In சுய சொறிதல் சொந்தக் கதை நட்சத்திரம்

நட்சத்திரம் - மனிதநேயமும் மண்ணாங்கட்டியும்

இளங்கோவனுக்கும் கார்த்திகாயனிக்கும் பிறந்ததால் நான் இந்துவானேன், டேவிட்டிற்கும் எலிசபெத்திற்கும் பிறந்ததால் நான் கிறிஸ்துவனானேன், அன்சாரிக்கும் பேகத்திற்கும் பிறந்ததால் நான் முஸ்லீமானேன், யாருக்கும் யாருக்கும் பிறந்தால் நான் மனிதனாவேன்.

எங்கேயோ ஒருமுறை கேள்விப்பட்டு, அதன் பிறகு என்னுடைய எல்லா பேச்சுப்போட்டிகளிலும், இந்த வரிகளை நான் உணர்ச்சிப்பூர்வமாக சொல்வேன். ஆனால் பேசி ஓய்ந்து போன ஒரு நாளில் உணர்ச்சிகளை ஓரங்கட்டிவிட்டு சாதாரணமாக யோசித்த பொழுது இந்த வரிகளின் பின்னால் இருக்கும் வருத்தமும் வேதனையும் என்னை என்னவோ செய்தது.

நம்மில் பலருக்கு, ஒரு நபரை அவருடைய, ஜாதியையோ இல்லை மதத்தையோ இல்லை அவர்களுடைய செழிப்பையோ வைத்துதான் நினைவில் வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. இதையெல்லாம் மீறி அந்த நபரை நம்மில் ஒருவனாக, ஒரு தனிப்பட்ட மனிதனாக அறிய முடிந்திருக்கிறதா? என்னால் முடிந்ததில்லை இன்றுவரை. இந்து, முஸ்லீம், கிறிஸ்டீன், என்பதைப்போல மனிதனுக்கான உருவகத்தையா இல்லை மனிதனையே தேடிக்கொண்டிருக்கிறோமா இன்று வரை.

நண்பனே!

ஆகாயத்தில் அளவற்ற சாதனைகளை
நிகழ்த்திக்காட்டினாய்
மகிழ்ச்சி!

நொடிப்பொழுதில் உலகத்தின் இரண்டு முனைகளை
இணைக்கும் வலிமையைப் பெற்றாய்
சந்தோஷம்!!

நாளை ஒவ்வொரு மனிதனின் தலைக்கு மேலும் ஒரு
செயற்கைக்கோளை பறக்கவிடுவாய்
பாராட்டுக்கள்!!!

ஆனால்
இந்த மண்மண்டலம் இருக்கட்டும்
மனிதநேயம் இருக்கட்டும்.
நமக்கு முன்னே வாழ்ந்து மறைந்தவர்கள்
விட்டுச்சென்ற சுவாசங்களெல்லாம்
இந்த மண்மண்டலத்தில் இருக்கின்றன
இருக்கட்டும்.

உன்னுடைய இந்த ஆக்கங்கள்
இந்த உலகை அழித்துவிடாமல் பார்த்துக்கொள்.


(இந்த கவிதை வரிகள் யாருடையது என்று நினைவில் இல்லை, அதுமட்டுமல்லாமல் கவிதை வரிகளுமே, எனது நினைவில் இருந்ததை வைத்து எழுதியிருக்கிறேன். இன்னும் அருமையாக இருக்கும் உண்மை வரிகள்.)

எனக்கும் ஒவ்வொரு புதுப்புது விஷயமாக கண்டுபிடிக்கப்படும் பொழுதும் இது மனித சமூகத்தை அழித்துவிடும் வல்லமைபெற்றதா? என்று என்னை நானே இன்றும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். மனிதகுலம் இல்லாமல் போய்விட்ட ஒரு உலகத்தில் நானோ டெக்னாலஜி வந்தென்ன, குவாண்டம் கம்ப்யூட்டர் தான் வந்தென்ன பயன் உபயோகிக்க மனிதன் வேண்டாமா???

நான் இன்னமும் அமேரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் தகர்க்கப்பட்டதை ஒரு தனிமனிதனின் உயிருக்கு இந்த உலகத்தில் மதிப்பில்லாமல் போய்விட்டதாகத்தான் கருதுகிறேன். அந்த விமானத்தை ஓட்டிச்சென்ற மனிதனுக்கு அவன் உயிரின் மீது மரியாதையில்லாமல் போனதெப்படி.

இப்படி மரியாதையில்லாமல் போனதற்கு மதங்களும் அவற்றின் நம்பிக்கைகளுமா காரணம். இன்று நீ உன் உயிரைத்துறந்தால் நாளை உனக்கான சொர்க்கம் அல்லது இப்பொழுது வாழ்ந்து வருவதை விட உயரிய வாழ்க்கை உனக்காக காத்துக்கொண்டிருக்கிறது என்று மதங்களா வழிமொழிகின்றன என்றால் நிச்சயமாக இல்லை,

பாபர் மசூதியை இடித்துத்தான்
இராமர் கோயிலைக் கட்டவேண்டுமென்று
எந்த பகவத்கீதையும் சொல்லவில்லை

தீவிரவாதம் தான் ஒரே வழி, அதன் மூலம் தான்
நம்மத்தை வாழ்விக்க முடியும் என்று
எந்த திருக்குரான் சொல்கிறது?

இல்லை வருமையில் வாடிக்கொண்டிருக்கும்
மக்களுக்கு உதவிசெய்து
உங்கள் மதத்திற்கு மாற்றுங்கள்
என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறதா?

நிச்சயமாகக் கிடையாது, இவைகளெல்லாம் மதம் பிடித்த சில மதவாதிகள் செய்வது தான். இவற்றிற்கும் எந்த மதத்திற்குமே சம்மந்தம் கிடையாது. இது என்னுடைய மறுக்கமுடியாத ஒரு நம்பிக்கை.

நான் சொல்லவந்ததை விட்டுவிட்டு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறேன். மனித நேயத்தைப்பற்றி உண்மையில் நான் இங்கே சொல்லவரவில்லைதான். அதைவிட முக்கியமான ஆனால் நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒன்றைப் பற்றியும். அதிலும் அரசியல் புகுந்து விளையாடுவதைப் பார்த்து வருத்தப்படுவதால் தான் இந்தப்பதிவே.

என்னைப் பொறுத்தவரை நீங்கள், சுனாமியால் வாழ்விழந்தவர்களுக்கு உதவியதையோ இல்லை இதைப்போன்ற இன்னும் நிறைய விஷயங்களி எடுத்துக்காட்டினாலும், மனிதநேயம் குறைந்துவிட்டது, உலகம் சிறியதாக சுருங்கிவிட்டாலும் மனிதனுக்குள் வந்துவிட்ட தனிமையென்பது உலகத்தை விட பெரியதாகிவிட்டது. மனிதநேயத்தை காப்பாற்ற நிறைய பேர் வரலாம், வருவார்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு மனிதநேயம் இல்லாமல் போய்விட்டதால் பாதிக்கப்பட்டது மனித இனம் மட்டுமல்ல. அவனுக்கு முன்பிருந்தே இருந்துவரும், அவனுக்கு பிறகும் இருக்கப்போவதாக நான் கருதும் விலங்கினம் கூடத்தான். இதில் நடந்து வரும் ஒரு அரசியலைத்தான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.



உங்களுக்கெல்லாம் மேலே உள்ள ஆளைத் தெரிந்திருக்கும். இவரைப்பற்றி மேலும் ஒரு சிறு அறிமுகம். ஆப்பிரிக்காவிற்கு பிறகு இவர் இருக்கும் ஒரே நாடு, இந்தியா தான், இந்தியாவிலும் குஜராத்தில் உள்ள, கிர் வனப்பிரதேசத்தில் மட்டும் காணக்கிடைக்கும்; இன்னும் சில ஆண்டுகள் தொடர்ச்சியாக தற்பொழுது நிகழ்வதைப் போன்றதொரு சூழ்நிலையில் இருந்தால், இல்லாமல் போய், வெறும் புத்தகத்தில் மட்டும் நீங்கள் பார்க்கக் கிடைக்கப்போகும் ஒருவர் தான் மேற்காணும் காட்டுராஜா, பூனை வம்சத்தின் மிகப்பெரியவர், வெறும் முன்னூறு தன்னைப்போன்றவர்களேயே இன்னும் தக்கவைத்துக்கொண்டுள்ள துரதிஷ்ட்டசாலி. சிங்கராஜா.

உண்மை தான், வெறும் முன்னூறு சிங்கங்கள் மட்டுமே மீதமிருக்கின்றன், அவையும் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நிலையிலும் குஜராத் அரசு செய்துவரும் ஒரு விஷயத்தை உங்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். 1907ல் வெறும் 13 சிங்கங்களே மீதமிருந்த சூழ்நிலையில் ஜுனாகத்தின் நவாப்பால் முழுப்பாதுகாப்பு அளித்து காப்பாற்றப்பட்ட சிங்கங்கள் இன்று அப்படுயொருவர் கிடைப்பாரா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றன. 1412 கிமீ2 மற்றும் 558ல் ஸ்கொயர் மைல்ஸ் இடத்தில் இப்பொழுது இருக்கும் இந்த முன்னூறு சிங்கங்களும் வாழ்ந்து வருகின்றன.

தொற்றுநோய் ஒன்று பரவுவினால் ஒட்டுமொத்த சிங்க இனமே அழிந்துவிடும் நிலையில் இருப்பதை உணர்ந்த விலங்கின ஆராய்ச்சியாளர்கள், அதுமட்டுமில்லாமல் இவ்வளவு குறைந்த இடத்தில் இருப்பதால் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டே சிங்கங்கள் அழிந்துவிடும் சூழ்நிலையில் இருப்பதால் அவற்றில் சிலவற்றையோ இல்லை ஒரு பகுதியையோ மத்தியப்பிரதேசத்திலுள்ள, குனோ பாரஸ்ட் ரிசர்விற்கு மாற்றிவிடச் சொல்கிறார்கள்.

இதற்காக பல கோடி மதிப்பில் சிங்கங்களை வரவேற்பதற்காக தயார்செய்யப்பட்டு குனோ பாரஸ்ட் காத்துக்கொண்டேயிருக்கிறது. ஆனால் இந்தியாவின் ஒரேயொரு மாநிலமாம் குஜராத்தில் மட்டுமிருக்கும் சிங்கராஜாக்களை மற்ற மாநிலத்துக்குத் தர குஜராத் அரசாங்கம் மறுத்து வருகிறது. சமீபகாலத்தில் அதன் பல்லிற்காக சுமார் 12 சிங்கங்கள் கொல்லப்பட, இந்தப் பிரச்சனை பெரிதானது. ஆனாலும் இன்னும் குஜராத் அரசு வெட்டிப்பிடிவாதம் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறது.

இன்றைக்கல்ல, நேற்றைக்கல்ல ஒரு புதிய வம்சாவழியை உருவாக்க வேண்டி சில சிங்கங்களை குஜராத்தில் இருந்து மத்தியப் பிரதேசத்திற்கு மாற்றச் சொல்லி, ஒரு திட்டத்தை இந்திய வனவிலங்குகள் அமைச்சகம் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்று வரை இது செயல்படுத்தப்படவில்லை. இந்தியாவில் இது சகஜம்தானே, மனிதனின் அத்தியாவசியத்தேவையான தண்ணீரையே கொடுக்க மறுக்கும் மாநிலங்கள் இருக்கும் நிலையில் தங்களின் ஏகபோக உரிமையான சிங்கங்களை குஜராத் அரசு தரமறுப்பதில் வியப்பெதுவும் இல்லைதான். இவர்களின் தலைகளில் இயற்கையிலேயே பிறக்கும் பொழுதே மூளைக்கு பதில் மண் நிரப்பப்பட்டுவிட்டதோ என்று கேள்வி எழுகிறது.

ஆனாலும் சில தொலைக்காட்சிகளின் தொடர்ச்சியான் வற்புறுத்தலினால் தேசிய வனவிலங்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் எச் ராஜா, மத்தியபிரதேச மாநிலத்து வனத்துறை அமைச்சரையும், குஜராத் மாநிலத்து வனத்துறை அமைச்சரையும் அழைத்து பேசுவதாக சொல்லியிருக்கிறார். அப்படியும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் குடியரசுத்தலைவரிடம் தான் முறையிட முடியும் என்று வனத்துறை ஆர்வாலர்கள் சொல்கின்றனர். எனக்கென்னமோ இன்னும் கொஞ்சம் காலத்தில் சிங்கத்தை பார்பதென்பது இயலாதஒன்றாகிவிடும் என்ற பயம் இப்பொழுதே வந்துவிட்டது. அதனால் தான் இதன் முக்கியத்துவத்தை உணர்த்தவேண்டி இப்படியொரு பதிவு.

இன்று சல்மான்கான் 1998ல் மான்வேட்டையாடியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு ஒரு ஆண்டுகால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கூட விலங்குகளை பாதுகாக்க விரும்பும் இந்திய அரசின் வேட்கை தெரிகிறது.

Related Articles

16 comments:

  1. "இன்று நீ உன் உயிரைத்துறந்தால் நாளை உனக்கான சொர்க்கம் அல்லது இப்பொழுது வாழ்ந்து வருவதை விட உயரிய வாழ்க்கை உனக்காக காத்துக்கொண்டிருக்கிறது என்று மதங்களா வழிமொழிகின்றன என்றால் நிச்சயமாக இல்லை,"

    -மொழிகின்றன என்றுதான் நினைக்கிறேன். கிறித்துவர்கள் மத்தியில் அதுபோல் மதத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கு 'வேத சாட்சிகள்' என்று பெயர். கொடுக்கப்படும் இடமும் மிக உயரம். இஸ்லாமிலும் உண்டு.

    ReplyDelete
  2. தருமி, நான் சண்டை போடுவதற்காக இந்தப் பதிவை எழுதவில்லைதான் என்றாலும் கேள்வி கேட்கப்பட்டுவிட்டதால் என் தரப்பு பதிலைத் தருகிறேன்.

    நான் சொல்லவந்தது மதங்களைத்தான், அதாவது முன்பே சொன்னது போல் பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா? என்பது தான் கேள்வி, (நான் அறிந்த கிறிஸ்துவ மக்களிடம் கேட்டதற்க்கு கிடைத்த பதில் இல்லை என்பது.)

    நீங்கள் கிறிஸ்துவர்கள் மத்தியில் என்று சொல்லியிருக்கிறீர்கள். நான் இங்கே சொல்லவந்தது மக்களுடைய நம்பிக்கைகளைப் பற்றியது அல்ல.

    PS: தவறிருந்தால் திருத்தவும்.

    ReplyDelete
  3. மோகன்தாஸ்,
    எனது பதில் சிங்கராஜாவுக்காக மட்டுமே.
    ==
    தனது மாநிலத்தில் உள்ள சில தனிப் பெருமைகளை சுலபமாக ஒரு அரசாங்கம் விட்டுக்கொடுக்காது. வன விலங்குகள்/ சரணாலயங்களின் மீது மத்திய அரசுக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளதாக நினைக்கிறேன். நம்மூர் அமைச்சர் ராசா, சிங்க ராசாவுக்கு உதவினால் நல்லது.

    சிங்கராசா பற்றிய தகவலுக்கு நன்றி.
    (சிங்கம் பற்றிய தகவலை தனியாகப் போட்டு இருக்கலாம் என்பது எனது எண்ணம்.)

    ReplyDelete
  4. //மனிதனுக்குள் வந்துவிட்ட தனிமையென்பது உலகத்தை விட பெரியதாகிவிட்டது.//

    First Class

    ReplyDelete
  5. மோகன்,

    சில மதங்களில் உண்மையாகவே நீங்கள் சொல்பவை இருக்கின்றன என்கிறார்கள்.என் கருத்தின்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள வாழ்நிலைகளின்படி எழுதப்பட்ட கருத்துக்களை இப்போதும் தூக்கி சுமப்பது தான் காரணம் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  6. மோகன்தாஸ்,

    இது ஒரு அருமையான பதிவு.

    உலகில் பிறக்கும் ஒவ்வொருவரின் படைப்பையும் இறைவன் தான் தீர்மானிக்கிறார் என்று எல்லோரும் நம்பும் போது, ஏன் இறைவன் தன்னை மட்டுமே வணங்கும் மதத்தவருக்கு பிள்ளைகள் பிறக்க வைக்கக்கூடாது. மற்ற மதத்தவர்களுக்கு வாரிசே இல்லாமல் போகச் செய்யலாமே.

    முட்டாள்தனமான மதம் பிடித்து அழையும் மக்களை நினைத்தால் சிரிப்பு தான் வருது, நீங்க கேட்ட மாதிரி பெற்றோர் என்ன மதமோ அதே மதத்தை கொஞ்சம் கூட ஆராயாமல் பின்பற்றி, அதற்காகவே சண்டை போட்டு, சர்ச்சைகளை கிளப்புவது என்பது முட்டாள்தனம். ஒவ்வொரு மனிதனும் சிந்தித்து தானாகவே தன்னை வழிகாட்ட இது தான் சரியான மதம் என்பதை தேர்வு செய்யும் வரை, அவன் எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்லை என்ற நிலை வரவேண்டும்.

    ReplyDelete
  7. கல்வெட்டு உங்களுடைய சிங்கராஜாவுக்கான பதிலுக்கு நன்றி :-). உண்மைதான், முன்பே ஒரு பதிவில் சொன்னது போல் உயிரைவிட கொள்கைகளை பிடித்து தொங்குவது ஒன்றும் முக்கியமானதுகிடையாது.

    இயற்கைக்கு நாம் எப்படி பிள்ளைகளோ அதைப்போலவே விலங்குகளும், ஒட்டுமொத்தமாக ஒரு இனத்தை அழிக்கும் செயல் கண்டிக்கத்தக்கது. அதுவும் இதற்கு முக்கிய காரணமாக வறட்டு பிடிவாதம் இருந்தால் என்ன சொல்ல.

    முக்கியத்துவத்தை ஒதுக்கி வைக்க நான் மேலே மனித நேயத்தைப்பற்றி உள்ளதை எழுதவில்லை, மனிதநேயமே இல்லாத ஒரு சமுதாயத்தில் நான் சிங்கத்தை காப்பாற்றுங்கள் என்று கேட்க முடியுமா??? என்பதை தெளிவுபடுத்தவிரும்பினேன்.

    ReplyDelete
  8. ஒரு புத்தகத்தில் குஷ்வந்த் சிங் சொன்னது:

    இங்கிலாந்தில் நான் படித்தபோது, என்னை ஒருவன் கேட்டான்: "Who are you?".
    நான் சொன்னேன்: "Khushwant".
    அவன் மீண்டும் கேட்டான்: "What are you?"
    நான் சொன்னேன்: "Khushwant, an Indian".

    இந்தியா வந்தபோது, என்னை ஒருவன் கேட்டான்: "Tum kaun ho?".
    நான் சொன்னேன்: "குஷ்வந்த்".
    அவன் மீண்டும் கேட்டான்: "Thu kya ha?".
    நான் சொன்னேன்: "குஷ்வந்த் சிங்".

    -ஞானசேகர்

    ReplyDelete
  9. உண்மைதானே கீதா, நாம் ஒவ்வொருவரும் செல்லிடைப்பேசி உதவிகொண்டு இன்னும் இன்னும் தனிமையாகிப் போய்க்கொண்டேயிருக்கிறோம்.

    ReplyDelete
  10. உண்மையில் அப்படியிருக்க கூடாதுங்க முத்து. மதம் இதை வலியுறுத்துவதாய் இருந்தால் அதில் இருக்கும் தவறு மிகப்பெரியதாகப்படுகிறது எனக்கு. மதவாதிகள் சிலரின் செயல்கள் மதங்களின் மீது இதுபோன்ற கெட்ட நம்பிக்கையை சில சமயங்களில் உருவாக்கிவிடுகிறது.

    ReplyDelete
  11. கிறிஸ்துவத்தில் கூட பிறப்பால் ஒருவன் கிறிஸ்துவனாக ஆகிவிடுவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதை நான் கேட்ட ஒரு பிரசங்கத்தில் சொல்லப்பட்டது.

    அதாவது கிறிஸ்துவுக்கு பேரன்களோ பேத்திகளோ கிடையாது, அனைவருமே அவருடைய மகன்கள் இல்லை மகள்கள். புரியுமென்று நினைக்கிறேன். கிறிஸ்துவ அப்பா அம்மாவிற்கு பிறந்தவர்கள் எல்லாம் கிறிஸ்துவர்கள் ஆகிவிடமுடியாது. நீங்கள் கிறிஸ்துவை உணர்ந்துதான் கிறிஸ்துவனாகிவிடமுடியும். உண்மைதானே.???

    நன்றி பரஞ்சோதி

    ReplyDelete
  12. ஞானசேகர் நல்லாயிருந்துச்சு, ஆனால் இதுதான் இந்தியாவின் இன்றைய நிலையா???

    ReplyDelete
  13. மோகன்தாஸ்,
    கிறிஸ்துவாக வாழ்பவனே கிறிஸ்தவன் (கிறிஸ்து + அவன்) என்பது வரை விளக்கம் கொண்டு செல்லலாம்.
    ஆனால் நடைமுறையில் பிறப்பின் மூலமே மதம் தீர்மானிக்கப்படுகிறதென்பதை வலுவாக ஏற்றுக்கொள்கிறேன். (வளர்ந்தபின் மதம் மாறுவதைத் தவிர்த்து).
    கிறிஸ்தவக் குடும்பத்திற் பிறந்த ஒரு குழந்தைக்கு திருமுழுக்கு (ஞானஸ்நானம்) கொடுக்கிறார்கள். திருமுழுக்குப் பெற்றால் அவர் கிறிஸ்தவர்.
    ஆக பிறந்த சில நாட்களுக்குள் அக்குழந்தை குறிப்பிட்ட மதத்தவனாக/ளாக மாறிவிடுகிறது. (இது கிட்டத்தட்ட கட்டாய மதத்திணப்புத்தான்) இது மற்ற மதங்களுக்கும் பொருந்தும்.
    மதம் பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறதென்பது முற்றிலும் உண்மையே.

    வேதசாட்சிகள் மட்டில் தருமியின் கருத்தை வழிமொழிகிறேன்.
    ************************************
    சிங்கத்தைப் பற்றிச் சொல்லவந்து மதங்களைப் புகுத்தியிக்கத் தேவையில்லை. சம்பந்தமேயில்லாத இடைச்செருகலாகவே படுகிறது.

    ReplyDelete
  14. ஒரு வீடு இரு வாசல்! (அ) இரு வீடு ஒரு வாசல்!

    மனித நேயம்...- விலங்கினம்...- குஜராத்...

    ஏதோ புரிந்தது போல் தான் உள்ளது!

    என்னுடைய பெற்றோர் இந்துக்கள். இது தான் என்னுடைய அடையாளம் யாராவது என்னுடைய மதம் என்னவென்று கேட்கும் பட்சத்தில்...

    கோவில், தேவாலயம், மசூதி எல்லாவற்றிலுமே ஏதாவது ஒரு நேரத்தில் எனக்கு அமைதி கிடைக்கிறது.

    ReplyDelete
  15. வசந்தன், இது நிச்சயமாக திணிக்கப்பட்டது அல்ல, நான் சொல்லவந்தது விலங்கினங்களை பாதுகாப்பது பற்றி, இந்தியாவில் மனிதர்களையே பாதுகாக்க போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிறுக்கிறதா என்ற சூழ்நிலையில் எவன்டா இவன் விலங்கைப்பற்றியெல்லாம் பேசுறான்னு சொல்லிவிடலாம்.

    ஏன்னா பெரும்பாலும் நம்மிடையே மனிதர்களையே மதிக்கும் பண்புஇருப்பதில்லை, அதற்குக்காரணம் மதவாதிகள் சிலர். இதனால் தான் அதை சொல்ல நினைத்தேன்.

    மற்றபடிக்கு உண்மையிலேயே எதையும் திணிக்க நினைக்கவில்லை.

    ReplyDelete
  16. நான் அனைவரும் இப்படி ஏதாவது ஒரு வகையில் ஒரு இடத்தில் நம்மீது திணிக்கப்பட்ட மதத்தை ஜாதியை ஏற்றுக்கொண்டுதான் உள்ளோம் பொட்டீக்கடை. நன்றி.

    ReplyDelete

Popular Posts