In சினிமா சினிமா விமர்சனம்

Blackboard

இந்தப் படம் எனக்குக் கிடைத்தது ஒரு தற்செயலான நிகழ்வு. நான் சினிமா பாரடைசியோவில் Baran படத்தையும், Turtles Can Fly படத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கே வேலை செய்யும் நபர் Blackboard பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார். நான் இல்லை என்றதும் எடுத்துக்கொடுத்தவர். எக்ஸ்ட்ராஸில் அந்தப் படம் எடுத்ததைப் பற்றி சமீரா கென்னஸ் படவிழாவில் சொல்வார், நிச்சயமாய்ப் பாருங்கள் நன்றாகயிருக்கும் என்றார்.

ஒரு சில படங்கள் தான் இந்தப் படத்தை எப்படி எடுத்திருப்பார்கள் என்று ஆச்சர்யப்படவைக்கும், அந்த வரிசையில் நிச்சயமாய் சேர்க்கக்கூடிய ஒரு படம் ப்ளாக்போர்ட். படம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது எனக்கு இந்த எண்ணம் எழத் தொடங்கியது, அதாவது ஒரு டாக்குமென்ட்டரியைப் பார்ப்பதைப் போன்ற ஒரு உணர்வு வரும். இது முன்னர் வந்தது Battle of Algiris பார்த்த பொழுது அந்தப் படம் பார்க்கும் பொழுது ஒரு படம் பார்க்கும் உணர்வே வராது. அதைப் போலவே இந்தப் படமும்.



கடைசியில் நண்பர் சொன்ன கென்னஸ் படவிழா பேட்டியைப் பார்த்த பொழுதுதான் தெரிந்தது எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் படத்தை சமீரா இயக்கியிருந்தார் என்பது. இந்தப் படத்தை இயக்கும் பொழுது அவருக்கு வெறும் இருபது வயது தான், பெண்களுக்கு அவ்வளவாக சுதந்திரம் இல்லாத ஈரான் நாட்டுப் பெண்ணாகயிருந்தாலும், அப்பாவும் அம்மாவும் இயக்குநர்களாக இருந்ததால் இது சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் அவருடைய திறமை மறுப்பதற்கில்லை நிச்சயமாய்.

அகதிகளின் வாழ்க்கை, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை, அதன் காரணமாக ஏற்படும் கல்வியறிவின்மை, கெமிக்கல் ஆயுதங்களை பயன்படுத்துவதால் வரும் பிரச்சனைகள் என்று தீவிரமான பிரச்சனைகளைப் பற்றிய படம், என்றாலும் அரசியல் கிடையாது ஈரான் ஏன் அப்படி செய்தது, ஈராக் ஏன் அப்படி செய்தது என்ற தனிநபர்களின் விளக்கங்கள் கிடையாது. எல்லா விஷயங்களும் Subtle ஆக ஒரு சாதாரண கதைக்குள் மறைத்து வைக்கப் பட்டு சொல்லப் படுகிறது.

---------------------------------------------

படம் இரண்டு ஆசிரியர்கள் ஈரானின் எல்லைப் பகுதியில் உள்ள குர்தீஸ்தான் மலைப் பகுதிகளில் பாடம் சொல்லித் தந்து பணம் பெறுவதற்காக, பிள்ளைகளைத் தேடி கரும்பலைகையுடன் பயணமாவதில் தொடங்குகிறது. பள்ளிக்கூடங்களை நோக்கி மாணவர்கள் செல்லும் வழக்கத்தையே பெரும்பாலும் பார்த்த நமக்கு(எனக்கு) ஆசிரியர்கள் பிள்ளைகளைத் தேடி பயணம் ஆவதில் தொடங்குகிறது படத்தின் ஆச்சர்யங்கள்.

இரண்டு ஆசிரியர்கள் மலைமுகடுகளின் இரண்டு பக்கங்களில் பயணப்பட, கதையும் இரண்டு தனித்தனி கதைகளை தன்னகத்தே கொண்டு பயணப்படத் தொடங்குகிறது. இரண்டு ஆசிரியர்களுக்குமே பாடம் சொல்லிக்கொடுத்து பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம். அவர்கள் பயணப்படும் அந்த மலைப்பாதை ஈரான் ஈராக் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருப்பது.

இதில் ஒரு ஆசிரியருக்கு ஈரானிலிருக்கும் ஈராக்கிய அகதிகள், முதியவர்கள், தங்களது மரணம் ஈராக்கில் தான் நடக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் கிடைக்கிறார்கள். அதாவது அந்த முதியவர்கள் ஈரானிலிருந்து கள்ளத்தனமாய் ஈராக்கிற்கு செல்ல முயல்கிறார்கள். இவர்களைப் பின்பற்றி செல்லும் ஒரு ஆசிரியர். இன்னொருவருக்கு அதே போல் ஈரானிலிருந்து ஈராக்கிற்கு பொருட்களைக் கடத்திச் செல்லும் சிறுவர்கள் கிடைக்கிறார்கள்.

இப்படியாக இருவேறு ஆசிரியர்களாக, இருவேறு குழுக்களாக கிளம்பும் ஒட்டுமொத்தமானவர்களின் விருப்பம் ஈரானிலிருந்து ஈராக்கிற்கு செல்வது. பனிப்பொழிவு நடக்கும் சமயம் அவ்வப்போது விமானங்களில் ரோந்தும் நடக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்பது மாதிரியான மலைத் தொடர்ச்சி. இப்படியே போகிறது படம். அந்தப் பகுதிகளில் வாழும் சிறுவர்களுக்கும் சரி, வயதானவர்களுக்கும் சரி கல்வி என்பது ஒரு விஷயமாகவேயில்லை என்பதை இயக்குநர் மிக அழகாக படம் பிடிக்கிறார்.

இரண்டு ஆசிரியர்களும் பாடம் சொல்லித் தருகிறேன் நீங்கள் காசு கூட கொடுக்க வேண்டாம் சாப்பிட ஏதாவது கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வந்தாலும் அவர்கள் சாப்பிடவே ஒன்றும் இல்லாத நிலையில், ஆசிரியர்களுக்கு சாப்பிடக் கொடுத்து படிக்கவேண்டிய நிலை இல்லை.

----------------------------------

இடையில் ஒரு ஆசிரியர் முதியவர்களுடன் பயணமாகும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார் அப்படியே விவாகரத்தும். அந்தப் பெண் திருமணம் செய்து கொள்ளும் காட்சியும் விவாகரத்து செய்து கொள்ளும் காட்சியும் பார்க்கும் நமக்கு வேடிக்கையாய் இருக்கிறது. ஆனால் அந்த நபர்களின் வாழ்க்கை அப்படிப்பட்டதுதான் என நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கிறது.

பொருட்களைக் கடத்தும் சிறுவர்கள் எல்லையைக் கடக்கும் பொழுது சுட்டுக்கொல்லப்படுகிறார்கள், முதியவர்கள் எல்லையைக் கடந்து ஈராக்கிற்குள் செல்கிறார்கள். அப்பொழுது அந்த நபர்களால் தங்களுடைய எல்லை இதுதான் என்று தெரிந்துகொள்ள முடியாத அளவிற்கு குண்டுவீச்சால் எல்லை சிதிலமடைந்திருக்கிறது. முதியவர்கள் எல்லையைத் தொட்டதும் விழுந்து வணங்குவது போன்றவை அவர்கள் சொந்த நாட்டின் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்று காட்டுகிறது. அவர்கள் அகதியாக வந்திறங்கிய நாட்டில் எவ்வளவுதான் வசதிவாய்ப்புக்கள் இருந்தாலும் சொந்தநாட்டிற்கு திரும்புவதையே விரும்புகிறார்கள் என்பதை படம் அழகாக படம் பிடிக்கிறது.

எல்லைப் படையினர் துப்பாக்கியால் சுடும் பொழுது, இவர்கள் கெமிக்கல் குண்டு வீசுகிறார்கள் என்று பயந்து நடுங்குவது, அந்த பிராந்தியமே கெமிக்கல் குண்டு வீச்சால் நேரடியாகப் பாதிக்கப்படாவிட்டாலும் மனதளவில் பாதிக்கப்பட்டதைக் காட்டுகிறது.






-------------------------------------

உண்மையில் இந்தப் படம் முடிவடையும் பொழுது ஒரு பக்கம் சந்தோஷத்தையும் ஒரு பக்கம் துக்கத்தையும் ஏற்படுத்துகிறது, இதைத்தான் இயக்குநர் சொல்ல விரும்பியிருக்க வேண்டும். 'டைஸ்' போல ஒரு ரேண்டமாக எந்தப் பக்கம் சந்தோசம் வரும், இல்லை துக்கம் வரும், எனத் தெரியாமல் ஆனால் அதேசமயத்தில் அவர்களுடைய வாழ்க்கையை வாழ்ந்தாகவேண்டிய கட்டாயத்தில் இந்த மக்கள் இருப்பதை சொல்லியிருக்கிறார்.

நடித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ப்ரொபஷ்னல் நடிகர்கள் கிடையாது, அவர்களிடம் வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர். நீங்களும் படம் பார்த்தீர்களென்றால் எக்ஸ்ட்ராஸில் உள்ள படம் எடுத்த விதத்தை பார்க்கவும்.

நிச்சயமாய்ப் பார்க்கப்படவேண்டிய ஒரு அருமையான படம் இந்த Blackboard.

Related Articles

1 comments:

  1. நல்லாயிருக்கு விமர்சனம்.

    யாரு அந்த அம்மா? நல்லா சிரிக்குது

    ReplyDelete

Popular Posts