In புத்தகங்கள்

புலிநகக் கொன்றை

புலிநகக் கொன்றை எனக்கு அறிமுகமானது மரத்தடியில். சாதாரணமாகவே அந்தக் காலக்கட்டத்தில் கிடைத்ததையெல்லாம் படித்துக்கொண்டிருந்தேன். சூழ்நிலை அப்படி, கேன்பேவில் பெஞ்சில் இருந்த காலக்கட்டங்கள் அவை. அப்படிப்பட்ட ஒரு நாளில் அறிமுகம் ஆனது தான் புலிநகக் கொன்றை. மரத்தடி மக்கள் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தப் புத்தகம். இன்னும் சிலர் தாங்கள் படித்ததிலேயே மிகவும் நல்ல புத்தகம் என்றெல்லாம் எழுதி ஓவர் ஹைப் கிடைத்திருந்த புத்தகம். ஆனால் கைகளில் அந்தப் புத்தகத்தைப் பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் தான் கிடைத்தது.

Tiger-claw tree என்று ஆசிரியர் பி. ஏ. கிருஷ்ணன் ஆங்கிலத்தில் எழுதிய நாவலை, தமிழிலும் (அ) எழுதியிருக்கிறார் (ஆ) மொழிபெயர்த்திருக்கிறார். சில இல்லை பல சமயங்களில் விஷயங்களுக்கு கிடைக்கும் ஹைப்புகள் அதன் டிஸ் அட்வான்ட்டேஜ்களாக ஆகிவிடுவதுண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்தப் புத்தகத்திற்கு கிடைத்த ஹைப் சரியானதே.

"எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்
புள்ளிறை கூருந் துறைவனை
உள்ளேன் தோழி படீ இயரென் கண்ணே..."

இந்தப் பாடல்களுக்குப் அர்த்தம் சொல்லறது வைரத்தைக் கரியாக்கற விவகாரம். இருந்தாலும் சொல்லறேன். தோழி கேள். நான் அவனைப் பற்றி நினைக்க மாட்டேன். யாரை? எவன் நாட்டிலன் மணலடர்ந்த கரையில் இருக்கும் புலிநகக்கொன்றை மரத்தின் – ஞாழல்னா புலி நகக் கொன்றை மரம் – புலிநகக் கொன்றை மரத்தின் தாழ்ந்த, பூத்திருக்கும் கிளைகளில் பறவைகள் ஆக்கிரமித்துக் கூச்சல் இட்டு அழிவு செய்து கொண்டிருக்கின்றனவோ அவனை. என் கண்களுக்குச் சிறிது தூக்கம் கிடைக்கட்டும்.

ஐங்குறுநூறு 142ம் பாடலில் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தான் தனக்கு இந்த நாவலுக்காந தலைப்பு கிடைத்ததாக ஆசிரியர் பி.ஏ. கிருஷ்ணன் சொல்கிறார். அந்தப் பாடலும் அதன் பொருளும் தான் மேலே காண்பது.

தென் தமிழ்நாட்டு, தென்கலை பிராமணர் வகையறாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய நான்கு தலைமுறைக் கதைகளை சொல்ல முயன்றிருக்கிறார் ஆசிரியர். முதல் பக்கம் கொடுத்திருக்கும் அட்டவணை ஆரம்பத்தில் பெரிதும் உதவுகிறது. இதனால் ஆசிரியரால் கதைக்குள் வேகமாக டைவ் பண்ண முடிகிறது என்பது உண்மையே. நூறு, நூற்று இருபது ஆண்டு கதைக்குள் நிறைய விஷயங்களை தொட்டுச் சென்றிருக்கிறார் ஆசிரியர், அவருடைய எழுத்தில் தான் வைக்கும் விஷயங்கள் பிரச்சனையை ஏற்படுத்திவிடக்கூடாதே என்ற கவனம் தெளிவாகத் தெரிகிறது.

ஏனென்றால் தமிழ்நாட்டின் பிரச்சனைகளை இன்றும் ஏற்படுத்திவிடக்கூடய விஷயங்கள் அவை, கட்டபொம்மு, மருது பாண்டியர், சிதம்பரம் பிள்ளை, திலகர், வாஞ்சிநாதன், வவேசு ஐயர், சுப்பிரமணிய பாரதி, இராஜாஜி, பெரியார், எம்ஜிஆர், எம் ஆர் ராதா என தொட்டால் பற்றிக்கொள்ளக் கூடிய ஆட்கள் நாவலெங்கும் பரவியிருக்கிறார்கள் சில சமயங்களில் கதாப்பாத்திரங்களாக, சில சமயங்களில் விவரணைகளாக, சில சமயங்களில் உரையாடல்களாக.

கதையின் ஆரம்பக்கட்டங்களில் முற்றிலும் ஏற்படாத ஒரு தொய்வு என்னைப் பொறுத்தவரை, கம்யூனிஸம் மார்க்ஸிஸம் பற்றிய பேச்சு வரும் பொழுது எழுகிறது. இது ஆசிரியரின் தவறில்லை என்னுடையது. என்னுடைய தலைமுறை ஆட்களுக்கு கம்யூனிஸமோ மார்க்ஸ்ஸிஸமோ அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனால் அந்த யிசங்கள் பிரபலமாகயிருந்த காலத்தில் நடக்கும் கதையில் அவற்றைச் சொல்லாமல் விட்டுவிடமுடியாது தான். அதைப் போலவே மிகச் சுலபமாக விளங்கிக்கொள்ளும் அளவிற்கு சுலபமான கான்ஸெப்டுகளும் கிடையாது அவர்கள்.

ஆனால் எது எப்படியிருந்தாலும், பிரச்சனைகளுக்கான தீர்வு இதுதான் என்று ஒரு தீர்ப்பை முன்வைக்கவேயில்லை புலிநகக் கொன்றை, இந்த விஷயத்தில் மிகச் சிறப்பாகவே வந்திருக்கிறது. கடவுள் மறுப்பு, கடவுள் ஆதரிப்பு, காங்கிரஸ், திமுக இப்படி பல விஷயங்களை ஆசிரியர் அவர் பார்த்தது போலவே சொல்ல, நாமும் கேட்டுக்கொண்டதைப் போல பயணிக்க முடிகிறது நாவலில். பல சமயங்களில் ஒரு முடிவை சொல்லிவிடும்பொழுது அது நமக்கு பிடிக்காமல் போகும் பொழது நாம் நாவலின் சுவாரஸியத்தன்மையை இழக்கிறோம். அது புலிநகக் கொன்றையில் கிடையாது.

கதையின் சாராம்சம் இதுதான் என இரா. முருகன் காபி கிளப்பில் எழுதியது நீங்கள் கீழே காண்பது.

"...பொன்னா பாட்டி சாகக் கிடக்கிறாள். எந்தப் பொன்னாப் பாட்டி? நாங்குநேரி ஜீயரின் மடைப்பள்ளியில் புளியோதரைப் புலியாகக் கரண்டி பிடித்தவரின் ஒரே பெண். லேவாதேவி கிருஷ்ண ஐயங்காரின் ஒரே மகன் ராமனுக்குப் பெண்டாட்டியானவள்.

போஜனப் பிரியனான ராமன் சாப்பிட்ட நேரம் போகச் சற்றே பொன்னாவுடன் படுத்து எழ, நம்மாழ்வார், பட்சிராஜன் (பட்சி), ஆண்டாள் என்று மூன்று குழந்தைகள். அப்புறம் ஒரேயடியாகப் படுத்துத் திருநாடு அடைந்து விடுகிறார் அவர்.

நம்மாழ்வாருக்கு அப்போது புதிதாக எழுந்த தேசிய அலையில் கலக்க - வ.உ.சி, பாரதியோடு, காங்கிரஸ் தீவிரவாதிகளோடு செயல்பட விருப்பம். செயல்படுகிறான். கல்யாணம் ஆகி, மனைவி மது என்ற மதுரகவியைப் பிள்ளையாகப் பெற்றுக் கொடுத்து விட்டு உயிரை விடுகிறாள். தேசபக்தியும் வாழ்க்கையும் அலுத்துப்போய் நம்மாழ்வார் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.

அறுபது வருடம் கழித்து நம்மாழ்வார் திரும்பி வரும்போது அம்மா பொன்னா இன்னும் உயிருடன் - உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறாள். தம்பி பட்சி ஹோம்ரூல் இயக்கத்தில் ஈடுபட்டு வயதாகி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பெரிய வழக்கறிஞர். தங்கை ஆண்டாள் கன்னி கழியாமலேயே வாழ்க்கைப்பட்டு, அதேபோதில் கணவனைப் பறிகொடுத்து, இளமையில் விதவையாகி, சித்தம் தடுமாறி மனநோயாளியாக இறந்து போயிருக்கிறாள்.

பட்சியின் ஒரே மகன் திருமலை. அவனுடைய மகன் கண்ணன் நெல்லையில் கல்லூரி விரிவுரையாளன்.

திருநெல்வேலியில் பேராசிரியரை போலீஸ் காவலில் வைத்த வழக்கில் (கதை சிப்பாய்க் கலக காலத்தில் தொடங்கி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வரை நீள்கிறது) மாணவர் போராட்டத்தின்போது கண்ணன் வேலையை இழக்கிறான்.

நம்மாழ்வாரின் பிள்ளை மது பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபட்டு இறக்கிறான். அவனுடைய மகன் நம்பி டாக்டராக, பெரிய பாட்டி பொன்னாவைக் கவனித்துக் கொள்வதோடு, தன் மனைவி ரோசாவோடு கம்யூனிஸ்ட்டாகவும் இருக்கிறான்.

நம்மாழ்வார் ஜோஷிமடத்திலிருந்து தம்பி பட்சிக்கு எழுதிய கடிதம் கிடைத்து நம்பி தான் அவரைச் சந்திக்கஅங்கே போகிறான்.

ஆனால் நம்மாழ்வார் திரும்ப வரும்போது நம்பி நக்சலைட் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில்வைக்கப்பட்டு, விடுதலையான பிறகு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறக்கிறான்.

படுத்த படுக்கையாக இருக்கும் பொன்னா தன் பிள்ளை நம்மாழ்வாரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. நம்மாழ்வார் ரோசாவுடனும் அவளுடைய கைக்குழந்தையோடும் நம்பியின் நினைவோடும் அவள் வீட்டிலேயே தங்கி விடுகிறார்.

கண்ணன் ஐ.ஏ.எஸ் தேர்வு பெற்று தில்லிக்குப் பயணமாவதில் கதை முடிகிறது..."


இதையெல்லாம் விட இந்தக் கதையை தெளிவாகச் சொல்லிவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்பதால் காப்பி பேஸ்ட். மற்றபடிக்கு இந்தக் கதையைத் தொடர்ந்து நடந்த ஜெயமோகனுக்கும் பிஏ கிருஷ்ணனுக்கும் ஆன உரையாடல் நன்றாகயிருக்கும், அது இங்கே

அப்புறம் இரா.மு எழுதிய முழு விமர்சனம் இங்கே கிடைக்கும். ஆனால் பிரச்சனை டிஸ்கியில் இருக்கு மாற்றிக்கொள்ளுங்கள் மகானுபாவர்களே.

நன்றி இரா.முருகன், ராயர் காப்பி கிளப்.

Related Articles

2 comments:

  1. சாரி செந்தில் நீங்க அப்ப சொன்னது புரியலை. ;) இப்ப மாத்தியாச்சு.

    ReplyDelete

Popular Posts