In BHEL REC மாணவிகள் நினைவுகள்

இருட்டு க்ரௌண்டில் ஒரு முரட்டுக் குத்து

இன்னும் ஆறு ரன்கள் அடித்தால் வெற்றி, இரண்டு பந்துகள் மீதமிருந்தது. எப்பொழுதும் இருக்கும் ஆட்டத்தின், வெற்றியின் மீதான தீவிரம் அன்று என்னிடம் இல்லை என்னிடம் மட்டும் இல்லை, எதிரணியில் மீதமிருந்த இரண்டு பந்துகளை வீசப்போகும் கிஷோருக்கும் வெற்றியின் மீதான ஆர்வம் குறைவாகவே இருந்திருக்கும். மனம் ஆனாலும் கணக்குப் போட்டது, கிஷோரின் ஃபேவரைட்டான ஸ்லோ பால் நிச்சயம் இரண்டு பந்துகளில் ஒன்றிருக்கும் நான் எதிர்பார்த்தது சரியாக இருந்தால் கடைசி பந்தாக இல்லாமல் இந்தப் பந்தாகத்தான் இருக்க வேண்டும். ஃப்ரண்ட் ஃபுட் போட்டு லாங்க் ஆஃபில் தூக்கினால் ஆறாக வாய்ப்பு அதிகம். மனம் குதிக்கவில்லை நிதானமாக யோசிக்க முடிந்தது ஆனால் யோசனை ஆட்டத்தில் இல்லாமல் வேறெங்கோ இருந்தது. திருச்சி BHEL வளாகத்தில் இருந்த நேரு ஸ்டேடியத்தில் பெரும்பாலும் செண்டர் பிட்சில் நாங்கள் விளையாட மாட்டோம் அதற்கு இரண்டு காரணம், ஒன்று அந்தப் பிட்ச் பௌலிங் பிட்ச் எத்தனை முயன்றாலும் 10 ஓவரில் 45 அல்லது 50 அடிப்பது கடினம், அப்படி அடிக்கும் ஆட்டம் விறுவிறுப்பாகவும் இருக்காது. மற்றது 11 பேர் இரண்டு அணியிலும் இல்லாமல் மேட்ச் விளையாடுவது செண்டர் பிட்சில் நன்றாகயிருக்காது, அதனால் க்ரவுண்டின் இடது ஓரத்தில் பவுண்ட்ரி கொஞ்சம் பெரிதாய் இருக்கக்கூடிய அளவிற்கு ஒரு பிட்ச், நாங்கள் ஏற்பாடு செய்தது நாங்கள் மட்டும் தான் அங்கே விளையாடுவோம். ஸ்டேடியத்திற்கு இன்னொரு பக்கம் தான் பாய்ஸ் ஹைஸ் ஸ்கூல் என்பதால் பள்ளி நேரத்திலும் சரி அதற்கு முன் பின்னான நேரத்திலும் சனி ஞாயிறுகளிலும் கிரிக்கெட் தான். அந்த பிட்ச் அக்குவேறு ஆணிவேறாக எங்களுக்குத் தெரியும், பெரும்பாலும் பெட் மேட்ச், செண்டர் பிட்சில் விளையாடுவோம் என்றாலும் பெட் மேட்ச் தவிர்த்த வேறு டீமுடனான மேட்கள் எங்கள் பிட்சில் நடக்கும், எங்க ஹோம் கிரவுண்ட் மாதிரி எங்களை அந்தப் பிட்சில் ஜெயிப்பது ஏறக்குறைய முடியாத விஷயம். எங்க பிட்ச் செய்தா உருளும் எங்க பிட்ச் செய்தா பௌன்ஸ் ஆகும் அத்தனையும் அத்துப்பிடி.

ஸ்டேடியத்தின் இடது பக்கம் பாய்ஸ் ஹைஸ் ஸ்கூல் என்றால், வலது பக்கம் கேர்ள்ஸ் ஹைஸ் ஸ்கூல் கேட்கணுமா, பெவிலியனில் கேர்ள்ஸ் ஹைஸ் ஸ்கூல் பக்கம் பார்க்க உட்கார்ந்து கொண்டு அங்கே வரும் சிட்டுக்களை சைட் அடிப்பது என்பது கிரிக்கெட் அளவிற்கு இல்லாவிட்டாலும் இன்னுமொரு முக்கியப் பொழுது போக்கு. யாரெல்லாம் அங்கே உட்கார்ந்து சைட் அடிக்கலாம் என்பதற்கு கூட விதிமுறைகள் உண்டு, காலேஜ் முடித்தும் சும்மா இருக்கும் செட்டுகள் பெரும்பாலும் ஸ்கூல் பிகர்கள் பக்கம் வரமாட்டார்கள் என்பதால், பாய்ஸ் ஹைஸ் ஸ்கூலில் பதினொன்று, பன்னிரெண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் அந்த உரிமை. அதுமட்டுமில்லாமல் அந்தப் பக்கத்தில் இருந்து செக்கியூரிட்டிக்கள் துரத்திக் கொண்டு வந்தால் ஓடித் தப்பிக்கவும் அசிங்கப்படாமல் இருக்கவும் ஸ்கூல் பிள்ளைகளால் மட்டும் முடியும். காலேஜ் முடித்தவர்கள் பெரும்பாலும் செக்கியூரிட்டிகளிடம் பேசி சமாளிக்கப் பார்ப்பார்கள் பின்னர் முடியாமல் அந்த இடத்தை காலி செய்வார்கள். பைனாகுலர் வைத்துப் பார்த்தால் தான் முகம் தெரியும் தொலைவில் இருந்தாலும் சும்மா பேருக்கு சைட் அடிக்க என்று அந்த இடம், அது ஏற்படுத்தும் குறுகுறுப்பிற்காகச் செய்யலாம்.

ஆனால் அன்றைக்கு மனதில் ஓடிக்கொண்டிருந்த பிரச்சனை வேறு, அந்த லெவலே தனி, சொல்லப்போனால் அதனால் தான் மனம் படீர் படீர் என்று அடித்துக் கொண்டிருந்தது. எனக்கும் சரி கிஷோருக்கும் சரி இந்த மேட்சை முடித்துவிட்டு பொறுமையாக உட்கார வேண்டும் போலிருந்தது. நான் எதிர்பார்த்தது தான் கிஷோர் ஸ்லோ பால் தான் போட்டான், ஆனால் ரீச்சில் விழாமல், ஷார்ட்டாக விழுந்து ஆஃப் சைடில், ஆஃப் ஸ்டெம்புக்கு நாலு இன்ச் தள்ளி வந்து விழுந்தது. சாதாரண சமயமாக இருந்தால் அதை லாங்க் ஆஃப் தூக்குறேன் பேர்வழியென்று மிட் ஆஃபில் கேட்ச் விழுந்து அவுட் ஆகியிருப்பேன். இப்பொழுது மனம் ஆட்டத்தில் இல்லாததால் அந்தத் தடுமாற்றம் இல்லாமல் பேக் ஃபுட் போட்டு எக்ஸ்ட்ரா கவரில் தூக்க அழகாய் பந்து போய் பெவிலியனில் விழுந்தது. எனக்கு வெற்றி பெற்ற குஷியில்லை, கிஷோருக்கும் அப்படியே தோற்றுப்போய்விட்ட வருத்தம் இல்லை. ஆனால் எங்கள் கீழ் விளையாடும் சின்னப் பையன்கள் மற்ற டீம் பையன்களை சீண்டுக் கொண்டிருந்தார்கள். எப்பொழுதும் நாங்கள் ஆட்டம் முடிந்ததும் அதைப்பற்றி பேசுவது வழமையான ஒன்று, அன்று எங்கள் வாய் பார்த்து உட்கார்ந்திருந்த பையன்கள் நாங்கள் வாய் திறக்காததால் கொஞ்ச நேரத்தில் நகர்ந்து விட, அத்தனை நேரம் விளையாடிக் கொண்டிருந்ததால் பழகிப் போயிருந்த இருட்டு சட்டென்று எங்களாலும் உணரப்பட்டது. நான் அப்படியே பெவிலியனின் முதல் படியில் படுத்துக் கொள்ள, கிஷோர் தலைபக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான்.

"மச்சி இதைச் செஞ்சே ஆகணுமா?"

என் மனதிற்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் கேள்விதான் என்பதால் பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தேன்.

என்னமோ நினைத்தவனாய் பிறகு அவனே,

"சரி இன்னிக்குத் தான் கடைசி - இன்னிக்கு மிஸ் ஆச்சுன்னா இனிமேல் ட்ரை பண்ணுறது கிடையாது சரியா?"

நான் மனதிற்குள் நினைப்பதை அப்படியே பேசிக் கொண்டிருந்தான், எல்லாம் ஆரம்பித்தது ஹரனால் தான். அவன் தான் எங்கேயோ கேள்விப்பட்டதாய் ஒரு நாள், என்னிடமும் கிஷோரிடமும்,


"மாம்ஸ் REC புள்ளையாண்டானுங்க நம்ம ஸ்டேடியத்தில் ராத்திரி மேட்டர் செய்யறானுங்களாம்டா! கொய்யால ஒரு நாள் நாயைப் பிடிக்கிற மாதிரி பிடிக்கணும்டா" சொன்னது தான் எல்லாவற்றிற்கும் தொடக்கம்.

நாங்கள் அப்பொழுது பத்தாவது தான் படித்துக் கொண்டிருந்தோம், மேட்டர் செய்வது என்றால் என்ன என்பது கூட அத்தனை சரியாய்த் தெரியாது தான், ஆனாலும் இந்த விஷயத்தில் விருப்பம் தானாய் வந்தது. பள்ளிக்கூடத்திற்கு எவனாவது எடுத்து வரும் செக்ஸ் புக் படித்தது, மாரிமுத்து ஒரு முறை அவங்க அண்ணன் துபாயில் இருந்து எடுத்து வந்தாகச் சொல்லிக் காட்டிய ஆயில் பிரிண்டிங்க் நிர்வாணப் படங்கள் என பதின்மம் அரும்பத் தொடங்கியிருந்த காலம், நேரில் பார்ப்பதற்கான காரணமாக குறுகுறுப்பை மட்டுமே கூட சொல்லக்கூடிய வயது அது.

மண்டலப் பொறியியல் கல்லூரி என்பது எங்களுக்கு ஒரு கனவுப் பிரதேசம், திருச்சியில் அதுவும் BHELல் படிப்பவர்களுக்கு எப்படியாவது RECல் படித்துவிட மாட்டோமா என்ற ஒரு துளி எண்ணம் இல்லாமல் இருந்திருக்காது. ஆனால் கல்லூரியைப் பற்றிக் கேள்விப்பட்டவரையில், எங்கள் வீட்டில் RECல் கிடைத்தால் கூட சேர்த்துவிடமாட்டார்கள் என்ற அளவில் இருந்தது செய்திகள். போதை மருந்துப் பழக்கத்தின் உச்சியில் இருந்தது கல்லூரி. ஒரு முறை டோப்படித்துவிட்டு 'B' செக்டர் ஷாப்பிங் செண்டரில் சந்தோஷ் பேக்கரி பின்னால் ஒரு பையன் இறந்து கிடக்க கொஞ்சம் பேருக்கு தெரிந்திருந்த இந்த விஷயம் பொதுவானது. நான் காலையில் தூக்கக்கலக்கத்தில் பால் வாங்க ஆவின் பூத் வந்த பொழுது தான் செக்யூரிட்டி முதலில் பாடியைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் பெரும்பாலும் தண்ணியடித்துவிட்டு உருண்டுகிடக்கும் ஒருவனாக நினைத்து நகர்ந்திருந்தேன்.

பாய்ஸ் ஹைஸ் ஸ்கூல் திரவியம் சார், இந்த REC மக்கள் இரவில் ஸ்கூலில் அழிச்சாட்டியம் செய்கிறார்கள் இதைத் தடுக்கவேண்டும் பள்ளி நிர்வாகம் தலையிட வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த விஷயத்தின் காரணமாய் அவர் தற்காலிகமாக பணியில் இருந்து விலக்கப்பட்டிருந்தார் என்பதும் அதே மேனேஜ்மெண்டில் வேலைசெய்யும் அப்பாவின் மூலமாய் நான் தெரிந்து கொண்டது. ஆனால் இதைத் தெரிந்து கொண்ட பொழுது என் வயது ரொம்பவும் குறைவு, ஹரன் சொன்ன பொழுது நான் இந்த விஷயத்தைச் சொல்லி கிஷோரை நம்பச் செய்திருந்தேன். பொதுவாகவே BHEL டவுன்ஷிப் மக்களுக்கு ஆர்ஈசி மக்கள் ஜோடி ஜோடியாக சுற்றுவது தெரியும். பாதுகாப்பு காரணங்களுக்காக இங்கே வந்து சுற்றுவார்கள் என்று ஒரு முறை நானும் வெளி ஊரில் இருந்து வந்த மாமாவும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது இது போன்ற ஜோடியாய் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு மாமா சொல்லியிருந்தார்.

அதுவும் B செக்டர் வாசியான எனக்கு இந்த ஜோடிகள் புதிது இல்லை தான், ஒட்டு மொத்த டவுன்ஷிப்பிலேயே அழகாய் அமைந்திருந்த 'Sea Kings' ஐஸ்கிரீம் பார்லரில் தினம் தினம் பார்ப்பது தான். என்ன உள்ளே போய் சாப்பிடத்தான் முடியாது, பெட்டிக் கடையில் கிடைக்கும் 75 காசு சமோசா இங்கே ஐந்து ரூபாய், என்ன கொஞ்சம் மொத்தியாய் இருக்கும். அதே போல் தான் ஐஸ்கிரீமும் மைக்கேல்ஸில் ஒன்னரை ரூபாய்க்கு கிடைக்கும் ஐஸ்கிரீம் இங்கே பத்து ரூபாய். அப்பொழுதெல்லாம் ஐந்து பத்து ரூபாய்கள் பெரிய விஷயம். யாராவது தூரத்து சொந்தக் காரர்கள் வீட்டிற்கு வந்திருந்தால் கிடைக்கும், அப்பொழுதெல்லாம் ஸீ கிங்ஸ் தான். அந்தச் சமயங்களில் பெரும்பாலும் REC பெண்களுக்காய் இல்லாமல் RSK பெண்களுக்காய் மனம் ஏங்கும், என் வயதை விட அதிகமான வயதுடைய பெண்களின் மேல் விருப்பம் வந்திருக்க வாய்ப்பில்லை என்பதால். 

- தொடரும்

Related Articles

4 comments:

  1. :-)

    நல்ல தொடக்கம். திருச்சியில போயிட்டு வந்த ஃபீல் வந்திடுச்சு...

    ReplyDelete
  2. மைக்கேல்ஸில் ஒன்னரை ரூபாய்க்கு கிடைக்கும் ஐஸ்கிரீம் - Nothing can match that taste...Hmmm...

    ReplyDelete
  3. நல்ல மலரும் நினைவுகள். என் கல்லூரியில் இரண்டு ஜூனியர்கள் RSK. ஒருத்தன் பேரே RSK (RS Krishnan). :-)

    ReplyDelete
  4. நல்ல நினைவூட்டல். மறக்கமுடியாத நினைவுகள். வேலிக்கு இந்தப்பக்கம் உக்கார்ந்துட்டு அந்த் பக்கம் இருக்குற ஆரெஸ்கே வ பாக்குறதே நல்ல டைம் பாஸ் அப்போ. எப்படா மரத்தடிக்கு கூப்பிட்டுபோவாங்கன்னு இருக்கும். நீங்க சொல்லியிருக்குற சென்டர் பிட்ச் மேட்டர் ரொம்ப சரி. என்னோட அதிகபட்ச ஸ்கோர் அந்த பிட்ச்ல 3 தான். தொடருங்க.

    ReplyDelete

Popular Posts