இம்மாதம் 18 ஆம் தேதி இரவு பதினோரு மணியளவில், நகுலன் எனும், அற்புத, அதிசய, அபூர்வ, குண நலம் கொண்ட தமிழ் எழுத்தாளன். திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். 85 வயதில் இடையே ஏறத்தாழ ஒரு பத்தாண்டு காலம். அவர் இந்த நிஷ உலகில் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். திட நினைவில்லாத தடுமாற்ற உணர்வு நிலை. ‘‘நீங்கள் தானே மாதவன்? நான் நாஞ்சில் நாடனுடன்தான் பேசிக் கொண்டிருந்ததாக நினைத்தேன்... சுந்தரராமசாமி இப்பொழுதெல்லாம் வருவதே இல்லை... பார்த்து நாளாயிற்று...’’ இப்படியாக
கவிதா சண்முக சுப்பையா, நீல.பத்மநாபன், இருவரும் இங்கே அவருக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்திலுள்ளவர்கள். இதில் அவருக்கு நெருக்கமான சுப்பையா காலமாகிவிட்டார். மரணம் பற்றி, திருமணம் பற்றி, இல்லறம் பற்றி, தாயன்பு பற்றி, சகோதர பந்தங்கள் பற்றியெல்லாம், அதீதமான அழுத்தமான, அற்புதமான தத்துவ தீர்மானங்களை வகுத்திருந்தார், இந்த பிரம்மசாரி!
தமிழில் கவிதைகள் எழுதினார். ஆங்கிலத்திலும் அந்த அளவில் வீச்சோடு தீட்சணமாக கவிதை நூற்கள் படைத்த இவர், கதைகளிலும் நாவல்களிலும்தான் பெரும்பான்மை பெற்றிருந்தார் எனலாம். க.நா.சு., கு.ப.ராஷகோபாலன், ந. முத்துசாமி என்றெல்லாம் பழகிய வட்டமும், சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன் என்றிவ்வாறு நட்பு தொடர்பும் பெற்றிருந்தாலும் யாரையும் முன் மாதிரியாகவோ, ஏற்றி வைத்து ஒப்புக் காட்டவோ செய்யாத பண்பு நலம் நகுலனுடையது!
‘நினைவுப்பாதை’ தொட்டு ஆறேழு முழு நாவல்களும், ‘கோட்ஸ்டாண்டு கவிதைகள்’ என்ற வேறு நான்கு கவிதைத் தொகுதிகளுமாக தமிழுக்கு படையல் தந்துள்ள நகுலன், தமிழின் பெரும்பான்மை வாசகர்கள் அறியாத தத்துவமுறுக்கின் பிரம்மஞானி. பெரிய எழுத்துச் சிற்பிகளின் தலைமை பீடக்காரர். தேர்ந்த விமர்சகர் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நுட்பமான வாசிப்புச் செறிவு கொண்டவர். நான் எனது ‘கிருஷ்ணப்பருந்து’ நாவலை முன்னுரைக்காக அவர் முன் வைத்தபோது_ எழுதிய நானே அறியாத ஒருவித நீரோட்ட உணர்வைச் சுட்டிக் காட்டி எனது பலத்தையும் பலவீனத்தையும் பகுத்துக் காட்டி... ‘அஹ்ஹா...’ என்று, அவருக்கே உரித்தான அந்த ‘மாஸ்டர் பீஸ்’ சிரிப்பைக் காணிக்கை ஆக்கினார்.
கதைகள் வடித்திடும் அவரது விதேக விசித்திரங்களில், சுசீலா, நவீனன், கேசவமாதவன், எஸ்.நாயர் போன்ற ‘கோட்டுப் பாத்திரங்கள்’ அதிகமாக உலவினர். அனேகமாக, அவரது படைப்புகள், சுய சிந்தனைகளின் திரட்சிப் பாதை வழியாகவே பயணம் செய்தன. இந்த வறட்சி, ‘பைங்கிளி’ கதை பழகிய தமிழ் வாசகனுக்கு எட்டாத, புரியாத அறியாமையாகப்பட்டது.
இனி அவரது விசித்திரமான கதைத் தலைப்போடு (ஒரு ராத்தல் இறைச்சு.) ஆரம்பமாகும் ஒரு கதையின் துவக்கம், அவரது உண்மை உலகைக் காட்டுவதாக, தத்ரூபமாக அமைந்திருப்பதைப் பார்ப்போம்: ‘‘என் பெயர் நவீனன். சென்ற 25 வருஷங்களாக எழுதி வருகிறேன். நான் எழுதியது ஒன்றாவது பிரசுரமாகவில்லை. அப்படிச் சொல்வதுகூட பிசகு. சுமார் 15 கதை, குறுநாவல், கவிதை, பிரசுரமாகியிருக்கும். இவற்றில் 13க்கு ஒரு வித சன்மானமும் கிடைக்கவில்லை. 14ஆவது கதைக்கு வந்த செக்கை கமிஷன் கழித்து கையில் கிடைத்தது 4ரூ.25.பைசா... நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவர் பெயர் சுசீலா. அவளுக்குக் கல்யாணம் நடந்தது. இப்பொழுது அவள் என் தாயார். இதை நினைக்கும் பொழுதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இருந்தாலும் கல்யாணம் நடைபெறுவதும் குழந்தை பெறுவதும் சர்வசாதாரண நிகழ்ச்சிகள் என்பதும் எனக்குத் தெரியாததில்லை... நான் கடந்த ஐந்து வருஷமாக ஒரு நாய் வளர்த்து வந்தேன். அது ஒரு நாட்டு நாய். மங்கின செங்கல் வர்ணம். வளையாத காதுகள், குள்ளமும் இல்லை உயரமுமில்லை. நல்ல முரட்டுத் தேகம். அதற்கு நான் ராஜி என்று பெயர் வைத்திருந்தேன். அதற்கு இப்பொழுது வயோதிகம் தட்டி விட்டது. இருந்தாலும், அது என்னிடம் அன்பாக இருந்தது. சில நாட்கள் நான் அதனுடன் பேசுவேன்...’’ ...நகுலனின் ஒட்டுமொத்தமான அவரே குறிப்பிடுவது போல பத்துப் பதினைந்து படைப்புகளின் உள்படிமான உணர்த்தல்களுக்கு எடுத்துக் காட்டு .... இவை. நகுலன், உரக்க மந்திர உச்சாடனம் செய்யாத வால்மீகம் மூடி வளர்ந்த தத்துவஞானி. வாய்வீரம் பேசாத வாள் வீச்சுக்காரன். மணம் உள்பொதிந்த விடிகாலையின் பாதிவிரிந்த மலர். அவரது அந்தரங்கமே அவரது கவிதைகள், கதைகள், நிஜவாழ்வின் ஈரவிறகுகள் போன்ற குமைவுகளை படிமங்களாகக் கொண்டு அவர் இலக்கியம் படைத்தார்.
‘இன்னார் போல் அவர்...’ என்று எடுத்துக் காட்டிட முடியாத அந்தத் தத்துவப் பேழை. இங்கே 85 ஆவது வயதின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்து மலையாள மயானத்தில் அடங்கிப் போய் விட்டது. வருங்கால அறிவு உலகம் நகுலனின் உத்வேக உணர்வுகளை மனதிலேற்றிக் கொண்டால், தமிழ் இலக்கிய உலகம் விழிப்பில் பார்வைத் தெளிவு கொள்ளும் என்பது உண்மை! றீ
சீரிய இலக்கியச் சூழலில் ‘எழுத்தாளர்களின் எழுத்தாளர்’ என்று சிறப்பிக்கப்பட்டவர் நகுலன்.இந்த அடைமொழி ஒரு தேய்ந்த சொற்சேர்க்கை (க்ளீஷே). எனினும் இது நகுலனுக்குப் பொருந்திப் போவது ஒரேசமயத்தில் இயல்பானதாகவும் முரண்பாடானதாகவும் படுகிறது. பொதுவான வாசிப்புத்தளத்தில் நகுலனுக்கு வாசகர்கள் அதிகமில்லை.சீரிய எழுத்தில் ஆர்வம் கொண்டவர்களே அவரது வாசகர்கள்.
அவர்களே நகுலனை அப்படிக் கருதுகிறார்கள்; அல்லது அப்படிக் கருதுவதற்கான சூழலை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த அர்த்தத்தில் முன் சொன்ன அடைமொழி நகுலனுக்கு இயல்பாகப் பொருந்துகிறது. தமிழில் இன்றுள்ள பிற எந்த எழுத்தாளரையும் விட அதிகமாகப் போற்றப்படுபவர் அவர்தான். எண்பதுகளுக்குப் பின் வந்த இளம் இலக்கியவாதிகளிடையே அவர்தான் அதிக செல்வாக்குச் செலுத்தியுள்ள எழுத்தாளர்.நகுலனின் படைப்புகளால் தூண்டப்பெற்றவர்களை விட, இலக்கிய உலகில் உருவாகியிருந்த படிமத்தைச் சார்ந்து அவர்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அதிகம் என்று தோன்றுகிறது.படைப்பு, வாழ்க்கை இரண்டுக்கும் அதிக வேற்றுமையில்லாத எழுத்தாளர் என்ற உண்மையும் நகுலனை ஓர் ஆராதனைப் பாத்திரமாக்கியிருக்கிறது.தீவிர இலக்கிய வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பும் ஓர் ஆர்வலனுக்கு அவர் முன்னுதாரணமாகத் தென்பட்டது இயல்பானது. அதே சமயம் நகுலனின் எழுத்தும் வாழ்க்கையும் பின் தொடர அரிதானவை என்பதால், இந்த மனநிலை முரண்பாடானதாகவும் தோன்றுகிறது. நகுலன் கல்லூரி ஆசிரியராக ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியிருக்கிறார்.அதை விடவும் கூடுதலான ஆண்டுகளாக எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார். இந்த இரண்டு செயல்பாடுகள்தாம் அவரது வாழ்க்கையை உருவாக்கியிருக்கின்றன. மொழியையும் இலக்கியங்களையும் பயிற்றுவிக்கும் ஆசிரியர் என்ற நிலையில் அவரது வாழ்வனுபவங்கள் அனைத்தும் இலக்கியம் சார்ந்தவையாகவே இருந்திருக்கின்றன. இலக்கியம் சார்ந்து உருவான நட்புகள்,பாதிப்புகள்,செல்வாக்குகள்,ஆற்றாமை இவைதாம் அவரது வாழ்வின் அனுபவங்கள். இந்த அர்த்தத்தில் நகுலன் உருவாக்கியது அவருக்கு மட்டுமேயான உலகம். அவரது அனுபவங்கள் புற உலகின் தாக்கமில்லாதவை. எனவே வெளியில் விரிவதற்குப் பதிலாக உள் நோக்கி ஆழமாகச் செல்லும் குணம் கொண்டது அவர் உலகம். மனதின் தோற்றங்களுக்கு இசைய அந்த உலகம் வடிவம் கொள்ளுகிறது. தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் இப்படி ஓர் உலகை உருவாக்கிக் கொண்டவர் அவர் மட்டுமே. நகுலனை அணுகும் வாசகனுக்கு அவரது படைப்புலகம் வியப்பூட்டக் கூடியதாகவும் அமைகிறது. பூடகங்களும் மௌனங்களும் நிறைந்து தீவிர மனநிலை கொண்டதாகத் தோன்றுகிறது. உண்மையில் நகுலனின் படைப்பு மனநிலை தீவிரமானது. சிக்கலானது. மறைமுகமான அர்த்தங்கள் கொண்டது. நடப்புக்கும் கனவுக்கும் வேறுபாடில்லாத படைப்பு நிலையே அதன் மையம். இந்த இயல்பு அவரது தனி வாழ்க்கையிலிருந்து உருவானது. ஒரு நேர்காணலில் அவர் திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்யவில்லையா? என்று கேட்கப்பட்டிருந்தது.அதற்கான வயதில் பெண் பார்க்கப் போனதையும் கல்லூரி விரிவுரையாளர் பணியிலிருப்பவருக்கு சம்பந்தம் பேச விருப்பமில்லை என்று பெண்வீட்டார் மறுத்ததையும் குறிப்பிடுகிறார். சாதாரணமான ஒருவரிடம் இந்த சம்பவம் லௌகீகமான சலனங்களை உருவாக்கும். நகுலனிடம் இது வாழ்வையே நிர்ணயிக்கும் முடிவுக்கு வந்து நின்றிருக்கிறது. அது அவருடைய படைப்பின் கூறாகிறது. சுசீலா என்ற நிரந்தரமான பிரதிபிம்பத்தை உருவாக்குகிறது. இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. புற வாழ்வின் நிகழ்ச்சிகள் எல்லாம் உளவியல் விசாரணைகளாக ஆவது நகுலன் படைப்புகளின் இன்னொரு அம்சம். வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டாலும் மனவுணர்வுகளின் உச்ச நிலைதான் அவரது படைப்பின் மையம். அவையும் சக மனிதர்களால் தொடர்ந்து ஏமாற்றப்படும் ஒருவனின் கழிவிரக்கமாகவும் ஏமாற்றப்பட்டாலும் நன்மையையட்டி இருக்க வேண்டும் என்ற தார்மீக இச்சை கொள்வதாகவும் இருக்கிறது. எல்லாரும் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து ஏமாற்றப்படுபவர்களாகவே பலரும் உணரும் வாழ்நிலையில் நகுலன் வாசகனுக்கு நெருக்கமானவராகிறார். அவரது உலகத்தில் விலகி நின்று பார்க்கும் இயல்புக்கு இடமில்லை. எனவே வாசகன் நகுலனிடமும் தன்னையே பார்க்கிறான். இந்த நோக்கில்தான் வாசகனுக்கு நகுலன் ஈர்ப்புக்குரியவராகிறார். இந்த ஈர்ப்பை நகுலன் தன் வாழ்வின் நடவடிக்கைகளிலிருந்து எடுக்கிறார். அதையே வாழ்வின் இயல்பாகவும் மாற்றுகிறார். புற உலகம் நகுலனைப் பொறுத்தவரை பொருட்படுத்தப்படக் கூடியதல்ல; அதன் மதிப்பீடுகளுக்கு அவரிடம் கிஞ்சித்தும் மதிப்பில்லை. முன்முடிவுகள் அவருக்கு உவப்பில்லை. எனவே அவரது தனிவாழ்க்கை அந்நியமான ஒன்றாகவே இருந்தது. தனக்கு நேர்ந்த ஏமாற்றங்கள்,தோல்விகள்,என்றும் அவரைத் தொடர்ந்திருந்த மனிதர்கள் பற்றிய பயம் இவற்றின் மொத்தம் அவரது தனி வாழ்க்கை. இவற்றை எதிர்த்து தன்னுடைய வாழ்க்கைக்கு ஓர் அராஜகச் சாயலை வரித்துக்கொண்டிருந்தார். அதுதான் எழுத்தைத் தீவிரமானதாகக் கருதுபவர்கள் அவரை தமது ஆதர்சமாகக் கருதக் காரணமாக இருக்கலாம். வாழ்க்கை சமரசங்களின் தொடரல்ல என்று நம்புகிறவர்களுக்கு நகுலனின் வாழ்க்கை முன் உதாரணமாகத் தென்படுகிறது. அவரைச் சுற்றி ஒரு சாகசப் படிமம் உருவாக்கப்படுகிறது. இந்தப் படிமம்தான் நகுலனின் இலக்கிய ஆளுமையாகவும் மாறியிருக்கிறது. நகுலனை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் இந்தப் படிமத்தையட்டியே அவரை வாசிக்கிறான். பொருள் கொள்ளுகிறான். நகுலனின் படைப்புகள் இரண்டு கோணங்களில் பொருள் கொள்ளுகின்றன. ஒன்று அவரது வாழ்க்கை உருவாக்கியிருக்கும் படிமம் சார்ந்தது. இரண்டு அவரைப் பற்றி இலக்கியச் சூழலில் உருவாகியுள்ள கருத்துநிலை சார்ந்தது. பிற எழுத்தாளர்கள் தமது படைப்பால் இந்தக் கருத்து நிலையை எட்ட முயலும்போது நகுலன் தனது வாழ்க்கையால் இதை அடைந்திருக்கிறார் என்று கருதலாம். அவரை நேரில் சந்தித்துப் பேசக் கிடைத்த குறைவான சந்திப்புகள் ஒன்றில் இந்த அபிப்பிராயத்தை முன்வைத்திருக்கிறேன்.’ எனக்கு யாருமில்லை, நான் கூட’ என்பது அவருடைய ஒரு கவிதை. இதை நீங்கள் எழுதாமல் நான் எழுதியிருந்தால் கவிதையாகக் கருதப்படுமா? என்று கேட்டேன்.இல்லை. நகுலனின் மொழி,நகுலனின் படைப்பு இயல்பு என்று ஒன்றிருக்கிறதே. அதுதான் இதைக் கவிதையாக்குகிறது என்பது அவருடைய பதில். நகுலன் என்ற கவிஞரை ஒதுக்கிவிட்டு அவருடைய ‘மழை மரம் காற்று’ கவிதையைப் படித்தால் அது கவிதையாக அனுபவப்படுவது சிரமம். அதில் கவித்துவமானது என்று மேற்கோள் காட்டக் கூடிய வரிகள் பெரும்பாலும் இல்லை.ஆனால் மொத்த வரிகளும் இணைந்து ஒரு உணர்வுநிலையை முன்வைக்கும். அந்த நிலையை உருவாக்குவதில் நகுலனின் படைப்பு முறைக்கும், அது இயங்கும் சூழலுக்கும் பங்கிருக்கிறது. கவிதைகள் மட்டுமல்ல. அவரது படைப்புகள் அனைத்தும் இந்தத் தன்மை கொண்டவைதாம். எழுத்தின் இந்தத் தன்மையைப் பின்வருமாறு பகுக்கலாம். நகுலனின் எழுத்துக்கு தன்னிச்சையான இருப்பு இல்லை என்ற குறையாக; அல்லது எழுத்தாளனும் வாசகனும் நெருங்கும் ஒருமை என்ற மேனமையாக.இவை இரண்டுக்கும் நகுலனின் படைப்பில் வாய்ப்பிருக்கிறது. இலக்கிய வாசகர்கள் நகுலன்பால் ஈர்க்கப்பட இன்னொரு அம்சமும் காரணம். அது அவரது சுதந்திரமான படைப்பாக்கம். எழுதி வந்த அரை நூற்றாண்டுக் காலமும் தன்னை ஒரு சுதந்திரமான படைப்பாளியாகவே நிலை நிறுத்திக்கொண்டிருந்திருக்கிறார். தமிழில் ஆர்வம் கொண்டு முறையாகப் படித்தவர்.பின்னர் ஆங்கில இலக்கியத்தைப் பயின்று புலமை பெற்றவர். இவ்விரு மொழிகளின் இலக்கியங்களிலிருந்து பெற்ற வாசிப்பு அவரது படைப்பை செழுமைப்படுத்தியுள்ளது. திருமூலரிலிருந்து ஒரு வரி, எமிலி டிக்கின்சனின் ஒருவரி. போதும் நகுலனின் படைப்பைத் தூண்டிவிட. அதை நேர்மையாக வெளிப்படுத்தும் அவரது சிரத்தை அந்த எழுத்துக்களுக்கு மதிப்பளிக்கிறது. இத்தனை பாதிப்புகளையும் செரித்துகொண்டு அவரது படைப்புகள் தொடர்ந்து சுதந்திரமானவையாக இருக்க முயல்கின்றன என்பதை நகுலனின் படைப்பாக்க வெற்றியாகச் சொல்லலாம். நகுலனை ஓர் இலக்கிய ஆர்வலனாக நான் எப்படி அணுகுகிறேன் என்பதன் வரைபடம் இது. அவருடைய அராஜகமான வாழ்க்கை முறையும் (Anarchic life) எந்தக் கோட்பாடுகளுடனும் உறவு கொள்ளாத சுதந்திரமான படைப்பாக்கமும் (Avant garde) என்னையும் ஈர்க்கிறது. அது ஒரு வசீகரமான நிழல். அதைப் பின் தொடர்வது சற்றுக் கடினம். எனக்கு மட்டுமல்ல; நகுலனை வழிபடுகிறவர்களுக்கும். ஏனெனில், நகுலன் கவிதையில் சொல்வது போல, ஓவ்வொருவருக்கும் ‘நான் சரி,நான் மாத்திரம் சரியே சரி’. றீ
‘‘ஒரு கட்டு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு புகையிலை வாய் கழுவ நீர் / ஃப்ளாஸ்க் நிறைய ஐஸ் / ஒரு புட்டி பிராந்தி / வத்திப்பெட்டி / சிகரெட் / சாம்பல்தட்டு பேசுவதற்கு நீ நண்பா இந்தச் சாவிலும் ஒரு சுகம் உண்டு.’’
நகுலன்
சென்ற ஞாயிறு (13.05.2007), ஏகதேசம் இந்த குறிப்பு எழுதும் இந்நேரம் இன்றும் ஞாயிறுதான். தேதி 20, ஒரு வாரம் கடந்து விட்டது, குருவாயூரிலிருந்து நான் வீடு திரும்பியதும் கிடைத்த செய்தி நகுலனை அவர் வீட்டுப் பக்கம் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியிருப்பதாக. சென்ற மாதம், ஏப்ரல் 27ல் டில்லி நண்பர்கள் ஏ.ஆர். ராஜாமணி, ராமலிங்கம் கூட அவரைப் பார்க்க வீட்டுக்குச் சென்றிருந்தபோது கட்டிலில் படுத்திருந்தார். பக்கத்தில் பங்களூரிலிருந்து வந்திருந்த அவர் தம்பியும், தம்பி மனைவியும் இருந்தார்கள். சற்று நேரத்தில் எழுந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாலும், அவர் முகத்திலும் பேச்சிலும் சோர்வும் களைப்பும் முன்பைவிட அதிகமாக இருந்ததைக் கவனித்தேன். இரண்டொரு நாட்களில் அவர் தம்பியும், மனைவியும் பங்களூர் சென்று விட்டார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன் மறுபடியும் அவர்கள் திரும்ப வந்து நான் ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியிருப்பதாக தெரிய வந்தது. எப்படியோ, ஆஸ்பத்திரியைக் கண்டுபிடித்து அவர் அறைக்கு வந்தபோது, படுக்கையில், ஒருக்களித்து படுத்திருக்கிறார். அந்த முகத்தைப் பார்த்ததும், மனதில் வந்து சூழும் பல்வேறு நினைவுகள். வீட்டிலிருக்கும்போதும் நீங்க வந்துட்டீங்களான்னு திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார்... அவர் தம்பி மனைவிதான் சொன்னாள். பக்கத்தில் அவர் தம்பி மணி, நகுலனை இந்நாள் வரை கவனித்து பணிவிடை செய்து கொண்டிருந்த ‘புறுந்தை’ என்று அழைக்கும் கோமதி அம்மாள். சற்று சென்று அவர் கண் விழித்ததும், கொஞ்சம் கூட அவர் பக்கம் நெருங்கி, சார் என்னைத் தெரியுதா? என்று கேட்கிறேன். ஒரு கணம் உற்றுப் பார்க்கிறார். புரிந்தது என்பதற்கு அடையாளமாக தலையாட்டுகிறார்.
தலை சற்று உயரமாக வைப்பதற்கான பலகையுடன் வந்த ஆஸ்பத்திரி சிப்பந்தி இருவர் _ ஒரு நர்ஸ், இன்னொரு இளைஞர், அதைச் செய்யும் போது, உதவிக்காக நாங்கள் அவரைப் பிடித்து சற்று மேலே நீக்குவதற்கிடையில் ஓவென்று கத்தினார். இங்கே வரும் முந்தியே சொல்லியிருக்கிறார் மூக்கில் குழாயன்றும் நுழைக்கக் கூடாது என்றெல்லாம். நல்லவேளை, அதைச் செய்ய வேண்டிவரவில்லை. க்ளூக்கோஸ் நரம்பு வழி கொடுத்திருக்கிறார்கள். பிறகு யூரின் போக இந்த டியூப் போட்டிருக்கிறார்கள். சற்று நேரம் கூட கண்ணயரும் அவரையே பார்த்துக் கொண்டு அங்கே உட்கார்ந்திருந்தேன். இதற்கு முன், இரண்டொரு தடவை அவரை இன்பேஷன்டாக மருத்துவமனையில் வந்து பார்த்துச் சென்ற நினைவுப் பொறிகள்.
பல வருடங்களுக்கு முன் மூத்திரப்பை ஆபரேஷன் பண்ணி, நகர் மத்தியிலிருந்த ஒரு பிரபல ஐந்து நட்சத்திர தனியார் ஆஸ்பத்திரியில் ...
பல ஆண்டுகளுக்கு முன் (1965), நகரின் புறப் பகுதியில் அமைதியான இடத்தில் அமைந்திருந்த ராமகிருஷ்ண ஆஸ்பத்திரியில் கடுமையான வயிற்று வலிக்காக அட்மிட்டாகி அவர் இருந்த சில நாட்கள்..
அவரது ‘ரோகிகள்’ நாவல் அந்த அனுபவத்திலிருந்து விளைந்ததுதான். (1966_ல் நான்கு நாட்களில் எழுதப்பட்டது)
ஆனால்,
இப்போதைய இந்தக் கிடப்பு
இவர் ஸ்டூடண்ட்தான் டாக்டர். அவர் சொன்னார் : வயது எண்பத்து அஞ்சாகி விட்டதல்லவா, ஒன்றும் சொல்ல முடியாது. அப்படீன்னு!
அவர் தம்பி சொன்னார் :
உள் மனதில் பலவிதமான அசுபமான நினைவுகள்
ஒரு வேளை.
ஒரு வேளை
இவரை ‘இவராக’ நான் ஊனக் கண்களால் பார்ப்பது இதுதான் கடைசியாக இருக்குமோ...
கடவுளே.. அப்படி இல்லாமல் இருக்கட்டும். மேலும் அங்கே இருக்க இயலாமல், விடை பெற்றுக் கொண்டு பஸ்ஸில் வீடு திரும்புகையிலும் முணுக் முணுக்கென்று அந்த பயம்
ஒரு வேளை, இதனால்தானோ என்னவோ, குருவாயூரிலிருந்து வீடு திரும்பியதும், போக வர இருநாட்கள் இரவு ரயில் பயணக் களைப்பு, உடல் உபாதைகளை மீறி, ‘போ போய் பார்த்து விடு’ என்று உள்ளிருந்து ஒரு குரல் என்னை விரட்டியடித்து. பஸ்ஸில் ஏற வைத்து இதுநாள்வரை தெரிந்திராத இந்த ஆஸ்பத்திரிக்கு இழுத்து வந்ததோ? இரண்டு மூன்று நாட்கள் ஒரு வித உள்ள, உடல் உபாதைகளுடன் மல்லிட்டவாறு கழித்தேன். வியாழக்கிழமை, 17_ம் தேதி மாலை போனில் மணியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘சார் கொஞ்சம் சீரியஸ் தான். நேற்று லூஸ் மோஷன்_பேதி போனவாறு இருந்தது. இப்போ ரொம்ப சோர்ந்து போனார். வேண்டியவங்களுக்குத் தெரிவித்து விட டாக்டர் சொல்லிவிட்டார்.
டில்லியிலிருக்கும் எங்க சிஸ்டர் கிட்டேயும் ஸ்டேட்ஸிலிருக்கும் என் மகன் பிரசாத்திடமும் தெரிவித்து விட்டோம் என்று சொன்னார். நெஞ்சில் ஒரு பதற்றம். இப்போதெல்லாம், எந்த அதிர்வையும் தாங்க முடியாத இதயம். நெடுநேரம் உள்ளுக்குள் தடுமாற்றம்.
உடனையே போய்ப் பார்ப்பதா? வேண்டாமா? ஞாயிறன்று பார்த்த காட்சி அப்படியே நெஞ்சில் இருக்கட்டும். இந்த ராத்திரிப்பொழுதில் அவ்வளவு தூரம் படபடத்து ஓடிச் சென்று என்ன பார்ப்பது.
உள்ளூரிலேயே இருந்த அவருக்கு நெருக்கமான ஓரிருவரைத் தவிர வேறு யாரிடமும் போன் பண்ணிச் சொல்லும் வலு கூட என்னிடம் அப்போது இருக்கவில்லை. கடைசியில் வெள்ளி 18.05.07 அதிகாலையில் மணியிடமிருந்து செய்தி
நேற்று இரவு 11.30 மணி சுமாருக்கு அண்ணா காலமாகிவிட்டார். பிரசாத் அமெரிக்காவிலிருந்து கிளம்பிவிட்டான், டில்லியிலிருந்து சிஸ்டரும் ப்ளைனில் வருகிறாள். பாடியை மெடிக்கல் காலேஜ் மார்ச்சுவரியில் வைத்திருக்கிறோம். நாளைக் காலை 9 மணிக்கு வீட்டுக்குக் கொண்டு வருவோம். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன தமிழிலக்கியத்தில் நிறைந்து நின்று செயல்பட்டு அமரரான நகுலனுக்கு நேற்று 19.05.07 சனிக்கிழமை காலையில் இறுதி மரியாதை செய்ய வந்தவர்களில், அவர் உறவினர்கள், மாணவர்கள், அண்டைவாசிகள், நண்பர்கள் போக இலக்கியவாதிகள் என்று கைவிரல்களை எல்லாம் மடக்கி எண்ணும் அளவுக்கில்லை
பாரதி, இதே திருவனந்தபுரத்தில் இறுதி நாட்களைக் கழித்து காலமான புதுமைப்பித்தன்... தமிழைச் சேவித்த இவர்களுக்கெல்லாம் நடந்த அதே இறுதி மரியாதைதான்..
தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அதற்கொரு குணமுண்டு.
«««
என் இலக்கியவாழ்வின் ஆரம்ப திசையிலிருந்து ஆங்கிலம் கற்பித்த ஆசான்களாக, நெருக்கமான நண்பர்களாக என்னை வழிநடத்திய இருவர் நகுலனும், ஐயப்பப் பணிக்கரும். பணிக்கர் காலமாகி ஒரு ஆண்டு திகையும் முன் (ஆகஸ்ட் 23, 2006) அவரைப் பற்றி எழுதியதைப்போல், நகுலனைப் பற்றியும் இப்படியரு குறிப்பு எழுதவேண்டிவரும் என்று நான் கனவில் கூட எண்ணவில்லை.
நகுலனைப் பொறுத்தவரையில், நான் 1953ல் பள்ளி இறுதி வகுப்பிலிருந்து இடைநிலை வகுப்புக்காக (இன்டர்மீடியட்) கல்லூரியில் சேர்ந்த நாளிலிருந்து ஆரம்பமான பழக்கம், நெருக்கம். இந்த 55 ஆண்டுகால அற்றுப்போகாத நெருக்கத்தின் நினைவுகளையெல்லாம் இந்த நினைவஞ்சலியில் வடித்தெடுக்கும் மானசீகமான தயார் நிலைமையில் நான் தற்போது இல்லை..
கதை, கவிதை, நாவல், கட்டுரை என்று தொட்டதையெல்லாம் தனக்கே உரித்த தனிபாணியில் துலங்க வைத்தவாறு கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழிலக்கியத்தில் நிறைந்து நின்றவர் நகுலன் (1922_2007) ‘நிழல்களில்’ (1965) துவங்கி, ரோகிகள் (1966) நினைவுப்பாதை (1972) நாய்கள் (1974), நவீனன் டயரி (1978) இவர்கள் (1983), சில அத்தியாயங்கள் (1983) வாக்குமூலம் (1992) என்று நாவல்கள், மூன்று (1979), ஐந்து (1981), கோட் ஸ்டான்ட் (1981), இரு நீண்ட கவிதைகள் (1991) என்று கவிதைகள், ஆங்கிலத்தில் words to the listening air (1968), poems by nakulan (1981), a tamil writers journal vol 1 (1984), vol II (1989). selections from bharathi that little sparrow (1982), non being (1986), words for the wind noval (1983) முதலிய படைப்புக்கள் வழி தொடர்ந்த நகுலனின் இலக்கியப் பயணத்தின் பாதையும் பார்வையும் முற்றிலும் நவீனமானது, தன்னிகரற்றது.
மொழிபெயர்ப்பிலும் அவருடைய பங்களிப்பு அலாதியானது, குறிப்பாக ஆங்கில, மலையாள இலக்கியப் படைப்புக்களை தமிழில் கொணர்ந்து பரஸ்பர பரிவர்த்தனைக்கும், புரிந்து கொள்ளலுக்கும் அவர் அளித்த பங்கும் கணிசமானது. பிரபல மலையாளக் கவிஞர் ஐயப்பப் பணிக்கரின் நெடுங்கவிதை ‘குரு«க்ஷத்திரம்’ மூலமொழி மலையாளத்தில் வெளிவந்த அறுபதுகளிலேயே தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்ததுடன் நின்று விடுவதல்ல இது. நகுலனின் படைப்புக்களில் குன்றாத உயிர்ப்புடன் உலவும் எஸ்.நாயர், சுசீலா போன்ற கதை மாந்தர்களாலும் செழுமை பெறுகிறது, இந்த பரிவர்த்தனையும் பரஸ்பர புரிந்துகொள்ளலும்.
««««
நகுலனின் எழுத்தாற்றலைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டிய ஒரு தனி அம்சம் அவர் படைப்புக்களின் ஆழம் அவற்றின் வாசிக்கும் தன்மைக்கு (readability்) குந்தகம் விளைவிப்பதில்லை என்பதுதான். எந்தத் தடையோ சலிப்போ இன்றி வாசித்துச் செல்லலாம். ஆனால் முதல் வாசிப்பில் புலனாகாத உட்பொருட்களுக்கு மீண்டும் மீண்டும் நம்மை வாசிக்கத் தூண்டுவதும் அவற்றின் சிறப்பம்சம் என்றே தோன்றுகிறது. அவருடைய படைப்பின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி எத்தனை சொன்னாலும் முழுமையை எட்டுமென்று தோன்றவில்லை. ஆனால் அதற்கெல்லாம் மேலே புதியவர்களை, புதிய எழுத்துக்களை அவர் திறந்த மனதுடன் ஆதரித்து, அங்கீகரித்து வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்ததை எடுத்துச் சொல்ல வேண்டும்.
அறுபதுகள், எழுபதுகளில் நகுலனும் ஷண்முக சுப்பய்யாவும் அவரவர் சைக்கிள்களை உருட்டிக்கொண்டு வர, அவர்கள் கூட நான் நடந்தவாறு தீராத இலக்கிய விவாதங்களில் ஈடுபட்டு திருவனந்தபுரம் நகர வீதிகளில், சந்து பொந்துகளில் உலா வந்திருக்கிறோம். ஷண்முக சுப்பய்யா மிகவும் சங்கோஜ சுபாவமுடையவர்.. ஆனால் நிறைய வாசிப்பவர். சூரநாடு குஞ்ஞன் பிள்ளை என்ற பிரபல மலையாள அறிஞர் தலைமை வகித்த லெக்ஸிக்கன் ஆபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அப்போதைக்கப்போது எழுதிக்கொண்டு வந்து காட்டும் சிறு கவிதைகளை வாசித்து அதன் கலைநயத்தில் எந்தத் தணிக்கையுமின்றி வியந்து போற்றுவார் நகுலன். நகுலனின் இந்தத் தூண்டுகோல் ஒரு தொகுப்புக்கான கவிதைகளைப் படைக்க சுப்பய்யாவுக்கு மிகவும் பயன்பட்டது.
இது சுப்பய்யா விஷயத்தில் மட்டுமல்ல.. என் ‘தலைமுறைகள்’ நாவலில் இருந்து ‘கூண்டிவள் பட்சிகள்’ நாவல் வரை அவருடைய இந்தப் படிப்பும் பாராட்டும் சலிப்பின்றித் தொடர்ந்திருக்கின்றன. இங்கே திருவனந்தபுரத்திலேயே இருக்கும் நண்பர் ஆ.மாதவன், இருந்த காசியபன், தவிர, தமிழ்நாட்டில் இருக்கும் எத்தனையெத்தனையோ, எழுத்தாளர்கள் நேரடியாக அனுபவித்து அறிந்த உண்மை இது.
பல ஆண்டுகளுக்கு முன், நகுலனைப் பற்றிய ஒரு சிறு குறிப்பை என்னிடமிருந்து கேட்டு வாங்கி அவர் புகைப்படத்துடன் ‘குமுதம்’ வெளியிட்டிருந்தது. அதற்கு இடப்பட்டிருந்த தலைப்பு ‘எழுத்தை மணந்த எழுத்தாளர்’ என்று ஒரு ஞாபகம். கல்யாணம், குடும்பம் இவைபற்றி அவரிடம் பேச்சு எடுக்கும் போது, ‘எனக்கு எப்போதும் வாசித்துக் கொண்டிருக்க வேணும், எழுதிக் கொண்டிருக்க வேணும். அதுக்கு பெண்டாட்டி, குடும்பம் எல்லாம் தடைதானே...’ அவர் சொல்வது, ஒரு கோணத்தில், எழுத்தின் மீதுள்ள அவருடைய அபாரமான நெருக்கத்தைப் புலப்படுத்தும். ஆனால், கடைசிக் காலகட்டத்தில் எழுதுவதை அவர் அடியோடு நிறுத்தி விட்டார் என்பதுதான் பரிதாபம். அடிக்கடி அவரைச் சந்திக்கும் போதெல்லாம், ‘நீங்கள் எழுதவேண்டாம்; சொல்லுங்கள், நான் எழுதுகிறேன்..’ என கட்டாயப்படுத்தி அவரை மீண்டும் ஈடுபடுத்த முயன்றும், அதையும் தொடர அவரால் இயலவில்லை.
வயது ஏற ஏற, ஷண்முக சுப்பய்யாவுடன் இருக்கையில் யார் முந்தியோ’ என்று சுப்பய்யாவோ, நானோ சொன்னால் கூட அவர் பேச்சை திருப்பி விடுவார். ‘சாவிலும் சுகமுண்டு’ என்ற ரீதியில் கவிதை, கதை, நாவல்களில் கையாண்டிருந்தாலும் அதை எதிர்கொள்ளும் ‘தீரம்’ ஒன்றும் அவர் வெளிக்காட்டியதில்லை. ஷண்முக சுப்பய்யா காலமானபின், பேசிக்கொண்டிருக்கும்போது, ‘அவர் போயிட்டார்’ என்று குறிப்பிடுவதோடு சரி, சில நேரங்களில் அவர் கவிதைகளில் சில அப்படியே சொல்லும் நினைவு சக்தியும் அவரிடம் இருந்தது. சென்ற ஆண்டு ஐயப்பப் பணிக்கரின் மறைவும் அவரை பாதித்தது. அடிக்கடி, பேச்சுவாக்கில் ஐயப்பப்பணிக்கரைப் பற்றி திடீரென்று ஏதாவது கேட்பார். கடந்த சில ஆண்டுகளாக மறதி வியாதி அவரை அலட்டியதேயானாலும், முன்பு நடந்த பல நிகழ்ச்சிகள், மனிதர்கள் அவர் நினைவுப் பாதையில் அழியாமல் வந்து போய்க் கொண்டிருப்பதை அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது தெரிய வரும். நானும், சுப்பய்யாவும் அவரிடம் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். ஆனால், அவர் ஒரு குழந்தையைப் போல் அடியோடு மறந்துவிடுவார் என்று சொல்ல முடியாது, அடிக்கடி சீண்டி வேடிக்கை பார்ப்பார்... ஆனால் குடும்பத்தில் நெருக்கமான ஒருவராக உரிமையுடன் அவர் காட்டும் பாசமும், நலம் நாட்டமும் அவரை வெறுக்க நம்மை அனுமதிக்காது. அதுதான் அவர் தனித்தன்மை என்று தோன்றுகிறது.
நகுலன் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் இல்லைதான். ஆனால் வாசிக்கும் யாரையும், அவருடைய வித்தியாசமான தன்மையை இனம் காட்டும் ஒரு எளிமையும் இனிமையும் ஆழமான அவர் எழுத்தில் இருந்தன. யாப்புத் தெரியாததால் யாப்பு மீறிய கவிதை எழுதுகிறார்கள் என்ற பழியை பரிகசிப்பவை நகுலன் கவிதைகள். இந்நோக்கில் அவருக்கு சமதையாகச் சொல்ல முடியும் இன்னொரு பெயர் மா. இளையபெருமாள். இருவரும் யாப்பு உட்பட்ட தமிழ் இலக்கணத்தை நன்கு கற்றுத் தேறியவர்கள், கவிதையில் பிரயோகித்து வெற்றி அடைந்தவர்கள். பெயர்கள், முகங்கள் மறந்து போகும் வியாதிக்கு ஆட்பட்டு, வீட்டுக்குள் ஒரு கனவுலகில் சில ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்த நகுலன் ஆர்.ஆர். சீனிவாசன் தேர்வு செய்த, புகைப்படங்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘‘நகுலனின் கண்ணாடியாகும் கண்கள்’’ நூலை (காவ்யா வெளியீடு, சென்னை_டிசம்பர் 2006) புரட்டி அவர் படங்களுடன் வெளியாகியுள்ள சிறுகவிதைகளை ஒருவித சூன்யமான முகபாவத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோது (நகுலன் உயிர் வாழும் போதே, இங்கு வந்து மிகவும் சிரமப்பட்டு மிக அற்புதமாக கறுப்பு வெள்ளை புகைப்படங்களைத் தயாரித்து, சென்னையில் புகைப்பட கண்காட்சியும், அந்தப் படங்களைப் பொருத்தமான கவிதைகளுடன் நூலாகவும் தொகுத்து வெளியிட்ட சீனிவாசனையும் காவ்யா ஷண்முக சுந்தரத்தையும் எத்தனைக்கு பாராட்டினாலும் தகும்)...
நூலின் 44வது பக்கம் (புகைப்படங்கள் நிரம்பி நிற்கும் இந்நூலில் பக்க எண் இல்லை) வந்ததும்...
காலம் கடந்தாலும் அழியாது படைப்புக்களைச் செய்த அவர் கரத்தின் படத்தின் கீழ் ஒரு சிறுகவிதை
அணைக்க ஒரு / அன்பில்லா மனைவி/வளர்க்க இரு நோயுற்ற சேய்கள்/ வசிக்க சற்றும் / வசதியில்லா வீடு / உண்ண என்றும் / ருசியில்லா உணவு/பிழைக்க ஒரு/பிடிப்பில்லா தொழில்/எல்லாமாகியும்/ஏனோ உலகம் கசக்கவில்லை.’’
‘‘இந்தக் கவிதை யாருடையது? நீங்க எழுதியது தானா?’’ நான் கேட்கிறேன். மீண்டும் மீண்டும் கவிதையையும் என்னையும் பார்க்கிறார்..
முகத்தில் கேள்விக்குறி...
அது அவர் எழுதியதல்ல என்பதை அவர் புரிந்து கொண்டதைப் போல்..
‘‘இது ஷண்முக சுப்பய்யா எழுதிய கவிதை...’’ நான் விளக்கினேன்.
இதை இங்கே நான் எடுத்துச் சொல்லக் காரணம், ‘‘குழந்தைகளின் கவிஞர், குழந்தைகளுக்குப் பிடிக்கும்’’ என்று கவிதையிலிருக்கும் எளிமை காரணமாய் கேலிக்குள்ளான ஷண்முக சுப்பய்யாவின் எளிமையான ஆனால் ஆழமும் அர்த்த புஷ்டியுமுள்ள ஒரு கவிதை, யாப்பு சரிவரத் தெரிந்தும் அதை பேதமுடன் உடைத்து சாதனை படைத்த நகுலன் கவிதைககளின் கூட வைத்தபோது, உண்மை தெரியாதவர்களால் எளிதில் கண்டுபிடிக்க இயலாத ஒருவித தர ஒற்றுமை இனிமையாய், எளிமையாய் அதில் ஒளிர்கிறது என்பதைச் சுட்டிக் காட்டத்தான். 1968_ல் நகுலன் தொகுத்து வெளியிட்ட ‘குரு«க்ஷத்திரம்’ இலக்கியத் தொகுப்பில் பின்னட்டையில் அவர் பொறித்திருந்த வாசகங்களை எடுத்தாண்டு இக்கட்டுரையை நிறைவு செய்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
‘‘இலக்கியத்தில், வாழ்க்கையில் போல், ஒவ்வொரு புதுக்குரலும் ஒரு எதிர்க் குரலாகவே தொடக்கம் எய்தி. இலக்கியத்தை வளப்படுத்தியிருக்கிறது. ஒரு புதுக்குரல் வெறும் ஒரு எதிரொலியாக மாறுகிற பொழுது அதன் அடிப்படை ஆற்றல் வீழ்ச்சி ஆரம்பமாகிறது. பாரதி கூறிய மாதிரி, ‘சிறுமை கண்டு சீறு, ‘ரௌத்திரம் பழகு’, ‘ரஸனையில் தேர்ச்சி கொள்’, ‘நூலினை பகுத்துணர்’ என்பவை இலக்கிய சிருஷ்டியிலும் தாரக மந்திரங்களாகக் கருதப்படலாம்.’’
நன்றி - தீராநதி
நகுலன் என்றோரு இலக்கியப் புதிர்
பூனைக்குட்டி
Tuesday, June 05, 2007

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
I’d been grinding Visu down for days—teasing, poking—till he broke, voice tight with exasperation. “Fine, but hook me up with a girl I pick ...
-
On a serene Saturday evening, I slowly emerged from the embrace of slumber, rousing from my afternoon repose. Gradually, my senses rekindled...
என்ன நடக்குது? காப்பி பேஸ்டெல்லாம் பொதுவா பூனையைப் போல அலையும் தானே?!
ReplyDeleteபூனை இப்ப இலக்கியத்தை விட்டுட்டு கவுச்சியை தேடி அலையுது அதான் ;)
ReplyDeleteரொம்ப அலையாதே மோகனா, நாயை அவுத்து விட்டுறப் போறாங்க :-) அடுத்த பாரிஸ் ஹ்லடன் எப்ப மக்கா? :-)
ReplyDeleteசாத்தான்குளத்தான்
அண்ணாச்சி, அக்காச்சி வெளியில் வர்றப்ப நிச்சயமா ஒரு பதிவு உண்டு. அதுக்கு இடையில் ஏதாவது பிரச்சனைன்னா வரும்.
ReplyDeleteவலைப்பதிவர்களுக்காக மீள்பதிவிட்டமைக்கு நன்றிகள்.
ReplyDeleteநகுலன் யதார்த்ததின் தனிமையை சொல்லியிருக்கும் ஒவ்வொரு எழுத்தை வாசிக்கும் போதும் ஒருவித சலனம் ஏற்படுகிறது. நகுலன் என்பவர் எனக்கு பரிட்சயமில்லாத பொழுதில் நண்பர் சீனிவாசன் கொடுத்த புத்தகத்தில் நான் கண்ட நகுலன் என்ற ஆளுமை கவிதைகளில் நாட்டமில்லாத என்னை நிறையவே பாதித்தது.