யோகம் செய்ய ஆரம்பித்தேன். இப்படியே ஒரு இரண்டு மூன்று மாதம் போயிருக்கும், அந்த நாலுநாட்கள், முன்னால் மூன்று பின்னால் மூன்று, மற்றும் ஒரு மூன்று நாட்கள். இப்படி கணக்கு போய்க் கொண்டிருந்ததால்,. எங்களுக்குள் இடைவெளி சிறிது சிறிதாக அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.
இந்த இரண்டு மாதங்களில் சிறிது சண்டை கூட நடந்தது.
"ரவி நீங்க சரியில்லை, என்னமோ நினைச்சிக்கிட்டேயிருக்கீங்க. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்."
"என்ன சரியில்லை?"
"சரியில்லைன்னா சரியில்லை, காரணம் சொல்லணுமா?"
"இங்கப்பாரு சுத்தி வளைச்சு பேசாம விஷயத்துக்கு வா..."
"சரி நேராவே வர்றேன். நமக்குள் உறவுங்கிறதே இல்லாம போச்சு, நான் நெருங்கி வந்தாக்கூட நீங்க விலகி போயிருறீங்க. ஒன்னுமே புரியலை. ஆபிஸில் இருந்து வருவதே லேட்டாத்தான். வந்தவுடனே நேரா ரூமிற்குள் வந்து கதவை மூடிட்டி தியானம் பண்ண ஆரம்பிச்சிர்றீங்க. வீட்டில் எல்லோரும் நாம ரூமிற்குள் சந்தோஷமாய் இருக்கிறதா நினைச்சிக்கிட்டிருக்காங்க. ஆனா எனக்குத்தானே தெரியும் என்னா நடக்குதுன்னு,
நான் இந்த விஷயத்தை உங்க அக்காகிட்டக் கூட சொல்லலை, நீங்க தியானம் பண்ணுறேன்னு கண்ணை மூடிக்கிட்டு உட்கார்ந்திருப்பதை. ஆனா இனிமேல் தாங்காது திரும்பவும் இப்படியே பண்ணீங்கன்னா, அக்காகிட்ட சொல்லவேண்டியது வரும்." சொல்லிவிட்டு முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள்.
அன்று டைம்டேபிள் அனுமதித்ததால் தாஜா பண்ணி, அன்று இரவு சுகமாய் முடிந்தது. அதன் பிறகு அவள் என்னை எதுவும் கேட்கவில்லை, நானும் சரிதான் என்று அப்பிடியே விட்டுவிட்டேன். சிலநாட்கள் அவள் அக்காவுடனும், வானதியுடனும் கூட போய்ப் படுத்துக்கொண்டாள். அடுத்த இரண்டு மாதத்தில் சொல்லப்போனால் நாங்கள் ஒழுங்காக பேசிக்கொள்வது கூட குறையத்தொடங்கியிருந்தது. இப்பொழுதெல்லாம் அவள் வேண்டுமென்றே சில விஷயங்கள் செய்தாலும் என்னால் என்னை கட்டுப்பாட்டில் வைத்திருக்கு முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அவளை என் பெண்டாட்டி என்பதிலிருந்து ஒரு சாதாராணமான பெண்ணாய்ப் பார்க்க முடிந்தது.
மனது முழுவதும் முழுக்கட்டுப்பாடுடன் செயல்பட்டது. நான் முன்பொருமுறை இமயமலையில் இருந்ததை போன்ற அனுபவம் வரத்தொடங்கியிருந்தது. அந்த சூழ்நிலையில் மதுமிதாவின் முகம் வாடத்தொடங்கியிருந்தது, ஆளும் கொஞ்சம் கொஞ்சமாய் களையை இழக்கத் தொடங்கியிருந்தாள். ஆனால் உடல் கொஞ்சம் பெருத்திருந்தாள். பெருத்திருந்தால் என்றால் ஒல்லியாய் இருந்தவள் இப்பொழுது கொஞ்சம் உப்பியிருந்தாள்; அவ்வளவுதான்.
இப்படியே இன்னும் ஒரு மாதம் சென்றது, நான் கம்பெனிக்குக் கூட செல்லாமல் தியானம் செய்யத் தொடங்கினேன். என் வீடு கவலையில் ஆழ்ந்தது. அப்பாவும் அக்காவும் வந்து என்னிடம் பேசினார்கள். இந்தச் சமயம் பார்த்து என் குரு எங்கள் அரண்மனைக்கு வந்திருந்தார்.
நான் வாழ்நாளிலேயே ரொம்ப சந்தோஷமாக இருந்தேன், அவர் முன்பு என்னிடம் சொல்லியிருந்ததுதான் ஞாபகம் வந்தது. இனிமேல் கடவுள் நினைத்தால் நாம் சந்திக்கலாம்னு சொல்லிவிட்டு போயிருந்தார். இப்பொழுது வந்திருக்கிறார் என்றால் கடவுள் அனுமதி கொடுத்துவிட்டார் என்றுதானே அர்த்தம். நான் குருவிடம் பேசினேன்; அவர் நான் கல்யாணம் செய்து கொண்டிருப்பேன் என்று நினைக்கவில்லையென்று சொன்னார். ஆனால் நான் யோக வித்தையைப் பயன்படுத்திவருவதை சொன்னவுடன் சந்தோஷமடைந்தார். நான் அவரிடம், "சாமி நான் உங்க கூடவே மலைக்கு வந்திர்றேன்."
"ரவி, அது கூடாது; இப்பொழுது நீ கல்யாணம் ஆனவன். உன்னுடைய நடவடிக்கைகள் ஒரு பெண்ணை பாதிக்கும். ஒரு பெண்ணைப் பாதிக்கும் எந்தச் செயலையும் நான் செய்ய முடியாது."
"சாமி நான் மதுமிதாவிடம் அனுமதி வாங்கி வருகிறேன். அப்பொழுது சம்மதமா?"
"ரவி, ஒரு மனைவி தன் கணவன் தன்னை விட்டுப் போவதை எப்படித்தான் ஏற்றுக்கொள்வாள். இருந்தாலும் நீ கேட்டுப்பார். ஆனாலும் உனக்குக் கல்யாணம் ஆன காரணத்தால், உனக்கு மீண்டும் ஒரு பரிட்சை வைப்பேன். நீ தேறினால் தான், கூட்டிக்கொண்டு போவேன்."
நான் மதுமிதாவிடம் போய் சொன்னேன். முதலில் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியவள், பிறகு சொன்னாள், "நீங்க வருவீங்க ரவி, உங்களால என்னைப் பார்க்காம இருக்க முடியாது. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. நீங்க வருவீங்க?"
அழுது கொண்டே விடைதந்தாள்; அக்காவுக்கும் அப்பாவிற்கும் என்மேல் மிகவும் கோபம். நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன்; மிகவும்.
என்னுடைய பயிற்சி தொடங்கியது, மிகக் கடுமையான பயிற்சி. மனதை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும், சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல். நான் வென்று கொண்டேயிருந்தேன். என் நினைவுகள் குடும்பத்தின் பக்கமோ, மதுவின் பக்கமோ திரும்பவேயில்லை. இப்படியே ஆறு மாதம் முடிந்திருக்கும் ஒரு நாள், குரு கூப்பிட்டார், "ரவி உனக்கு ஒரு சோகமான செய்தி..."
மனதை திடப்படுத்திக் கொண்டேன், தந்தையின் மரணத்தை பற்றிய செய்திதான் சொல்லப்போகிறார் என்று.
"மதுமிதா இறந்துவிட்டாள்..."
மதுமிதா இறந்துவிட்டாள் என்ற செய்தியை என்னால் சிறிதும் நம்பமுடியவில்லை, நான் சிறிது சிறிதாக மயக்கமாகிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.
மயக்கம் தெளிந்தபொழுது நான் குருவின் மடியில் இருந்தேன். என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை, இதில் தான் எனக்கு புரிந்தது நான் மதுவை மறக்கவேயில்லை, எனக்கு நானே நாடகமாடிக் கொண்டிருந்தேன் என்று. அவளை நினைக்கும் பொழுதெல்லாம் சோகம் நெஞ்சை அடைத்தது. எனக்காக, ஒன்றுமே கேட்காமல் என்னுடன் வந்தவள். எனக்காகத் தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்டவள். நான் இமயமலைக்கு போகிறேன்னு சொன்னவுடன் அழுதாலும் அனுமதித்தவள்.
நான் ஒவ்வொரு விஷயமாய் குருவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன், நாங்கள் சந்தித்தது, காதலித்தது, கல்யாணம் செய்து கொண்டது, பிறகு டாக்டர் சொன்னது, அதனால் நான் அவளிடம் இருந்து விலகியது. சொல்லிவிட்டு அழுதேன். பிறகு, "சாமி, மது எப்படி இறந்தாள்?"
"கர்ப்பமாய் இருந்திருக்கிறாள், கர்ப்பப்பை கோளாறு காரணமாய் பிரசவத்தின் போது இறந்துவிட்டாள்."
"கர்ப்பமாகவா, ம்ம்ம் நான் கவனமாகத்தானே இருந்தேன்." நான் சிறிது நேரம் யோசித்தேன் விளங்கியது "இருக்கும் சாமி, அவள் என்னை ஏமாற்றியிருக்கலாம், மாத்திரை எதுவும் போட்டு அவள் மாதவிடாய்க் கணக்கை மாற்றியிருக்கலாம். அய்யோ கடைசியில் நானே காரணமாய் விட்டேனே. அவளுக்காகத்தானே இவ்வளவும் செய்தேன்..." சொல்லிவிட்டு நான் அழுதேன்.
என்னைத் தேற்றிய குரு, "ரவி, நீ உன் பெண்டாட்டியப் பார்க்கிறதுன்னா இப்ப போகலாம். ஆனா திரும்ப என்கிட்ட வரமுடியாது. பார்க்காமல் இங்கிருப்பதென்றால் உன் பயிற்சி முடிந்துவிட்டது, நாம் இமயமலைச்சாரலுக்கு கிளம்பலாம்..." சொல்லிவிட்டு அவர் நகர்ந்துவிட்டார்.
எனக்கு திரும்ப திரும்ப, அவள் நீங்க என்னை பார்க்க வருவீங்கன்னு சொன்னதுதான் ஞாபகம் வந்தது. நான் குருவிடம் போய், "இல்லை சாமி, நான் போய் மதுமிதாவைப் பார்க்கணும். அவள் முகத்தையாவது நிச்சயமாய் பார்க்கணும்." நான் சொன்னதும், அருகில் வந்தவர் என் தலையில் தொட்டு ஆசிர்வதித்தார். பிறகு என்னிடம், "சரி வா போகலாம்." சொல்லி அவரும் என்னுடன் வந்தார் அரண்மனைக்கு.
அரண்மனைக்கு வந்தால், வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள் மதுமிதா, அவள் கையில் அழகான ஒரு ஆண் குழந்தை அப்படியே எங்கள் காஷ்மீரத்து சாயலில்; என்னால் என் கண்களை நம்பவே முடியவில்லை. நான் குருவைப் பார்த்தேன். அவர் சிரித்தார் பிறகு, "நான் தான் இதைச் செய்யச்சொன்னேன். முதலில் நான் உன்னைப் பார்க்க வந்தபொழுது நீ அங்குயில்லை. அப்பொழுதுதான் உன் மனைவியைப் பார்க்க நேர்ந்தது. அவளைப் பார்த்ததுமே எனக்கு அவள் கர்ப்பமாய் இருக்கிறாள் என்று தெரிந்தது. ஆனால் முகத்தில் சந்தோஷமில்லை. அதனால் நான் என்ன காரணமென்று கேட்க, அவள் மொத்த விஷயத்தையும் சொன்னாள்.
நீ டாக்டர் சொன்ன காரணத்தால் இப்படி ஆனதாகவும், ஒரு முறை அவள் குழந்தைக்கான அறிகுறியே தெரியாததால், உன் அக்காவும், உன் மனைவியும் வேறு ஒரு டாக்டரைப் பார்க்க நேர்ந்ததாகவும் அப்பொழுது அந்த டாக்டர் சொல்ல, விஷயத்தைத் தெரிந்து கொண்டவர்கள், இதனால்தான் நீ இவ்வாறு நடந்துகொள்கிறாய் என்று புரிந்துகொண்டார்கள்.
இடையில் இன்னும் சில டாக்டர்களைப் பார்த்து, கலந்தாலோசித்து விட்டுத்தான், அன்று உன்னை ஏமாற்றி உறவு கொண்டிருக்கிறாள் உன் மனைவி. கொஞ்சம் பிரச்சனை இருந்தாலும் சரி செய்து கொள்ளலாம் என்று டாக்டர் சொன்னாலும் உயிர்பயம் கடைசி வரையிலும் இருந்தது. அதனால் உன்னிடம் இந்த விஷயத்தைச் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார்கள்.
எங்கே நீ இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, என்னையும் மீறிவிடுவாயோன்னுதான் நான் வந்ததும், என்னிடம் விஷயத்தைச் சொன்னார்கள். என் அன்பு சிஷ்யனுக்காக நான் ஒரு பொய் சொன்னேன் அவ்வளவுதான்."
என்னால் நம்பவே முடியவில்லை, அவர் சுலபமாகச் சொல்லிவிட்டார். குரு பொய் சொல்லவே மாட்டார். உயிரே போவதாக இருந்தாலும், போகட்டும் என்று பொய் சொல்லாதவர் எனக்காகப் பொய் சொன்னார் என்று நினைக்கும் பொழுது ஆச்சர்யமாய் இருந்தது. நான் யோசிப்பதை உணர்ந்தவர், "ரவி, நீ சாமியாராகவும் இல்லாமல், சம்சாரியாகவும் இல்லாமல், உன் மனது அலைபாய்ந்தது. முன்பிருந்ததை விட நீ இப்பொழுது பயிற்சியில் தேறியிருந்தாலும், முன்பிருந்ததை போல் சுயமாய் இல்லை. நீ உன்னை இந்த சூழ்நிலைக்கு கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாய். இனிமேல் உன்னால் சம்சாரியாக இல்லாமல் இருக்கவே முடியாதென்பதை நிரூபிக்கத்தான் இதைச் செய்தேன்."
பிறகு நானும் மதுமிதாவும், ஸ்ரீலஸ்ரீ கீர்த்திவர்ம மகேந்திர பூபதியும் குருவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினோம்.
கீர்த்திவர்மன் யாருன்னு கேக்குறீங்களா, வேறு யாரு பையன்தான்.
முற்றும்.
இப்படியே ஒரு மாதம் ஓடியிருக்கும், ஒரு கையால் செய்யக்கூடிய வேலைகளை அவளே செய்யத் தொடங்கியிருந்தாள் இன்னும் கட்டுகள் பிரிக்கப்படவில்லை. தினமும், ஹார்லிக்ஸ், ஃபுரூட் ஜூஸ் குடித்து உடம்பு சிறிதளவு தேறியிருந்தது. என்னிடம் இருந்த புத்தகங்களை படிக்கத் தொடங்கி, முன்னேறிக் கொண்டிருந்தாள். ஆனால் முன்னர் பேசுவது போல் இப்போது பேசுவது இல்லை; சொல்லப்போனால் மிகவும் குறைந்திருந்தது. கேட்டக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு அமைதியாகிவிடுவாள்.
ஒரு நாள் இரவு, திடீரென சத்தம் கேட்டு எழுந்தேன். மதுதான் சுவற்றில் சாய்ந்து கொண்டு நின்று கொண்டிருந்தாள். பக்கத்தில் என்னுடைய பெயிண்ட் எல்லாம் கொட்டிக்கிடந்தது.
"என்னம்மா?"
"இல்லை, பாத்ரூம் வந்தது. அதான் மெதுவா சுவற்றை பிடிச்சுட்டு போயிரலாம்னு பார்த்தேன். முடியலை..." இழுத்தாள்
"ஏம்மா இப்பிடியெல்லாம் பண்ணுற, என்னை எழுப்ப வேண்டியதுதானே?" நான் உண்மையில் சங்கடமாய்க் கேட்டேன்.
"இல்லை ரவி, இப்பத்தான் கண்மூடினீங்க, எழுப்ப கஷ்டமாயிருந்தது."
"இங்கப்பாரு, இப்ப நீ கீழே விழுந்திருந்தா கஷ்டமாயிருக்காது. இனிமே இப்படியெல்லாம் பண்ணாதே. எதையெல்லாமோ கற்பனை பண்ணிக்கிட்டே இருக்கன்னு நினைக்கிறேன். நான் பிறந்ததிலேர்ந்தே அதிகம் பேசமாட்டேன். ஆனா நீ அப்பிடி கிடையாது. அதிகம் பேசுவ. இப்ப பேசாம அதையெல்லாம் மனசில வச்சிக்கிட்டு எதையாவது யோசிட்டுருந்தா இப்படித்தான். என்ன இன்னும் இரண்டு மாசத்துக்கு தானே, கஷ்டப்படப்போறேன். பரவாயில்லை எழுப்பு. என்ன?"
"சரி..."
திரும்ப வந்து படுக்கையில் படுத்தவுடன், "ரவி சும்மாவாவது என் பக்கத்தில் படுத்துக்கோங்க, நான் உங்க கட்டிலில் படுத்துட்டு நீங்க தரையில் படுக்கிறதை பார்த்தா கஷ்டமாயிருக்கு."
"படுக்கிறதபத்தி ஒரு பிரச்சனையும் இல்லை, சின்ன கட்டில், திரும்பி படுக்கும் போது மேல பட்டுட்டா கஷ்டமாயிரும். அதானால பரவாயில்லை, படுத்துக்கோ"
அடுத்த ஒரு மாதத்தில் கட்டுகள் எல்லாம் பிரிக்கப்பட்டிருந்தன. இன்னும் சிறிது காயம் ஆறவேண்டியிருந்தது. இப்பொழுதெல்லாம் அவளுடைய முக்கால்வாசி வேலைகளை அவள்தான் பார்த்துக்கொள்கிறாள். கொஞ்சம் சரியானதிலிருந்தே, பக்கத்தில் வர விடமாட்டாள்.
"பொம்பள உடம்ப இவ்வளவு பக்கத்தில் பார்க்கக்கூடாது, ஒரு மாதிரி இருக்கும். அதனால நானே கொஞ்சம் கஷ்டப்பட்டாவது பார்த்துக்கிறேன். ப்ளீஸ் எனக்கு ரொம்ப சங்கடமாயிருக்கு, ஏற்கனவே நீங்கள் என்னோட ட்ரெஸ்ஸையெல்லாம் தோக்கிறீங்க. அதனால இனிமே என்னை நானே பார்த்துக்கிறேன்." சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள் பிறகு "கோபமெல்லாம் ஒன்னுமில்லையே, நான் சொல்றது புரியுதா?"
"புரியரதெல்லாம் சரி, ஆனா ஏற்கனவே பார்த்ததுதானே அதனால என்ன? சரி, டாக்டர் இன்னும் ஒன்னு இல்லை இரண்டு வாரத்தில் முழுசா சரியாயிடும்னு சொன்னார். இப்பத்தான் பார்க்குறதுக்கு பொம்பள புள்ள மாதிரி இருக்கியாம். சொல்லச்சொன்னார், இப்பிடியே இன்னும் இரண்டு மாசத்துக்கு சாப்பிட்டு இன்னும் கொஞ்சம் குண்டாகுவியாம்."
உந்தி உந்தி நடந்து கண்ணாடியருகில் வந்தவள்,
"கொஞ்சம் குண்டாயிட்டேன்ல?"
"நான் பார்க்க மாட்டேன், பொம்பள உடம்ப பக்கத்தில் பார்க்குறது தப்பு..." சொல்லிவிட்டுச் சிரித்தேன். கொஞ்சம் சதை போட்டிருந்தாள் தான். அதாவது உடலளவில் கொஞ்சம் தேறியிருந்தாள். ஆனால் மனதளவில் மிகவும் தளர்வாக இருந்ததாகபட்டது எனக்கு, பெண்ணியம் எல்லாம் இப்பொழுது பேசுவதில்லை; எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனாலும் சரி போகட்டும் இன்னும் ஒரு மாதத்தில் திரும்பவும் எல்லாம் சரியாயிரும்னு நினைச்சிக்கிட்டேன்.
அடுத்த ஒரு வாரத்தில் முழுவதுமாக சரியாகியிருந்தது, ஆனால் இன்னமும் கொஞ்சம் உந்தித்தான் நடக்கிறாள். அது சரியாகிவிடும் என்று டாக்டர் சொன்னார். அன்றைக்கு நாங்கள் கணபதி கோவிலுக்குச் சென்றிருந்தோம். பிறகு நேராக ஹோட்டலுக்கு வந்து இரண்டு பேரும் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டோம். பிறகு ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வர பத்தரை ஆகிவிட்டிருந்தது. அன்றிரவு அவள் என்னைத் தூங்கவிடவேயில்லை.
காலை ஒரு ஐந்தரைமணியிருக்கும், யாரோ அழுவதுபோல் சத்தம் கேட்டதால் நான் எழுந்து பார்த்தேன். மதுதான் அழுது கொண்டிருந்தாள். என் வாழ்வில் நான் கனவில் கூட நினைத்து பார்த்திராத விஷயம். நான் விழித்துக்கொண்டதைப் பார்த்தும் இன்னும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்; ஆக்ஸிடண்ட் ஆகி பாதி செத்துப்போய் வந்த பிறகு கூட நான் அவள் அழுது பார்த்ததில்லை. எவ்வளவோ கஷ்டம்; தானாய் பாத்ரூம் போகமுடியாமல், தானாய் துணிமாற்ற முடியாமல், தானாய் தான் நினைத்ததைச் செய்ய முடியாமல் இருந்த பொழுதெல்லாம் கூட அழுதவளில்லை. எனக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது.
"நான் அப்பவே நினைச்சேன், நீ ராத்திரி அழுச்சாட்டியம் பண்ணும்போதே? என்னம்மா இது ரொம்ப வலிக்குதா?" நான் மெதுவாக அவள் அருகில் சென்று உட்கார்ந்தேன்.
"உடம்புவலின்னு நினைச்சீங்களா ரவி, ம்ஹூம் மனசுவலிக்குது ரவி, ரொம்ப பயமாயிருக்கு, எனக்கு அப்பா அம்மா கிடையாது ரவி, கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்சதும் அதுக்காக நான் கவலைபட்டது கிடையாது. கடவுள் நல்ல அறிவை கொடுத்திருந்தான். படிப்புக்கு வேண்டிய செலவெல்லாம் நானே பார்த்துக்கொண்டேன். அப்பெல்லாம் நான் பயப்பட்டதில்லை. சர்ச்சில் எனக்குக் கொஞ்சம் கெட்டபெயர் கூட உண்டு, நான் யாருக்கும் பயப்படுவதில்லையென்று. அவசியம் இருந்ததில்லை, அப்பொழுதெல்லாம். படித்து முடித்தபின் கூட சீக்கிரமே வேலை கிடைத்தது. இந்தச் சமுதாயத்தைப் பற்றி ஒரு விரக்தி இருந்ததே தவிர பயம் இருந்தது கிடையாது. ஆக்ஸிடெண்ட் ஆனதுக்கு முன்னாடி நாள் உங்ககிட்ட சொன்னேனே, ஒரு ஆறு மாதம் இருந்து பார்ப்போம் புடிச்சிருந்ததுன்னா இருக்கலாம் இல்லைன்னா நான் ஹாஸ்டல் திரும்ப போயிடுறேன்னு, அத நினைச்சா ரொம்ப பயமா இருக்கு ரவி, இனிமே நீங்க இல்லாத ஒரு வாழ்க்கையை நினைச்சுக்கூட பார்க்க முடியலை. நீங்க என்ன வேணும்னா நினைச்சுக்குங்கோ; முதல்ல உங்க வீட்டுக்கு குடிமாறி வந்தப்ப உங்ககிட்ட இவ்வளவு ஒட்டுதல் இல்லை; அநாதைப்பொண்ணு; ஒரு பாதுகாப்பு தேவையாயிருந்தது. நீங்க வேற ஒன்னும் பண்ணிட மாட்டீங்கன்னு நான் கணிச்சேன், என்ன இதுக்கு விலை கொஞ்சம் தடவை உங்ககூட படுத்து எந்திருக்க வேண்டியிருக்கும் பரவாயில்லைனு தான் நினைச்சேன். நீங்களே சொல்லுங்க ரவி, என்னை யாராவது கல்யாணம் பண்ணிப்பாங்களா, இல்லை நான் தான் மறைக்க முடியுமா நான் அப்பா அம்மா பெயரே தெரியாதவள்னு. நீங்களும் ஏதோ தனியாளா இருக்கீங்க, உங்ககூட வந்து இருந்துட்டேன். அம்மா அப்பா உங்களுக்கு இருந்திருந்தா இப்பிடியிருக்க முடியுமா சொல்லுங்க? உடம்பளவில் ஒரு பத்து கிலோ கூடியிருப்பேனா, ஆனா மனசளவில் ஒன்னுமே இல்லாம போய்ட்டேன். எங்கப்பாவை பத்தி நினைச்சு நினைச்சு ஆம்பளைங்க எல்லோரையும் தப்பா நினைச்சிட்டு இருந்தேன். எனக்கு கல்யாணம்னா ஒரு விளையாட்டாத்தான் இருந்தது. ஆனா இப்ப முடியலை, ரொம்ப பயமாயிருக்கு, என்னை கைவிட்டுறாதீங்க ரவி; நீங்க என்ன வேணும்னா நினைச்சுக்கோங்க, ப்ளீஸ் என்னை
கல்யாணம் பண்ணிக்கோங்க; நீங்க உங்க பழைய வாழ்கையிலே என்ன தப்பு பண்ணியிருந்தாலும் பரவாயில்லை. நினைச்சுப்பார்க்கவே முடியலை, நான் ஹாஸ்டலில் இருந்து ஆக்ஸிடெண்ட் ஆகியிருந்தால், யாரு எனக்காக செலவு செய்வா, பாதி செத்துப் போனவளை கூடவே இருந்து யாரு திரும்பக் கூட்டிட்டு வருவா?" சொல்லிவிட்டு தோளில் சாய்ந்து மேலும் அழத் தொடங்கினாள்.
நான் சிறிது நேரம் அவள் பேசியதையே யோசித்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் அவளிடம் பதில் எதுவும் சொல்லாமல், சட்டை பேண்ட் போட்டுக்கொண்டு, வெளியே கிளம்பிபோனேன். மதியம் தான் திரும்பவும் வந்தேன்.
அவள் அப்பிடியே அந்த இடத்திலேயேதான் உட்கார்ந்திருந்தாள்; கண்கள் இரண்டும் சிவந்து பெரிதாகியிருந்தன. இன்னும் அழுது கொண்டிந்தாள்.
"சாப்டுட்டியா?"
"இல்லை, சப்பாத்தி சுட்டு வைச்சிருக்கேன், நீங்க சாப்டுட்டீங்களா?"
"நான் சாப்டுட்டேன் சரி, நீ சீக்கிரம் சாப்பிடு, நாம ஒரு இடத்துக்கு போகணும், எங்கப் போறோம்னு மட்டும் கேட்காதே, ம்ம்ம் சீக்கிரம். வண்டி வந்திரும்."
அடுத்த அரைமணிநேரத்தில் நாங்கள் டொயோட்டா குவாலிஸில் கேரளா நோக்கி போய்க்கொண்டிருந்தோம். வண்டியில் என்மேல் ஈஷிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள், நான் மெதுவாக சிரிக்கத் தொடங்கினேன்.
"ரவி, ஏன் சிரிக்கிறீங்க?"
"இல்லை சும்மாத்தான். சரி உங்கிட்ட ஒரு கேள்வி. நீ இன்னிக்கு காலையிலே என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கேட்டவுடனே பதில் சொல்லாமல் வெளியே போய்ட்டேனே, நீ என்ன நினைச்ச? நான் யாரு? நாம இப்ப எங்க போறோம்னு சொல்லு பார்க்கலாம், உனக்கு ஒரு பரிட்சை," சொல்லிவிட்டுச் சிரித்தேன்.
என் முகத்தைப் பார்த்தவள், "நான் நினைச்சேன், நீங்க வெளியே போய், தாலியோ, இல்லை மோதிரமோ வாங்கிட்டு ஃபாதரைக் கூட்டிக்கிட்டு வருவீங்கன்னு; வீட்டில் வைத்து கல்யாணம் பண்ணிப்பீங்கன்னு; ஆனா அது நடக்கலை." அவள் சொன்னவுடன் நான் சிரித்தேன் பிறகு, "நானும், நீ அப்பிடித்தான் நினைப்பேன்னு நினைச்சேன். சரி, ம்ம்ம் சொல்லு."
"இதுல சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு, எனக்குப் புரியலை," சொல்லிவிட்டு சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பிறகு, "அப்புறம் உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருக்கு, உங்க பொண்டாட்டிக்கு மூளை வளர்ச்சி இல்லை, நாம இப்ப அவங்களைத்தான் பார்க்கப் போறோம். என்ன நான் சொல்றது சரியா?" கேட்டுவிட்டு என்னையே பார்த்தாள்.
என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டே இருந்தேன். பிறகு, "உனக்குத் தங்கம் பிடிக்குமா?"
"ஏன் தாலி வாங்கப்போறீங்களா? பொதுவா சொல்லப்போனால் பிடிக்காது, என் உடம்பில் ஒரு சொட்டு தங்கம் கூட இருக்காது. அதுதான் நீங்க பார்த்திருப்பீங்கல்ல. தாலின்னா பரவாயில்லை சின்னதா தங்கம் இருக்கலாம். இல்லைன்னா பரவாயில்லை ஒரு மஞ்சள் கயிறுகூட போதும்."
அன்றைக்கு ரொம்ப சந்தோஷமா இருந்ததாலயோ இல்லை அவள் பேசியது மிகவும் வேடிக்கையாக இருந்ததோ நான் சிரித்துக் கொண்டேயிருந்தேன். அவளும் நான் சிரிப்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
"என்னம்மா பார்க்கிற?"
"நீங்க இப்பிடி சிரிச்சு நான் பார்த்ததே கிடையாது, அதுவும் இந்த இரண்டு மாசத்துல நீங்க கொஞ்சம் சோகமா இருந்த நாள் தான் அதிகம். ஒருவேளை நான் உங்களை கஷ்டப்படுத்திட்டனோ என்னவோ? நீங்க தலை சீவவே இல்லை, பாருங்க உங்க முடியெப்பிடி பறக்குதுன்னு, இங்க வாங்க நான் ரப்பர்பேண்ட் போட்டுவிடுறேன்."
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். எனக்கு தூக்கம் வருது. நான் கொஞ்சம் தூங்குறேன்." சொல்லிவிட்டு அப்படியே சீட்டில் தலைசாய்த்து தூங்கத்தொடங்கினேன். ஆனால் அவள் என் தோளை பிடித்திழுத்து என் தலையை அவள் மடியில் வைத்துவிட்டு, "தூங்குங்க" என்றாள். பிறகு என் தலைமுடிக்குள் விரல்களை விட்டு சிக்கெடுக்கத் தொடங்கினாள். நான் தூங்கிப்போனேன். நான் எழுந்த பொழுது என்தோளில் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். நான் அவளை எழுப்பாமல் மெதுவாக எழுந்து அவளை என் மடியில் படுக்கவைத்தேன். பிறகு, "ராம்சிங், இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?"
"மூணுமணிநேரத்தில் வீட்டில் இருக்கலாம்க"
நான் அவளைப் பார்த்தேன், சுடிதார்தான் போட்டிருந்தாள். சேலைகட்ட சொல்லியிருக்கலாம்னு நினைச்சேன். பாவமாக இருந்தது, என்னை நம்பி எங்கன்னு கூட கேட்காமல் வந்து கொண்டிருந்தவளை பார்க்கும்பொழுது. மெதுவாய் அவள் உதட்டை விரலால் வருடினேன். விழித்துக்கொண்டாள். என்னைப்பார்த்து சிரித்தாள்.
"என்னம்மா எழுந்துட்ட?"
"யாரோ எழுப்பின மாதிரி இருந்தது..."
"சரி பக்கத்தில் உட்காரு, உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்."
சற்று ஆர்வமாகி, "ம்ம்ம், சொல்லுங்க"
"இங்கப்பாரு என் பர்ஸனல் விஷயங்களை நீ கேட்டதில்லை, நானும் சொன்னதில்லை, ஆனால் இனிமேல் வேறு வழியில்லை சொல்லித்தான் ஆகணும். அதுக்கு முன்னாடி உனக்கு அருள்மொழிவர்மரைத் தெரியுமா?"
"யாரைக் கேக்குறீங்க? வரலாற்று கதாப்பாத்திரத்தையா?"
"இல்லை, இன்ட்டஸ்ரியலிஸ்ட் அருள்மொழிவர்மரை..."
"ம்ம்ம் தெரியுமே, கேள்விபட்டிருக்கேன் இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய கோடீஸ்வரர்களில் அவரும் ஒருவர். ராஜபரம்பரைனு சொல்லுவாங்க, மன்னர்களுடைய நிலங்களையெல்லாம் அரசாங்கம் எடுத்துக்கொள்ள ஆரம்பித்த காலத்தில் இண்டஸ்ரியில் புகுந்து நிறைய சம்பாதிச்சாருன்னு சொல்வாங்க, ஏன் கேக்குறீங்க?"
கொஞ்சநேரம் அவளையே பார்த்துக்கிட்டிருந்துட்டு, "அவருதான் என்னோட அப்பா, ஸ்ரீலஸ்ரீ அருள்மொழிவர்ம ஜெகவீர பூபதி, நான் அவரோட ஒரே ஒரு பையன் ஸ்ரீலஸ்ரீ ரவிவர்ம மகேந்திர பூபதி..." சொல்லிவிட்டு நான் அமைதியாக இருந்தேன். அவள் நம்ப முடியாமல் என்னையே பார்த்தாள்.
நெருக்கமாக உட்கார்ந்திருந்தவள், கொஞ்சம் விலகி உட்கார்ந்தாள்.
"அப்பிடின்னா..."
"அவரோட அத்துனை கோடி சொத்துக்களுக்கும் ஒரே வாரிசு."
"அதெப்பிடி முடியும், நீங்க எப்பிடி பாதுகாப்பே இல்லாம தனியா ஒரு வீட்டில் இருக்க முடியும். அதுமட்டுமில்லாம அருள்மொழிவர்மருக்கும் உங்களுக்கும் இடையில் நிறைய வயசு வித்தியாசம் இருக்கும்..."
நான் அவளிடம் நேராக பதில் சொல்லாமல், "ராம்சிங், கொஞ்சம் திரும்புங்க..." ராம்சிங் திரும்ப மதுமிதாவிடம்
"இவரை நீ பார்த்ததுண்டா?"
"ம்ம்ம் பார்த்திருக்கிறேன், டீக்கடையில் வேலை பார்க்கிறார்னு நினைக்கிறேன்."
"அப்பிடியே திரும்பி கொஞ்சம் நம்ப வண்டிக்கு முன்னாடியும் பின்னாடியும் பாரு..." அங்கே இரண்டு மூன்று குவாலிஸ்கள் இருந்தன. "இதெல்லாம் என் பாதுகாப்புக்குத்தான், எல்லாம் அப்பா ஏற்பாடு. நான் வரிசையாக சொல்கிறேன் அப்பொழுது புரியும் உனக்கு." மூச்சை கொஞ்சம் இழுத்துவிட்டு, கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்திருந்த அவளை பக்கத்தில் இழுத்து அவள் தோளில் கையை போட்டேன். பிறகு, "எங்கப்பா தொழில் விஷயமா காஷ்மீர் போயிருந்தப்ப அங்க இருந்த தொழில் அதிபர் பெண்ணான ஒரு காஷ்மீரியப் பெண்ணை கல்யாணம் பண்ணி கூப்டுட்டு வந்துட்டார். கல்யாணம் ஆன முதல் வருஷமே எங்கக்கா பிறந்துட்டாங்க. ஆனா அதற்கு பிறகு அவங்களுக்கு கர்ப்பம் நிலைக்கவேயில்லை, சுமார் பதினெட்டுவருஷத்துக்கு பிறகுதான் நான் பிறந்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால் நான் பிறந்த ஒரு மாதத்தில் எங்கக்காவுக்கும் குழந்தை பிறந்தது. எங்கக்காவுக்கு எங்க மாமாவை அதாவது எங்கம்மாவுடைய தம்பியைதான் கல்யாணம் பண்ணிவைச்சாங்க. இப்ப எங்க மாமாதான் எல்லாவற்றையும் பார்த்துக்கிறார். நான் பிறந்த ஒரு மாசத்திலேயே எங்கம்மா இறந்துட்டாங்க. அதிலேர்ந்து என்னை வளர்த்தது எல்லாம் எங்கக்காதான்."
கொஞ்சம் நிறுத்தினேன். பிறகு, "நானும் எங்கக்காவும் அப்பிடியே எங்கம்மாவைக் கொண்டு பிறந்திருந்தோம். எங்கப்பாவும் கொஞ்சம் கலர்தான் என்றாலும் அம்மா அச்சு அசல் ஒரு காஷ்மீரி. இன்னும் சொல்லப்போனால் எங்கக்கா பொண்ணு வானதிக்கும் எனக்குமே முகத்தில் நிறைய ஒற்றுமை இருக்கும். எல்லோருமே நான், எங்க அக்காவுக்கும் மாமாவுக்கும் பிறந்ததாகவும் அக்காபெண்ணு என் ட்வின்னும் சொல்லிப்பாங்க." சொல்லிவிட்டு நான் சிரித்தேன்.
அவள் இடையில் புகுந்து, "உங்கம்மா காஷ்மீரி என்றால் உங்களுக்கு காஷ்மீரி தெரியுமா?"
அவளை இன்னும் கொஞ்சம் இறுக்கிவிட்டு, "ரொம்ப நல்லாவே பேசுவோம், வீட்டில் எங்கப்பாவை தவிர நாங்க எல்லோருமே நல்லா காஷ்மீரி பேசுவோம். தாயோட மொழின்னு எங்கப்பா எங்களுக்கு ஆளுங்களை வைச்சு கத்துக்கொடுத்தாரு, வீட்டிலும் பெரும்பாலும் அதுதான் பேசுவோம்."
"அப்ப நீங்க சாமியார்கிட்ட சிஷ்யனா போனேன்னு சொன்னதெல்லாம் பொய்யா?"
"இங்கப்பாரு என்னைச் சொல்லவிடு, பாதியில் நீதான் குறிக்கிட்ட; சரி, பார்ன் வித் சில்வர் ஸ்பூன்னு சொல்வாங்க, நான் பார்ன் வித் கோல்டன் ஸ்பூன். ஒரே ஒரு ஆண் வாரிசு, அம்மாயில்லாத பிள்ளை அப்பிடின்னு என்னைக் கஷ்டமே தெரியாம வளர்த்திட்டாங்க. முதல் இரண்டு மூன்று வருடங்கள் தரையில் கூட கால்பட விடமாட்டாங்களாம். பின்னர் டாக்டர் சொல்லித்தான் தரையிலேயே விட்டாங்களாம். என்னை அதட்டவோ திட்டவோ அந்த வீட்டில் யாருக்குமே உரிமை கிடையாது, நானும் அவ்வளவு திமிரா நடந்துக்க மாட்டேன். எக்கக்கா என்னை வளர்த்ததாலே எனக்கு ஒரு பெண்பிள்ளைக்குரிய அத்தனை குணங்களும் இருந்ததுன்னு சொல்வாங்க. எங்கப்பா பிஸினஸ் காரணமா உலகம் பூரா சுத்தத் தொடங்கிய காலம் அது..."
நான் சிறிது நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தேன், "எங்கவீட்டில் நிறைய பெண்கள் உண்டு, எங்கப்பாவிற்கே நிறைய மனைவிகள் இருந்தார்கள். அதனால் நான் பெரும்பொழுதுகளை பெண்களுடன் தான் கழித்தேன். இப்படியே வளர்ந்ததால எனக்கு வாழ்க்கை சிறிது சிறிதாக போரடிக்கத் தொடங்கியிருந்தது. நான் எதுவுமே செய்யவேண்டிய அவசியமில்லாமல் இருந்தது. இது எனக்கு ஒரு விதமான வெறுப்பைத்தான் வளர்த்தது. அந்த சமயத்தில் தான் அந்தச் சாமியார் என் வீட்டிற்கு வந்திருந்தார். சிறு வயதில் இருந்தே அவரிடம் ஈர்ப்பு உண்டாகியது. பின்னர் வயது அதிகமானதும் அவருடனே செல்ல ஆவல் அதிகமானது. நான் இதை என்வீட்டில் சொல்லி அவருடன் இமயமலைக்குக் கிளம்பினேன்."
இடைமறித்த அவள், "விளையாடுறீங்களா, இவ்வளவு செல்லமா வளர்த்த பையனை ஒரு சாமியாரை நம்பி இமயமலைக்கு அனுப்புறதா. சும்மா காதில் பூ சுத்தாதீங்க" சொல்லிவிட்டுச் சிரித்தாள், பதிலுக்கு நானும் சிரித்தேன்.
"அது ஒரு பெரிய கதை, சரி அதையும் சொல்லுறேன். அப்ப எக்கக்கா பிறந்து ஒரு பதினாறு வருஷம் ஆகியிருக்கும், அதாவது நான் பிறக்குறதுக்கு இரண்டு வருஷத்துக்கு முன்னாடி, அந்த சாமியார் வீட்டிற்கு வந்திருந்தாராம். எங்கப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. அந்தச் சாமியார் என் தாய் தந்தையிடம் இன்னும் இரண்டு வருடம் கழித்து உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும், அது பிறந்த உடன் அதன் தாய்க்கு ஒரு பெரிய கண்டம் இருக்கும்னு சொல்லிட்டுப் போனாராம்.
அதுமாதிரியே இரண்டு வருடம் கழித்து நான் பிறந்தேன், பிறந்தவுடன் அங்குவந்த அந்த சாமியார் என் ஜாதகத்தைக் கணித்துவிட்டு இவன் மிக வல்லவனாக வளர்வான்; ஆனால் பத்து வருடம் கழித்து அதாவது அவன் பத்தாவது வயதிலிருந்து இருபதாவது வயது வரை அவன் என்ன கேட்டாலும், சொன்னாலும் மறுக்காதீர்கள். மறுத்தீர்கள் என்றால் அது மிகப்பெரிய விபரீதத்தில் முடியும். ஆனால் இவன் உங்களுக்குத்தான், என்ன நடந்தாலும், நிச்சயம் உங்களிடம் திரும்பி வந்துவிடுவான்!"
"ரவி இது பாபா கதை மாதிரி இருக்கு."
"ஸ்ஸ்சு, கொஞ்சம் சும்மாயிரு, நான் படிப்பில், வரைவதில், எல்லாவற்றிலும் முதல்வனாக இருந்தேன். எங்கப்பா உதவியில்லாமலே நான் கல்லூரிகளில் படித்தேன். என் உடன் படித்தவர்களுக்கு நான் யார் என்பதே தெரியாது. இதுதான் நான் பத்து வயது கடந்த பிறகு அக்காவிடம் முதலில் கேட்டது. ஓப்புக்கொண்டார்கள். இப்படியே தொடர்ந்து பின்னர் இமயமலைக்கும் சென்றேன். பிறகுதான் உன்னிடம் முன்பே சொல்லயிருந்தேன், அந்தச் சாமியார் எனக்கு வயசாகவில்லையென்று திரும்ப அனுப்பிவிட்டார்."
"அதற்கு பிறகு நான் மிகவும் மாறியிருந்தேன். வீட்டில் அக்காவிடம் மட்டும்தான் பேசுவேன். எப்பப் பார்த்தாலும் தியானம் தான். பக்திதான். எங்கப்பா பயந்து போய் என்னை பிஸினஸில் இறக்கினார். நானும் மறுக்காமல் அதையும் செய்தேன். அந்த வருடம் எங்கள் கம்பெனி அதன் வாழ்நாளில் மிகப்பெரிய டர்ன் ஓவரைச் செய்திருந்தது, நான் நேராய் தந்தையிடம் போய் இந்த விஷயத்தைச் சொல்லிவிட்டு, நான் சென்னை போய் தனியாய் இருக்கவேண்டும் எனச் சொன்னேன். கொஞ்சம் யோசித்த அவர் பிறகு சரியென்று சொல்லிவிட்டார். ஆனால் சில கண்டிஷன் போட்டார். அதில் ஒன்றுதான் என்னுடன் இருக்கும் இந்த துப்பாக்கி வைத்திருக்கும் காவலாளிகள். இதுதான் நான் மெட்ராஸ் வந்த கதை. பிறகுதான் தெரியுமே உன்னைச் சந்தித்து, காதலித்து அப்புறம் அப்புறம்..." சொல்லிவிட்டு அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தேன்.
"ரவி நீங்க சொல்றதெல்லாம் உண்மையா, நம்பவே முடியலை. காற்றில் நடக்கிறமாதிரி இருக்கு, அதெல்லாம் இருக்கட்டும் இப்ப என்னைய கூட்டிட்டு போறீங்களே, சரியா வருமா." கொஞ்சம் நிறுத்திவிட்டு "நான் அப்பா அம்மா பெயரே தெரியாத பெண்ணு; உங்கவீட்டில் ஒத்துக்குவாங்களா?" அவள் கண்களில் நீர்கட்டிக்கொண்டிருந்தது.
"என்னம்மா இது, இப்பெல்லாம் நீ முன்னமாதிரி இல்லை, நான் உன்னை பார்த்ததில் இருந்தே நினைத்திருக்கிறேன். மது எப்பவாவது அழுமா இல்லை இதுக்கு முன்னாடி அழுதிருக்குமான்னு, அதனாலத்தான் உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்கவீட்டில் நான் சாமியாரா போயிருவேனோன்னு ஒரே பயம். எனக்கு கல்யாணம் எப்பிடியாவது பண்ணிரணும்னு பார்த்தாங்க. நான் மறுத்துட்டு இங்க வந்திட்டேன். இப்ப உன்னைக் கல்யாணம் பண்ணிக்கபோறேன்னா சந்தோஷப்படுவாங்க. ஆனா உன்னைப் பத்தி முழுசா விசாரிப்பாங்க, உனக்கே தெரியாத உன்னைப்பத்திய விஷயங்கள் எல்லாம் இன்னேரம் எங்கப்பாவுக்குத் தெரிஞ்சிருக்கும்."
"எனக்காக எங்கக்கா எதையும் செய்வாங்க, நான் கேட்கவேண்டியதேயிருக்காது, நான் கேட்டுட்டன்னா அதுக்கு வேற பதிலே கிடையாது. அதான் சொன்னேனே." நான் சிரித்தேன்.
"உங்கவீட்டுக்கு என்னைப்பத்தித் தெரியுமா?"
"என்ன விளையாட்டா? நீ என் ரூமிற்கு வந்திருக்க; என்கூட தங்கியிருக்க; அதுக்கெல்லாம் முன்னாடியே இந்த செக்யூரிட்டிஸ் மூலமா விஷயம் போயிருக்கும். ஆனா நமக்கு அது நடந்த அடுத்தநாள் நான் அக்காவிடம் சொல்லி பர்மிஷன் வாங்கினேன்."
"என்ன பர்மிஷன்?"
"சொல்றதுதான் அக்கான்னு; ஆனா என்னை வளர்த்த அம்மா, எங்கக்கா. அவங்க ஒன்னு சொல்லிட்டா என்னால் மறுக்க முடியாது. அவங்க பெண்ணுக்கு நான் முறைமாமன். இதுவரைக்கும் செய்யவேண்டிய எல்லா முறையையும் நான்தான் செய்திருக்கேன். எங்கக்கா என்னிடம் வந்து என் பெண்ணை கட்டிக்கோன்னு சொன்னா என்னால் மறுக்க முடியாது. அதான் அக்காவிடம் முதலில் சொல்லி பர்மிஷன் கேட்டேன்."
"என்ன சொன்னாங்க?"
"அக்காவுக்கு ரொம்ப சந்தோஷம், உடனே உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க. ஆனா உனக்குதான் ஆக்ஸிடெண்ட் ஆகியிருந்ததே. அதனால் உன்னை மருத்துவமனையில் வந்து பார்த்துவிட்டு போனார்கள். அதெல்லாம் உனக்குத் தெரியாது."
"அப்ப வேற இடத்தில், வேறு மாதிரி எனக்கு ட்ரீட்மெண்ட் குடுத்திருக்கலாமே? நான் தவறாக கேட்கலை, ஏன் அப்ப அந்த முடிவுக்கு வந்திருந்தீங்க?"
"இதுக்கும் நீயே பதில் சொல்லிட்ட, ஒரு விஷயம் நான் எங்கப்பாவிடம் காசு வாங்காமல், அவர் பெயரை உபயோகிக்காமல் இருக்க வேண்டுமென்றுதான் மெட்ராஸ் வந்தது. அதனால் நான் உன் காரணமாக அப்பாவைப் பார்க்கவில்லை. ஆனால் உனக்கு உடனடியாக ஒருலட்சம் அப்பாவினுடைய பணம் வாங்கினேன், இந்த செக்யூரிட்டிகளிடம் இருந்து. அதையும் திரும்ப கொடுத்துவிட்டேன். மற்றபடிக்கு நான் ஒரு பணக்காரன்னு சொல்லி உன் காதலைப் பெற விரும்பலை. அதற்கு முன்பாகவே நமக்கு உடலால் தொடர்பு இருந்தாலும் மனதால் நீ அவ்வளவு நெருங்கவில்லை, அதுதான், உன்னை மனதாலும் நான் முழுவதுமாக நெருங்குவதற்கு அப்படி செய்தேன்."
"காலையில் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கனு சொன்னதும் நான் அப்படியே வானத்தில் பறக்க ஆரம்பித்துவிட்டேன். அதுவும் நீ பழைய வாழ்க்கையில் எந்த தப்பு பண்ணியிருந்தாலும் பரவாயில்லைன்னு சொன்னவுடன் முதலில் எனக்கு சிரிப்புதான் வந்தது பிறகு, உன்னை அப்பிடியே தூக்கிட்டு போய் எல்லா தப்பும் பண்ணனும் நினைச்சேன். சரி பாவம் பொண்ணு ஆக்ஸிடெண்ட் ஆன உடம்பு; பின்னாடி பார்த்துக்கலாம்னு சொல்லித்தான் விட்டுட்டேன். பின்னர் அக்காகிட்ட விஷயத்தைச் சொல்லி நான் அவளைக் கூட்டிட்டுவரேன், வண்டி அனுப்புன்னு சொல்லிட்டு வந்தேன்." சொல்லிவிட்டுச் சிரித்தேன்.
அதைக் கேட்ட அவள் முகம் சிவந்தது. பின்னர் அவள், "இப்பவும் ஒன்னும் கெட்டுப்போயிரலை, ஹார்லிக்ஸ், ஜூஸ் எல்லாம் குடிச்சிட்டு இப்ப தெம்பாத்தான் இருக்கேன். வாங்க ஹோட்டல்ல ரூம் போட்டு தப்பு பண்ணலாம்" சொல்லிவிட்டு தன் இரண்டு கைகளால் தன் கண்ணை மூடிக்கொண்டாள்.
"ஏய், ஏய், காட்டு, காட்டு, நீ வெட்கப்பட்டு நான் பார்த்ததே கிடையாது. நான் அவள் கைகளை விலக்கப்பார்க்க, அவள் என் தோளில் முகம் புதைத்துக்கொண்டாள்.
"அப்புறம் ஒரு விஷயம், நாம வீட்டுக்கு போனதுக்குபிறகு என்னைத் தேடாதே, நான் கொஞ்சம் பிஸியா இருப்பேன், பின்னாடி நானே உன்னை வந்து பார்க்கிறேன்."
நாங்கள் வீட்டிற்கு போனதுமே, என் அக்கா வாசல் வரை வந்து மதுவிடம், "வாம்மா, ஒருவழியா இப்பயாவது கூட்டிட்டு வந்தானே..." அக்கா சொல்ல, அவள் என்னையே பார்த்தாள். அக்காவிற்கு நாற்பதுக்கு மேல் வயதிருக்கும் என்று சொன்னாலும் நம்பமுடியாது. பின்னாலேயே வானதியும் நின்றிருந்தாள். மதுமிதாவிற்கு அவர்கள் இருவரையும் பார்க்க என்னுடைய பெண் உருவம் போல் இருந்திருக்கும், அதுவும் வானதி மப்பூம் மந்தாரமாய், அரண்மனைப் பெண்களுக்கே உரிய நகைகள் எல்லாம் போட்டுக்கொண்டிருக்க, தேவதை போல் இருந்தாள். நான் நேராக வானதியிடம், "இங்கப்பாரு, இனிமே இவளை நீதான் பார்த்துக்கணும். அவ ஏதாவது குறை சொன்னான்னா உன்னைத்தான் உதைப்பேன்." சொன்னவுடன் அவளும் எப்பொழுதும் போல "சரிங்க அத்தான்," சொல்லிவிட்டு மதுமிதாவைக் கூட்டிக்கொண்டு போய்விட்டாள். அக்கா என்னிடம், "என்னடா கல்யாணம் பண்ணிற வேண்டியதுதானே, இல்லை கல்யாணம் பண்ணிக்கலாமலேயே..." காஷ்மீரியில் கேட்டுவிட்டுச் சிரித்தார்கள்.
"அக்கா என்னயிது விளையாட்டு, அப்பாகிட்ட சொல்லீட்டீங்கள்ல, எப்ப கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு இருக்கீங்க?"
"எல்லா ஏற்பாடும் போய்க்கிட்டிருக்கு. அப்பா ஒரு கண்டிஷன் தான் போடுறார். நீ கல்யாணத்துக்குப் பிறகும் சாமியார் மாதிரி இருக்காம, கம்பெனிய பார்த்துக்கணும்னு சொன்னார்."
"அதெல்லாம் பார்த்துக்கறேன், அப்பாகிட்ட மதுமிதாவைக் காட்டணுமே?"
"இனிமே அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க ஏற்கனையே உங்க பெண்டாட்டிய பார்த்துக்கிட்டது போதும். சரி போய் இந்த சாமியார் வேஷத்தையெல்லாம் களைச்சுட்டு வந்துரு!" சொல்லிவிட்டுச் சிரித்தார்கள்.
(தொடரும்...)
அடுத்த நாள் வீட்டில் நான் பெயிண்டிங் பண்ணிக் கொண்டிருந்த பொழுது வீட்டு ஓனர் வந்து உங்களுக்கு ஒரு ஃபோன் வந்தது. மதுமிதா என்ற பொண்ணுக்கு ஆக்ஸிடெண்டாம் சைல்ட் ஜிஸஸ்ல வைத்திருக்கிறார்களாம், உங்களை உடனே புறப்பட்டு வரச்சொன்னார்கள் என்று சொன்னார். நான் பதறிப்போய் உடனே கிளம்பி மருத்துவனை போனால் அங்கு அவளைக் கொண்டுவந்து மருத்துவனையில் சேர்த்தவர் இருந்தார். அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டேன்.
"ஒன்னுமில்லை தம்பி, ஒரு சின்ன பொண்ணு பட்டென்று திரும்பி ரோட்டுக்கு வந்திருச்சு, எதிர்த்தாப்புல பார்த்தா ஒரு லாரி வேகமா வந்துக்கிட்டு இருக்கு. அந்த டிரைவரும் ரொம்ப வேகமா ப்ரேக் போட்டுட்டான். ஆனா இறக்கம். அதுக்குள்ள இந்தப் பொண்ணு இடையில் பூந்து குழந்தையை தூக்கி வீசிறுச்சி; ஆனாலும் அந்த லாரி இந்தபொண்ணு மேல மோதி இந்தப் பொண்ணை தூக்கி எறிஞ்சிருச்சி. வலது பக்கம் முழுக்க பலத்த அடி. நிறைய ரத்தம் போயிருச்சு, மற்றபடிக்கு உயிருக்கு ஆபத்தில்லை. இனிமே நீங்க பார்த்துப்பீங்கல்ல; நான் வரேன்" அந்த மனிதருக்கு நன்றி சொல்லி அனுப்பிவைத்தேன்.
டாக்டர் என்னருகில் வந்தார்,
"சொல்லுங்க டாக்டர்."
"இல்லை ஒரு மைனர் ஆப்பரேஷன் பண்ண வேண்டியிருக்கும் போலிருக்கு, மொத்தமா ஒரு லட்சம் ரூபா செலவாகும். பண்ணலாம்ல?"
"நிச்சயமா டாக்டர், நீங்க பண்ணீருங்க. நான் கவுண்டரில் பணத்தை கட்டிவிடுகிறேன்."
ஆபரேஷன் முடிந்து என்னிடம் மீண்டும் வந்த டாக்டர், "ஒன்றும் பிரச்சனையில்லை, இரண்டு மூணு மாசத்துக்கு. வலது காலும், வலது கையும் அசைக்கமுடியாது. நிறைய வலியிருக்கும். பார்த்துக்கோங்க. ஆஸ்பிடலில் வைச்சிருந்தீங்கன்னா கொஞ்சம் செலவாகும். இரண்டு நாளில் வீட்டுக்குக் கூட்டிட்டு போயிடலாம். வாரம் ஒரு தடவை வந்து பார்த்தா போதும். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், ரொம்ப பலவீனமா இருக்காங்க; நிறைய சாப்பிட சொல்லுங்க. ஜூஸ், ஹார்லிக்ஸ் எல்லாம் கொடுங்க; சின்ன ஆப்பரேஷனையே அவங்க உடம்பு தாங்க மாட்டேங்குது."
நான் அவளைப் பார்க்கப் போனேன். தூங்கிக் கொண்டிருந்ததால் பார்க்கவே பாவமாயிருந்தது. ஆபரேஷன் செய்துவிட்டு பச்சை நிற ட்ரெஸ்ஸில் வைத்திருந்தார்கள். சிறிது நேரத்தில் மெதுவாக கண்விழித்துப் பார்த்த அவள், "ரவி வந்திட்டீங்களா?"
"ம்ம்ம், வந்திட்டேன். அதிகமா பேசாதே; ஒன்னும் பிரச்சனையில்லை. இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணி விடுவார்கள். வீட்டுக்குப் போய்விடலாம். இப்ப பேசாம கண்ண மூடித் தூங்கு."
கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தவள் பிறகு தூங்கிப்போனாள். இரண்டு நாள் கழித்து அவளை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தேன். வீல்சேரில் ஆம்புலன்ஸில் வந்தவளை, தூக்கிக்கொண்டுவந்து கட்டிலில் கிடத்தினேன். பின்னர் ஆம்புலன்ஸை அனுப்பிவிட்டு வந்தால், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
"என்னம்மா ரொம்ப வலிக்குதா?"
"ரவி எனக்கு எவ்வளவு செலவாச்சு?" கேட்டுவிட்டு என்னையே பார்த்தாள்.
நான் பதில் சொல்லாமல் அமைதியாக அந்த இடத்தைவிட்டு சமையல்கட்டிற்கு வந்து, "ஹார்லிக்ஸ் சாப்பிடுறியா?" கேட்டேன்.
"ரவி இங்க கொஞ்சம் வரீங்களா, ப்ளீஸ்." நான் வந்தேன் கையில் ஹார்லிக்ஸ் கலக்கிக்கொண்டு.
"சொல்லுங்க எவ்வளவு செலவாச்சு?"
நான் அவள் அருகில் அமைதியாக உட்கார்ந்து அவள் தலையைத் தடவினேன். பின்னர், "இந்த தேவதைக்கு காசு எதுவும் வாங்கமாட்டேன்னு சொல்லிட்டார் டாக்டர்; அதானால எல்லாமும் இலவசம்." சொல்லிவிட்டுச் சிரித்தேன்.
"நர்ஸம்மா சொன்னாங்க..." முடிக்காமல் என்னைப் பார்த்தாள்.
"என்ன சொன்னாங்க?"
"லட்சத்துக்கு மேல செலவாகியிருக்கும்னு... உண்மையா?"
நான் பதில் சொல்லவில்லை,
"பதில் சொல்லுங்க, ஒரு லட்சம் வாங்கினீங்கன்னா. எப்பிடித் திரும்ப கட்டுவீங்க..."
நான் திரும்பவும் அவள் தலையை தடவிக் கொடுத்துவிட்டு, "பார்க்கத்தானே போற... இங்கபாரு, நீ அதிகமா பேசக்கூடாதுன்னு டாக்டர் கண்டிப்பா சொல்லியிருக்காரு. உனக்கு என்ன கேள்வி கேட்கணுமோ அதையெல்லாம் மனசில் எழுதி வைச்சுக்கோ மூணுமாசம் கழிச்சுக் கேளு. இப்ப பேசாமல் படுத்துத் தூங்கு."
வலியின் காரணமாக சிறிது நேரத்தில் தூங்கிவிட்டாள்.
மதியம் ஒரு மணி போல், கையில் சுடுதண்ணீருடனும், ஸ்பாஞ்சுடனும் வந்து அவளை எழுப்பினேன். என்ன என்பது போல் பார்த்தாள்.
"ஸ்பாஞ் பாத்..." சொல்லிவிட்டு அவள் உடைகளை கழட்டி பக்கத்தில் வைத்துவிட்டு, ஸ்பாஞ் பாத் கொடுத்ததற்குப் பிறகு புதிய உடைகளை போட்டுவிட்டு பழைய உடைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
"ரவி அதையெங்க எடுத்துட்டு போறீங்க?"
"துவைக்கிறதுக்கு?" சொல்லிவிட்டு பாத்ரூமிற்கு கிளம்பினேன்.
என்னுடைய, அவளுடைய துணிகளை துவைத்து, மொட்டைமாடியில் காயப்போட்டுவிட்டு. இருவருக்கும் சமைக்கத் தொடங்கினேன். தால் ஃபிரையும் ரொட்டியும் செய்தேன். பின்னர் அவளுக்காக இரண்டு கிளாஸ் மொஸம்பி ஜூஸ் செய்து வைத்துக்கொண்டு அவளை எழுப்பினேன்.
"சாப்பிட்டுட்டு படுத்துக்கோ."
எழுந்து கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தாள். நான் அவளுக்கு மெதுவாய் ரொட்டியை ஊட்டிவிடத் தொடங்கினேன். சாப்பிட்டு முடித்ததும் ஜூஸ் கொடுத்தேன் குடித்துவிட்டு, "நீங்க சாப்பிட்டுட்டீங்களா?"
"இல்லை இனிமேல்தான்." நான் சொல்லிவிட்டு மெதுவாக அந்தத் தட்டிலேயே கையைக் கழுவினேன். பிறகு, பரணில் இருந்து ஒரு பெட்டியை எடுத்தேன்,
"என்னங்க இருக்கு அந்தப் பெட்டியில?"
"ம்ம்ம், பூதம் இருக்கு" சொல்லிவிட்டுச் சிரித்தேன். பிறகு அந்தப் பெட்டியில் இருந்து கம்ப்யூட்டர் எடுத்து அசெம்பிள் செய்ய ஆரம்பித்தேன்.
"உங்களுக்கு கம்ப்யூட்டர் எல்லாம் தெரியுமா? நீங்க சொல்லவேயில்லையே?"
நான் திரும்பி அவளைப் பார்த்து சிரித்தேன்.
"நான் படிச்சது, வேலைபார்த்தது எல்லாமே கம்ப்யூட்டரில்தான். ஆனால் சில வருடங்களிலேயே இந்த வேலை பிடிக்காமல் விட்டுவிட்டேன். ஆனால் அந்த கம்பெனி ஒனர் சொல்லியிருந்தார். நீ எப்ப வேண்டுமானாலும் திரும்பி வரலாம்னு. அதான் நேத்திக்கு போய் கேட்டிருந்தேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம். பிறகு உன் நிலைமையை சொன்னதும், சரி நீ வீட்டிலிருந்தே வேலை பாருன்னு சொல்லிட்டார்"
"வீட்டிலிருந்தேன்னா எப்பிடி?"
"சொன்னா உனக்குப் புரியாது?"
"இல்லை, நான் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கவில்லையென்றாலும், நான் ரிசப்ஷனிஸ்டாக வேலை பார்த்தது ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் தான்; அதனால் புரியும் சொல்லுங்க?"
நான் அவள் கேட்டதை விட்டுவிட்டு, அவளை வம்புக்கு இழுத்தேன்.
"நீ ரிசப்ஷனிஸ்டா வேலைபார்த்தியா, உன் மூஞ்சிக்கு யாரு அந்த வேலையைக் கொடுத்தது."
"ஏன் என் மூஞ்சிக்கு என்ன குறைச்சல், சொல்லப்போனால் அந்த கம்பெனியிலேயே நான் தான் அழகு. ம்ம்ம், பேச்சை மாத்தாதீங்க, என்ன வேலை?"
"ப்ரொடக்ஷன் சப்போர்ட்"
"அப்பிடின்னா?"
"அதனாலத்தான் சொன்னேன் உனக்கு புரியாதுன்னு..." நான் சொன்னதும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள். "இங்கபாரு கம்பெனி ப்ரோஜக்ட் பண்ணி கிளெயண்ட்கிட்ட கொடுக்கும், அவங்க அதை யூஸ் பண்ணிக்கிட்டு இருப்பாங்க, அப்ப ஏதாவது பிரச்சனைன்னாலோ, இல்லை ஏதாவது மாத்தணும்னாலோ என்கிட்ட கேட்பாங்க. நான் பிரச்சனையை சால்வ் பண்ணணும் அவ்வளவுதான்," சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன்.
"உங்களுக்கு அவ்வளவு தெரியுமா, சரி இதுக்கு எவ்வளவு சம்பளம்?"
நான் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தேன்.
"சாரி உங்க பர்ஸனல் விஷயத்தைக் கேட்டிட்டேன் மன்னிச்சுடுங்க!" சொல்லிவிட்டு அந்தப்பக்கம் திரும்பிக் கொண்டாள். நான் அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். பின்னர் அவளைத் திருப்பி, "ஒரு நாற்பதாயிரம் இருக்கும்னு வைச்சுக்யோயேன்"
"ரவி, இவ்வளவு சம்பளம் கிடைக்கும்னா, நீங்க ஏன் இந்த வேலையைத் தொடரலை. பரோட்டாக்கடையில் எல்லாம் ஏன் வேலைபாத்தீங்க?"
"இங்கபாரு மது, நான் உன்கிட்ட முன்னாடியே சொன்னது தான், எனக்கு அந்த வாழ்க்கை போரடித்தது. பிறகு எனக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவை நான் சம்பாதித்துக் கொண்டேன். இப்ப எனக்கு தேவை, நிறைய காசு, அதான் இந்த வேலை. உனக்கு சரியானதும் திரும்பவும் இந்த வேலையை விட்டுவிடுவேன்."
அவள் என்னிடம் எதையோ கேட்க வந்து பிறகு விட்டுவிட்டாள். அன்று மாலை ஒருதரம் ஸ்பாஞ்பாத் கொடுத்துவிட்டு, இரவு சாப்பாடு சமைக்கத் தொடங்கினேன். கிளெயண்ட் அமேரிக்கன் என்பதால் இரவு பத்துமணிக்கு மேல்தான் வருவான். அதற்குள் சாப்பாடு சமைத்து, அவளுக்குக் கொடுத்துவிடலாம் என்று ஒரு யோசனை. ரசம் வைத்துவிட்டு, உருளைக்கிழங்கு வறுவல் செய்திருந்தேன்.
அவளை எழுப்பினேன்.
"ஏய் நீ தூங்கலை?"
"இல்லை" அதற்குப் பிறகு என் வியாதி அவளுக்கு வந்திருந்தது, பேசாமல் மௌனம் சாதிக்கத் தொடங்கியிருந்தாள்.
இப்படியே ஒருவாரம் சென்றிருந்தது, தினமும் நானே சமைத்து அவளைக் கொல்லாமல் சிலநாள் ஹோட்டலிலும் வாங்கிவந்து கொடுத்தேன். அன்று காலை எப்பொழுதும் போல் ஸ்பாஞ்பாத் கொடுக்க வந்ததும், "ரவி..."
"சொல்லு மது"
"இல்லை, எனக்கு இன்னிக்கு டேட்ஸ்..."
நான் சிறிது நேரம் யோசித்துவிட்டு, "மது ஒன்றும் பிரச்சனையில்லை, நீ என்ன செய்யவேண்டுமென்று சொல், நான் செய்கிறேன்."
முடிந்ததும் அவள், "ரவி, கஷ்டமாயில்லை?"
"இதிலென்ன கஷ்டம் மது, எனக்கு அடிபட்டிருந்தா நீ செஞ்சிருக்க மாட்டியா?"
"இல்லை ரவி, எனக்கு அப்படிதோணலை, உண்மையை சொல்லணும்னா நான் பண்ணியிருக்கமாட்டேன்னுதான் சொல்லுவேன். எனக்கு முதலிலேயே என்னடா இது இவன்கூட ஒரு தடவை படுத்து எந்திருச்சததுக்கு இந்த கேடான்னு தான் நினைச்சிருப்பேன். சமைச்சு, துணிதுவைச்சு, கழுவிவுட்டு, நாப்கின் மாட்டிவிட்டு. ம்ஹ¤ம் நான் பண்ணியிருக்க மாட்டேன்." சொல்லிவிட்டு அமைதியாக இருந்தாள். நான் இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.
நான்கைந்து நாள்கள் ஆகியிருக்கும், ஒருநாள் இரவு நான் கிளெயண்ட் ஒருவனிடம் பேசி க்கொண்டிருந்தேன். அவள் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். அரைமணிநேரம் அந்த அமெரிக்கனிடம் பேசிவிட்டு ஃபோனை வைத்ததும். அவள் அருகில் போய் உட்கார்ந்தேன்.
"மது தூங்கலை?"
"இல்லை... நீங்க எப்ப தூங்குவீங்க?"
"இல்ல நான் தூங்குறதுக்கு லேட்டாகும், இன்னொரு கால் வர வேண்டியிருக்கிறது. நீ தூங்கு"
"இங்க தூங்குங்களேன்..."
எனக்கு புரிந்தது,
"மது, உன் உடம்பு ரொம்ப வீக்காயிருக்காம், டாக்டர் கூடாதுன்னு சொல்லியிருக்கார். இரண்டு மாசம் ஆகட்டும் பார்த்துக்கலாம்."
கொஞ்ச நேரம் பேசமாலிருந்தவள், என் வலது கையை அவளது இடது கையால் பிடித்தாள். சிறிது நேரம் கழித்து,
"ஒரு முத்தமாவது..."
"ம்ம்ம்."
கிளெயன்ட் கால் பண்ணியிருந்தான்; அதனால் அவளைத் தூங்கச்சொல்லிவிட்டு நான் அந்த காலை அட்டெண்ட் பண்ணினேன்.
(தொடரும்...)
சில மாதங்களில் எங்களுக்குள் பழக்கவழக்கங்களில் மாறுபாடு வரத்தொடங்கியிருந்தது. நான் அவளை ஒருமையிலும், 'டி' போட்டும் அழைக்கத் தொடங்கியிருந்தேன். சில சமயங்களில் தொட்டும் பேசியிருந்தேன். ஆனால் பல காரணங்களுக்காக வீட்டிற்கு பெரும்பாலும் வரமாட்டாள். நானும் அதைத் தவிர்த்துவிடுவேன். அவள் ஆரம்பத்தில் இருந்தே என்னுடன் இயல்பாகப் பழகிவந்திருந்தாள்.
"ரவி, உங்க சைக்கிளில் என்னைக் கூட்டிக்கொண்டு போனதேயில்லை!" எதற்காக அதைத் தொடங்கினாள் என்று தெரியவில்லை.
"போய்விட்டால் போச்சு!" சைக்கிள் எடுத்துவந்தேன். நான் அவளை பின்சீட்டில் உட்காரச்சொல்ல. அவள், "ஏன் நீங்க உட்காருங்களேன். நான் ஓட்டிட்டு வர்றேன்? பொம்பளங்க ஆம்பளைங்களை பின்னாடி உட்காரவைச்சு சைக்கிள் ஓட்டக்கூடாதா?"
நான் மெதுவாக ப்ளடி ஃபெமினிஸம் என்றேன்.
"என்ன சொன்னீங்க." அமைதியாகவே கேட்டாள் அவள் காதில் விழுந்திருக்க வேண்டும்.
"ம்ம்ம். ஒன்னும் சொல்லலை..." சமாளிக்க நினைக்காவிட்டாலும் அவளை வருத்தப்பட வைக்க விரும்பாததால் சொன்னேன்.
"சொல்லுங்க ரவி..." வற்புறுத்தினாள்.
"ப்ளடி ஃபெமினிஸம்னு சொன்னேன்." அவளிடம் பெரும்பாலும் நேரடியாய்ப் பேசிவிடுவதே நலம் என்று நினைத்ததால்.
"தாங்ஸ், சொன்னதுக்கு. இனிமே அப்பிடி சொல்லாதீங்க" இதுவும் அவளிடம் நான் எதிர்பார்த்தது தான்.
நாங்க இரண்டுபேரும் காதலிக்கிறோம்னு சொல்லிக் கொள்ளவில்லையே தவிர அதைத்தான் செய்து கொண்டிருந்தோம். அது ஒரு விடலைக் காதலாக இல்லாததால் அதற்கான கவர்ச்சி இல்லாமலிருந்தது நானும் அவளும் செய்துகொண்டிருந்தது ஒரு வகையான முதிர்ச்சியான காதல் என்றே நினைத்திருந்தேன். இன்னமும் அவளுக்கு என் பர்ஸனல் விஷயங்கள் தெரியாது. நானும் அவள் கேட்டால் சொல்லிக் கொள்ளலாம்னு விட்டிருந்தேன். சில சமயங்களில் சூழ்நிலை எங்களை மீறியிருக்கிறது. ஆனால் சில சமயங்களில் நானும் சில சமயங்களில் அவளும் சமாளித்து நகர்ந்திருக்கிறோம். அடுத்த முறை பார்க்கும் பொழுது சிறிது சிரிப்பாய் இருக்கும். ஆனால் சிறிது நேரத்தில் சகஜமாகிவிடும்.
ஒருநாள் மதுமிதா என்னிடம் வந்து, "ரவி, கோயிலுக்குக் கூட்டிட்டு போங்களேன்..." அவள் பொதுவாய் அமைதியாய் இருக்க நினைத்தால் கோவிலுக்குப் போவாள் என்று தெரியும் இல்லை முடிவெதுவும் எடுக்க நினைத்தால் கோவிலுக்கு வருவாள். இன்றைக்கு எதற்காக கூப்பிடுகிறாள் என்று தெரியவில்லை.
கோவிலில் வைத்து, "ரவி, எனக்கு உங்களை மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?" சாந்தமாய்க் கேட்டாள். அவளால் அப்படிக் கேட்க முடிந்திருந்தது யாராவது நிச்சயம் அப்படிக் கேட்டிருக்கத்தான் வேண்டும் நான் இன்னும் நேரம் கடத்தியிருப்பேன்.
"பிடித்திருக்கு...!" நான் மேலும் சொல்ல தொடங்கும் முன், "எனக்கு அது போதும், ஹோட்டலுக்குக் கூட்டிட்டு போய் ஃபுல் மீல்ஸ் வாங்கிக் கொடுங்க."
நான் சிரித்துக்கொண்டே "அது என்ன ஃபுல் மீல்ஸ்?"
"எனக்கு இன்னிக்கு நிறைய சாப்பிடணும் போல இருக்கு..." சிரித்தாள்
சாப்பிட்டதும் எனக்கு தூக்கம் வருகிறது, நான் ஹாஸ்டலுக்கு போகிறேன்னு சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அடுத்த நாள் காலையிலேயே வீட்டிற்கு வந்திருந்தாள். உட்காரச்சொல்லிவிட்டு நான் குளிக்கக் கிளம்பினேன். குளித்துவிட்டு வந்து பார்த்தால் தூங்கிவிட்டிருந்தாள் நான் அவளை எழுப்பி,
"ஏய் சாப்பிட்டியா?" என்று கேட்டேன்.
"இல்லை..."
"சரி வா சாப்பிடலாம், உனக்கும் சேர்த்துத்தான் ரொட்டி சுட்டேன்." அழைத்தேன்.
சாப்பிட உட்கார்ந்தவள், சிறிது நேரம் எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.
"என்னடி யோசனை?" கேட்டேன்.
"என்னவோ கேட்கணும்னு நினைச்சேன் மறந்திட்டேன்... ஆங்... ஞாபகம் வந்திருச்சு. என்னைய நீங்க ஒரு படம் வரைஞ்சு தரணும்." சுத்தி வளைத்து எங்கேயோ வர நினைத்தாள்.
"நான் பொண்ணுங்களை ட்ரெஸ் போட்டு படம் வரையறதில்லை..." சொல்லிவிட்டு அவளைப் பார்த்து சிரித்தேன்.
அவள் நேரடியாய் "இதுக்கு முன்னாடி அதுமாதிரி வரைஞ்சிருக்கீங்களா?" சந்தேகமாய்க் கேட்டாள்.
"ம்ம்ம், இரண்டு மூணுதரம் வரைஞ்சிருப்பேன். நான் தனியா ஓவியம் படிச்சப்ப, எல்லா ஸ்டுடண்ட்சும் வரையணும். எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் ஓவியம் மட்டுமே கண்ணாக இருக்கணுங்கறதுக்காக அப்படி ஒரு பயிற்சி கொடுப்பார்கள்" என்றேன்.
சிறிது நேரம் யோசித்துக்கொண்டிருந்துவிட்டு, "ரவி, உங்களால உணர்ச்சிவசப்படாம வரைய முடியும்னா, நீங்க என்னையும் வரையலாம். எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது." விட்டுக்கொடுப்பதைப் போல் சொன்னாள்.
ஆனால் என்னால் அன்று உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை. நிச்சயமாய் அவள் ஓவியக்கல்லூரி மாடல் இல்லை. மேலும் அந்த ஓவியக் கல்லூரி மாடலை நான் நேசித்திருக்கவில்லை.
"என்னாடி இது ஒன்னயுமே காணோம்..."
அதற்கு அவள், "என் உடல் வாகே அப்படித்தான்!" என்று சொன்னாள். அவள் நிர்வாணம் ஏற்படுத்திய சலனம் ஒரு அருமையான போர்ட்ராய்டிற்கு வழிவகுத்திருந்தது மட்டுமல்லாமல் சுமூகமான எங்களின் உறவிற்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. ஓவியத்தில் இருந்த நோக்கம் மற்றையதற்கு மாறியது அவள் எனக்கு இதுதான் முதல் முறை என்றால், நான் பதில்லும் என் முறையைச் சொல்லவில்லை அவள் கேட்காததால் மட்டுமல்ல. ஆரம்பத்தில் இருந்த தடுமாற்றம் என் முறையையும் அவளுக்குச் சொல்லியிருக்க வேண்டும். நாங்கள் கூடலில் காட்டிய நிதானம் அதை இன்னமும் மெருகூட்டியது தெரிந்தது. ஃபெமினிசம் பேசுவியே இதில் மட்டும் ஏன் விதிவிலக்கென்று சொல்லி அவளை நக்கலடித்து மேலேற்றிவிட்டேன். ஃபெமினிஸமும் அவள் வெட்கமும் கலந்ததாய் அமைந்த அது அதிக நேரம் களைப்பில் ஆழ்த்தியது. அன்று சாயங்காலம் அவள் ஹாஸ்டலை காலி செய்துவிட்டு நேராக என் வீட்டிற்கே வந்து சேர்ந்தாள்.
"ரவி, இனிமேல் நான் ஹாஸ்டலில் தங்கவில்லை, உங்களுடனேயே தங்கிவிடுகிறேன். ஆனால் ஒன்று, நான் உங்கள் பர்ஸனல் வாழ்க்கைபற்றி எதுவும் கேட்கமாட்டேன், நீங்களும் என்னுடயதைப்பற்றி கேட்கக்கூடாது. நானாக உங்களை, என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளுமாறு கேட்க மாட்டேன். அதே போல் கல்யாணம் ஆனாலும் சரி, நீங்கள் சமைத்துப்போடவோ, துணிதோய்க்கவோ, வேறு உங்களுடைய வேலையைச் செய்யவோ என்னைக் கேட்கக்கூடாது. எக்காரணம் கொண்டும் என் பர்ஸனல் வாழ்க்கையை உங்களுடைய வாழ்க்கை பாதிக்ககூடாது. ஆறுமாதம் போல் சேர்ந்திருப்போம். பிடித்திருந்தால் கல்யாணம் செய்து கொள்வோம். இல்லையென்றால் நான் மீண்டும் ஹாஸ்டல் சென்றுவிடுகிறேன். இடையில் இருவருக்கும் உடன்பாடென்றால் செக்ஸ் வைத்துக் கொள்வது பற்றி எனக்குப் பிரச்சனையில்லை."
"திரும்ப ஹாஸ்டல் போறது கஷ்டமில்லை?" அவள் நிலைப்பாட்டை எதிர்த்துப் பேசி நினைக்காததால் அப்படியொன்றைக் கேட்டேன்.
அவள் நிதானமாய் என்னைப் பார்த்தாள், "கஷ்டம்தான்; வலிக்கும்தான்; ஆனா இன்னொருத்தரை டிபண்ட்பண்ணி வாழாமல் இருக்கலாம். என்ன ஒன்னு இவ்வளவு நாள் கழித்தும் தப்பான ஒருத்தரை தேர்ந்தெடுத்துட்டோம்னு தான் கொஞ்சம் வருத்தமா இருக்கும். அதற்கென்ன பண்ணுவது. ஆனால் ஒன்று எக்காரணம் கொண்டும் நான் என் அம்மாவைப் போல் தற்கொலை செய்து கொள்ளமாட்டேன்."
எனக்கு ஏண்டா இந்தக் கேள்விளைக் கேட்டோமென்று ஆயிற்று.
(தொடரும்...)
அடுத்த நாள் சனிக்கிழமையாதலால், நான் அந்தப் புத்தகத்தை லைப்ரரியனிடம் காலையிலேயே கொடுத்துவிட்டுச் சென்று விட்டேன். பிறகு வந்த நாள்களில் கொஞ்சம் வேலையிருந்ததால் லைப்ரரி பக்கம் போகவில்லை. வெள்ளிக்கிழமை, பக்கத்தில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று பிரகாரத்தில் அமைதியாகக் கண்களை மூடி உட்கார்ந்திருந்தேன்.
அரைமணி நேரம் கழித்து கண்ணைத் திறந்தால், எதிரில் மதுமிதா உட்கார்ந்திருந்தாள். ம்ம்ம்.. பெயர் ஞாபகம் இருக்கிறது.
"எப்பிடிங்க! அரைமணி நேரம் கண்ணை மூடிக்கிட்டு உட்காரந்துக்கிட்டு இருக்கீங்க? என்னால பத்து நிமிஷம் உட்காரமுடியாது. எதாவது ஞாபகத்துக்கு வந்துடும் முழிச்சிடுவேன். அன்னிக்கு லைப்ரரியில் உங்க மேல் எனக்குக் கோபம். நான் பேசிக்கிட்டிருக்கும் போதே நீங்க உங்க வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டீர்கள். எனக்குக் கோபம் வந்துவிட்டது. அதனால் தான் உடனே கிளம்பிவிட்டேன். அடுத்த நாள் புத்தகம் கொடுக்க வருவீர்கள், திட்டலாம்னு பார்த்தால் ஒரு வாரமாய் ஆளையே காணோம். இங்க பார்த்தா சாமியார் மாதிரி உட்கார்ந்துகிட்டிருக்கீங்க."
இவ்வளவு வேகமா என்னிடம் பேசும் முதல் பெண் இவள்தான். எப்பிடித்தான் இவ்வளவு கோர்வையாய் பேசுவாளோ தெரியாது. அவள் பேசுவதைப் புரிந்து கொள்வதே எனக்குக் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.
"அன்னிக்கு புத்தகத்தை எல்லாம் அடுக்கிவைத்துவிட்டு உங்களிடம் பேசலாம்னு நினைச்சேன். நீங்க அப்புறம் பார்க்கலாம்னு சொன்னதும், உங்களுக்கு ஏதோ அவசர வேலையிருப்பதாகத்தான் நினைத்தேன்." நான் வெளிப்படையாகச் சொன்னேன்.
"பரவாயில்லை, உங்களை நான் மன்னிச்சிட்டேன்," சொல்லிவிட்டு விகல்ப்பமில்லாமல் சிரித்தாள்.
"நான் உங்களை இந்தக் கோவிலில் இதற்கு முன் பார்த்தது இல்லையே?" சந்தேகமாய்க் கேட்டேன்.
"நான் இந்த இடத்துக்குக் கொஞ்சம் புதுசு, சரி தப்பா நினைச்சிக்காதீங்க கொஞ்சம் வேலையிருக்கு, அப்புறம் பார்க்கலாம்" சொல்லிவிட்டு எழுந்தாள்.
நான் உடனே "இப்ப நான் எதுவும் தவறு செய்துவிடவில்லையே" என்றேன்.
"இல்லை உண்மையாகவே கொஞ்சம் வேலையிருக்கு, உங்களுக்காக ஏற்கனவே அரைமணிநேரம் செலவழித்தாகிவிட்டது. சமயமிருந்தால் பிறகு சந்திப்போம்". சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். அதற்குப் பிறகும் சுமார் ஒருமாதம் நான் அவளை பார்க்கவேயில்லை, மாதக்கடைசி எப்பொழுதும் போல ஃபாதரைப் பார்க்க சர்ச்சுக்குச் சென்றிருந்தேன். அங்கே நடந்துகொண்டிருந்த ப்ரேயரில் மண்டியிட்டு உட்கார்ந்திருந்தாள் மதுமிதா, எனக்கு ஆச்சர்யம். ஆகக்கடைசியாய் அவளை நான் இங்கே எதிர்பார்க்கவேயில்லை நிச்சயமாய்.
நான் அவளை கவனிக்காததை போல் நேராகப் போய் ஃபாதரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பின்னால் வந்தவள் நேராக ஃபாதரிடம், "ப்ரைஸ் த லார்ட் ஃபாதர்!"
"ப்ரைஸ் த லார்ட் மை சைல்ட்!" என்றார்.
என்னிடம் திரும்பி, "ரவி, நான் உங்களிடம் சொன்னேனே, புதுசா ஒரு பெண்ணு பசங்களுக்கு உதவுறேன்னு சொன்னிச்சுன்னு. அது இந்தப் பொண்ணுதான், பேரு மதுமிதா."
"தெரியும் ஃபாதர், முன்னாடியே மீட் பண்ணியிருக்கோம்." நான் அவளைப் பார்த்தபடியே சொன்னேன்.
"ஆமாம் ஃபாதர் முன்னாடியே மீட் பண்ணியிருக்கோம், ஆனா எதிரில் பார்த்தால், பார்க்காதது போல் வந்துவிடுவார்." என்று மதுமிதா என்னைச் சீண்டினாள்.
"அப்பிடியா, ரவி அப்பிடிப்பட்ட பையன் இல்லையேம்மா, நம்ம குழந்தைகளுக்கெல்லாம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இவர்தான் இரண்டு வருடமாய் பாடம் சொல்லித் தருகிறார். ரொம்ப நல்ல பையனாச்சே, ஏன் ரவி மதுமிதா சொல்வது உண்மையா?" ஃபாதர் உண்மையான அக்கறையுடன் கேட்டார்.
"ஆமாம் ஃபாதர், ஒரு விதத்தில் உண்மை தான். மதுமிதா ப்ரேயர் செய்து கொண்டிருந்தால் டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்னு..." நான் இழுத்தேன்.
"ஒரு மாதத்திற்கு முன் இவரை கோயிலில் பார்த்த பொழுது தியானம் பண்ணிக்கிட்டிருந்தார். அப்ப நான் இவர் முடிக்கும் வரைக்கும் காத்திருந்து பார்த்து பேசிவிட்டுதான் வந்தேன். ஆனா பாருங்க இவரை, சாக்கு சொல்றார், ப்ரேயர் பண்ணிக்கிட்டிருந்தேன்னு..." அவள் கண்களில் உண்மையிலேயே கோபம் இருந்தது.
நானும் ஃபாதரும் பதில் ஒன்றும் சொல்லாமல் ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க...
"சரி நீங்க ஃபாதர்கிட்ட பேசிட்டு வாங்க, தனியா வைச்சி பேசிக்கிறேன் உங்ககிட்ட." சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
ஃபாதர் என்னிடம், "ப்ரைட் சைல்ட், அப்பா அம்மா கிடையாது, நம்ம சர்ச்சில் தான் வளர்ந்தாள், ஆனால் இங்கேயில்லை, வேறு ஒரு இடத்தில். இப்பத்தான் கல்லூரி படிப்பு முடித்தாள். சர்ச் ரூல்படி இப்ப வெளியில் வந்து ஹாஸ்டலில் தங்கி இருக்கிறாள். ஏதோ வேலை பார்ப்பதாக சொன்னாள் ஜீஸஸ் தான் காப்பாதணும்."
நான் கேட்காமலே விவரங்கள் சொன்னார் ஃபாதர். நான் அவர் சொன்னதை கவனிக்காதது போல் விட்டுவிட்டேன். பிறகு குழந்தைகளின் முன்னேற்றம் பற்றியும் வேறு என்ன செய்யலாம் என்றும் பேசிவிட்டு வந்தேன். வெளியில் அவள் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.
"என்னங்க இது, எப்பப் பார்த்தாலும் என்னை ஆச்சர்யப்படுத்திக்கிட்டே இருக்கீங்க. சினிமா மாதிரி இருக்கு, ப்ளெட் டொனேட் பண்றீங்க, லைப்ரரியனுக்கு உதவி பண்றீங்க, ஆர்பன் சைல்டுங்களுக்கு படிப்பு சொல்லித்தரீங்க. நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒன்னு கேட்கலாமா, நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க?" தீவிரமாகக் கேட்டாள்.
"வேலைன்னு ஒன்னும் பிரமாதமா செய்யலைங்க, தேவைப்படுற காசுக்கு ஏத்த மாதிரி ஏதாவது வேலை பார்ப்பேன். மற்றபடிக்கு என்னுடைய மிச்சமான நேரங்களை பிறருக்கு பயன்படுகிற மாதிரி ஏதாவது செய்வேன். அவ்வளவுதான்"
"ரொம்ப சுலபமா சொல்லீட்டீங்க, ம்ம்ம், என்னன்ன வேலையெல்லாம் பார்ப்பீங்க?"
"படம் வரைவேன், பாடம் சொல்லித்தருவேன், கணக்கு எழுதித்தருவேன், தோட்டம் போட்டுத்தருவேன். ஒரு சிலசமயம் பரோட்டாக்கடையில் பரோட்டா கூட போட்டிருக்கேன்."
"இவ்ளோ நைஸ் லுக்கிங், உங்களுக்கு யார் பரோட்டா போடுற வேலை தருவா? சும்மா கதைதானே சொல்றீங்க?" அவள் உண்மையிலேயே நம்பவில்லை என்று தெரிந்தது.
"உண்மைதாங்க, நான் குட் லுக்கிங்கா இருப்பதால் இன்னும் இந்த மாதிரி மக்களிடம் நன்றாக பழகமுடியலை. நீங்க சொல்வது மாதிரி இந்த வேலையெல்லாம் தரவே மாட்டாங்க, ஆனா அன்று பரோட்டா கடைக்கு சாப்பிட போயிருந்தேன். ஹோட்டல் முதலாளியிடம் புரோட்டா வேண்டுமென்று கேட்க, மாஸ்டர் வரலை அதனால் கிடைக்காதுன்னு சொல்லிட்டார். நான் அவரிடம், நான் போட்டுக்கொள்ளவான்னு கேட்க, ஒருமாதிரி என்னைப் பார்த்தார். பின்னர் நான் பரோட்டா போட்டதைப் பார்த்து அன்றைக்கு மட்டும் போட்டுத்தரச் சொன்னார். வருமானம் ஐந்நூறு ரூபாய்." சொல்லிச் சிரித்தேன்.
அவள் சிறிது நேரம் என்னையே உற்றுப் பார்த்தாள், என் குடும்பத்தை பற்றி கேட்கப்போகிறாள் என்று நினைத்தேன். நல்லவேளை கேட்கவில்லை. பின்னர் எதையெதையோ பற்றி ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கடைசியில் அவள் கேட்டாள்.
"ஃபாதர் என்னைப்பத்தி எதுவும் சொன்னாரா?"
"ஆமாம், நானாகக் கேட்கவில்லை, அவராகத்தான் சொன்னார்." சொல்லிவிட்டு நான் தலையைக் குனிந்துகொண்டேன்.
"நீங்க ஏங்க தலையை குனியிறீங்க, சொல்லப்போனால் என்னைப் பற்றி யாரோ சொல்லக் கேள்விப்பட்டவர்கள். என்னிடம் என் குடும்பத்தை பற்றியும் என் வாழ்க்கையை பற்றியும் கேள்விகேட்டுக் கொன்றிருக்கிறார்கள். என் பர்ஸனல் விஷயங்களில் தலையிடுபவர்களை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. நீங்கள்தான் என்னைப்பற்றி கொஞ்சம் தெரிந்தாலும், அதைப்பற்றி கேட்காமல் இருந்தது. ஹாட்ஸ் ஆஃப் டு யூ." சொல்லிவிட்டு திரும்பி நடந்துகொண்டேயிருந்தாள்.
எனக்கு ஆச்சர்யமாயிருந்தது, என்னடா இந்தப்பெண் இப்படி நடந்துகொள்கிறதே என்று. அதன் பிறகு ஒரு வாரத்திற்கு அவளை நான் பார்க்கவே இல்லை. முதல் இரண்டு நாள்கள் போய்வரும் இடங்களில் எல்லாம் தேடினேன் பிறகு சிறிது மறக்கத் தொடங்கினேன்.
ஒரு நாள் மதியம் என் வீட்டு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தால் மதுமிதா நின்று கொண்டிருந்தாள்.
"வாங்க மதுமிதா."
"உள்ள வரலாம்ல?"
"தாராளமாய். சின்ன ரூம்தான் ஆனால் இன்னொரு நபர் உட்கார நிச்சயம் இடம் இருக்கும்."
"அதற்குக் கேட்கவில்லை, பாச்சுலர் ரூம். பெண்ணு பார்க்கிற மாதிரியிருக்குமான்னு தான்?"
நான் அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல், சமையல் அறைக்குச் சென்று அவளுக்கு டீ தயார் செய்ய ஆரம்பித்தேன். என்னால் ஊகிக்க முடியும் அவள் என் ரூமில் என்ன செய்து கொண்டிருப்பாள் என்று. நிறைய ஓவியங்களும், நிறைய புத்தகங்களும் இருக்கும் என் அறையில். அவள் ஓவியங்களைப் பார்த்து முடிப்பதற்கும், புத்தகத்தின் தலைப்புக்களை படித்து முடிப்பதற்குமே ரொம்ப நேரம் பிடிக்கும். இரண்டு டம்ளர்களில் டீ எடுத்துக்கொண்டு போய், அவளிடம் ஒரு டம்ளரை நீட்டினேன்.
"என்ன ஆளுங்க நீங்க, நிறைய தடவை மீட் பண்ணியிருக்கோம். இங்கத்தான் எங்கையோ பக்கத்தில் இருப்பேன்னு தெரியும். ஒரு வாரமா பார்க்கலை, அன்னிக்கு கோபமா வேற பேசிட்டு போனேன். என்னைத் தேடுவீங்கன்னு பார்த்தா. ம்ஹூம் ஒரு ரியாக்ஷனும் இல்லை; அதான் இன்னிக்கு நானே வீட்டைத் தேடிட்டு வந்திட்டேன்."
நான் பதில் சொல்லாமல் டீயைக் குடித்துக்கொண்டிருந்தேன்.
"பதில் சொல்லுங்க!"
"என்ன சொல்ல, ஏன் உங்களைத் தேடலைன்னா?"
"டீ ரொம்ப நல்லாயிருக்கு, அன்னிக்கு எனக்கு ஃபாதர் மேல கொஞ்சம் கோபம். என்னைப்பத்தி தெரிஞ்சவங்க எல்லாருமே என்கிட்ட ஒரு சிம்பதி காட்டுவாங்க, அது எனக்குச் சுத்தமா பிடிக்காது. உங்ககிட்ட ஃபாதர் சொல்லிட்டார்னவுடனே எனக்கு ரொம்ப கோபம் வந்தது. ஆனால் அதைப்பற்றி நீங்க கேட்காததால பரவாயில்லை, ஆனா நீங்க எதுவும் கேட்டுறுவீங்களோன்னு பயம் அதனால் தான் உங்களை பார்க்காமல் தவிர்த்தேன். நீங்க ஓவியம் வரைவீங்கன்னு சொல்லவே இல்லை?"
"நீங்க கேட்கவேயில்லை?"
"இல்லை அன்னிக்கு நான் கேட்டேன், ஹாஸ்பிடலில், ரவிவர்மன்னா ஓவியம் கூட வரைவீங்களான்னு?"
"ஆமாம் ஆனால் நீங்க அன்னிக்கு நக்கலா கேட்டீங்க, நான் ஆமாம் பதில் சொல்லியிருந்தா நம்பியிருக்க மாட்டீங்க அதான் சொல்லலை."
"ம்ம்ம், சூப்பரா வரையிறீங்க, அதென்னங்க இவ்வளவு புத்தகம் வைச்சிருக்கீங்க, வாங்கிற காசெல்லாம் புத்தகத்துகே சரியாயிறும் போலிருக்கு?"
"ஆமாம் கேன்வாஸ் வாங்கிறதுக்கும் புத்தகம் வாங்குறதுக்கும்தான் சரியா இருக்கும்." அதற்குப் பிறகு அவள் என் தினசரி வாழ்க்கையில் பெரிய பாதிப்பை உண்டாக்கினாள். என் நேரங்கள் பலவற்றை வீணாக்கினாள். நானும் அவளும் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கத் தொடங்கினோம். இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமானால் அவள் பேச நான் கேட்டுக் கொண்டிருக்கத் தொடங்கினேன்.
எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவாள். ஆட்டம் பாமில் ஆரம்பித்து தெருமுனையில் விற்க்கும் மல்லிகைப்பூ வரை பேசுவாள். பெரும்பாலும் நான் பதில் சொல்வது கிடையாது. ஆனால் சிலசமயங்களில் பதில் சொல்லுங்கள் என்று கேட்டு பதில் வாங்கிக் கொள்வாள். நான், அவள் என்னை எடைபோடுகிறாள் என்று நினைத்துக் கொள்வேன். பெரும்பாலும் அவளைப்பற்றிய எல்லா விஷயங்களையும் சொல்லிவிட்டிருந்தாள். அவளுடைய உள்ளாடை சைஸ் உட்பட.
ஒரு நாள் இப்படித்தான் ஏதோ ஒரு படம் பார்த்திருப்பாள் போலிருக்கிறது. நேராக என்னிடம் வந்தவள், "பாஸ்டர்ட்ஸ்..."
"என்னங்க ஆச்சு..."
"சினிமாவுல ஒருத்தன் ஒரு பெண்ணைக் கெடுத்து குழந்தை கொடுத்துட்டு, விட்டுட்டு போயிருறான். பிற்காலத்துல அவனை காட்டுறப்போ பெரிய தியாகி மாதிரி காட்டுறாங்க. புல்ஷிட்."
"சினிமாதானே, உங்களை யாரு அந்தப் படத்தை உட்கார்ந்து பார்க்கச் சொன்னது?" நான் புரியாமல் கேட்டேன்.
"என்னங்க சினிமா, சினிமான்னா பொம்பளங்கள எப்பிடி வேணா காட்டலாமா. மேல் சாவனிஸ்ட் சைக்கோ, அந்த டைரக்டர பார்த்து கன்னத்தில் அறைஞ்சாத்தான் என் கோபம் அடங்கும்." அவள் கண்களில் அந்த கோபம் தெரிந்தது. எங்கே என்னை அடித்துவிடுவாளோ என்ற பயம் கொஞ்சம் போல் வந்தது.
நான் பதில் பேசாமல் இருந்தேன்.
"உங்களுக்கு தெரியுமா எங்கம்மாவும் இது மாதிரிதான். ஒருத்தன் சும்மா பம்மாத்து வேலை காமிச்சிருக்கான்; அதை நம்பி ஏமாந்து நாலுமாசம்; போய் அவன்கிட்ட கேட்டா, செருப்பால அடிப்பேங்கிறான்; எனக்குத்தான் முந்தானை விரிச்சன்னு என்ன நிச்சயம்னு கேட்கிறான். எங்கம்மா ஒன்னுமே பேசாம என்னைய பெத்து சர்ச்சில் போட்டுட்டு, போய் ட்ரெயின் முன்னாடி விழுந்து தற்கொலை பண்ணிக்கிச்சு, சொல்லாமலாவது செத்துப் போயிருக்கலாம் இதையெல்லாம். லெட்டர் எழுதிவைச்சிட்டு போயிருக்கு. நான் பதினாறு வயசில எங்கம்மா, அப்பாவை பத்தி தெரிஞ்சிக்கணும்னு ஆர்வத்தில் ரிக்கார்ட்ஸ் எல்லாம் எடுத்து கடைசியில் இந்தக் கடிதம் படிச்சி, சீன்னு ஆயிருச்சு."
எப்பொழுதும் போல் நான் பதில் பேசவில்லை, அவளே தொடர்ந்தாள்.
"வாழவே பிடிக்கலை, சந்நியாசம் வாங்கிரலாம்னு நினைச்சேன். இருபது வயது நான் காலேஜ் முடிக்கிறப்ப, முதல் முதலா சர்ச்சை விட்டு வெளியே வர்றேன், அசிங்கமாப் போச்சு, அழகா வேற இருக்கனா. எல்லாரும் மாரையே பார்க்கிறாங்க..." முகம் சிவந்து போயிருந்தது.
நான் பேச்சை மாற்றவிரும்பி, "நான் கூட சாமியாராகிரலாம்னு மொட்டையெல்லாம் போட்டுட்டு, இமயமலை பக்கம் போய் ஒரு வருஷம் ஒரு சாமியார் கிட்ட சிஷ்யனா இருந்தேன்."
அவள் நம்பாமல் என்னைப் பார்த்தாள். சொல்லப்போனால் இதுதான் நான் என்னைப்பற்றி அவளிடம் சொல்லும் முதல் பர்ஸனல் விஷயம். அவளும் கேட்டதில்லை, நானும் சொன்னதில்லை.
"ரொம்ப நல்ல சாமியார். அங்கதான் நான் தியானம் பண்ண, மத்தவங்களுக்கு உதவி பண்ண, எல்லாம் கத்துக்கிட்டது. கடைசியில் சாமியார் உனக்கு இன்னும் வயசாகவில்லை, உனக்கு சில விஷயங்கள் கத்துக்கொடுக்கணும்னு நினைச்சேன். கத்துக் கொடுத்துட்டேன். இனிமேல் ஆண்டவன் நினைத்தால் நீ என்னைப் பார்க்கலாம்னு சொல்லிட்டுப் போய்ட்டார்."
நான் அவளைப் பார்த்தேன். அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"இமயமலையில் இருக்கும் போது, யாரிடமும் பேசக்கூடாது. என் குரு பேசினால் மறுமொழி கூறவேண்டும், நானாக பேசக்கூடாது. இதனால் பல மாதங்கள் பேசாமலேயே இருந்திருக்கிறேன். ஆனால் உன்னைப் பார்த்ததும் அது சிறிது மாறிவிட்டது."
"தாங்ஸ்..." என்றாள் அவள்.
"எதற்கு?"
"இல்லை என்னை நம்பியும் உங்கள் பர்ஸனல் விஷயங்களை சொல்லலாம்னு தோணிச்சே அதுக்குத்தான்."
நான் அதற்கும் பதில் எதுவும் சொல்லவில்லை.
(தொடரும்...)
மதுமிதா இறந்துவிட்டாள் என்ற செய்தியை என்னால் சிறிதும் நம்பமுடியவில்லை, நான் சிறிது சிறிதாக மயக்கமாகிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.
o
அந்த இரவு பதினொரு மணியிருக்கும், என் வீட்டு போர்ட்டபிள் டிவியில், கேபிள் சேனலின் கீழ் ஒரு அவசர அறிவிப்பு; AB-ve வகை இரத்தம் உடனடியாக தேவையென்று. நான் வேக வேகமாய், டிவியை அணைத்துவிட்டு, வீட்டையும் பூட்டி என் சைக்கிளை எடுத்துக் கொண்டு, ஆஸ்பிடலை நோக்கி விரைந்தேன். அங்குதான் நான் அவளை முதன்முதலில் பார்த்தேன். சுடிதார் போட்டிருந்தாள், அநாயாசமாய் அவள் உடலில் துப்பட்டா பரவியிருந்தது, நீண்ட தலைமுடி.
நான் வருவதைப் பார்த்தும் என்னிடம் வந்தவள், "சார், ஒரு ஆக்ஸிடண்ட் ஆயிருச்சு, நீங்க உதவ முடியுமா? உங்களுக்கு AB-ve வகை இரத்தமா?" என்று ஆங்கிலத்தில் கேட்டாள். சாதாரணமாக என்னைப் பார்த்தால், சௌத் இண்டியன் போல் இருக்காது. என்னைப் பலரும் நார்த் இண்டியன் என்றே நினைப்பார்கள். அதற்கேற்றது போல் நானும் குர்தா பைஜாமாதான் போடுவேன். அதனால் அவள் ஆங்கிலத்தில் பேசியது எனக்கு வியப்பளிக்கவில்லை. அவள் வேறு கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டிருந்தாள்.
நான் பதில் சொல்வதற்குள் அங்கு வந்த நர்ஸ், "வாங்க ரவி, உங்களுக்கு ஃபோன் பண்ணிக்கிட்டே இருக்கேன். பிடிக்கவே முடியலை. கம்பௌண்டரை வீட்டுக்கு அனுப்பலாம்னு பார்த்தேன். டிவியில் ஃபிளாஷ் நீயூஸ் பார்த்துட்டு வந்திருவீங்கன்னு தெரியும். அதனால வெயிட் பண்ணினேன். கொஞ்சம் சீரியஸ். போகலாமா?"
நான் அந்த சுடிதார் பெண்ணிடம் எதுவும் பதில் சொல்லாமலே நர்ஸ் உடன் வந்துவிட்டேன். எனக்குப் பழக்கமான விஷயம் தான் இரத்தம் கொடுப்பது. அதனால் நானாகப் போய் கட்டிலில் படுத்துக்கொண்டு என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். ஐந்து நிமிடங்களில் எல்லாம் ஏற்பாடுகள் முடிந்து, என் இரத்தம் அந்த ப்ளாஸ்டிக் பையினுள் சென்றுகொண்டிருந்தது. மெஷினுடன் இணைக்கப்பட்ட அந்தப் பை மேலும் கீழுமாய் ஆடத்தொடங்கியது. அது எனக்கு மிகவும் பிடிக்கும். எப்பொழுதும் அந்த அரைமணி நேரத்தில், நான் என் வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பேன். ஆனால் இன்று அந்தச் சுடிதார் பெண்ணைப் பற்றிய எண்ணம் வந்துகொண்டிருந்தது.
நான் நர்ஸிடம், "நர்ஸ், யாருக்கு ஆக்ஸிடெண்ட்?"
"சின்னப் பொண்ணுங்க ரவி, எட்டு வயசுதான் இருக்கும். வெளியில் நிற்குதே அந்தப் பொண்ணுதான் பார்த்துட்டு இங்க எடுத்துட்டு வந்துச்சு. கேக்க மறந்திட்டேன் சாப்பிட்டுட்டீங்கள்ல?"
"ம்ம்ம், சாப்டுட்டேன்." நான் மெதுவாய் அவளைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன். யாராய் இருக்கும். இதுதான் முதல் முறை ஒரு பெண் என் கவனத்தை திசை திருப்பியது.
"ரவி முடிஞ்சிருச்சு போலிருக்கே, ஒரு நிமிஷம் இருங்க மேங்கோ ஜூஸ் கொண்டு வந்திர்றேன்."
கையில் ஊசிக்காயம் மறையப் போடப்பட்டிருந்த ப்ளாஸ்டருடன் வெளியே வந்தேன். வளாகத்தில் குறுக்கும் நெடுக்குமாய் அவள் நடந்து கொண்ருந்தாள்.
என்னை பார்த்ததும் அருகில் வந்தவள், "சார் ரொம்ப நன்றி, நீங்க தமிழா, பார்க்கத் தெரியவேயில்லை. அதனால் தான் ஆங்கிலத்தில் பேசிவிட்டேன். மன்னிக்கவும்." சொல்லிவிட்டு எதையோ மறந்தவள் போல் முகத்தை மாற்றிக் கொண்டு "மறந்துட்டேன், என் பெயர் மதுமிதா," சொல்லி கையை நீட்டினாள்.
ஆச்சர்யமாய் இருந்தது தமிழகத்துப் பெண்கள் பொதுவாய் ஆண்களுடன் கை குலுக்குவதில்லை. ஆச்சர்யத்தைக் காட்டாமல் நானும் கைகுலுக்கிவிட்டு, "என் பெயர் ரவிவர்மன், ரவின்னு கூப்பிடுவாங்க." என்றேன்.
"ரவிவர்மன்னா ஓவியமெல்லாம் வரைவீங்களா?" சொல்லிவிட்டுச் சிரித்தாள். அந்தக் சூழ்நிலையிலும் கூட அவளால் சிரிக்க முடிந்தது, ஆச்சர்யமாயிருந்தது. அது ஒரு நிமிடம்தான் நீடித்தது பின்னர் பழைய நிலைக்கே வந்துவிட்டாள். அப்பொழுதுதான் பார்த்தேன் அவள் சுடிதாரில் இரத்தக்கறைகள் இருந்ததை.
நான் அவளிடம், "நீங்கள் வீட்டிற்குப் போய் உடை மாற்றிவிட்டு வருவதாய் இருந்தால் வாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்"
"நர்ஸ் என்னை இங்கே இருக்கச் சொன்னார்கள்."
"பரவாயில்லை நான் நர்ஸிடம் பேசிக் கொள்கிறேன். நீங்கள் போய் மாற்றிவிட்டு வாருங்கள்." அவள் சென்று சிறிது நேரத்தில் வேறு சுடிதார் போட்டுக்கொண்டு வந்திருந்தாள். அவள் முடியை பார்த்ததும் இந்த இரவிலும் குளித்துவிட்டு வந்திருக்கிறாள் எனத் தெரிந்தது. இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும் அவள் திரும்பிவர, அவள் வந்த சிறிது நேரத்தில் எல்லாம் அந்தக் பெண் குழந்தையின் பெற்றோர் வந்து, அவளிடம் நன்றிசொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் விடை பெற்றுக்கொண்டு திரும்பவும் வீட்டிற்கு வந்துவிட்டேன். அவளைப்பற்றி மறந்தும்விட்டேன், அதுதான் என் வழக்கமும் கூட.
அடுத்த வாரம் லைப்பரரியில், யாரோ கூப்பிட்டதைப் போலிருக்கவும் திரும்பினேன். அந்தச் சுடிதார் பெண்தான் நின்று கொண்டிருந்தாள். பெயர் என்னவோ சொல்லியிருந்தாள், ஞாபகம் வரவில்லை.
"மறந்துட்டீங்களா ரவி, நான் மதுமிதா."
"ஆமாம் சாரி, என் பெயரை ஞாபகம் வைத்திருக்கிறீர்களே?"
"நான் சாதாரணமாகவே பெயர்களை மறப்பதில்லை, அதுவும் அந்த ராத்திரியில் தேவதை போல் கூந்தல் பறக்க வந்து ரத்தம் கொடுத்துவிட்டு, எனக்காக இரண்டு மணிநேரம் காத்திருந்த உங்கள் பெயரை மறக்க முடியுமா? சொல்லப்போனால் உங்களைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் இங்கே சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. நீங்கள் இங்கேதான் வேலை பார்க்கிறீர்களா?"
என்னுடைய போனிடைலை அவள் அழகாக விமர்சித்ததை ரசித்தேன். அன்றிரவு அவசரம் ஆதலால் ரப்பர் பேண்ட் போடாமல் வந்திருந்தேன்.
"இல்லீங்க நான் இங்கே வேலை பார்க்கவில்லை, ஏன் கேட்கிறீர்கள்?"
"இல்லை, நான் லைப்பரரியன் கிட்ட ஒரு புத்தகத்தைப் பற்றிக் கேட்டேன். அவங்க உங்களைக் காட்டி உங்களிடம் கேட்கச் சொன்னார்கள். குர்தா பைஜாமா, போனிடைல் பார்த்ததும் நீங்களா இருக்குமோன்னு நினைச்சேன். கடைசியில் நீங்களேதான்."
"என்ன புத்தகம்?"
"சில நேரங்களில் சில மனிதர்கள், ஜெயகாந்தனுடையது."
"அப்பிடியா, அதுதான் என்னிடம் கேட்கச் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் புத்தகம் என்னிடம் தான் இருக்கிறது. நாளை வாங்கிக் கொள்ளுங்கள்."
அவள், நான் கையில் வைத்துள்ள புத்தகங்களை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
"லைப்ரரியன் கொஞ்சம் வயசானவங்க, அதனால தினமும் அரைமணிநேரம் அவங்களுக்கு உதவ இங்கே வருவேன். புத்தகங்களையெல்லாம் அடுக்கிக் கொடுத்துவிட்டுப் போவேன்." நான் சொல்லிவிட்டு கையில் இருக்கும் புத்தகங்களை ரேக்கில் அடுக்கத் தொடங்கியிருந்தேன்.
"சரிங்க ரவி, அப்ப இன்னொரு நாள் பார்ப்போம்!" அவள் சொல்லிவிட்டுப் போனாள். இப்படித்தான் நாங்கள் முதன்முதலில் பார்த்துக் கொண்டது.
(தொடரும்...)
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
பெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்க...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...