In சிறுகதை தேன்கூடு

அவளை அவன் கண்விடல்

அன்று ஒரு அதிர்ஷ்டமான நாள் என்பதற்கான அறிகுறி காலையிலேர்ந்து தெரியவில்லை, பாட்டரி தீர்ந்திருந்ததால் நின்று போன அலாரம் க்ளாக், தலைநகரின் டிசம்பர் மாதக் குளிரில் குளிக்க அயர்ன் ராட் போட்டுவிட்டு ஞாபகமறதியில் சுவிட்சை அணைக்காமல் சூடுபார்க்கிறேன் பேர்வழி என்று கையில் நறுக்கென்று வாங்கிய மின்சாரக்கடி, இனிமேல் ஆபிஸ் போனாலும் அரைநாள் விடுப்புதான் எனத் தெரிந்தாலும் பார்க்கவேண்டிய வேலை பாக்கிக்காக, அவசரஅவசரமாக எடுத்த பல்ஸர் பெட்ரோல் இல்லாமல் பங்கிற்கு 100 மீட்டர் முன்பே நின்றுவிட நான் நிச்சயமாய் நினைக்கவில்லை இன்று அதிர்ஷ்டகரமான நாளாக இருக்குமென்று. எல்லாம் மாறியது ஒரு நொடியில்.

வெள்ளை சுகிதாரில், குளிருக்கு இதமாய் கருப்புநிற ஸ்வெட்டர் அணிந்த பஞ்சாப் கோதுமை நிற பிகரொன்று ரோட்டோரத்தில் லிப்ட் கேட்க, நான் யோசித்துப் பார்த்தேன் டெல்லி டிபார்ட்மெண்ட் ஆப் ரிஸர்ச் அண்ட் டெவலப்மெண்ட்டில் வேலைக்குச் சேர்ந்த இந்த இரண்டு வருடத்தில் எத்தனை நாட்கள் கனவு கண்டிருப்பேன் இதுபோல் பிகரொன்றை பல்ஸரில் ஏற்றிக்கொண்டு வீதிஉலா வரவேண்டும் என்று, நான் விட்ட பெருமூச்சை அவள் உணர்ந்திருப்பதற்கானச் சாத்தியக்கூறுகள் குறைவுதான். அவளருகில் வண்டியை நிறுத்தினேன் அவள் எங்கே போகவேண்டும் என்கிறாளோ அங்கே போவதற்கான முடிவை எடுத்தவனாய், ஹெல்மெட்டைக் கழட்டினேன்.

“சவுத்எக்ஸ்-பே டிராப் கர்ஸக்தா க்யா? தோடாஸா அர்ஜண்ட் காம் ஹை. பஸ் நை மில்ர” அவள் கெஞ்சும் பாணியில் கேட்க, “நோ ப்ராப்ளம்” என்று சொல்லாமல் தோளைக் குலுக்கிக் காட்டியவனாய் மீண்டும் ஹெல்மட் தலைக்கு நான் மாற்றும் நேரத்தில் பட்சி வண்டியில் கெத்தாய் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து பிடிமானத்திற்காய் தோளில் கை வைத்தாள். சாதாரணமான விஷயமாக அவள் செய்த இதை சாதாரணமா நான் எடுத்துக்கொள்ள நிறைய நேரம் பிடித்தது. நான் அணிந்திருந்த ஜெர்கின், ஆஃப் ஸ்வெட்டர், சட்டை, பனியன் இதையெல்லாம் தாண்டி அவள் உள்ளங்கையின் வெப்பம் உடலைத்தாக்குவதாய்ப் பட்டதை உள்மனம் மட்டும் மாயை என்று சொல்லியது. அதை அடக்கி இன்ஜினை விரட்டினேன்.

கிட்டத்தட்ட ஐஐடி டெல்லி, ஹவுஸ்காஸ் எல்லாம் நொடியில் தோன்றி மறைந்து அய்ம்ஸை நெருங்கும் சமயத்தில் பக்கத்தில் வந்து கொண்டிருந்த மாருதி ஜிப்ஸி ஒன்று இன்டிகேட்டர் சிக்னல் ஒன்றும் கொடுக்காமல் பட்டென்று வலதுபக்கம் திரும்ப டிஸ்க் பிரேக்கையெல்லாம் தாண்டியும் என் வண்டி குடைசாய்ந்தது.

“குத்தே கம்மினே…” நான் திட்டிக் கொண்டே முதலில் அந்த கார்க்காரனை அடிக்கக் கிளம்பினேன், பின்னர் தான் ஞாபகம் வந்தது பின்னால் உட்கார்ந்து வந்துகொண்டிருந்த தேவதையின் நினைவு. அவளும் கீழே விழுந்திருந்தாள் முழுங்கையில் நல்லஅடி நெற்றியில் லேசாய்ச் சிராய்ப்பு. அந்த நிமிடத்தை மீண்டும் நினைவில் கொண்டு வந்த எனக்கு அவள் பின்பக்கமாய் விழுந்திருக்க வேண்டுமென்பது புரிந்தது. பின்பக்கத்தில் நல்ல அடி பட்டிருக்க வாய்ப்புண்டு. சமீபத்தில் சிக்னல் இருந்ததால் கொஞ்சம் ஸ்லோவாய் வந்ததால் பெரிய காயம் ஒன்றும் இருக்க வாய்ப்பில்லைதான். ஆனாலும் பெண்ணல்லவா கையைக் கொடுத்து தூக்கிவிட்டேன்.

“ஸாரிஜி, உஸ்கா கல்தி ஹை.” மன்னிப்பு கேட்கும் மனோபாவத்தில் நான் தாமதித்த சில நிமிடங்களில் ஜிப்ஸிக்காரன் எஸ்க்கேப் ஆகியிருந்தான்.

முழங்கையில் இருந்து வழிந்த இரத்தத்தை துடைக்க ஜீன்ஸிலிருந்து கர்சீப்பை எடுத்துக்கொடுத்தேன். “தேங்க்ஸ்” சொல்லி வாங்கிக் கொண்டவளை, எதிர்பக்கம் இருந்த எய்ம்ஸிற்கு கூட்டிக்கொண்டு வந்தேன். அடுத்த அரைமணிநேரத்தில் டிரஸ்ஸிங் முடிந்து கையிலும், தலையில் கட்டுப் போட்டிருந்த வாக்கில் கேன்டீனில் உட்கார்ந்து டீ ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

“நீங்க தமிழா?”

எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை, அவள் தமிழில் பேசியதைக் கேட்டதும்.

“நீங்க தமிழா? உங்களுக்கு எப்டி தெரியும் நான் தமிழ்னு?”

“நீங்க அந்த மாருதிக்காரனை திட்டினீங்க தமிழில்.”

ஆஹா திட்டினீங்களா, அவனைக் காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தேன். நல்ல தமிழாவா இருக்கும் எல்லாம் மோசமானத் தமிழ் தான். ஒரு பிகரைக் கூட்டிக்கொண்டு போகும் நல்ல சந்தர்ப்பத்தில் இப்படி ஆக்ஸிடெண்ட் பண்ணி மானத்தை வாங்கிட்டானேன்னு நல்ல நல்ல கெட்ட வார்த்தைகளால் திட்டியிருந்தேன். அதுவரை கண்களை மட்டும் பார்த்து பேசிக் கொண்டிருந்தவனுக்கு அதன் பின் கண்களை பார்க்க முடியாமல் போனது. திரும்பத்திரும்ப என்ன கெட்டவார்த்தை ப்ரயோகித்தேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

“எங்க அப்பா ஒரு பஞ்சாபி, அம்மா தமிழ்க்காரங்க அதனால எனக்குத் தமிழ் தெரியும்.” அவள் சொல்ல,

“நீங்க பஞ்சாபியாத்தான் இருப்பீங்கன்னு நினைச்சேன்…” சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டேன். என்னவோ புரிந்தவளாய்ச் சிரித்தவள் “எப்டி அப்டி நினைச்சீங்க…” அவள் கேட்டதற்கு பதிலெதுவும் சொல்லாமல் தரையையும் கையில் இருந்த டீ கப்பையயும் பார்த்துக் கொண்டிருந்தவன், ஏதோ நினைவுக்கு வந்தவனாய்,

“முக்கியமான வேலை இருக்கிறா சொன்னீங்க. இல்லையா?”

அப்படியும் ஈர்க்கும் அந்தக் கண்களைப் பார்ப்பதை தவிர்க்கமுடியாமல் பார்த்தவனுக்கு தெரிந்தது அவளிடம் இருந்த தமிழ் அழகுகள். இதை எப்படி அப்பொழுது கவனிக்காமல் போனேன் என்று நினைத்தேன். பின்னர், பார்க்கவேண்டியதைப் பார்க்காமல் வேற எதையாவது பார்த்துக் கொண்டிருந்தது நினைவில் வந்தது, பார்த்ததை வைத்து மாநிலத்தை மட்டுமல்ல எதையுமே கணிக்க முடியாதென்று நினைத்தவனாய் மெலிதாய் சிரித்தேன்.

என் மனதில் ஓடுவதை படிப்பவளைப் போல் கண்களையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவள்,

“என்ன சிரிக்கிறீங்க?” கேட்க,

“இல்ல அந்த மாருதிக்காரனுக்கு தேங்க்ஸ் சொல்லியிருக்கணும்னு நினைத்தேன் சிரிப்பு வந்தது.” சொல்லிவிட்டு சிரித்தேன்.

கண்களை முடிந்த அளவிற்கு விரித்து, அதன் ஓரத்தில் ஒரு கேள்விக்குறியை நிறுத்தியவளுக்கு பதிலாய்,

“இல்லாவிட்டால் இந்நேரம் உங்களை சவுத்எக்ஸில் இறக்கி விட்டுட்டு ஆபிஸ் போயிருப்பேன். உங்கக்கூட பேசிக்கிட்டிருக்கிற இந்த சந்தர்ப்பம் கிடைச்சிருக்குமா அதான்.”

தாஸ் நீ எங்கேயோ போய்ட்டடா, நீதானா நீதானா இப்படி. மனதின் உள்ளிருந்து எனக்கு மட்டும் காதுகிழியும் அளவிற்கு சப்தமாய்க் கேட்கும் சப்தத்தை உதறித்தள்ளியவனாய், அவளுடைய மறுமொழியை அறிந்து கொள்ளும் ஆவலில் அவளை நிமிர்ந்து பார்த்தேன். அழகாய் உதடு பிரிக்காமல் சிரித்தவள்.

“நல்லா பேசுறீங்க, தமிழ்ல பேசிக் கேட்டு ரொம்ப நாள் ஆகுது. அதுவும் உங்கள மாதிரி வேடிக்கையா பேசிக்கேட்டு ரொம்ப வருஷம் ஆகுது.” சிரித்தாள்.

சிறிது நேரம் இப்படி வேடிக்கையாய் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவனுக்கு அவள் கேட்கப்போய்தான் நினைவில் வந்தது வேலைக்கு போகாமல் இங்கே உட்கார்ந்திருந்தது, என்னதான் இவ்வளவெல்லாம் பேசினாலும் மொபைல் நம்பர் கேட்க தைரியமில்லாமல் குட்பையுடன் முடிந்தது அந்தச் சந்திப்பு.

ஒட்டுமொத்த என்னுடைய ஐந்தாண்டு வெளிமாநில அனுபவத்தில் பெண்களுடன் அதிகப்படியாக பழகியது அதுதான் முதல் முறையாக இருக்கும். எப்படியிருந்தாலும் கொஞ்ச நேரத்தில் பிரியப்போகிறவள் தானே என நினைத்ததால் என்னுடைய ஈகோ கொஞ்சம் உறங்கியிருந்த சமயத்தில் நடந்த சந்திப்பில் முழுதாய் பறிகொடுத்துவிட்டதாய் உணர்ந்தேன் ஏதோ ஒன்றை.

இது நடந்த இரண்டாவது நாளில் மற்றொரு அதிர்ஷ்டமான நேரத்தில் நேரு ப்ளேஸின், இருபத்தைந்தடுக்கு பில்டிங்கின் லிப்ட் ஒன்றில் அவளைச் சந்தித்தேன், அதுவும் தனியாய் நானும் அவளும் மட்டும். ஆச்சர்யங்கள் எப்பொழுதும் நடப்பதில்லைதான் ஆனால் எனக்கு நடந்தது. நான் மனதின் ஓரத்தில் நினைத்ததை தேவர்கள் கேட்டு ‘ததாஸ்து’ சொல்லியிருக்க வேண்டும் லிப்ட் அரைகுறையாய் நின்றது நடுவில்.

என்னைப் பார்த்து அவள் அடைந்த ஆச்சர்யத்தை அவள் கண்கள் படம் போட்டுக் காட்டின.

“வாட் அ ப்ளஸண்ட் சர்ப்ரைஸ், இன்னிக்கு காலையில் தான் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். அன்னிக்கு உங்க போன் நம்பர் கூட வாங்கலைன்னு அதற்குப் பிறகு தான் ஞாபகம் வந்தது.”

அவள் சொல்லச்சொல்ல எனக்கு தேவர்கள் பூமாறி பொழிவதாகத் தோன்றியது, அதன் பிறகு நடந்ததாகத்தான் இருக்க வேண்டும் அந்த ததாஸ்து சம்பவம். நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை, அவளும் கொஞ்சம் கூட பயப்படாமல்,

“இங்க இப்படித்தான் அடிக்கடி லிப்ட் பெயிலியர் ஆயிரும். அஞ்சு பத்து நிமிஷத்தில் சரியாயிரும்.”

என்னவோ நான் அது சரியாக வேண்டும் என்று கவலைப்படுவதாய் நினைத்து. அதைப் பற்றிய ப்ரக்ஞையே இல்லாமல் நான் இரண்டு நாளாக கனவில் அவளுடன் பேசியதில் நினைவாக்க எந்த ஒன்று நன்றாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

லிப்ட் கடகடவென சப்தத்துடன், மெதுவாய் ஒருமுறை ஆட அதுவரை சாதாரணமாய் எதிரே நின்று பேசிக்கொண்டிருந்தவள் பயந்துபோய் அருகில் வந்து ஒட்டி நின்றுகொண்டாள். எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது இருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை, ஆனால் இருவருக்குமே பேச்சு வரவில்லை, சிறிது நேரத்தில் கரெண்ட் கட்டாகிப் போய் இன்னுமொறுமுறை லிப்ட் ஆடத்தொடங்க, பக்கத்தில் நின்று கொண்டிருந்தவள் பயந்துபோய் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள், அந்தப் பயங்கரமான சூழ்நிலையிலும் அவள் போட்டுக்கொண்டிருந்த செண்டின் வாசம் என்னை அலேக்காகத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டது. நான் அவளுக்கு தைரியத்தை ஏற்படுத்த நினைப்பவனாக ஒரு கையை அவள் தோளைச் சுற்றிப் போட்டு இறுக்கிப் பிடித்தேன். அப்பொழுது தான் அவளுக்கும் எனக்குமான உயர வித்தியாசம் தெரியவந்தது அப்படியே எங்கள் இருவருக்குமான நிறங்களின் வித்தியாசமும். அன்று அவள் ஸ்லீங்லெஸ் ஜாக்கெட் அணிந்து புடவை கட்டியிருந்தாள்.

“ப்ரார்த்தனா பயப்படாதீங்க, இதே பில்டிங்கில் நம்ம பிரண்டொருத்தன் இருக்கான் அவனைப் பார்க்கிறதுக்காகத்தான் வந்தேன். ஒரு நிமிஷம் போன் செய்து அவனைப் பிடிக்கிறேன்.”

தோள்களில் இருந்து கைகளை எடுக்காமல் இடது கையாலேயே மொபைலை எடுக்க துரதிஷ்டிர வசமாக சிக்னல் கிடைக்கப்போய், அவனிடம் நாங்கள் இருக்கும் நிலையை விவரித்து, அவன் வருகைக்காகவும் உதவிக்காகவும் காத்திருந்த சமயங்கள் மிகவும் அழகானவை சொல்லப்போனால் போதையானவை. அவளுடைய அருகாமை என்னுள் பெரும் மாற்றத்தை உருவாக்கியிருந்தது. அருகாமையென்றால் ஒருவருடன் ஒருவர் உரசிக்கொண்டு இருந்ததில் எதையோ ஒன்றை இழந்து கொண்டிருந்தேன் என்பது தெளிவாக விளங்கியது.

ஒருவழியாய் லிப்டை மேலே தூக்கி நாங்கள் வெளியில் வந்ததும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூட வெட்கப்பட்ட நாங்கள் ஒரு மணிநேரத்தில் டெல்லியின் பிரபலமான ஒரு ஹோட்டலில் அருகருகே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

“அட நீங்க ஒன்னுங்க லேப்டாப் ரொம்ப செக்யூர்டா இருக்கணும்னு கவர்மெண்ட் செக்யூர்ட் கீ கான்பிகர் பண்ணிக்கச் சொல்லி இங்க அனுப்பினாங்க. அந்த செட்டப் எல்லாம் முடிச்சி இரண்டு மூணு தடவை யூஸ் பண்ணிப் பார்த்துட்டு வர்றதுக்கு ஒரு மணிநேரம் ஆய்டுச்சு. ரொம்ப லேட் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.”

நான் முதல்முறை அவளைச் சந்தித்த பின் தான் நினைவில் வந்தது அன்று லாப்டாப் என்னிடம் இல்லாதது, டிஆர்டிவோவில் லேப்டாப் கொடுத்ததும் சந்தோஷமாய் வாங்கியதற்கு ஒரே காரணம். இனிமேல் ரோட்டில் சீன் போடலாம் என்றுதான். அன்றைக்கென்று பார்த்து லேப்டாப் கையில் இல்லாததை ஒரு பெரிய குறையாக நினைத்தேன். என்னை அவளிடம் சரியாய் லேப்டாப் அறிமுகம் செய்து வைக்கும் என்று நினைத்தே அந்தப் பேச்சை இழுத்தேன். அப்படியே வேலை செய்தது.

செக்யூர்டு கீயை இன்னொரு முறை சோதனை செய்து பார்ப்பவனைப் போல் ஹோட்டலிலேயே அவளுக்கு செய்முறை விளக்கம் செய்து காட்ட அவள் முகம் பிரகாசமடைவதை உணரமுடிந்தது. அவளும் ஆர்வமாய் சில கேள்விகள் கேட்க, அவளுடைய கம்ப்யூட்டர் திறமையை ஆச்சர்யத்துடன் கவனித்தேன். முதல் முறையைப் போலில்லாமல் அவளுடைய பர்ஸனல் விவரங்களை அடுக்கியவள் மறக்காமல் மொபைல் நம்பரை கொடுத்து என்னுடையதை பெற்றுக்கொண்டு சென்ற ஒரு வாரத்தில் எல்லாம் எங்களுக்கிடையேயான இடைவெளி குறைந்திருந்தது, எவ்வளவென்றால் ஆடையின் அவசியம் எங்களுக்கிடையில் இல்லாமல் போகுமளவிற்கு.

இது எனக்கும் ஆச்சர்யமான விஷயம் தான். டெல்லி போன்ற ஒரு சிட்டிக்கு வேலைக்கு வந்து இரண்டு வருடங்களாக பிரம்மச்சரியத்தையும் ஆஞ்சநேயரையும் சைட் அடிப்பது என்ற ஒரே ஒரு எக்ஸம்ஷனுடன் காப்பாற்றி வரும் நான் இப்படி ஆனது வேதனையுடன் சேர்த்து சந்தோஷத்தையும் அளித்தது. யாரிடமோ எதையோ ப்ரூவ் பண்ண நினைத்தவன் வெற்றுடம்புகளின் வெம்மைப் பரிமாற்றத்தில் அதை சாதித்ததாய் உணர்ந்தேன். ஆனால் உள்மனம் யாரோ ஒரு பெண்ணை அவளுடைய பெற்றோரை ஏமாற்றுவதாய் உளறிக்கொட்ட, ப்ரார்த்தனா ஒன்றும் சின்னப் பெண் கிடையாது அவள் செய்வது எத்தகையது என்பதைப் பற்றி அவளுக்குத் தெரியும் என்று சமாதானம் செய்து கொண்டிருந்தேன்.

அத்தனை நாள் பிரம்மாண்டமாய் தோற்றமளித்த அவள் குறிப்பாய் அவள் உடல் பற்றிய எண்ணங்கள் நிர்வாணத்தில் கரைந்து கொண்டிருந்தன. அத்தனை நெறுக்கும் பயத்தையும் அவளின் மீது பச்சோதாபத்தையும் ஏற்படுத்தியது. அசந்து தூங்கிக் கொண்டிருந்தவளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன் எப்பொழுது தூங்கினேன் என்றே தெரியாமல் தூங்கிக்கொண்டிருக்க இன்டலிஜென்ஸ் பீரோ ஏஜன்டுகள் வந்து எழுப்பி “இராணுவ சம்மந்தமான தகவல்களை வெளியானதற்காக” கைது செய்வதாய் சொன்னதும் தான் ஒரு வாரம் நடந்தவைகளை திருப்பிப் பார்த்தேன் ஒரு திருத்தப்பட்ட குறளுடன்.

இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து
“அவளை” அவன் கண்விடல்.

Related Articles

9 comments:

  1. தாஸ், நல்ல ட்விஸ்ட்..

    ReplyDelete
  2. நல்ல ஜனரஞ்சக எழுத்து நடை. நிறைய வரிகள் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  3. கதை நல்லா வந்திருக்குங்க!!!
    கடைசியா எதிர்பாராத ட்விஸ்ட் ;)

    ReplyDelete
  4. // டிபார்ட்மெண்ட் ஆப் ரிஸர்ச் அண்ட் டெவலப்மெண்ட்டில் வேலை //

    மாருதி ஜிப்ஸி விபத்து நடந்த இரண்டொரு நாட்களிலேயே லிஃப்ட் ரிப்பேர் என்றவுடனேயே முடிவை ஊகிக்க இயன்றது. (சுஜாதா, ராஜேஷ் குமார் கதைகளை படித்ததன் விளைவு)

    ReplyDelete
  5. பொன்ஸ், நிர்மல், சனியன், வெட்டிப்பயல், சிறில் அலெக்ஸ், லதா, சின்னத்தம்பி நன்றிகள்.

    லதா என் மற்ற கதைகள் படிக்காமல் இந்தக் கதை படித்தால் நிச்சயமாக முடிவை ஓரள்விற்கு ஊகிக்க முடியும். ஆனால் மற்ற கதைகளுடன் பழக்கமிருப்பவர்களுக்கு இது கஷ்டமே, எப்பொழுதுமே ஒரு வரி முடிவை நோக்கி என் கதைகள் நகர்த்த மாட்டேன். அப்படி செய்வதை நிறுத்தி நிறைய நாள் ஆகிவிட்டது.

    இருந்தாலும் இது முழுக்க முழுக்க போட்டிக்காக எழுதப்பட்ட கதை ;), அது மட்டுமில்லாமல், நான் திரும்ப படித்த பொழுது, சுஜாதா, ராஜேஷ்குமார் இல்லாமல் நான் சமீபத்தில் படித்த ஒரு நாவலின், அந்த வகை கதை சொல்லலின் பாணி கொஞ்சம் தெரிவதாக நான் உணர்ந்தேன்.

    யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம், ஆனால் இது முழுக்க முழுக்க என் கற்பனையாக இருக்கலாம்(அதாவது மற்றஒரு ஆசிரியரின் நடை உள்ளதாகப் பட்டது)

    ReplyDelete
  6. நல்ல கதை!!

    ஒரிஜினல் குறள்.
    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்.

    ReplyDelete
  7. கதை நல்லாயிருக்கு.

    //டெல்லி டிபார்ட்மெண்ட் ஆப் ரிஸர்ச் அண்ட் டெவலப்மெண்ட்டில் வேலைக்குச் சேர்ந்த //

    DRDOன்னா டிஃபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட்ன்னு நெனைக்கறேன்.

    ReplyDelete
  8. கதை ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே முடிவை யூகிக்க முடிந்தது... ஆனாலும் நன்றாக கதை பண்ணியுள்ளதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Popular Posts