In சிறுகதை

சில நேரங்களில் சில காதல்கதைகள்

சில சமயங்களில் சூழ்நிலைகளின் கைதியாகி நாம் கொட்டிவிடும் வார்த்தைகளை அள்ளுவதென்பது இயலாத ஒன்றாகிவிடுகிறது. அதைப்போலத்தான் அன்றும் நடந்தது. சராசரி குடிமகனைக் காட்டிலும் அனைத்து விஷயங்களுமே, சற்று அதிகமாகவே, சின்னவயதிலேயே கிடைத்துவிட்ட கர்வம் அதிகாரமாய் ஒட்டிக்கொண்டு விலகமறுக்கிறது. பணம், பெயர், புகழ் கொடுக்கும் போதை பலசமயங்களில் நமது கட்டுப்பாட்டில் இருப்பதைப் போன்ற ஒரு பாவனையைக் கொடுத்தாலும் பெரும்பாலும் கட்டுக்குள் அடங்குவதில்லை. அது மற்றவர்களுடைய தவறுகளை, இயலாமைகளைப் பார்க்கும் பொழுது தறிகெட்டு ஓடி தன்னைக் காட்டிக்கொள்ள முயல்கிறது. அதை அடக்கியாள்வதென்பதே பெரும்பாடாய் இருக்கிறது. இந்த விஷயம் புரியாமல் இருந்துவிட்டாலோ பிரச்சனையேயில்லை. ஆனால் என் நேரம், நான் செய்யும் தவறுகள் பெரும்பாலும் சிறிது நேரத்திலேயே புலப்பட்டுவிடுகிறது.

அன்றும் அப்படித்தான், வேலை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளின் மனவழுத்தத்தில் நான் இருந்த பொழுது இதே போல் மனம் காட்டாறு போல் செயல்பட்டுவிட்டது. எங்கள் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்தாள் அவள் எனக்கு கீழ் பணிபுரிவதற்காக, இரண்டுவருட அனுபவம் இருப்பதாய்ச் சொல்லி. அவளும் தமிழ் தெரிந்த பெண் என்பது என் மனதில் எந்தஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கணிணி சம்மந்தப்பட்ட எங்கள் வேலைகளில் மொழி எந்த உருவகத்தையும் பெற்றிருப்பதில்லை. நான் கொடுத்த மிகச்சுலபமான வேலையை முடிக்காமல் இருந்த அவளை என் பிரச்சனைகள் நாயாய்த் துரத்த நான் சீறினேன்.

“என்னங்க இது, எக்ஸ்பீரியன்ஸ் ஆளுதானே நீங்க. சின்ன ஃபங்ஷனாலிட்டி இதைக்கூட செய்யாம நாள் பூரா உக்காந்திருக்கீங்க. முடிச்சிட்டீங்களா முடிச்சிட்டீங்களான்னு உங்க பின்னாடியேவா அலைஞ்சிக்கிட்டிருக்க முடியும். இன்னும் நாலு லைன் கூட கோடிங் எழுதலை. உங்கப்பிரச்சனையை நான் பார்த்துக்கிட்டிருந்தா, என் பிரச்சனையை யார் பார்ப்பா?”

நான் கொடுத்த வேலையை சிறிது செய்திருந்தால் கூட மனம் சற்று சமாதானமாயிருக்கும் தொடங்காமலேயே இருந்தது மிகப்பெரிய பிரச்சனையாய்ப் பட்டது. நான் அத்துனை கேட்டும் பதில்பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தால் எரிச்சலாய் வந்தது. இவர்கள் வேலை செய்ததாக பொய் சொல்லி வந்துவிடுகிறார்கள். பின்னர் நம் உயிரை வாங்குகிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த என்னை அவளின் மௌனம் இன்னும் வேகப்படுத்தியது.

“ஏன் இன்னும் பண்ணாம இருக்கீங்க, பதில் சொல்லுங்க?”

மேலும் மேலும் கோபம்தான் வந்தது, அவளுடைய கண்கள் கலங்குவதைப் பார்த்தபின்பும். ஆண் பெண் என்ற பாகுபாடு எங்கள் வேலையில் கிடையாது. அவள் செய்யவேண்டிய வேலை முடியாமல் நான் அந்த இடத்தைவிட்டு போகமுடியாது. அவள் செய்கிறாளோ இல்லையோ நான் செய்தாக வேண்டிய கட்டாயம், வெள்ளைக்காரனுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் இரவு எத்துனை மணியானாலும் செல்லிடைப்பேசி உயிரை வாங்கிவிடுவான். வெள்ளிக்கிழமை வேறு என் கோபத்தை அதிகப்படுத்தியது. ஐந்து நாள் வேலை முடிந்து நிம்மதியாக இருக்கவேண்டிய நேரத்தில் இவளால் பிரச்சனை.

“எனக்கு எப்படி பண்றதுன்னு தெரியாது.” அவள் சொல்ல,

“என்னது தெரியாதா, எக்ஸ்பீரியன்ஸ் தானே நீங்க. இந்த சின்னவிஷயம் கூட பண்ணத்தெரியாமலா இரண்டு வருஷம் வேலைபாத்தீங்க.” நான் இன்னும் சப்தமாய்க்கத்த, அவள் என்னவோ பதில் சொல்ல வந்தாள், இன்னும் கோபம் அதிகமாகி,

“What the F***, Get the hell out of here.”

சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு வேகமாக சென்றுவிட்டேன். அவளுடைய வேலையையும் செய்துவிட்டு, அந்த வாரத்தின் திட்டத்தை குறையில்லாமல் நிறைவேற்றிவிட்டு நான் அலுவலகத்தைவிட்டு வெளியேறிய பொழுது விடிந்திருந்தது. மார்கழி மாதக் கடுங்குளிர் வேறுவாட்டியெடுக்க வண்டியை ஓட்டிச்செல்வது பெரும்பாடாய்இருந்தது. அந்த அசதி தந்த தூக்கத்தில் அன்று மதியம் வரை விழிப்புவரவில்லை. ஆனால் விழிப்புவந்ததிலிருந்தே நான் அவளிடம் சொன்ன அந்த வார்த்தை தான் மீண்டும் மீண்டும் நினைவில்வந்தது. எங்கள் தலைமுறை மக்களைப்போலவே எனக்கும் அந்த நான்கெழுத்து அமேரிக்க கெட்டவார்த்தை பிரயோகம் சிறிது அதிகமாய் இருந்தது. ஆனால் எக்காரணம் கொண்டும் வேலைசெய்யும் இடத்தில் உபயோகப்படுத்தியதில்லை. அது சரியானதொன்று கிடையாது.

ஆனால் என்னுடைய பெண்தோழி முதற்கொண்டு நாங்கள் வெளியில் உபயோகப்படுத்தும் வார்த்தைதான். வேலை பார்க்கும் இடத்தில் உபயோகப்படுத்தியது தான் தவறு, அதுவும் ஒரு பெண்ணிடம். அவள் பக்கம் தவறே இருந்தாலும் அந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை நானும் அவளும் ஏன் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட அனைவரும் உடன்வேலை செய்பவர்கள்தான், அதைத்தவிர வேறொன்றுமில்லை. இந்தப்பிரச்சனையால் அந்த வாரயிறுதி வருத்தத்திலேயே கழிந்தது. உணவகத்திற்கு அழைத்துப்போக வந்திருந்த கீதாவிடம் இந்த விஷயத்தைச் சொல்ல பலமாய்ச் சிரித்தாள்,

“போடே நாளைக்கு உன்மேல் ஹாரஸ்மண்ட் கேஸ் போடப்போறா, உன்னைய வேலையை விட்டுத் தூக்கப்போறாங்க.”

அவளுக்கு அனைத்தும் விளையாட்டுத்தான், ஐஐடியில் படிப்பை முடித்தவள். நானும் அவளும் இந்த நிறுவனத்தில் ஒரே நாளில் வேலையில் சேர்ந்திருந்தோம். அன்றிலிருந்தே பழக்கம். இரண்டாண்டுகளாய் கொஞ்சம் நெருக்கமாய். அவளை வைத்துத்தான் அந்தப்பெண்ணிடம் பேசச்சொல்ல வேண்டுமென நினைத்திருந்தேன்.

“இங்கப்பாரு நீ சிரிச்சா சிரிச்சிட்டுப் போ, ஆனா நாளைக்கு நீதான் போய் அவளை சமாதானப்படுத்தணும். ப்ளீஸ், ப்ளீஸ், தமிழ்நாட்டு பொண்ணு என்ன பண்ணுவான்னு யாருக்குமே தெரியாது.”

கீதாவின் துடுக்குத்தனம் தெரிந்திருந்தும் இந்த விஷயத்தைச் சொன்னது பெரியத் தவறாய்ப் போய்விட்டது. திங்கட்கிழமை நேராய் அந்தப்பெண்ணிடம் சென்றவள், அவள் பொய் சொல்லி இந்த வேலையில் சேர்ந்ததை நான் கண்டுபிடித்துவிட்டதாகவும் நிறுவனத்தில் அதை சொல்லிவிடப்போவதாகவும் மறைக்கவேண்டுமென்றால் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசவேண்டுமென்றும் சொல்லி, நாங்கள் உணவருந்தும் இடத்திற்கு இவளை வரச்செய்திருந்தாள். முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் புரிந்ததும் கீதாமேல் கோபம்தான் வந்தது. பின்னர் அவளிடம் நான் சொன்ன வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு, உடனடியாக இரண்டு வருடங்கள் வேலைசெய்திருந்தால் என்னென்ன தெரிந்திருக்குமோ அதையெல்லாம் தெரிந்துகொள்ளச் சொல்லி கண்டிப்பாகச் சொல்லியிருந்தேன்.

ஒருவழியாக இரண்டு மூன்று மாதங்களில் ஓரளவு விஷயங்களைத் தெரிந்துகொண்டிருந்தாள் வானதி. நானும் ஏதோ தமிழிற்கே நன்மை செய்வதைப் போல் நினைத்துக்கொண்டு அவளை வேறு ப்ரோஜக்டிற்கு மாற்றாமல் என்னுடனே வைத்துக் கொண்டிருந்தேன். இது போன்ற விவகாரங்களில் தெலுங்கு மக்கள் தான் எங்கள் துறையில் சிறந்தவர்கள். நான் பெரும்பாலும் இதைச் செய்ததில்லை ஏனோ ஒரு சின்ன உறுத்தல் அடிமனதில் இருந்ததால் அப்படிச்செய்து கொண்டிருந்தேன். முதலில் என்னிடம் நேரடியாய் பேசமாட்டாள், கீதாதான் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். பின்னர் சில நாட்கள் இரவில் நாங்கள் மட்டும் வேலை செய்ய நேரும் பொழுதுகளில் நான் கேட்காமலேயே காப்பி எடுத்துக்கொண்டு வந்து தருவாள். அப்பொழுது நன்றி சொல்ல சிறிது பேச்சுவார்த்தை உண்டானது.

“வாசு நீங்களும் கீதாவும் காதலிக்கிறீங்களா?”

இந்தக் கேள்வி எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை வரவழைத்தது. அதற்கான பதில் எவ்வாறானாலும் அதைப்பற்றி கேட்க அவளுக்கு உரிமை கிடையாது. நம் ஆட்களின் பாதிப்பு இது. மேற்கத்தியர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் அரசியல்வாதிகள் பற்றியோ தங்கள் அரசியல் நிலைப்பாடுபற்றியோ வரும் கேள்விகளுக்கு நேரிடையாக பதிலளிப்பார்கள். ஆனால் தங்கள் சொந்த வாழ்க்கையைப்பற்றி வரும் கேள்விகளுக்கான விடையை தரவேமாட்டார்கள். ஆனால் நம்மக்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை மறைப்பார்கள், சொந்த வாழ்க்கையைப்பற்றி வெளிப்படையாக பேசுவார்கள். ரொம்பக்காலம் மேற்கத்திய பழக்கவழக்கங்களில் மூழ்கிவிட்டதால் எனக்கு அந்தக் கேள்வி ஆச்சர்யத்தையே அளித்தது.

“இல்லை புரியலை, அதைத் தெரிஞ்சிக்கிட்டு நீ என்ன பண்ணப்போற.”

“ப்ளீஸ் வாசு, தப்பா நினைக்காதீங்க ஒரு கியூரியாஸிட்டி தான். ஒன்னாவே வண்டியில வரீங்க ஒன்னாவே போறீங்க. சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் அப்படியே இருக்கிறீர்கள். அதான் கேட்டேன் காதலிக்கிறீங்களா, கீதாவை கல்யாணம் பண்ணிக்கப்போறீங்களான்னு.”

இன்னும் ஆச்சர்யத்தையே வரவழைத்தது அவள் சொன்னது, எங்களின் நடவடிக்கையை கவனிப்பது மட்டுமல்லாமல் அதை என்னிடமே சொல்லி கேள்வி வேறு கேட்டது. ஆனால் என்னவோ சொல்லவேண்டும் போல் தோன்றியதால்,

“வானதி, நாங்க காதலிக்கிறோம்னு சொல்லமுடியாது. என்னோட கேர்ள் ப்ரண்ட் அவ அவ்வளவுதான். பின்னாடி கல்யாணம் செய்தாலும் செய்து கொள்வோம், அதைப்பற்றி உறுதியாய் சொல்லமுடியாது.”

நான் சொன்னது வானதிக்கு வேண்டுமானால் ஆச்சர்யத்தை அளிக்கலாம் ஆனால் உண்மை அப்படித்தான். அனால் அவளை திருமணம் செய்து கொள்வதில் எனக்கோ இல்லை என்னைத் திருமணம் செய்து கொள்வதில் கீதாவிற்கோ பிரச்சனைகள் கிடையாது. ஆனால் நாங்கள் அதைப்பற்றி பேசியதில்லை. இதை வேண்டுமானால் சாப்ட்வேர் காதல்னு வைத்துக்கொள்ளலாம். ஆனால் உண்மை அதுதான்.

வானதி எந்த நேரத்தில் கேட்டாளோ, கீதாவிற்கு அயல்நாட்டில் மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது. அன்றைக்கு இரவு அவள் இந்த விஷயத்தைச் சொல்லி என் கருத்தை கேட்டபொழுது நான், அந்த வாய்ப்பின் சாதக பாதகங்களை சொல்லி, அப்பொழுதைய சூழ்நிலையில் அவளுக்கு அதுதான் நல்லது என்றும் விவரித்து அவளுடைய பயணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் முடித்துக்கொடுத்து அனுப்பிவைத்தேன். அதன்பிறகு முதல் இரண்டு நாட்கள் கீதா இல்லாத வித்தியாசம் தெரிந்தது. சிறிது நாட்களில் இந்த வித்தியாசம் வானதியால் நிரப்பப்பட்டது. தவறான அடிப்படையில் கிடையாது உணவருந்தும் வேளையில் உடனிருப்பவளாக, வேலைக்கு வந்து செல்லும் பொழுது உடன் பயணம் செய்பவளாக, எங்கள் வேலையின் மனவழுத்தத்தை போக்கும் வகையில் இடையிடைய உரையாடுவதற்கு நல்ல தோழியாகவும் அந்த இடைவெளி கீதா போனதால் வந்த வித்தியாசம் நிரப்பப்பட்டது. அந்த வித்தியாசம் பிறகு காதலாகவும் மலரலாம் திருமணமாகவும் முடியலாம் ஆனால் நிச்சயம் கிடையாது.

ஆனால் அந்த நட்பு தேவைப்படுகிறது, நாங்கள் இருக்கும் சூழ்நிலையும் அதை வழிமொழிகிறது. என்னால் அந்த நட்பை விவரிக்கவோ இல்லை விமர்சிக்கவோ இயலவில்லை. நட்பிற்கும் காதலுக்கும் திருமணம்செய்து கொள்வதற்கும் இடைப்பட்ட ஒரு பரிமாணத்தைத்தேடி நாங்கள் நகன்றுகொண்டிருக்கிறோம். இதை இந்த சூழ்நிலையை அதன் தேவையை அனுபவித்து பார்க்காமல் உணரமுடியாது.

Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts