In ஆண்டாள் உபநிஷதம் சமணம் நம்மாழ்வார் பாலியல் பௌத்தம் வேதம்

கட்டுரையும் கட்டுக்கதையும்

எல்லோரையும் வியக்க வைக்கக்கூடியதும், மருள வைக்கக் கூடியதுமான நான்கு நூல் தொகுப்புக்கள் எப்படியோ இவர்கள் கையில் கிடைத்துவிட்டன; வேதங்கள் என்ற அந்தத் தொகுதிகளே அனைத்திற்கும் அடிப்படை என்று அவர்கள் நம்புவதோடு அனைவரையும் நம்பவும் வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வேதங்களில் என்னதான் இருக்கிறது இந்த வேதங்களுடன் உபநிஷதங்களும் கீதையும் சேர்ந்துவிட்டால் இவர்கள் பாடு கொண்டாட்டம் தான். எல்லாவற்றுக்கும் இவற்றில் பதில் இருக்கிறது, நாமும் மிரண்டு போய் நிற்கவேண்டியது தான்.





சரி சற்றே பொறுப்பாக வேதங்களைக் கற்போம், உபநிஷதங்களை வாசிப்போம். கீதையை ஒரு முறைக்கு நான்குமுறை படிப்போம். வேதங்கள் என்பவை என்ன – ஒரு இனக்குழு கூட்டம் தான் வணங்கிய சிறு தெய்வங்களை புகழ்ந்து, வேள்வி செய்து, சோம பானம் கொடுத்து மகிழ்வித்துத் தனக்கான தேவைகளைக் கேட்டுப் பெருவதற்கான பாடல் தொகுதிகள். ரிக் என்பதில் அக்னி, இந்திரன், வருணன் போன்ற ஆற்றல் உடைய தெய்வங்களுக்கு சோமமும் பலியும் தந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுதல் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட அடிகளில் நிரம்பிக் கிடக்கிறது. சாம வேதமும் அதே அக்னி, இந்திரன், வருணன் தொடங்கி பலநூறு தேவர்களுக்கான புகழ் பாடல், யஜூர் வேள்வி செய்வதற்கான பலி தருதலுக்கான விதிமுறைகளின் தொகுப்பு, அதர்வம் மருந்து, சிகிச்சை, மந்திர தந்திரம், வசியம், வாலை என நடமுறை தொழில்நுட்பங்களின் தொகுப்பு. இவை அனைத்துமே ஒரு இனக்குழுச் சமூகத்தின் நம்பிக்கை, அச்சம், ஏக்கம், ஆசை, கோபம், பயம், பெருமை, வன்முறை, சமூக ஒற்றுமை, வாழ்க்கையின் விதிமுறைகள் என்ற சமிக்ஞைகளின் தொகுப்பு ஒருவகையில் இவை இனக்குழுப் பாடல் தொகுதிகள். இப்படித் தொகுத்தெடுத்தால் எல்லா கிராம ஆதிவாசிக் குடி மரபுகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்கள் கிடைக்கும். கிடைத்திருக்கும். ஆனால் இவற்றில் மட்டும் என்ன மாபெரும் சிறப்பு என்பதுதான் புதிதாக உள்ளது. மாறாத விதிகளின் தொகுப்பு மாபெரும் ஞானத்தின் களஞ்சியம். பிரபஞ்ச உண்மையின் சாரம் என்றெல்லாம் சொல்வதற்கு இவற்றில் என்ன இருக்கிறது என்பதை கோபப்படாமல் எந்த ஞானியாவது விளக்கினால் நாமும் சோம பானம் பருகிய அளவுக்கு பேரின்பம் பெறலாம்.

-          பிரம்ம வித்யா, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் - ரமேஷ்

பாலியல் உளவியல், பாலியல் நடத்தைகள், பாலியல் விதிகள், பாலியல் செயல்பாடுகள், பாலியல் உந்துதல்கள், பாலியல் உள்ளீடுகள், பாலியல் வடிவ மாறுபாடுகள், பாலியல் பதிலீடுகள் என்பவை பற்றிய அறிவும் அணுகுமுறைகளும் இன்னும் கூட மர்மமானதாகவும் பூடகமானதாகவும் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை இவை குறித்தான பேச்சுக்களும் புரிதல் முறைகளும் ஏதோ ஒரு வகையில் மறைபொருள் சார்ந்தவையாகப் பேணப்பட்டு வருகின்றன. பொதுக் களத்திலும் சமூகச் செயல்வெளிகளிலும் நீக்கமற நிறைந்துள்ள பால் செயல்பாடுகள் அந்தந்தக் களங்களிலேயே மறைப்புக்கும் தணிக்கைக்கும் உள்ளாக்கப்பட்டு பேச்சிழந்த உற்றுணர்வழிந்த பூடகங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. இந்தப் பூடக நிலை அவற்றின் மேல் மீது சுமத்தப்பட்டுள்ள கவர்ச்சி, மயக்கம், ஈடுபாட்டு ஈர்ப்பு, தவிர்க்க முடியாத தன்மை ஆகியவற்றை நீட்டித்தும் பெருக்கியும் வருகின்றது.

-          காமம் பெரிதே களைஞரோ இலரே, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.

தாகூரின் எழுத்துக்களை ஆரம்பகட்ட எழுத்துக்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அவர் ஒரு தொடக்கம். ‘கீதாஞ்சலி’ ஒரு பதின்பருவப் பாடல்தான். ஆனால் வங்காளிகள் அதைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் இன்று யாரும் தாகூர் போல எழுதினால் கைகொட்டிச் சிரிப்பார்கள். இந்த இரண்டுமே வங்காளிகளின் குணம். ஆக்கப்பூர்வமாக, புதிதுபுதிதாக உலக அரங்கில் தற்காலத் தன்மையுடன் எழுதப்படும் எழுத்தைத்தான் அவர்கள் வெளியே கொண்டு தருகிறார்கள். பிறவற்றை பொழுதுபோக்கு என்று ஒதுக்கிவிடுகிறார்கள்.



-          இலக்கியம் அற்ற வெளியும் தமிழ்ப் பின்நவீனத்துவப் பேயும், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் - ரமேஷ்.

பௌத்தர், சமணர் படுகொலை செய்யப்படுதல், பௌத்த, சமணப் பள்ளிகள் விஹாரைகள் இடிக்கப்பட்டு கோயில்கள் எழுப்பப்படுதல், பௌத்த சமணம் மற்றும் பிற சமய நூல்கள் எரித்தழிக்கப்படுதல், பௌத்த சமண சமயங்களைப் பின்பற்றிய மக்கள் வாளின் முனையில் சமய மாற்றம் செய்யப்படுதல், சமயம் மாற மறுத்தோர் தீண்டாமைக்குட்படுத்தல், சமண, பௌத்த சான்றோர் தமிழக எல்லைக்கு வெளியே ஓடித் தப்பிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தல், மீண்டும் பேரரசுகளை உருவாக்குதல் போன்றவை இக்காலக்கட்டத்தின் செயல்கள். இவற்றிற்கு ஆதாரம் ஆயிரம் இருந்தும் இன்றுவரை தமிழறிவின் மறைக்கப்பட்ட பகுதியாக இவை இருந்து வருகின்றன. சைவமும், வைணவமும் மக்கள் மேல் முதலில் திணிக்கப்பட்ட, பிறகு ஏற்கப்பட்ட சமயங்கள் என்பதை இன்று கூறுவது ஏதோ பயங்கரவாதச் செயல் என்பது போல மனித வெறுப்பும் ஆதிக்க வெறியும் கொண்ட சாதி ஒடுக்குதலை ஏற்ற அறிவு மரபு ஒன்று இங்கே கூச்சல் இடலாம். ஆனால் உண்மை கூச்சல்கள் மறைக்கப்படுவதில்லை.


-          ஏடுகளில் படிந்த இருண்ட காலம், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.

 தமிழ் ஒரு மொழி அடையாளமாக ’மட்டும்’ என்றும் இருக்கமுடியாத மொழியாகவே இருந்து வருகிறது. எல்லா மொழிகளுக்கும் மொழி என்பதற்கு மேல் பண்பாடு, அரசியல் சமூகம் என்ற வேறு அடையாளங்களும் உண்டு. இன்றைய புரிதலில் மொழியென்பது மனமும் – உடலும் – வாழ்வும் என விரிந்த பொருள் தரக்கூடியதாக புலப்பட்டிருக்கிறது. ஆனால் ‘தமிழ்’ என்பது இவற்றிலும் கூடுதலான உள்ளடக்கங்களைக் கொண்டுவிட்ட்து. இது கொண்டுள்ள கூடுதலான அர்த்த அடர்த்திக்கு இதன் தொன்மை ஒரு அடிப்படைக் காரணம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இதன் தொன்மையும் மீறித் தமிழ் நமக்கு வேறுபல நினைவுகளைக் கொண்டு வருகிறது. மொழியென்றால் அது நினைவுத் தளத்திலும் நினைவுள் தளத்திலும் நினைவிலித் தளத்திலும் படிந்து கிடைப்பது. ஒரு பேச்சில் மட்டுமின்றி மௌனத்திலும் அம்மொழியே நிறைந்து நிற்கிறது. மௌனத்தை ‘உலகப் பொதுமை’ என்பவர் உண்டு; ஆனால் தமிழரின் மௌனம் தமிழ் மௌனம். வேறெந்த மொழியின் மௌனத்தைப் போலத் தனித்தன்மை உடையது. அது தமிழ்க் கூறுகளால் ஆனது. தமிழின் இலக்கியங்கள் இவ்வகையில் பலநூறு தமிழ் மௌன்ங்களால் நிறைந்து கிடக்கின்றன.

-          ஆசாகு எந்தை யாண்டு உளன் கொல்லோ?, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.

‘ஐம்புலனுக்குமான இன்பம் பெண்ணிடமே உண்டு’ என்பதில் மையமாக நிற்கும் ‘ஆண்’ பாலின்பம், பாலியல் என்பதில் மட்டுமின்றி ‘உலகம்’ என்பதிலும் மையமாக வைக்கப்பட்டிருக்கிறான். அதனால் தான் பாலியல் ஏற்போ, பாலியல் மறுப்போ இரண்டிலுமே ‘ஆண்’ முன்னிற்க முடிகிறது. பெண் பாலியலை ஏற்பதோ துறப்பதோ இங்கு முதன்மைக் கேள்வியாக மட்டுமல்ல, கேள்வியாகவே எடுத்துக்கொள்ளப்படவில்லை. அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம் செறிதொறும் சேயிழை மாடு(குறல்) என்பதில் அறியும் தன்னிலையாக ஆண் உறுதிப்படுத்தப்படுவதின் காரணமும் இதுவே. ‘பெண்’ இவ்விட்த்தில் ஆணால் அறிந்து தெளியப்படவேண்டிய ஒரு பொருளாக வைக்கப்படுவதன் மூலம்; பாலியல் ஒருவகையில் ஆணின் செயல்பாடாக, ஆணியத் தொழில் நுட்பமாக மாற்றப்பட்டுவிடுகிறது. இந்த ஆண்மையத் தன்மைதான் தமிழக, இந்தியப் பாலியல் ஒழுக்கவிதிகளுக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் காரணமாக இருந்து வருகிறது –என்னும் இதே வேளையில் பாலியல் விதிமீறல்கள், பாலியல் பிறழ்வுகளுக்கும் கூட இதுவே அடிப்படையாக இருக்கிறது.



பரத்தமை, கணிகையர் வாழ்வு என்பதை தனது பண்பாட்டின் ஒரு பகுதியாகக் கொண்ட தமிழ்ச் சமூகம் ஓயாமல் கற்பு, தெய்வக் கற்பு என்பதைக் கொண்டாடி மகிழ்வதில் உள்ள சமூக உளவியல் மிகவும் கவனத்திற்கு உரியது. தலைமை, அரசநிலை, அதிகார மையம், பேராண்மை என்ற வடிவங்களில் இயங்கும் ‘ஆண்மைய’ அடையாளங்களுக்கும் அதிக அளவிளான பெண்ணுடல்களை துய்த்தல், உரிமை கொள்ளல் என்பதற்கும் உள்ள உறவு புராதனத் தன்மை உடையது. இந்த உரிமையே அதிகாரத்தின் கேள்விக்கு உட்படாத உடல்களின் மீதான ஆதிக்கதிற்கு அடிப்படையானது. இந்த ஆதிக்க உரிமை இன்றுவரை கொண்டாடப்படுவதின் அடையாளமே ஆணுக்கு வழங்கப்பட்ட பெண்ணுடல்களின் மீதான ஆக்கிரமிப்பு உரிமை.

-          மலரினும் மெல்லியதோ காமம், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.

’இருமலை போலெதிர்ந்த மல்ல

திருவரங்க மெரிசெய்தாய் உன்

திருமலிந்த திகழ மார்பு தேக்கவந்தென் அல்குலேறி

ஒருமுலையை வாயில் மடுத்தொரு முலையை நெருடிக்கொண்டு

இருமுலையும் முறைமுறையா ஏங்கியேங்கி இருந்துணாயே.’

(பெரியாழ்வார்)


‘பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப்
புணர்வதோ ராசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைந்துக் குதூகலித்து
ஆவியை யாகுலஞ் செய்யும்.’

(ஆண்டாள்)



இங்கு காமம், காதல், தாய்மை, திளைப்பு, போதை அனைத்தும் பிணைந்த பித்தநிலை பக்தியில் உருவாகி வெம்மை கொள்கிறது.

‘ஆணல்லன் பெண்ணல்லனல்லா அலியுமல்லன்’

(நம்மாழ்வார்)

என்று பாலின்மை நோக்கியும் பால் மாற்றம் நோக்கியும் அது பாவனை கொள்கிறதும் மேற்பரப்பில் ஆண் மையத்தன்மை கொண்ட தமிழ் – இந்திய மன அமைப்பு உள் பகுதியில் பெண் மையம் மற்றும் பெண் மேலாண்மை என்பதை பதிவு செய்து வைத்திருக்கிறது. ஆனால் அதற்கு எதிரான மொழி மற்றும் உருவகங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. பெண்மை பற்றிய அச்சம், பெண்மை பற்றிய பூடகம் இதனை நோய்த்தன்மை கொள்ள வைக்கிறது. அந்நோய்த் தன்மைக்கு பலவித மூடு திரைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

பெண்மையின் இயக்கத்தை கட்டுப்படுத்த கற்பு உத்தியாகிறது, கற்பின் பொறியில் சிக்கவைக்க காதல் உத்தியாகிறது. இதே போல பெண்மை மீதான அச்சத்திலிருந்து தப்பவும், பெண்மையை எதிர்ப்பற்ற ஒடுக்கத்தில் வைக்கவும் தாய்மை என்ற உருவகம் உத்தியாகிறது. பெண்மையின் முழு எதிர்ப்பற்ற நிலை தாய்மையில் உறுதி செய்யப்படுகிறது. இதன் அடுத்த கட்டமே பக்தியென்பது. காமம், காதல், தாய்மை, திளைப்பு அனைத்தையும் புலன் சார்ந்ததாகவும் நம்ம் சார்ந்ததாகவும் மாற்றும்போது பக்தியின் கட்டமைப்பு உருவாகிவிடுகிறது. ‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும்’ நிலை ஒரு பாலற்ற நிலையே. ஆனால் ’ஆண்’ என்பது அங்கு முன்னிலைப்படுத்தப் படும்போது ஆண் மையம் சார்ந்த காதலாக அது மாறிவிடுகிறது.

-          பக்தி காதல் காமம் : பெண்மை பற்றிய சில கருத்தாக்கங்கள், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்

தனது பதவியேற்பு நிகழ்ச்சியில்(12-4-1945) அமெரிக்க மரபுப்படி பேசிய ஹாரி எஸ். ட்ருமன் சொன்னார்:  The supreme need of our time is for men to learn to live together in peace and hormony. We believe that all men are created equally because they are created in the image of God.

உருக்கமான உண்மைகள். அவரே மேலும் சொன்னார்: கம்யூனிசம் மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இந்த நூற்றாண்டின் மிகப் பிழையான தத்துவம் கம்யூனிசமே. அது மனிதர்களை வன்முறை நோக்கித் தள்ளுகிறது. பெரும் பலம் பொருந்திய ஆதிக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் மனிதர்களை கொண்டு வருவதுதான் கம்யூனிசம், இதற்காக பலர் தமது சுதந்திரத்தையே பலியிட்டிருக்கிறார்கள். கம்யூனிசம் வன்முறையை நியாயப்படுத்துகிறது. போர் தவிர்க்க முடியாத்து என்கிறது. ஆனால் நமது ஜனநாயகம் அமைதியான முறையில் மாற்றத்தைக் கொண்டுவரப் பாடுபடுகிறது. புஷ் இப்போதும் சொல்கிறார்: மனிதர்களின் மாபெரும் பேறு சுதந்திரம். அதை எப்போதும் காக்க வேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் – வாழ்க்கை, சுதந்திரம், இன்பம் – மேற்கு சொல்கிறது. நாம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

விடுபட்ட சிறு தகவல்:

1945 ஜூன் மாதத்தில் ட்ருமன் சோவியத் தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துக் கூறுகிறார்: We have a new weapon of unusual destructive force. அதற்கு மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் ஸ்டாலின் கூறுகிறார்: We would make good use of it against Japanese.

-          எல்லாரும் அமெரிக்கரே, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்

அறிவாற்றலைக் கேள்வி கேட்டு, அடிப்படைகளை மாற்றுவதற்கு நமக்கு நிறைய ஆற்றலும் அர்ப்பணிப்பும் சுயமறுப்பும் தேவைப்படுகிறது. இருப்பதைப் பெருக்கி ஒருமுகப் போலிகளை உருவாக்குதல் எப்பொழுதும் நிகழும் ஒன்று. கடந்த காலங்களில் இளங்கோ, சாத்தன், வள்ளுவன், திருமூலன், அயோத்திதாசர், பெரியார் போன்றவர்களின் சொல்லாடல் பரப்பு முடிவுகளுக்கு வெளியே நழுவும் தன்மையுடையது. இந்த ‘முடிவுகளுக்கு வெளியே’ மரபைத் தொடர்ந்து கொண்டு செல்வது எமக்கும் ஒரு வாழ்நாள் முயற்சி.


பிரேம் – ரமேஷ்(19-03-2006)  புத்தக முன்னுரை, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.

PS: இந்த புத்தகத்திற்கெல்லாம் விமர்சனம் என்கிற பெயரில் எதையாவது எழுதும் அளவிற்கு இன்னும் நான் வளரலை என்பதால், பிடித்த பகுதிகளை அப்படியே காப்பி செய்து தந்திருக்கிறேன்.

Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts