பேருந்து நிலையத்திற்கே ரஞ்சனி வருவாள் என்று நான் நிச்சயமாய் நினைக்கவில்லை, சென்னை - பெங்களூர் பேருந்தை விட்டு கீழே இறங்கியிருக்கவில்லை சில்லென்று முதுகெலும்பைத் தொட்டுச் செல்லும் பனிக்காற்றையும் “ஆட்டோ பெக்கா சார்” என்று பெட்டியைப் பிடுங்கி தன் ஆட்டோவில் அமர்த்திக் கொள்ளும் லாவகத்திலிருந்து தப்பிப்பதையும் மீறி சிகப்பு நிற சாண்ட்ரோவில் சாய்ந்து நின்று கொண்டிருந்த ரஞ்சனி கண்ணில் பட்டாள்.
கை அசைத்து என் கண்களின் கணிப்பு சரிதான் என்று உறுதிசெய்தவளிடம் இந்த மூன்று ஆண்டுகளில் பெரிதாய் மாற்றம் ஒன்றும் இல்லை. பேருந்துகளின் அத்தனை சௌகர்யமாக நான் உறங்குவதில்லை என்பதால், களைப்பாகவே இருந்தது அதுவும் பக்கத்தில் உட்கார்ந்து குறட்டை விட்ட நபருக்கு நல்ல உறக்கம். என் பொழுது பாதி ட்ரைவர் உடன் பேசுவதில் கழிந்தது, நான் சிகரெட் குடிக்க ஆரம்பித்தும் மூன்று வருடங்கள் இருக்கும். அந்த அதிகாலை வேளையிலும் குளித்திருப்பாள் என்று தோன்றியது தலை சீவி பின்னியிருந்தாள், மிருதுவான சந்தனம் ஒளிர்ந்தது அவளது நெற்றியில் அதே விகல்பமில்லாத சிரிப்பு. நான் அவளை நெருங்கும் வேளையில் காரின் முன்பக்க கதவைத் திறந்தவள் கையில் ஒரு ஸ்வெட்டரை எடுத்து திணித்தாள். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை,
நான் பல் விளக்குவதைப் பற்றி பெரிய அபிப்ராயம் ஒன்றும் வைத்திருக்க மாட்டேன் என்று அவளுக்குத் தெரியுமாதலால், “சாயா சாப்பிடுறியா?” என்று கேட்டவாரே அருகில் வந்து ஒரு முறை அணைத்து விலகினாள். அவள் வலது மார் என் வலது மார்பில் உரசியது. அவளுடையதில் இல்லை, நானொன்றும் அவளுக்குப் புதிதில்லை அவள் மார்புகளுமே கூட ஆனால் இன்று அவள் இன்னொருவனுக்கு சொந்தமானவள். என் மனதின் ஓரத்தில் கூட அவளைப் பற்றி தவறாக நினைக்க என்னால் முடியாது ஆனால் வெறும் பனியனில் அவள் அணைப்பு பனிக்கு இதமாக எனக்குத் தேவையாக இருந்தது. நான் எங்களை யாரும் தவறாய் உணர்ந்துவிடக்கூடாதே என்று சுற்றிலும் பார்த்தேன். என்னிடம் தவறு இருந்தது, நான் மறைக்கவில்லை அவளும் உணர்ந்தேயிருக்க வேண்டும். பின் ஸ்வெட்டரை மாட்டியபடியே, பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்தவனாய்.
“Hope you dont mind” என்றவாறு பற்ற வைத்தேன், அவளுக்கு நான் அவளைப் பிரிந்தபின் என்னுடன் ஒட்டிக்கொண்ட நண்பனை அறிமுகம் செய்ய நினைத்தவனாய். என்னமோ சொல்ல வந்தவள் எதுவும் பேசவில்லை. அவள் கேட்டு நான் மறுத்தது சிகரெடி பிடிப்பது, அவளுக்கு நாங்கள் காதலித்த சமயத்தில் நான் விளையாட்டுக்காய் அவள் முன் சிகரெட் பிடித்துக் காட்டச் சொன்ன பொழுது மறுத்திருந்தேன் அம்மாவின் பெயரைச் சொல்லி. அவள் என்னிடம் அதைப் பற்றிக் கேட்டாகது உறுத்தியது என்றாலும் அது தான் ரஞ்சனி. நானே தொடர்ந்தேன்.
“ஏம்பா நீ வந்த, நானே ஆட்டோ பிடிச்சு வந்திருப்பேனே? வீட்டில் எல்லாரும் சௌக்கியம் தான”
அதுவரை கண்களைப் பார்க்காமல் எங்கேயோ பார்த்துக் கொண்டு பேசியவள் சட்டென்று கண்களை உறுத்துப் பார்த்தாள்.
“இந்த ஊரில் ஆட்டோகாரங்க நல்லவங்க தான் இல்லைன்னு சொல்லலை காலங்கார்த்தால ஏகத்துக்குப் பொய் சொல்லுவாங்க... இங்க சாப்பிடறதுன்னாலும் சரி இல்லை வீட்டிற்குப் போய் பார்த்துக்கலாம்னாலும் எனக்குப் பிரச்சனையிலை!” சற்று நிறுத்தியவள் நான் அங்கே டீ சாப்பிடுவதில் பெரிதாய் விருப்பம் காட்டாததால் கதவைத் திறந்து உள்ளே உட்கார்ந்தவாரே, “வீட்டில் எல்லாரும் சௌக்கியம்.” என்றாள்.
நானும் முன்பக்க கதவைத் திறந்து உட்கார்ந்தேன், மிருதுவான சந்தன வாசம் தாக்கியது. அலுங்காமல் காரைத் துவக்கியவள் சடுதியில் கியரை மாற்றி பசுமை நகருக்குள் நகர்த்தத் தொடங்க அவளுடைய லாவகம் ஏற்படுத்திய ஆச்சர்யம் சட்டென்று முகத்தில் படர்வதைச் சமாளிக்க வேண்டி முகத்தை எதிர்ப்பக்கம் திருப்பியிருப்பேன். குபீரென்ற சிரிப்பில் அதிர்ந்து அவளைத் திரும்பி பார்த்தேன்.
“தாஸ் நீ இன்னும் மாறவேயில்லை, அப்ரிஷேட் மேன். நான் நல்லா டிரைவ் செய்றேன்னு ஒத்துக்கோ அதுவும் இல்லாட்டா அந்த ஆச்சர்யத்தையாவது வெளிப்படுத்தேன் என்ன குறைஞ்சிடும்.”
அவளுடைய சிரிப்பில் நானும் கலந்து கொண்டேன். அவள் அப்படிச் சிரிப்பதைப் பார்த்து வெகுகாலம் ஆகிவிட்டிருந்தது. கடைசியாய் நாங்கள் சந்தித்த பொழுதுகளில் அவளிடம் ஒரு மென்சோகம் நிரம்பிய புன்னகை மட்டுமே வெளிப்படும். வெளியில் முகம் திருப்பினேன் இன்னும் விடியவில்லை, பனிபோல் படிந்திருந்த புகை மூட்டத்தைக் கிழித்துக் கொண்டு அநாயாசமாய் கார் பெங்களூர்ச் சாலைகளில் பறந்தது. பாடகர்கள் தங்களுடைய மூச்சுக்காற்று மைக்கில் கேட்டுவிடக்கூடாதென்று நொடிப்பொழுதில் மைக்கை அகற்றி மூச்சுவிடும் லாவகம் அவள் ரிவ்யூ மிரர் பார்ப்பதில் இருந்தது.
மூன்றாண்டுகளுக்கு முன் எத்தனை தடவை கெஞ்சியிருப்பேன் வண்டி ஓட்டக் கற்றுக்கொள் என்று, தலைகீழாய் நின்று மாட்டேன் என்று அடம்பிடித்தவள் இன்று என்ன பிரம்மாதமாய் வண்டி ஓட்டுகிறாள் என்று நினைத்தவனுக்கு பழசெல்லாம் நினைவில் வந்தது.
“தாஸ் உங்க வீட்டில் ஜாதி பார்த்துத்தான் சமைக்க விடுவாங்கன்னு முன்னமே தெரியும்னா நீ என்னைக் காதலிச்சிருக்கவே கூடாது! இப்ப வந்து அம்மாவையும் விட்டுத்தரமுடியாது உன்னையும் விட்டுத்தரமுடியாதுங்கிறது குழந்தைத்தனமாயிருக்கு.
நீ எதாவது ஒரு முடிவெடுத்தே ஆகணும் நான் உங்க அம்மாவை கழட்டி விடச் சொல்லலை, எல்லா அம்மாவும் கல்யாணத்துக்கு அப்புறம் சரியாய்டுவாங்க அப்படியில்லாட்டி நான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு படிஞ்சுப் போயாவது சரி செய்றேன்...” அவளுடைய அத்தனை புலம்பல்களுக்குப் பிறகும் என்னால் முடிவெடுக்க முடியாததால் “தாஸ் உன்னைய நான் தப்பா சொல்லலை! என்னால் உனக்காக காத்திருக்க முடியும் ஆனால் இது காத்திருந்து கைகூடுற விஷயமா தெரியலை. நீ உன் வழியப் பார்த்துக்கோ நான் என் வழியப் பார்த்துக்குறேன்.” சொல்லிவிட்டுப் பிரிந்தவளை இன்று தான் மீண்டும் சந்திக்கிறேன்.
“இடைல பெங்களூர் வந்திருந்தியா தாஸ்” அந்தக் கேள்விக்கான என்னை மீண்டும் திருப்பியது ஆனால் பதில் அவளுக்குத் தெரியும் என்பதால் நான் சொல்லவில்லை. அவளும் எதிர்பார்த்திருக்க மாட்டாள் தான். என்னுடைய சிந்தனையைக் கலைக்க முயற்சித்திருக்க வேண்டும்.
“ஆனா நான் சென்னை வந்திருந்தேன் சில சமயம்.”
நான் முறைக்க,
“யூ நோ ஒன்திங் வி காட் டிவோர்ஸ்ட்.”
என்னால் அவள் சொன்ன வார்த்தைகளை நம்ப முடியவில்லை. அவளுடைய திருமண வாழ்க்கைக்கு என்னால் எந்த விதத்திலும் பாதிப்பு வந்துவிடக்கூடாதென்று தான் மூன்றாண்டுகளாக அவளைச் சந்திக்காமல் என்னை நானே கொலை செய்து கொண்டு வாழ்ந்து வந்தேன்.
“என்ன சொல்ற நீ?”
“தாஸ் இந்த விஷயத்தை வீட்டுக்குப் போய் பேசலாமா?” என்று அவள் தள்ளிப்போட என் மனதில் ஏகப்பட்ட கேள்விகள். ரஞ்சனியைப் போன்ற ஒரு பெண்ணை விரும்பாத நபர் கூட இருக்கமுடியுமா? ஒருவேளை நாங்கள் காதலித்தது தெரிந்திருக்குமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளால் நான் அலைமோதிக் கொண்டிருந்ததால் எப்பொழுது காரைவிட்டு இறங்கினேன் எப்பொழுது வீட்டிற்கு வந்தேன் என்பதே தெரியாமல் அவைகள் நடந்திருந்தன.
“இப்ப கேளு உனக்கு என்ன கேக்கணுமோ அதையெல்லாம்!”
என்னால் அதற்குப் பிறகும் கேள்வி எதையும் கேட்கமுடியவில்லை.
“அவருக்கு இன்னொரு லவ் அஃப்யர் இருந்தது. என்கிட்ட அவர் அதைச் சொன்னதும் எனக்கென்னமோ உன் ஞாபகம் தான் வந்துச்சு. என்னால எதையுமே மறுக்க முடியலை. அம்மா அப்பாவுக்காகத்தான் கட்டிக்கிட்டேன் ஆனாலும் என்னால் முடியலைன்னு அழற புருஷன் கிட்ட என்ன சொல்லமுடியும் சொல்லு நான் டைவோர்ஸ்க்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்லிட்டேன்.” நிறுத்திவிட்டு என்னையே பார்த்தாள்.
ரஞ்சனியின் இந்த நிலைக்கு நான் காரணம் இல்லை என்ற உணர்வே சந்தோஷத்தைத் தருவதாய் இருந்தது. என் உள்ளத்தைப் படித்தவளைப் போல்,
“நம்ம இரண்டு பேரு விஷயம் அவருக்குத் தெரியாது...” அவளும் மென்மையாய் சிரித்துக் கொண்டே சொன்னாள். “அப்படியிப்படின்னு இரண்டு வருஷம் ஓடிருச்சு... அதெல்லாம் சரி நீ ஏன் கல்யாணமே பண்ணிக்கலை?”
என்ன சொல்வேன் நான் நீதான் காரணம் என்றா? அது அவளுக்குத் தெரியாத ஒன்றா என்ன? கேள்விகளுக்கான பதில் அதனுடைய தேவையை நிறைவேற்ற முடியாதெனும் பொழுது பதில்களின் தேவையே கூட தேவையில்லாததுதான். நான் பதிலொன்றும் சொல்லாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
"நீ கல்யாணம் பண்ணிக்காததுக்கு நான் தான் காரணம்னு சொல்லமாட்டேன்னு நினைக்கிறேன்..." சொல்லிவிட்டு சிரித்தாள்.
"உன்னை எப்படிச் சொல்வேன் தப்பெல்லாம் நான் பண்ணினது இல்லையா? தைரியம் இல்லாம கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னது நான்தானே?" அவளுக்கு பதிலாகச் சொல்லாமல் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையை குறைக்கும் மனப்பான்மைதான் இருந்தது என்னிடம்.
"சரி என்ன சாப்புட்ற?" பேச்சை மாற்ற விரும்பியிருக்கவேண்டும் அவள், நான் நேராய் விஷயத்திற்குள் குதித்தேன்.
"நாம கல்யாணம் பண்ணிப்போமா?" என்று கேட்டேன்.
அவளிடம் அந்தக் கேள்வி பெரிய ஆச்சர்யம் எதையும் ஏற்படுத்தவில்லை, சொல்லப்போனால் என்னைப் பற்றி நன்றாகத் தெரிந்தவள் என்பதால் அப்படி ஒரு கேள்வியை என்னிடம் இருந்து அவள் எதிர்பார்த்திருக்கத்தான் வேண்டும். அவள் டைவர்ஸ் ஆன விஷயத்தை காரில் சொன்னதில் இருந்து நான் எனக்குள்ளேயே கேள்விகள் கேட்டு பதில்கள் சொல்லிக்கொண்டிருந்தது அவளுக்கு ஒருவாறு ஊகத்தில் தெரிந்திருக்கும். இன்னும் சொல்லப்போனால் அவளுக்கு நான் பெங்களூர் வரப்போவதை சொன்னதில் இருந்தே ஒருவாறு இந்தக் கேள்விக்கான பதிலைப்பற்றி அவள் யோசித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
அவளை நாங்கள் காதலித்த பொழுதே என் பெற்றோர்களை எதிர்த்து கல்யாணம் செய்துகொண்டிருந்தால் அவள் கஷ்டப்படுவாள் என்றுதான் நான் வருத்தப்பட்டேனே தவிர அவளைக் கல்யாணம் செய்வதைப் பற்றிய வேறு எண்ணங்கள் இல்லை என்று அவளுக்குத் தெரியுமாயிருக்கும்.
சிரித்துக்கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்,
"ம்ம்ம் இப்ப தைரியம் வந்திடுச்சு போலிருக்கு! ஆனால் எனக்கு இப்ப கல்யாணங்கிற ஃபார்மேட்டில் விருப்பம் போயிருச்சு, அம்மா அப்பாவுக்காக செஞ்சிக்கிட்ட கல்யாணமும் இப்படி பாதியில் நின்னுட்டதால் அவங்களும் அதுக்கு மேல கம்பள் பண்ணல, கை நிறைய சம்பாதிக்கிறேன், வீடு வாங்கியிருக்கேன், கார் வாங்கியிருக்கேன் வாழ்க்கை அதுபாட்டுக்குப் போய்க்கிட்டிருக்கு. மாசத்துக்கு ஒருவாரம் அம்மா அப்பா ரெண்டுபேரும் இங்க வந்து இருந்துட்டுப் போறாங்க, அம்மாவோட சர்வீஸ் முடிஞ்சதும் இரண்டுபேரும் என்கூடவே வந்து இருந்துடுறேன்னு சொல்லியிருக்காங்க.
அதென்னமோ தனியா கொஞ்சநாள் வாழ்ந்துட்டதால திரும்பவும் இன்னொருத்தங்க கண்ட்ரோலில் இருக்க மனசுக்குப் பிடிக்கலை. உன்கூட இருந்தா நீ என்னை கண்ட்ரோல் பண்ணுவேன்னு சொல்லலை ஆனால் அப்படி நடந்தா சரிவராதுன்னு நினைக்கிறேன், நீ காதலிச்ச கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்ச பொண்ணு கிடையாது நான் இப்ப. உன்னைய நினைச்சாலும் பாவமாத்தான் இருக்குன்னாலும் அதுக்காக கல்யாணம் செய்துக்க மனசு வரலை, வேணும்னா சொல்லு இங்க பெங்களூரில் அழகான நல்ல படிச்ச பொண்ணாப்பார்த்து உனக்கு நானே தேடித்தர்றேன்." சொல்ல நான் மெல்ல எனக்குள்ளேயே நொறுங்கத் தொடங்கியிருந்தேன், ஆனால் எனக்கான தண்டனை அது என்று நினைத்தவனாய்.
"ஏன் நான் மட்டும் கல்யாணம் பண்ணிக்கணும் சொல்லு ஒரு பொண்ணு நீ கல்யாணம் பண்ணிக்காம இருப்பேன்னு சொல்றப்ப ஏன் நான் இருக்கக்கூடாது. என்னை மட்டும் ஏன் கல்யாணம் பண்ணிக்கச்சொல்லி நீ கம்பள் பண்ணுற! நானும் இப்ப இருக்கிற மாதிரியே தனியா இருந்துடலாம்னு நினைக்கிறேன்.
நாம எப்பவும் போல நல்ல நண்பர்களாயிருப்போம் எப்பவாவது உன்மனசு மாறிச்சின்னா நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கத் தயாராயிருப்பேங்கிறத மட்டும் நினைவில் வைச்சிக்கோ..."
நான் அவளைத் திருமணம் செய்யாமல் நிராகரித்ததால் அவள் இப்படிச் செய்யவில்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். வெகுகாலம் அவளுடன் ஒன்றாக இருந்து பழகியவன் என்பதால் என்னால் அவளை நிச்சயமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. காலம் எல்லாவற்றிற்கும் தீர்வையும் மருந்தையும் கொண்டது எனவே காலத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு நான் பெங்களூர் வந்த வேலையைச் செய்யப் பயணித்தேன் பாரதியின் இந்தக் கவிதையை மனதில் நினைத்தபடியே,
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்.
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்
இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ
வஞ்சனையின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்த ரெல்லாம்
தஞ்சமென் றேயுரைப்ப்பீர் அவள் பேர்
சக்தி ஓம், சக்தி ஓம், சக்தி ஓம்
- இந்தக் கதை அமீரக ஆண்டு விழா மலரில் வெளிவந்தது. நன்றி ஆசிப் மீரான்.

ரஞ்சனி
பூனைக்குட்டி
Saturday, July 08, 2017


பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
I’d been grinding Visu down for days—teasing, poking—till he broke, voice tight with exasperation. “Fine, but hook me up with a girl I pick ...
-
It was Saturday morning, early 2010, head still thumping from last night’s tequila flood, but I couldn’t stay away—back at Visu’s room like ...
கேள்விகளுக்கான பதில் அதனுடைய தேவையை நிறைவேற்ற முடியாதெனும் பொழுது பதில்களின் தேவையே கூட தேவையில்லாததுதான்.//////
ReplyDeletewhat's this sentence format, let it be simple why not ?
summa remba yosikka vida vendiyathillai
அனானிமஸ் உங்கள் கேள்விக்கான பதில் எழுதினால் அதுவே பெரிய கதையாகிவிடும் என்பதால் நான் ஜூட்டு விடுகிறேன்.
ReplyDeleteநல்லாயிருக்கு தாஸ்...
ReplyDeleteமதுரையம்பதி - நன்றி.
ReplyDeleteஉள்ளம் உருக ஏதோ ஒரு வலி மனதில்
ReplyDeleteநான் இதைத் திருத்தி எழுதணும். நன்றிகள் புலவர் இராமாநுசம்.
ReplyDelete