கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia
இந்தச் சமயத்தில் ஒரு மிக முக்கியமான நிகழ்வு நடந்தது அது நான் எட்டாவது படித்து முடித்த பொழுது மே மாத விடுமுறைக்காக டெல்லிக்குச் சென்றது. மற்ற விஷயங்களை விடுத்து கிரிக்கெட் சம்மந்தமான முக்கியமான நிகழ்வென்றால் அது நான் என் மாமாக்கள் இருவருக்கும் பந்து வீசியது. இருவரும் உண்மைக் கிரிக்கெட் ;) ஆடியிருந்தவர்கள். அதாவது மேட் எல்லாம் போட்டு விளையாடும் டிவிஷன் மேட்ச்சஸ். இதனால் இருவருக்குமே டெக்னிக்கலாக கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டுமென்று தெரியும்.
அங்கே விளையாடிய பொழுதுதான், Front foot, Back foot, பந்து வீசுபவர்களின் கைகளைக் கவனிப்பது, பந்து கைகளில் இருந்து வெளியேறியது பந்தை கவனிப்பது, பேட்டை எப்படி விளையாடப் போகிறோம் என்பதற்கிணங்க ஹேண்டிலைப் பிடிப்பது(ஸ்ட்ரோக் ஆடுவதற்கும் ஷாட்ஸ் ஆடுவதற்கும் வெவ்வேறு ஸ்டைலில் பேட்டைப் பிடிக்க வேண்டும்) என நிறைய விஷயங்களை ப்ராக்டிகலாக இம்ப்ளிமெண்ட் செய்ய சொல்லித் தந்தார்கள். அதுவரை குருட்டாம் போக்கில் வந்த பந்தை அடிப்பது என்ற நிலையில் இருந்த என்னை அடுத்த அடிக்கு உயர்த்தியது அங்கே தான். எனக்கு என் மாமாக்களுடன் இன்றும் கிரிக்கெட் விளையாடப் பிடிக்கும். இன்று நான் ஆப்-ஸெட்ம்புக்கு அந்தப் பக்கம் நாலு இஞ்சில் போடப்படும் பந்தை லாவகமாக தடுத்தாடுவார்கள் என்று நன்றாகத் தெரியும் ஆனால் வேலை காரணமாக நாங்கள் மூவரும் ஒரு இடத்தில் இருக்கும் வாய்ப்புக்கள் குறைந்ததில் நான் அனுபவிக்கும் வருத்தத்தில் இதுவும் ஒன்று.
இதையெல்லாம் விடவும் முக்கியமான ஒரு விஷயம் மாமா வைத்திருந்த SG பாட் ஒன்றை என்னிடம் தந்தார் நான் டெல்லியில் இருந்து புறப்படும் பொழுது. நான் என் பகுதியில் கேப்டன் ஆனேன் ;). நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த பேட்களுடன் ஒப்பிடக் கூட முடியாது அந்த பேட்டை, கொஞ்ச நாள் யாருக்கும் கொடுக்காமல் நான் மட்டும் தான் விளையாடி வந்தே அந்த பேட்டில் ஆனால் அது பல காரணங்களுக்காக சரிவராமல் போக எல்லோரும் உபயோகிக்கத் தொடங்கினார்கள். சில டோர்னமென்ட் விளையாடுவதற்கு பெரிய டீமில் இருந்தெல்லாம் பேட் கேட்டு வருவார்கள்.
இப்பத்தான் நான் அப்பா ஸ்கூலில் இருந்து வேறு ஸ்கூலுக்கு வந்தது, ஆனால் இரண்டு பள்ளிகளுமே ஒரு மேனேஜ்மென்ட்-ஆல் நடத்தப்படுபவை. நானூறு மீட்டர் இடைவெளி இருக்கும் இரண்டு பள்ளிகளுக்கும் அவ்வளவுதான் விஷயம் என்றாலும். ஸ்கூல் அதையடுத்து ஒரு ரோடு ரோட்டைத்தாண்டினால் "நேரு ஸ்டேடியம்". இது போதுமே ஆனால் இன்னொரு விஷயமும் இருந்தது, "நேரு ஸ்டேடியம்" தாண்டி கேர்ல்ஸ் ஹைஸ் ஸ்கூல் ;).
பள்ளி விடும் 4.15க்கு முன்னமே கிளம்பிப் போய் கிரவுண்டில் குச்சி நட்டு வைச்சு, அந்தப் பெரிய கிரவுண்டில் நல்ல பிச்சா விளையாடுவதற்கு தேர்ந்தெடுத்து வேறுயாரும் விளையாடாமல் பார்த்துக்கொள்ளவென்றே ஒருத்தன். அவன் 4.00 மணிக்கெல்லாம் கிளம்பிடுவான் பாத்ரூம் வருகிறதென்று. நாங்கள் அவன் பையையும் எடுத்துக் கொண்டு கிரவுண்டிற்கு வந்துவிடுவோம். அப்புறமென்ன இரண்டு இரண்டு பேரா அரைமணிநேரத்திற்கு ஒரு தடவை குறையத் தொடங்க. கடைசி இரண்டு மூன்று ஆட்கள் வரும் வரை விளையாடிவிட்டு பேட் பாலை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேருவோம். அந்த கிரவுண்டில் மொத்தம் எங்களைப் போல் இருபது டீம் விளையாடிக் கொண்டிருக்கும்.
இது கிட்டத்தட்ட அந்த நான்கு வருடங்களில் தொடர்ச்சியாக நடந்தது. அப்பல்லாம் டீம் மாட்ச் நடக்கும் 9A, 9B, 9C என மூன்று பிரிவுகள் ஆங்கில வகுப்புக்கள். அப்புறம் 9D ல் தொடங்கி 9M வரைக்கும் தமிழ் பிரிவுகள். ஒவ்வொரு வகுப்பிற்கும் 40 - 45 மாணவர்கள் இருப்பார்கள், அதனால் குறைந்த பட்சம் 11 பேர் பிரச்சனையே இல்லை. எல்லா நாட்களும் மேட்ச் தான், மதியம் இன்டர்வெல்லில் இதற்கென்றே இருக்கும் மாணவர்கள் போய் எதாவது ஒரு க்ளாஸிடம் மேட்ச் கேட்டு வருவார்கள். அப்படி டீம் மாட்சா இருந்தால் சென்டர் பிச்சில் விளையாடுவோம்.
பொதுவாக சென்டர் பிச் காலியாகத்தான் இருக்கும், இதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று பெரிய மைதானம், இருபத்திரெண்டு பேர் விளையாடாவிட்டால் சரிவராது அதுமட்டுமில்லாமல் அந்த சென்டர்பிச் பௌலிங் பிச் அதனால் அதிக ரன்கள் வராது. எட்டு ஓவர்கள் இருபத்தைந்து ரன் அடிப்பதுவே பெரிய விஷயம் அதனால் கிளாஸிக் கிரிக்கெட் போல் இருக்குமென்பதால் அவ்வளவு சுவாரசியமாகயிருக்காது. ஆனால் க்ளாஸ் மேட்ச் என்று வந்துவிட்டால் செண்டர் பிச் தான். அந்தக் காலத்தில் எல்லாம் அப்பா என்னைத் தேடவேண்டுமென்றால் நேராக ஒன்றிரண்டு கிரிக்கெட் கிரவுண்டிற்கு போய்த் தேடி கண்டுபிடித்துவிடுவார்.
அந்தக் காலத்தில் எல்லாம் நான் ஆல்-ரவுண்டர், கொஞ்சம் வித்தியாசமான. பெரும்பாலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர்(நான் பௌலிங் செய்யாத பொழுது), அப்புறம் பௌலர். எட்டு/பத்து ஓவர் மேட்சில் இரண்டு ஓவர்கள் தான் கிடைக்கும். அந்த இரண்டு ஓவர்களும் நன்றாகப் போட்டால் மூன்றாவது கிடைக்க வாய்ப்புண்டு எனென்றால் ஒரு பத்து ஓவர் மேட்சில் ஒரு ஆள் தான் மூன்று ஓவர் போடலாம்.
அதுமட்டுமில்லாமல் விக்கெட் கீப்பிங் ரொம்பவும் முக்கியமான ஒன்று. அதனால் அதுவும் நானே, அப்பல்லாம் கண்ணாடி கிடையாது. ஸ்டெம்புக்கு ரொம்பவும் அருகில் நின்று கீப்பிங் செய்வேன். சிலகாலம் ஒரு அணிக்கு அவர்களிடம் இருந்த ஒரு பேஸ் பவுலரின் பந்துகளை நான் கீப் செய்கிறேன் என்பதற்காகவே குறைந்த வயதில் டோர்னமெண்ட் விளையாடியிருக்கிறேன். எப்படியாவது லெக் அம்ப்பயரை ஏமாத்தி மேட்சுக்கு ஒரு ஸ்டெம்பிங் வாங்கிவிடுவேன் ;). அப்புறம் பௌலிங், முதலில் எங்கள் அணி பௌலிங் செய்தால் நான் தான் முதலில் வீசுவது. முதல் ஸ்பெல் முடிந்து எட்டாவதோ பத்தாவதோ ஓவரை நான் தான் வீசுவேன்.
1500 ஓடுவதாலும் வீட்டில் தண்ணி தெளித்து விட்டிருந்ததாலும் என்னால் அந்தக் காலக் கட்டத்தில் நிறைய கிரிக்கெட் விளையாட முடிந்திருந்தது. பின்னர் எனக்கென்று ஒரு டீம் இருந்தாலும் பிற அணிகளுக்காகவும் விளையாட போய்விடுவேன். கூத்தைப்பார் டோர்னமெண்ட், செக்யூரிட்டி காலனி டோர்னமெண்ட், எழில்நகர் டோர்னமெண்ட் என சுத்துவட்டாரத்தில் நான் விளையாடாத டோர்னமெண்ட்களே ஒரு காலத்தில் இல்லை என்பது போல் ஒன்று கிரிக்கெட் விளையாடுவது இல்லை கிரிக்கெட் பற்றி பேசுவது இது மட்டும் தான் வாழ்க்கை அப்பொழுது.
+1, +2 விலும் அப்படித்தான். நான் எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண் வாங்காததற்கு இதுவும் ஒரு காரணம். மற்ற காரணம் தான் முன்னமே தெரிந்திருக்குமே.
அடிக்கிற மழை கொளுத்தும் வெய்யில் என எதற்காகவும் நாங்கள் விளையாடுவதை நிறுத்தியதில்லை. இதுவரையான சமயத்தில் நான் ரொம்பவும் பேமஸான பௌலர் தான் பேட்டிங் பிஞ்ச் ஹிட்டர், ஏனென்றால் டெக்னிக்கலாக தெரிந்திருந்தாலும் 8 ஓவர் மேட்சில் நமக்கு கிடைக்கும் ஒன்றிரண்டு ஓவர்களை ஸ்ட்ரோக் பண்ணியெல்லம் ஆடினால் அடுத்த மேட்சில் ஆட இடம் கூட கிடைக்காது. அதனால் ஓப்பனிங் பிஞ்ச் ஹிட்டர், ஷாட்ச் பிச் டெலிவர் வந்தால் போதும் ஒரு போர் அடித்துவிடுவேன் பெரும்பான்மையான சமயங்களில் என்பதால் என் பள்ளி அணிக்காக பெரும்பாலும் ஓப்பனிங் மட்டுமே விளையாடுவேன். சிலசமயம் ஆப்பொனண்ட் ரொம்பவும் குறைவான ரன்கள் என்றால் நான் இறங்க மாட்டேன்.
ஆனால் இதையெல்லாம் மாற்றிப் போட்ட கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன், +2 படிக்கும் பொழுது. பௌலிங் கிடையாது ஒன்லி த்ரோ தான், ஒரு சதுரம் போல் இருக்கும் இடம் தான் பிச். வெறும் ஆப் சைட் மட்டும் தான். கட்டத்திற்கு வெளியில் தூக்கி அடித்தால் அவுட். அது ஒரு அற்புதமான கிரிக்கெட். ஓவர் கணக்கு கிடையாது அவுடாகும் வரை விளையாடலாம். ஆனால் அந்த சின்னக் கட்டத்திற்குள் இருக்கும் பீல்டர்கள் கைகளில் சிக்காமல் ரன் அடிப்பது என்பது பெரிய விஷயம். ஆனால் சில பேர் வேண்டுமென்றே ஸ்ட்ரோக் வைக்கிறேன் பேர்வழியென்று ஆரம்பித்ததால் - unlimited ஓவர்கள் விளையாட முடியாமல் போனது. அதனால் ஒரு கணக்கிற்கு 15 ஓவர்கள்.
பிரம்மாதமான ஆஃப் சைட் ஆட்டம் கைக்கு வந்தது அப்பொழுது தான். அதேபோல் லெக் ஸ்பின் விளையாட வந்ததும்(பிற்காலத்தில் கல்லூரி அணிக்காகவும், கம்பெனி அணிக்காகவும் ஆடிய பொழுது ஸ்பின்னர்ஸை அடிக்க இந்த ஆட்டம் உதவியது.) அப்பொழுதுதான். ஷென் வார்னேவின் மைக்கேல் ஹோல்டிங்கிற்கான பந்து தெரிந்திருக்கும். அதெல்லாம் என்ன பிரம்மாதம் த்ரோ என்பதால் வெறும் முத்தையா முரளீதரன்களும் ஷேன் வார்னேக்களும் தான் அங்கே. அதுவும் இல்லாமல் நிறைய வெரைட்டி வேறு, ஒரே ஓவரில் பேஸ், பவுன்ஸ், லெக் ஸ்பின், ஆப் ஸிபின், புல்டாஸ் என நிறைய போடுவார்கள். இந்த ஆட்டங்களில் எத்தனை 50 அடித்திருப்பேன் நினைவில் இல்லை. மாமாக்கள் சொல்லிக் கொடுத்த டெக்னிக் இங்கே நிறைய உதவியது.
அடுத்த பாகம் போடுகிறேன், இப்பவே நிறைய ஆச்சுது.
கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia - 1
பூனைக்குட்டி
Saturday, May 05, 2007

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
காஷ்மீர் போவதென்று முடிவு செய்து டிக்கெட்கள் அனைத்தும் புக் செய்தபிறகு மனம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. டெல்லியில் இருந்து பேசாமல் குல்லு மணால...
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
It was late 2010, Chennai drowning in 2G rumors and the sticky heat of a city faking it wasn’t falling apart. I’d been plotting this night f...
நண்பரே,
ReplyDeleteகிட்டத்தட்ட இதே அனுபவங்கள் தான் எனக்கும் கிரிக்கெட் ஆட தொடங்கும் போது. என்ன வித்தியாசமென்றால், முழுக்க முழுக்க கிராமத்து தொடக்கம் என்னோடது.