நாற்றத்தை உணரும் சக்தி போல் எனக்கு பிரச்சனைகளையும் உணரும் சக்தி வந்துவிட்டதாக நான் நினைக்கத் தொடங்கியதற்கு, அக்கா போன் செய்ததும் அவளால் வரப்போகும் பிரச்சனையை முன்கூட்டியே கண்டுபிடித்தது மட்டும் காரணம் கிடையாது. என்னை அவள் வீட்டிற்கு வந்து அவளை பிக்கப் செய்து கொள்ளச் சொல்லும் பொழுதே எனக்குத் தெரிந்துவிட்டிருந்தது இன்றைக்கு வீட்டில் புயல் கிளப்பப்போகிறாள் என்பது. ஆனால் எனக்குப் புரியாத ஒன்று அந்த விஷயத்தை யார் இவளுக்கு சொல்லியிருப்பார்கள் என்பதுதான்.
பிக்கப் செய்து கொண்டு வீட்டிற்கு வந்ததும், இவளைப் பார்த்து அம்மா அடைந்த அதே ஆச்சர்யத்தை அகிலாவை காட்டினாள். நான் கண்களாலேயே இதற்கெல்லாம் நீதான் காரணமா என்று கேட்க மறுத்தவளின் கண்கள் நம்பத்தான் சொல்லின என்னிடம். ஆனால் மறுக்கச்சொல்லியது அக்காவின் அடுத்தக் கேள்வி, இந்தக் கேள்வியைத் தான் கேட்கப்போகிறாள் என்று ஊகித்திருந்தாலும் கேட்கும் பட்சத்தில் யார்சொல்லியது என்ற துணைக்கேள்வி எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.
"டேய் நீ அமேரிக்காப் போறியா?"
நான் திரும்பி அகிலாவை என்னயிது என்பதைப் போல் பார்க்க எனக்குத் தெரியாது என சத்தியம் செய்தன அவள் கண்கள்.
"ஆமாம் போறேன் அதுக்கென்ன இப்ப?"
"இந்தத் தடவையும் இவளைக் கூட்டிக்கிட்டு போகலைதானே நீ."
இந்த முறை நான் அகிலாவைப் பார்க்கவில்லை, ஒருவாறு அவள் மனதிலும் இந்தக் கேள்வி ஓடிக்கொண்டுதான் இருக்கவேண்டும். அவள் கேட்கவில்லை இங்கே கேட்கப்படுகிறது. பதில் சொல்லவேண்டிய கடமையிருந்ததாலும் இவளுக்குச் சொன்னால் விஷயம் அகிலாவிற்கும் சொல்வதுபோலாகும் என்பதால் சொன்னேன்.
"இங்கப்பாரு, நான் ஊர் சுத்திப்பார்க்க அமேரிக்கா போலவில்லை, ப்ரொஜக்ட் ஊத்தி மூடிக்கிட்டிருக்கு வேற வழியில்லாமல் அங்கப்போறேன். சிகப்பில் இருக்கும் ஸ்டேட்டஸை பச்சையாக்கப் போகிறேன்.
அங்கே போனாலும் நான் எத்தனை மணிக்கு திரும்பிவருவேன்னு தெரியாது. இங்கயப் போலவே அங்கேயும் சனி, ஞாயிறு குப்பைக் கொட்ட வேண்டியிருக்கும். அதனால என்கூட வந்தா இவளுக்கு போரடிக்கும். எவ்வளவு நேரம் தான் இவளும் டீவியையே பார்த்துட்டு உட்கார்ந்திருப்பா. அதுமட்டுமில்லாம பேச்சுலர்னா பிரச்சனையே வேற, பேமிலியைக் கூட்டிட்டுப் போறதுன்னா பிரச்சனையே வேற. ஏகப்பட்ட செலவாகும்."
காரணங்களை அடுக்கிக்கொண்டே போனேன். அத்தனையையும் நிராகரித்தவளாய்,
"இல்லை நீ பொய் சொல்ற, அவளை அமேரிக்கா கூட்டிக்கொண்டு போவதற்கு ஏனோ பயப்படுற நீ. எனக்கு என்ன காரணம்னு தெரியாது. ஆனால் நீ பயப்படுறேன்னு தெரியும். எனக்குத் தெரியாது உன் மாமன், அவளை அமேரிக்கா கூட்டிக்கிட்டுப் போனா என்னன்ன பிரச்சனைவரும்னு சொன்னானா, இல்லை நீயே நினைச்சிக்கிட்டிருக்கிற விஷயங்களை மனசில வச்சிக்கிட்டு இவளை இங்கேயே கலட்டி விட்டுட்டுப்போறியா எனக்குத் தெரியாது. ஆனால் இது சரியில்லை, அதை மட்டும் நான் சொல்லிட்டேன்."
கடைசிவரை என்னுடைய காரணங்களை ஒப்புக்கொள்ளவேயில்லை, அம்மாவிடம் காப்பிவாங்கிக் குடித்துவிட்டு, என்னுடைய காரை அவளே டிரவ் பண்ணிக்கொள்கிறேன் என்று சொல்லி எடுத்துக் கொண்டு போனதும் வீடு ஏறியிறங்குவதற்கு ஆட்கள் இல்லாமல் போய்விட்ட நாளொன்றின் கடைசியில் அடுத்த நாளுக்காக காத்திருக்கும் லிப்டைப் போல் அமைதியாகயிருந்தது அடுத்தப் பிரச்சனையை நோக்கி. என்னுடைய பயமெல்லாம் இதுவரை இப்படிப்பட்ட ஒன்றை நினைத்து பார்த்திராத அகிலா இதைப்பற்றி என்ன நினைப்பாள் என்றுதான்.
இந்த எண்ணங்கள் எல்லாம் என் மனதில் இல்லையா என்றால் சொல்லமுடியவில்லை என்றுதான் பதில் வந்தது. உண்மையில் கல்யாணவயதில் இந்தக் கேள்விகள் இருந்ததுண்டு. ஆனால் அகிலாவுடனான திருமண வாழ்க்கை அந்த பழைய எண்ணங்களை பெட்ரோல் ஊற்றி எரித்திருந்தது. இப்படியாக ஏகப்பட்ட எண்ணங்கள் மனதை அலைக்கழிக்க யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு அகிலா அருகில் வந்ததே தெரியவில்லை. தோளைத் தொட்டுத்திருப்பியவள்.
"என்ன ஒரே யோசனை, எந்தப் பொய்யைச் சொன்னால் இவளை வாகாய் கழட்டிவிட்டுட்டுப் போகலாம்னு யோசனை பண்ணுறீங்களோ."
ஆனால் நான் உண்மையில் அதை நினைத்துக் கொண்டிருக்கவில்லை என்றாலும் அவள் பொய்யைப் பற்றிப் பேசியதும் சும்மாப் போட்டுப்பார்த்தேன் சில பொய்களை.
"இங்கப்பாரு அகிலா, உன்னை அமேரிக்கா கூட்டிட்டுப் போறதா பெரிய விஷயம். நாளைக்குச் சொன்னேன்னா உனக்கும் விசா ஏற்பாடு பண்ணிடுவாங்க. B1 தானே, ஆனால் நீ அங்கவந்தும் சேலையில்ல கட்டுவேன்னு ஒத்தக்காலில் நிப்ப?" உண்மையில் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அதைப்பற்றித்தான் இத்தனை நேரமும் யோசித்ததாய் நம்பவைக்க என்னால் ஆன நடவடிக்கைகள் அத்தனையையும் செய்தேன்.
அகிலா ஏன் அந்த முடிவிற்கு வந்தாள் என்று தெரியாது ஆனால் அவள் சேலை மட்டும் தான் கட்டுவாள். எவ்வளவோ வற்புறுத்தியும் கூட நைட்டி போடமாட்டேன் என்று அடம்பிடித்தவள் அவள். சில தடவைகள் வற்புறுத்திய பொழுது, நான் ட்ரெஸ் பண்ணிக்கிறதில் நீங்க தலையிடாதீங்க என்று சொல்லியிருந்தாள். உண்மையில் அவளுடைய உடை விஷயத்தில் பெரும்பாலும் தலையிடுவதில்லை, உனக்குப் பிடித்திருந்தால் உடுத்திக்கொள் அவ்வளவுதான் என்வரையில்.
"நான் அப்பவே நினைச்சேன் இப்படி உப்புச்சப்பு இல்லாத காரணத்தையெல்லாம் சொல்லி என்னை உங்கக்கூட வரவிடாம பண்ணிடுவீங்கன்னு?"
ஆக என்னுடன் அவள் அமேரிக்கா வரும் முடிவு எடுக்கப்பட்டுவிட்டுருந்தது. இதற்கு மேலேயும் நான் எதையாவது காரணம் சொல்லிக் கொண்டிருந்தால், உண்மையாக அவளாய் யோசிக்காவிட்டாலும், அக்கா சொல்லிக்கொடுத்திருந்தது நினைவில் வரலாம் என்பதால். கொஞ்சமாக அகிலாவை சேலையிலிருந்தாவது விடுவிக்கலாம் என்று நினைத்து.
"சரி நீ இப்பச் சொல்லு, சேலை தவிர ஏதாவது மாட்ர்ன் டிரெஸ் போட்டுக்கொள்ள சம்மதம் என்று. நான் உன்னைக் கூட்டிக்கொண்டு போகிறேன்."
அவளுக்கும் தெரிந்திருக்க வேண்டும் பிரச்சனை சேலையில்லை என்று, ஆனாலும் நாங்கள் வார்த்தைகளால் விளையாடிக்கொண்டிருந்தோம்.
"தெரியுமே நீங்க அமேரிக்காவைச் சாக்கா வைச்சு, என்னை டூ பீஸ் போட வைக்கலாம் என்று பாக்குறீங்க. ஆனா அதெல்லாம் நடக்காது."
உண்மையில் கல்யாணம் ஆவதற்கு முன் என் பெண்டாட்டியை எந்தெந்த உடைகளில் பார்க்கவேண்டும் என்ற கனவுகள் இருந்ததுண்டு ஆனால் அவையெதிலும் அவள் சொன்ன உடை கிடையாது. ஷேக்ஸ்பியர்ஸ் இன் லவ் படத்தில் அந்தக் கதாநாயகி அணிந்திருக்கும் பாரம்பரிய இங்கிலாந்து உடை பிடிக்கும் எனக்கு, அதே போல் த லாஸ்ட் சாமுராய் படத்தில் சாமுராயின் தங்கையான ஜப்பானியப் பெண் அணிந்திருக்கும் உடை, வெள்ளைப் பனியை ஆடையாக அணிந்திருப்பதைப் போன்ற மேற்கத்தியப் பெண்மக்களின் கல்யாண உடைகூட நிறையப் பிடிக்கும். கடேசியாக எப்பொழுதாவது அகிலா அணியும் மடிசார். இவையெல்லாம் அகிலாவிற்கும் தெரிந்திருக்கும்.
"எனக்கு ஏம்மா உன்னை டூ பீஸில் பார்க்கணும் நான் தான் பீஸே இல்லாமல் பார்த்திருக்கேனே..." சொல்ல தலையில் கொட்டியவள்.
"சரி கொஞ்சம் சீரியஸாய் பேசுவோமா, உங்கக்கா சொன்னதுதான் பிரச்சனையா? நீங்க பயப்படுறீங்களா நான் அமேரிக்கா போனா மாறிருவேன்னு. இவ்வளவுதானா இத்தனை வருடங்களில் நீங்கள் என்னை புரிந்துகொண்டது.
சரி மாறிருறேன்னே வைச்சுக்கோங்களேன். அதுல என்ன தப்பு, புது ஊரு, புது கலாச்சாரம், புது மக்கள்ன்னு வாழ்ந்தா மென்ட்டாலிட்டி மாறித்தானே போகும். என்ன உங்களுக்கு என்னையக் கூட்டிக்கொண்டு போறதுக்கு முன்னாடி உங்க அம்மாவைக் கூட்டிட்டுப் போகணும், அப்படியில்லாட்டி இரண்டு பேரையும் ஒரே சமயத்தில் அது உங்க பட்ஜெட்டுக்கு சரிவராது அவ்வளவுதானே. தாராளமாய் உங்கம்மாவைக் கூட்டிக்கிட்டு போங்க.
இருபத்தைந்து வருடங்களாய் உங்களை வளர்த்தவங்க அவங்கதானே, அதுக்கப்புறம் ஒரு பத்துவருஷம். இல்லை அதுவும் தான் சொல்லமுடியாதே ஒன்பது வருஷம் தானே உங்களை எனக்குத் தெரியும். இடையில் வந்த எனக்கு அவங்களை விட அதிக உரிமையிருக்க முடியாது தான்."
உண்மையில் அக்கா சொன்ன காரணங்களைவிடவும், அகிலா சொன்னதுதான் சரியென்று மனதிற்குத் தோன்றியது. சரி பிரச்சனையை ஆரம்பித்து வைத்தாகிவிட்டது பேசிமுடித்துவிடலாம் என்று நினைத்து அவளை அருகில் இழுத்து அமர்த்தினேன். ஆரம்பத்தில் நான் கல்யாணம் செய்து கொள்ள பயந்தது எங்கே எனது மனைவி என்னைப் புரிந்து கொள்ளமுடியாதவளாய் போய்விடுவாளோ என்றுதான்.
எனக்கும் அக்காவிற்கும் பல விவாதங்கள் பறக்கும், நான் பள்ளியிறுதி கூட தாண்டியிறாத, கிராமத்துப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்ல, ஏன் அப்படி நினைக்கிறாய் நகரத்துப் பெண்கள் சரியானவர்களாகவும் கிராமத்துப் பெண்கள் தவறானவர்களாகவும் இருந்துவிட்டால் என்று விவாதிப்பாள். நல்லவேளை அவள் சொன்னது போல் படித்தப்பெண்ணை கல்யாணம் செய்து கொண்டிருந்தேன், அது இப்பொழுது உதவுவதாகப் பட்டது. ஆனால் கிராமத்துப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளாததால் அக்காவின் கருத்தை தவறென்று ப்ரூப் பண்ணமுடிந்ததில்லை.
"உண்மைதான் அகிலா, ஆரம்பத்திலிருந்தே மனதில் ஓடிக்கொண்டிருந்த விஷயம் இது. இந்த பதினைந்தாண்டு சாப்ட்வேர் வாழ்க்கையில் பல தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தாலும், அம்மாவை அழைத்துச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
இன்று கூட்டிட்டுப்போவோம், நாளைக்குக் கூட்டிக்கொண்டு போவோம் என்று நினைத்து தட்டிக்கழிந்து கொண்டே வந்தது. இவையனைத்தும் என் மனதில் அடிஆழத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளாகவே நான் நினைத்திருந்தேன். அம்மாவிற்கும் இதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை, அது உனக்கே தெரியும். ஆனால் இது நிச்சமயமான காரணமாகயிருக்கும் என்று நீ சொன்னதற்கு பிறகுதான் எனக்கேத் தோன்றுகிறது.
ஆனாலும் பரவாயில்லை, அம்மா ஒன்றும் தவறாக நினைத்துக் கொள்ளமாட்டார்கள் நீ தயாராயிரு நான் உன் விசாவிற்கும் சேர்த்து ஏற்பாடு செய்கிறேன்."
அதுவரை நான் சொல்வதையே மிகக்கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த அகிலா.
"எனக்கு இதுவும் தெரியும். எனக்காகவோ இல்லை உங்களுக்காகவோ நீங்கள் கூட்டிக்கொண்டு போகவில்லையென்றாலும். மோகனா அக்காவிற்காக நீங்கள் என்னைக் கூட்டிக்கொண்டு போவீர்கள் என்று, ஆனால் அது தேவையில்லை. நான் வெயிட் பண்றேன், இன்னும் நிறைய நாட்கள் அங்கே தங்கியிருக்கும் அளவிற்கு ஒரு வாய்ப்பு வந்ததும் நானே புடுங்கி எடுத்து உங்களைக் கூட்டிப்போக வைக்கிறேன்.
நான் உங்கக்கிட்ட சொல்லவிரும்பியது, விரும்புவது, விரும்பப்போவதெல்லாம் ஒன்றே ஒன்றைத்தான், உங்கள் அக்காவைப் போல, அம்மாவைப் போல நானும் உங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். முழுசா புரிஞ்சிக்கிட்டேன்னு சொல்லமாட்டேன். ஆனால் வெளியில் ஒன்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே உங்கள் உள்மனதில் என்ன ஓடுகிறது என்பதை உங்களை நன்கறிந்த மற்றவர்களைப் போல நானும் அறிந்து கொள்ள நிறைய முயற்சி செய்கிறேன் அவ்வளவுதான்."
லெக்சர் அடிக்கத்தொடங்கினாள், இது சிலசமயம் அகிலாவிடம் எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம். புனிதபிம்பமாகத் தன்னைக் காண்பித்துக் கொள்வது. ஆனால் இந்தச் சூழ்நிலையில் இன்னொரு பிரச்சனையை நான் கிளப்ப நினைக்காததால்.
"இங்கப்பாரு அகிலா இப்படி நிமிஷத்துக்கு ஒரு பேச்சு பேசிக்கொண்டிருந்தால் என்ன சொல்ல, அதெல்லாம் முடியாது நீ வந்துதான் ஆகணும். நீ என்கூட வந்தால் அமேரிக்காவில் டிவியில் பே சானலுக்கு நாளொரு மேனிக்கு டாலர் அழவேண்டியிருக்காதேன்னு யோச்சிச்சேன். நீயிருக்கிறப்ப டீவியில் தெரிகிற பொம்மை எதுக்குச் சொல்லு. அதனால நீ வந்துதான் ஆகணும்."
தன்னை என்னிடம் இருந்து விலக்கிக்கொண்டவள், இது திருந்தாத கேசு என்று சொல்லிக்கொண்டு, தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுத்துக்கொண்டு அம்மாவின் அறைக்குச் சென்றாள். கனவில் நான் அமேரிக்காவில் பின்புறம் நீலக்கலர் பூக்களின் மத்தியில் ஜீன்ஸ் டீஷர்ட்டுடனும், என் மனைவி சேலையிலும் "நீ கட்டும் சேலை மடிப்பில நான் கசங்கிப்போனேண்டி" பாட்டிற்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தோம்.
நீ கட்டும் சேலை மடிப்பில நான் கசங்கிப்போனேன்டி
Posted on Wednesday, February 07, 2007
நீ கட்டும் சேலை மடிப்பில நான் கசங்கிப்போனேன்டி
பூனைக்குட்டி
Wednesday, February 07, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
காதல் காமக்கதைங்கிறது சரியாத்தானிருக்கு.
ReplyDelete