சிறிது நேரத்தில் இராஜேந்திரனை அழைத்துக் கொண்டு குந்தவை சென்றுவிட. இராஜராஜரும் வந்தியத்தேவரும் மட்டும் அங்கிருந்தனர். அந்த இடத்தில் நிலவிய மௌனம் இருவருக்குமே விசித்திரமாய் இருந்தாலும், இருவருமே அதை முடிவுக்கு கொண்டுவரும் மனநிலையில் அப்பொழுது இல்லை.
பிறகு சிறிது நேரத்தில் இராஜராஜரே அந்த மௌனத்தைக் கலைத்தார்.
"தேவரே நீங்கள் எனக்கு ஒரு உறுதிமொழியளிக்க வேண்டும். எனக்குப் பிறகு இராஜேந்திரனே பட்டத்திற்கு வருவான் என்ற உறுதிமொழி வேண்டும்."
"அருண்மொழி என்னயிது???"
சாதாரண சந்தர்ப்பங்களில், வந்தியத்தேவர் 'மன்னரே' என்று தான் விளிக்கும் வழக்கம் இருந்தாலும் இருவருக்கும் இடையில் இருந்த நட்புறவும், குந்தவை தேவியை மணந்ததால் வந்த உறவும் வந்தியத்தேவருக்கு அருண்மொழி என்று அழைக்கும் உரிமையை அளித்திருந்ததது இருந்தும் அதுநாள் வரை அப்படி விளித்திருக்காத அவர் அருண்மொழி என்று அன்று விளித்ததற்கு காரணம் அவரிடம் கேட்கப்பட்ட வாக்குறுதி.
இன்னும் சொல்லப்போனால் இராஜராஜர் அப்படிக் கேட்பதற்கான காரணமும் வந்தியத்தேவருக்கு நன்றாகவே விளங்கியது. இருந்தாலும் அப்படியொரு கேள்வி தன்னிடம் கேட்கப்படாது என்றே நினைத்துக்கொண்டிருந்தவரை அந்தக் கேள்வி அதிகமாய்த் தான் அசைத்தது.
"தேவரே இந்தக் கேள்வியை உங்களிடம் நான் கேட்கக்கூடாதுதான். இருந்தாலும் இந்த ஒன்று மனதில் அடியில் இருந்து உறுத்திக் கொண்டிருக்கும் பொழுது என்னால் மற்ற அரசியல் விவகாரங்களில் முழுமனதாக ஈடுபடமுடியாமல் செய்துவருகிறது. உங்களுக்குத் தெரியாததென்ன,
இன்னும் பாண்டியர்கள் கூட முழுமையாக நம் கட்டுப்பாட்டில் வரவில்லை, ஈழதேசத்தின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாண்டியன் உதவி கிடைத்ததும் நிச்சயம் பிரச்சனையளிப்பான்.
கீழைசாளுக்கியத்தின் தாயாதிப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருந்தாலும், மேலைச்சாளுக்கியம் தொடர்ந்து பலம்பெற்றுவரும் நிலையில் என்றைக்கிருந்தாலும் அவர்களால் பிரச்சனையிருக்கிறது. இவை மட்டுமல்லாமல் என்னுடைய கனவான ஒரு கடற்படையை உருவாக்கி பலநாட்களை நோக்கி செல்லவேண்டும்.
இப்படி நாளாப்பக்கமும் பிரச்சனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான் ஒருவரிடம் குறிப்பாக உங்களிடமாவது நம்பிக்கை வைக்கவேண்டுமில்லையா? பல சமயங்களில் அந்த நம்பிக்கை விட்டுப்போய் என்னை பாடாய்ப்படுத்துகிறது. உங்களுக்குத் தெரியாததல்ல, பதினாறு வருடம் நான் பட்டபாடு.
சிறுவயதில் சேவூர்ப்போர்க்களத்தில் பகைவரை சொல்லிச்சொல்லி அடித்த தமையனாரையே, சில ஆட்கள் பின்னணியில் இருந்த பலத்தால் மட்டுமே கொன்று, நியாயமாயும் தர்மப்படியும் எனக்குவரவேண்டிய பட்டத்தை உத்தமசோழனால் பறிக்கமுடியுமென்றால்..." முடிக்க முடியாமல் இராஜராஜர் இழுத்துக்கொண்டிருக்க, வந்தியத்தேவருக்கு மன்னருடைய நிலை நன்றாகத் தெரிந்துதான் இருந்தது.
வந்தியத்தேவர் எதையோ சொல்ல வாயெடுத்தார், ஆனால் அவரைத்தடுத்த இராஜராஜர்,
"தேவரே நான் முடித்துவிடுகிறேன், அரியணைக்கு எல்லா உரிமையும் உள்ள, தமையனாரின் மகன், கரிகாலக்கண்ணன், இராஜேந்திரனுக்கு எதிரியாய் கொண்டுவரப்படுவானோ என்ற அச்சம் என்னை அலைக்கழிக்கிறது. கரிகாலக்கண்ணன் அப்படியொரு ஆசைவசப்படுவானாயின் என்னால் கூட அவனை மறுத்து பேசயியலாதே, தந்தையில்லாமல் வளர்ந்தவனுடைய ஆசையை நிறைவேற்றமுடியாத சிற்றப்பனாய் இராஜேந்திரனை அரியணையில் அமர்த்தும் அளவிற்கு கல்நெஞ்சக்காரனா நான்.
நீங்கள் தான் இராஜேந்திரனை வளர்த்து வருகிறீர்கள், உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கக்கூடாதுதான் என்றாலும் அப்படியொரு சமயம் வரும்பொழுது நீங்கள் என் மகனுக்கு சாதகமாக இருப்பீர்களா?"
முதன் முதலில் வந்தியத்தேவருக்கு, இராஜராஜர் இந்தக் கேள்வியை கேட்க ஆரம்பிக்கும் பொழுது சிறிது வருத்தம் இருந்தாலும். தற்பொழுது சிறிது சந்தோஷமாகக்கூட இருந்தார். உண்மைதான் இரண்டாம் ஆதித்தனின் மகனான, கரிகாலக்கண்ணனுக்கு இராஜேந்திரனுக்கு இருப்பதைப் போன்று அரியணையின் மீது அத்துனை உரிமையும் இருந்தது.
சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தின் பொழுதே ஆதித்த கரிகாலனும் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது, முதலில் துணை அரசனாகயிருந்து பின்னர் அரசனாகவும் பதின்மூன்று ஆண்டுகள் தொண்டைமண்டலத்தை ஆட்சிசெய்தவர். இதனால் முறைப்படியோ இல்லை தருமப்படியோ கரிகாலக்கண்ணன் ஆட்சிப்பொறுப்பைக் கேட்டால் மறுக்க முடியாதுதான்.
இராஜராஜரின் அருகில் வந்து கட்டிப்பிடித்துக் கொண்டவர். சிறிது நேரத்தில் விலகிவிட்டு,
"மன்னரே உங்களின் நிலை எனக்கு நன்றாகப் புரிகிறது. இன்னும் சொல்லப்போனால் எனக்கு நீங்கள் இன்று கேட்ட வாக்குறுதியை நினைத்து கொஞ்சம் நகைப்பாய்க் கூட இருக்கிறது. இதே போன்றதொறு வாக்குறுதியை நான் உங்களிடம் கேட்பதற்காக எத்தனை முறை முயற்சிசெய்து பின்னர் அமைதியாகியிருக்கிறேன் தெரியுமா.
எங்கே உங்கள் தமையனாரின் மேல் பாசமில்லாதவனாக, பக்தியில்லாதவனாக சித்தரிக்கப்படுவேனோ என நினைத்து எழுந்த கேள்விகளை அப்படியே உள்ளுக்குள் கட்டிவைத்திருக்கிறேன். புரியவில்லையா?
நான் உங்களிடம் எக்காரணம் கொண்டும் இராஜேந்திரனைத் தவிர்த்த ஒருவரை அடுத்த மன்னராக அரியணையில் ஏற்ற நீங்கள் நினைக்கக்கூடாது என்று உறுதிமொழி வாங்க நினைத்திருந்தேன். நீங்களே இன்று கேட்டுவிட என்னைப்போல் மகிழ்ச்சியாய் இருப்பவன் இந்த உலகத்தின் யாருமே இருக்கமுடியாது. இதனாலெல்லாம் கரிகாலக்கண்ணனின் மேல் எனக்கு பாசம் கிடையாது என்பதில்லை. இராஜேந்திரன் ஒரு கண் என்றால் கரிகாலக்கண்ணன் மற்றொரு கண்ணைப்போன்றவன்.
வீரத்திலும் விவேகத்திலும் இராஜேந்திரனை அடித்துக்கொள்ளும் ஒருவனை இந்தப் பிறவியில் நான் இன்னும் பார்க்கவில்லை. நம்மையெல்லாம், நம் சாதனைகளையெல்லாம் தூக்கி சாப்பிடப்போகிறான் இராஜேந்திரன். என் மனதை உறுத்திக் கொண்டிருந்ததெல்லாம். நியாய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் என்று எதையோ ஒன்றை சொல்லி உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தின் எங்களில் கைகளை கட்டி வைத்திருந்ததைப்போல் இப்பொழுது நடந்துவிடக்கூடாதென்று தான். அப்படியொரு சூழ்நிலை வந்திருந்தால் உங்களைக் கைது செய்துவிட்டு என் மருமகனை அரியணையில் அமரச் செய்திருப்பேன்."
வந்தியத்தேவர் சொல்லிமுடித்ததும் இராஜராஜர் வந்தியத்தேவரின் முதுகெலும்புகள் உடையும் படி கட்டிப்பிடித்துக்கொள்ள,
"என்னது என் தம்பியைக் கைது செய்வதா? அதற்கு இப்படியொரு உபசரிப்பா? என்ன நடக்கிறது சோழ தேசத்தில் என்று கேட்டவாறு குந்தவை உள்ளே நுழைய, வந்தியத்தேவர் மகிழ்ச்சி சாகரத்தில் நீந்திக்கொண்டிருந்தவர், விளையாட்டாக,
"தேவி நீ ஆள்வதற்கு நாடு கேட்டாயல்லவா? போரிட்டு வேறு நாடுகளைப் பிடித்து நிறைய ஆண்டுகள் ஆகும் வேலையது. பேசாமல் இராஜராஜரை சிறைபிடித்து விட்டு, நாமிருவரும் ஆட்சிசெய்தால் என்ன என்று நினைத்தேன், அதைப்பற்றி மன்னரிடம் ஆலோசனைக் கேட்கத்தான் சந்தோஷமாய் ஆளுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார் அதற்குள் நீயும் வந்துவிட்டாய்."
வந்தியத்தேவர் வேடிக்கையாய் சொல்ல, சோழ வரலாற்றில் பெரும் பெயர் எடுக்கப்போகும் அந்தச் சிறுவன் வந்தியத்தேவருக்கும், இராஜராஜருக்கும் இடையில் நடந்தவற்றை அறியாதவனாய், குந்தவைதேவி வந்தியத்தேவரின் மீது காட்டிய பொய்க்கோபத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.
In சோழர்கள் தொடர்கதை நட்சத்திரம்
நட்சத்திரம் - ஒரு சோழ பரம்பரைக் கதை - இறுதிப்பகுதி
Posted on Saturday, February 18, 2006
நட்சத்திரம் - ஒரு சோழ பரம்பரைக் கதை - இறுதிப்பகுதி
பூனைக்குட்டி
Saturday, February 18, 2006
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...
-
ரவிவர்மனுக்கு சில மாதங்களாகவே அவனுடைய வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாக தோன்றியது. அவனுடைய வாழ்க்கைமுறை சிலசமயம் ஆச்சர்யத்தையும் பலசமயம் கோபத்தையும் ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
மோகன்!
ReplyDeleteரொம்ப அழகாக கொண்டு செல்கிறீர்கள். சில இடங்களில் எனக்கு அவ்வளவாக தெரியாததால் புரியவில்லை :-( ( அதுக்காக நீங்க எல்லாத்தையுமா விளக்க முடியும் :-). மற்றபடி சொல்கின்ற கதை நன்றாக புரிகிறது. பேச்சு மொழியில் எழுதுவது எளிது. வரலாறு எழுதுவது கடினம். நன்றாக எழுதிகிறீர்கள். இன்று தான் எனக்கு நேரம் கிடைத்தது. அதனால் ஒவ்வொன்றாக படித்துக்கொண்டிருக்கிறேன். நட்சத்திர வாரம் என்று ஆர்பாட்டம் பண்ணாமல், அழகாக திருப்தியாக கொண்டு செல்கிறீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே.
அன்புடன்,
சிவா
சிவா, நன்றி மீண்டும் ஒருமுறை. முன்பே ஒரு இடத்தில் சொல்லியிருந்தேன். இந்தக் கதை படிப்பதற்கு இல்லை புரிந்து கொள்வதற்கு, அது பல இடங்களில் பல விஷயங்களை தெரிந்துகொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை நிச்சயம் ஏற்படுத்தும்.
ReplyDeleteநன்றிங்க சிவா.
இந்தக் கதையின் இறுதிப் பாகத்தை இப்பொழுதுதான் பார்த்தேன். கதை புரிந்தது. ஆனால் சொல்ல வந்தது சரியாகப் புரியவில்லையோ எனத் தோன்றுகிறது. நல்ல முயற்சி.
ReplyDeleteஎன்ன புரியலைன்னு சொன்னா புரியவைக்க முயற்சிசெய்வேன். இராகவன்.
ReplyDelete