"தற்கொலை பண்ணிக்கிறதைப் பத்தி என்ன நினைக்கிற சொரூபா?"
அவனை வம்பிற்கிழுப்பதை மட்டுமே வாடிக்கையாய்க் கொண்டிருந்த எனக்கு, நாங்கள் குடியிருந்த வீட்டின் எதிர் பக்கதில் இருந்து பங்களாவில் நேற்றிரவு நடந்த தற்கொலை இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்கியது. எங்கள் வீட்டிற்கு குடிவந்த சில நாட்களிலேயே ஒருவாறு எதிர் வீட்டுப் பெண்ணின் யோக்கியத்தை தெரிந்து கொண்டவன் போல் இவனும் என் மாமாவும் அவளுடைய விலை சம்மந்தமாய் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன். நான் இதுபோன்ற விஷயங்களில் பட்டும் படாமல் நடந்து கொண்டிருந்தேன் அதற்கு சொரூபனின் தங்கை சந்திரா ஒரு காரணம் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
நாங்கள் பெங்களூர் சிட்டியிலிருந்து, பன்னார்கெட்டா நேஷனல் மியூஸியம் செல்லும் பாதையில் பன்னிரெண்டு கிலோமீட்டர் தள்ளி குடியிருந்ததற்கு ஒரே காரணம் அந்த இடத்தின் அமைதியான சூழ்நிலைதான். சிலநாட்கள் வீட்டு ஓனர் மகள் பிரசவத்திற்கு சென்றிருந்த சமயங்களில் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு யூக்களிப்டஸ் மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் வரும் சப்தத்தை கூட கேட்டிருக்கிறேன். பக்கத்தில் ஒரே ஒரு டெண்டல் காலேஜ், அதைச் சார்ந்த மாணவர் குடியிருப்பு அவ்வளவுதான் சுத்துவட்டார இரண்டு கிலோமீட்டர்களுக்கு. ராத்திரி பகலாய் ஷிப்ட் போட்டுக்கொண்டு அங்கிருந்த மலைகள் உடைக்கப்பட்டுக் கொண்டிருந்த சப்தம் மட்டும் இரவு வேளைகளில் கேட்கும். அந்த குடியிருப்பில் மொத்தம் இருபது இருபத்தைந்து வீடுகள் தான் இருக்கும், அனைத்தும் தனிவீடுகள் பெரும்பாலும் சாப்ட்வேர் இன்ஜினேயர்களுடையது. அதற்கென ஒரு செக்யூரிட்டி சர்வீஸ், குடியிருப்பைச் சுற்றிலும் இரவில் மின்வலை பாதுகாப்பும் உண்டு. ஒன்றிரண்டு முறை தொட்டுப் பார்த்திருக்கிறேன் லேசாய் உதறும் அவ்வளவுதான், ஆனால் வலைக்கு அருகில் சென்றால் உய்யென்று சப்தம் மட்டும் பெரிதாய் வரும்.
காலையிலிருந்தே அன்பு குரைத்துக் கொண்டிருந்தான். பாட்டிதான் சொல்லும் நாய்களுக்கு மரணத்தின் சாயல் தெரியுமென்று, எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை, ரொம்ப நாளா பக்கத்து வீட்டில் இருக்கும் பொட்டை நாயை ஜொள்ளுவிட்டுக்கொண்டிருந்தான் அன்பு. நான் நினைத்தேன் அந்த நாய்க்குத்தான் ஏதோ சிக்னல் கொடுத்திருப்பான் என்று.
எதிர்வீட்டுப் பெண்ணின் தற்கொலைக்கான காரணம் நிச்சயமாய் சொரூபனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அதைத் தெரிந்து கொள்ளும் நோக்கில் நான் கேட்ட அந்த கேள்விக்கு சொரூபன் அதிக நேரம் யோசித்ததற்கான காரணம் முதலில் புரியவில்லை. சும்மாவே லொடலொட என பேசும் சொரூபனுக்கு இந்த விஷயம் அவுல் கிடைத்ததைப் போன்றதொன்று என நினைத்தேன் நான். ஆனால் அவன் மேலும் மேலும் மௌனம் சாதிக்க நான் கேட்டதில் ஏதேனும் தவறிருந்ததா என்று யோசித்த பொழுதுதான் சில விஷயங்கள் உறைத்தது,
"சொரூபா நான் அந்த எதுத்த வீட்டுப் பொண்ணைப் பத்தித்தான் கேட்டேன்"
எங்களுக்குள் தலைமுறை இடைவெளி அதிகம் இருந்திருக்கிறது. நான் வெகுசாதாரணமாய்ப் பார்க்கும் கடவுள் உறவுமுறை போன்ற விஷயங்களை மிகத்தீவிரமாய்ப்f பார்ப்பான். அதேபோல் நான் மிக முக்கியமானது என நினைக்கும் சிலவிஷயங்களை அலட்சியப்படுத்திவிடுவான் சற்றும் யோசிக்காமல். ஒருவிஷயத்தைப் பற்றிய அவனுடைய பார்வைகளும் என்னுடைய பார்வைகளும் எதிரெதிரானவையாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது.
"பவானி தெரியுமா, அந்தப் பொண்ணு அவங்க அப்பன் ஆத்தா ஊட்டில் இல்லேன்னு என்ன ஆட்டம் போட்டா, நேத்தி நைட்டு சொல்லிக்காம கொல்லிக்காம திடுதிப்புன்னு வந்து நின்னு, அந்தப் பொண்ணையும் பையனும் கையும் களவுமா பிடிச்சிட்டாராம். அவன் தப்பிச்சு ஓடிட இவளைப் போட்டு அடியடின்னு அடிச்சு மேய்ஞ்சிட்டாராம்.
அவளாதான் தூக்குப் போட்டுக்கிட்டான்னு போலீஸ்கிட்ட சொன்னாங்களாம், வாசு கடையில நம்ம பெருமாளு இல்லை அவன் சொல்றான் அப்பன் காரன்தான் மாட்டிவிட்டுட்டான்னு."
பெரிய தங்கமலை ரகசியத்தை கண்டுபிடித்துவிட்ட சந்தோஷம் இருந்தது மாமாவின் முகத்தில், பக்கத்தில் உட்கார்ந்திருந்த சொரூபனின் முகத்தில் ஈயாடவில்லை, நான் இரவு அந்தப்பெண்ணின் வீட்டில் பிடிபட்டது சொரூபனோ என்று நினைக்கும் விதத்தில் பேயறைந்ததைப் போலவே காணப்பட்டான்.
மாமாவிற்கு அந்தச் சந்தேகம் இன்னொரு நபரின் மேலிருந்தது, அதனைத் தெரிந்து கொள்ளாவிட்டால் மண்டை வெடித்துவிடும் அவனுக்கு, அன்பரசுவை அவிழ்த்துக் கொண்டு அவன் சந்தேகப்படும் அந்தக் காலனியின் இன்னொரு பையனின் வீட்டிற்கு வாக்கிங் அழைத்துச் சென்றான். நான் அப்பாடா ஒழிந்தான் என நினைத்தேன்.
தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்பட்ட அந்த பெண்ணை கவனித்திருக்கிறேன். குள்ளமாய் பெரும்பாலும் சிக்ஸ் பாக்கெட்ஸ் போட்டுக்கொண்டு டைட் டீஷர்ட் போட்டுக்கொண்டிருப்பாள். மாமா சொன்ன அந்தப் பையனோடு வைத்து இரண்டு மூன்று முறை மடிவாலாவில் பார்த்திருக்கிறேன். குடியிருப்பில் திருப்பிக்கொண்டு போகும் அந்தப் பெண் வெளியில் பார்க்கும் பொழுது மட்டும் சிரிப்பது ஆச்சர்யமாக இருக்கும்.
மாமா அருகில் இல்லாத அந்த சமயத்திலேயே சொரூபனிடம் சில விஷயங்களை நேரடியாகச் சொல்லிவிட்டால் நல்லதென நினைத்து,
"சொரூபா நான் அந்த பொண்ணை மைண்ட் பண்ணி மட்டுந்தான் கேட்டேன், நீ தப்பா எடுத்துக்கிட்டேன்னு நினைக்கிறேன்."
அவன் ராஜீவ் காந்தியைப் பற்றியோ, இல்லை விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைகளைப் பற்றியோ நான் பேசுவதாய் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்று தெரியும். என்fனுடைய இரண்டாண்டு அமேரிக்க வாசம், தனிநபர் உரிமைகளைப் பற்றிய என்னுடைய எண்ணங்களை மாற்றியிருந்ததும், மூளைச்சலவை செய்து, தற்கொலைப் படையினை உருவாக்கும் விஷயத்தைப் பற்றி நிறைய நேரம் நாங்கள் விவாதித்திருக்கிறோம் என்பதால் சர்வசாதாரணமாய் நான் அவனை அங்கே சுட்டுவதாய் நினைத்திருக்க முடியும்.
"அண்ணை உங்களுக்குத் திலீபனைத் தெரியுமோ?"
அந்த முகம் கருங்கல்லை ஒத்திருந்தது, எங்கேயோ பார்த்துக் கொண்டு அவன் கேட்ட இந்தக் கேள்வி முதலில் ஒரு விதமான சந்தோஷத்தை ஏற்படுத்தியது, அப்பாடா நம்மை இவன் தவறாய் நினைக்கவில்லையென நினைத்தவனாய்,
"பேரெங்கேயோ கேட்ட மாதிரிதான் இருக்கு ஆனாத் தெரியலை."
அதைக் கேட்ட அவன் முகத்தில் நக்கலாய் ஒரு சிரிப்பு படர்ந்தது, அதைப் பார்த்த எனக்குச் சிறிது கோபமாய் வந்தது, ஆமாம் விடுதலைப்புலியில் எவனாவது ஒருவன் டாங்கில் பாய்ந்து உயிரை விட்டிருப்பான், அப்படியே இன்னும் பத்து இருபது பேரை பழிவாங்கியிருப்பான். அவனையெல்லாம் நான் தெரிந்திருக்கணும் என்று நினைப்பது முட்டாள்த்தனம். சொரூபனுக்கு வேண்டுமானால் தமிழ்த்தேசியத்தை உருவாக்க உயிர் துறந்தவன் தியாகியாகி இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை யாரோ சொன்னது போல், இராஜராஜனின், இராஜேந்திரனின் வெளிநாட்டு வெற்றிகளை பாராட்டினால், பின்னர் ஆங்கிலேயர்களின் நம்நாட்டின் மீதான வெற்றியை என்ன வென்று சொல்லமுடியும் என்று நினைப்பவனுக்கு அவன் எனக்குத் தெரியாததை கேலியாக நினைத்தது கோபமாக வந்தது.
"அண்ணை யாராவது தற்கொலை செய்து கொள்வதை கண்ணால் பார்த்திருக்கீங்களே?"
இதைக் கேட்டதும் எனக்கு இன்னமும் கோபம் வந்தது, யாராவது தற்கொலை செய்வதை பார்த்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா, தங்களால் முடியாவிட்டாலும் போலீஸைக் கொண்டாவது ஒரு மரணத்தை தடுக்க நினைக்க மாட்டார்கள். என்ன கேள்வியிது என நினைத்தேன்.
"நான் பார்த்திருக்கிறேன் அண்ணை, நான் பார்த்திருக்கிறேன், பன்னிரண்டு நாள் சொட்டுத் தண்ணீர் குடிக்காமல் திலீபன் வீரச்சாவடைந்ததைக் கண்ணால் பார்த்திருக்கேன்.
1987 அப்ப எனக்கு பத்து வயசிருக்கும், பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தவன். தமிழ் மக்களினதும், தமிழர் தாயக்தினதும் உரிமைகளைப் பேணும் நோக்கமாக, இந்திய மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து லெப் கேணல் தீலிபன் நல்லூர்க் கந்தசாமிக் கோயிலின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து பன்னிரெண்டு நாள் அன்ன ஆகாரமில்லாமல், செத்துப் போனதைப் பார்த்திருக்கிறேன்."
இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே சொரூபனின் கண்கள் கண்ணீர்க் குளமாவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ரொம்பவும் தைரியமானவன், எதற்கும் கவலைப்படாமல் விளக்கில்லாத இராத்திரி பெங்களூர்ச்சாலைகளில் தனியாளாக சைக்கிளில் அவன் வருவதைப் பார்த்திருக்கிறேன். அம்மாதான் அடிக்கடி சொல்லும், சின்னவயதிலேயே தாய் தந்தையை இழந்து வேறொரு நாட்டில் அநாதைகளாய் வாழ்ந்து வரும் அவர்களுக்கு அதற்கு மேலான சோகம் வருத்தம் வருவதற்குண்டான வாய்ப்புக்களே இல்லையென்று.
அவன் சொன்னான், பன்னிரெண்டு நாட்களும் கண்ணீருடன் மண்டபத்திற்கு சற்று தொலைவிலேயே நின்று கொண்டிருந்ததாகவும், முதல் நாளே பிரபாகரன் வந்து பார்த்துவிட்டுபோனதாகவும். முதல் நாள் கம்பீரமாய் இருந்த திலீபன் ஒவ்வொருநாளாக நொடிந்து கொண்டே வந்து பின்னர் சுயநினைவை இழந்த நிலையிலும் ஏற்கனவே மற்றவர்களிடம் கேட்டு வாங்கியிருந்த சத்தியத்தால் அவனுக்கு மருத்துவ உதவி வழங்க முடியாத இக்கட்டான சூழ்நிலையை தனக்குத்தானே உருவாக்கிக் கொண்டதாகவும் கூறினான். கடைசியாய் வாயைத்திறந்து பேசவே முடியாத சமயத்திலும் திலீபன் நிகழ்த்திய வீர உரையை நினைவுபடுத்தியவன், சிறிது நேரம் எதுவுமே பேசாமல் தரையையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏதோவொறு தற்கொலையைப் பற்றி பேசப்போன எனக்கு அவன் திலீபனைப்பற்றியும் உண்ணாவிரம் இருந்த அந்த பன்னிரெண்டு நாட்களைப் பற்றியும் விவரித்தது கொஞ்சம் ஆச்சர்யம் கலந்த உண்மையாய் இருந்தது. பத்து வயதில் நான் பட்டம் விட்ட, எனக்கும் அக்காவிற்கும் காதில் காதுகுத்திய கோவில் போன்ற இனிய நினைவுகளே இருக்கிறது. ஆனால் சொரூபன் சொன்ன விஷயம் நான் வாழ்க்கையில் எதையோ ஒன்றை இழந்துவிட்டதைப் போன்ற உணர்வை வெளிப்படுத்தியது.
கடைசிவரை திலீபனின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென்றும் அதற்கும் மேலாக, "புலிகள் தந்திரமாக மக்கள் மனதை மாற்றுவதற்காக உண்ணாவிரம் என்ற பெயரில் தண்ணியைக் குடிச்சுக் கொண்டுதான் இருப்பார்கள். ஆர் இதைக் காணப்போகினம்? கடைசியில் 5 தீர்மானங்களும் நிறைவேறுமட்டும் செய்து ஆளைச் சாகவிடமாட்டினம். இதுதான் சாகும்வரை நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பதன் உண்மை" என்பதைப் போன்ற பொய்யான விஷயங்கள் கூட பரப்பப்பட்டது எனச் சொன்ன பொழுது.
நான் அவன் இந்த சம்பவத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, நான் நினைத்த திலீபனைச் சாகவிட்டிருக்கக்கூடாது, ஏதாவது செய்து காப்பாற்றியிருக்க வேண்டும் என நினைத்தது எவ்வளவு தவறென்றுபட்டது. அதே சமயம் அன்று திலீபன் உண்ணாவிரதத்தில் வீரச்சாவடைந்ததை நான் சரியென்று ஒப்புக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப் பட்டதை நினைத்தேன்.
எனக்கு ஆரம்பத்தில் இருந்தே காந்தியைப் பிடிக்காது, சுதந்திர இந்தியாவின் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தவர் அந்த ஆள்தான் என்று படித்த ஞாபகம். ஏதோவொரு போராட்டத்திற்காக இந்தியா சுதந்திரம் ஆன அன்றே கொடிபிடித்ததாய் படித்திருக்கிறேன். அம்மாவும் அக்காவும் தான் இல்லையென்று வாதாடுவார்கள். அவர்கள் சத்தியசோதனைப் புத்திரிகள், சுதந்திரம் கிடைத்ததும் காங்கிரஸைக் கலைத்துவிடச் சொல்லி காந்தி சொன்னதாகவும் அதை நேரு, வல்லபாய் பட்டேல் மறுத்துவிட்டதாகவும் சொல்லி, வாதாடுவார்கள்.
எனக்கு உண்ணாவிரத்திலும் நம்பிக்கையில்லை, ஆயுதப்போராட்டத்திலும் நம்பிக்கையில்லை, இவற்றிற்கு இடையில் நடுநிலையை தேடிக்கொண்டிருக்கிறேன். அவற்றிற்கு இடையில் இல்லாமல் போய்விட்ட நடுநிலைமையைக் கூட சில தடவைகளில் நான் தவறிவிடுவதை உணர்ந்திருக்கிறேன். செகுவாரா விஷயத்தில் ஆயுதப் போராட்டத்தை என் ஒப்புக்கொள்வதை உணர்ந்த எனக்கு திலீபன் விஷயத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருப்பது ஒருவகையில் சந்தோஷம்தான்.
மரணம் என்பது எப்பொழுதுமே மனிதனின் கைக்கு அகப்படாத ஒன்றாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். எல்லா சமயங்களிலும் வருத்தத்தையும் சோகத்தையுமே உண்டாக்குவதில்லை. சிலசமயம் சந்தோஷத்தையும் கூட வரவழைப்பதுண்டு. ஒருவருக்கு சந்தோஷமாய்ப் படும் சாவு பிறருக்கு வருத்தம் அழிப்பதும் உண்டு. அதனை நினைத்து பயப்படுபவர் எத்தனை பேர். வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே இறந்து போகிறவர்கள் எத்தனை பேர். மரணம் தான் தங்கள் கொண்டிருக்கும் கொள்கைக்கு பரிசு என்றால் அதை சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொள்ளும், அதையும் வென்று இறுமாப்புடன் அனேக நெஞ்சங்களில் உயிர்வாழும் திலீபன், போன்ற சில நல்ல உள்ளங்கள் தற்கொலை, மரணம் என்பவைகளுக்கு வேறு சில அர்த்தங்களை உருவாக்கிவிடுகிறார்கள்.
தற்கொலை என அந்த நிகழ்ச்சியைச் சொல்லவது பாவம் எனத்தோன்றியது எனக்கு, வரவர நானும் சொரூபனைப் போல் ஒரு நிகழ்ச்சியை உணர்வுப்பூர்வமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டேனோ என நினைத்தேன். தூரத்தில் அன்பரசுவுடன் திரும்பிவரும் மாமாவை, அவன் கொண்டு வரும் தற்கொலைக்கான காரணங்களை முடிந்தவரை அன்றைக்காவதுச் சந்திக்காமல் இருக்க நான் வெளியில் கிளம்பினேன். என் மனதைப்போலவே வானமும் வெறிச்சோடிக்கிடந்தது.
-------------------------------------
ப்ளாக் எழுதாமல் கை அரித்தெல்லாம் நான் இதையெழுதவில்லையென்பதை மட்டும் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் இளவஞ்சி வழங்கப்போகும் தலைப்பென்பதாலேயே கூட யோசித்தேன் கொஞ்சம் விட்டு விரதத்தை ஆரம்பிக்கலாமாயென்று. பின்னர் என்ன நினைவோ விட்டுவிட்டேன்.
மீண்டும் தலைப்பை ஒட்டியே ஒரே பாணியில் சென்று கொண்டிருந்த கதைகளை படித்திருந்தேன், வளர்சிதை மாற்றத்திற்கு கூட ஒரு சோகக்கதையை எழுதி பின்னர் வெளிப்படுத்தும் மனநிலையில்லாமல் விட்டுவிட்டேன்.
எனக்காகத்தான் கொள்கைகள் கொள்கைகளுக்காக நான் கிடையாது என்பதை இன்னுமொறு முறை அழுத்தந்திருத்தமாக சொல்லிவிட்டு எனக்கான கொள்கைகளைக் கூட விடுவதில்லை என்பதில் உறுதியாய் இருப்பதால் இந்தக் கதை போட்டிக்கு இல்லை.
ஏற்கனவே எழுப்பப்பட்ட சொரூபன், சந்திரா, நான் மாமா போன்ற கதாப்பாத்திரங்களின் உதவியால் இன்னுமொறு தமிழீழக் கதை சொல்ல முயன்றிருக்கிறேன். திலீபனுக்காக என்னுடைய விரதத்தை கலைப்பதில் கூட பெருமிதமே. இதை ஒரு அரிய வாய்ப்பாக எடுத்துக்கொண்டு தமிழீழ மக்களை இந்த தலைப்பில் கதையெழுதுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
அஹிம்சாவாதத்தில் நம்பிக்கை வைத்திருந்த அந்த மாமனிதனுக்கும் அவனுடைய தலைவனுக்கும் சமர்ப்பணம்.
----------------------------------------------
மறுபதிப்பு
மரணம்
பூனைக்குட்டி
Thursday, April 19, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனா...
-
மதுமிதா இறந்துவிட்டாள் என்ற செய்தியை என்னால் சிறிதும் நம்பமுடியவில்லை, நான் சிறிது சிறிதாக மயக்கமாகிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. o அந...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
0 comments:
Post a Comment