உங்களிடமெல்லாம் என்னை அறிமுகப்படுத்திக் கொள்வது என்றால், ஜாவா ப்ரொக்ராமராகவோ, இல்லை பேச்சுப்போட்டியாளனாகவோ, தமிழனாகவோ, இந்தியனாகவோ, சுஜாதாவின் தீவிர விசிறியாகவோ, இல்லை வேறுவேறு வகையாகவோ என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள மாட்டேன்.
கார்த்திகாயினி டீச்சர் என்ற இரண்டாம் வகுப்பு ஆசிரியரின் மகனாக உங்களின் மத்தியில் என்னை அறிமுகம் செய்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இப்பல்லாம் அவரவர் தவமாய் தவமிருந்து பார்த்துட்டு நைனாக்களுக்கு சப்போர்ட் செய்யும் வேலையில் மீண்டும் ஒரு அம்மா(அந்த அம்மா இல்லை) புராணம்.
வெறும் வார்த்தைக்கான வாக்கியம் அல்ல அது. நான் மேலே குறிப்பிட்ட ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் எனக்கு பெருமை சேர்த்த விஷயங்கள் தான். ப்ரொக்கிராமராக இருப்பதில் அடையும் பெருமிதம் தமிழனாக இருப்பதிலும் இந்தியனாக இருப்பதிலும் அடையும் பெருமிதத்துக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. அதைப்போலவே பேச்சுப்போட்டியாளன் என்பதும். என்னை ஆரம்பக்காலத்தில் பரவலாக அறிமுகப்படுத்தியது இதுதான். இப்படித்தான் சுஜாதாபற்றியதும். இதையெல்லாம் மீறித்தான் நான் சொல்கிறேன் முன்பிருந்த வாக்கியத்தை.
புதுசா சொல்றதுக்கு ஒன்னுமில்லைனு நினைக்கிறேன். எல்லோருக்குமே தாயின் அருமை நல்லா தெரியும். இருந்தாலும் எதுக்கு இந்த பதிவுன்னா ஒரு சின்ன காரணம் இருக்கு.
சின்ன வயசிலிருந்தே இருந்து வந்த என்னோட வாழ்க்கை முறையில் அம்மா என்ற விஷயம் ரொம்ப மேலானதாகத்தான் இருந்து வந்துள்ளது. ஆனால் நான் வெளிப்படுத்துவதில்லை. அது மட்டுமில்லாமல் இதை ஏன் வெளியில் காமிக்கணும் என்று நினைத்துவந்தவன் தான் நானும். இதன் போன்ற காரணங்களால் அம்மாவின் வேதனைகள் பல சமயங்களில் தெரிந்தாலும் புரிந்தாலும் அதற்கு ஆதரவாக சில விஷயங்கள் பேசவோ இல்லை நான் இருக்கிறேன் என்று சொல்லவோ கூட இல்லாத சமயங்கள் தான் இருந்திருக்கின்றன.
என்னுடைய உறவினர் ஒருவர் அவர் தாய்க்கு கொடுத்த சப்போர்ட் பார்த்துத்தான், எனக்கும் நமக்கு இவ்வளவு செய்த அம்மாவிற்கு ஒன்றுமே செய்யாமல் இருந்திருக்கிறோமே என்று முதன் முதலில் தோன்றியது. பண விஷயம் கிடையாது. ஒரு மாரல் சப்போர்ட். அதன் பிறகு கொஞ்சமாவது அதுபற்றி சிந்திக்க தொடங்கியிருந்தேன் சில சமயங்களில் செயல்படுத்தவும்.
நாம் நினைக்கலாம் அம்மாவைப் போய் என்ன பாராட்டுவது. சாப்பாடு நல்லாயிருந்ததுக்கா? இல்லை வீட்டை சுத்தமா வைச்சிருந்ததுக்கா?? என்று. ஆனால் எனக்கு தெரிந்தவரை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் இது போன்ற விஷயங்களை. தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவேண்டுமென்றும் திருமண வாழ்த்து சொல்லவேண்டுமென்றும். இதை நிச்சயமாகக் கேட்டு வாங்க முடியாதில்லையா அவர்களால்?
அதுதான், அவ்வளவுதான் சில சில சந்தோஷங்கள் அவர்களுக்கு கொடுக்கவேண்டுமென்று நினைக்கிறேன். சரி என்னைப் பார்த்தாவது சிலர்(குறிப்பாக சில ஆண்கள் :-)) இவனெல்லாம் இவங்க அம்மாவுக்கு செய்றான் நம்ம அம்மாவுக்கு நாம செஞ்சா தப்பே கிடையாதுன்னு நினைத்தால் நான் நினைத்த காரியம் கைகூடிவிட்டதாக எண்ணுவேன்.
துளசி அம்மா எழுதும் பொழுதோ, இல்லை உஷா(அம்மான்னா அடிக்க வருவாங்க :-)) மற்றும் பல பெண் பதிவர்கள் எழுதும் பதிவுகளை படிக்கும் பொழுதும் என் தாயாரை இது போல எழுத வைக்க வேண்டுமென்று நினைப்பேன். நானெல்லாம் கத்துக்குட்டி, விவரம் தெரியாது, என்ன எழுதுறதுன்னு புரியாது. அவங்களெல்லாம் டீச்சருங்க, நான் ஒன்னாம் வகுப்பு படிக்க ஆரம்பிச்சதுலேர்ந்து பேச்சுப்போட்டி பேசிக்கிட்டு வர்றேன். வயசுக்கேத்த மாதிரி பேச்சுப்போட்டிக்கு ஆழமாவோ கருத்து செறிவாவோ எழுதித்தந்தவங்க அவங்களெல்லாம். எழுத வந்தாங்கன்னா என்னையெல்லாம் தூக்கிவீசிறுவாங்க. அந்த நிலைமை கொஞ்ச நாளில் வருவதற்கு ரெய்மண்ட் ஸ்பென்சரையும்(சம்பளத்தை அதிகமாக்க), பிஎச்யிஎல் க்கு பிராட்பேண்ட் தரும் ஆக்களையும் வேண்டிக்கிறேன்.
இதுதான் நட்சத்திர வாரத்தில் இரண்டாவதாக வரவேண்டியது. அதனால் அப்படியே தருகிறேன். இன்று காதலர் தினமுமாக ஆகிவிட்டதாலும், மதி என்னிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கும் பொழுது இந்த நாளை குறிப்பிட்டு சொல்லியிருந்ததாலும். காதலர் தின சிறப்புப்பதிவாக ஒரு உண்மைக்கதையும் ஒரு கற்பனைக் கதையும் இதனுடன் வெளிவிடுகிறேன் தனித்தனியாக.
ரொம்ப நாளுக்கு முன்னாடி எழுதின தலைப்புடன் தொடர்புடைய கதையொன்னை உங்களுக்கு தர்றேன். இது கீற்றுவில் வந்தது, மரத்தடியில் ஆரம்பக்காலத்தில் எழுதியது. மரத்தடி மக்கள் படித்திருக்கலாம். (நிறைய மாற்றியிருக்கிறேன்.)
------------------------------
சொர்க்கவாசல் கதவு - குந்தவை வந்தியத்தேவன்
"திருச்சியில் குஷ்புவுக்கு கோயில் கட்டுனாங்கல்ல அதை அறநிலையத்துறையில் சேர்க்கணும் பெரிய போராட்டமே நடந்தது தெரியுமா உங்களுக்கு?"
உடன் தண்ணியடிக்க வந்திருந்த நண்பரிடம் சின்நைனா கேட்டுக்கொண்டிருந்த இந்தக் கேள்வி எதையோ பிடிக்க வீசிய தூண்டிலாய்ப்பட்டது மோகனுக்கு, வேறொரு சமயமாயிருந்தால் மறுத்துக்கூட பேசியிருப்பான் ஆனால் அது சரியான சமயமும் கிடையாது சரியான இடமும் கிடையாது.
அவர்கள் இருவருக்கும் போதை தலைக்கேறத் தொடங்கியிருந்த நேரம் அது. அந்த போதை மோகனை எப்பொழுதும் விடாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறது. இடையில் அவர்களின் பேச்சை மாற்ற விரும்பிய மோகனுடைய சித்தி,
என்னங்க தெரியுமா இவன் ஒரு நாளைக்கு இரண்டு தடவை கூட பாத்ரூம் போறதில்லை.
என்னவோ அவன் சித்தியின் நோக்கம் சரியானதுதான். அவர்களுடைய சிக்கலான பேச்சிலிருந்து காப்பாற்றிவிடும் எண்ணமிருந்தாலும் அதுவும் அன்று உதவவில்லை இன்னும் விவகாரமானது.
"வேறென்ன ஹீரோன்னு நினைப்பு, அடிக்கடி பாத்ரூம் போனால் கேவலம்னு நினைத்திருப்பான்." சில சமயங்களில் சில விஷயங்கள் நாம் எதிர்பார்க்காத திருப்பத்தை சந்திக்கும் அதுமாதிரிதான் அன்றும். இந்த விஷயத்தை விடாத அவருடைய நண்பரும்.
"ஒரு நாளைக்கு கிளின்டன் எத்தனை தடவை பாத்ரூம் போனான் எந்த பாத்ரூமில் போனான்னு கேட்டாத் தெரியும் சொந்தமா பாத்ரூம் போகத்தெரியாதா?" வளர்த்திவிட்டார்.
தண்ணியடிச்சிட்டா என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், யாரை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அதை மறந்துவிடவேண்டும். இந்த ஒருமைப்பாடு இல்லாத குடிகாரனே கிடையாது என்று பட்டது மோகனுக்கு.
நீண்ட அகலமான வீதிகள், சாலையில் இரண்டு பக்கங்களிலும் மரங்கள், ஒரே மாதிரியான ஆனால் அழகுக்காக வேறு வேறு வண்ணத்தில் இருக்கும் வீடுகள் கொண்ட குடியிருப்பு மோகனுடையது. மக்கள் அடுத்த நாளின் வேலையை நினைவில் வைத்திருந்து எட்டு மணிக்கே உறங்கிவிடுவார்கள். அமைதியான அந்த வீதி இன்றும் தெளிவாக மனதில் நிழலாடியது மோகனுக்கு. கூடவே ஜன்னலில் நின்று கொண்டிருந்த அவன் அம்மாவும்.
அவன் தாய் எட்டுமணிக்கெல்லாம் வீட்டின் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, ஜன்னலின் அருகில் வந்து நிற்க ஆரம்பித்தால் மோகனுக்கு அடிவயிற்றில் பீதியெழும்ப ஆரம்பிக்கும். அவனுக்கும் அவன் சகோதரிக்கும் உணவு ஏற்கனவே பரிமாறப்பட்டு, தூங்குவதற்கு நிர்பந்திக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் கண் இமைக்காமல் ஜன்னலின் வழியே பார்த்துக் கொண்டிருக்கும் அவன் தாயின் கண்களில் தெரிந்த வெறுமை, பயம், கோபம், இயலாமை அவனை தூங்கவிடாது. ஆனால் இவன் தூங்காமல் இருப்பது தெரிந்தால் உதைபட வேண்டியிருக்கும், பலநாட்கள் செருப்படிபட்டிருக்கிறான்.
அவன் அம்மாவிற்கோ மோகன் தூங்கவேண்டும்; அடித்தால் அழுதுகொண்டே தூங்கிவிடுவான் என்பதால் பாரபட்சம் பார்க்காமல் விழும் அடியில் தூங்கித்தான் போவான் அவனும். ஒன்பது மணிக்கு ஊரையே அளந்து கொண்டு வருவார் அவங்கப்பா, வந்ததிலிருந்தே அவன் அம்மாவிற்கு சோதனைதான், பல சமயங்களில் அவன் அம்மாவின் தலை சுவற்றில் முட்டப்படும் சப்தத்தின் கொடுமை தாங்கமுடியாததாக இருக்கும். கதவு பூட்டப்பட்டிருக்கும் ஆதலாம் வேறொன்றும் செய்வதறியாமல் பூட்டப்பட்ட கதவின் இன்னொரு நின்று கொண்டு அழுது கொண்டிருப்பான். தூங்கிக் கொண்டிருந்தவன் எப்பொழுது எழுந்தான் என்பதறியாமல் அதைப் போலவே மீண்டும் தூங்கிப்போய்விடுவான்.
காலையில் அவன் அம்மா காபி போட்டுக் கொண்டுவந்து தவலையை கீழேவைக்கும் சப்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தால், புருஷன் பொண்டாட்டி இருவரும் சிரித்துப்பேசிக்கொண்டு தினமலர் பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்கள். வெகுசில நாட்களிலே தான் அவனுக்கு இரவின் தொடர்ச்சியாக பகல் இருந்திருக்கிறது. பல நாட்களில் இரவு வந்தால் வேறுவாழ்க்கை பகலில் வேறுவாழ்க்கை. தினமும் இதே கூத்து, இத்தனை கொடுமையிலும் தற்கொலை என்ற ஒன்றை நினைத்துப்பார்க்காத அவன் தாயைப்பற்றி இப்பொழுது நினைத்தால் அவனுக்கு சொல்வதற்கு வார்த்தைகள் கிடைக்காது. உயிரோட இருக்கிறவங்களோட வேதனையை விட தற்கொலை பண்ணிக்கிட்டவங்களோட வேதனை அதிகமான்னு கேட்டால் மோகன் நிச்சயமாக இல்லையென்றுதான் சொல்வான், தற்கொலை செய்து கொள்வது வேதனையைப் பொறுத்ததல்ல, மனதைப் பொறுத்தது.
அதே இரவு, அதே வீதி, அதே ஜன்னல், அதே முகம் ஆனால் நிகழ்வுகள் வேறு. சில நாட்கள் எங்கோ விழுந்து கிடந்த அவன் தந்தையை சுமந்து கொண்டு ஆட்டோ வரும். சில சமயங்களில் அவன் தந்தை இங்கே விழுந்து கிடக்கிறார் என்று செய்தி கொண்டு ஆட்கள் வருவார்கள். அந்த இரவில் தனியாளாக அவன் அம்மா புருஷனை அழைத்துவருவதற்கு ஆள்தேடி கிளம்புவார். வீட்டிற்கு அழைத்து வந்ததும் சாதத்தை பிசைந்து கூளாக்கி, வெறும் வயிறா படுக்கக்கூடாதுன்னு ஊட்டிவிட்டு அப்பப்பா பெரும்பாடு.
அதெல்லாம் மோகனுடைய வாழ்க்கையின் கொடுமையான நாட்கள் இத்தனையும் பத்தாதென்று எல்லா குடிகாரர்களையும் போல் தன் மனைவியின் ஒழுக்கத்தை சந்தேகிக்கும் கணவனாக பெண்டாட்டியையும் பிள்ளைகளையும் இரவில் தனிஅறையில் பூட்டிவைக்கும் என்னுமொறுகொடுமை.
அதுவரை புருஷனிடம் அடி, உதைபட்டு வரும் அவன் தாய்க்கு அடுத்து அவன் சகோதரியின் வசவு தொடங்கும் அவசரத்திற்கு பாத்ரூம் போகமுடியாத சோகம் அவளுக்கு. தாயைப்பற்றி என்னென்ன பேச்சுக்கள். மோகனுக்கோ கேட்கவே பொறுக்காது. இதன் காரணங்களால் தண்ணீர் குடிப்பதையே மறந்து போன மோகன் கூட சில சமயங்களில் அவன் தாயை நச்சரித்திருக்கிறான் அவசரத்திற்கு. கணவனை எழுப்ப பயப்படும் அவன்தாய், வேறுவேறு வழிகளை ஏற்பாடு செய்வார், ஜன்னலுக்கு மேலேர்ந்து, பீரோவுக்கு பின்னார், பெட்ஷீட்டிற்குள் இப்படியெல்லாம் ஆத்திரத்தை அடக்கியிருக்கிறார்கள்.
இந்தக்காலம் எல்லாம் மாறியது, அதெல்லாம் மோகனின் அப்பாவிற்கு ரத்தம் வேகமாக ஓடிய காலங்கள், இரத்தம் சுண்டத் தொடங்கிய பிறகு கொஞ்சம் நாட்களுக்கு முன்பு வரை பயம் விட்டுப்போய் கதவைத் தட்டியிருக்கிறார்கள் அவசரத்திற்கு. வீட்டிற்குள் தண்ணியடிக்கத் தொடங்கியிருந்தார் மோகனின் அப்பா, ஒருமணிநேரம் அடி அதிகமாக விழுந்தாலும் மோகன் அவன் தாயை அந்த ஜன்னலின் பக்கத்தில் அதற்குப்பிறகு பார்த்ததில்லை. இன்னமும் ஆளரவமற்ற ஜன்னலைப்பார்த்தால் பித்துப்பிடித்தார்ப் போல் நின்றுவிடும் மோகனின் மனம் பலருக்கும் புரியாது.
இளங்கலை முடித்துவிட்டு வேலைபார்க்கும் மோகன், இன்றும் பூட்டப்பட்டிருக்கும் அவன் வீட்டு கதவு அம்மாவிற்காக அக்காவிற்காக எதையும் கேட்கயியலாமல் கோழையாய் இப்பொழுது டெல்லியில். அவனுடைய கோபங்களை எப்பொழுதாவது கதையெழுதிதான் வெளிப்படுத்த முடிந்திருக்கிறது.
கோழை என்று பெயரளவில் சொல்லிவிட்டாலும் கூட இன்றும் கேட்டுவிடமுடியும் மோகனால். ஆனால் அவன் தாய் இத்தனை வருடம் கஷ்டப்பட்டது வீணாய்ப்போய்விடும். அவனும் அவன் சகோதரியும் அதன் பிறகு பெரிய நிலைக்கு வந்துவிடுவார்கள். ஏனென்றால் அவர்கள் வளர்ந்த நிலை அப்படி. ஆனால் அவன் தந்தையை நினைத்துத்தான் பயந்திருக்கிறான். அவன் தாய் இல்லாமல் ஒருநாள் கூட வாழமுடியாதவர். இது தெரியாதவரும் இல்லை அவர். ஆனால் போதை இதையெல்லாம் மறக்கச் செய்துவிடும்.
இன்று, திறந்தேயிருக்கும் கதவு, வந்து கொண்டேயருக்கும் தண்ணீர், அழகான வேலைப்பாட்டுடன் பாத்ரூம் வந்துதான் தொலைக்கமாட்டேன் என்கிறது இங்கே ஒரு முறைக்கு மேல். ஸ்ரீரங்கத்தில், திருச்சியிலென மாறிமாறி அவன் இருந்த காலங்களில் சொர்க்கவாசல் திறக்கும் பொழுது மட்டும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போவதுண்டு, கடவுள் நம்பிக்கையில்லாத மோகன் சொர்க்கவாசல் நாளில் மட்டும் கோயிலுக்கு போவது ஏதோவொறு நம்பிக்கையில் அவன் வீட்டுக்கதவும் திறக்குமென்றுதான்.
-------------------------------
In சுய சொறிதல் சொந்தக் கதை நட்சத்திரம்
நட்சத்திரம் - நான் யார்????
Posted on Tuesday, February 14, 2006
நட்சத்திரம் - நான் யார்????
பூனைக்குட்டி
Tuesday, February 14, 2006
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...
-
"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
Excellent கதை, மோஹன். Hats Off.
ReplyDeleteநன்றிங்க கே. எஸ். உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
ReplyDeleteஅன்பு நண்பர் மோகனுக்கு, நீங்கள் முன்னமே எழுதி வைத்து விட்டு, அப்படியே போஸ்ட் பண்ணீட்டீங்கன்னு நெனைக்கிறேன். அதனால தமிழ்மணம் அதை பிக்கப் பண்ணவில்லை என்று நினைக்கிறேன். முன்னமே எழுதி இருந்தாலும், போஸ்ட் பண்ணும் போது, ஒரு புதிய போஸ்ட் ரெடி பண்ணி, அதை பழையதில் இருந்து எடுத்து ஒட்டி போடுங்க..இல்லன்னா தமிழ்மணம் உங்க அறிமுக உரையையே காட்டிக்கிட்டு இருக்கும். எல்லோரும் 'என்னடா இது இவரு அறிமுகத்திலேயே நிக்கிறாருன்னு நெனைப்பாங்க..உங்கள் பதிவுகளும் ஒரு வரிசையில் இருக்கும். சீக்கிரம் சரி பண்ணுங்க மோகன்.
ReplyDeleteஅன்புடன்,
சிவா
சிவா என்னைப்பொறுத்தவரை தமிழ்மணமும் சரி. நான் நினைத்ததும் சரி. சரியாகத்தான் நடக்கிறது.
ReplyDeleteஎன்னைப் பொறுத்தவரை இரண்டாவது நாளில் நான் முகப்பில் எந்த விஷயம் தெரிய வேண்டுமென்று நினைத்தேனோ அது தான் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் அதற்கு ஏற்றது போல்தான் பதிவையும் போட்டுவந்தேன்.
மற்றபடிக்கு விஷயத்தை தெளிவுபடுத்த உதவியதற்கு மிகவும் நன்றிங்க சிவா.
மோகன்,
ReplyDeleteகதை நன்றாக அழுத்தமாக இருந்தது..
முத்து உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
ReplyDeleteமோகன்! :-))) நான் உங்க தலைப்பை பார்த்து தான் குழம்பி விட்டேன்..என்னடா இது 'நானே தான்' என்று சொன்னார்..இப்போ மறுபடி 'நான் யார்' என்கிறார்...அறிமுக பதிவோ என்று குழம்பி விட்டேன்..மன்னிக்கனும் :-)))
ReplyDeleteமன்னிக்கனும் அப்படிங்கிறதெல்லாம் பெரிய வார்த்தைங்க சிவா. புரிந்து கொண்டமைக்கு நன்றி.
ReplyDeleteகதைய நான் ஏற்கனவே மரத்தடி.காம்ல படிச்சிருக்கேன். உங்க அறிமுக உரை ரொம்ப நெகிழ்வா இருக்கு.
ReplyDelete//தண்ணியடிச்சிட்டா என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், யாரை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அதை மறந்துவிடவேண்டும். இந்த ஒருமைப்பாடு இல்லாத குடிகாரனே கிடையாது என்று பட்டது மோகனுக்கு.// இது ஒரு கொடுமையான லாஜிக்தான்.