மக்கள் அனைவருக்கும் இனிய காதலர்தின நல்வாழ்த்துக்கள். முன்பே ஒரு முறை நான் காதலித்த அனுபவத்தை எழுதியிருக்கிறேன். அது கொஞ்சம் சின்ன வயசு என்றால் என்னுடைய அடுத்த காதலும் அப்படியே இதுவும் சின்னவயசுக்காதல் தான். இதக் காதலான்னு கேட்டா எனக்கு பதில் சொல்லத்தெரியாது ஆமாம் சொல்லிட்டேன்.
அப்ப வந்து, நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சு முடிச்சு எக்ஸாம் எல்லாம் எழுதிக் கிழித்துவிட்டு, என்ட்ரென்ஸ்க்காக படித்துக் கொண்டிருந்தேன். அங்கே தான் அந்த தேவதையைப் பார்த்தேன் அப்படின்னு கதையெல்லாம் சொல்லலை. அந்தப் பொண்ணைப் பார்த்தேன் இன்னும் அந்த முதல் சந்திப்பு பசுமையாக ஞாபகம் இருக்கிறது. அவங்க மாமான்னு நினைக்கிறேன் நான் என்ட்ரென்ஸ் எக்ஸாமுக்கு படிச்ச அதே சென்ட்டரில் சேர்க்கிறதுக்கு வந்திருந்தாரு. முதல் நாள் என்பதால் சும்மா இன்ட்ரொடக்ஷன் போய்க்கிட்டிருந்தது.
ஏன் இதை சொல்றேன்னா அந்தப் பொண்ணு இங்கிலீஷ் மீடியம், நானோ பாழாய்ப்போன தமிழ்மீடியம், (இந்த பாழாய்ப்போனவிற்கான அர்த்தம் அப்புறம்). சுத்திசுத்தி பார்த்து எங்கேயுமே சேர் இல்லாம என் பக்கத்து சீட்டில் வந்து உட்கார்ந்தாள். ரொம்ப தீவிரமா நான் அவ்வளவு நாளா ஒன்னும் பண்ணியிருக்காம, அன்னிக்குன்னு பார்த்து ஆர்இஸி லெக்சரர் ஒருத்தரு கருப்பா, ஹைட்டா இருப்பாரு அவர் கொடுக்குற லெக்சரை நோட் எடுத்துக்கிட்டிருந்தேன்.
அவ வந்து உட்கார்ந்ததும் திரும்பிப்பார்க்க, அவள் என்னைப்பார்த்து சிரித்தாளே பார்க்கணும் அன்னிக்கு விழுந்தவன் இன்னும் எழுந்திருக்கவேயில்லை. எப்படின்னு கேக்குறீங்களா, இன்னிக்கு வரைக்கும் அந்தப் பொண்ணோட பேர் தான் என்னோட பாஸ்வேர்ட். அப்படியே விட்டிருந்தால் கூட என்னமோ கொஞ்ச நாளைக்கு சைட் அடிச்சமா, மறந்தமான்னு இருந்திருப்பேன். அவளோ தன்னோட பேரைச்சொல்லி என்கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டா பாருங்க அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு.(பேரைச் சொல்லாதது என் பாஸ்வேர்ட் ஸீக்ரஸிக்காக.)
நானும் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள, முடிந்தது முதல் சந்திப்பு. இங்க தான் நான் சொன்ன அந்த பாழாய்ப் போன மேட்டர் வரும். அதென்னான்னா ஆங்கிலத்தில் படித்தங்களுக்கு தனியாவும் தமிழில் படித்தவங்களுக்கு தனியாவும் அவங்க பாடம் எடுத்தாங்க. கூட இருந்ததே சுமார் ஒரு மாதம் தான் அதிலேயும் தனித்தனியா ரொம்பக் கொடுமை ரொம்பக் கொடுமை.
மனசு கேக்குமா அப்புறம் படிப்பு போனாப்போகுதுன்னு ஒன்னுமே புரியாத ஆங்கில பயிற்சி வகுப்பில் உட்கார்ந்திருந்தேன் கொஞ்ச நாள். ஆனால் அட்டென்டென்ஸ் எல்லாம் எடுப்பாங்க அவங்க. அதிலெல்லாம் சமாளஇச்சு தான் உட்கார்ந்திருந்தேன். ஆனா அங்க பார்த்தீங்கன்னா கொடுமையிலும் பெருங்கொடுமையா, ஆர்கானிக் கெமிஸ்டிரி, இன்ஆர்கானிக் கெமிஸ்டிரி, பாரபோலா, ஹைப்பர் போலா, கர்வ், பர்ப்ன்டிக்குலர் அப்படின்னு ஒரே புரியாத பாஷையில் பேசிக்கிட்டிருப்பாங்க. சரி இதுதான் போவுது படிப்பு இப்ப யாருக்கு முக்கியமுன்னு நானும், பண்ணுங்கடா, பண்ணுங்கடா இதுவும் எத்தனை நாளைக்குன்னு தெனாவட்டா எல்லாம் புரிஞ்சமாதிரி வடிவேலு கணக்கா உட்கார்ந்திருப்பேன்.
அதிலேயும் பிரச்சனை, அப்பப்ப எழுப்பி கேள்வி வேற கேப்பாங்ய அங்க அதுவும் ஆங்கிலத்தில், அப்பல்லாம் இங்கிலீஷில் பெருசா பேசுற ஒரு வாக்கியம் ஹைபிஸ்கஸ் ரோஸா ஸைனஸின்ஸ் அப்படிங்கிறது மட்டும்தான். இந்த நிலைல அவன் என்ன கேக்குறான்னு புரிஞ்சு, அது முதல்ல எனக்கு தமிழ்ல தெரிஞ்சு நான் இங்கிலீஷில ட்ரான்ஸிலேட் பண்ணி கிளிஞ்சது கிருஷ்ணகிரி வேறென்ன. இதெல்லாம் இப்படியிருந்தாலும் கணக்குல மட்டும் நம்மல அடிச்சிக்க முடியாது. கேள்வி கேட்டு முடிக்கிறதுக்குள்ள பதிலை சொல்லிட்டு நம்மாளை வேற திரும்பி பார்க்குறது. ஒரே அலம்பல்தான் கணக்கு கிளாஸ்னா மட்டும். ஏன்னா அங்கே தமிழ் ஆங்கிலம்னு அவ்வளவு பெரிய பிரச்சனை வராது.
இன்னும் அந்தப் பொண்ணு நினைவில் இருக்குறதுக்கு முக்கிய காரணம், அந்தப் பொண்ணும் என் கிட்ட நின்னு பேசினதுதான் காரணமாயிருக்கும். அப்பல்லாம் பித்து பிடிச்சமாதிரி அலைஞ்சிருக்கேன். அந்தப் பொண்ணு எப்படா ப்ரெண்ட்ஸ்களை விட்டுட்டு தனியா வரும்னு பார்த்துட்டு பின்னாடியே போய் பேசுறது. கணக்கு புரிஞ்சுதா, அது புரிஞ்சுதா? இது புரிஞ்சுதா? இப்படி. அந்தப் பொண்ணு என்ன நினைச்சிருக்கும்னு எல்லாம் தெரியாது. ஆனால் பதில் சொல்லும். நின்னு பேசும் அவ்வளவுதான் அந்த வயசுல இது போதாதா? காதல் தான், நிலைக்கண்ணாடிதான்.
ஆறு வருஷம் ஆனதால நிறைய விஷயங்கள் மறந்துவிட்டது, நினைவில் இருக்கும் முக்கியமான ஒரே ஒரு விஷயம். ஆர்இஸியில் மாக் டெஸ்ட் ஒன்று வைத்தார்கள். என்ட்ரென்ஸ் மாதிரியே, இன்னும் நினைவில் இருக்கிறது. முதல் டெஸ்ட் எழுதலை அது வந்து பிஸிக்ஸ்னு நினைக்கிறேன். அப்புறமாத்தான் அந்தப்பொண்ணு எழுதப் போயிருக்கான்னு தெரிஞ்சு கஷ்டப்பட்டு காசு சேர்த்துத்துட்டு போய் மீதி டெஸ்ட் எழுதினேன்.
நீங்களா போய் உங்களுக்கு பிடிச்ச இடத்தில் உட்கார்ந்து எழுதலாம், நான் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். உக்கார்ந்ததிலேர்ந்தே அந்தப் பொண்ணுக்கிட்ட ஒரே கடலை. பேனா கொடு, ரப்பர் கொடு அப்படின்னு. நாமத்தான் ஒரு இடத்தில் உக்காருவோமா அரை மணிநேரத்தில் எல்லாம் முடிச்சிட்டு, ஆன்ஸர் பேப்பரை கொடுத்தேன். ஆர்இஸி லெக்சரர்ங்க என்ன நினைச்சிருப்பாங்கன்னு எல்லாம் இப்ப கவலைப்படுற மாதிரி அப்ப கவலைப்படவில்லை.
ஒரே விஷயம் அவளோ கவனத்தை கவரணும் அதுதான். அப்பத்தான் ஒரு விஷயம் நடந்தது. அதாவது ஒரு நல்ல பயிற்சித்தேர்வா அது இருக்கணும்னு நினைச்ச ஆர்இஸி மக்கள் அந்தத் தேர்வுக்கான விடைகளையும் ஒரு பேப்பரில் அச்சடித்துக் கொடுத்தார்கள். நாமத்தான் ஒரு மணிநேரத்தில் வெளஇய வந்திட்டமா. எனக்கு மொதல்ல அந்த ஷீட்டைத்தந்தாங்க. உடனே உதிச்சது ஒரு ஐடியா, வாட்சை மறந்திட்டேன்னு சொல்லி திரும்பவும் உள்ளே வந்து அந்தப் பெண்ணிடம் ஆன்ஸர் பேப்பர் இருக்கு வேணுமா? வேணுமான்னு கேட்டு இன்னும் ஒரு பத்து நிமிஷம் தேடுறதப்போல கடலைப் போட்டுக்கிட்டிருந்தேன். அவளோ வேணான்னு சொல்லிட்டா, நாம சும்மாயிருப்போமா அவ சீட்டில் வைச்சிட்டு வந்திட்டேன். அப்புறமென்ன டெஸ்ட் எழுதிட்டு வந்ததும் இதப்பத்தி ஒரு இரண்டு மணிநேரம் கடலை.
அப்புறமென்ன இப்படியே ஓடிப்போன நாட்களுடன் என் இன்ஜினியரிங் ஆசையும் ஓடிப்போய்விட்டது. பின்ன பொண்ணுங்க பின்னாடி சுத்திக்கிட்டிருந்தா இன்ஜினியரிங் ஸீட் எங்க வாங்குறது. கடைசி நாள் நான் அவளுக்கு ஒரு ஓவியம் வரைந்து பரிசளித்துவிட்டு என்னுடைய ஆட்டோகிராப் புத்தகத்தை அவளிடமும் கொடுத்தேன். அவ்வளவுதான் முடிந்துவிட்டது எங்கள் பழக்கம். அதற்குப்பிறகு நான் யாரோ அவள் யாரோ.
என்னைப் பொறுத்தவரை கொஞ்சம் உண்மையான என்னுடைய காதல் என்றால் இதைத்தான் சொல்வேன். அதன் பிறகு காதலிக்காததற்கு பல காரணங்கள். ஒருவேளை என் முகம் பார்க்கும் கண்ணாடி அப்பொழுது தான் வேலையை சரியாக செய்யத் தொடங்கியிருக்கலாம். ப்ரொக்கிராமை மட்டுமல்லாமல் வாழ்க்கையையும் இன்புட் அவுட்புட் விஷயமாக நான் பார்க்கத் தொடங்கியதாகயிருக்கலாம்.
என்னைப் பொறுத்தவரை நீங்கள் கணக்குப் போடத்தொடங்கிவிட்டால் காதலிக்க தகுதியற்றவர்களாகிறீர்கள். நான் பன்னிரண்டாம் வகுப்பு முடிந்து கல்லூரியில் நுழைந்ததுமே கணக்குப்போட ஆரம்பித்துவிட்டேன். அப்படியும் இல்லாமல், உங்கள் வீட்டிலோ, இல்லை மிகவும் நெருங்கிய உறவினர் வீட்டிலோ காதலால் பெரும் பிரச்சனை வந்திருந்து அதை நீங்கள் புரிந்து கொண்டிருந்தாலும் காதலிக்க முடியாது. அதுபோன்ற விஷயத்தால் கூட நான் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை என்னுடைய இந்த இரண்டு காதல்களும் மிகவும் பிடித்தமானவை. உண்மைக்காதல் எப்பவுமே சப்புன்னுதான் இருக்கும். இல்லையா???
நட்சத்திரம் - உண்மைக் காதல்
பூனைக்குட்டி
Monday, February 13, 2006

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
It was late 2010, Chennai drowning in 2G rumors and the sticky heat of a city faking it wasn’t falling apart. I’d been plotting this night f...
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
அடுத்த நாள் வீட்டில் நான் பெயிண்டிங் பண்ணிக் கொண்டிருந்த பொழுது வீட்டு ஓனர் வந்து உங்களுக்கு ஒரு ஃபோன் வந்தது. மதுமிதா என்ற பொண்ணுக்கு ஆக்...
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஆகா, உங்களுக்கும் நுழைவுத்தேர்வு ஆயத்தப் பள்ளியில் தான் காதலா? என்னுடைய பல நண்பர்களுக்கும் அங்கே தான் டாவு ஆரம்பித்தது.
ReplyDeleteஆனால் நானோ ஒரு துரதிர்ஷ்டசாலி.:-0
பாஸ்வேர்ட் தவிர்த்து ஒரு கீ வேர்டு இருக்கிறது அது கடந்த ஏழாண்டுகளாக ஒன்று தான் இங்கேயும்!!!:-) அனைத்து இணைய கனக்குகளுக்கும்...
கதை படிக்க இதமாக இருந்தது.
பொட்டீக்கடை உங்களின் ஐடென்டிகலான மற்றொரு பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன். உங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றி.
ReplyDeleteஉங்கள் காதலியின் பெயர் எனக்குத் தெரியும். ****** தானே?
ReplyDelete//கணக்குப் போடத்தொடங்கிவிட்டால் காதலிக்க தகுதியற்றவர்களாகிறீர்கள்//
நல்ல வரிகள். ஒப்புக்கொள்கிறேன்.
சுரேஷ் ஆனாலும் உங்களோட ஒரே தமாசு தான் போங்க அந்த பேரு *******. :-)
ReplyDeleteவருகைக்கு ரொம்ப நன்றி சுரேஷ்.