பெண்கள் கார், மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டலாமா கூடாதா என்ற விவாதம் பெரும்பான்மையான ஆண்களுக்கு சுவாரசியம் தருவதாகத்தான் இருக்கும் என்பது எனக்கு கடைசி தண்ணிப் பார்ட்டியின் பொழுதுதான் தெரியவந்தது. ஏறக்குறைய நான் சந்தித்த எல்லா ஆண்களுக்குமே ஏதாவது ஒரு வகையில் பெண்கள் வண்டி ஓட்டுவதால் பிரச்சனை ஏற்பட்டிருக்கிற விஷயமும் தான்.
“உனக்குத் தெரியாது கார்த்திக், இப்படித்தான் ஒரு தடவை இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு பன்னார்கெட்டா ரோட்டில் ஹனிவெல்லிற்கு கொஞ்சம் முன்னால் இருக்ற பிலேக்ஹல்லி பஸ்டாண்ட் பக்கத்தில் ஒரு ஆக்ஸிடென்ட்...”
“யாருக்கு...”
“வேற யாருக்கு எனக்குத்தான். அப்ப எல்லாம் நான் எஃப் 2 ஓட்டிக்கிட்டிருந்தேன். ரெட் சிக்னலுக்காக வண்டியை நிறுத்திட்டி; பச்சைக்காக வெய்ட் பண்ணிக்கிட்டிருந்தேன். நச்சுன்னு யாரோ பின்னாடி இடிக்கிற மாதிரி இருந்ததால திரும்பிப் பார்த்தா ஒரு டாடா இண்டிகா பம்பரில் இடிச்சி நிக்குது. ‘கொய்யால’ அப்படின்னு சவுண்ட் உட்டுட்டு திரும்பிப் பார்த்தா டிரைவர் சீட்டில் ஒரு பிகரு..”
“அப்புறம்...”
“நான் சக்க கோபத்தில் ஸ்டாண்ட் போட ரெடியாகுறேன்; அந்தம்மா வேகவேகமா ரிவர்ஸ் எடுக்குறேன் பேர்வழியென்று ரிவர்ஸ் போட்டு ஆக்ஸிலேட்டர் கொடுக்க அது திரும்பவும் என் மேல வந்து முட்டி நான் நிலை தடுமாறி கீழே விழ வண்டி என் மேல் விழன்னு ஒரே காமெடியாப் போச்சு. அந்த பிகருக்கு ரிவர்ஸ் கியரே போடத்தெரியலை. பிரேக்கை அமுக்கிறேன்னு திரும்பத்திரும்ப ஆக்ஸிலேட்டரை அமுக்க; அன்னிக்கு ஒரே பக்வாஸா போச்சுது.”
ஆறு ஏழு பேரா தண்ணியடிக்க வந்திருந்த இடத்தில் ஏதோ ஞாபகமாய் இதைச் சொல்ல எல்லோரும் கபகபவென்று சிரிக்கத்தொடங்கினர்.
கார்த்திக் கொஞ்சம் சீரியஸாய், “கடைசியில் என்னதான் ஆச்சுது.”
“ஒரு வழியா ப்ரேக்கைப் போட்டு வண்டியை விட்டு இறங்கினா பாரு; ஒன்றரை அடிதான் இருக்கா. அவ சீட்டில் நிமிர்ந்து உக்கார்ந்து வண்டி ஓட்டினா ஆக்ஸிலேட்டருக்கு கால் எட்டாது பார்த்துக்க. அதனால கீழே குனிஞ்சு ஆக்ஸிலேட்டரை அமுக்குறது திரும்ப மேலவந்து ரோடு பாக்குறது பின்னாடி திரும்ப கீழிறங்கி...
கேட்டா லைசன்ஸும் இல்லையாம், வேறென்ன சாப்ட்வேர் கம்பெனியில் வேலை வர்ற காசை என்ன பண்றதுன்னு தெரியாம கார் வாங்கிட வேண்டியது. பின்னாடி இப்படித்தான்...”
நான் சைகை செய்து காண்பித்தேன் குனிந்து ஆக்ஸிலேட்டரை அமுக்கிவிட்டு, தலையை தூக்கு ரோடைப் பார்ப்பது போல. இப்படி ஆரம்பித்த அன்றிரவு ஒவ்வொருவர் ஒவ்வொரு கதை சொல்லப்போக கடைசியில் எந்தப் பொண்ணாவது ரோட்டில் ஆக்ஸிடெண்ட் பண்ணாம இருந்திருப்பாங்களா என்ற கேள்வியுடன் நான் இன்னொரு மாக்டெய்ல் ஆர்டர் செய்ய, அந்த ஏழு பேரிலேயே அதிக வயதுக்காரனான யோகேஷ் பர்தேஷி.
“டபுள் மைண்டட் ஆளுங்க மோகன், எப்பப்பாரு எதையாவது மனசுல நினைச்சிக்கிட்டே வண்டி ஓட்டினா பின்ன எப்படி.; கான்ஸண்ட்ரேஷன் இல்லாமப் போறதால இப்படியெல்லாம் ஆகுது. இந்த பொண்ணுங்களோட புருஷன்களுக்கும் இப்படி நடக்கும்னு தெரியும் அதை அவன் சொன்னா பிரச்சனையாகும் பட்டுத் தெரிஞ்சிக்கணும்னு விட்டுறானுங்க படுபாவிங்க.
தெரியுமா நான் கொஞ்ச நாளாவே கார் ஓட்டுறது ஆம்பிளையா பொம்பளையா அப்படின்னு பார்த்துட்டுத்தான் ஓட்டுறது. பொம்பளையா இருந்தான்னு வை. நாலடி அந்தப்பக்கம் தான் வண்டியை ஓட்டுவேன் தெரியுமா?
அதுசரி உன்னை இடிச்ச வண்டி எதுன்னு சொன்ன?”
“ஏன் கேக்குற யோகி? டாட்ட இண்டிகா...”
“இல்ல என் பொண்டாட்டிக்கிக் கூட அதுதான் ஒன்னு வாங்கிக் கொடுத்துறுக்கேன் அதான்...” என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல எதிரெதிர் திசையில் உட்கார்ந்து தண்ணியடித்துக் கொண்டிருந்தவர்கள், சிரித்த சிரிப்பில் பிராந்தி, மாக்டெய்ல், சிக்கன் பீஸ், மசாலாக் கடலை என விதவிதமாய்ப் பறந்தது டேபிள் முழுவதும் எதிர் எதிர் திசைகளில்.
கடைசியில் போனவர்கள் போக மீதி இரண்டு பேர் டக்கீலா அடித்துக் கொண்டு எலுமிச்சை, உப்பை உறிஞ்சிக் கொண்டிருக்க எனக்கு அந்த ஆக்ஸிடென்ட்டிற்குப் பிறகு நடந்த நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சமாய் கண்முன்னே தோன்றி மறைந்தது.
“இங்கப் பாருங்க உங்களுக்கு இப்ப நேரம் சரியில்லையாம், வாராவாரம் திங்கட் கிழமை சோமேஸ்வரர் கோவிலுக்குப் போய் நெய்விளக்குப் போடச்சொல்லி அத்தம்மா சொன்னாங்க.
நீங்கதான் என்னமோ பெரிஸா நாத்தீகம் பேசிக்கிட்டு வரமாட்டேன்னுட்டீங்க, இப்பப் பாருங்க இப்படி ஆய்டுச்சு.”
பெரும்பாலும் நாம் வாயை திறக்க முடியாத சூழ்நிலை இப்படித்தான் ஏற்படும். அக்கா வீட்டிற்குப் போயிருந்த அம்மா பக்கத்தில் இருந்த ஜோசியக்காரனைப் பார்க்கப் போக அவன், சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வருஷம் கொஞ்சம் இப்படித்தான் இருக்கும். ஏதாவது சிவன் கோவிலுக்குப் போய் நெய் விளக்குப் போட்டா சரியாய்டும்னு சொல்லப்போக, பாவாவால், நானும் மாட்டினேன் ஒரே ராசி ஒரே நட்சத்திரம். பரிகாரம் சுலபமாய் அகிலாவிற்கு சொல்லப்பட்டது.
இப்பல்லாம் சாயந்திரம் சீரியல் பார்க்க உட்கார்ந்தா எழுந்திருக்கிறதே கிடையாது அப்படின்னாலும், பாவாவிற்காக அக்கா திங்கட் கிழமைகளில் நெய்விளக்குப் போடப்போய், அது என் தலையில் விடிந்தது. வேறென்ன அண்டர் கிரவுண்ட் பாலிடிக்ஸ். அகிலா திங்கள் கிழமை ஒரு நேரத்தைப் பிடித்துக் கொண்டு தொங்கினாள். அவளுக்கு தான் பீரோவில் அடுக்கி வைத்திருக்கும் பட்டுப் புடவைகளை போட்டு உடுத்திக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு பவானிக்கு வீட்டுப் பாடம் செய்யாமல் இருக்க; இப்படி ஒரு க்ரூப்பாக் கிளம்ப கடைசியில் மாட்டிக்கொள்வது நான்.
‘பக்’ களின் தலைமேல் விழுந்து நான் புரண்டுக் கொண்டிருக்கும் பொழுது வீட்டிலிருந்து தொலைபேசப்படும், ‘இன்னும் கிளம்பலையா?’ என்று. இப்பொழுதெல்லாம் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டால் வாயு கோளாறு வருவதால் வேறுவழியில்லாமல் கிளம்பிப் போனால். பட்டுப் புடவை, அதற்கு மேட்சிங்காக முத்தோ, பவளமோ, தங்கமோ உடம்பெல்லாம் புரள, அப்பொழுது தான் குளித்துவிட்டு நீண்ட கூந்தலின் நுனியில் மட்டும் முடிச்சுப் போட்டு தயாராக கிளம்பி நிற்கும் அகிலாவைப் பார்த்தால் அப்படியே தூக்கிக் கொண்டு கட்டிலுக்குப் போகத்தான் மனம் வரும். திரும்பவும் ஹோட்டல் சாப்பாடு நினைவுக்கு வர ‘தேமே’ என்று இல்லை ‘ஞே’ என வண்டி சோமேஸ்வரர் கோவிலுக்குப் புறப்படும். அந்தப் பக்கம் ஒன்வே ஆதலால், அல்சூர் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து கோவிலுக்கு ஒரு நடை.
சொல்லப்போனால் எனக்கு நல்லது ஏற்படும் என்று நெய் விளக்கு போடப் புறப்படவில்லை என்றும் அங்கிருந்து கோவிலுக்கு இருக்கும் நூறு மீட்டர் தொலைவை நாங்கள் கடக்கும் பொழுது ரோடே திரும்பிப் பார்க்கும் சந்தோஷத்திற்காகத்தான் அகிலா நெய் விளக்குப் போடவருகிறாள் என்றும் என் மனதிற்கு பட்டது சாதாரண நிகழ்வாய் இருக்காது என்றே தோன்றிக் கொண்டிருந்தது அன்று.
நான் நந்திக்குப் பக்கத்திலேயே நின்று கொண்டு வரவில்லை என்பது போல் சைகைகாட்ட, எனக்கு மட்டும் தெரிவது போல், திருஷ்டி சுத்திப் போடும் பொழுது சம்பிரதாயத்திற்காக “தூ, தூ, தூ” என்று எச்சில் துப்புவதைப் போல் உதட்டைக் குவித்து ஒரு முறை துப்பிக் காண்பித்தாள். சாதாரணமாக என் பொண்டாட்டி அப்படி செய்பவள் இல்லை தான், பெரும்பாலும் ஊடல் பெருத்து அதன் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரும் பொழுதோ இல்லை நான் செய்த ஏதாவது ஒன்றிற்கு அவளால் செயலால் எதிர்க்கமுடியாத ஆனால் எதிர்ப்பை காட்டியே ஆகவேண்டிய நிலையில் இப்படிச் செய்வாள். இதுதான் முதன் முறையாக பொதுஇடத்தில் அதுவும் கோவிலில் செய்தாள்; அதனால் நான் அடைந்த ஆச்சர்யம் அவள் கண்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். கண்ணடித்துக் காண்பித்தாள், இந்தப் பொண்ணுங்களுக்கு தைரியம் அதிகம் தான் என்று நினைத்தவனாய் பவானியை என்னுடன் நிறுத்திக் கொள்ள,
“பாவா” என்று சொல்லி கண்களால் பயமுறுத்தினாள்.
நான் “சர்தான் போடி” என்பதைப் போல அவனை இழுத்துக் கொண்டு நந்திக்கு எதிரில் இருந்த மணல் பரப்பில் உட்கார்ந்தேன். இன்றைக்கு நைட் ரொம்பவும் கெஞ்ச வேண்டியிருக்காது என்று நினைத்தவனுக்கு பக்கத்தில் இருந்த நந்தி திரும்பிப் பார்ப்பதைப் போல் இருந்தது.
அகிலா நெய்விளக்கேற்றிவிட்டு பிரகாரத்தைச் சுற்றிவிட்டு வரும் பொழுது, பவானி நந்தியின் வாலைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான். நான் அவனுக்கு நந்தியின் காது என்று உணர்த்தும் படியாக என் காதைத் தொட்டுக் காண்பிக்க. அவன் காலியாக இருந்த நந்தியின் இந்தப் பக்கத்து காதை விட்டுவிட்டு, இன்னொரு காதில் தன்னுடைய கஷ்டத்தையெல்லாம் ரொம்பவும் சீரியஸாய் சொல்லிக் கொண்டிருந்த ஒரு பெரியவரின் காதை பிடித்து இழுக்க பிரச்சனை ஆகயிருந்தது. ஆனால் இப்படி வம்பு செய்தது சின்னப் பையன் என்பதால் அவரும் அவனை கொஞ்சி விட்டு என்னிடம் அனுப்பிவிட்டார். இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டே அருகில் வந்த அகிலா,
“இதெல்லாம் உங்க வேலைதானா?” என்று கேட்க
“இல்லம்மா, நான் நந்திகேஸ்வரர் கதையைச் சொல்லி, உங்கம்மா ஈஸ்வரர் கிட்ட மனு போட போயிருக்கா, அவர் எந்த மூடில் இப்ப இருக்கிறாரோ தெரியாது. ஆனால் உனக்கு ஈஸ்வரர் கிட்ட என்ன நடக்கணும்னு வேண்டுறியோ அதை நந்திகேஸ்வரர் கிட்ட சொன்னா அவர் ஈஸ்வரர் நல்ல மூடில் இருக்கும் பொழுது சொல்லுவார், சீக்கிரம் நிறைவேறும்.
அதனால அவர் காதில் போய் விஷயத்தைச் சொல்லுன்னு சொன்னேன். அதுக்கு உன் மகன் பெரிய அறிவாளியாய் என்ன கேட்கன்னு கேட்டான். நான் உங்கப்பா நினைக்கிறது இன்னிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாம நடக்கணும்னு போய் வேண்டிக்கடான்னு சொன்னேன்...” என்று சொல்ல
முகமெல்லாம் சிவந்தவளாய், பக்கத்தில் உட்கார்ந்து தொடையைக் கிள்ளினாள்.
“உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாது. எதையெதை யார் யார் கிட்ட சொல்றதுன்னு ஒரு வெவஸ்தை வேண்டாம்.” அவள் பவானியை மடியில் இழுத்து வைத்துக் கொண்டு கிசுகிசுக்க.
நான் பாவமாய், “என்ன பண்ணுறது இப்ப இதுக்கெல்லாம் நந்தீஸ்வரர் சிபாரிசு வேண்டியிருக்குது” என்று சொல்ல கண்களை உருட்டி மிரட்டியவள். “உங்களை எல்லாம் திருத்தவே முடியாது.” என்னமோ சம்பிரதாயத்திற்கு கோவிலில் உட்காரவேண்டுமே என்று உட்கார்ந்தவள் போல் எழுந்து வேகமாய் நடையைக் கட்டினாள். நான் திரும்பி வெளியில் இருந்தே சோமேஸ்வரருக்கு ஒரு சல்யூட் போட்டுவிட்டு பின் தொடர்ந்தேன்.
வீட்டிற்கு வந்ததில் இருந்தே டீவிப் பெட்டியின் முன் உட்கார்ந்து சீரியல் பார்ப்பதைத் தொடர்ந்தவள். சன் டீவி நியூஸ் இடைவெளியில் போய் பட்டுப்புடவை, நகைகளை கழட்டிவிட்டு வந்து மீண்டும் உட்கார்ந்தவளிடம் காபி, டின்னர் கேட்டு வாய் வலித்துப் போய் விட்டுவிட்டேன். கோவிலுக்குப் போய்விட்டு வரும்வழியில் வாங்கி வந்திருந்த பழம், மற்றும் ஏற்கனவே வீட்டில் இருந்த தீனியைத் தின்றுவிட்டு பவானி தூங்கிவிட. நான் பதினொன்னறை மணிக்குப் பாயைப் பிராண்டினேன்.
“இங்கப் பாருங்க, நேத்திக்கு அத்தம்மா வதனை வீட்டிலிருந்து போன் பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்க பேசின அரைமணிநேரத்தில ஒரு சீரியலை மிஸ் பண்ணிட்டேன். அதை இப்ப பன்னிரெண்டு மணிக்கு திரும்பப் போடுவான். எது பேசுறதா இருந்தாலும் அதுக்கப்புறம் பேசுங்க.” சொல்லிவிட்டு மீண்டும் டீவியில் ஐக்கியமாக, வந்த கோபத்தில் நான் தலையணையைத் தூக்கிக் கொண்டு பவானி ரூமிற்கு வந்தேன். தூங்கியது தெரியாமல் காலை எழுந்த பொழுது பக்கத்தில் படுத்திருந்தாள். நான் எதுவும் பேசாமல் எழுந்து பல்விளக்கிவிட்டு வந்துப் பார்த்தால், காபி கோப்பையுடன் சிரித்தபடி நின்று கொண்டிருந்தாள்.
வந்த கோபத்தில் “இங்கப் பாரு அகிலா இது சரியில்லை, வந்த புதுசில் சரியாத்தான் இருந்த நீ. இப்ப சீரியல் பார்க்க ஆரம்பிச்சு வீட்டில் என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு ஒன்னும் தெரியாம இருக்கிற அளவுக்கு அடிக்ட் ஆய்ட்ட. இது சரியில்லை அவ்வளவுதான் சொல்லிட்டேன்.”
“ஒரு நாள் பன்னிரெண்டு மணிவரைக்கும் பாத்ததுக்கு என்ன கோபம் வருது உங்களுக்கு. நீங்க பதினொன்னரையிலிருந்து பன்னிரெண்டு மணி வரைக்கு எத்தனை நாள் மிட்நைட் மசாலா பார்க்குறேன். டிஸ்கவரி சேனல் பார்க்கிறேன்னு என் கோபத்தைக் கிளறியிருப்பீங்க...”
அவள் சொல்ல, அவள் எடுத்துக்கொண்ட உதாரணங்களால் அவள் கோபமாக இல்லாது தெரிந்தாலும் நான் மேல் பேச்சு பேசாமல் கிளம்பிப்போனேன். அன்று குளித்துக் கொண்டிருந்த பொழுதுதான் நந்தீஸ்வரர் என்னைப் பார்த்து சிரிப்பதைப் போல் தோன்றியது வெறும் மூடநம்பிக்கை என்று மனதைத் தேற்றிக்கொண்டு கிளம்பினேன். அகிலாவுடன் ஒரு வார்த்தையும் பேசாமல் அவள் செய்துவைத்த டிபனையும் சாப்பிடாமல் வந்ததை நினைத்து அலுவலகத்தில் வருத்தமாகயிருந்தது.
“இங்கப் பாருய்யா உன் இஷ்டத்துக்கு மாசாமாசம் ஐம்பது ரூபாய் ஏத்திக் கிட்டே போற. இதுல தமிழ்நாட்டில் எதுவும் நடந்தா உடனே தமிழ் சேனலை எல்லாம் வேற நிறுத்திற்ற. நீ சொல்ற மாதிரியெல்லாம் ஆடமுடியாது தெரிஞ்சிக்கோ.”
அன்று மாலை கேபிள் டீவி ஆப்பரேட்டர் எப்பொழுதையும் விட ஐம்பது ரூபாய் அதிகம் கேட்டு வந்ததும் நான் கோபத்தில் கத்தியது அகிலாவிற்கு ஆச்சர்யமாக இருந்திருக்கும். எப்பொழுதும் காசை ஒரு கன்செர்னாக பார்க்காத நான் ஐம்பது ரூபாய்க்கு கத்தியதை அவளால் புரிந்துகொள்ள முடியாதுதான்.
“இங்கப் பாரு சார். உனக்கு இப்ப கேபிள் கனெக்ஷன் வேணுமா வேணாமா? காசு கொடுப்பேன்னா கொடு இல்லாட்டி நான் கனெக்ஷனை எடுத்துற்றேன். சும்மா கூவாத”
“உன் கனெக்ஷன் வேணாம் நீ புடுங்கிக்க” நான் கோபத்தில் கத்த. அவன் கனெக்ஷனை எடுத்துவிட வீட்டிற்குள் வர, “வீட்டுக்குள்ள எல்லாம் விடமுடியாது உன்னால முடிஞ்சா வெளியில கட் பண்ணிக்க.”
அவன் என்னை முறைத்துவிட்டு நகர்ந்தான். அகிலா என்னை ஆச்சர்யமாய் மேலும் கீழும் பார்க்க,
“இங்கப் பாரு அகிலா, இவன் மட்டுமா கேபிள் கனெக்ஷன் கொடுக்குறான் நாளைக்கு வேற ஒருத்தனை விட்டு கொடுக்கச் சொல்றேன். ஒரு நாள் தான. இவனுங்களுக்கெல்லாம் இப்படிச் சொன்னாத்தான் புத்தி வரும்.” என்று சொல்லிவிட்டு அகிலாவின் பதிலுக்குக் காத்திராமல் கிளம்பினேன்.
அடுத்தநாள் பழைய கேபிள்காரன் வீட்டின் முன்னால் வந்து கத்தினான்.
“யோவ் நினைச்சிக்கிட்டிருக்கிறியா. வேற ஒருத்தன் இந்த ஏரியாவுல வந்து உன்வீட்டுக்கு கனெக்ஷன் கொடுத்துறுவான்னு. கனவு தாண்டி மகனே.”
அவன் சொல்லிவிட்டு போனதும்தான், அகிலா கேபிள் காரர்களுக்கு இடையில் இருக்கும் அக்ரிமெண்ட் பத்தி சொல்லிவிட்டு,
“என்னயிருந்தாலும் நீங்க அன்னிக்கு அப்படி கோபமா பேசியிருக்கக்கூடாதுங்க. ஆனா அதுக்காக அந்த கேபிள்காரன் செஞ்சதும் சரிகிடையாது. நீங்க கவலைப் படாதீங்க கேபிள் ஒன்னுதான் வாழ்க்கையா? பொழுது போக்குறதுக்கு எத்தனையோ இருக்கு.”
அகிலா சமாதானம் சொன்னாள். நான் அவள் கண் முன்னாலேயே அந்த ஏரியாவில் இருக்கும் பல கேபிள் டீவி ஆப்பரேட்டர்களுக்கு போன் செய்து எவ்வளவு ஆனாலும் சரி என்று சொல்லியும் ஒருவரும் கனெக்ஷன் கொடுக்க வராததால் கோபமடைந்தவனைப் போல் இருக்க மீண்டும் சமாதானம் சொன்னாள்.
இப்படி கேபிள் கனெக்ஷன் பிரச்சனையால் சீரியல் பார்ப்பது நின்று போயிருந்தது. ஆனால் அதற்குப் பிறகு நாங்கள் வேறு ஏரியாவிற்கு குடி போனதும் கூட அகிலா என்னிடம் கேபிள் கனெக்ஷன் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தவில்லை. கேட்டால் அது ஒரு அடிக்ஷன் மாதிரிங்க அப்பப்பா எப்படி வெளிய வந்தேன்னு இருக்கு. நல்லவேளை அன்னிக்கு நீங்க அவனை அப்படிப் பேசி அனுப்பிட்டீங்க என்று சொல்ல. நானும் கேபிள் டீவி ஆப்பரேட்டரும் போட்ட சதி தான் அது என்று தெரிந்தால் என்ன செய்வாள் என்று யோசித்தேன்.
அந்த கேபிள்காரன் அன்று,
“சார் எனக்கு நல்லா புரியுது சார் உன் பீலிங். இவ்ளோ கனெக்ஷன் கொடுக்குறேனே என் வீட்டில் கேபிள் கிடையாது தெரியுமா?” என்று சொல்லி பிரம்மாதமாய் நடித்துக் கொடுக்க என் திட்டம் நிறைவேறியது நினனவில் வந்தது. எல்லாமே அந்த ஆக்ஸிடெண்டால் நடந்தது தானே! பின்னர் டக்கீலா அடித்துவிட்டு மல்லாந்த நண்பரை ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பிவிட்டு நானும் வீட்டிற்குக் கிளம்பினேன்.
முந்தைய பாகங்கள்.
இப்படியும் ஒரு தொடர்கதை - கற்புங்கிறது ஒரு கடப்பாறை...
இப்படியும் ஒரு தொடர்கதை - சிம்மேந்திரமத்யமமா? கீரவாணியா?
இப்படியும் ஒரு தொடர்கதை - இந்துயிஸமும் சில சிஐஏ உளவாளிகளும்
இப்படியும் ஒரு தொடர்கதை - பிரிவென்னும் மருந்து
இப்படியும் ஒரு தொடர்கதை - ஆண் என்னும் தலையாட்டிபொம்மைகள்
இப்படியும் ஒரு தொடர்கதை - பெண்ணியமும் சில புடலங்காய்களும்
இப்படியும் ஒரு தொடர்கதை - நீ கட்டும் சேலை மட்டிப்பில நான் கசங்கிப் போனேண்டி
In இப்படியும் ஒரு தொடர்கதை தொடர்கதை
நந்திகேஸ்வரரும் நச்சு ஐடியாவும்
Posted on Wednesday, May 23, 2007
நந்திகேஸ்வரரும் நச்சு ஐடியாவும்
பூனைக்குட்டி
Wednesday, May 23, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
ஆரம்பிச்சிட்டான்யா ஆரம்பிச்சிட்டான்
ReplyDeleteஎந்த ஆக்ஸிடெண்ட்? இதுவே இப்ப மெகா சீரியல் மாதிரி ஆகிப்போச்சு.. - பழைய கதைக்கும் புது அத்தியாயத்துக்கும் தொடர்பில்லாம..
ReplyDeleteபூர்ணா, இந்தக் கதையிலேயே ஒரு பகுதிக்கும் இன்னொரு பகுதிக்கும் தொடர்பில்லாத மாதிரி இருக்குன்னு சொன்னா? நான் எப்படி தொடர்பு பட்டுத்தினேன்னு சொல்றேன்.
ReplyDeleteஇந்தத் தொடர்கதையில் இது தனியாகத் தொங்குவதாக நினைத்தால் என்னிடம் பதில் கிடையாது;