In சிறுகதை

குவாண்டம் சுஜாதா மற்றும் காதல்

"பாக்டரைசிங்க்பற்றி எழுதிய இடத்தில் சில வார்த்தைகள் விடப்பட்டது(சரிபார்க்காததால்), அதாவது அந்த பெருக்குத்தொகையை பகுப்பது என்பது முடியாத ஒன்றேன்று. இது எனக்கு மட்டும் நடந்ததில்லையே....."

நான் வேகவேகமாய்த் தட்டச்சிக்கொண்டிருக்க, பின்னாலிருந்து பூனம் கூப்பிடுவது கேட்டது. கேட்காதது போல் தட்டச்சிக்கொண்டிருந்ததால் சப்தம் இன்னும் அதிகமானது,

“மோகன்...”

“இங்கப்பாரு, நான் கொஞ்சம் டென்ஷனாயிருக்கேன். இப்ப டிஸ்டர்ப் பண்ணாத.”

நான் திரும்பிக்கூட பார்க்காமல் சொல்லியபடியே வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். ஆனால் அலுவலகத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவள் தன் சுழல் நாற்காலியை வேகமாய் என்பக்கம் நகர்த்தி வந்து சட்டென்று கணிணிக்கு வந்துகொண்டிருந்த மின்சாரத்தொடர்பை துண்டித்தாள்.

“இங்கப்பாருங்க இனிமேல் முடியாது. நாலு மாசமாவே நீங்க சரியில்லை, ஏதோ நாம லவ் பண்ணுற ஆளாச்சேன்னு, உங்களோட வேலையையும் சேர்த்து நான் பண்ணிக்கிட்டிருக்கேன். பெரிய வேலை வெட்டி முறிக்கிற மாதிரி தமிழ்ல எழுதிக்கிட்டு இதுல டென்ஷன் வேறயாம். இனிமேல் நம்மால முடியாது, நானும் நீங்க திருந்திருவீங்கன்னு பார்க்கிறேன். ம்ஹும் அப்படித்தெரியலை. இனிமேலும் நீங்க இப்படித்தான் என்னைக்கூட கண்டுக்காம எழுதிக்கிட்டிருப்பீங்கன்னா?” கொஞ்சம் நிறுத்திவள், “எல்லாம் அவ்வளவுதான்...”

அவள் கொஞ்சமும் கோபம் குறையாதவளாய் சொல்லத்தொடங்க, எனக்கு என் நிலைமை புரிந்தது. புனே வந்த முதல் மாதத்தில் என்னுடன் வேலை செய்யும் விதமாய் அறிமுகமான பூனம் தமிழ்ப்பெண்தான். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் எங்களுக்கிடையில் நட்பு வளர்ந்து இந்த எட்டு மாதங்களில் காதலாகி இப்பொழுது இருவர் வீட்டிலும் கல்யாணம் பேசும் அளவிற்குவந்து நிற்கிறது. இன்று அவள் கோபமானதற்கு சில காரணங்கள் இருக்கத்தான் செய்தது, மதியம் ஒரு மணிபோல் என்னிடம் வந்து அவள் மதிய உணவிற்கு அழைக்க முக்கியமான வேலையாய் மறுத்துவிட்டேன். சிறிது நாட்களாகவே நாங்கள் இருவரும் ஒன்றாய் பேசிக்கொண்டிருக்கும் நேரமும் குறைந்து போனதால் ஏகக்கடுப்பில் இருந்த பூனம், நான் இப்பொழுது கொஞ்சம் கோபமாகப்பேச எல்லாவற்றையும் எடுத்தெரிந்து பேசிவிட்டாள்.

அவ்வளவு சுலபமாய் எல்லாம் அவ்வளவுதான்னு போய்விடமுடியாது தான் அது அவளுக்கும் தெரியும். ஆனால் இந்த வார்த்தையை அவள் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையை நான் ஏற்படுத்திவிட்டேன்னு அவள் சொல்ல நினைத்திருக்கலாம். ஒருவாறு அதில் அவள் வெற்றியும் பெற்றிருந்தாள், ஏனென்றால் அவளில்லாத ஒரு வாழ்க்கையை இனிமேல் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாத ஒரு நிலையில் இருந்தேன் நான். இதன் போன்ற காரணங்களால் வேறென்ன மன்னிப்பு கேட்கும் படலத்தை தொடங்கினேன்.

“இங்கப்பாரு பூனம் நீயே இப்படி சொன்னா எப்படிடா, நானே டென்ஷன்ல இருக்கேன், நீவேற ஏம்மா இப்படி மனசை கஷ்டப்படுத்துற.”

நான் அவளின் கோபத்தை குறைப்பதற்காய் பேசத்தொடங்கினேன், எங்கள் கியூபில் மூன்று பேர் உட்கார்ந்து வேலை பார்க்கமுடியும் ஆனால் என்ன காரணத்தாலோ அந்த மூன்றாவது இடம் பெரும்பாலும் காலியாகவே விடப்பட்டிருந்தது எனது மேலாளரால். அவருக்கும் நன்றாய்த்தெரியும் நாங்கள் காதலிப்பதும் திருமணம் செய்துகொள்ள இருப்பதும்.

ஆனால் அவள் இன்னும் முகத்தைக்கூட திரும்பிப்பார்க்காத காரணத்தால்,

“சரிடா, இப்ப என்ன பண்ணணும்னு சொல்ற. நான் பண்றேன், கோடிங் எழுதவா, இல்லை ரிவ்யூ பண்ணவா, இல்லை நான் தமிழ்ல எழுதிக்கிட்டிருக்குறது பிடிக்கலைன்னா சொல்லு கொஞ்ச நேரத்துக்கு கம்ப்யூட்fடரை மூடி வைச்சிற்றேன். என்ன பண்ணட்டும் நான்.” அவள் அருகில் சென்று நான் மெல்லக்கேட்க, திரும்பிப் பார்த்தவள்,

“நாம இப்பவே வெளியில் போகணும்.”

“அப்ப வேலையை யார் பார்க்குறது. ஆன்சைட் குவார்டினேட்டர் ஆப்படிச்சிடுவான்.”

“எல்லார்க்கிட்டையும் பேசியாச்சு, நாம எப்பவேணும்னா போகலாம். முதல்ல நாம இங்கேர்ந்து நல்லா ஹோட்டலுக்கு போறோம். அப்புறம் புனே சிட்டிக்கு போய் ஐநாக்ஸிலேயோ இல்லை இ-ஸ்கொயரிலோ, கிங்காங் படம் பார்க்கிறோம். அப்புறம் நாளைக்கு ஷீரடிக்கு போறோம் போறப்ப அப்படியே அஜந்தா எல்லோராக்கும் போய்ட்டு வர்றோம். இந்த நாலு நாளும் நீங்க கம்ப்யூட்டர் பக்கத்திலோ, தமிழ் பாண்ட் பக்கத்திலேயோ போகவேக்கூடாது. போகவும் விடமாட்டேன்.”

நான் நினைச்சேன் இப்படி ஏதாவது இருக்கும்னு, எல்லாத்தையும் நல்லா முன்னாடியே திட்டம் போட்டு வைச்சிக்கிறது. பின்னாடி நான் எங்கத்தட்டினா எப்பிடி ஆடுவேன்னு தெரிஞ்சிக்கிட்டு வேலையைப்பார்க்கிறது. இன்னும் சொல்லப்போனால் நான் கணிணி முன்னாடி உட்கார்ந்து தலையை முட்டிக்கிட்டிருக்கிற நேரமாப்பார்த்து வேணும்னே கூப்பிட்டிருக்கிறாள். நான் என்ன சொல்வேன்னும் அவளுக்கு தெரிஞ்சிருக்கும். திட்டம் போட்டு என்னை மடக்கியிருந்தாள்.

“இங்கப்பாரு எனக்கு இந்த கார்டுன் படமெல்லாம் பார்க்கிறதில் ஆர்வமில்லை வேணும்னா நாம வேற படத்திற்கு போகலாம் அதேபோல் ஷீரடியும் வேண்டாம். நீ அங்கப்போய் சாய்பஜன் பாட ஆரம்பிச்சிறுவே நமக்கு ஆகாது. வேணும்னா எல்லா லவ்வர்ஸ் மாதிரி நாமலும் லோக் கர்(Loaghgarh) போகலாம். ஷீரடிக்கு எத்தனை தடவைத்தான் போறது அதுவுமில்லாம ஷீரடிக்குன்னா குவாலிஸோ வாடகைக்கு எடுக்கவோ இல்லை வால்வோவோ பிடிக்கணும், லோக் கர்னா நாம இரண்டுபேரும் வண்டியிலேயே போய்விடலாம். என்ன சொல்ற அடுத்த நாளும் வெளியில் போகணும்னா சிங்காட் போகலாம் என்ன சொல்ற?”



அவள் சொல்லவதை நான் மறுத்துவிடுவேன்னு நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு நான் அவள் திட்டத்தை இன்னும் செளுமைபடுத்தியது பிடித்திருந்தது போலும் அவள் கண்கள் பிரகாசமாவதை என்னால் கவனிக்க முடிந்தது. ஷீரடிக்கு போக வேண்டாமென்று சொன்னதற்கு என் கடவுள் மறுப்பு மட்டுமே காரணம் கிடையாது. காதலர்கள் செல்வதற்கான இடம் இல்லை அது மட்டுமில்லாமல் மனதில் துளியும் நம்பிக்கையில்லாமல் கைகூப்பி கடவுளை வணங்குவதில் எனக்கு சுத்தமாய் விருப்பமில்லை.

அதுவுமில்லாமல் லோக் கர், சிங்காட் என்ற சொல்லப்படும் இடங்கள் புனேவில் சிவாஜியால் கட்டப்பட்ட மலைக்கோட்டைகள். நானும் பூனமுமே சிலமுறை லோக் கர் போய்வந்திருக்கிறோம். இருசக்கர வாகனத்தில் காதலர்களாக, லோக்கருக்கு செல்வது ஒரு அற்புதமான அனுபவம். இடையில் வரும் அணைக்கட்டில் சிறிது நேரம் அலவளாவிவிட்டு, லோக்கருக்குச் சென்றால் வழிப்பயணம் ரம்மியமாகயிருக்கும், அந்த கோட்டையை விட அதற்கு செல்வதற்கான வழிதான் எனக்கு பிடித்திருந்தது. பிரயாணம் செய்வதில் ஆர்வமுடையவனாய் இருந்ததாலும், இருசக்கர வாகனத்தில் மனதிற்கு பிடித்த காதலியுடன் வேகமாய் செல்வது சுகமான அனுபவம். இடையிடையில் நிறுத்தி அந்த குளிர்காலத்தின் மலைப்பிரதேசத்தில் தேநீர் அருந்துவதன் அருமையை உணர்ந்த காரணத்தால் தான் உடனே அவள் சொன்ன திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் உடனே சம்மதிக்கவும் செய்தேன்.

பூனமும் கொஞ்சம் கொஞ்சமாய் நான் இருந்த டிப்ரஷன் நிலையிலிருந்து மீண்டு சாதாரணமான நிலைக்கு வருவதை உணர்ந்திருக்கலாம். அவளுக்கு தேவையானதும் இதுவே. எனக்கும் இந்த மாறுபாடு தேவையாய் இருந்தது. நாளைந்து நாட்களுக்கு கணிணியை விடுத்து, ப்ரோக்கிராம்களை விடுத்து, கொஞ்சம் சுகமாய் ஊர்சுற்றுவதில் மனமடையும் வித்தியாசத்தை உணர்ந்துதான் இருந்தேன்.

என் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டவளாய், அவள் கிளம்ப நாங்கள் அலுவலகத்திலிருந்து வெளியில் வந்தோம். பிறகென்னவோ நினைத்தவளாய்,

“தாஸ் நாம வடாபாவ் சாப்பிடுவோமா?” கேட்க எனக்கு சிரிப்பாய் வந்தது. இந்தப் பெண்களுக்குத்தான் எவ்வளவு துணிச்சல், நாம் அவர்களின் பேச்சிற்கு கட்டுப்பட்டு நடக்கும் சூழ்நிலையில் பெரும்பாலும் அவர்களுடைய மனநிலையை நம்மீது திணிக்காமல் விடுவதில்லை. பூனத்திற்கு நன்றாகவேத்தெரியும் நான் வடாபாவ் சாப்பிடமாட்டேனென்று. ஆனால் இன்று கூப்பிட்டதும் மறுக்காமல் சென்றேன். ஒரு வடாபாவ் ஆர்டர் செய்தவள் என்னை நன்கு உணர்ந்தவளாக எனக்காக ஒரு தனி வடையை மட்டும் சொல்லியிருந்தாள். இந்த ஊரில் வடை என்பது நடுவில் ஓட்டையில்லாமல், வட்டமாய் உருளைக்கிழங்கு வைத்து நம்மூர் பஜ்ஜியைப்போலிருக்கும்.

அந்த வடையை பாவ் எனப்படும் சின்ன பிரட்டின் நடுவில் வைத்து சாப்பிட்டிக் கொண்டிருந்தவள்.

“தாஸ் எப்பவும் ஒரு குட்டிக்கதை சொல்வீங்களே இப்பவும் ஒன்னு சொல்லுங்க கேக்கணும் போலிருக்கு.”

எனக்கும் ஆச்சர்யம்தான் இருந்தாலும் கேட்டுவிட்டாளே என்பதற்காக,

“இங்கப்பாரு பூனம் இந்தக்கதையை எங்கப்பா எப்பவும் சொல்லுவாறு, கொஞ்சம் தண்ணியடிச்சிட்டா மகன்மேல பாசம் பொத்துக்கிட்டு ஊத்தும் ஒரே கதையா வரும். அதில ஒன்னுதான் இது, அப்பா சொந்தமா யோசிச்சதா இல்லை எங்கையாவது படிச்சதான்னு தெரியாது ஆனா எனக்கு பிடிச்சக்கதைகளில் இதுவும் ஒன்று.

அதாவது, ஒருத்தன் தெருவழியா நடந்து எங்கேயே போய்க்கிட்டிருந்தானாம் அப்ப அவனோட செருப்பு அருந்துருச்சாம், பக்கத்தில் தைப்பதற்கும் ஆளில்லாமல் இருக்க, போகும் இடத்திற்கும் அறுந்த செருப்பை கொண்டு போகமுடியாமல் பக்கத்தில் இருந்த வீட்டிற்கு சென்று, 'ஐயா இந்த செருப்பு அருந்துருச்சு, முக்கியமான வேலையாப்போறேன். உங்கவீட்டில் விட்டுட்டு போறேன் வர்றப்ப எடுத்துக்குறேன்' அப்படின்னு சொன்னானாம். அந்த வீட்டிலேயும் ஒத்துக்கிட்டாங்க. அந்த காரியத்துக்கு போய்ட்டு வந்து செருப்பை எடுத்துட்டு போனானாம்.

அடுத்த சில நாள்களில் ஏதோ பிரச்சனையால் அவன் இறந்துபோக, அவன் உடலை முன்னாடி அவன் செருப்பை விட்டுட்டு போன வீடிருக்கும் தெரு வழியிலேயே எடுத்துட்டு போனாங்களாம். அப்ப அடாத மழை பெஞ்சிச்சாம். கரெக்டா அந்த செருப்பை விட்டுட்டு போன வீட்டிற்கு எதிரில் வந்ததும் கொஞ்சமும் நகர முடியாத சூழ்நிலை.

இங்கத்தான் எங்கப்பா சொல்வாரு இதே இந்த பொணத்தை மழை விடறவரைக்கும் உங்க வீட்டில் வைத்திருக்கிறோம்னு சொன்ன விடுவாங்களா வீட்டில் அதனால பிஞ்ச செருப்புக்கு இருக்குற மரியாத செத்த பொணத்துக்கு கிடையாதுன்னு. இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்வாருன்னு கேட்குறியா, ஏன்னா நான் வேகமா வண்டி ஓட்டுவேன் யார் யாரோ சொல்லியும் நான் கேட்டதேயில்லை. அதற்காக ஒருநாள் தண்ணியடிச்சிட்டு பாசமா சொன்ன கதைதான் இது நல்லாயிருந்துதா.” நான் கேட்க,

“உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாது வேறென்ன சொல்ல.” சொல்லிவிட்டு என் தலையில் கொட்டினாள். நான் கொஞ்சம் சாதாரணமாய் ஆகியிருந்ததை அறிந்தவள் போல்,

“சரி இன்னிக்கு அப்படியென்னத்தான் பிரச்சனை.” அவள் எதைக்கேட்க வருகிறாள்னு புரிந்துதான் இருந்தது எனக்கு.

“பிரமாதமான பிரச்சனையெல்லாம் ஒன்னுமில்லைடா, ஆனாலும் கொஞ்சம் டென்ஷனாயிட்டேன் அவ்வளவுதான்.” நான் சொல்ல,

“தாஸ், எந்தப்பிரச்சனையாயிருந்தாலும் நேரடியா பேசிடு. நேரடியா பேசாம, ம் குறிச்சி வைச்சிட்டேன், காத்திருக்கிறேன், அப்படியெல்லாம் மனசை குழப்பிக்காத. இதையெல்லாம் விட உனக்கு ஒரு அட்வைஸ் நான் கொடுக்கணும்னா இதையெல்லாத்தையும் விட்டுறு. கேட்டா வாத்தியார் சொன்னார் அது இதும்பே, வாத்தியார் எங்கச்சொன்னார் உன்கிட்ட எழுதிக்கிழிக்க, நீயா ஏகலைவனா மாற நினைக்கிறது ரொம்பப் பெரிய தப்பு.”

எனக்கு உண்மையிலேயே சிரிப்புத்தான் வந்தது. என்னை நன்றாய்ப் புரிந்துகொண்டிருக்கிறாள் பூனம் இருந்தாலும் அவள் சொன்ன உருவகத்தில் தவறிருந்ததால்,

“பூனம் உண்மைதான் வாத்தியார் இப்படி எழுதச் சொல்லலைதான். இருந்தாலும் ஏகலைவன்ங்கிறது அவ்வளவு சுலபமான வார்த்தைப் பிரயோகம் கிடையாது. நானென்னவோ நாயைப்பார்த்து அம்பெய்த மாதிரியில்ல சொல்ற, நானெல்லாம் இன்னும் வில்லையே எடுக்கலை. வாத்தியாருக்கு ஏகலைவனாயிருக்குறதுல ஒன்னும் தப்பே கிடையாது, ஏற்கனவே நிறைய ஏகலைவர்கள் இருக்கலாம் இருக்காங்க. எனக்கு அந்த தகுதியிருக்குதான்னு தான் முதல்ல பார்க்கணும்.

இதையெல்லாம் விடு, இந்த விஷயங்கள் நம்ம மனசுக்கு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் வேண்டும் நான் ஒன்னும் எருமைமாடு கிடையாது. என்ன நடந்தாலும் அப்படியே இருக்கிறதுக்கு, கொஞ்ச நேரத்துக்கு பாதிப்பை இந்த விஷயங்கள் ஏற்படுத்தணும் அதுதான் நல்லதும்கூட. அது அப்பவே முடிஞ்சிறுச்சு. அதனால இதைப்பற்றிய பிரச்சனையில்லை. நீதான் ரொம்ப சங்கடப்படுத்திட்ட, தமிழை விட, வாத்தியாரை விட, நீதான் எனக்கு ரொம்ப முக்கியம் அதை மட்டும் நீ புரிஞ்சிக்கிட்டா போதும். நம்ம கல்யாண விஷயமா உங்க வீட்டில் என்ன சொன்னாங்க அதைச்சொல்லு முதல்ல.”

“என்னமோ தெரியாது மாதிரி கேட்குறீங்க, நீதான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்ற, எங்கவீட்டில் இப்பவேக்கூட தயார்தான். என்னை கல்யாணம் பண்ணிக்கொடுக்க.” கொஞ்சம் யோசித்தவளாய்.

“அதான் சரியாய்டன்னு சொல்றீங்க, நாம இப்ப வெளியில் போயே ஆகணுமா, எனக்கு நாலுநாளா நிறைய வேலை செஞ்சதுனால தூங்கணும் போலிருக்கு என்னை ஹாஸ்டலில் எறக்கிவிட்டுடுங்க. நான் போய் தூங்குறேனே.”

அவள் கேட்க எனக்கும் பாவமாய்த்தான் இருந்தது. ஆனாலும் படத்திற்கு போகவும் லோக் கர் போகவும் ஆசையைக் கிளப்பிவிட்டதால் முடியாதென்று சொல்லி வண்டியை வேகமாய்ப் புனே சிட்டியை நோக்கி செலுத்தினேன்.

Related Articles

4 comments:

  1. Nainaa...andha photo enga eduthadhu..

    ReplyDelete
  2. அந்த போட்டோ லோக்கரில் தான் எடுத்தது. ஆனால் நான் அதில் இல்லை.

    ReplyDelete
  3. ராசா பார்த்து ராசா, இதை இங்கே போட்டிருக்கறது தெரியுமா அவங்களுக்கு? ஆடிய காலும் பாடிய வாயும் ப்ளாக் எழுதுனவன் கையும் சும்மாவே இருக்காது.....

    ப்ளாக் எழுதலைனா கையெல்லாம் நடுக்கும் அதனால் மின்னஞ்சலில் வருவதையாவது போட தோனும்...

    வாழ்த்துகள் சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்க...

    ReplyDelete
  4. குழலி என்னோட மின்னஞ்சல் முகவரி இது

    mohandoss.i@gmail.com

    ஒரு மெயில் போடுறீங்களா?????

    ReplyDelete

Popular Posts