என்ன முயற்சித்தாலும் சிவத்தால் மேலாடை இல்லாத ஷில்பாவின் உடலை மனதின் நினைவுப் பின்னல்களிலிருந்து அகற்றவே முடியவில்லை. பதின்ம வயதில் முதன்முறைப் பார்த்த நீலப்படம் மனதிலிருந்து நீங்க சிறிது நாளானது பற்றி நினைத்தவன் மனம் மேலும் குழப்பமடைந்தது, ஷில்பாவை நீலப்படத்துடன் ஒப்பிடுவது சரியா என யோசிக்க ஆரம்பித்தான். சிறிது நேரம் கழித்து என்னவோ நினைவுக்கு வந்தவனாய், மெத்தையை முகர்ந்து பார்த்தவனது முகம்; அவன் எதிர்பார்த்த வாடை வராததால் மலர்ந்தது. இப்படித்தான் கடந்த இரண்டு நாட்களாக அவன் மனம் ஒரு நிலையிலேயே இல்லாமல் தவித்தது. நான்கைந்து முறை ஸ்வெட்டரை அணிந்து டீ குடிக்கக் கிளம்பியவன், செப்பல் அணிந்ததும் மனம் மாறி திரும்பவும் படுக்கைக்குத் திரும்பினான்.
என்னவெல்லாம் கனவு கண்டிருப்பான் ஷில்பாவுடன் அமையப்போகும் தன் வாழ்க்கையைப்பற்றி, எல்லாம் ஒரே நாளில் இல்லாமல் போகவில்லைதான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் அவளைப் பற்றிய பிம்பம் அழிந்து கொண்டே வந்ததையும் அதே சமயம் அகிலா என்ற பெரிய சொத்தை இழப்பதாக தோன்றியதையும் அவனால் எப்பொழுதையும் போல், மிடில் கிளாஸ் மனப்பான்மையாக நினைத்து ஒதுக்கிவிடமுடியவில்லை. மிடில்கிளாஸ் மனப்பான்மை எவையெவை என்று அவனால் முழுமனதாக வரையறுக்க முடியாததைப் போலவே இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் ஷில்பாவைக் கலியாணம் செய்து கொள்வதை மறுபரிசீலனை செய்வது, எந்த விதத்திலும் மிடில்கிளாஸ் மனப்பான்மையுடன் சம்மந்தப்பட்டதா இல்லையா என்பதையும் அவனால் தீர்மானிக்க முடியவில்லை.
ஷில்பாவின் தந்தை அவனிடம் கல்யாணத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்ததில் இருந்தே சிவத்தின் மனம் ஒருவாறு அகிலா மற்றும் ஷில்பாவை ஒப்புமை செய்யத் தொடங்கியிருந்தது, அந்த நாட்களுக்கும் இன்றைக்குமான வித்தியாசம் ஒன்றுதான். முதலில் ஷில்பாவை நோக்கி சரிந்து கொண்டிருந்த தராசு இன்றைக்கெல்லாம் அகிலாவின் பக்கமே நின்றது, இதிலெல்லாம் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாய் அவன் தராசு, ஷில்பா பக்கம் சாய்ந்த பொழுதும் சரி மற்ற பக்கத்தில் சாயும் இந்தச் சமயத்திலும் சரி, தவறானது அவன் பக்கத்தில் இல்லை என்பதை மட்டும் முழுமனதாக நம்பியது.
ஆரம்பத்தில் இருந்தே அழகைப்பற்றிய தடுமாற்றம் தன்னிடம் இல்லை என்பதில் சிவத்திற்கு பெருமிதம் அதிகம். அழகென்ற விஷயத்தை எதை வைத்து தீர்மானிப்பது என்பதில் இருந்த குழப்பத்தினால் தான் அந்த விஷயம் இரண்டு பெண்களையும் ஒப்புமைப்படுத்தும் பொழுது கணக்கில் வரவில்லை என்றும் சிலசமயம் நினைத்திருக்கிறான். நிறம், கண்கள், மூக்கு, மார்புகள், மற்றும் ஏனைய விஷயங்களை மட்டும் கருத்தில் கொண்டு அழகைப்பற்றிய தீர்மானத்திற்கு வருவதா இல்லையா என்ற குழப்பம் இருந்தாலும், அதனால் பிரச்சனை வராததற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். மேற்ச்சொன்ன அனைத்து விஷயங்களிலுமே இருவரும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்தது தான் அது. மேலும் அது மட்டும் தான் உண்மையாகவும் இருக்கமுடியும்.
அதுமட்டுமில்லாமல், அவனுக்கு ஒப்புமைப் படுத்திப் பார்ப்பதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. அவர்களுடைய கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், குடும்பப் பின்னணி, அவர்களைக் கல்யாணம் செய்வதால் கிடைக்கப் போகும் அசௌகரியங்கள், சௌகரியங்கள், இப்படி. திருச்சி போன்ற ஒரு சிட்டியையே தாண்டியிராத, ஏழை பிராமணப் பெண் அகிலாவிற்கும். பெரிய சாப்ட்வேர் கம்பெனி பார்ட்னரின் மகள் ஷில்பாவிற்கும் இத்தனை வித்தியாசங்கள் இருந்ததில் ஆச்சர்யம் இல்லை.
இரண்டு நாட்களாக, முன்பு அவனுக்கும் அகிலாவிற்கும் நடந்த சில விஷயங்களை அவனுக்கும் ஷில்பாவிற்கும் இடையில் நடத்திப்பார்த்துக் கொண்டிருந்தான். அப்படியே ஷில்பாவிற்கும் தனக்குமானதை அகிலாவுடனும். இந்த முயற்சியின் ஒவ்வொருமுறையும் அகிலா உயர்ந்த பண்புடையவளாக மனதில் படுவதற்கு நிச்சயமாக தன் மிடில்கிளாஸ் மனப்பான்மைதான் காரணம் என்ற ஏக முடிவிற்கு வந்தும்விட்டான். ஏனென்றால், எது உயர்ந்த பண்பாடு என்பதிலும் அவனுக்கு நிச்சயமான முடிவிற்கு வரமுடியாத பிரச்சனைகள் இருந்தன.
ஒருமுறை கெஞ்சி கூத்தாடி அகிலாவை முக்கொம்பிற்கு அழைத்துவந்து ஒரு முத்தம் கேட்டதும் "என்னைய நீங்க எப்படி அப்படி நினைச்சீங்க..." என்று புலம்பி கடைசிவரை அழுதுகொண்டிருந்தவளை நினைத்துப் பார்த்தவனுக்கு; சென்ற வருஷப் பிறப்புக்கு பியர் அடித்துவிட்டு ஆடிக்கொண்டிருந்த ஷில்பா 12.00 மணிக்கு ஹோட்டலில் விளக்குகளை அனைத்ததும் கட்டிப்பிடித்து உதட்டில் முத்தமிட்டது நினைவுக்கு வர, ஷில்பாவை அகிலாவுடன் ஒப்பிடுவதே தவறாகப்பட்டது. எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தது போல் இருந்தது ஷில்பா கடைசியில் செய்தது. சிவம் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே நல்லவனாகவும் எல்லோருக்கும் பிடித்தமானவனாயும், தொழில்முறையில் தேர்ச்சிபெற்றவனாயும் இருக்கப்போக; ஷில்பாவின் தகப்பனாரால் சுலபமாக கண்டறியப்பட்டு பல தேர்வுகளைச் செய்து கடைசியில் ஷில்பாவிற்கான மாப்பிள்ளையாகவும் முடிவு செய்யதிருந்தார்.
டெல்லியிலேயே பிறந்து வளர்ந்தவள், பெரிய கோடீஸ்வரனின் மகள் என்பதால் பழக்கவழக்கங்கள் கொஞ்சம் ஏடாகூடமாகத்தான் இருக்கும் என்று தெரிந்துதான் இருந்தது சிவத்திற்கு. ஷில்பா அவர்கள் குடும்பத்திற்கு ஒரே பெண் என்பதால் அவளைக் திருமணம் செய்துகொள்ளப்போகிறவனுக்குத் தான் மொத்த சொத்தும் என்றும் உணர்ந்திருந்ததால் கொஞ்சம் விட்டுப்பிடிப்போம் என்றே நினைத்திருந்தான். இடையில் திருச்சியில் இருந்து டெல்லிக்கு வந்த நண்பன் ஒருவன் மூலமாக அகிலா இன்னும் தன்னையே நினைத்துக் கொண்டிருப்பதாக தகவல் தெரிந்ததும் முதலில் தொலைபேசாமல் இருந்தவன் பின்னர் ஏதோ ஒரு மனநிலையில் பேசப்போக அவள் அன்று அப்படி நடந்துகொண்டதைப் பற்றி நிறையப் பேசியிருந்தாள். சிவத்திற்கு அகிலா அப்படி செய்தது தவறாகத் தெரியவில்லை தான்; சொல்லப்போனால் ஷில்பாவின் அப்பா அவனிடம், ஷில்பாவைப் பற்றியும் அவர்களுடைய திருமணத்தைப் பற்றியும் பேசாமல் இருந்திருந்தால்; அவனாகவே சென்று அகிலாவிடம் மன்னிப்பு கேட்டிருப்பான் தான்.
அகிலா அவனிடம் தன்னை மன்னித்துவிடும்படி கேட்டது அவனுக்கு கஷ்டமாகவேயிருந்தது, அதை அவன் அவளிடம் சொல்லவும் செய்தான். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அகிலா அவனிடம் இருந்து டெல்லி முகவரியை வாங்கிக்கொண்டு வாரம் தவறாமல் கடிதம் எழுதுவாள்; சிவம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தொலைபேசுவான். ஷில்பாவுடன் டிஸ்கோத்தேவிற்கு செல்வது, காரில் கொண்டுபோய் கல்லூரியில் விடுவது போன்ற விஷயங்களின் மத்தியிலும் கூட அவனால் அகிலாவுடன் தொலைபேச முடிந்திருந்தது. அவனுக்கான அகிலாவின் எல்லைக்கோடுகள் அகலமானதைப் போல அகிலாவிற்கான அவனுக்கான எல்லைக்கோடுகள் இல்லாமல் போயிருந்தன. அதென்னமோ அகிலாவின் முதல் கடிதத்திலிருந்தே சிவத்தை கணவனாக வரித்து எழுதத் தொடங்கியிருந்தாள்.
அவனாக மறுத்து பேசாவிட்டாலும் அதை ஆதரித்துப் பேசுவதில்லை என்ற முடிவெடுத்திருந்தான். அவர்கள் இருவருக்குமான திருமணம், குழந்தைகள் என அவளுடைய ஒவ்வொரு கடிதமும் சிவமாக கட்டிக்கொண்டிருந்த சுவற்றை அடித்து நொறுக்குவதாகவே இருந்தன. சிவத்தால் ஷில்பாவைப் பற்றி அகிலாவிடம் பேசவேமுடியவில்லை; காலமாக இதற்கு ஒரு வழிசொல்லும் என்று அதை அப்படியே விட்டுவிட்டேன். இந்தச் சமயத்தில் தான் ஒரு விஷயம் நடந்தது .
காலை ஜாக்கிங் போய்விட்டு அப்பொழுது தான் திரும்பவும் வந்தவன் ரிலாக்ஸ்டாக படுக்கையில் சாய்ந்து கிடக்க யாரோ கதவையொட்டி நகர்ந்ததைப் போலிருந்ததால் எழுந்து உட்கார்ந்தவன் அதிர்ந்து தான் போய்விட்டான். ஷில்பா அவன் எதிரில் நின்று கொண்டிருந்தால் சொல்லப்போனால் இருபது நாட்கள் தொடர்ச்சியாய் சாப்பிடாமல் இருந்தால் எப்படியிருபார்களோ அப்படி. கண்கள் எல்லாம் ஒட்டிப்போய் பரதேசி மாதிரி உடுத்திக்கொண்டு முன்னால் நின்றாள்.
"என்ன விஷயம் ஷில்பா என்னயிது இப்படி வந்து நிக்குற" கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதுதான் பார்த்தான் அவளுக்குப் பின்னால் ஒருவன் நின்றுகொண்டிருந்ததை. அவனைப் பார்த்தால் அச்சு அசல் ஒரு ஹிப்பி போலவேயிருந்தான்.
"சிவம் எனக்கு ஒரு ஐயாயிரம் ரூபா வேணும். உடனடியா"
சிவத்தால் புரிந்துகொள்ள முடியவில்லை, அவனுக்கு சம்பளம் தருவதே ஷில்பாவின் அப்பாதான். அதுமட்டுமில்லாமல் அவளிடம் இல்லாத பணமா, இல்லை அந்த ஹிப்பி எதுவும் இவளை மிரட்டுகிறானோ, ஒன்றுமே புரியாமல்.
"எதுக்கு ஷில்பா உனக்கு ஐயாயிரம் சொல்லு."
"கேள்வியெல்லாம் கேக்காதீங்க உடனே ஐயாயிரம் கொடுங்க." சொல்லிவிட்டு நீட்டியவளின் கைகள் நடுங்கத் தொடங்கியிருந்தன.
மனதுக்குள் ஆயிரம் கணக்குகள் போட்டுப் பார்த்தான் ஆனாலும் ஒன்றுமே விளங்கவில்லை; சிவம் யோசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தவள்.
"இப்ப கொடுக்க முடியுமா முடியாதான்னு சொல்லுங்க நான் போய்க்கிட்டேயிருக்கேன்."
"என்ன ஷில்பா உனக்கு இல்லேன்னு சொல்லுவேனா என்கிட்ட ஐயாயிரம் ரூபாய் ஹார்ட் கேஷாயில்லையே ஏடிஎம்ல் எடுத்துத்தரவா."
இது எதுவும் விவகாரமாய் இருந்தால் அவளுடைய அப்பாவுக்கோ இல்லை போலீஸுக்கோ தொலைபேசலாம் என்று யோசித்துத்தான் சிவம் ஏடிஎம் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும், ஆனால் அதைக்கேட்டதும் ரொம்பவும் கோபமானவளாய் என்ன செய்வதே என்றே தெரியாமல் வாசலுக்கு இரண்டு முறை வேகமாய்ப் போய் திரும்பிய ஷில்பா சட்டென்று அணிந்திருந்த டீஷர்ட்டை கழட்டி வீசினாள். பின்னர் கைகள் இரண்டையும் விரித்து,
"இந்தா என்னையே எடுத்துக்கோ ஐயாயிரம் கொடுத்துடு..." சொல்லிக்கொண்டிருக்க சிவம் திகைத்துப்போய் நின்றான். அவனுடைய யோசனைச் சக்திகள் அத்துனையும் இழந்துபோனவனாய் மேலாடை இல்லாத அவளுடைய உடம்பையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவன் செய்துகொண்டிருக்கும் தவறு புரிந்திருக்க வேண்டும் வேகவேகமாய் அவள் கழட்டிப்போட்ட டீஷர்ட்டை திரும்பி அவளிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு அப்படியே பர்ஸில் இருந்து ஐயாயிரம் எடுத்து அவளிடம் நீட்டினான்.
கைகளில் இருக்கும் பழங்களைப் பிடிங்கிக்கொள்ளும் குரங்கின் வேகம் இருந்தது அவளுடைய கைகளில்; டீஷர்ட்டைக் கூடப்போடாமல் காசைப் பிடிங்கிகொண்டு வெளியில் சென்றவள் அந்த ஹிப்பியிடம் கொடுக்க அவன் ஏதோ சிரிஞ்சியைக் கொடுக்க கைகளில் குத்திக்கொண்டவள். வெறி தீர்ந்தவள் போல் சிவத்தைப் பார்த்துச் சிரித்தாள் இந்த இடைவெளியில் அந்த ஹிப்பி வெளியேறிவிட; அவள் போட்டுக்கொண்ட போதை மருந்து தந்த மயக்கத்தில் ஆடிக்கொண்டே சிவத்தின் அருகில் வந்தவள் தொப்பென்று கட்டிலில் விழுந்தாள். இத்தனையிலும் அவள் டீஷர்ட்டைப் போடாமல் கைகளிலேயே வைத்திருந்தாள்.
அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, அவள் குத்திக் கீழே போட்ட சிரிஞ்சி அங்கேயே கிடந்ததால் அதை அப்புறப்படுத்திவிட்டுப் பார்த்தால் நன்றாகத் தூங்கத் தொடங்கியிருந்தாள். அவளைத் தொட்டெழுப்பி டிஷர்ட் மாட்டிவிடும் அளவிற்கு துணிச்சல் இல்லையாகையால் பெட்ஷீட்டை எடுத்துப் போர்த்திவிட்டான். அவள் வீட்டுக்குத் தொலைபேசி விவரம் சொல்வதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு அதைவிடவும் நல்ல யோசனை கிடைக்காததால் மொபைலை எடுத்து ஷில்பாவின் தந்தையை அழைத்தான்.
தொலைபேசியை எடுத்த அவருடைய பர்ஸனல் அஸிஸ்டென்டிடம் ஒரு முக்கியமான விஷயம் என்று ஷில்பாவின் தந்தையிடம் பேசவேண்டும் என்றும் சொல்ல அவள் சிவத்தை ஒரு நிமிடம் காத்திருக்கச் சொன்னாள். இடைப்பட்ட நேரத்தில் சிவத்தின் பேச்சால் ஷில்பா கட்டிலில் அசைவது போலிருந்ததால் கதவை லேசாய் சார்த்திவிட்டு வெளியில் வந்தான். தொலைபேசியை அவரிடம் வந்ததும் விஷயத்தைச் சொன்னவன், என்னசெய்வதென்றே தெரியவில்லை என்றதும். அவன் வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டு அவர் வருவதாகவும் சொல்லி தொலைபேசியை வைத்தார்.
சிறிது நேரத்தில ஷில்பாவின் தந்தை டிரைவரோடு அங்கே வந்து சேரும் வரை, சிவத்தால் அவனுடைய அறைக்குள்ளே கூட போக மனம் வரவில்லை. வந்தது சேர்ந்ததுமே அறைக்குள் சென்ற அவளுடைய தந்தை பெட்ஷீட்டை உருவி அவளுக்கு டீஷர்ட் மாட்டி கைகளில் தூக்கிக்கொண்டு காருக்குச் சென்றார். அப்பொழுது தான் கவனித்தான் சிவம் அவள் படுக்கையை நனைத்திருந்ததை.
"சிவம் நாம் இதைப் பற்றி பேசுவோம் இப்ப இவளைக் கூட்டிக்கிட்டு நான் வீட்டுக்குப் போறேன். சாயங்காலமா நீ வீட்டுக்கு வா. இன்னொரு விஷயம் வேலைக்காரியை அனுப்புறேன் அவ பெட்டை சரி செய்து தருவாள்."
என்று சொல்லிவிட்டு வேகமாய் நகர்ந்தார். அவருக்கு தன் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருந்த ஒருவன் முன்னிலையில் இப்படியெல்லாம் நடந்தது கலவரத்தை அளித்திருக்கவேண்டும். அவர் கண்களில் ஏகப்பட்ட கோபம். பெரும்பாலும் ஷில்பாவின் அப்பாவின் முகம் கல்லைப்போலிருக்கும் அவர் என்ன யோசிக்கிறார் என்பது எதிரில் இருப்பவருக்கு தெரியவே தெரியாஅது. இன்று ஏகப்பட்ட உணர்ச்சிகளை கொட்டிக்கவிழ்த்து வெளிப்படுத்தியிருந்தார்.
சிவத்தின் மனம் ஒரு நிலையில் நில்லாமல் ஏகப்பட்ட விஷயங்களை யோசித்துக் கொண்டிருந்தது. அகிலாவைப் பற்றி, ஷில்பாவைப் பற்றி, தன்னுடைய மிடில் கிளாஸ் மனப்பான்மையைப் பற்றி, பணத்தைச் சார்ந்ததாக இருக்கும் வாழ்வைப் பற்றி இப்படி. ஆனாலும் ஷில்பாவின் அப்பா அவனுடைய முதலாளியும் ஆதலால் சாயங்காலம் அவர் வீட்டிற்குப் போயிருந்தான். அவருடைய பர்ஸனல் அறையில் இருப்பதாகவும் உள்ளே போகுமாறும் உதவியாளினி சொல்ல உள்ளே சென்றான்.
லாப்டாப்பில் எதையோ வேகமாக தட்டிக் கொண்டிருந்தவர், சிவம் வந்ததும் அவனை வரவழைத்து அருகில் உட்காரவைத்துக் கொண்டார்.
"சிவம் சாரி உங்கக்கிட்ட சொல்லியிருக்கணும் நான், ஷில்பாவிற்கு போதைப் பழக்கம் உண்டு. அவள் கல்லூரி படிக்கும் பொழுது தொடங்கியிருக்கும்னு நினைக்கிறேன் இடையில் நிறுத்தியிருந்தாள், ஒரு மாசமா திரும்பவும் ஆரம்பிச்சிருக்கா. அவளுக்கு காசு கொடுப்பதை நிறுத்திட்டதால உங்க வீட்டுக்கு வந்திருக்ணும்." சொன்னவர் மூச்சை இழுத்துவிட்டார். சிவத்திற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை அமைதியாக அவரையே கவனித்துக் கொண்டிருந்தான்.
"நீங்க ஷில்பாவைக் கல்யாணம் செஞ்சுக்கிற உங்க நினைப்பை மாத்திக்கிட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஆனால் நான் ஒரு விஷயம் உங்கக்கிட்ட சொல்லிக்கிறேன், அதுக்கப்புறம் என்ன டிசிஷன் எடுத்தாலும் எனக்குச் சம்மதம் தான். உங்களோட முடிவு உங்க ப்ரொபஷனல் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் பாதிப்பா இருக்காதுன்னு உறுதியா சொல்லிக்கிறேன்."
எழுந்து நின்றவர் சிவத்திற்கு முதுகைக் கொடுத்து ஜன்னல் பக்கத்தில் நின்று பேசினார்.
"ஷில்பா முழுசா மாறிடுவான்னோ இல்லை உங்க கல்யாணத்துக்கு அப்புறம் போதை மருந்தே உபயோகிக்க மாட்டான்னோ நான் உத்திரவாதம் தரமாட்டேன். பணம் அதிகமாக அதிகமாக தானே வர்ற பிரச்சனைல்ல இதுவும் ஒன்னு. ம்ம்ம் ஆனா உங்கத் திறமையால என் கம்பெனி நல்லபடியா வரும்கிற நம்பிக்கை எனக்கிருக்கு. அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு பப்ளிக்கா அவளுக்கு புருஷன் அப்படிங்கிற Tagல் இருங்க. அது என் பொண்ணுங்கிறதுக்காக.
ஏன்னா உங்கக்கிட்ட நான் என்னையையே பார்க்குறேன் இதே மாதிரி தான் நான் இருந்தேன். எனக்குக் கிடைச்ச ஆப்பர்டியூனிட்டியை வச்சு நான் பெரிய அளவுக்கு வந்துட்டேன். உங்களுக்கும் அப்படி ஒரு ஆப்பர்டியூனிட்டி இப்ப வந்திருக்கு. காசை வைச்சு பேரம் பேசுற மாதிரி இருந்தாலும் உங்க மேல இருக்கிற அபிப்பிராயத்தாலத் தான் இதைச் சொல்றேன். என் பொண்ணுக்கு உங்களை மாதிரி நிறைய பேர் கிடைப்பாங்க, அவளுடைய போதைப் பழக்கம் தெரிஞ்சவங்களே கூட. ஆனால் எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. யோசிங்க யோசிச்சு ஒரு முடிவு சொல்லுங்க. என் பொண்ணுக்காக பயப்பட்டீங்கன்னா 50% ஷேரை உங்க பேரில் எழுதி வைக்கிறேன் சரியா?"
அவர் சிவத்தை திரும்பிப் பார்த்தார், அவன் பதிலெதுவும் சொல்லாமல் உட்கார்ந்திருக்க.
"சரி நான் உங்களுக்கு மூணு நாள் டைம் தர்றேன். ஒரு முடிவைச் சொல்லுங்க"
அதிலிருந்து தான் அவன் அகிலாவையும் ஷில்பாவையும் ஒப்பிடத்தொடங்கியது. ஷில்பாவைக் கல்யாணம் செய்த பிறகு திருத்திவிட முடியுமா என்ற கேள்வி ரொம்பவும் குழப்பமான ஒன்றாய் இருந்தது. இடைப்பட்ட காலத்தில் அதாவது போதை மருந்தை அவள் மறந்திருந்த காலங்களில் அவளுடன் பழகியிருக்கிறான். அவள் அப்பா அவளிடம் இவனை உனக்கு முடிக்கலாம் என்று சொல்லி வைத்திருந்ததால் நன்றாகத் தான் பழகிக் கொண்டிருந்தாள். ஆனால் இப்பொழுது எல்லாம் நடிப்பாகத் தோன்றியது.
மூன்றுநாட்கள் மண்டையை உடைத்துக் கொண்ட பிறகு அகிலாவிற்கு ஒரு கடிதம் எழுதினான்.
அகிலா,
சந்தர்ப்ப சூழ்நிலைகள் நம்மை பிரித்துவிட்டது. நான் என் வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு முன்னேறிக் கொண்டிருக்கும் பொழுது. அதற்கான ஒரு படிக்கட்டாக என்னுடைய கல்யாணத்தைப் பார்க்கிறேன். நான் வேலை செய்யும் கம்பெனியின் ஓனர் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வதாய் முடிவெடுத்துக்கிறேன்.
வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கைப் பாதையை மாற்றி விடுகின்றன. இன்று இப்படி ஒரு முடிவை எடுத்துருக்கிறேன். உண்மையில் இந்த முடிவால் எங்கே போய் இந்தப் பாதை முடியுமென்று தெரியவில்லை தான். ஆனால் உன் பாதை நல்லபடியாக இருக்குமென்றே நினைக்கிறேன்; நானில்லாவிட்டாலும். ஏனென்றால் பாசாங்கில்லாத அன்பை நீ உனக்கு வரப்போகும் கணவனுக்குத் தருவாய் என்று எனக்கு நம்பிக்கையிருக்கிறது; எனக்கு என்னைப் பற்றி அப்படியொரு நம்பிக்கையில்லை.
உன் வாழ்க்கையை கெடுப்பதைக் காட்டிலும் ஏற்கனவே கெட்டிருக்கும் என் வாழ்க்கையை இப்படியே தொடர்கிறேன். உன்னை மறக்கமுடியாமா போன்ற கேள்விகள் எல்லாம் மனம் முழுக்க இருக்கு, சந்தர்ப்பவாதியாக இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.
வேறென்ன சொல்ல,
மன்னித்துவிடு அகிலா,
சிவம்.
என்னை மன்னித்துவிடு அகிலா
பூனைக்குட்டி
Tuesday, June 24, 2008
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
பெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்க...
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...
சிறப்பாக இருக்கிறது... மனிதனின் சுயநலம் அவனை ஆட்கொள்ளும் சமயம் அவன் எடுக்கும் முடிவு காலத்தைச் சார்ந்து அமைந்துவிடுகிறது...
ReplyDeleteஇனி, பணத்தை தேடி மகிழ்ச்சியை இழக்கும் வாழ்க்கை சிவத்திற்கு...
சார், சில இடங்களில் சிவன் என எழுதுவதற்கு பதிலாக நான் "என்னை" என எழுதியிருக்கிறீர்கள்.
//சார், சில இடங்களில் சிவன் என எழுதுவதற்கு பதிலாக நான் "என்னை" என எழுதியிருக்கிறீர்கள்.//
ReplyDeleteம்ம்ம், அது நேரடியாய் third person singularல் எழுதாமல் மாற்றி எழுதியது.
அதனால் அந்தப் பிரச்சனை இருக்கும்.
மாற்றிவிடுகிறேன்.
"எனக்கு" என்ன செய்வதென்றே தெரியவில்லை, அவள் குத்திக் கீழே போட்ட சிரிஞ்சி---
ReplyDeleteஅவனுக்கு என வர வேண்டுமோ?
அனானிமஸ்,
ReplyDeleteமாற்றியிருக்கிறேன்.