In சினிமா சினிமா விமர்சனம்

Baran

டிசெவின் Baran பற்றிய பதிவைப் படித்ததுமே சொல்லிவைத்திருந்தேன் இந்தப் படத்திற்காக; எடுத்துச் சென்றிருந்த புண்ணியவான் திருப்பிக் கொடுத்த நாளில் சென்றிருந்ததால் சொல்லப்போனால் சீக்கிரமாகவே கிடைத்தது.

கண்களை உறுத்தாத ஒரு காதல் கதை சொல்லப்பட்டிருக்கிறது,Marooned in Iraqக்கைப் போலவே ஒரு பிரிவினரின் வாழ்வாதாரப் பிரச்சனையைச் சொல்ல ஒரு காதல் தேவைப்பட்டிருக்கிறது. ஆப்கான் அகதிகள்(பொதுவாகவே அகதிகள்) வாழ்க்கை, ஈரானில்(பொதுவாக உலகில்) எப்படியிருக்கிறது என்பதைச் சொல்கிறது படம். பெரும்பாலும் ஏதோவொரு காரணத்திற்காக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு அகதியாய் செல்பவர்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.

பல சமயங்களில் நாம் எவ்வளவு சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பொட்டில் அறைவதைப் போன்ற கேள்வி இது போன்ற படங்களைப் பார்க்கும் பொழுது இயல்பாய் எழுகிறது.

அடுக்குமாடிக் கட்டிடம் கட்டும் தொழிலாளர்களுக்கு தேநீர் போட்டுக் கொடுக்கும்; அவர்களுக்காக சிறுசிறு சமையல் சார்ந்த வேலைகள் செய்யும் லத்தீப். குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு வருகிறார்கள் என்பதற்காக அரசாங்கம் அனுமதி மறுத்திருந்தும், ஆப்கானியர்களை வேலைக்கு வைத்திருக்கும் மெமர். தந்தை வேலைசெய்யும் பொழுது கீழே விழுந்ததால் வேறுவழியில்லாமல் ஆண்வேடமிட்டு கட்டிட வேலை செய்யவரும்வரும் பரான்(இவர் ஆண்வேடமிட்டிருக்கும் பொழுது இவர் பெயர் ரஹ்மத்) என இவர்கள் மூவரை மையமாக வைத்தே இந்தப் படம் சுழல்கிறது.



லத்தீப் கொஞ்சம் சாமர்த்தியக்காரனாக, காசு சேர்ப்பதில் குறியானவனாக இருக்கிறான். அந்த கட்டிடம் கட்டும் இடத்திலேயே மிகவும் சுலபமான வேலையான தேநீர் போட்டுத்தந்து மதிய உணவு சமைத்துத் தரும் வேலை செய்து சொகுசாக இருக்கும் லத்தீப்பிற்கு, புதிதாக வேலைக்குச் சேர்ந்த ரஹ்மத்திற்கு கட்டிட வேலை செய்யும் அளவிற்கு வளு இல்லாததால் லத்தீப் செய்து வரும் சமையற்கட்டு வேலை கொடுக்கப்படுவது முற்றிலும் பிடிக்கவில்லை. (யாருப்பா அது ஆணியவாதி வந்துட்டான்னு சொல்றது - வளு குறைந்தவர் சமையல் செய்யவேண்டும் என்று நான் சொல்லவில்லை; அதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.) அதுவரை டிரனேஜ் வாட்டர் போல் டீ சாப்பிட்டுவந்த கட்டிடத் தொழிலாளர்கள், உண்மையில் பெண்ணான ரஹ்மத் போடும் பிரமாதமான தேநீராலும், மதிய உணவாலும் கவரப்படுகிறார்கள்.

ஏற்கனவே தன்னுடைய சுலபமான வேலையைப் பறித்துவிட்டான் என்று கோபத்தில் இருந்த லத்தீப் மற்ற தொழிலாளிகளின் பாராட்டிற்குப் பிறகு இன்னமும் கோபப்படுகிறான். இதன் காரணமாக ரஹ்மத்தை சின்ன சின்ன வழிகளில் வம்பிழுப்பது என போகும் படத்தில், பின்னர் ரஹ்மத் ஒரு பெண் என லத்தீப் தெரிந்துகொண்ட பிறகு வரும் பகுதிகள் காதல் கவிதைகள். ஒவ்வொரு முறையும் அவளுக்காக பரிந்து கொண்டு வருவது, பரான்-ஐ பார்ப்பதற்கு முன் புறாக்களை கல்லால் அடிப்பதையும் பின்னர், பரான் புறாக்களுக்கு மீந்து போன அப்பளங்களைப் போடுவதைப் பார்த்தபின் அந்தப் பெண் வராத நாள் ஒன்றில் இவர் போடுவதும் என சிறுவயது மக்களின் மனதை நன்றாகப் படம்பிடித்திருக்கிறார் இயக்குநர்.

இடையில் நடக்கும் ஒரு பிரச்சனையில், ஆப்கன் அகதிகளை கட்டிட வேலைக்கு வைத்துக்கொள்ளமுடியாத ஒரு சூழ்நிலை வந்துவிடுகிறது. அதனால் பரான் வேலைக்கு வருவது நின்றுவிடுகிறது. இதன் காரணமாக லத்தீப், பரானைத் தேடி அலைகிறார். ஆப்கான் அகதிகள் வாழும் பகுதிகளையெல்லாம் தேடி ஒரு வழியாக கண்டும் பிடிக்கிறார். அவர்கள் குடும்பம் கஷ்டப்படாமல் இருப்பதற்காக நிறைய பண உதவிகளையும் செய்ய முயற்சிக்கிறார் ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான தோல்வியில் சென்று முடிவடைகிறது. கடைசியில் பரான் -ன் குடும்பத்தினர் திரும்பவும் ஆப்கானிஸ்தான் செல்வதற்காக தன்னிடம் இருக்கும் கடைசி விஷயமான வேலை செய்ய அனுமதிப்பதற்கான அடையாள அட்டையை விற்று பணம் கொடுக்கிறார்.



கடைசி காட்சி இன்னமும் மனதிலேயே நிற்கிறது, இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை கண்களாலேயே பகிர்ந்து கொள்வதை. கவிதைத்துவமான படம்.

--------------------------------

சிம்பாலிக்காக நிறைய விஷயங்களைச் சொல்கிறார் இயக்குநர், கோல்ட் பிஷ் கொண்ட மீன் தொட்டியைக் காண்பிப்பது. பரானின் அர்த்தமான மழையை இருவரும் பிரியும் பொழுது இடையில் கொண்டுவருவது என சொல்லிக் கொண்டே போகலாம்.

படம் அடுக்கு மாடிக் கட்டிடத்திற்குள் உலவும் பொழுதும் சரி, அதை விட்டு வெளியில் வரும் சமயத்திலும் சரி ஒளிப்பதிவு இயல்பாக உள்ளது, கண்களை உறுத்தவில்லை. எதையும் நம்மீது திணிக்கிறார்கள் என்ற எண்ணமே வராதது தான் என்னைப் பொறுத்தவரை இந்தப் படத்தின் வெற்றி என்பேன்.

Related Articles

1 comments:

  1. அதிரை தங்க செல்வராஜன் கூறுகிறார்:
    மே 16, 2008 இல் 11:38 நான் e

    மூன்று வருடங்களாய் ஈரானில் குப்பை கொட்டிக் கொண்டிருப்பதால்
    ( சே, இதான் வேலையா? ) சினிமா தவிர்த்த ஈரானின் இயல்பை
    பதியலாம் என நினைக்கிறேன்.

    ஈரானிய இஸ்லாம் சமூகம், தொலைக்காட்சிகளில் காண்பது போல்
    அத்துனை வக்கிரம் நிறைந்ததல்ல. சாதரண மக்கள் மிக சிநேகமானவர்கள்.

    எண்ணெய், இயற்கை எரிவாயு, தண்ணீர், மற்றும் எல்லா இயற்கை
    வளங்களும் இருந்தும் பண மதிப்பு இல்லாத நாடு.

    மக்களின் தொடர்பு மொழி ஆங்கிலமாக இல்லாததால் எல்லோருக்கும்
    தாழ்வு மனப்பான்மை கொடி கட்டி பறக்கிறது.

    அமெரிக்காவை வெறுப்பதாக சொல்லிக்கொண்டு, அதன் நாகரீகத்துக்குள்
    குதிப்பதற்கு எல்லா சாதாரண மக்களும் தயாராக உள்ளனர்.

    சவூதி அரேபியாவை போல் எல்லாவற்றிர்கும் தடை, ஆனால் குஜராத்தில் மது கிடைப்பது போல் இங்கு எல்லாம் கிடைக்கும்.

    பெண் புகைக்கலாம், பியர் குடிக்கலாம் ஆனால் தலையின் சிறு
    பாகமாவது துணியால் மூடப்பட்டிருக்க வேண்டும்.

    நிறைய எழுதலாம் நீங்கள் படிக்க ஓகே என்றால்.

    அன்புடன்
    அதிரை தங்க செல்வராஜன்
    (Copied from http://kundavai.wordpress.com/2008/05/14/baran/#comment-2460 for reference)

    ReplyDelete

Popular Posts