In நாட்குறிப்பு

நாட்குறிப்பு - Layoff & Appraisal

இந்த வாரம் தொடக்கத்தில் இருந்தே சரியான வேலையிருந்தது, போனவாரம் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் கூட நான் அலுவகத்திற்கு வந்திருந்தேன். இரண்டு முக்கியக் காரணங்கள் ஒன்று ரிலீஸ், இரண்டாவது அப்ரைஸல். ரிலீஸ் என்றால் கூட அசையாமல் இருக்கும் என் மனதை ஆட்டிப்பார்க்கும் திறமை வாய்ந்தது அப்ரைஸல். செய்து கொண்டிருந்த வேலை வளவளவென்று அதிகரித்துக்கொண்டே செல்ல, பெருந்தலை ஒன்று முடிச்சதும் அப்ரைஸல் வைத்துக்கொள்ளலாம் நகைத்தபடியே விளையாட்டுக்காய்ச் சொல்ல வேற வழியேயில்லாமல் வேலை - முடிக்கவேண்டிய ஒன்றாகியது. நானும் பருப்பு மாதிரி அப்ரைஸல் டாக்குமென்ட்டில் எழுதியது எல்லாமே தற்பொழுது செய்துகொண்டிருக்கும் வேலையைப்பற்றி மட்டுமே. அதுகூட ஒரு காரணம் என் அப்ரைஸல் நாள் தள்ளிக்கொண்டு போவதற்கு.

நாளையும் மறுநாளும் கம்பெனி கிறிஸ்மஸ் பார்ட்டி என்பதால் எங்களுடன் சேர்ந்து கொண்டாட வந்திருந்ததாக நினைத்த கம்பெனியின் CTO மீட்டிங் ஒன்றில் சட்டென்று Product Developmentல் யூரோப்பிலும் அமேரிக்காவில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் Lay off செய்யப்போகும் விஷயத்தைச் சொல்ல, நிசப்தம் - இருநூறு பேர் முகத்திலும் பயம் தாண்டவமாடியது. ஆனால் தொடர்ந்த ஸ்டேட்மென்ட்டிலேயே பெங்களூர் டெவலப்மென்ட் சென்டரில் எந்த மாற்றமும் கிடையாது. அடுத்த 24 - 36 மாதங்களுக்கான ப்ளான் இருக்கிறது என்று சொன்ன பின்னரும் யார் முகத்திலுமே உயிரேயில்லை.

Insurenceல் செய்து முடிக்கவேண்டிய ஒரு காம்பனென்ட் பல்வேறு காரணங்களூக்காக செய்துமுடிக்கப்படாமல்/கிடைக்காமல் போக இந்த முடிவை எடுக்கவேண்டியதாய் அவர் சொன்னார். ஆனால் எனக்குத் தெரிந்து பெங்களூர் டெவலப்மென் ட் சென் ட்டரின் பிரம்மாதமான வெற்றி, அவர்களை டப்ளினில் இன்னொரு டெவலப்மென் ட் சென் ட்டரை நடத்துவதைப் பற்றி தீவிரமாக யோசிக்க வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். உண்மைதானே, ரூபாய்க்கும் யூரோ - டாலர் சம்பளத்திற்கும் உள்ள வித்தியாசம் எல்லோருக்குமே புரிந்தது தான். Oracle, SAP போன்ற ஜாம்பவான்கள் சண்டை போடும் ஒரு ஏரியாவில் தொடர்ச்சியாக Leaderஆக இருப்பது ஆச்சர்யத்திற்குரிய விஷயம் தான்.

CTO பேசும் பொழுது முன் பக்கத்தில் உட்கார்ந்திருந்ததோ வேறு விஷயமோ தெரியாது, எனக்கு பிரகாசமாகப் புரிந்த இந்த Layoff விஷயம் நண்பர்களுக்கும் மற்ற கம்பெனி மக்களுக்கும் புரியவில்லை. மேபி Layoff என்றதைக் கேட்டதுமே நின்று கொண்டிருக்கும் தரை நழுவுவதாக உணர்ந்திருக்க வேண்டும். CTO தனித்தனியாக, குழு குழுவாகச் சென்று பெங்களூர் சென்ட்டரில் மாற்றம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் ஒரு Product ஆக நினைத்து செய்யாத ஒரு விஷயத்தை சட்டென்று கடைசி சமயத்தில் இறுக்கிப்பிடித்து Productஆக மாற்றியதால் எங்கள் Teamன் மீது ஏகக் காதலாக இருந்தவரை எங்க head அதை பொதுவாக வெளியில் சொல்லவைத்தது அவருடைய சாமர்த்தியமே! ஒரு வழியாக வெள்ளைக்காரர்களின் வேலையைப் பறித்தாகிவிட்டது இனிமேல் நிச்சயமாய் இன்னும் அதிக மக்களை PDக்கு வேலைக்கு எடுப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். தெரியவில்லை.

நான் செய்து கொண்டிருக்கும் வேலை பற்றியும், கம்பெனி பற்றியும், நாங்கள் உபயோகிக்கும் Architecture பற்றியும் எழுத வேண்டும் என்று முன்னமே நினைத்திருந்தேன். ஆனால் என்னமோ இழுத்துக்கொண்டே போகிறது. சுவாரசியமான ஒன்றாகக்கூடயிருக்கும். ம்ம்ம் அப்ரைசல் அதைவிட்டுட்டேன் இடையில் நான் என் வேலையைச் செய்து காட்டியபிறகும் பெருந்தலை அப்ரைசலை அடுத்தவாரம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். ரிலீஸ், CTOவின் இந்தியா வருகை என்று அவரும் பிஸிதான் எனக்கு நன்றாகவே தெரியும். எனக்கு எந்த நாளில் அப்ரைஸல் மீட்டிங்க் நடந்தாலும் நாள்கணக்கு தவறாமல் கிடைக்க வேண்டிய கூடுதல் பணம் arrear ஆகக்கிடைத்துவிடும். இந்த தலை தான் என்னைத் தனிப்பட்ட முறையில் interview வைத்து எடுத்தது, என்ன காரணத்தினாலோ HR மக்கள் வெளியில் சென்றிருக்க, முதல் ரவுண்ட் இன்டர்வியூ எடுக்கும் ஆளும் வெளியில் சென்றிருந்த பொழுதில் நான் ஹோட்டலுக்குச் சென்றிருந்ததால் இவர் தான் என்னை தனிப்பட்ட முறையில் எடுத்திருந்தார்.

ஒரு முக்கால் மணிநேர இன்டர்வியூ முடியும் பொழுதே நீங்க பேப்பர் போட்டுவிட்டு காத்திருங்கள் நீங்கள் கேட்கும் சம்பளம் கொடுக்கமுடியும் என்று சொல்லியனுப்பினார். அன்று நினைத்தேன் சரியான மாங்காயாயிருப்பான் போலிருக்கு என்று ஆனால் ஆள் சரியான டெக்னிகல் மனுஷன், அங்க உதைக்குது இங்க உதைக்குது என்றால் தானே உட்கார்ந்து debug பண்ணி சரிசெய்யும் அளவிற்கு எங்கள் architectureன் in and out தெரிந்தவன். சரியான ஞாபகசக்தி, சென்ற முறை கம்பெனி அளவில் நடந்த Quiz போட்டியில் தன்விடை மட்டுமல்லாமல் மற்றவர்களுடைய விடைகளையெல்லாம் சொல்லி ஆச்சர்யப்படுத்தியவர். ம்ம்ம் பல சமயங்களில் நம்முடைய First impression படுதோல்வியடைகிறது. எனக்கு என் தலை விஷயத்தில் அப்படியே! இன்னும் அப்ரைஸால் முடியவில்லை பார்ட்டி முடிந்து வந்ததும் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இந்த முறை அப்ரைஸல் பற்றிய பெருங்கனவுகள் இல்லை, நான் என்ன செய்தேன் என்ன செய்யலை என்று எல்லாவிஷயங்களும் பெரியவருக்கு தெரியுமாதலால் அப்ரைஸல் இந்த முறை பிரச்சனையில்லாமல் செல்லும் என்று தான் நினைக்கிறேன். பார்க்கலாம்.

கம்பெனி வழக்கப்படி டிசம்பரில் கிறிஸ்மசுடன் சேர்த்து பதினைந்து நாள் விடுமுறை கொடுப்பது வழக்கம். இந்த முறையும் உண்டு, டிசம்பர் 19ல் இருந்து ஜனவரி 2 வரை விடுமுறை ஏற்கனவே இந்த விடுமுறையைக் கணக்கிட்டு டூர் ப்ளான் ஒன்று போட்டு டிக்கெட் எல்லாம் புக்செய்தாகிவிட்டது. என்ன உயிருக்கு ஆபத்து இல்லாமல் திரும்பி வரவேண்டும் அவ்வளவே! தூங்கி எழுந்து வேலை செய்து திரும்பவும் தூங்கத்தான் நேரம் கிடைக்கிறது எதுவும் எழுதியே ஆகவேண்டும் என்று எழுதிக்கொண்டிருக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In நாட்குறிப்பு

'கார்சியா மார்க்வெஸ்' பிச்சை வாங்கணும் சுஹாசினி கிட்ட - மாஜிக்கல் ரியலிஸம்

வியாழக்கிழமை அதுவும் ப்ரொஜக்ட் ரிலீஸ் பிஸியில் இருந்த நான் டீவி பார்த்திருப்பதே பெரிய விஷயமாயிருந்திருக்க வேண்டும். என்ன செய்ய கலிகாலம் முத்திடுச்சு, நான் 1,2,3 என்று சன் மியூஸிக்கிற்காக நகர்த்திக்கொண்டே வர 4 ல் ஜெயாடிவி, சுஹாசினி தங்கச்சி(ஹிஹி) ஹாசினி பேசும் படத்தில் பேசிக்கொண்டிருந்தாங்க! நானும் பேசாம மூடிட்டு போயிருக்கணும் இல்லாமல் சரி என்னா சொல்றாங்கன்னு பார்த்தேன் - சரியா கவனிச்சிக்கங்க நான் பார்த்தது கடைசி ஐந்து நிமிஷம் தான் இருக்கும் அதற்கே இப்படி ஒரு பதிவு.

அவருடைய கொனொஷ்டைகளைத் தாண்டி அவர் விமர்சனத்தைப் பார்ப்பதே பெரிய விஷயம், இருந்தாலும் ஹீரோ ஹீரோயின் பின்னாடி ஐம்பது க்ரூப் ஆர்ட்டிஸ்ட் ஆடுறதுக்கு சுத்திச் சுத்தி காரணம் சொல்லிட்டு 'மாஜிக்கல் ரியலிட்டி' அப்படின்னாங்க பாருங்க. என்ன சொல்ல 'கார்சியா மார்க்வெஸ்' கேட்டிருந்தா வருத்தப்படுவார் என்பதைத் தவிர. இந்த மாதிரி நேம் டிராப்பிங்களை முதலில் நிறுத்தலாம் இந்த தங்கச்சி.

நினைத்துக் கொண்டேன், இன்னும் இரண்டு தரம் 'அரசூர் வம்சத்தையோ' 'டார்த்தீனயத்தையோ' படிச்சி பாவத்தைப் போக்கிக்கலாம் என்று இருக்கிறேன்.

--------------------------

சுஜாதாவுடன் சாட்டிக் கொண்டிருந்த பொழுது 'கற்றதும் பெற்றதும்' பற்றிய பேச்சின் பொழுது - தான் நிறுத்தவில்லை என்றும் ஆவிதான் நிறுத்தியதாகவும் சொன்னது எனக்கு ஆச்சர்யத்தையே அளித்தது. நான் இன்றுவரை வெள்ளிக்கிழமை ஆன்லைன் ஆவியை வெள்ளிக்கிழமையே படிக்காமல் இருப்பதற்கு ஒரே காரணம் சுஜாதாதான்.

"w_sujatha: Murthy They are behaving funny these days"

இதுவும் கூட ஆச்சர்யமான ஒரு ஸ்டேட்மென்ட்டே என்னைப் பொறுத்தவரை. ஞானியைப் பற்றிப் பேசும் பொழுது சொன்ன,

"w_sujatha: subbudu no idea juno gnani is their chief adviser"

என்றது கூட எனக்கு ஆச்சர்யத்தையே அளித்தது. அப்ப "ஓ! பக்கங்கள்" நிறுத்தியதை எந்தக் கோணத்தில் அணுகுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். பின்னர் இன்னொரு கேள்விக்குச் சொன்ன,

"w_sujatha: Saha probably They are being advised wrongly "

பதிலைப் பற்றி எனக்குச் சொல்ல ஒன்றுமில்லை ;).

உயிர்மையில் பாரதிராஜாவைப் பற்றி எழுதியிருந்தார் அதிலும் ஏகப்பட்ட ஆச்சர்யப்படுத்தக் கூடிய விஷயங்கள். கேட்டதற்கு என்னுடைய சிறிது கால அவதானிப்பு என்று வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார், சமீபத்தில் நடந்த ஒரு சந்திப்பின் பொழுது பிரபல வலைப்பதிவரிடம் இதைப் பற்றிப் பேசினேன். ஆனால் பேச்சு சட்டென்று சினிமா, பாரதிராஜாவிடம் இருந்து நகர்ந்து வேறுபக்கம் சென்றுவிட்டது.(வேறயாரு சாருநிவேதிதா தான் அது - அதாவது பேச்சு சென்றது)

-----------------------------------------

சமீபத்தில் பெங்களூரில் இருந்து ஒரு தமிழ் ப்ளாக் எழுதும் படிக்கும் கும்பல் 'ஆடு தாண்டிய காவிரி' 'முத்தத்தி' வரை சென்று வந்தது. ஒரு 'நைஸ்' ட்ரிப். SLR வாங்கிய பிறகு பெங்களூரில் செய்யும் முதல் பயணமாயிருக்கும், முன்னமே திருச்சி, கங்கை கொண்ட சோழபுரம் போய் வந்திருந்தேன். ஆனால் இந்த முறை என் காமராவை கையில் எடுக்கவே மனம் நடுங்கியது. எல்லாம் பெரிய பெரிய கைகள் எல்லாம் அவங்கவங்க SLR உடன் வந்திருந்ததால் கொஞ்சம் portrait மட்டும் எடுத்தேன். போர்ட்ராய்ட்டுகள் போட அனுமதி கிடைக்காததால் ;) போடலை. தமிழ்மணத்தின், மற்ற குழுமங்களின் அரசியல் அதிகம் பேசப்பட்டது, என் வாயை நன்றாகக் கிளறினார்கள். எவ்வளவு உளறினேன் என்று தெரியாது. யாராவது பதிவெழுதினால் பார்க்கலாம். இருமுறை ஃபோனில் மட்டுமே பேசியிருந்த நண்பரொருவர் பக்கத்து சீட்டில் மாட்டினார், பாவம், ஆனால் நாங்கள் இருவரும்(வேணும்னா நான் மட்டும்) பேசிய பேச்சில் டெம்போ டிராவலரே கொஞ்சம் ஆடிப் போயிருந்தது. ஹிஹி. வெளியில் பப்ளிஷ் செய்றோனோ இல்லையோ அதைப்பற்றி ஒரு பதிவு எழுதிவைச்சிக்க முயற்சி செய்யணும்.

Read More

Share Tweet Pin It +1

10 Comments

In Science ஜல்லிஸ்

உங்கள் பதிவை ஹாக்கினால் தப்புவது எப்படி?

இட்லிவடையின் பதிவை ஹாக்கிவிட்டார்கள் என்று ஒரு புரளியோ உண்மையோ கிளம்பி பெரிதாய் பேசப்பட்டது. அப்பொழுது இட்லிவடை gmail account hack ஆகிவிட்டதாகவும் blogger அக்கவுண்டை திரும்ப எடுத்துவிட்டதாகவும் சொன்னார். நிறைய பேர் இதைப்பற்றி பேசினார்கள் இட்லிவடை பதில் சொன்னாரா என்று தெரியாது ப்ளாக்கர் அக்கவுண்டை எப்படி திரும்பஎடுத்தார் என்று.

இந்தப் பிரச்சனை நடந்து கொண்டிருந்த பொழுது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார் இட்லிவடை சொல்வது சாத்தியமா என்று. நான் இல்லை என்று அவரிடம் கூறினேன். ஏனென்றால் இதைப்போல் செய்ய முயன்று தேடி கண்டுபிடிக்கமுடியாமல் இருந்ததால்.

எனக்கு பூனையாக இல்லாமல் போன சோகங்களுக்கும், செப்புப்பட்டயத்திற்கும் ஒரே மாதிரியான பெயர், ஃபோட்டோ வருவது பிடிக்கவில்லை. செகுவாராவை பூனைக்குட்டிக்கு அவ்டாரா போட்டு சக்க கடியா இருந்தது எனக்கு இது நடந்தது ப்ளாக்கரில் இருந்து பீட்டா ப்ளாக்கருக்கு மாறிய பொழுது. எல்லா பதிவும் ஒன்னா ஒரு மெயில் ஐடிக்கு போய்விட்டது.

இப்ப உங்களுக்கான சொல்யூஷன்.

முதலில் இன்னொரு gmail idக்காரரை உங்களில் பதிவில் எழுத இன்வைட் செய்யவேண்டும். எப்படியென்றால் Settings - Permissions - Add Authorல் ஒரு gmail idக்கு இன்வைட் அனுப்புங்க, அதை அந்த gmail idயில் இருந்து accept செய்துகொள்ளுங்கள்.

பின்னர் அந்த புதிய gmail id போட்டு ப்ளாக்கரை திறந்தால் நீங்கள் இன்வைட் எந்த பதிவில் இருந்து செய்திருந்தீர்களோ அந்தப் பதிவில் வெறும் எழுதுவதற்கான வசதி கிடைத்திருக்கும். இப்பொழுது திரும்பவும் உங்களின் பழைய gmail idல் ப்ளாக்கரைத் திறந்தால். அதே Settings - Permissionsல் Grant admin privileges என்று ஒரு லிங்க் வரும் இதைக் கிளிக்கினால் அந்த புதிய gmail idக்கு admin privileges கிடைக்கும், எப்படி உங்கள் பழைய gmail idக்கு இருக்கிறதோ அதைப் போல்.

இப்பொழுது பழைய gmail idக்கு admin rights இல்லாமல் author rights மட்டும் தான் இருக்கும். அந்த author rightsஐயும் எடுத்துவிட்டால் உங்கள் பதிவு உங்கள் புதிய gmail idயில் இயங்கத் தொடங்கும். author rights எப்படி எடுப்பதென்றால் அதற்குப் பக்கத்தில் இருக்கும் Delete பட்டனை குத்தி நீக்கலாம்.

இப்பொழுது நான் அப்படிச் செய்து என் பூனைக்குட்டியையும் செப்புப்பட்டயத்தையும் பிரித்துவிட்டேன். அதை டெஸ்ட் செய்ய இந்தப் பதிவு வந்த சில நிமிடத்தில் பூனனக்குட்டியில் weekend ஜொள்ளு வரும். இந்த விளக்கம் கொஞ்சம் மேம்போக்காக programming terms போல இருக்கலாம். உதவி வேண்டினால் தனியாக விளக்குறேன்.

இட்லிவடை இப்படித்தான் செய்தாரா என்றும் விளக்கலாம் ;)(அவரு பின்னூட்டம் போடுவாரா?)

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In நாட்குறிப்பு

டைரிக் குறிப்புகள் - வாலிபால் அனுபவங்கள்

நான் வாலிபால் விளையாட மனதளவில் தயாரான பொழுது இன்னமும் நினைவில் இருக்கிறது பசுமையாய். ஒன்பது முடித்து பத்தாவது சேர்வதற்கு முன்னான வருடப்பரிட்சை விடுமுறை காலம். BHELல் கோச்சிங் கேம்ப்கள் நிறைய நடைபெறும், உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் துறையைத் தேர்ந்தெடுக்கலாம், ஓவியம், நீச்சல், டென்னிஸ், ஷட்டில் இப்படி. என் வாழ்க்கையில் விடுமுறைக்கென்றோ இல்லை வேறு காரணங்களுக்காகவோ என் வீட்டை விட்டு வெளியில் தங்கியதில்லை. அதேபோல் வேறு மனிதர்கள் யாரும் எங்கள் வீட்டிலும் தங்கியதில்லை நான் அக்கா அம்மா அப்பா எல்லாம் ஒரு தனித்தீவு போலத்தான் அந்தக் காலத்தில். இப்பவும் ஒன்னும் என்னைத் தவிர்த்த மற்றவர்களின் வட்டம் அவ்வளவு பெரியது இல்லை என்றே நினைக்கிறேன்.

BHELல் ஒரு அருமையான பாஸ்கெட்பால் கிளப் ஒன்று உண்டு, கலைச்செல்வன் என்பவர் நடுத்துகிற கிளப் அது. அப்பா PET என்பதால் கலை அண்ணாவுடன் நல்ல பழக்கம் அதுமட்டுமல்லாமல், அப்பாவின் நெருங்கிய நண்பரான இன்னொரு PETயின் அண்ணா பையன் என்கிற முறையில் அப்பா சிலதடவைகள் பாஸ்கெட்பால் காம்படிஷனுக்கு முன்னால் பிஸிகல் டிஸ்ப்ளே செய்து கொடுத்திருக்கிறார். அந்தக் காலத்தில் நான் அப்பாவிடம் அவ்வளவாகப் பேசமாட்டேன், அம்மாவிடம் நச்சரித்து என்னை அங்கே சேர்த்துவிடுமாறு சொல்லிக்கொண்டிருந்தேன். அது அப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்லை தான்; என்ன காரணமோ அப்பா கலை அண்ணாவிடம் பேசி என்னைச் சேர்த்துக் கொள்ளச் சொல்லியிருந்தார்.

நான் சின்ன வயதில் இருந்தே பாஸ்கெட்பால் விளையாடுவதில் மிகவும் ஆர்வமுடன் இருந்தேன். ஒரு அழகான விளையாட்டு, கலை அண்ணா நடத்தின அத்தனை டோர்னமென்ட்டும் பார்த்திருக்கிறேன். அப்பா PET என்றாலும் கோ-கோ, கபடிக்கு ஊதுவார் தெரியும் - ஆனால் பாஸ்கெட்பால் எல்லாம் ரெஃப்ரி பண்ணமாட்டார். அவர் மற்றவர்களைப் போல் PETக்கு படித்து வந்தவர் இல்லை, நல்ல உடற்பயிற்சியும் உடல்திறனும் சேர்த்து அவரை உடற்பயிற்சி ஆசிரியராக்கியிருக்கிறது. அவரைப் பற்றி இன்னொருமுறை எழுதுகிறேன். எனக்கு ரொம்பவும் வருத்தமாகயிருக்கும் அப்பா ஏன் பாஸ்கெட்பால் ரெஃப்ரி பண்ண மாட்டேங்கிறார் என்று. அப்படி எனக்கு விருப்பமான விளையாட்டு.

அம்மா காலையில் எழுப்பிவிட வீட்டிலிருந்து நடந்தே ஸ்டேடியம் வந்து பேஸ்கட்பால் காலரியில் உட்கார்ந்திருந்தேன். கலை அண்ணாவுக்கு என்னை நன்றாகத் தெரியும் அப்பாவுடன் வைத்து நிறைய முறை என்னைப் பார்த்திருக்கிறார், என்னுடன் நன்றாகப் பேசவும் செய்வார். அந்தக் காலத்தில் ஸ்கூலுக்கெல்லாமுமே ட்ரௌஸர் என்பதால் ட்ரௌஸரும் டீஷர்ட்டும் போட்டுக்கொண்டு கேன்வாஸ் ஷூ அணிந்து கொண்டு சென்றிருந்தேன். இது போன்ற கோச்சிங்-கேம்ப்களுக்கு பணம் கட்டித்தான் சேரமுடியும், ஆனால் அப்பா PET என்பதாலும் கலை அண்ணாவின் நண்பர் என்பதாலும் காசு எதுவும் கட்டவில்லை என்று எனக்குத் தெரியும்.

நான் தான் முதல் ஆள், அன்று தான் பாஸ்கெட்பால் கோச்சிங் முதல் நாள், நேரம் ஆக ஆக புதிதாய் கோச்சிங்கில் சேரவந்தவர்கள் ஒன்றிரண்டாக வரத்தொடங்கினர். ஏற்கனவே அங்கே பயிற்சி பெற்று வருடம் முழுவதும் ஆடும் மற்றவர்களும் சிறிது நேரத்தில் வர பழைய ஆட்கள் களத்தில் இறங்கி விளையாடத் தொடங்கினர். புதியவர்கள் கூட்டாகச் சேர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள், நமது inferiority complex யாருடனும் என்னைப் பேச விடாமல் செய்தது அதுமட்டுமில்லாமல் அவர்கள் எல்லோரும் அழகான ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து கொண்டு ஜெர்ஸியில் வந்திருந்தார்கள். நான் ஒருவன் தான் ட்ரௌஸர் மற்றும் டீஷர்ட். எனக்கு சாதாரணமாக எழுந்த தாழ்வு மனப்பான்மையால் அங்கிருந்து நகர்ந்துவிட்டேன் அன்று. பக்கத்தில் வாலிபால் கோச்சிங் நடந்து கொண்டிருந்தது. அன்று அங்கும் சேரவில்லை, அம்மாவிடம் அழுது நான் பாஸ்கெட்பால் சேரமாட்டேன் என்று ஒற்றைக் காலில் நின்று வாலிபால் கோச்சிங்கில் சேர்ந்தேன்.

இன்று என்னால் சொல்லமுடியவில்லை நான் வாழ்க்கையில் பாஸ்கெட்பாலை இழந்துவிட்டேனா என ஏனென்றால் எனக்கு வாலிபால் கிடைத்திருக்கிறதே. பாஸ்கெட்பால் க்ரவுண்டுக்கு அருகில் தான் வாலிபால் க்ரவுண்ட், கலை அண்ணா நான் பாஸ்கெட்பால் கோச்சிங் வராமல் வாலிபால் கோச்சிங்கில் இருப்பதைப் பார்த்து அப்பாவிடம் வருத்தப்பட்டதாக அம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அண்ணன் என்னையும் சிலசமயம் பார்த்து சிரித்துவிட்டுப் போய்விடுவார். நிறைய பேருக்கு நான் ஏன் அன்று அப்படியொரு முடிவெடுத்தேன் என்று தீர்மானிக்க கஷ்டமாகயிருக்குமாயிருக்கும். பள்ளிக்கூடத்தில் இருந்து அப்பாவின் ஆதிக்கம் செல்லுபடியாகும் எல்லா இடங்களிலும் சலுகை, பணம் கட்டி பெரிதாக எதையுமே செய்ததில்லை. டியூஷனாகட்டும், டைப்ரைட்டிங்க், ஷார்ட் ஹாண்ட் ஆகட்டும் எல்லாமே ஃப்ரீ. ஆனால் அப்பாவின் முன் காசுகேட்க விரும்பாதவர்கள் என்னிடம் காசு கொடுத்து படிப்பவர்களிடம் காட்டும் அக்கறையைக் காட்டவில்லை என்று எனக்குத் தோன்றியிருக்கிறது. நான் எதையுமே சரியாய் முடித்ததில்லை, டியூஷனாகட்டும் டைப்ரைட்டிங் கிளாஸாகட்டும் இரண்டு மாதங்கள் பணம் தராமல் இருப்பதை ஒத்துக்கொள்ளும் அவர்களால் தொடர்ச்சியாக அப்படியிருக்க முடிந்திருக்கவில்லை அதனால் பெரும்பாலும் நானே நின்றுகொண்டுவிடுவேன். அப்பாவுக்கும் தெரியுமாயிருக்கும் ஆனால் கண்டுகொள்ளமாட்டார்.

வாலிபால் கோச்சிங் வந்தவர்கள் என்னைப் போலவேயிருப்பதாகப் பட்டது எனக்கு. ஒரு மாத கோச்சிங் முடியும் பொழுது நான் சர்வீஸ் போட, பூஸ்டிங் செய்ய, அன்டர் ஆம் எடுக்கக் கற்றுக்கொண்டிருந்தேன். கோச்சிங் முடித்ததும் எல்லோருக்கும் கொடுத்த பனியன் எனக்குக் கொடுக்கப்படவில்லை முதலில் ஏனென்றால் அதெல்லாம் காசுகட்டி பயின்றவர்களுக்குத் தான். ஆனால் என் கோச் ராஜமாணிக்கம் எனக்கும் வாங்கித் தந்தார். மற்றவர்களைப் போல ஒரு மாதப் பயிற்சிக்குப் பின் நான் வாலிபால் விளையாடுவதை நிறுத்திவிடவில்லை அதற்கு முக்கியக் காரணம் என் கோச் ராஜமாணிக்கம் என்னைத் தொடர்ந்து வந்து விளையாடச் சொன்னார்.

நானும் பள்ளிக்கூடம் முடிந்ததும் வீட்டிற்குச் சென்று காபி குடித்துவிட்டு கிளம்பி வாலிபால் விளையாட வந்துவிடுவேன், Community Center என்று சொல்லப்படும் ஒரு கிளப்பைச் சார்ந்தது தான் அந்த வாலிபால் கிரௌண்ட். BHELக்கு இருக்கும் வாலிபால் டீம் அங்கே தான் விளையாடுவார்கள், அவர்கள் ஏழு மணிக்குத்தான் வருவார்கள், எங்கள் வாலிபால் க்ரவுண்டும் சரி பாஸ்கெட்பால் க்ரவுண்டும் சர்ரி Fled Light வசதியுள்ளவை. அதனால் இரவு ஒன்பது மணிவரை விளையாடிவிட்டுத்தான் செல்வார்கள். கம்யூனிட்டி செண்டருக்குச் சென்று வாலிபால் பந்துகளை எடுத்துக்கொண்டு க்ரவுண்டுக்கு வருவது எனக்கு வழக்கம். வந்து மற்ற எல்லா பந்துகளையும் வைத்துவிட்டு ஒரு பந்தை எடுத்து பயிற்சி செய்து கொண்டிருப்பேன்.

என்னை எல்லாம் விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள், நான் ரொம்பவும் சின்னப்பையன் ஃபிங்கரிங் போடும் பொழுது பந்து கைக்குள் நிற்காத காலங்கள் அவை. ஆனால் இடைவிடாதப் பயிற்சி, பந்து பொறுக்கிப்போடுவது தான் வேலை ஒரு பக்கம் நெட்கட்டியிருப்பார்கள் இன்னொரு பக்கம் ஓப்பன் ஸ்பேஸ். கையில் வைத்து ஃபிங்கரிங், அண்ட்ர் ஆம் போட்டுக்கொண்டே அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். பந்து என்னைத் தாண்டிச் சென்றால் என் கையில் இருக்கும் பந்தைக் கொடுத்துவிட்டு வெளியில் சென்ற பந்தை எடுத்து பயிற்சி செய்வேன். இரண்டு மூன்று மாதங்கள் இப்படி பயிற்சி செய்திருக்கிறேன்.

என்ன ஆனதோ தெரியாது ஒரு நாள் community centerல் வேலை பார்க்கும் நபர் எனக்கு பந்து தரமுடியாது என்று சொல்லிவிட, அன்று நான் க்ரவுண்டில் பந்து இல்லாமல் உட்கார்ந்திருக்க வந்த BHEL ப்ளேயர்கள் இனிமேல் என்னிடம் அப்படிச் சொல்லக்கூடாது என்று சொல்லி அந்த நபரைத் திட்டினார்கள். அதில் விளையாடும் எல்லோருக்கும் என் தாத்தாவைத் தெரிந்திருக்கும், எங்க அம்மா வழித்தாத்தா வாலிபால் ப்ளேயர், National referee. இன்றுவரை அவரை மாதிரி சர்வீஸ் போடமுடியாதென்று நிறையபேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ரயில்வேஸ்காக விளையாடியவர் அவர். சொல்லப்போனால் எங்கள் குடும்பத்திலேயே வாலிபால் விளையாடத்தெரியாத(proper) ஆள் எங்கக்கா தான். சித்தி, அம்மா, மாமா இருவரும், அப்பா, தாத்தா எல்லோரும் விளையாடுவார்கள் அவரவர்களின் பள்ளி கல்லூரிக்காக விளையாடியவர்கள்.

பின்னர் BHEL அணியினரின் பயிற்சி நிறைவு பெற, அதில் விளையாடிக் கொண்டிருக்கும் வேறு அண்ணன்கள் மட்டும் விளையாடுவார்கள் அப்பொழுது என்னையும் சேர்த்துக் கொள்வார்கள். அப்படித் தொடங்கியது தான் நான் க்ரவுண்டிற்குள் மேட்சிற்காக இறங்கியது என்றால் அதற்குப் பிறகு பள்ளிக்காக, கல்லூரிக்காக, கம்பெனிக்காக(Kanbay) விளையாடியிருக்கிறேன். இன்று ஏதேதோ காரணங்களுக்காக பேஸ்கெட்பால் கிடைக்காததால் தான் வாலிபால் விளையாடினேன் என்று நான் நினைக்கவில்லை, என் உயரத்திற்கு என்னைச் சாதிக்க வைத்தது வாலிபால், நான் என்னுடைய உழைப்பை போட்டேன் பலன் கிடைத்தது. அவ்வளவே பெரிய அளவில் வெற்றிகள் பெற்றதில்லை தான், மறுக்கவில்லை. ஆனால் நல்ல ஸ்டெமினாவைக் கொடுத்தது வாலிபால் தான், சொல்லப்போனால் எங்கள் வீட்டிலேயே ஸ்டெமினா குறைவாக இருப்பது நானாகத்தானிருக்கும்.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In சினிமா விமர்சனம்

அழகிய தமிழ்மகன்

அம்மா அப்பா பெங்களூருக்கு தீபாவளிக்கு வந்திருந்ததால் ஏதாவது ஒரு தீபாவளி ரிலீஸ் படம் போகாலாம் என்று ப்ளான் இருந்தது. போனதடவை வந்திருந்த பொழுது சிவாஜி போகலாமான்னு கேட்டாங்க ஆனால் டிக்கெட் வாங்கச் சென்ற பொழுது நான் எதிர்பார்த்த சமயத்தில் சிவாஜி படம் பார்க்கமுடியாது என்று வந்துவிட்டதால் இந்தமுறை டிக்கெட் முன்பே வாங்கிவிட்டேன். INOXல் வெள்ளிக்கிழமை மதியம் தான் முதல் ஷோ. அதற்கு ரிஸர்வ் செய்து வைத்திருந்தேன், பதிவுகளில் விமர்சனம் என்ற பெயரில் இந்தப்படத்தைப் பற்றி எழுதியிருந்தாலும் அதைப்படித்து நான் இந்தப்படத்தைப் பார்க்கப்போகும் வாய்ப்புகள் எதுவும் குறையப்போவதில்லை என்பதால் அவைகளைப் படிக்கவில்லை; எல்லாம் ஒரு முன்னேற்பாடு தான்.

முதல் பாதி படம் நல்ல விறுவிறுப்பாகத்தான் இருக்கிறது, என்னக் கொடுமைன்னா படத்தின் ஆரம்பத்திலேயே படத்தில் ஏதோ 'கதை' சொல்ல வந்திருக்கிறார்கள் என்பதைப்பார்த்து ஆச்சர்யமாகத்தான் இருந்தது. என்னாது டாக்டர். விஜய் படத்தில் கதையா? அதுவும் பர்ஸ்ட் ஹாஃபிலா! ஆச்சர்யம்தான். படம் மலைக்கோட்டையில் தொடங்குகிறது, இதையும் ஏதோ சாமியார் சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கிறேன். இப்பல்லாம் நிறைய படத்தில் மலைக்கோட்டையை காண்பிச்சிட்டுத்தான் தொடங்குறாங்க.

விஜய் ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுக்கொண்டு 100M ஓடுறார், எனக்குத் தெரிந்து BPBHSS(அதாங்க எங்க ஸ்கூல் Boiler Plant Boys Higher Secondary School)ல் நடக்கும் ஸ்கூல் லெவல் போட்டியில் கூட மக்கள் ஸ்பைக்ஸ் ஷூக்கள் போட்டுத்தான் ஓடுவார்கள். அண்ணாத்த காலையில் ஜாகிங் போகும் ஷூவில் வந்து 100M ஓட்டம் ஓடுகிறார். ஆனால் விஜய் படத்தில் இந்த அளவுக்கு லாஜிக் பார்க்கிறதெல்லாம் ரொம்ப ஓவர்னு எனக்கே படுவதால் எஸ்கேப்.

ஸ்ரேயா அக்கா வராங்க, கொஞ்சமா ட்ரெஸ் போட்டு ஆட்டம் ஆடுறாங்க, கொஞ்சம் கண்ணீர் விடுறாங்க கடைசி கிளைமாக்ஸில் சென்டிமென்ட் ஆகப்பேசி 'கெட்ட'விஜய்யை திருத்துகிறார். ஹிஹி பெண்ணிய பக்வாஸ் விமர்சனம் ஒன்றை எதிர்பார்க்கலாம், ஒரிஜினல் விஜய்யையும் டூப்ளிகேட் விஜய்யையும் கண்டுபிடிக்கக்கூட முடியாத அளவிற்கு ஸ்ரேயாவை முட்டாளாகக் காண்பித்திருக்கிறார்கள் என்று ஆனால் படத்தில் பாதியில் கழட்டி விடாமல் ஷ்ரேயா அக்காவை கடைசி வரை இழுத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

விஜய்க்கு இரட்டை வேஷமாம், ஒரு இன்ச் கூட வித்தியாசம் இல்லாமல் இரண்டு வேடங்களிலும் விஜய், ஆனால் அதற்கேற்றார்ப்போல் கதையும் இரண்டும் பேரும் ஒரே மாதிரி. எனக்குத் தெரிந்து ஜீன்ஸ் என்று ஒரு படம் வந்தது அதில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதில் ஐஸ்வர்யாராயை உண்மையாகக் கல்யாணம் செய்துகொள்ளும் பிரசாந்திற்கு(அதாவது இரட்டையரில் ஒருவர்)த் தான் எல்லாப் பாடல்களும் இருக்கும் ஒரே ஒரு பாடலைத் தவிர, இதை ஏன் சொல்றேன் என்று கேட்கிறீங்களா? அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்ததும் வெளியில் என் வயசொத்த பையன்கள் ரொம்பவும் கவலைப்பட்டார்கள் கடைசியில் அந்த இன்னொரு பிரசாந்தைக் இப்படி செஞ்சிட்டாங்களேன்னு அதனால ரொம்பவும் வருத்தப்பட்டதாகவும் சொன்னார்கள்.

இப்படி எல்லாம் ரசிகர்கள் நினைப்பார்கள் என்று நினைத்தோ என்னமோ 'கெட்டவன்' விஜய்க்கு ஒரு பாட்டு, ஒரு ஹீரோயின், ஒரு ரேப் சீன்(அப்படியா?), ஒரு குழந்தை என சொல்லிக்கொண்டே வந்தவர்கள், இரட்டையரில் கெட்டவனான விஜய்யைக்கூட கடைசியில் திருந்துவதாகக் காட்டியிருக்கிறார்கள், கெட்டவனாக இருப்பவன் வாழ்க்கையில் நல்லவனாக ஆவதை எதிர்ப்பவனல்ல நான் என்றாலும் எனக்கென்னமோ இந்தப்படத்தை அவன் கெட்டவனாகவே கடைசியில் இருப்பதாக நினைத்து கிளைமாக்ஸ் வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

'பொன்மகள் வந்தாள்' பாட்டு சொல்லப்போனால் கதைக்கு ஏற்றவகையில் ரீமிக்ஸ் செய்திருப்பதாகச் சொல்லலாம் தான், ரீமிக்ஸ் பாடல்களில் இது தனியாக நிற்கிறது - ரஹ்மானாம், கலக்கலாக இருக்கிறது பாட்டு. ஆனால் இன்னும் நல்லா செய்திருக்கலாம் இந்தப்பாடலின் டான்ஸ், அதுவும் விஜய் இருக்கும் பொழுது படம் காண்பித்திருக்கலாம். ம்ஹூம் ஒழுங்காக இந்தப்பாடலை எடுக்கவில்லை, விஜய்யின் ட்ரெஸ்ஸிங்கும் இந்தப்பாடலுக்குப் பொருந்தவில்லை சிம்புவிடமாவது கேட்டிருக்கலாம்(சிம்பு அந்த விஷயத்தில் சூப்பர், லூசுப்பெண்ணே எடுத்திருந்திருந்த விதமும் ட்ரெஸ்ஸிங்கும் அருமை).

மற்றபடிக்கு ஷகிலாவுடனான இரட்டை அர்த்த கிச்சுகிச்சு, ஷகிலாவின் Cleavage ஷாட்ஸ் வைக்கணும்னே ஷகிலாவை இழுத்திருப்பார்களோ என்னமோ இன்னொரு பாட்டில் ஷ்ரேயாவும் Cleavage காட்டிச் செல்கிறார் என்ன சொல்ல தியேட்டரின் முதல் சீட் வரிசையில் ஏற்கனவே கழுத்தை தூக்கி படம் பார்த்துக் கொண்டிருந்தேன் என் நிலைமை கவலைக்கிடம் ;).



சந்தானம், கஞ்சா கருப்புவும் கூட கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள் சில இடங்களில் சிரிப்பும் வருகிறது.

இரட்டையர் படம், கிராபிக்ஸ்க்கு இன்னும் கொஞ்சம்(நிறைய!!!) செலவு செய்திருக்கலாம். பக்வாஸா இருக்கு, ஜீன்ஸ் குறைந்தபட்சம் ஆளவந்தான் அளவுக்கு கூட கிராபிக்ஸ் இல்லை. விஜய் இந்த அளவுக்காவது ரிஸ்க் எடுத்து ஒரு கதை(!) இருக்கும் படத்தில் நடித்திருக்கிறாரே! பாராட்டலாம் ஏன் என்றால் இது போன்ற படங்கள் வெற்றி பெற்றால் தான் விஜய் இன்னும் கீழிறங்கி பக்வாஸ் படங்கள் எடுத்து அதையும் நூறு நாள் ஓட்டமாட்டாராயிருக்கும். படத்தின் பாதியிலேயே விஜயின் அம்மா, அப்பாவைக் காணோம். இரண்டு விஜயில் எது ஒரிஜினல் என்பதில் வரும் சந்தேகங்கள் என நிறைய லாஜிக் ஓட்டைகள் உண்டுதான் என்றாலும் விஜய்கிட்டேர்ந்து இந்த அளவு படம் வருவதே பெரிசுன்னு நினைச்சிக்க வேண்டியதுதான். விஜய் எப்படி படம் எடுத்தாலும் அவங்க அப்பா 100 நாள் ஓட்டுறார்ங்கிறதால இது மாதிரி படம் எடுக்கவாவது தோனிச்சே. எங்கப்பாவின் விமர்சனத்தை பொதுப்புத்தி சார்ந்த விமர்சனமாகப் பார்த்தால் படம் நல்லாயிருக்கு என்று தான் என் அப்பா சொன்னார். வேறெதுவும் நினைவில் வந்தால் பின்னால் இணைக்கிறேன்.


Read More

Share Tweet Pin It +1

16 Comments

In இருத்தலியநவீனம்

நான் கவிழ்த்த கோப்பைகள்

நானே நினைத்தாலும் ஒரு நாளைப் போலவே இன்னொரு நாள் என்னால் இருக்க முடிந்திருக்கவில்லை; அதே கடற்கரை, அதே நீ, அதே நான், அதே கடலைக்காரன், ஆனால் வேறு அலைகள் வேறு மேகக்கூட்டம் வேறுவகையான மனிதர்கள். ஒரு நாளைப் போல இன்னொரு நாள் என்றைக்குமே எனக்கு அமையாமல் போனது. முந்தைய நாள் உட்கார்ந்திருந்த அதே மது அருந்துமிடம், அதே வகையான மது, ஊற்றிக்கொடுப்பவனும் நேற்றயவனே அதிலெந்த மாற்றமும் இல்லை; ஆனால் இங்கும் வேறு வகையில் வேறுபாட்டை நான் உணர்கிறேன்; வாழ்க்கை மாறுதல்களையும் சேர்த்தே தன்னுடன் சுழற்றிக்கொண்டு பயணம் செய்கிறது என்று, இன்னொரு ஐந்து கோப்பை மது அருந்திய பிறகும் நான் வாந்தியெடுக்காத நாளொன்றில் சொன்ன மனிதனுக்கு மற்றுமொரு நாள் ஐந்து கோப்பை மதுவாங்கித் தர நினைத்திருக்கிறேன். அம்மட்டிலுமாவது எண்களில் ஒற்றுமையை உருவாக்கப் பார்க்கிறேன் அவனுடைய நான்கு கோப்பை மதுவின் போதையிலேயே வாந்தியெடுக்க வைக்க விடாமல் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன். அத்தனை சுலபமானதா இந்த விஷயம் அதற்கு யாரை வேண்டுவது காலையில் அவனுடைய மனைவி நல்ல உணவு தர வேண்டும்; அதற்கு, முந்தையநாள் அவனுடைய போதை அவனுடைய மனைவியுடன் சண்டைவரை சென்றிருக்காமல் இருக்கவேண்டும். இப்படி ஒன்றைப் போலவே மற்றொன்றை உருவாக்க நிறைய அனுமானங்கள் ப்ரார்த்தனைகள் கட்டுப்பாடுகள்.



ஒன்றிலிருந்து மாறுபட்ட மற்றொன்றை அதனுடைய மாறுதலுக்காகவே ரசிக்கும் எண்ணம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத்தொடங்கியதை நேற்றிரவு உன்னுடனான முயங்குதலுக்குப் பிறகே உணர்ந்தேன். அதே கட்டில் அதே உந்தன் எந்தன் நிர்வாணங்கள் திறந்திருந்த ஜன்னலின் வழியே அதே பழைய நிலா என்று கேட்டாலும் நினைவுகளைப் பசுமையாக்கும் முஹம்மத் ரஃபி, உன்னுடைய வேண்டுகோளுக்காக நறுமணம், என்னுடைய வேண்டுகோளுக்காக தேவைக்கதிமான வெளிச்சம், நேற்றிரவு முயங்கிய அதே நிலை ஆனாலும் உன் உச்சத்திலோ என் உச்சத்திலோ, உச்சத்தின் பொழுதான நினைவுகளிலிலோ மாறுதல்கள். ஆனால் நான் மாற்றங்களை அதன் முந்தைய நிலையின் மாறுபாடுகளுக்காகவே காதலிக்கத் தொடங்கினேன். மாற்றங்களை விரும்பாதவளாய், மீண்டும் மீண்டும் ஒரே இரவை உருவாக்கத் துடிப்பவளாய், நேற்றைப்போலவே இன்றும் இருக்கவேண்டும் என்ற உன் விருப்பம் நீ பழையது ஆகிவிட்டாய் என்ற உன் கழிவிரக்கத்தின் வெளிப்பாடாக வியர்வைப் பிசுபிசுத்தலுடன் கூடிய முயங்குதலுக்குப் பின்னரான உறக்கமற்ற நிலை உணர்த்துகிறது.

அறையின் சமநிலையை நிர்மூலமாக்குவதற்கான முயற்சிகளை தன்னுடைய நான்கு கைகளால் ஆன தீவிர தேடுதலால் புறப்படும் ஒலியலைகளால் நிகழ்த்திக் கொண்டிருந்த மின்விசிறியின் தேடல் ஓய்வதாயும் இல்லை வெற்றி பெற்றதாயும் இல்லை. திறந்த மார்பும் முட்டிக்காலை உரசிக்கொண்டிருக்கும் பெர்முடாவும் என்னுடைய அடையாளங்களாக மாறிவிட்டிருந்தன. நினைவுகளைப் போன்ற கொடுமையான ஒரு கொலைகாரன் இல்லை என்று நினைத்தவனுக்கு அந்த அறையே கொலைக்களமாக தோற்றமளித்தது ஆச்சர்யம் இல்லைதான்; அந்த அறையின் ஒவ்வொரு அங்குலமும் என்னைக் கொல்வதற்கான ஆயுதங்களைத் தாங்கியவாறு ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்ததாகப் பட்டது எனக்கு.

ஒரிரு மாதங்களுக்கு முன்னர் மனிதர்களின் முகங்களைப் போல் கொடூரமானது ஒன்றும் இல்லை என்று நினைத்து நானாய் அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த அறையின் நீள அகலம் தான் இன்று என்னை கற்பனையின் கருப்புக் கதவுக்குப் பின்னால் அழைத்துச் செல்வதாயும் மீண்டு வரும் வழி நிச்சயமாய்த் தெரியப்போவதில்லை என்பதாயும் உலகின் அத்தனைக் கொலைக்களங்களிலும் பயன்படுத்திய கருவிகள் தாவாங்கட்டைக்குக் கீழும் வளர்ந்த பற்களைக்காட்டி சிரிப்பதாயும் பட்டது.

---------------------------------

தேவைப்பட்டால் முடிந்தால் தொடர்வேன்...

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In நாட்குறிப்பு

டைரிக் குறிப்புகள்

என் எழுத்துநடையைப் பற்றிய கிரேஸ் எனக்கு உண்டுதான்; பலநாட்களில் மனம் ஒரு நிலையில் இல்லாதபொழுது முன்பு எழுதியவற்றை எடுத்து படித்து சிரித்துக் கொண்டிருந்திருக்கிறேன். அதென்னமோ எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட நடை கிடையாது கொஞ்சம் போல் சுஜாதாவைக் காப்பியடித்துக் கொண்டுவந்ததாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். சுஜாதா படிச்சிட்டு என்னுதில்லை இதுன்னு சொன்னாருன்னா என்னுதுதான் இந்த நடை. விருப்பமில்லாமலோ இல்லை வேறு காரணங்களுக்காகவோ தங்கள் சொந்த நடையை மாற்றிக்கொண்டு எழுதுபவர்களை நினைத்தால் பாவமாகயிருக்கும். என்னால் ஒரு முழுநீள நகைச்சுவைப் பதிவு எழுதமுடியாததற்குக் காரணமாய் நான் நினைத்துக்கொண்டிருப்பது கூட இந்த விஷயத்தால் தான்.

POGOவில் Just for laughs gags, Smile OK please ம் ரொம்ப வருஷமா பார்த்துவருகிறேன். Takeshi's castle முன்பிருந்தே வருகிறதென்றாலும் அவ்வளவு தீவிரமாய் பார்க்கமுடியாததற்கு வீட்டில் இருந்த மற்றவர்களுக்கு பெரும்பாலும் விருப்பத்திற்கு உரிய ஒன்றாக இல்லாமல் இருந்தது தான் காரணம் பெங்களூர் வந்ததில் இருந்து நான் தொடர்ச்சியாக பார்க்கும் ஒரு விஷயம் இந்த நிகழ்ச்சி மனசுவிட்டு சிரிப்பதற்கு ஏற்ற நிகழ்ச்சி மற்றவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து சிரிப்பதெல்லாம் சரியா என்ற கேள்வி எழுந்தாலும் பங்கேற்பவர்களும் Enjoy செய்வதால் நமக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது.

சன் மியூஸிக்கில் இரவு 9 - 10 மணிக்கு ஹலோ ஹலோவில் தொடர்ச்சியாக ஹேமா சின்ஹா வந்துகொண்டிருந்த நாட்களில் நானும் தொலைபேசி ஜல்லியடித்திருக்கிறேன். அந்தப் பொண்ணு கொஞ்சம் வாத்து மாதிரியிருக்கும், சுமாரா தமிழ் பேசும் மொக்கையாக கேள்வி கேட்டு அதுக்கு அதைவிடவும் மொக்கையாய் க்ளூ கொடுக்கும். ராஜிவ் காந்தியோட அம்மா பேர் என்னான்னு கேட்டுட்டு அவங்க பேரில் ஒரு பாதி இந்திரான்னு க்ளூ கொடுக்கும்னா பார்த்துக்கோங்க. ஆனால் எனக்குத் தெரிந்து ஆனந்த கிருஷ்ணன் - ஹேமா ஜோடி நல்லாயிருக்கும் ஆனால் ஹைட் வித்தியாசம் அதிகம் இருக்குங்கிறதுனால விடமாட்டாங்கன்னு நினைக்கிறேன். ஒரு நாள் இப்படித்தான் பேசிட்டு பிடித்த பாடலான "ஊரோரம் புளியமரம்..." போடுங்கன்னு சொல்லிட்டு போனை வைக்குறேன். நண்பரொருவர் போன் செய்து ஏன்யா வேற பாட்டே கிடைக்கலையா என்று கேட்டார். அப்பத்தான் தெரிஞ்சது ரொம்பப்பேர் இதை பார்த்துக்கிட்டு வேற இருப்பாங்கன்னு.

நான் "ஜூன் போனால் ஜூலைக்காற்றே..." தான் கேட்டேன் ஆனால் அந்தப்பாட்டை கொஞ்ச நேரத்திற்கு முன் தான் ஒளிபரப்பினோம் வேற சொல்லுங்கன்னு முன்னமே கேட்டு இந்தப்பாட்டை வாங்கிக்கிட்டாங்க. இப்பொழுதெல்லாம் ஒரு பாட்டை பிரபலப்படுத்தணுனு சன்மியூசிக்கில் நினைச்சிட்டா பண்ணிடுவாங்கன்னு நினைக்கிறேன். "உலக அழகி நான் தான்..." இந்த பிறப்பு படப் பாடலை முதலில் பார்த்தப்ப சுத்தமா பிடிக்காம இருந்தது. ஆனால் தொடர்ச்சியா பார்க்கப்போய் இப்ப ரொம்பப் பிடிச்சிப்போச்சு.



அழகான பொண்ணை என்னப் பாடு படுத்தியிருக்காரு பாருங்க அந்த இயக்குநர். இந்தப் பொண்ணும் ஹேமா சின்ஹாவும் ஒரு நிகழ்ச்சிக்காக சன்மியூசிக்கில் ஒன்றாய் நின்னப்ப எந்தப் பொண்ணை சைட் அடிக்கிறதுன்னு பெரிய குழப்பமே வந்துடுச்சுன்னா பார்த்துக்கோங்களேன். இந்தப் பொண்ணுங்களுக்கு எதுவும் ரசிகர் மன்றம் இருக்கான்னு தெரியலை; இருந்தா சேர்ந்துக்கலாம் இல்லைன்னா ஒன்னு உருவாக்கலாம்னு இருக்கேன் என்ன சொல்றீங்க.

காதலிப்பதைவிடவும்
கவிதையெழுதப் பிடித்திருந்தது
எனக்கு
கவிதையெழுதுவதற்காகக் காதலித்தவன்
நானொருவனாகத்தான் இருப்பேன்

அப்படின்னு ஒரு மேட்டர் எழுதி என்னுடைய ஸ்டேட்டஸ் மெசேஜில் போட்டதும் போட்டேன். சக்க மொத்து வாங்கினேன். அதுவரைக்கு சாட்டிங்கில் பார்த்திராத நண்பர்கள் எல்லாம் வந்து காட்டு காட்டிவிட்டு சென்றிருந்தனர். ஆனால் எல்லாருமே சொல்லிவைத்ததைப் போல் காதலியைத் தான் துக்கம் விசாரித்திருந்தார்கள். "பாவம்யா உங்க காதலி" என்று.

வா.மணிகண்டனின் "ஒரு தற்கொலையும் இரண்டு காரணங்களும்" சிறுகதை படித்தேன். கிளைமாக்ஸில் சடர்ன்னான திருப்பம் இருக்கும் பெரும்பான்மையான கதைகள் நன்றாகத்தான் இருக்கும். இக்கதையும் அப்படியே ஆனால் சஸ்பென்ஸ் கதைகளுக்கு முக்கியமான ஆரம்பத்தில் இருந்தே வாசகரை அந்தக் கதைக்குள் தள்ளி அவரையும் ஒரு பக்கம் சிந்தித்துக் கொண்டு வரவைக்க வேண்டும். முடிவென்பது முற்றிலும் வாசகர் ஊகிக்காத ஒன்றாகயிருக்க வேண்டுமே ஒழிய அதுவரை கதையில் சொல்லப்படாத ஒரு விஷயமாக இருக்கக்கூடாது; இந்தக் கதையில், "இதுதான் ச‌மய‌ம் என்று பேச நான் ஆர‌ம்பித்தேன்." என்ற ஒரு இடத்தில் மட்டும் தான் அவர் அந்த விஷயத்தில் இவருக்கான தனிப்பட்ட ஆர்வத்தைக் காட்டுகிறார்.

பிகே சிவக்குமார் என்னிடம் சொல்வார், துப்பாக்கியைப் பற்றிய விவரங்களைக் கொடுத்து எழுதுகிறீர்கள் என்றால் அந்தக் கதையில் துப்பாக்கி எங்காவது ஒரு இடத்தில் வெடித்திருக்கவேண்டும் என்று. ஆனால் இந்தக் கதையில் துப்பாக்கி வெடிக்கிறது ஆனால் அதைப்பற்றி விவரங்கள் இல்லை ;). எங்கிருந்தோ சட்டென்று முளைத்த துப்பாக்கியொன்று வெடிக்கிறது. வாசகர் முதல் முறை படிக்கும் பொழுது ஜட்ஜ் செய்ய முடியாமல் அந்த ஹீரோவுக்கும் நரேஷின் பெண்டாட்டிக்கும் முதலிலேயே தொடுப்பு உண்டு என்று எங்காவது சொல்லியிருக்க வேண்டும். வாசகர் கவனிக்காத மாதிரி அதைச் செய்ய வேண்டும். ஆனால் அந்தக் கதை படிக்கும் பொழுது விறுவிறுப்பாக இருந்தது உண்மை. உரையாடலே இல்லாமல் சரசரன்னு இழுத்துட்டுப் போயிருக்கிறார் வாழ்த்துக்கள்.

ராஜேந்திர குமார், சுபா மற்றும் ஏனைய சஸ்பென்ஸ் புத்தகங்கள் மீதான ஆர்வம் குறைந்ததற்கு இதுதான் காரணம். கிளைமாக்ஸில் எங்கிருந்தோ முளைக்கும் ஒரு புதிய வில்லனைக் காண்பித்து எழுத ஆரம்பித்துவிட்டார்கள் எல்லாக் கதைகளையும் சொல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக எழுதும் பொழுது உழைப்பு குறைந்து எழுதித்தள்ளுவது தான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

ஷேர் டிரேடிங்கில் இறங்கியிருக்கிறேன்னு சொன்னதும் அட்வைஸ் கொடுக்காதவங்களும், எச்சரிக்கை செய்யாதவர்களும் தான் குறைவாகயிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அம்மா உண்மையிலேயே பயந்துவிட்டார்கள், அக்காவைத் தவிர பயமுறுத்தாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். அக்காவிற்குத் தெரியுமாயிருக்கும் சொன்னாலும் திருந்தாத ஜென்மன் என்று. சைடில் Portfolio என்றொன்றைப் போட்டிருக்கிறேன். இதில் தற்சமயம் நான் வாங்கியிருக்கும் Stock களைப் போடலாம் என்றொரு உத்தேசம் இருக்கிறது; தற்சமயம் குறைவாக இன்வெஸ்ட் செய்வதால் சரி, பின்னால் பிரச்சனை வருமே என்று நண்பர் ஒருவர் கேட்டார் நான் சொன்னேன் 100 வாங்கினேன் என்றால் 10 என்று சொல்லிவிட்டுப் போகலாம் என்று.

இந்த நண்பர் தான் என்னுடன் சிவாஜி பார்த்தது. என்னமோ நினைத்துக்கொண்டவராய் சட்டென்று "நீ பொண்ணுங்க ஷேர் மார்கெட்டில் இன்வெஸ்ட் செய்து பார்த்திருக்கிறியா?" என்று கேட்டார். "நான் ரொம்பவும் யோசித்துப் பார்த்துவிட்டு ஆமாம் நம்ம "பம்பா நந்தி" இல்லை அவ இன்வெஸ்ட் செய்து பார்த்திருக்கிறேன் ஏன் கேக்குறீங்க" என்று கேட்டேன். "இல்லை அவளை விடு கல்யாணம் ஆனவ அவ புருஷன் ஷேகர் சொல்லி செய்றாளாயிருக்கும். நான் பார்த்திருக்கேன் ஷேகர் டிரேடிங் செய்வதை" சொல்லிவிட்டு மீண்டும் "கல்யாணம் ஆகாதவளுங்க யாராவது செஞ்சு பார்த்திருக்கிறியா?" என்று கேட்டார். நான் பதில் சொல்லாமல் "நான் தேடிப்பிடிச்சி சொன்னாலும் அவங்கப்பா சொல்லிச் செய்றான்னு சொல்லுவீங்க" என்று சொன்னேன்.

பின்னர் இதைப்பற்றி கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தோம் பெண்களுக்கு இந்த விஷயத்தில் இன்னும் சுதந்திரம் கிடைக்கலை என்று நான் சொல்ல நிறைய விஷயங்களுக்கு அப்படித்தான் அப்படிப்பார்த்தா இந்த விஷயம் ரொம்பக்கடைசியாத்தான் வரும்னு சொல்லிட்டுப் போனார் அவர். நான் வேறெதாவது சொல்வேன்னு தெரியும் அவருக்கு அதனால் தான் அவ்வளவு வேகமாய் நகர்ந்தது.

இதே போல் முன்பொருமுறை எழுதிய குறிப்புகள் கல்லூரி உறவுகளைப் பற்றிய சிறுகுறிப்புகள்

Read More

Share Tweet Pin It +1

2 Comments

Popular Posts