In நாட்குறிப்பு

நெம்புகோல் எண்ணங்கள் அல்லது புரட்டிப் போடும் சிந்தனைகள்

சிறு வயது ஆசைகள் நிறைவேறுவது என்பது எப்பொழுது மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் தான். சில ஆசைகள் ரொம்பவும் பெரிய கனவாய் இருந்து பின்னால் நிறைவேறும் பொழுது மனம் அப்படியே பறக்கத் தொடங்குகிறது. நான் சாஃப்ட்வேர் இன்டஸ்ட்ரியில் சேர்ந்த பொழுது, லாப்டாப் வாங்கிய பொழுது என இப்படி மனம் உற்சாகத்தில் குதித்திருக்கிறது. சில ஆசைகள் திணிக்கப்பட்டதாக இப்பொழுது புரிந்தாலும் அந்தக் கனவுகளுடன் தான் நான் வாழ்ந்திருக்கிறேன் எனும் பொழுது அவற்றை அடைந்த தருணங்கள் பறப்பது போன்ற உணர்வுகளையே தந்திருக்கின்றன.
 
அப்படிப்பட்ட ஒன்றுதான் காஷ்மீர் செல்லவேண்டுமென்ற என் ஆசையும் கூட, இந்திய தேசியத்தின் மீதான ப்ரியமானது இன்றையைவிடவும் அதிகம் இருந்த காலக்கட்டங்களில் நான் செல்லாவிட்டால் வேறு யார் செல்வார், என்று கோபப்பட்ட காலங்கள் உண்டு. இன்று காஷ்மீர் செல்வதற்கான ஆரம்பகட்ட திட்டங்கள் முடிவடைந்து நகர்தலுக்கான நாட்கள் நெருங்க மனம் திரும்பவும் இறக்கை கட்டிக்கொண்டது. மனிதனுடைய நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாய் பறப்பதைச் சொல்லலாம், விமானத்தில் பறப்பதைச் சொல்லவில்லை. நீந்துவதைப் போல் தனியாய் பறப்பதைச் சொல்கிறேன். அதனாலேயே உணர்வுப்பூர்வமாய் பறப்பது என்பது மிகப்பெரிய விஷயமாகயிருக்கிறது.
 
பெங்களூரின் குளிர் ஓரளவுக்கு உதவுமென்றாலும் நான் டெல்லியில் இறங்கும் பொழுது கடும்குளிர் என்னை கட்டி அணைத்து வரவேற்க காத்திருக்கும், பாவம் குளிருக்கு என்ன தெரியும் அது தன்னுடைய வரவேற்பை உற்சாகத்தை தடைசெய்யாமல் வழங்குகிறது.எப்பொழுதும் இயற்கை மட்டும் ஒருவருக்கு கொடுத்து ஒருவருக்கு மறுப்பதில்லை, மனிதர்கள் தான் அதைச் செய்வது. இந்த பெங்களூர்-டெல்லி மாற்றம் என்னை பெரிய அளவில் தாக்காமல் இருப்பதற்கான முஸ்தீபுகளில் இறங்கியாகிவிட்டேன் என்றாலும் டெல்லியின் கடுங்குளிரை அனுபவித்தன் என்ற முறையில் பயத்துடன் ஒரு குதூகலமும் இருக்கிறது.
 
படிக்கும் காலங்களைப் போலில்லாமல் சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு கையில் சம்பளம் வாங்கத் தொடங்கிய பிறகான வாழ்க்கை அதிகம் சம்பாதிக்கும் வெறியை தானாகத் தோற்றுவிக்கும், கையில் டெல்லியில் வாழ்வதற்கான சம்பளம் வாங்காமல் உறவினர் வீட்டில் தங்கியிருந்து சமாளித்தக் காலங்களில் முனிர்க்கா தெருக்களில் அலைந்திருக்கிறேன் இந்த பணம் சம்பாதிக்கும் வெறியுடன் யாருமில்லா ரோடுகளில் "வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேனென்ரு நினைத்தாயோ" என்று சப்தமிட்டு கவிதை சொல்லியிருக்கிறேன். இன்று மனநிறைவாக சம்பாதிக்கும் பொழுது நினைத்துக் கொள்கிறேன் அந்தப் பொழுதுகளை, ஆரம்பத்திலேயே அதிக சம்பளம் கிடைத்திருக்குமானால் இன்றிருக்கும் நானாக நான் இருந்திருக்க மாட்டேன்.
 
எல்லாம் புடம் போடுவதற்காகத்தான் என்ற தெளிவு வந்த பிறகு, 'காலம் உனக்குச் சொல்லித்தரும்' என்ற பதிலில் இப்பொழுதெல்லாம் கோபம் வருவதில்லை ஆனால் வருத்தம் வருகிறது. இதைச் சொல்லும் மனிதனை அருகில் அழைத்து 'ரகசியங்கள் ரகசியங்களாக இருந்தால் தான் மதிப்பு, உனக்குத் தெரிந்த இந்த ரகசியத்தை அதிகம் வெளியில் சொல்லி தானாயும் உணறமுடியாமல் செய்துவிடாதே!' என்று சொல்லவேண்டும் போலிருக்கிறது. ஈகோவைக் கழட்டிவிட்டு உண்மையை நெருங்கும் சாத்தியத்தை காலம் வழங்குகிறது ஆனால் அதை முன்னமேயே சொல்லிக்காட்டி கர்ண கவச குண்டலமாய் மாற்றுவதால் நீங்கள் அடையப்போவது என்ன என்று கத்த வேண்டும் போல் இருக்கிறது.
 
கையில் பணம் இல்லாமல் இருந்த திருச்சியை அதேபோல் இருந்த டெல்லியுடன் ஒப்பிட முடியவில்லை, டெல்லியில் நான் சுயமாய் சம்பாதித்துக் கொண்டிருந்தேன். என் உழைப்பு மதிப்பற்றது அதற்கான மதிப்பை பெறவில்லை என்ற கோபம் ஆதங்கம் இன்றும் சரியென்று தான் படுகிறது. ஆனால் அனுபவங்களை தராசின் இன்னொரு பக்கத்தில் வைத்தால் என் கோபம் ஆதங்கம் இன்னபிறவெல்லாம் தூசியாகிப்போகின்றன. ஆனால் இன்று கையில் காசுடன் நான் நினைத்த எதையும், எதையும் செய்யும் சாத்தியக்கூறுகளுடன் டெல்லி செல்வதை நினைக்கும் பொழுதே மூளைத்தசைகளின் அடியில் ஒளிந்திருக்கும் பழைய நினைவுகள் மேலெழுந்து மகிழ்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை உண்டாக்குகின்றன. நான் டெல்லியில் மூன்று நான்காண்டுகளுக்கு முன்னர் நினைத்ததை எல்லாம் ஆசைப்பட்டதை எல்லாம் இன்று கையில் பணமிருப்பதால் செய்துவிடுவேனா என்று கேட்டால் ம்ஹூம் மாட்டேன்.
 
ஏனென்றால் பணம் என்பது வெறும் காகிதத்தால் ஆன ஒரு பொருளாய் நான் நினைக்கவில்லை, அதனுடன் நாம் நம் அனுபவங்களையும் சேர்த்து பொட்டலம் கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் அந்த எண்ணம் சந்தோஷத்தைக் கொடுக்கிறது, நானலைந்த முனிர்காவின் சந்துகள், கனாட்ப்ளேசின் சந்துகள், பாலிகா பசார் கடைகள், ஜேஎன்யூவின் வீதிகள் எல்லாவற்றிலும் சந்தோஷத்துடன் நடக்க முடியும் என்ற நம்பிக்கை வருகிறது, வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிடுவோமா என்று கேவிய இரும்புக் கதவுகள், சிமென்ட் பெஞ்சுகள், பனிவிழுந்த ரோடுகள் எல்லாவற்றையும் திரும்பவும் சந்தித்து இல்லை நான் அப்படி முடிந்து போகவில்லை. இன்றைக்கு கொஞ்சம் நிமிர்ந்து இருக்கிறேன் என்று கட்டித்தழுவி சொல்லவேண்டும் போலிருக்கிறது. இன்னொரு முறை உங்களிடம் இதே போன்று வருபவர்களிடம் அவர்களும் ஒரு நாள் என்னைப்போல் ஆவார்கள் என்று ஆறுதல் கூறுங்கள் என்று சொல்லத் துடிக்கிறேன்.
 
ஒரு பயணத்தைப் பற்றிய நினைப்பு கிளறிவிடும் நினைவுகள் சட்டென்று முடிந்துவிடுவதாய் இல்லை. எங்கேயோ இத்தனை நாளாய் மூளையின் சிக்கலான நரம்புப்பிணைப்புகளில் காணாமல் போயிருந்த ஏகப்பட்ட எண்ணங்களை கிளறிவிட்டு கால்கள் தரையில் பரவவிடாமல் செய்துவிடுகின்றன. மனிதர்களைப் போல் தாவரங்களைப் போல் கட்டிடங்களுக்கும் ரோடுகளுக்கும் பெஞ்சுகளுக்கும் நகரங்களுக்கும் உயிரிருப்பதாய் படுகிறது. என்னுடன் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஆசையோடு நெருங்குவதாகவும் அவற்றின் மொழி எனக்குப் புரிபடாததால் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்ற எண்ணமே மேலிடுகிறது. ப்ரெட் ஆம்லெட் சாப்பிட்ட இரவு நேர கனாட்ப்ளேஸ் முட்டுச் சந்து, சமோசா - குலோப் ஜாமுன் சாப்பிட்ட மார்கெட் பகுதியின் பெரிய கடை, எருமைப்பாலின் காச்சப்படும் வாசத்தோடு லஸ்ஸி சாப்பிடும் முனிர்காவின் இன்னொரு கடை என திரும்பிச் சென்று விசாரிக்க ஆயிரம் ஆயிரம் நிகழ்ச்சிகள் மனதில் ஓடுகிறது.
 
அங்கே இருக்கப்போகும் இரண்டு நாளில் ஒரு நாள் தாஜ்மகால் பார்க்க என்று வைத்திருக்கிறேன், ஒரு வகையில் அதன் பிரம்மாண்டத்தாலேயே என் மனதில் அதற்கு இடமில்லாமல் போனது கைக்கடக்கமான தாஜ்மகால் தான் உண்மையான தாஜ்மகாலைப் பார்க்கும் வரை மனதில் இருந்தது. அதன் பிரம்மாண்டம் என் மனதில் இருந்த தாஜ்மகாலின் இடத்தை அழித்துவிட்டது, மீண்டும் முன்முடிவுகள் இல்லாமல் இன்னொரு முறை பார்த்தால் தாஜ்மகாலுக்கான இடம் மீண்டும் மூளைச்சந்துகளில் தோன்றுமா என்று கேள்விகளுடன் என் பயணம் பெங்களூரில் இருந்து இந்த வாரம் 21ம் தேதி கிளம்புகிறது, 23ம் தேதி டெல்லியில் இருப்பேன் என்றாலும் ஜம்முவிற்கான பயணம் 25ம் தேதிதான் 24 தாஜ்மகால் பயணம் என்று வைத்திருக்கிறேன். இது திட்டமிடப்பட்டதல்ல மாற்றங்களுக்குரியதே, 'நான் திட்டமிட்டேன் என்று சொன்னால் கடவுள் சிரிப்பார்' என்றொரு பழமொழி கேள்விப்பட்டிருக்கிறேன் கடவுள் மீது நம்பிக்கையில்லாவிட்டாலும் அந்த பழமொழி சொல்லவரும் விஷயத்தை கடவுள் என்ற ஒன்று இல்லாமலே புரிந்து கொண்டிருக்கிறேன். 29 ஜம்முவில் இருந்து கிளம்பி டெல்லிவந்து 1ம் தேதி டெல்லியில் இருந்து பெங்களூர் வருவதாக உத்தேசம். 4ம் தேதிக்கு சென்னையில் புத்தகக்கண்காட்சிக்கு செல்லவேண்டும் என்பதும் விருப்பம், இடையில் கன்னியாகுமாரியை தொட்டுவிட்டாவது வந்துவிடணும் என்பது இப்போதைக்கு ஒரு பெருங்கனவும். ஏகவல்லோன் எல்லோர்க்கும் பொதுவான இறைவன் கருணை வைத்தால் எல்லாம் சரியாக நடந்துவிடும் இல்லையா? :)
 
 

Related Articles

12 comments:

 1. Touching. Best wishes. Hope the trip brings you more inspiration.

  ReplyDelete
 2. அனானிமஸ் நன்றிகள் அதை கொஞ்சம் பெயரோட சொல்லியிருக்கலாம்.

  சல்தா ஹை

  ReplyDelete
 3. - Chandra (previous comment)

  ReplyDelete
 4. கனவு மெய்ப்பட வேண்டும்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. நன்றிங்க சந்திரா கேட்டதும் பெயரைச் சொன்னதுக்கு.

  காட்டாறு உங்களுக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 6. உணர்வுகளின் அழகான கோர்வை.

  ReplyDelete
 7. தங்களதுப் பயணம் உங்கள் மனம்போல அமைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. போய் வந்தபிறகோ அல்லது பயணப்படும்போதோ , பயண அனுபவங்களை எழுதுங்கள்

  ReplyDelete
 9. //ஏனென்றால் பணம் என்பது வெறும் காகிதத்தால் ஆன ஒரு பொருளாய் நான் நினைக்கவில்லை, அதனுடன் நாம் நம் அனுபவங்களையும் சேர்த்து பொட்டலம் கட்டி வைத்திருக்கிறோம்.//
  வித்தியாசமான கண்ணோட்டம், ஆனால் நிதர்சனமும் கூட. பயணத்திற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. கடும்குளிர் என்னை கட்டி அணைத்து வரவேற்க காத்திருக்கும், பாவம் குளிருக்கு என்ன தெரியும் அது தன்னுடைய வரவேற்பை உற்சாகத்தை தடைசெய்யாமல் வழங்குகிறது.எப்பொழுதும் இயற்கை மட்டும் ஒருவருக்கு கொடுத்து ஒருவருக்கு மறுப்பதில்லை, மனிதர்கள் தான் அதைச் செய்வத
  இன்னொரு முறை உங்களிடம் இதே போன்று வருபவர்களிடம் அவர்களும் ஒரு நாள் என்னைப்போல் ஆவார்கள் என்று ஆறுதல் கூறுங்கள் என்று சொல்லத் துடிக்கிறேன்.

  lovely...lines...

  ReplyDelete
 11. கடும்குளிர் என்னை கட்டி அணைத்து வரவேற்க காத்திருக்கும், பாவம் குளிருக்கு என்ன தெரியும் அது தன்னுடைய வரவேற்பை உற்சாகத்தை தடைசெய்யாமல் வழங்குகிறது.எப்பொழுதும் இயற்கை மட்டும் ஒருவருக்கு கொடுத்து ஒருவருக்கு மறுப்பதில்லை, மனிதர்கள் தான் அதைச் செய்வத
  இன்னொரு முறை உங்களிடம் இதே போன்று வருபவர்களிடம் அவர்களும் ஒரு நாள் என்னைப்போல் ஆவார்கள் என்று ஆறுதல் கூறுங்கள் என்று சொல்லத் துடிக்கிறேன்.

  lovely...lines...

  repeet.
  again best of trip brings you more inspiration.

  ReplyDelete
 12. skumar, வினையூக்கி, இளாம், emperor, புரட்சி தமிழன் நன்றிகள்.

  வினையூக்கி நிச்சயமாய் எழுதுகிறேன்.

  ReplyDelete

Popular Posts