ஒரு குடும்பத்திற்கு வீட்டு வேலை செய்வதற்காக வரும் முய்(Mui) என்னும் 10 வயது சிறுமியை சுற்றிச் சுழல்கிறது கதை. அவள் வேலை செய்ய வரும் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள், ஏறக்குறைய அவள் வயதில் இறந்து போன அந்த குடும்பத்தில் பெண் குழந்தை ஒன்றின் இறப்பில் இருந்து இன்னமும் மீளாமல் இருக்கிறது குடும்பம். வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு வருடங்களுக்கு காணாமல் போகும் கணவன். துணிகள் தைத்து/விற்பனை குடும்பத்தைக் காப்பாற்றும் அம்மா. முய்'க்கு வீட்டு வேலை சொல்லித்தரும் அங்கே வேலை பார்க்கும் வயதான வேலைக்காரி. அப்பா அடிக்கடி ஓடிப்போய்விடுவதால் வருத்தத்தில் இருக்கும் பெரிய பையன், வேலை செய்யும் பெண்ணை வம்பிழுத்துக் கொண்டிருக்கும் சிறிய பையன் என சின்ன குடும்பத்தை நோக்கி சுழலும் கதையில் வியட்நாமின் 1950 களின் வீடுகளைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.
10 வருடங்கள் அவர்கள் வீட்டிற்கு வேலை செய்து தன் இளமையின் எல்லையில் இருக்கும் முய்'யை தன் மகளாகவே நினைக்கும் அந்த வீட்டின் அம்மாவிற்கு அவள் கணவன் படுத்த படுக்கையாகயிருந்து பின்னர் இறந்ததும் வேறு வழியில்லாமல், தன் மகனின் நண்பன் Khuyen வீட்டில் வேலை செய்யப் பணிக்கிறார். இந்த நண்பர் முய் சிறு வயதாயிருக்கும் பொழுதிலிருந்து அந்த வீட்டிற்கு விளையாடுவதற்காகவும்/நண்பனைப் பார்ப்பதற்காகவும் வருபவன் தான். இத்தனை வருடங்களில் அவன் ஒரு மியூஸிசியானாக இருப்பவன் அவனுடைய காதலியாக வியட்நாமின் நாகரீகப் பெண் ஒருத்தி. அவள் அந்தப் புதுவீட்டில் வேலை செய்யும் கொஞ்ச நாட்களிலேயே Khuyen அன்பிற்குப் பாத்திரமாகிறாள். இதன் காரணமாக Khuyenக்கும் அவன் காதலிக்கும் பிரிவு வந்துவிடுகிறது. கடைசியில் Khuyen முய்'க்கு பாடங்கள் சொல்லித் தருவதுடன் படம் முடிவடைகிறது.
அவ்வளவு தான் படம், இந்தப் படம் வித்தியாசமாகவோ இல்லை நம்மீது எதையும் தீவிரமாக திணிக்கும் விதத்திலோ எடுக்கப்படலை. ஆனால் படத்தில் ஒளிப்பதிவு என்பது பிரமிப்பூட்டுகிறது, ஒளியைக் கட்டுப்படுத்தி ஒரு விளையாட்டு விளையாடியிருக்கிறார் இயக்குநர் என்று தான் சொல்லவேண்டும் இதில் ஒளிப்பதிவாளரும் அடக்கம்.
இயக்குநர் வியட்நாமில் பிறந்திருந்தாலும் வளர்ந்து வாழ்ந்ததெல்லாம் ப்ரான்ஸ் என்பதால் அவருக்கு வியட்நாமைப் பற்றிய நினைவு வரும் பொழுதெல்லாம் பப்பாளியில் காய் வாசனையுடனே அவர் தன் தாய்நாட்டை நினைவுக்கு வருவதாகவும் அதனால் தான் அப்படி ஒரு பெயர் வைத்ததாகச் சொல்கிறார். முய்' சிறுவயதில் இருந்து அழகான இளமையான பெண்ணாக மாறும் பருவத்தைப் பற்றிச் சொல்வதால் எப்படி பப்பாளி காயாயிருந்து பழமானதும் நறுமணம் வீசி எல்லோரையும் கவர்ந்திழுக்கிறதோ அப்படியே அவளும் என்றும் வைத்துக் கொள்ளலாம். ஏறக்குறைய அனைத்துக் காட்சிகளுமே இரைச்சலில்லாத, வசனமில்லாத ஒரு அமைப்பில் படமாக்கப்பட்டிருக்கும்.
இந்தப் படம் பார்க்கும் பொழுது கிடைக்கும் அனுபவத்தை எழுத்தில் வரிக்க முடியாது என்று நினைக்கிறேன் அல்லது அந்தத் திறமை இன்னும் கைகூடவில்லை என்று விட்டுவிடலாம். ஆனால் வண்ணங்களை இழைத்து இழைத்து செய்யும் ஓவியம் போல் ஒவ்வொரு ப்ரேமையும் இயக்குநர் செதுக்கியிருக்கிறார் ஆனால் இந்தப் படம் முழுவதும் ப்ரான்ஸில் எடுக்கப்பட்டது. சிறந்த வெளிநாட்டு அகாதமி விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது, கென்னஸில் சிறந்த அறிமுகப் படம் விருதைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
--இந்தப் படம் பார்க்கும் பொழுது கிடைக்கும் அனுபவத்தை எழுத்தில் வரிக்க முடியாது என்று நினைக்கிறேன்--
ReplyDeleteநானும் இதையே உணர்ந்தேன். அதுவும் படத்தின் முதற்பாதி மிக மிக அருமையாக இருந்தது. அதனோடு ஒப்பிட்டால், முடிவு நாடகத்தனமாக இருந்தது என்பது என்னுடைய எண்ணம்.
முதற்பாதியில் அந்தச் சின்னப்பெண் வேலை செய்யும் விதம். வீட்டார் ஒவ்வொருவரும் அந்தப்பெண்ணை நடாத்தும் விதங்கள். அந்தச் சிறுவர்கள் இருவரின் அன்றாட அனுபவங்கள்.
-மதி
மதி,
ReplyDeleteதாரே ஜமீன் பர்-ன் க்ளைமாக்ஸை ஒத்தது தான் இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ்.
//அந்தச் சிறுவர்கள் இருவரின் அன்றாட அனுபவங்கள். //
அந்தச் சிறுவனின் சீண்டல்கள் நன்றாகயிருக்கும். குறுங்கவிதை போல். :)