In Only ஜல்லிஸ் உண்மைக்கதை மாதிரி சிறுகதை தேன்கூடு

ஆட்டோபயோகிராஃபி

வாழ்க்கையில் ஆட்டோபயோகிராபி எழுதும் ஐடியா சின்னவயதிலிருந்தே உண்டு, யாராவது வாங்கி படிப்பார்களா என்றால், அதற்காகயெல்லாம் வருத்தப்படுவதென்றால் நான் பதிவுகள் கூடத்தான் எழுதமுடியாது. சரி விஷயத்திற்கு வருகிறேன், அப்படி எழுதும் பொழுது உபயோகப்படுத்திக் கொள்வதற்காக குறிப்புக்களை இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்கிறேன். அப்படி எழுதத்தொடங்கிய ஒரு சிறுகுறிப்பு போட்டிக்காக...,

------------------------------------------------------------------

அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்யும் பெண் ஒருத்தி சொல்லப்போகத்தான் எவ்வளவு தவறான அனுமானத்துடன் என்னை மற்றவர்கள் அணுகுகிறார்கள் எனத்தெரிந்தது, அதில் என் பங்கு பெருமளவில் உண்டு. இங்கே ஒரு கம்பெனியில் பல ப்ரொஜக்ட்கள் இருக்கும், பெரும்பாலும் தற்சமயம் கணிணித்துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் ஒரு நபர் ஒரே அலுவலகத்தில் ஒராண்டிற்கு மேல் வேலை செய்வதென்பதே நடக்கிறக் கதை கிடையாது. அதிலும் குறிப்பாக எங்கள் கம்பெனியில் இரண்டாண்டிற்கு ஒருமுறை தான் ஒரு ப்ரொஜக்ட்டிலிருந்து வேறொரு ப்ரொஜட்டிற்கு மாற்றுவார்கள். நான் இங்கே குறிப்பிடுவது சாதாரண ப்ரொஜக்டை அல்ல ஒரு அக்கவுண்டை என்று வைத்துக் கொள்ளலாம்.

அதாவது இப்பொழுது நான் எச்எஸ்பிசி(HSBC) அக்கவுண்டில் இருக்கிறேன் என்றால் நான் இரண்டாண்டிற்கு மேல் இதே அலுவலகத்தில் வேலை செய்தால் மட்டுமே இன்னொரு அக்கவுண்டிற்கு மாற்றுவார்கள். அதாவது மார்கன் ஸ்டான்லிக்கோ(Morgan Stanley), இல்லை சிட்டி பேங்கிற்கோ(City Bank). எதற்காக இதைச் சொல்ல வருகிறேன் என்றால் அந்த இரண்டு வருடங்களில் நீங்கள் செய்த உழைப்பென்பது உங்கள் பழைய அக்கவுண்ட் சார்ந்தவர்களுக்குத்தான் தெரியும் பெரும்பாலும். இப்படி அக்கவுண்ட் விட்டு அக்கவுண்ட் மாறும் பொழுது நீங்கள் புதிதாய் வேலை செய்யத் தொடங்குவதைப் போன்ற உணர்வும் ஏற்படும், புதிய பங்காளிகள் புதிய இடம் புதிய மேலாளர்கள் என மொத்தமாய்ப் புதிதாய் இருக்கும்.

அப்படி நான் ஒரு அக்கவுண்டிலிருந்து மற்றொரு அக்கவுண்டிற்கு வந்த பொழுதுதான் அந்தப் பெண்ணைச் சந்தித்தேன், இதற்கு முன்னர் இரண்டு மூன்று சமயங்களில் சந்தித்திருக்கிறேன், தென்னிந்தியா என்று தெரியும் ஆனால் தமிழ்நாடென்று தெரியாது. எங்கள் அலுவலகத்தில் ஒரு பழக்கம் உண்டு, வாலிபால் போட்டி நடக்கும் பொழுது பெண்களுக்கும் இடமளிக்கும் வகையில், ஆறுபேரில் ஒரு நபர் பெண்ணாக இருக்கும் படியாக எங்கள் அலுவலகம் ஒரு சட்டத்தை வைத்திருந்தது. அப்படி நான் வேறொரு அக்கவுண்டிற்காக விளையாடிய காலத்தில் இந்தப் பெண்ணை எச்எஸ்பிசி அக்கவுண்டிற்காக விளையாடும் சமயத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் பேசியதில்லை.

சாதாரணமாக என்னைப் பார்க்க கரடுமுரடானவனாகத் தெரியும் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது, அந்த மனநிலையை நானும் இன்னும் அதிகம் தான் படுத்துவேன். இப்படித்தான் அந்தப் பெண் நான் சேர்ந்திருந்த புது அக்கவுண்ட் உபயோகப்படுத்தும் விஷயம் சம்மந்தமாக ஒரு செஷன் எடுத்துக்கொண்டிருந்தாள். பெரும்பாலும் நான் சொந்தமாகப் படித்துதான் தெரிந்து கொள்வேன் என்பதாலும், செஷனில் சொக்கிச் சொக்கி விழும் என் தூக்கத்தைப் போக்க எடக்கு மடக்கானக் கேள்விகளை அடுக்கிக் கொண்டேயிருப்பேன். அப்படி நான் தூங்கிவிழுவதையும், கேள்வி கேட்பதையும் வைத்துக்கூட அந்தப் பெண் என்னைப் பற்றிய தவறான எண்ணத்திற்கு வந்திருக்க வாய்ப்புண்டுதான். ஆனால் அது அப்படியில்லை என்று இன்றுவரை நம்புகிறேன் அதற்கு முழுப்பொறுப்பு என் உருவத்தோற்றமாகக்கூட இருக்கலாம்.

பெரும்பாலும் முசுடாக யாரிடமும் பேச்சுக் கொடுக்காமல் நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நாள் அவள் பின்னாலிருந்து நான் தமிழில் டைப்புவதைப் பார்த்து நீங்க ப்ளாக் எல்லாம் எழுதுவீர்களா என்று கேட்டது நினைவில் உள்ளது, நான் பெரும்பாலும் விளம்பரம் செய்வதில்லை ப்ளாக் எழுதுவதாக அவள் கேட்டுக்கொண்டதற்காக லிங்க் கொடுக்க பார்த்தவள் கூகுள் 'ஆட்'கள் என் பக்கத்தில் இருப்பததைப் பார்த்தே தெரிந்து கொண்டவளாய், ரொம்ப நாளாய் எழுதுவீங்களோ என்று கேட்டாள் என்றாள் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அன்றைக்கு இரண்டு நல்ல நகைச்சுவை சம்பவம் நடந்தது, அதன்பிறகு என்னைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தவள், சாதாரணமாக இந்த கல்கியின் கடல்புறா புத்தகம் உங்களிடம் இருக்கிறதா என்று கேட்க, நான் அவளுடைய தமிழறிவை மொத்தமாகப் புரிந்து கொண்டேன் கொஞ்சம் தவறாக என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். இப்படியாக நாங்கள் பேசத் தொடங்கிய ஒரு நாளில் தான் அவள் சொன்னாள், உங்களைப் பார்த்தால் இவ்வளவு நல்லபடியாக பேசுபவராகத் தெரியவில்லையென்று. உருவத்தைப் பார்த்து எடைபோடுவதில் உள்ள தவறு பெரும்பாலும் பலருக்குத் தெரியவில்லை.

அதே நாளில் என் ப்ளாக்கில் இருந்து ஒரு கதையை பிரிண்ட் அவுட் எடுத்துப் படிக்கப்போவதாகவும் ஒரு நல்ல கதை சொல்லுங்களேன் என்று கேட்டதற்கு கூச்ச சுபாவத்தில் நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன், அதன் பயனை பிற்பாடு அனுபவித்தேன். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அன்றுதான் முதன் முறையாக தமிழில் பேச ஆரம்பித்திருந்தோம். அந்தப் பெண் தேர்ந்தெடுத்த கதை 'மக்குக் குடும்பம்', குளிர்கால டிசம்பர் மாதத்தின் தாக்கத்தில் எழுதப்பட்ட ஒரு 'ஏ'த்தனமான கதையது. அன்றிரவு போகிற போக்கில் விண்டோ மெஸஞ்சரில் அவள் இந்த விஷயத்தை தட்டிவிட்டுச் சென்றாள்.

அதற்கு முன் அந்த மாதிரி கதை எழுதுவதைப் பற்றி எந்த முன்முடிவும் இருந்ததில்லை, சாண்டில்யன், பாலகுமாரன், சுஜாதா படித்து கொஞ்சம் செக்ஸியாக எழுத வேண்டுமென்று பெரும்பான்மையான என்னுடைய எல்லாக் கதையிலுமே பார்க்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும் 'அது'. அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை, அந்தப் பெண் கதையைப் படித்து என்ன நிலையில் நாளை வருவாள் என்று. ஆனால் பெரிய வித்தியாசம் அடுத்த நாள் எனக்காக காத்திருக்கவில்லை, மிகவும் சாதாரணமாக அந்தக் கதை அப்படிப்பட்டதென்று சொல்லியிருக்கலாமே என்று சொன்னாள் என்று நினைக்கிறேன். ஆனால் அவள் மனதில் அந்தக் கதை படிந்திருந்ததை நான் இன்னொரு சமயத்தில் பார்த்திருக்கிறேன், நாங்கள் நல்ல நண்பர்களாக ஆன ஒருநாள் விளையாட்டிற்காக கப்டேரியாவில் சென்று கொண்டிருந்த பெண்ணை சைட் அடிப்பதாகச் சொல்லப்போக அந்தப் பெண் அவகிட்ட என்ன இருக்கு அயர்ன் பாக்ஸ் என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள் நான் பதிலெதுவும் சொல்லவில்லை.

சொல்லப்போனால் எங்களிருவரிடமும் ஈகோ உண்டு, அதிலும் நான் எப்பொழுதுமே உள்ளர்த்தம் வைத்து மட்டுமே பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தேன். இப்படி இருவருமே உள்ளர்த்தம் வைத்தும் 'ஈயம்' 'ஈயம்'(பெண்ணீயம், ஆணீயம்) என்றும் பேசிவந்ததால் உள்ளர்த்தத்தை உணர்ந்து கொண்டாமோ என்று இருவருமே மற்றவரைப் பற்றி ஆராய்வதுண்டு அப்படிப்பட்ட ஒரு ஆராய்தல் தான் அன்று நடந்தது.

இப்படியாக அவள் என் கதைகளைப் படித்து ஒரு முன்முடிவிற்கு வந்திருக்க வேண்டும் என்னைய்ப்பற்றி, நாங்கள் நல்ல நண்பர்களாக ஆகிவிட்டிருந்த இன்னொரு நாளில் நீங்க காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற எடக்குமடக்கான கேள்வியைக் கேட்டாள், நான் ஒரே வார்த்தையாக முட்டாள்தனம் என்று பதிலளித்தேன். அவளுக்கு அது ஆச்சர்யமாகக் கூட இருந்திருக்கும், அவள் ஈகோவை விடுத்து, என்னால் இதை நம்பவேமுடியவில்லை, நீங்கள் இப்படி சொல்வீர்கள் என்று காதல் பற்றி கதைகதையாய் எழுதிக்கொண்டு காதலை முட்டாள்தனம் என்று சொல்வீர்கள் என்று. நான் காதலைப்பற்றிய என்னுடைய எண்ணங்களைத் தெளிவாக மிகத்தெளிவாகச் சொன்னேன், இன்னும் சொல்லப்போனால் அவளை நன்றாகக் குழப்பினேன்.

அன்று அவளிடம் நான் கல்லூரிக் காலங்களில் நம்மிடம் ஏற்படுவது காதலே கிடையாதென்றும் அது வெறும் இனக்கவர்ச்சி மட்டும் தான் என்றும் வாதாடினேன், இரண்டு மணிநேரம். என் பட்டிமன்ற நடுவர்களை பத்து நிமிடப்பேச்சால் என்னால் மாற்ற முடிந்திருக்கிறது. ஆனால் இது ரியல் டைம் கேள்விகள் நேருக்கு நேராய் கேட்கப்படும், கான்சப்டில் குழப்பமிருந்தால் பிரச்சனையாகிவிடும். அவள் யாரோ ஒரு பையன் யாரோ ஒரு பெண்ணை கல்லூரி இறுதி ஆண்டிலிருந்து காதலிப்பதாகவும் முதலில் அந்தப் பெண் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், கல்லூரி முடிந்த இரண்டாண்டுகளில் அதற்குப் பிறகு ஒருமுறை கூட நேரில் பார்த்திராத சமயத்திலும் அவன் அந்தப் பெண்ணையே நினைத்து கொண்டிருந்ததால் அதன் பின்னர் ஒப்புக்கொண்டதாயுமான அவளின் கல்லூரி நண்பர்கள் பற்றீய கதையைச் சொன்னாள். நான் அதைப்பற்றிய என் புரிதல்களையும் விளக்கத்தையும் அளித்தேன். அது இங்கே தேவையில்லாதது, அந்தக் காதலைப் பற்றியும் அந்தப் பெண்ணைப் பற்றியும் நான் முற்றிலுமாக மறந்து போய்விட்டேன் அந்தப் பொழுதில், முற்றிலுமாக. என் மனம் முழுவதும் இப்பொழுது சார்லஸூம் கனிமொழியும் தான் இருந்தார்கள்.

நான் படித்தது ஒரு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி அதாவது பன்னிரெண்டாவது படித்து முடித்தவர்களுக்கு இரண்டவாது ஆப்ஷனாக வைத்திருப்பார்களே அது, அதுதான் எனக்கு முதல் ஆப்ஷனாகக் கிடைத்தது அதைப்பற்றி முன்பே எழுதிவிட்டதால் இப்பொழுது மற்றது. ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு டிரீம் கப்புள் இருப்பாங்க என்பது என் விஷயத்தில் உண்மை. அந்த டிரீம் கப்புள் தான் சார்லஸூம் கனிமொழியும், சொல்லப்போனால் கொஞ்சம் கூட ஒத்துவராக ஒரு ஜோடி, கனிமொழி ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்து குடுப்பப் பிரச்சனைகள் காரணமாக எங்கள் காலேஜில் படித்துவந்தால், சார்லஸிற்கோ அந்தக் கல்லூரியை விட்டால் வேறு காலேஜ் இல்லையென்ற நிலை. பேரிலேயே தெரிந்திருக்கும் முக்கியமான வித்தியாசம்.

முதல் வருடம் நான் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன், சார்லஸ் தான் ஏழு பேர் கொண்ட எங்கள் ரௌடி குரூபின் தலைவன் போன்றவன். அதற்கு முக்கியக் காரணம் கனிமொழியை அவன் காதலித்தது கிடையாது. அவன் உண்மையிலேயே ரௌடி, சிகரெட் பிடிப்பது, தண்ணி அடிப்பது பெண்களுடன் பயமில்லாமல் பேசுவது இதுதான் அந்தக் காலத்தில் தலைவனுக்கு உண்டான அடையாளம், இதில் எதிலும் சார்லஸ் குறைவைக்கவில்லை. இதற்கெல்லாம் மகுடமாக தன்னிடம் சண்டித்தனம் செய்த ஒரு சீனியரை பாத்ரூமில் வைத்து கன்னம் கன்னமாக இழுக்க ஹீரோ ஆனான். மொத்தம் எட்டு பேர், சார்லஸ், பெஞ்சமின், விமல்ராஜ், சரவணலால் ஜெயன், கலைராஜா, இளையராஜா, மோகன்தாஸ் அப்புறம் கடேசியாய் அன்சர்.

ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்வதற்கு நிச்சயமாய் ஒரு கதை உண்டு, இதில் விமல் கொஞ்சம் தலைமைப் பண்புகள் உள்ளவன் நான் சொல்ல வந்தது மேலே உள்ள தலைமைப் பண்புகளை முன்வைத்து. இந்த குரூப்பில் நானும் அன்சரும் இருந்தது தான் ஆச்சர்யமே பலருக்கும். ஏனென்றால் எங்களிருவருக்கு மட்டும் தான் அரியர் கிடையாது. அதுமட்டுமில்லாமல் நானும் அவனும் கொஞ்சம் நன்றாய்ப் படிக்கக்கூடியவர்கள், இந்தக் கொஞ்சமும் மற்ற அறுவர்களுடனான ஒப்பீட்டு மதிப்புதான். ஏன் விமலைப் பற்றி மட்டும் இழுக்கிறேனென்றால் அவனுக்கு இந்த மாதிரியான தலைமைப் பண்புகள் இருந்ததென்றாலும் கொஞ்சம் ப்ராக்டிகலானவன், சொல்லப்போனால்.

இதற்கு ஒரே காரணம் சார்லஸ் கனிமொழியைக் காதலிப்பதாகவும் அந்தப் பெண்ணும் அவனைக் காதலிப்பதாகவும் ஒரு கீழ்த்தர பாரில் பார்ட்டி கொடுத்தபடி சொல்ல முதலில் கண்டித்தவன் அவன்தான். சார்லஸின் முகத்திற்கு எதிராக 'வேண்டாண்டா பங்காளி அவளை விட்டுடு' என்றான். சார்லஸிற்கு கொஞ்சம் கோபமுண்டு இதனால். நானெல்லாம் முதலில் இந்த விஷயத்தை நம்பவேயில்லை, முதலில் ஒரு விஷயத்தை உறுதிசெய்துவிடுகிறேன். என் வயதின் படி, நான் ஒரு வருடம் முன்பே பள்ளியில் சேர்க்கப்பட்டவன், ஆசிரியரான அப்பாவின் கைங்கர்யம். அதனால் பெரும்பாலும் கல்லூரியில் என்னுடன் படித்தவர்கள் என்னை விட குறைந்த பட்சம் ஒருவயது அதிகமானவர்கள். கனிமொழியும் சரி கூடப்படித்த மற்ற ஆறு பெண்களும் சரி என்னைவிட வயதில் மூத்தவர்கள் தான் பெரும்பாலும் அக்கா என்றுதான் எல்லோரையும் அழைப்பேன். சரி விஷயத்திற்கு,

இந்தக் காதல் பெரும் படமெடுக்கும் அளவிற்கு கல்லூரியில் நடந்தது, காதலென்றால் ஒன்றிரண்டு உதாரணங்களைச் சொல்லி அவர்களை அமரக் காதலர்களாக்க வேண்டுமென்ற அவசியம் எனக்குக் கிடையாது. அவர்கள் மற்ற எல்லா கல்லூரிக் காதலர்களைப் போலவும் காதலித்தார்கள். என்ன கொஞ்சம் தீவிரமாய், இடையிடைய எங்கள் ஜிங்கிச்சாவையும் மீறி விமல் மட்டும் இதை எதிர்த்துக்கொண்டேயிருந்தான், மூன்றாவதாண்டில் அவனும் ஒரு முதலாமாண்டு பெண்ணைக் காதலிக்க எதிர்ப்பேயில்லாமல் கனிமொழி எங்கள் எல்லோருக்கும் அண்ணியானாள். நான் நிகழ்வுகளை வர்ணிக்க இங்கே எத்தனிக்கவில்லை. இப்படியாக அவர்கள் காதல் எங்கள் கல்லூரியின், வரலாற்றுப் புகழ்பெற்ற காதலானது, கடைசியாக கல்லூரிக்கும், தமிழ்நாட்டிற்கும் டாட்டா காண்பித்து நான் டெல்லி புறப்படும் வரை. எனக்கு சந்தேகமேக்கிடையாது, சார்லஸ் தண்ணியடித்துவிட்டு உளறிய உளறலிலிருந்தும் கனிமொழியுடனான அவனுடைய நேருக்கத்திலிருந்தும், எதிர்ப்புக்கள் அனைத்தையும் பொய்யாக்கிவிட்டு அவர்கள் காதல் சக்ஸஸ் ஆகிவிடுமென்பதில்.

பின்னர் கல்லூரியைப்பற்றியோ, சார்லஸ் கனிமொழியைப் பற்றியோ நினைக்க மட்டுமல்ல என்னைப் பற்றியேக் கூட நினைக்க முடியாத நாட்கள் அவை, டெல்லி, பேங்களூர், புனே என மூன்றாண்டுகள் அப்படியென்பதற்குள் ஓடிவிட்டன. கடைசியாண்டு ப்ரொஜக்ட் செய்வதற்காக என் நண்பர்கள், இவற்கள் வேறு படிக்கிற செட், வந்து புனேவில் தங்கி ப்ரொஜக்ட் செய்துவிட்டு போன பொழுது கூட நான் கேட்கவில்லை சார்லஸ் கனிமொழியைப் பற்றி. ஆனால் என் அலுவலகத் தோழி கேட்ட அன்று எங்கிருந்தோ நினைவில் வந்ததைப் போல சார்லஸ் கனிமொழியைப் பற்றிய விஷயத்தை நினைத்தவனாய். என் அத்துனை தொடர்புகளையும் பயன்படுத்தி அன்றிரவே என்னானார்கள் அவர்கள் என்று கேட்கும் ஆவல் முற்றியது.

முயன்றேன், சார்லஸின் எண் கிடைத்தும் பேச முடியாத சிக்கல், இந்தச் சமயத்திலேயே ஒருவாறாக நண்பர்களின் மூலம் அவர்களைப் பற்றிய செய்தி கிடைத்திருந்தது, ஏனென்றால் முன்பே சொன்னேனே காவியக் காதலர்கள் என்று அவர்கள் தொலைபேசி எண்ணைக் கேட்டால், முழு வரலாற்றையே சொல்லிப் புலம்பாத நண்பர்களே இல்லை, அப்படியிப்படி என்று ராத்திரி பதினொன்று மணிக்கு கனிமொழியின் செல் நம்பர் கிடைத்தது, சாப்ட்வேர் உலகத்தின் மகிமையால் அந்த நேரத்திலும் கால் செய்ய நான் தயங்கவில்லை.


"ஹலோ கனிமொழிங்களா, நான் மோகன் பேசுறேன்.

"ஹலோ எந்த மோகன் தெரியலையே,"


"... காலேஜ், கம்ப்யூட்டர் சைன்ஸ், முத பெஞ்சில் உட்கார்ந்திருப்பேனே மோகன்."

"இல்லங்க தெரியலை."

"கனிமொழி, என் நம்பர் கூட 018, கனிமொழி, லிஜோ பாபு, மலர்விழி, நரேந்திரன் அப்புறம் நான் மோகன் தெரியலையா."

"ம்ஹும் தெரியலை."

"என்னங்க வேறென்னத்தை சொல்ல, சரி நீங்க நல்லாயிருக்கீங்களான்னு கேட்கத்தான் போன் செய்தேன், நல்லாயிருக்கீங்கல்ல சரி வைக்கிறேன்."

"சரி சொல்லுங்க."

"யாருன்னு தெரிஞ்சுதா?"

"இல்லங்க தெரியலை, பரவாயில்லை சொல்லுங்க." என்றவள் ஏதோ ஞாபகம் வந்தவளாக, "ம்ம்ம் நீங்களா சொல்லுங்க, ராத்திரி இல்லையா தூங்கிக்கிட்டிருந்தேன் ஞாபகத்தில் வரலை."

"சரிங்க கனிமொழி நீங்க தூங்குங்க நான் காலையில் போன் பண்றேன்."

வைத்துவிட்டேன், உண்மையில் அதை நான் எதிர்பார்க்கவில்லைதான், ஏனென்றால் நான் படித்த ஒரே ஒரு கல்லூரி அதுதான், அதனால் அந்த நினைவுகள் என்னிடம் எப்பொழுதும் உண்டு, சொல்லப்போனால் என் கதைகளில் கூட அவர்களை வேறு கதாப்பாத்திரப் பெயர்களால் குறித்திருப்பேன். நம்பர், உட்கார்ந்திருந்த இடம் எல்லாமே இன்னும் நன்றாய் ஞாபகத்திலிருக்கிறது. ம்ஹும் கதையெழுதுகிறேன் இல்லையா நினைவில் கொண்டு வந்திருப்பேனாயிருக்கும்.

அடுத்த நாள் காலையில் மீண்டும் போன் செய்தேன், போனை எடுத்தவள் கண்டுபிடித்துவிட்டாள், சொல்லப்போனால் என்னை அவளுக்கு நன்றாய்த் தெரியும் சில நாட்கள் சார்லஸ் சொல்லப்போய் லெட்டர் எல்லாம் கொடுத்திருக்கிறேன் மிகவும் பர்ஸனலான விஷயங்களாகக் கூட இருக்கும் அந்தக் காகிதங்கள். சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தவள் என்னைப் என் பெயரால் அவள் அறிந்திராததையும் கல்லூரி நினைவுகள் அவ்வளவாக இல்லாததையும் சொன்னாள், என்னைப் பற்றிக் கேட்ட அவளுக்கு விவரங்களைச் சொன்னேன், மறுபக்கத்தில் வரப்போகும் ஆச்சர்யத்தையும் கணக்கிட்டுத்தான்,

'அப்ப செட்டிலாயிட்டேன்னு சொல்லுங்க, சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கங்க', நான் வாங்கும் சம்பளத்தில் ஒரு சைபர் இல்லாத சம்பளம் கூட தங்களுக்கு கிடைப்பது அரிதாக இருப்பதான புலம்பல்கள் ஆரம்பித்ததும் நான் ஆரம்பித்தேன் சார்லஸ் பற்றி, அவள் ஒரேயொரு வார்த்தை தான் சொன்னாள்.

"உங்கக்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்..."

"கேளுங்க..."

"இல்லை நீங்கதான் எங்க காலேஜோட டிரீம் கப்புள்..."

"புரியலை என்ன சொல்றீங்க..."

"இல்லை நீங்களும் சார்லஸூம் தான் அந்தக் காலேஜின் டிரீம் கப்புள்ஸ், என்னாச்சுன்னு கேட்கிறேன்."

"இந்த ஆம்பளைங்க எல்லாமே ஏமாத்துறவங்க தானே, அதை விடுங்க. எல்லாம் அத்துப்போச்சு."

இப்படி நான் கனிமொழி, சார்லஸ் நம்பர்களைத் தேடிய பொழுது கிடைத்த விமல் நம்பருக்கும் போன் செய்தேன்,

"மாப்ள, இது உனக்குத் தெரியாதா இல்லை எனக்கு தெரியாதா, ஆனாலும் நான் அப்பவே சொன்னேன் அந்தப் பொண்ணு பாவம் விட்டுறுன்னு. உனக்குத் தெரியாது ரொம்பக் கஷ்டமாயிருச்சு..."

அதற்கு மேற்பட்ட விஷயங்கள் பர்ஸனலானவை உண்மை பெயர்களை உபயோகிப்பதால் வேண்டாம், என் அலுவலகத் தோழியின் கல்லூரியில் நடந்த காதல் என்ன முடிவிற்கு வந்திருக்கும் என்று கேட்கும் ஆசை சுத்தமாக இல்லை. நான் அவளிடம் பிரயோகித்த என் தர்க்கங்ளை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தி அது எத்தனை தூரம் உண்மையென யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In புத்தகங்கள்

இரா.முருகனின் நெம்பர் 40 ரெட்டைத் தெரு

இரா. முருகனின் இந்தப் புத்தகத்தை எந்த வகையில் வைப்பது என்று தெரியவில்லை உண்மையில், நாவல் - குறுநாவல் - சிறுகதைத் தொகுப்பு(?!) எதிலுமே வைக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். நாவலுக்குரிய அகச்சிக்கல் என்று எதுவும் இல்லை என்பதால் நாவலாக வைக்கமுடியாது, கூர்மையிருந்தாலும் சிறுகதைக்குரிய அளவில் இல்லை என்பதால் சிறுகதைத் தொகுப்பென்றும் சொல்லமுடியாது. தன்னுடைய வயதைக் குறிக்கும் வகையில் எழுத நினைத்தாரோ என்னவோ 54 (கொஞ்சம் பெரிய)பத்திகளில் தன் பத்து வயதில் தான் வாழ்ந்த இடத்தைப் பற்றிய குறிப்புக்களை எழுதியிருக்கிறார்.

ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது; இத்தனை விஷயங்களை நினைவில் வைத்திருந்திருக்கிறாரே என்று இரா.மு.வின் அரசூர் வம்சம் படித்துவிட்டு எப்படி இவரால் இப்படி ஒரு நாவல் எழுத முடிந்தது என்று ஆச்சர்யப்பட்டது நினைவில் இருக்கிறது. அந்த ஆச்சர்யம் அப்படியே தொடர்கிறது இங்கேயும், கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார் ‘அடல்ஸ் ஒன்லி' விஷயத்தில் என்பது மட்டும் ஏனென்று தெரியாவிட்டாலும். கூர்மை அப்படியே இருக்கிறது அத்தனை பத்திகளிலும், என்னமோ டைரி ஒன்றில் சிறு வயதில் இருந்து குறித்துக் கொண்டு வந்துவிட்டு இன்று இணைத்து எழுதியிருக்கிறாரோ என்று நினைக்க வைக்கிறது.

ஒரு தெரு அதைத் சுற்றி இருக்கும் வீடுகள் அதைச் சார்ந்த பள்ளி இன்ன பிற வகையறாக்கள் அதைச் சார்ந்த மக்கள் என்று மொத்தமாக எல்லாவற்றையும் பற்றிய தன் நினைவுகளை அன்றைய காலநிலையோடு, அரசியலோடு சேர்த்து எழுதியிருக்கிறார். நன்றாகவே வந்திருக்கிறது.

மொத்தமாய் படித்து முடித்த பின்னும் நினைவில் நீங்காமல் இரா.முருகனின் சில கதாப்பாத்திரங்கள் அப்படியே நின்றுவிடுகிறார்கள். பஞ்சவர்ணம் வாத்தியார் மாதிரி கடைசியில் அவர் வைக்கும் கேள்வியோடு “எல்லாக் கணக்கும், வாழ்க்கையும் தெக்கத்தி மிட்டாயாக இனிக்காமல் போக என்ன காரணம் என்று தெரியவில்லை.” சீரங்கத்தம்மா போல், “அந்தக் காலத்துலே சாரட்டுலே கல்யாண ஊர்வலம் வந்தவள்டா சீரங்கத்தம்மா” இதுபோல் நிறைய நான் என் வாழ்நாளில் கேட்டிருக்கிறேன். உருவாக்குவதும் தெரியாமல் முடிப்பதும் தெரியாமல் மூன்று பக்கங்களில் இப்படி நிறைய பேரை உலவவிடுகிறார். நான் சொன்னது இரண்டு நபர்களைத் தான் ஆனால் இந்தப் புத்தகம் முழுக்க இப்படித்தான் ஆட்களாய் நிரம்பியிருக்கிறார்கள்.

புத்தகம் முழுவதும் நகைச்சுவை வழிந்து கொண்டிருக்கிறது, மெல்லியதாய், வாசிப்பை சுவாரசியப்படுத்துவதாய்.

“... தினசரியில் ‘சர்ச்சில் கவலைக்கிடம்’ என்று கொட்டை எழுத்தில் வந்தது. கோகலே ஹால் நூலகத்தில் பேப்பர் படித்த எனக்கு, இப்படி அரைகுறைச் செய்தியை அதுவரை படித்ததாக நினைவில் இல்லை. சர்சுக்கு யார் போனது, அதில் என்ன கவலை என்ற தகவல் ஏதும் இல்லாது, ஒரு வெள்ளைக்காரக் கிழவர் போட்டோவோடு வந்த செய்தி. படிக்கப் பொறுமையில்லாமல் ‘சரோஜாதேவி தினசரி என் கனவில் வருகிறாரே’ என்று முறையிடும் கேள்வி-பதில் படிக்கப் பக்கத்தைத் திருப்பினால், பேப்பர் படக்கென்று பிடுங்கப்பட்டது...” புத்தகம் முழுதும் விரவியிருக்கும் நகைச்சுவைக்கு ஒரு சோறு.

முக்கியமான இந்தி எதிர்ப்பை பதிவு செய்ய வந்தவர் நகைச்சுவையில் விழுந்திருப்பது சரியானதுதானா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் கிடையாது; அதுதான் அவரது ஸ்டைல் எண்ணும் பொழுது அப்படியே விடுவது தான் சரியானதாயிருக்கும்.

“...எனக்கும் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மேல் இப்படி அப்படி என்றில்லாத கோபம் வந்தது. கோயில் பிரகார உத்திரத்தில் வௌவால் தொங்குகிறது போல் வரிசையாக தொங்குகிற எழுத்தோடு இந்தியைப் படித்துக் கொண்டு தினசரி காய்ச்சல்காரன் போல சுக்கா ரொட்டி சாப்பிட்டுக் கொண்டு மிச்ச வாழ்க்கையைக் கழிக்க எனக்கென்ன தலைவிதி? இந்தி இருந்த பழைய ரயில்வே கைடு புத்தகத்தை வீட்டிலிருந்து கிளப்பிக் கொண்டு வந்து எரிகிற தீயில் போட்டேன். ஒழியட்டும் இந்தி...”

பத்துவயது கதைசொல்லியின் வருத்தம் இது. கீழிருப்பது 54 வயது கதைசொல்லியின் குரல்,

“...இன்றைக்கு எனக்கு இந்தி தெரியும். மனிதர்கள் பேசிப் புழங்குகிற ஒரு மொழி என்ற மட்டில் அதன் பேரில் வெறுப்பு எதுவும் இல்லை. ஆனாலும், 'இந்தி ராஜ்பாஷா; தேசிய மொழி அதுதான்’ என்று யாராவது பேச ஆரம்பித்தால், ‘சரிதான் உட்காருடா’ என்று மண்டையில் தட்ட மனத்தில் ஒரு சின்னப் பையன் எழுந்து வருகிறான். அவனுக்கு கோடிக்கணக்கில் சிநேகிதர்கள் உண்டு என்பதை அவன் அறிவான்...”

எல்லாவற்றிற்கும் பிறகும் இந்தப் புத்தகம் எனக்குப் பிடித்த ஒன்றாகயில்லை, அரசூர் வம்சம் என்னிடம் உருவாக்கியிருந்த பிம்பம் இரா.முருகனின் அடுத்தப் புத்தகத்தைப் பற்றி நான் வைத்திருந்த எண்ணம் எதையும் இந்தப் புத்தகம் நிவர்த்தி செய்யவில்லை. இது நாவல் பற்றிய என்னுடைய மனநிலைப் பிரச்சனையாகக் கூட இருக்கலாம், ‘புலிநகக்கொன்றை’ போல் நாயகன் நாயகியையோ இல்லை ஒரு பரம்பரையின் கதை பேசுவதாகவோ இந்த நாவலை நகர்த்தியிருந்தால் நான் விரும்பியிருக்கக்கூடும். ஒரு ஹீரோ ஹீரோயினைச் சுற்றி நிகழும் ‘நாவல்’களை நான் கடந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதை மீறியும் எதையோ இந்த நாவலில் நான் இழக்கிறேன், காரணம் தெரியவில்லை. ஒட்டுதல் வரவில்லை என்று கூட சொல்லலாம், இதுவரை என் வாழ்நாளிலேயே மிகவும் கஷ்டப்பட்டு படித்ததாக நினைக்கும் ‘புளியமரத்தின் கதை’யின் மீது கூட எனக்கு ஒட்டுதல் இருந்தது. இத்தனைக்கும் சுராவின் நெருங்கவிடாத எழுத்திற்கு அப்பாலும் சென்று என்னால் நெருக்கத்தை உருவாக்க/உணர முடிந்திருந்தது ஆனால் இந்த அணைத்துச் செல்லும் வகை எழுத்தில் என்னால் அதை உணர முடியவில்லை.ஒரு வேளை லைட் ரீடிங் வகையறா எழுத்துக்கள் எனக்கு போரடிக்கத் தொடங்கிவிட்டதா தெரியவில்லை. லைட் ரீடிங் என்று நான் சொல்வது கோணங்கியின் ‘இருள்வ மௌத்திகம்’ ரமேஷ் - ப்ரேமின் ‘சொல் என்றொரு சொல்’ முதலானவற்றோடு ஒப்பிட்டே.

இந்தப் புத்தகத்தில் எனக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் ‘கிரேஸி’ மோகனின் முன்னுரை(அல்லது whatever) புத்தகத்திற்கான முன்னுரை பதிப்பகம் கேட்டு வாங்குமா எழுத்தாளர் கேட்டு வாங்குவாரா தெரியாது. என்ன கொடுமைங்க இது சரவணன். என்னமோ புத்தகக் கண்காட்சிக்காகவே கேட்டு வாங்கியது போல் ஒரு முன்னுரை. இரா.முவை விடுத்தும் அவர் மொழியின் மீதான நம்பிக்கையை விடுத்தும் புத்தகம் விற்பதற்கான இன்னொரு ஸ்ட்ராடஜியாக ‘கிழக்கு’ இதை முன்வைத்தார்களா தெரியாது. நான் அறியேன் பராபரமே! (இரா.முருகனுக்கு; சார் நான் எல்லாம் அறிவுரை சொல்கிற அளவிற்கு நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று சொல்லலை, இதற்கு முன்னுரை இல்லாமலே நீங்கள் இந்தப் புத்தகத்தை வெளிவிட்டிருக்கலாம்.) ஆனால் அவர்களும் என்ன தான் செய்வார்கள் பாவம்.
சுஜாதாவை விடவும் இரா.முருகனின் ராயர் காப்பி கிளப் பத்திகள் நன்றாக இருப்பதாக நான் சொன்ன நினைவு, ஆனால் இரா.முவை சுஜாதாவாக ஆக்க முயல்கிறார்களோ என்பதில் எனக்கு பயமே வருகிறது. உதாரணத்திற்கு இந்தப் புத்தகத்தில் இருந்து ஏகப்பட்ட உதாரணங்கள் அள்ளி வீச முடியும், எனக்கு உண்மையிலேயே தெரியாது ‘கிழக்கு’ உடன் காண்ட்ராக்ட் போட்டு எழுதப்பட்ட நாவலா ‘ரெட்டைத் தெரு’ என்று. பொலிடிகலி கரெக்ட்னெஸ் இல்லாத பத்தியே இல்லை என்று சொல்லலாம்.

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ
பாதி மறைந்த ஸ்தனமும்
பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்
வாழைத் தொடையும்
வடிவான தோளுமாய்க்
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ

முனிவனவன் பெண்டாட்டி
முடிஞ்சு வச்ச கூந்தலிலே
செல்லமாத் தலைப்பேனா
கள்ளப் புருசனையும்
ஒளிச்செடுத்து வந்து
ஓரமாத் தலைவிரிச்சா
கச்சு அகற்றிப் பழம் போல
கனிஞ்சு தொங்கும் தனமிரண்டும்

எழுதிய மனம் தான், செம்மீன் பற்றிய பத்தியையும் எழுதியிருக்கும் என்று சொன்னால் நான் சத்தியமாக நம்ப மாட்டேன்.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In ஓவியம் கவிதைகள்

கடந்தகாலத்தின் செருப்புக்கள்

நிகழ்காலமென்னும் உலகில் நுழைய
கடந்தகாலத்தின் செருப்புக்களின்
தேவையில்லை
அப்படியே கேள்விகளும்
எளிமையானதாய் மென்மையாய்
வன்மமானதாய் சுழலின்தன்மையானதாய்
விடைகளில்லாததாய்
புரிந்துகொள்ளமுடியாததாய்
புறக்கணிப்பின் பொல்லாத பொறுக்கித்தனத்தில்
பொசுங்கிப் போகின்றன அத்தனையும்
சுமந்தபடி செல்கிறேன்
புதுச்செருப்புடனான பயணத்தில்
கழட்டிப்போட்ட செருப்புக்களின்
எண்ணிக்கையைப் பற்றிய கேள்விகள்
எழுப்பும் புன்முறுவலை சுமந்தபடி







Read More

Share Tweet Pin It +1

1 Comments

In சினிமா

சினிமா

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்?

ஏழு எட்டு வயதில் ஆரம்பித்தது, நினைவு தெரிந்து முதலில் பார்த்த படம் கர்ணன். டிவிப் பெட்டிக்குள் உண்மையில் எல்லாம் நடக்கிறது என்று நம்பினேன். அம்புகள் டிவியின் கண்ணாடித்திரையைத் தாண்டி வரக்கூடாது என்று பயந்தேன், டிவிப் பெட்டியை உடைத்துக் கொண்டு கர்ணனுக்காக உதவ எண்ணினேன்.

2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?

’காதலில் விழுந்தேன்’

3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

காதல் - வீட்டில் - டிவியில் - இந்த முறை பெரிதாய் ஒன்றும் இல்லை.

4.மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

குருதிப்புனல், மகாநதி - சட்டென்று நினைவுக்கு வந்ததும் மனது தானாய்ப் பதறும் இரண்டு படங்கள்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

என் காலம் இல்லாவிட்டாலும் பராசக்தி முதலான ‘திராவிட’ படங்கள் ஏற்படுத்திய தாக்கம்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?


தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவு - குறிப்பாய் சொல்லவேண்டுமானால் பாலுமகேந்திரா, மணிரத்னம், பாலா, ஜீவா இவர்களின் படங்கள். இன்னமும் கூட நிறைய பேரைச் சொல்லலாம்.

6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

கண்ணில் படும் எல்லாவற்றையும்.

7.தமிழ்ச்சினிமா இசை?

கேட்பதுண்டு. பெரும்பாலும் புதிய படங்களின் இசையில் கைவைப்பதில்லை. எனக்கான பழைய - புதிய பாடல்கள் தொகுப்பு உண்டு. பிடித்திருக்கிறது - நன்றாயிருக்கிறது என்ற சொன்ன பிறகு கேட்பதுண்டு.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தற்சமயம் தமிழ் சினிமா எ உலக சினிமா 10 : 90 என்ற விகிதத்தில் உள்ளது. அதிகம் தாக்கிய படங்களின் வரிசை இந்தப் பதிவை விட நீண்டு விடும் என்பதால், குறிப்பாய் தற்சமயம் பார்த்து என் பதிவில் குறிப்பிடாத சில,

Perfume, Days of Glory(Indigழூnes), The golden pond, One flew over cuckoo's nest, Mamma Roma, Oedipus Rex...

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


நன்றாகயிருக்கிறது. ‘ரே’ ‘கத்தக்’ அளவிற்கும் அதற்கு மேலும் பெயர் தரக்கூடிய படங்கள் விரைவில் வரும் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.

11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நான்கு வருடம் முன்பென்றால் உலகமே இரண்டது போலிருந்திருக்கக்கூடும். இப்பொழுது பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்னைப் பொறுத்தவரை. அதுவும் தமிழ்சினிமா மட்டுமென்றால். தமிழர்கள் தங்கள் முதல்வரை வேறெங்கேணும் தேடத் தொடங்குவார்களாயிருக்கும்.

பதிவு போட அழைத்த மதிக்கு நன்றி.

நான் அழைக்க விரும்புபவர்கள் - விருப்பமிருந்தால் போடலாம்.

1) பெயரிலி
2) ஹரன் பிரசன்னா
3) சன்னாசி
4) நண்பன் ஷாஜி
5) ஜமாலன்

Read More

Share Tweet Pin It +1

6 Comments

Popular Posts