"யாராச்சும் சரியான `சினிமா கிறுக்கு’ன்னு சொன்னால் கோபமாய்த்தான் வரும். சினிமா பார்ப்பவர்களெல்லாம் அறிவில் கொஞ்சம் மட்டமானவர்கள் என்ற வியாக்கியானத்தை உடைய கோஷ்டி ஒன்று உள்ளது. சினிமா பார்ப்பவர்களின் அறிவு எதனால் குறையுமென்று அவர்களால் விளக்க முடிவதில்லை. இன்னொரு கோஷ்டி தமிழ்ப் படங்கள் பார்ப்பவர்களெல்லாம் காட்டான்கள் போலவும் ஆங்கில அல்லது பிற மொழிப் படம் பார்ப்பவர்களே அறிவு ஜீவிகள் என்பது போலும் பேசித் திரிவார்கள். மொழி வேறு அறிவு வேறுன்னு புரியாத அவர்களின் விமர்சனம் தேவையற்றது."
தாணு அவர்கள் அவர்களுடைய நட்சத்திரப் பதிவில் இப்படிச் சொல்லியிருந்தார்கள். இப்படி சில விஷயங்கள் சிலருக்கு ஒன்றாய் இருப்பதைப் பற்றி நான் நினைத்து வியந்திருக்கிறேன். ஆங்கிலப்படங்கள் பற்றி விமர்சனங்களை செய்தவன் என்ற முறையில் சில விஷயங்களை தெளிவுபடுத்தவும் இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொள்கிறேன்.
சினிமா
எங்க வீடு ஒரு மிடில்கிளாஸ் வீடு என்பதால், தொலைக்காட்சிப்பெட்டி எங்கள் வீட்டிற்கு வந்தது ரொம்பநாள் கழித்துத்தான். அப்பொழுதும் சில குடும்ப பிரச்சனைகளால் படத்தின் கிளைமாக்ஸ் வரை(இல்லை அதற்கு சற்று முன் வரை) பார்த்துவிட்டு கிளைமாக்ஸ் பார்க்கப்படாமல் விட்டிருக்கிறேன். இதனால் நான் கிளைமாக்ஸ் மட்டும் பார்க்காத படங்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும். இதனாலெல்லாம் சின்னவயதில் ஒரு வெறி சினிமா பார்ப்பதென்றால்!
உங்களிடம் நீங்கள் உங்கள் அப்பா, அம்மா மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் சினிமாத் தியேட்டர் சென்று பார்த்த படங்களை பட்டியலிடச் சொன்னால் முடியுமா ஆனால் என்னால் முடியும்.
காரணம் கொஞ்சம் ஸ்ட்ரிக்டான அப்பா அம்மா என்பதால், நாங்கள் எங்கள் ஏரியாவிற்கு, பிலக், சாந்தி படம் வந்தால் மட்டும் தான் அழைத்துச் செல்லப்படுவோம். அதாவது முதன்மை தியேட்டர்களில் படம் வந்து ஓடி, பிறகு இரண்டாம் தன்மை தியேட்டர்களில் ஒடும் பொழுது அப்பொழுதும், குறிப்பாக ரஜினி படங்கள் மட்டும் தான் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறோம். இதற்கு சில மிகச்சில விதிவிலக்குகள் உண்டு, அஞ்சலி, சேரன்பாண்டியன் போல், மொத்தம் ஒரு பத்து படங்கள் தான் நாங்கள் பார்த்திருப்போம் குடும்பமாக மீதி எட்டுபடங்கள் ரஜினியினுடையதே. மற்றபடிக்கு அந்த படங்கள் சன்டிவியில் காட்டப்படும்வரை காத்திருக்கவேண்டும்.
இப்படியிருந்த எனக்கு காலேஜ் வாழ்க்கை இன்னொரு பரிமாணத்தைக் காட்டியது என்றாலும் காலேஜை கட் அடித்துவிட்டு செல்லும் மாணவர்கள் தவறானவர்கள் என்பது போல் போதிக்கப்பட்டிருந்ததால் இது ஆரம்பித்தது இரண்டாம் ஆண்டில் தான். பிறகு மூன்றாம் ஆண்டில் பிராஜக்ட் ஏற்கனவே செய்துவிட்டு அதற்காக கொடுக்கப்பட்ட கல்லூரி நேரத்தில் சினிமாத்தியேட்டரில் குடித்தனம் நடத்தியிருக்கிறேன்.
அதன் பிறகு வேலைக்கு செல்ல ஆரம்பித்த நாட்களில் ஆரம்பித்தது சினிமாவின் மீதான பைத்தியம் என்றால் அது கொஞ்சமும் மிகையல்ல, நான் பார்த்த படங்கள் கொஞ்சம் அதிசயமாகவே இருக்கும், சன், ராஜ், ஜெயா,கே போடப்படும் எல்லா படங்களையும் பார்த்துவிடுவேன், எல்லாப்படங்களையும்.
எங்க அம்மாவும் அக்காவும் எப்பிடிடா இந்தப்படத்தையெல்லாம் பார்க்குற என்பது மாதிரியான படங்கள் அந்த லிஸ்டில் அதிகம்.(இப்படித்தா இருக்கும் எனத்தெரிந்தும் தீபாவளி முதல் நாள் பார்க்கும் விஜய் படங்கள் உள்ளிட்டு.) யார் இயக்குநர், யார் நடிகர் என்று பார்க்காமல் படம் பார்த்திருக்கிறேன். இதில் மொழிமாற்றப்பட்ட பூதப்படங்கள், சில ஆந்திரமொழி டப்படங்கள் என எல்லாம் அடக்கம். படங்களின் வரிசை தரவில்லை அவ்வளவுதான்.
ஆனால் ஆங்கிலப்படங்களின் தாக்கம் என்னிடம் அதிகமாகத்தான் இருந்தது, எச்பிஒ வும் ஸ்டார் மூவிஸ்ம் பின்னர் சன்,ராஜ், ஜெயா, கேயை அடக்கிவத்திருந்தாலும் நேற்றுவரை இரவு 10.30 க்கு கேடிவியின் படத்தை பார்த்துவருகிறேன். இதில் எனக்கு எந்த பிம்ப உடைதலும் நிச்சயம் கிடையாது.
ஒரு காலத்தில் ஞாயிற்றுக்கிழமையில் சன்டிவியில் போடப்படும் நான்கு மணிப்படத்தை பார்க்கவிட்டால் என்னமோ ஞாயிற்றுக்கிழமை வீணாய்ப்போய்விட்டதாய் நினைத்த காலம் உண்டு. இன்று கொஞ்சம் மாறியிருக்கிறது ஏனென்றால் இன்று நான் தனிக்காட்டு ராஜா, அதிகம் காசு, டிவிட் ப்ளேய்ர், டிவிடி, விசிடி கலெக்ஷன் என்னிடம் பெரிதாக உள்ளது அதனால் படங்கள் பார்ப்பது குறைந்தது கிடையாது.
பிரச்சனைகளின் மத்தியில் நடமாடிக்கொண்டிருப்பதால் சினிமா எல்லாவற்றையும் மறந்துவிட்டு கொஞ்ச நேரம் நிம்மதியாக நடமாட வைத்திருக்கிறது. இதில் நான் தாணுவின் கூற்றை முற்றிலுமாக ஒப்புக்கொள்கிறேன். மிடில்கிளாஸ் மக்களின் பொழுதுபோக்கில் முக்கியமானது சினிமாதான்.
கிரிக்கெட்
இரண்டாவது விஷயம் கிரிக்கெட், இந்திய இளைஞர்களின் இன்னொரு பொழுதுபோக்கு, விளையாடுவது இல்லை பார்ப்பது. வாழ்க்கையில் காலங்கார்த்தாலை அஞ்சுமணிக்கு நான் எழுந்து படித்ததா சரித்திரமேக் கிடையாது ஆனால் அலாரம் வைத்து முந்தைய நாளே, நொறுக்குத்தீனி வாங்கி வைத்திருந்து எழுந்து பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அதிகம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் எனச் சொல்வதற்கு காரணம். நான் ஒரு ஆஸ்திரேலிய அணியின் பைத்தியக்காரத்தனமான விசிறி. ஒரு நிகழ்ச்சி நடந்தது எங்கள் வீட்டில் அதை சொல்லவேண்டு இந்த நேரத்தில்,
நான் ஒரு மாலை நேரம் விளையாடிவிட்டு, இரவு வீட்டிற்கு வந்திருந்தேன் அக்கா என் அம்மாவின் முன்நிலையில், "தம்பி உனக்கு ரொம்பவும் பிடித்த கிரிக்கெட் ஆட்டக்காரங்கள் யார்" என்று கேட்க, நான் கொஞ்சமும் தயங்காமல் "மார்க் வா, ஷைன் வார்ன்." சொல்லிட்டு மார்க் வா ஒரு நேட்சுரலி கிப்டட் எலகண்ட் ப்ளேயர், அப்புறம் ஷைன் வார்ன், இந்த நூற்றாண்டின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்னு ஆரம்பிக்க, அக்காவும் அம்மாவும் சிரித்தபடியே, அன்று மார்க்கும் வார்னேவும் ஒரு கிரிக்கெட் ஊழலில் மாட்டியிருந்ததை சொல்லி சிரித்தது இன்றும் நினைவில் இருக்கிறது.
எனக்கு ஆஸ்திரேலிய அணியை பிடித்திருந்ததற்கு காரணம் அவ்வளவு நிச்சயமாகத் தெரியவில்லயென்றாலும் ஒரு க்ளூ கிடைத்திருக்கிறது. ஆனால் அது வேண்டாம் இங்கே. சினிமாவின் மீதான மோகம் இன்று வரை தொடர்வதைப்போன்று கிரிக்கெட்டின் மீதான மோகம் இன்று இல்லை.முன்பெல்லாம் சினிமா போலத்தான் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாபே விளையாடும் ஆட்டத்தைக் கூட பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தை நேரில் பார்க்கும் சந்தர்ப்பங்களும் மிகச்சிலவே.
இதற்கு ஒரு முக்கிய காரணம். பல நாட்களில் வீட்டிலோ இல்லை நண்பர்களிடமோ என்னால் வாக்குவாதத்தில் இறங்க முடிந்திருப்பதில்லை, அந்த மாட்ச் பார்க்கவேண்டுமென்று. மற்றபடிக்கு விவரங்கள் இன்று வரை நுனிவிரலில் தான் (ஆஸ்திரேலிய கிரிக்கெட் மட்டும். Thanks to baggygreen.com indeed cricinfo.com) உண்மையில் கிரிக்கெட் மீதான பித்து குறைந்தததைப்போல் சினிமா மீதான் பித்தையும் குறைத்துவிட அதிகம் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். முடிவதில்லை. முடிந்தால் ஒன்று மட்டும் நிச்சயம் நான் இப்பொழுது இருப்பதை விட நல்ல இடத்திற்கு சென்றுவிடமுடியும். ஏனென்றால் டிவியும் திரைப்படங்களும் மனிதவாழ்க்கையில் One of the Time Eating habits.
புத்தகங்கள்
ஆசிரியர்கள் வீட்டில் இருந்ததால் புத்தகங்களின் அறிமுகம் மிக எளிதாகக் கிடைக்கக்கூடியதாக இருந்தது. இன்றும் நன்றாக நினைவில் இருக்கிறது நான் முதன் முதலில் படித்த புத்தகம், அது மீண்டும் ஜூனோ. முதல் பாகம் படிக்காமல் இரண்டாம் பாகம் படித்ததற்கு காரணம் ஏதோ ஒரு பத்திரிக்கையில் வந்து அதை பைண்ட் செய்து வைத்திருந்தார்கள் அதனால் தான். ஆனால் அந்தப் புத்தகம் முதலில் படிக்கும் பொழுது ஒன்றுமே புரியவில்லை, நல்ல சூப்பரான ஓவியங்கள் இருக்கும் அழகான நாய்க்குட்டி அவ்வளவுதான்.
பின்னர் அம்மாவால் அறிமுகம் செய்யப்பட்டது இருவர் ஒருவர், பாலகுமாரன் மற்றவர் எண்டமூரி வீரேந்திரநாத். எங்கவீடுகளில் சில எழுத்தாளர்களின் புத்தகங்களை அந்தக் காலத்தில் காசுகொடுத்து வாங்குவார்கள் என்றால் அது இவர்கள் இருவர் தான்.
பின்னர் தான் என் வாழ்வில் மறக்க முடியாத லைபிரரியன் ஒருவரை சந்தித்தேன். அந்த நாட்களில் எல்லாம் லைப்ரரியனாக ஆகிவிடவேண்டும் என்ற ஆசை கூட இருந்தது :-). அவர் தான் எனக்கு வரிசையாக அறிமுகப்படுத்தினார். எப்படி, சி, சி++, ஜாவா என்று படித்தால் கொஞ்சம் நன்றாய் இருக்குமோ அதுபோல் எனக்கு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார் வரிசையாக,
அவர் தான் தேர்ந்தெடுத்து தருவார் புத்தகங்களை பொன்னியின் செல்வர், சிவகாமியின் சபதம், கடல் புறா, யவனராணி இப்படி ஆரம்பத்தில் எப்படி என்னுடைய புத்தக ஆர்வத்தை வளர்க்க முடியுமோ அப்படி வளர்த்தாவர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் சோதனை முயற்ச்சியாக சில நாவல்களை தருவார் பின்னர் நாங்கள் அதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருப்போம். அப்படி சோதனை நாவலாக தந்தது அலை ஓசை. அதை அவர் என்னிடம் தந்த பொழுது நான் பள்ளியில் தான் படித்துக்கொண்டிருந்தேன் அதாவது பன்னிரண்டாம் வகுப்புக்கு கீழ் ஏதோ ஒன்று. அதிகமாய் புரிந்திருக்குமா என்று கேட்டால் சந்தேகம் தான் ஆனால் அந்த அனுபவம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
இப்படி எனக்கு எல்லா நேரத்திலேயும் நல்ல ஆசிரியர்கள் கிடைத்துவிட்டார்கள். பின்னர் தான் தமிழ் இலக்கியங்களுக்கு வழிகாட்டினார் அந்த லைப்ரரியன். அது ஒரு சுகமான அனுபவம் அதைப்பற்றி அப்புறம்.
ஆனால் இத்தனையிலும் நான் ஆங்கில நாவல்கள் படித்ததுகிடையாது. லைப்ரரியன் வற்புறுத்திய பொழுதும் வேண்டாமென்று மறுத்திருக்கிறேன். காரணம் ஒரு இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ். எனக்கு கொஞ்சமாவது புரிந்து படிக்க வேண்டும். மேலோட்டமாக படிக்க பிடிக்காது. அதனால் கொஞ்சம் வற்புறுத்தி லைப்ரரியில் வைக்கப்பட்டிருக்காத சில ஆங்கில நாவல்கள் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதிலும் ஒரு வழமையான தொடக்கம், இதை நானும் மற்றவர்களுக்கு வழிமொழிவேன் நீங்கள் ஆங்கில நாவல்களோ இல்லை கதைகளோ படிக்கும் வழக்கத்தை ஆரம்பிக்க விரும்புகிறீர்களா? சிட்னி ஷெல்டனில் இருந்து ஆரம்பியுங்கள். இது என்வரை நன்றாக உதவியது. பதின்ம வயது ஆட்களுக்கு ஏற்ற மாதிரியான் ஒரு ஆங்கில நாவல்களின் தொடக்கம் இதில் இருக்கும்.
இப்படி ஒரு சரியான ஆரம்பம் இல்லாமல் சுந்தரராமசாமியை படிக்க முடியாதோ அது போல் ஒரு நல்ல ஆரம்பத்தை எனக்கு ஆங்கிலத்தில் ஏற்படுத்திக்கொடுத்தது சிட்னி ஷெல்டன். ஒரே ஒரு புத்தகத்தைப் பற்றி மட்டும் நான் இந்த நேரம் பேச விரும்புகிறேன். யாரவது ராகிராவின் ஒரு புத்தகம் பெயர் பட்டாம்பூச்சு என்று நினைக்கிறேன். ஒரு ஆங்கில நாவலின் மொழிப்பெயர்ப்பு நாவல் அது. நாயகன் செய்யாத குற்றத்திற்காக நாடுகடத்தப்பட்டு சிறையில் இருந்து தப்பித்து பிறகு மாட்டிக்கொண்டு சிறையில் இருந்து தப்பித்து என்று ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்ட நாவல் அது.
என் வாழ்க்கையில் ஒரு நாவலை எடுத்துவிட்டு தொடர்ச்சியாக படிக்கவும் முடியாமல், படிக்காமல் இருக்கவும் முடியாமல் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திய நாவல் அது. யாரவது அந்த நாவல் படித்திருக்கிறீகளா? உங்களுக்கு எப்படி இருந்தது அந்த அனுபவம். ப்ளீஸ் சொல்லுங்களேன்.
In கிரிக்கெட் சினிமா புத்தகங்கள்
நட்சத்திரம் - சினிமா, கிரிக்கெட் மற்றும் புத்தகங்கள்
Posted on Sunday, February 19, 2006
நட்சத்திரம் - சினிமா, கிரிக்கெட் மற்றும் புத்தகங்கள்
பூனைக்குட்டி
Sunday, February 19, 2006
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...
-
ரவிவர்மனுக்கு சில மாதங்களாகவே அவனுடைய வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாக தோன்றியது. அவனுடைய வாழ்க்கைமுறை சிலசமயம் ஆச்சர்யத்தையும் பலசமயம் கோபத்தையும் ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
நீங்கள் குறிப்பிடும் புத்தகம் "பப்பிய்யோன்" (Pappillon, l is silent) என்ற பிரெஞ்சு புத்தகம். ஆன்றி ஷார்ரியேர் (Henri Charriere).
ReplyDeleteஆனால் ஒன்று, ரா.கி. ரங்கராஜன் அவர்கள ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்துதான் அதை தமிழாக்கம் செய்திருக்க வேண்டும். அந்த நாவலை ஃபிரெஞ்சிலும் படித்திருக்கிறேன். ரா.கி.ராவின் மொழிபெயர்ப்பு மிக அருமை.
இப்பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனக்கு கொஞ்சம் அல்ல நிறைய வித்தியாசமான அனுபவங்கள் இந்த நாவலைப் படித்த பொழுது, கொஞ்சம் கொஞ்சம் அலை ஓசை படித்த பொழுது ஏற்பட்ட அனுபவங்களை ஒத்தது.
ReplyDeleteநன்றிங்க டோண்டு சார்.
// நாயகன் செய்யாத குற்றத்திற்காக நாடுகடத்தப்பட்டு சிறையில் இருந்து தப்பித்து பிறகு மாட்டிக்கொண்டு சிறையில் இருந்து தப்பித்து என்று ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்ட நாவல் அது.
ReplyDelete//
there's a movie with similar story line. The movie came in the 70s. Title is 'Papillon'. Dustin Hoffman and Steve Mcqueen were in it. Fantastic movie..
Do watch it if you get a chance.
-Mathy
நிச்சயம் பார்க்கிறேங்க மதி, ரொம்ப நாள் ஒன்னும் புரியாமல் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறேன்னே தெரியாமல் அலைந்திருக்கிறேன். அந்த நாவலைப் படித்துவிட்டு, தற்கொலை முயற்சி செய்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல் அது. :-)
ReplyDeleteவாழ்த்துகள் மோகன்தாஸ்
ReplyDeleteநட்சத்திரமாமே
இந்தக்கதை குமுதம் பத்திரிக்கையில் தொடராகவும் வந்ததென்று நினைக்கிறேன்
அந்தமான் சிறையாகக் குறிப்பிட்டிருப்பாரோ
விறுவிறுப்பாக இருந்த நாவல்
வந்திருக்கலாம் மதுமிதா, ராகிராவை ஏகபோக உரிமை எடுத்துக்கொண்டது குமுதம் :-), அந்தமான்னு சொல்லியிருப்பாரான்னு தெரியாது.
ReplyDeleteநீங்கள் எண்டமூரி விரேந்திரனாத் என்றவுடன் நினைவுக்கு
ReplyDeleteவருவது துளசி தளம். சாவியில் தொடராக வந்தது.
எப்படி ஒரே கதையை இரண்டு விதமாக சொல்கிறார்
என்று வியப்புடன் படித்து வந்தேன். யார் கன்னடத்திலி
ருந்து மொழி பெயர்த்தார் என்று நினைவில்லை.
சாம்
/*
ReplyDeleteநீங்கள் எண்டமூரி விரேந்திரனாத் என்றவுடன் நினைவுக்கு
வருவது துளசி தளம். சாவியில் தொடராக வந்தது.
எப்படி ஒரே கதையை இரண்டு விதமாக சொல்கிறார்
என்று வியப்புடன் படித்து வந்தேன். யார் கன்னடத்திலி
ருந்து மொழி பெயர்த்தார் என்று நினைவில்லை.
சாம்
*/
சுசீலா கனகதுர்கா!!!!!!!!!!!!!