In Science ஜல்லிஸ்

Of Big Bangs, Parallel Universes and 11 dimensions - The String Theory

நீண்டகால யாஹூ உபயோகிப்பாளன் என்ற முறையில் யாஹூவின் இந்த புதிய பீட்டா மெயிலைப்பற்றி தீவிரமாகப்படித்துவருகிறேன்.

கூகுளைப்போல யாஹூவும் டாட் அய்ட்டத்தை உபயோகத்தில் கொண்டுவந்துள்ளது. என்னோட பேவரைட் ஐடிதான் கிடைக்கலை. mohandoss.i@yahoo.com() டாட்டுக்கு பிறகு நான்கு கேரக்டர்கள் வரணுமாம். அதுனால வேற ஒரு ஐடியை எடுதுக்கொண்டேன்.(ஹிஹி உண்மையில் இரண்டு. இன்னும் ஆசை போக மாட்டேங்குது.)

அப்புறம் ஒரு ஆன்லைன் வேர்ட் புரொசசிங் டூல் ஒன்னு வந்திருக்கு. இன்னும் சிறிது காலத்தில் ப்ளாக் எழுதும் மக்களிடம் வரவேற்பு நிச்சயமாய்க்கிடைக்கும் என்று நினைக்கிறேன். இதில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன் உபயோகப்படுத்தி பாருங்கள்.

அப்புறம் கொஞ்சம் சைன்ஸ் பத்தி, அறிவியல் உலகத்தில் இருக்கும் மோசமான வேலைகள் பற்றி ஒரு கட்டுரை படித்தேன் சமீபத்தில். நீங்களும் படித்துப்பாருங்கள்.

கட்டுரை குறிப்பு இலகிய மனம் கொண்டவர்கள் படிக்கவேண்டாம்.

வழக்கம் போல ஒரு சூப்பரான ஐட்டம் படிக்கக்கிடைத்தது. ஆனால் தமிழில் எழுதும் எண்ணம் இல்லாததால் அப்படியேத் தருகிறேன். தனித்தமிழ் மக்கள் மன்னிக்கவும். இதைப்பத்தி ஒரு சைன்ஸ் பிக்சன் கதை எழுதியாகிவிட்டது. அடுத்தவாரம் போடுகிறேன். (செத்தீங்கடே)

உங்கள் அனைவருக்குமே, Big Bang Theory, Parallel Universes பத்தி தெரிஞ்சிருக்கும். சில அறிவுஜீவிகளுக்கு 11 dimensions and The String Theory பற்றியும். அதைப்பற்றி சில டாக்குமெண்டரிக்களை பார்க்கமுடிந்தது.

என்னால் முடிந்த சில பில்டப்புகளை மட்டும் கொடுக்கிறேன். ஐன்ஸ்டின் தியரி ஆப் எவரிதிங் என்ற ஒன்றை நிரூபிக்க நினைத்திருந்தார். தலைவரின் வார்த்தகளின் படி "ஐன்ஸ்டைன் ஐம்பதாண்டுகளுக்கு முன் இறந்து போகுமுன், The Theory of Everything என்ற உலகின் நான்கு வகை ஆதார சக்திகளை, குறிப்பாக புவிஈர்ப்பு விசை யையும் க்வாண்டம் சக்திகளையும் ஒரே சமன்பாட்டில் ஒருமித்து அறிய முற்பட்டார்... முடியவில்லை! இன்னும் அது விஞ்ஞானிகளுக்குக் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டு இருக்கிறது."

இந்த ஸ்டிங் தியரியால் அது முடியும்னு சொல்றாங்க(????) சில டாக்குமெண்டரிக்களும் கிடைத்தது. கூகுள் அனுமத்தித்திருக்கும் நாடுகள் மட்டுமே பார்க்கமுடியும். முக்கியமாய் இந்தியாவிலிருந்து பார்க்கமுடியாது. நான் சில தகடுத்திதங்கள் செய்து பார்த்தேன்.

நான் சில தகடுத்திதங்கள் செய்து பார்த்த, வெளியில் சொல்லக்கூடிய முறைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.

உண்மையிலேயே விளக்கமான டாக்குமெண்டரிகள். அனைவரும் பார்க்கவேண்டியது. யாரோ எழுதியிருந்தார்கள், வாத்தியாரும் கூட, ஐன்ஸ்டின் சொன்ன கடவுள் டைஸ் விளையாடுவதில்லை என்பதைப்பற்றி, அந்த வரிகளில் உள்ள தவறுகளைக்கூட டாக்குமெண்டரியில் சொல்லியிருந்ததாக ஞாபகம். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.


ஒன்னாம் நம்பர்
இரண்டாம் நம்பர்
மூன்றாம் நம்பர்



கட்டக்கடேசியா,

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். அடுத்த வருஷமும் வருவோமுல்ல தொல்லை பண்ண.

Credits: geetham.net, pbs.org, yahoo.com, writely.com, popsci.com.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In சோழர்கள்

சோழர்களும் கேசரிப்பிரச்சனையும்

பராந்தகன் இறந்ததற்கும், முதலாம் இராஜராஜன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி, முப்பது ஆண்டுகள் கொண்ட குறுகிய காலமாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். இப்பகுதிக்கான ஆதாரங்கள் அறிஞர்களால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் முழு விவாதத்திற்கு பிறகே யார் யார் எப்போது அரியணை ஏறினர் என்பதை ஒருவாறு நிர்ணயிக்க முடியும்.

கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள்

முதலில் நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களின் தன்மையை ஒருவாறு அறிய வேண்டும், இவற்றில் கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகளே முக்கிய ஆதாரங்களாகும்.

இந்த காலநிலையைப்பற்றிய கல்வெட்டுக்களைத்தவிர, பல செப்புப்பட்டயங்களும் நமக்குச் சான்றுகளாக உள்ளன. இச்சான்றுகளிலிருந்து முதலாம் பராந்தகனுக்கும் இராஜராஜனுக்குமிடையேயான சோழமன்னரின் வமிசாவழியை நாம் முடிவு செய்யவேண்டும்



கண்டராதித்தன்

இராஜகேசரி கண்டராதித்தனின் ஆட்சிக்குத் திருவாலங்காடு, லெய்டன் பட்டயங்களும் திருச்சிராய்ப்பள்ளி மாவட்டத்தில் கிடைக்கும் 8-ம் ஆண்டைச்சேர்ந்த பிள்ளையார் மற்றும் ஆழ்வார் அரிகுலகேசரி தேவ என்று குறிப்பிடும், பல இராஜகேசரி கல்வெட்டுக்களும் தென் ஆற்காட்டில் கிடைக்கும் மும்முடிச் சோழ கண்டராதித்தனின் 2-ம் ஆண்டைச்சேரந்த கல்வெட்டு ஒன்றும் சான்று கூறுகின்றன.

இவனது பட்டத்தரசி

செம்பியன் மாதேவி என்ற மனைவி மூலம் பிறந்த உத்தமசோழன் என்ற சிறுகுழந்தையை விட்டுச்சென்றான். இவ்வரசி மிகுந்த சிவபக்தியுடையவள். இளவயதிலேயே தன் கணவனையும் பின் தன் மகனையும் இழந்த செம்பியன் மாதேவி, கி.பி. 1001 வரை பல ஆண்டுகள் வாழ்ந்தாள். இவ்வரசி எடுப்பித்துள்ள சிவன் கோயில்களும், இவற்றைப்பராமரிக்கும் பொருட்டு தன் மகனுடைய ஆட்சியில் விடப்பட்ட பல அறக்கட்டளைகளை இதற்கு சான்றுகூறுகின்றன.

அரிஞ்சயன்

அரிகுலகேசரி, அரிஞ்சயன் அல்லது அரிந்தமன் ஆகிய பட்டங்களின் பொருள் ஒன்றாயிருப்பதன் அடிப்பஆயில், இவை முதலாம் பராந்தகனின் இளையமகனையே குறிப்பிடுகின்றன. அரிஞ்சய பரகேசரி தன் சகோதரன் கண்டராதித்தனை அடுத்து சிறிது காலம் ஆட்சிசெய்தான்

அரிஞ்சயனைப் பொருத்தமட்டில் இவனது ஆட்சியைப்பற்றிக் கூறும் சில செப்பேடுகளுடன் 12-ம் ஆட்சிஆண்டைச் சேர்ந்த இராஜகேசரிக் கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளது. இதன் மூலம் அரிஞ்சயன் நெடுநாள் வாழ்ந்து அரசுரிமையைப் பெற்றிருந்தபோதும், இவ்வுரிமையைச் சிறிதுகாலமே அவன் நுகரமுடிந்தது.

வீமன் குந்தவையார், கோதைப்பிராட்டியார் என்ற இவனுடைய இரு மனைவியர், இவனுக்குப்பின்னும் உயிர்வாழ்ந்து, இவனது மகனுடைய ஆட்சிக்காலத்தில் பல தானங்களைச் செய்தனர். வீமன் குந்தவை என்பவள் வேங்கிநாட்டு மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி.

சுந்தரசோழன்

அரிஞ்சயனுக்குப்பின் அவனுக்கும் அன்பில் பட்டயங்களில் கூறப்படும் அவனது ஒரே பட்டத்து அரசியான வைதும்பை இளவரசி கல்யாணிக்கும் பிறந்த ஒரே மகனே அரியணை ஏறினான். இவன் பெயர் இரண்டாம் பராந்தகச் சுந்தர சோழன். இவன், மதுரை கொண்ட இராஜகேசரி என்றும் அழைக்கப்பட்டான்.

காஞ்சிபுரத்தில் பொன்னாலான தன்னைடைய மாளிகையில் சுந்தரசோழன் இறந்தான். அதனால் அதன் பிறகு, ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டதாலும், இம்மன்னன் வடபகுதியில் தங்கி, தன் நாட்டின் நிலவரங்களை அயராது கவனித்தான் என்று அனுமானிக்கலாம். மலையமான்களின் வமிசத்து வானவன் மாதேவி என்ற இவன் மனைவி, கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக்கோயிலில் வைக்கப்பட்டது.


தலைகொண்ட என்பதற்குப் பொருள்

இக்காலப்பகுதியின், வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ள தலைகொண்ட என்ற சொற்றொடரின் பொருள் என்ன என்பதை காணலாம். சோழ மன்னன் ஒருவனின் தலையைக் கொண்டதாக, வீரபாண்டியனும், வீரபாண்டியனது தலையைக்கொண்டதாக மற்றவரும் கூறியிருக்கின்றனர்.

பாண்டிய மன்னனால் தலையை வெட்டி எறியப்பட்ட சோழ மன்னர் யார் என்பதைப்பற்றி சர்ச்சைகள் இருந்துவருகின்றன. ஆனால் இந்தச் சொற்றொடர், தன்னை வெற்றிகொண்ட மன்னனிடம் தன் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் வகையில், ஒரு மன்னன் தலைசாய்ந்து நிற்பதையே குறிக்கும்.

இதே காலத்தில், இரண்டாம் ஆதித்தன் வீரபாண்டியனைப் போரில் கொன்று, வெட்டப்பட்ட அவனுடைய தலையைச் சோழநாட்டின் தலைநகருக்குக் கொணர்ந்தான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் திட்டவட்டமாகக்கூறுகின்றன. இவ்வாறிருக்க ‘தலைகொண்ட’ என்ற விருதை வீரபாண்டியன் ஏற்றிருப்பது தான் ஒரு சோழ மன்னன் அல்லது இளவரசன் மீது தற்காலிகமாகக்கொண்ட வெற்றியைப் புகழ்ச்சியுடன் கூறிக்கொள்வதையே குறிக்கும்.

கேசரி பிரச்சனை

அதாவது சோழ மன்னர்கள் தங்களின் பெயர்களுக்கு பின்னால் பரகேசரி, மற்றும் இராஜகேசரி என்ற பட்டப்பெயர்களை ஒரு ஒழுங்குமுறையில் வைத்துக்கொண்டனர். அதாவது பட்டத்தில் இருக்கும் மன்னன் இராஜகேசரியாக இருந்தால் அடுத்து பட்டத்திற்கு வரும் மன்னர் பரகேசரி. இது அப்படியே அடுத்த முறை மாறும் அதாவது இராஜகேசரியாக. இப்பொழுது உள்ள பிரச்சனையைப் பார்ப்போம்.

அதாவது, மதுரை கொண்ட இராஜகேசரி என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுவது யார்? என்பதைப்பற்றிய கேள்வி. கண்டராதித்த இராஜகேசரி, ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்று கல்வெட்டுக்களில் உள்ளது.

பராந்தகன், வாழ்நாளிலேயே இராஜாதித்தன் இறந்தபிறகு, இளவரசுப்பட்டம் பெற்ற இவனது ஆட்சி தொடங்கி இருக்கவேண்டும். கண்டராதித்தன் ஒரு பரகேசரி என்றும் திருவாலங்காட்டு பட்டயங்களில் இவனுக்கு அடுத்துக் கூறப்பட்டுள்ள அரிந்தமனே, மதுரை கொண்ட இராஜகேசரி ஆவான் என்றும் கருதப்படுகிறது.

ஆனால் ஏற்கனவே கூறியபடி இந்தவாதம் தவறானது. இராஜாதித்தன், இளவரசுப்பட்டம் பெற்ற பொழுது இராஜகேசரி விருதைப் பெற்றிருக்கலாம், ஆனால் இவன் தன் தந்தைக்கு முன்பே இறப்பதனால், இவனுடைய விருதையே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால் பராந்தகப் பரகேசரியை அடுத்தவந்த மன்னன், ஒரு இராஜகேசரியே ஆவான் கண்டராதித்தன் ஒரு இராஜகேசரியே என்பது பொதுவான கருத்தாகவே உள்ளது என்றாலும். இது இராஜாதித்தன் தன் தந்தைக்கு முன்பே இறந்ததன் விளைவே இது என்பது தளிவாக உணரப்படவில்லை.

அரியணையில் அமர்ந்திருக்கும் மன்னர் இராஜகேசரியா? அல்லது பரகேசரியா? என்பதைப் பொறுத்தே இளவரசனோ அல்லது இளவரசர்களோ, இராஜகேசரி அல்லது பரகேசரி என்ற விருதினை ஏற்ற வழக்கத்திலிருந்து, வாரிசுப்பிரச்சனையை நாம் தளிவாக தீர்க்கமுடியும்.

அரிஞ்சயனின் மகன் சுந்தரசோழன் ஒரு இராஜகேசரி என்று அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன. இவனே மதுராந்தகன் என்ற பட்டத்தையும் பெற்றிருந்தான். இவன் பாண்டியர்களுடன் போரிட்டான் என்பதையே ‘பாண்டியனை சுரம் இறக்கின‘ என்ற இவனுடைய பட்டத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். இக்குறிப்புக்களின் படி, இரண்டாம் பராந்தகச் சுந்தரசோழனே இவன் எனவும். இவனுடைய கல்வெட்டுக்கள் சிலவற்றில் மதுரை கொண்ட இராஜகேசரி எனக் குறிப்பிடப்பட்டான்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

சாமுராய்கள் & Last Samurai, The (2003)



சாமுராய்கள் பற்றி நான் முதன்முதலில் அறிந்தது பள்ளிப்பருவத்தில் இரண்டாம் உலகப்போரைப் பற்றி ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்த பொழுது அமேரிக்கா ஜப்பானின் மீது அணுகுண்டு போட்டதற்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிட்டது எனக்கு மிகுந்த ஆச்சர்யமளித்தது. அதாவது ஜெர்மானியர்களையோ இத்தாலியர்களையோ போலில்லாமல், ஜப்பானியர்கள் இறக்கும் வரை போரிடுபவர்கள் என்றும் 1945ன் இறுதிகளில் ஜெர்மனி, மற்றும் இத்தாலி சரணடைந்துவிட ஜப்பானியர்கள் மட்டும் சரணடையாமல் இறக்கும் வரை சண்டையிட முடிவுசெய்ததாகவும். அமேரிக்கா ஜப்பானிற்குச் சென்று தரைவழியாகவோ, கடல்வழியாகவோ ஜப்பானை வீழ்த்துவதன் பொருட்செலவும் நேரத்தையும் கருத்தில் கொண்டு ஜப்பானை சரணடையச்செய்யவே அணுகுண்டு போட்டது என்பதான ஒன்றை என் வரலாற்று ஆசிரியர் சொல்லியிருந்தார்.



அந்தக்காலத்தில் ஆசிரியர் சொல்வதே வேதவாக்கு, எதிர்த்து கேள்வி கேட்கவோ, இல்லை அதற்கு எதிரான ஒன்று இருக்குமென்றோக்கூட அறியாத வயது அது. அப்படி ஜப்பானியர்கள் சண்டை செய்ததற்கு முக்கிய காரணமாக ஆசிரியர் சொன்னது, ஜப்பானியர்கள் அனைவரும் சாமுராய்கள் என்று அதாவது தோல்வியை ஏற்றுக்கொள்ளாதவர்கள், சாகும்வரை போராடுபவர்கள். அதே போல் சரணடைந்தபிறகு ஜப்பானிய மன்னர், மக்களிடம் அவர்களை காப்பாற்ற முடியாததற்கு மன்னிப்பு கேட்டதாகவும் சொல்ல மனதில் ஜப்பானியர்கள் பற்றிய மதிப்பு அதிகமானது. உண்மையில் ஜப்பானியர்களைப்பற்றியோ, சாமுராய்களைப்பற்றியோ எதுவுமே தெரியாத நிலையில் ஏற்பட்ட ஒரு ஆர்வம் அது.

சாமுராய்

சாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழிற்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய ராணுவத்தில் இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இந்த வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். புஷிடோ என்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகளை எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது.



சாமுராய்களின் மிகப்பிரபலமான செயலான, தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ கொல்லப்படுவது கூட அவர்களுடைய சட்டதிட்டங்களில் ஒன்றே. இதில் செபுக்கு என குறிப்பிடப்படும் முறையில் அவர்களின் வயிற்றில் இடத்திலிருந்து வலமாக வெட்டி சரணடையாமல் கொல்லப்படுவர். இதுவே பெண்கள் இந்த செபுக்குவை செய்யும் முறை வேறுபடும், அவர்கள் தங்களின் வாய்வழியாக வாளை நுழைத்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அதற்கு முன்னர் அவர்களுடைய கால்கள் கயிற்றால் பிணைக்கப்படும், ஏனென்றால் அவர்களின் இறப்பிற்கு பிறகு அவர்களின் உடல் தவறான பார்வைக்கு உள்ளாவதைத் தடுக்கவே. சாமுராய்களின் ஒழுக்க முறைகளில் மிகவும் முக்கியமானது ஒரு தலைவருக்கு கீழ்படிந்து வாழ்வது, சுயக்கட்டுப்பாடு, மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய, புராதனக் கோட்பாடுகளுடன் வாழ்வது. இவர்கள் பெரும்பாலும் மன்னர்களின் பாதுகாவலர்களாகவும் அவர்களின் சேவகர்களாகவுமே இருந்து வந்தனர்.



ஹியான் காலம் (794 – 1185)

சாமுராய்களின் தேவை இந்தக்காலத்தில் அதிகரித்தது, நிலச்சுவாந்தார்கள் அவர்களுடைய உடைமைகளைப்பாதுகாக்க இதுபோன்ற சாமுராய்களை வேலைக்கு அமர்த்தினர். இந்தக்காலத்தின் முடிவில் இருபெரும் சாமுராய் இனம் இருந்துவந்தது. ஒன்று மினமோட்டோ இனம், மற்றொன்று டைய்ரா இனம். இவர்கள் ஜப்பானின் பெரும்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பிறகு தங்களுக்கிடையில் ஆதிக்கத்திற்கான போட்டியில் ஈடுபட்டுவந்தனர்.

கமாகுரா காலம்(1192 – 1333)

கி.பி. 1185ல் மினமோட்டா இனத்தினர் டைய்ரா இனத்தினரை வென்றனர். இதன் காரணமாக மினமோட்டா யோரிட்டோமோ ஒரு இராணுவ ஆட்சியை காமகுரா காலத்தில் தோற்றுவித்தார். ஷோகுன் எனப்படும் இராணுவத்தின் உயர்ந்த அதிகாரியாய் இருந்ததால் அவர் ஜப்பானின் மன்னராக தன்னை அறிவித்துக்கொண்டார்.

முரோமச்சி காலம்(1333 – 1573)

இந்தக் காலத்தில் ஜப்பானின் பல உள்பிரிவுகளாக பிரிந்து தனித்தனியா சாமுராய் இனங்களின் கையில் இருந்துவந்தது. இவர்கள் தங்களுக்கிடையில் பெரும்பாலும் போரிட்டு தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்தனர். இந்தக்காலத்தில் சாமுராய்களின் ஆதிக்கம், அல்லது தேவை அதிகமாகயிருந்தது. போர்காலத்தைத்தவிர இடைப்பட்ட காலத்தில் சாமுராய்கள் நிலங்களில் விவசாயமும் செய்துவந்தனர்.

அகிரா குரோசோவா எடுத்தப்படங்கள் பெரும்பான்மையானவை இந்தக்காலத்தைப்பற்றியதுதான்.

அழுசி-மோமோயாமா காலம்(1573 – 1603)

டோயோடோமி ஹிடேயோஷி ஜப்பானின் சிறுசிறு பகுதிகளை ஒன்றிணைத்தப்பின், மக்களை இனவகைப்படுத்தும் முறையை தோற்றுவித்தார். இதுபின்னர் டோகுகவா லேயாசு என்பவராலும் அவருடைய வழித்தோன்றல்களாலும் நிறைவேற்றப்பட்டது. ஹிடேயோஷி சாமுராய்களை வகைப்படுத்தினார் அதாவது விவசாயம் செய்யும் சாமுராய்களையும், போரிடும் சாமுராய்களையும் வேறுபடுத்தினார். அதற்குப்பின்னர் போரிடும் சாமுராய்கள் மட்டும் தான் வாளை அணிந்திருக்கலாம் என்ற சட்டத்தையும் கொண்டுவந்தார்.

இடோ காலம்(1603 – 1868)

இந்தக்காலத்தில் மக்களின் இனப்பாகுபாட்டில் முதல் இடத்தில் இருந்தவர்கள் சாமுராய்கள், இவர்களுக்குப்பின்னர் விவசாயிகள், கலைஞர்கள், மர மற்றும் இரும்பு வேலை செய்பவர்கள் என ஜப்பானிய இனப்பாகுபாடு இருந்துவந்தது.

அவர்களின் நிரந்தர குடியிறுப்பு பிரதேசத்தை உருவாக்கிக் கொள்ள கட்டுப்படுத்தப்பட்டார்கள் சாமுராய்கள். பின்னர் அவர்களுக்கான கூலி தானியங்களாய் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் அவர்களின் நிரந்தரக்குடியிறுப்பு சிறிது சிறிதாக அழிக்கப்படத்தொடங்க, 1615ல் டோகுகவாவின் எதிரி அழிக்கப்பட்டுவிட, ஒருவகையான அமைதியான சூழ்நிலை ஜப்பானில் தொடங்கப்பட்டது. பின்னர் இது 250 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக சாமுராய்களின் தேவை இல்லாமல் போனது. சாமுராய்கள் போரிடுவதை விட்டுவிட்டு மற்ற தொழில்களை செய்பவர்களாக மாறினர். கிட்டத்தட்ட 1868ல் ஜப்பானில் சற்றேறக்குறைய சாமுராய் இனம் வழக்கொழிந்தது.

சாமுராய்களின் கொள்கை

ஆரம்பக்காலத்தில் இருந்து புத்த மதக்கொள்கை மற்றும் ஜென் கொள்கைகளைப் பின்பற்றி வந்தனர் சாமுராய்கள் அதேசமயம், மிகக்குறைவாக கன்பூஷியஸின் மற்றும் ஷின்டோவின் கோட்பாடுகளும் இவர்கள் வாழ்க்கையில் பின்பற்றப்பட்டிருக்கிறது.

ஆயுதங்கள்



சாமுராய்களைப்பற்றிய கதைகளைப்போலவே அவர்களுடைய ஆயதங்களைப்பற்றிய கதைகளும் அதிகம். ஆரம்பத்தில் பார்த்த புஷிடோவின் வழிகாட்டுதலில் சாமுராய்களின் ஆத்மாவானது அவர்கள் பயன்படுத்தும் கடனா என்ற முக்கியமான வாளில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல் சாமுராய்கள் அந்த வாளுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களை வழிபடுத்துவதின் ஒரு முக்கிய பங்கு அவர்களின் வாளிற்கு உண்டென்பதைப்போன்ற தத்துவங்கள் ஜப்பானில் நிறைய இருந்துவந்துள்ளது.



இந்த கடானா என்றழைக்கப்படும் வாளை உருவாக்குவதற்கு சில குறிப்பிட்ட முறைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர் சாமுராய்கள். அதன் நீளம், அகலம், வலிமை பற்றிய நிறைய விதிமுறைகள் இருந்துவந்துள்ளது. சாமுராய்களைப்போலவே கடானாவின் வடிவமும் ஆரம்பக்காலத்தில் இருந்தே நிறைய மாறுபாடுகளை சந்தித்துவந்துள்ளது.



இந்த கடானாவைத்தவிர வில், பிச்சுவா, சிறிய கத்திகள் போன்றவற்றை சாமுராய்கள் பயன்படுத்திவந்துள்ளனர்.

த லாஸ்ட் சாமுராய்



இந்தப்படம் 2003ல் வெளிவந்தது, பெரும்பாலான டாம் படங்களைப்போலவே இந்தப்படத்தையும் நான் வெளியான சில வாரங்களில் பார்த்திருந்தேன். சில படங்கள் நமக்குள் தீவிரமான ஒரு அதிர்வை உருவாக்கும் என்னைப்பொறுத்தவரை என்னில் கொஞ்சம் அதிர்வை உண்டாக்கிய படம் இந்த த லாஸ்ட் சாமுராய்.

இந்தப்படம் நான் பார்த்த டாம் படங்களில் மிகச்சிறந்ததொன்றும் கிடையாது, போர்க்காட்சிகள் சம்மந்தபட்ட காட்சிகளின் படியும் நான் பார்த்த மிகச்சிறந்த படமாக இதைச்சொல்லமுடியாது. ஆனால் இதையெல்லாம் மீறிய ஒன்று இந்தப்படத்தில் எனக்குப்பிடித்திருந்தது.

நாதன் அல்கெரன், ஜார்ஜ் ஆர்ம்ஸ்டிராங் கஸ்டர்(உண்மை கதாப்பாத்திரம்) என்னும் கமெண்டரின் கீழுள்ள இராணுவத்தின் ஒரு தளபதி, படத்தில் அவருடைய மிகப்பிரபலமான ‘பாட்டில் ஆப் லிட்டில் பிக்ஹார்ன்’ ல் பங்குபெற்றதாக அறியப்படுபவர். இவர்களுடைய ராணுவம் அமேரிக்க சிவில் யுத்தம் மற்றும் இந்தயப்போர்களில் பங்குபெற்றது. குறிப்பிட்ட அந்தப்போரில் மிகக்குறைவான தன்னுடைய படையை அமேரிக்கப்பழங்குடியினரின் பெரும் படையை எதிர்த்து போரிடவைக்க அவரின் படை நிர்மூலமாக்கப்பட்டது. தோல்வி முன்பே தெரிந்திருந்தும் இந்தப்போரில் கலந்துகொண்ட கஸ்டரின் ஒரு படைப்பிரிவு தளபதி தான் நாதன் அல்கெரன். நன்றாகத்தெரிந்தும் இப்படி சக போர்வீரர்களை இழந்ததால் தன்னுடைய ஏதோவொன்றை தொலைத்ததைப்போல் இருக்கும் அல்கெரன் தன்னுடைய தளபதி பதவியில் இருந்து விலகி, துப்பாக்கிகள் பற்றிய காட்சிகளை நடத்துபவராக இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஜப்பானின் மன்னர், தன்னுடைய படைகளுக்கு துப்பாக்கி பயிற்சியளிக்க விரும்ப அதற்காகச் செல்லும் அல்கெரனின் மற்றுமொறு முன்னால் கமெண்டர் அவரையும் தன்னுடன் வருமாறு அழைக்க சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அல்கெரன் ஜப்பான் வருகிறார். இங்கே தொடங்கும் கதை.

இங்கே ஜப்பான் வந்ததும் மன்னரின் படைகளுக்கு அல்கெரன் பயிற்சியளித்துக் கொண்டிருப்பார். பயிற்சியின் ஆரம்ப நிலையிலேயே மன்னர் தன்னுடைய படைகளை தன்னுடைய எதிரியான சாமுராய் கட்ஸுமோட்டோவிற்கு எதிராக போர்புரிய அனுப்புவார். அல்கெரன் எவ்வளவோ தடுத்தும் அனுப்பும் படைகள், துப்பாக்கிகள் கைவசம் இருந்தும் சண்டையில் சாமுராய்களின் வாள், அம்பு, மற்றும் வேல்களுக்கு பலியாகி பாதிபேர் சண்டையிலிருந்த உயிர்பிழைக்க ஓடிவிடுவார்கள். கடைசிவரை சண்டை செய்யும் அல்கெரனை கொல்ல வரும் சாமுராயின் மருமகன் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் அல்கெரனால் கொல்லப்படுவார்.

பின்னர் அல்கெரனை பழிக்குப்பழி வாங்காமல், சாமுராய் கட்ஸுமோட்டோ தன்னுடன் பிணைக்கைதியாக அழைத்து சென்றுவிடுவார். பின்னர் சாமுராய்களின் இடத்திற்கு வந்ததும் அவருக்கு சண்டையில் கிடைத்த காயங்களை குணப்படுத்தப்பட்டு, சிறிது சிறிதாக அவர் சாமுராய்களின் நல்லெண்ணத்தைப்பெறுவார். பின்னர் கடைசியில் சாமுராய்களுக்கும் மன்னரின் படைகளுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் சாமுராய்களின் சார்பாய் பங்கேற்பார். சண்டையில் அல்கெரன் தவிர மற்ற அனைவருமே கொல்லப்படுவார்கள் சாமுராய் உட்பட. இதுதான் கதை.



எனக்கு இந்தப்படத்தில் டாமின் நடிப்பைவிட, கட்ஸுமோட்டோவாக நடித்த கென் வாட்டனபேவின் நடிப்பு பிடித்திருந்தது. தன்னுடைய இருப்பை மிகப்பிரமாதமாக படத்தில் வெளிப்படுத்தியிருப்பார் வாட்டனபே, அதுவும் குறிப்பாக அல்கெரனுக்கும் கட்ஸJமோட்டோவிற்கும் இடையில் நடக்கும் அந்த உரையாடல்களில் பிரமாதப்படுத்தியிருப்பார். சாமுராய்களின் வாழ்க்கை முறைகளை இயக்குநர் மிகஅழகாக வெளிப்படுத்தியிருப்பார். இந்தப்படம் படமாக்கப்பட்ட விதத்திலும் அழகாகயிருக்கும்.



டாம் வாள்பயிற்சியில் ஈடுபட்டிக்கும் பொழுது செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி கட்ஸJமோட்டோவின் மகன், சொல்லும் விஷயங்கள் நன்றாக இருக்கும்."Mind the sword, Mind the people, Mind the Enemy, three many minds." அதேபோல் தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு உதவி செய்துவருவது. சண்டையில் தான் கொன்ற சாமுராயின் மனைவிதான் எனத்தெரிந்து கொண்டவுடன் டாம் படும் அவஸ்தைகள் நன்றாகயிருக்கும்.



கட்ஸுமோட்டோவை அவருடைய இருப்பிடத்தில் வந்து கொல்ல முயலும் காட்சியின் பொழுது நடக்கும் சண்டையும், பின்னர் ஜப்பானிய மன்னரிடம் சென்று தன்னுடைய சேவையைப் பெற்றுக்கொள்ளக்கேட்கும் கட்ஸுமோட்டோவைக் கைது செய்து வைத்திருக்க அவரைக்காப்பாற்ற நடக்கும் சண்டையும் இந்தப்படத்தில் எனக்குப்பிடித்த சண்டைக்காட்சிகள். இந்தப்படம் பெரும்பான்மையான இடங்களில் அல்கெரன் கதைசொல்வதாக நகரும். கடைசியில் அவருடன் ஜப்பானுக்கு வரும் டிமோத்தி ஸ்பெல் சொல்வதாக முடியும், டிமோத்தியின் கதாப்பாத்திரமும் மிகஅழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். படத்தின் இயல்பிற்கு மிகஅழகாக இவர் செய்யும் சில நகைச்சுவைக்காட்சிகள் இருக்கும்.

சாமுராய்களைப்பற்றிய என்னுடைய ஆர்வமும் இந்தப்படம் எனக்கு பிடித்திருந்ததற்கான ஒரு முக்கிய காரணமம். முன்பே சொன்னதுபோல் படமாக்கப்பட்ட முறைதான் இந்தப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒருமுறை நிச்சயமாக பார்க்கவேண்டிய படம்தான் த லாஸ்ட் சாமுராய்.



இயக்கம் எட்வேர்ட் ஸ்விக், கதை ஜான் லோகன், மார்ஷல் எர்க்ஸ்கோவிட்ஸ், எட்வேர்ட் ஸ்விக், கதை ஜான் லோகன் எழுதிய ஒரு கதையின் தழுவலில் எடுக்கப்பட்டது. டாம் குரூயிஸ், டிமோத்தி ஸ்பெல், கென் வாடனபே, கொயுகி ஆகியோர் இந்தப்படத்தில் நடித்திருந்தனர்.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

சின்டிரெல்லா மேன்



சின்டிரெல்லா மேன், இந்த படத்தைப்பற்றிய எதிர்பார்ப்பு சிலகாலமாகவே இருந்து வந்தது, இதற்கு முக்கியமான சில காரணங்களும் உண்டு. ரான் ஹோவார்ட் இயக்கத்தில், ரஸல் குரோ நடிப்பதால் வந்த எதிர்பார்ப்பு. இவர்களின் சேர்க்கையில் வந்த ‘A Beautiful Mind’ படம் எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததால். இந்த படத்தையும் பார்க்கவேண்டும் எண்ணம் ஆரம்பத்திலேயே எழுந்தது.

இது அமேரிக்காவின் டிப்ரஷன் எராவில் நடந்த ஒரு குத்துச்சண்டை வீரனைப்பற்றிய உண்மைச் சம்பவத்தைப்பற்றிய படம். அமேரிக்க மக்கள் முட்டிக்காலில் நின்றுகொண்டிருந்த பொழுது அவர்களை தன் பாக்ஸிங் திறமையால் நுனிக்காலில் நிற்கவைத்தவர் என்ற பெருமை பெற்ற ஜேம்ஸ் பிராட்டாக் பற்றிய உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கிய படம் தான் சின்டிரெல்லா மேன்.



படத்தின் தலைப்புக்கு கவித்துவமான விளக்கம் உண்டு, அதாவது ஜேம்ஸ் பிராட்டாக் சிறிய அளவிலான பாக்ஸராக இருந்து உலகத்தின் ஹெவிவைட் சாம்பியனானது ஒரு கற்பனைக்கதையைப் போன்றதாகவே இருந்தது. தன்னுடைய முப்பதாவது வயதில், பாக்ஸிங் ரிங்கில் தன்னுடைய தாக்குதலால் இரண்டு நபர்களை கொன்றதாக பெயர்பெற்ற மாக் பியரரை வென்றது ஹெவிவைட் பாக்ஸிங்கில் இன்றும் குறிப்பிடப்படும் ஒரு மிகப்பெரிய வெற்றி. போட்டிக்கு முன்பு 1/10 மட்டுமே வெல்வதற்காக பெற்றிருந்த பிராட்டாக் வென்றது பாக்ஸிங்கின் மிகப்பெரிய அப்செட் இன்றைக்குவரைக்கும்.



மில்லியன் டாலர் பேபியைப்போன்றோ, இல்லை அதற்கு முன் வந்த பாக்ஸிங் படங்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டது இந்த சின்டிரெல்லா மேன். படத்தில் பாக்ஸிங் இடம்பெற்றிருந்தாலும். ஜேம்ஸின் வாழ்கையைத்தான் இயக்குநர் வெகுவாக படமாக்கியிருப்பார். அவருடைய ஏழ்மை, அமேரிக்காவின் தொழில் முடக்கம் இப்படியாக.



படம் 1929ல் ஜேம்ஸ் லைட்வைட் சாம்பியன்ஷிப்பிற்காக மோதும் போட்டியில் தொடங்கும். அப்பொழுது அவர் குடும்பம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தேவையான பணத்தை சம்பாதித்துக்கொண்டு இருக்கும் பிராட்டாக், பிறப்பில் ஒரு ஐரிஷ். பின்னர் நடக்கும் அமேரிக்க ஸ்டாக் மார்க்கெட் இழப்பில் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் அளவிற்கு போய்விடும். பின்னர் சாப்பாட்டிற்கு கூட காசில்லாமல், தன்னுடைய வலது கையில் அடிபட்டிருக்கும் நிலையிலும் சண்டையில் பங்கேற்று கையை உடைத்துக்கொள்ளும் பிராட்டாக்கின் பாக்ஸிங் லைசன்ஸ் ரத்துசெய்யப்படும்.

இந்தச் சமயத்தில் அவர் குடும்பம் மின்சாரத்திற்கு கூட பணமில்லாமல் வீட்டில் இருந்து இணைப்புத்துண்டிக்கப்படும். இப்படியாக மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு பாக்ஸிங் வீரரின் முன்னறிவிப்பில்லா விலகலில் மீண்டும் பாக்ஸிங் செய்ய பிராட்டாக்கிற்கு ஒருவாய்ப்பு வழங்கப்படும். பின்னர் அந்தப்போட்டியில் வெற்றி பெற்று பிராட்டாக் எப்படி உலக ஹெவிவைட் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டியில் மாக்ஸ் பியரரை வெல்கிறார் என்பதே கதை.




கொஞ்சம் மென்மைத்தன்மையுள்ள பாக்ஸராக பிராட்டாக்கின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஆஸ்கர் வின்னர் ருஸல் குரோ, குறிப்பாக சில காட்சிகளில் வசனங்கள் இல்லாமல் தன்னுடைய முகபாவத்திலேயே பேசும் பொழுது பின்னுகிறார். அவருடைய மனைவியாக மற்றொருமொறு ஆஸ்கர் வின்னர் ரெனி ஷெல்வேக்கர் கொஞ்சம் ஓவராகத் தெரிந்தாலும் பரவாயில்லை செய்திருக்கிறார், கொஞ்சம் கஷ்டமான கதாப்பாத்திரம், இருந்தாலும் பரவாயில்லை லெவல்தான். பிராட்டாக்கின் மேனேஜராக பவுல் கிமாட்டி நடித்திருக்கிறார் அவரின் திறமை பல காட்சிகளில் பளிரிடுகிறது. பாக்ஸிங் போட்டிகளில் காமிராவின் கோணங்கள் எனக்கு கொஞ்சம் புதியதாய்ப்பட்டது. மற்றபடி இயக்குநரின் திறமை படமாக்களில் தெரியத்தான் செய்கிறது.



தன் மகன் சாப்பாட்டிற்காகத் திருடிவிடும் சூழ்நிலையில், எக்காரணம் கொண்டும் அவனை மனைவியின் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு அனுப்பமாட்டேன் என்று சொல்லும் காட்சி நன்றாய் இருக்கும். பிறகு ஹெவிவைட் சாம்பியன்ஷிப்போட்டிக்கு முன் நடக்கும் பேட்டியில், தான் சண்டையிடுவதும் வெற்றிபெறுவதும் தன் குடும்பத்திற்கு தேவையான பாலை(சாப்பாட்டை) தரவே என்று சொல்லும் காட்சியும் நன்றாய் இருக்கும்.

இதுபோல இயக்குநரின் டச் சில இடங்களில் தெரியும், பாக்ஸிங் படமாதலால் கொஞ்சம் கெட்டவார்த்தைகள் நிரம்பிய படம் தான் இதுவும்.

பிராட்டாக் அந்தப்போட்டிக்கு பிறகு, இரண்டாண்டு கழித்து தன் ஹெவிவைட் சாம்பியன்ஷிப்பை ஜான் எஹுன்றி லீவிஸிடம் இழந்தார். ஆனால் அந்தப்போட்டியில் கிடைத்த பணத்தில் கடைசிவரை அவர் வாழவழிகிடைத்தது. அதன்பிறகு அவர் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வுபெற்றார். இவருடைய திறமையைக் கருத்தில் கொண்டு அமேரிக்க அரசு இவருடைய படம் இடம்பெற்றுள்ள தபால்தலையை வெளியிட்டது.



இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் போட்டியில் ரஸல் மற்றும் ரோன் ஹோவார்ட் இருக்கிறார்கள் இந்தப்படத்திற்காக கிடைக்குமா தெரியவில்லை. மற்றபடிக்கு ரோன் ஹோவார்டுக்காகவும் ரஸல் குரொவுக்குமாக ஒருமுறை நிச்சயமாய்ப் பார்க்கலாம்.

References

http://movies.yahoo.com
http://en.wikipedia.com
http://www.jamesjbraddock.com

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In கவிதைகள் சுய சொறிதல் சொந்தக் கதை

பனிக்காலமும் பாச்சுலர் வாழ்க்கையும்

இன்னும் படித்துக்கொண்டிருக்கும்
என் அக்காவிற்கு 
நேற்றிரவு 
நாய்கள் என்னைப்பார்த்தது
நக்கலடிப்பதாய்ப்பட்டது 
தெரியப்போவதில்லை

உள்ளிருப்பது தெரிய 
வலையவரும் பெண்கள்
என்னிரவுகள் நினைவுபடுத்தும்
மனக்கணக்குகள் 
அறிவதில்லை

கழுதையோ எருமைமாடோ 
ஏதாவதொன்றை 
நானாய்க்கேட்டாலொழிய 
தலையில் கட்ட மறுக்கும் பெற்றோர்
உணர்வதில்லை 
ஜோடிகளின் இறுக்கத்தில் புழுங்கும் 
மனதின் வெம்மையை

மற்றவற்றை போலில்லாமல்
கட்டுடைக்கத்தூண்டும் 
பனிக்காலத்தின் கிளர்ச்சிகளை 
புறந்தள்ளி காத்திருக்கிறேன்
இன்னுமொறுமுறை

Read More

Share Tweet Pin It +1

1010 Comments

In சிறுகதை

தமிழீழக்காதல்(1) - நீங்கள் கேட்டவை

அது நடந்து இரண்டாண்டு ஆகியிருக்கும், சந்திரா கண்கலங்க தன் படிப்பை முடித்துவிட்டு தன் அண்ணனுடன் சென்ற நாள் இன்னும் கண்ணிலேயே நிற்கிறது. அதற்கு பின் சில மாதங்கள் அவளுடன் தொலைபேசித்தொடர்பு இருந்து வந்தது. அதற்குப்பின்னர் என் வேலை காரணமாக புனேவிற்கு மாறியதிலிருந்து தொடர்பில்லாமல் போய்விட்டது. ஆனாலும் ஒவ்வொருமுறை இணையப்பக்கங்களில் ஈழத்தமிழர்களுடன் உரையாடும்பொழுதோ இல்லை ஈழத்தமிழை உரைநடையில் படிக்கும் பொழுதோ சந்திராவின் ஞாபகங்கள் வராமல் இருந்ததில்லை.

எங்கள் வீட்டில் நான் புனேவிற்கு வந்ததும் இவ்வளவு தூரம் வரமுடியாதென்று சொல்லி பெங்களூர் வீட்டைவிற்றுவிட்டு சொந்த ஊரான காரைக்காலிற்கே குடிபோய்விட்டார்கள். ஒரு தீபாவளி விடுமுறையில் வீட்டிற்கு வந்தபொழுது பிரான்ஸில் இருந்து வந்த அப்பா வழி மாமா, என்னை பிரான்ஸ் வந்துவிடுமாறு வற்புறுத்த நானும் சிறிதுகாலம் வெளிநாட்டில் வேலைசெய்துவிட்டு வந்தால் இந்த தொல்லை பிடித்த ஐடி வேலையை விட்டுவிட்டு, ஏதாவது ஒரு பெரிய கல்லூரியில் லெக்சரராய் சேர்ந்துவிடும் எண்ணமும் இருந்தது. அதுவுமில்லாமல் நான் பிறந்தது காரைக்கால் என்பதால் ஏற்கனவே பிரான்ஸ் நாட்டு பிரஜையாகத்தான் இருந்தேன். அதாவது என் அப்பா தன் இந்தியஉரிமையை விட்டுத்தர மறுத்துவிட்டாலும் அம்மா இன்னும் பிரான்ஸ் தந்திருந்த பிரஜா உரிமையின்படி பிரஞ்ச் பிரஜையாக இருந்தார்.

அதனால் தஸ்தாவேஜ்கள் எல்லாம் சீக்கிரமே நகர ப்ரான்ஸ் நாட்டிற்கான விசாவும் விரைவாகவே கிடைத்தது. ஏற்கனவே பிரான்ஸில் இருந்த மாமாவின் வீட்டிற்குத்தான் போயிருந்தேன். அந்த வீட்டில் எனக்கு முறைப்பெண் ஒருத்தியும் இருந்தாள். மனது முழுவதும் சந்திராவேயிருந்ததால் மாமா பெண் சுமதியைப்பற்றி நினைத்துக்கூட பார்க்கவேயில்லை. நான் முன்பே சிஸ்டம் சைட் புரோக்கிராமில் வேலை செய்துகொண்டிருந்ததால் அத்துனை தூரம் பணிசார்ந்த பிரச்சனைகள் இல்லை. பள்ளிப்படிப்பில் ப்ரெஞ்சை ஒரு பாடமாக படித்திருந்ததாலும் நான் ப்ரான்ஸில் வாழ்வதற்கான பிரச்சனை எதையும் சந்திக்கவில்லை. இங்கே வந்தது செங்கன் விசா என்பதால் ஆறுமாதம் கழித்து வந்த விடுமுறையில் ஐரோப்பிய யூனியனில் இருந்த அத்தனை நாடுகளுக்கும் சுற்றுலா சென்றுவந்திருந்தேன்.

ஜெர்மனி, இத்தாலி, ஸ்விஸ், இங்கிலாந்து எல்லா நாடுகளையும் சுற்றிவிட்டு கடைசியாக பிரான்ஸை சுற்றிப்பார்க்க வந்திருந்தேன். ப்ரான்ஸ் ஒரு அற்புதமான நாடு, அதைப்போலவே மக்களும். நான் முதன்முதலில் பரியில் இறங்கியதிலிருந்தே அந்த மக்களஇன் பழக்கவழக்கங்கள் ஆச்சர்யத்தை அளஇத்திருக்கின்றன. அந்த நாட்டு மக்களின் நாட்டுப்பற்று தீவிரமானது. ப்ரெஞ்ச் மொழிமேல் அந்த மக்கள் கொண்டிருந்த ஈடுபாடு அலாதியானது. குதிரை வண்டிக்காரனிடம் பேசும் மொழி ஜெர்மன் என்றும், தொழிலாளியிடம் பேசுவதற்கான மொழி ஆங்கிலமென்றும் காதலியிடம் பேசும் மொழி ப்ரெஞ்ச் என்றும் விளையாட்டாக உடன் வேலைசெய்யும் நண்பர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். லூர்து மியூசியம், நெப்போலியனின் அரண்மனை முதற்கொண்டு பலவற்றை அன்று பார்த்துவிட்டு நான் தோரபெல் வந்தேன். அதைப்பார்த்துவிட்டு அதன் பிரமாண்டத்தில் வாயை மூடயியலாமல் இருந்தபொழுதுதான் அவளைப்பார்த்தேன் ஆனால் முதலில் தோற்றமயக்கம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவளாய் வந்து அறிமுகப்படுத்திக் கொள்ளத்தான் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டேன்.

"ஏய் மோகன் நீங்கள் எப்பிடி இங்க?" என் கண்களை என்னால் நம்பவேமுடியவில்லை.

சிறிதுநேரம் நன்றாய் விழித்துவிழித்து பார்த்துவிட்டு,

"ஏய் சந்திரா நீ எங்க இங்க, சொரூபன் எப்படியிருக்கான். கல்யாணமாயிருச்சா உனக்கு" எனக்கு நாங்கள் பெங்களூரில் மணிக்கணக்காய் பேசிக்கொண்டிருந்தது நினைவில் வந்தது. இன்னும் அப்படியேத்தான் இருந்தாள், எனக்கென்னவோ அவள் கண்களில் பிரகாசம் கூடியிருப்பதாய்ப்பட்டது.

"இல்லை இன்னும் ஆகலை சொரூபன் அண்ணா சுகமா இருக்கிறான்; அவனும் இங்கதான் இருக்கிறான். அது சரி நீங்கள் இங்க என்ன செய்யுறங்கள்" சந்திரா பேச முன்பைப்போல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். என் முன்னால் இரண்டு கைகளையும் அசைத்தவளாய் என் கவனத்தைக் கலைத்தாள்

"நான் உன்கிட்ட முன்னயே சொல்லியிருந்தேன்ல, எங்கம்மாவிற்கு பிரெஞ்ச் ஸிட்டிஷன்ஷிப் இருக்குன்னு. அதான் கொஞ்சநாள் பிரான்ஸ் வந்து நிறைய சம்பாதித்துவிட்டு. இந்தியா போய் செட்டில் ஆய்டலாம்னு இங்கே வந்தேன். நான் உன்னை இங்கே எதிர்பார்க்கவேயில்லை"

நான் சொல்லிக்கொண்டிருந்ததை ஆர்வமாய்க் கேட்டவள்.

"உங்கட அக்கா மோகனா எப்பிடியிருக்கிறா?"

"அவளுக்கென்ன கல்யாணமாயிருச்சு, அமேரிக்க மாப்பிள்ளை என் சொத்தில் பாதியை எடுத்துக்கிட்டு அமேரிக்கா போய் செட்டில் ஆய்ட்டா." சொல்லிவிட்டு நான் சிரிக்க முதலில் சிரித்தவள்.

"விளையாட்டுக்குக்கூட அப்படி சொல்லாதயுங்கோ மோகன். அக்காக்கு செய்தால் உங்களுக்கு இரண்டு மடங்காய் திரும்பக்கிடைக்கும்."

"ஏய் அப்ப உன்னைக் கல்யாணம் பண்ணிக்க உங்கண்ணன் நிறைய வரதட்சணை தருவான்னு சொல்லு." கேட்டுவிட்டு அவளின் பதிலுக்காய் காத்திருந்தேன். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நான் அவளிடம் காதலுக்காக வேண்டினேன். இதைக்கேட்ட அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள் பிறகு வேறு பக்கம் முகத்தை திருப்பியவளாக,

"மோகன் சொரூபனை நீங்கள் இப்பப் பார்த்தால் நம்பவேமாட்டீங்கள். இங்க ஒரு ஸாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான். ஒரு வருஷத்திலேயே நாங்கள் எங்கள் உறவினர்கள் வழியாக இங்கே வந்திட்டம். முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்ததுதான் ஆனால் இப்ப எல்லாம் பழகிட்டுது..."

அவள் மறைமுகமாக இந்த விஷயத்தைப்பற்றி பேசாதீர்கள் என்று சொல்வதாய்ப்பட்டதால் நானும் விட்டுவிட்டேன். பிறகு நாங்கள் தோரபெல் மேலேயிருந்து கீழிறங்கி வரும் பொழுது எங்களை வரவேற்ற நபரை எனக்கு நிச்சயமாய் அடையாளம் தெரிந்தது. அது சொரூபன்தான் நன்றாய் சதையடித்திருந்தான். முதலில் என்னைப்பார்த்து வியந்தவனாய். 'மோகனண்ணா நீங்கள் எப்பிடி இங்க நிச்சயமாய் னஉங்களை நான் இங்கே எதிர்பார்க்கவேயில்லை. சந்திராவை பார்த்தனீங்களோ?'ன்னு கேட்டதில் நான் வியந்துபோனேன். பின்னே அச்சு அசலாய் அமேரிக்க அக்சென்டில் சொரூபன் பேச என் புருவங்கள் விரிவடைவதை தவிர்க்கவே முடியவில்லை. நானும் திறமையைக்காட்ட சொரூபா நானும் அப்படித்தான். உன்னை இந்த நிலையில் பார்க்க சந்தோஷமாய் இருக்கிறதுன்னு ப்ரெஞ்சில் சொல்ல. எல்லாம் ஆண்டவன் அருள் அண்ணே, கதிர்காமக்கந்தன் அருள். வாங்க நமக்குத்தெரிந்த கடையொன்னு பக்கத்தில் இருக்கு அங்கப்போய் பேசலாம். அப்படின்னு அவனும் தெள்ளத் தெளிவான ப்ரெஞ்சில் சொல்ல எனக்கு நான் இருந்த இடம் லேசாய் ஆடுவதைப்போல் இருந்தது. சத்தியமாய் சந்தோஷத்தில் தாங்க.

நாங்கள் ஒருவழியாய் சொரூபனின் ஈழ நண்பன் ஒருவனுடைய கடைக்கு வந்திருந்தோம். சொரூபன் என்னை தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்று அறிமுகப்படுத்த எனக்கு கிடைத்த மரியாதை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. இந்திய அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் சம்மந்தம் கிடையாது என்பதில் அவர்களுக்கு இருந்த நம்பிக்கை அளவிடமுடியாதது. சொரூபனையும் சந்திராவையும் தவிர்த்து எனக்கு ஈழத்தைப்பற்றி தெரிந்தது கையளவே. இதன் போன்ற காரணங்களால் முன்பே மனதில் விசுவரூபமெடுத்திருந்த ஈழத்தமிழர்களைப்பற்றிய நல்லெண்ணம் பின்பு வாமன ரூபம் கொண்ட மகாப்பிரபு இரண்டடியை அளந்துவிட்டு மூன்றாம் அடிவைக்க நிலம் கேட்ட பொழுது தன் தலையைக் கொடுத்த மகாபலியைப்போன்று என் திருவடியைக்காட்டி எந்தன் உள்ளும் புறமும் புகுந்து எங்கும் நிறைந்த பரம்பொருள் போன்றதொரு நிலையை எட்டியிருந்தது.

"அண்ணே நான் ஒண்டு கேட்டால் கோவிக்க மாட்டீங்கள்தானே" சந்திரா அந்த கடை நடத்தும் அன்பரின் வீட்டிற்குள் சென்றதும் சொரூபன் உயர்தர ஆங்கிலத்தில் கேட்க,

"நிச்சயமாய் சொரூபா" தமிழில் தான் பதிலளஇத்தேன்.

"உங்களுக்கு ஞாபகமிருக்கோ தெரியேல்ல ஒருநாள் உங்க அக்காவை குறிக்க நான் பெட்டைன்னு சொல்லிட்டன் நீங்கள் என்னை அடிக்க கையை உயர்த்தினீங்கள்." அவன் கேட்டுவிட்டு என்னையே பார்த்தான்.

"நினைவிருக்கிறது சொரூபா."

"அண்ணை பெட்டைகள் எண்டால் எங்கட வழக்கில பெண்பாலைக் குறிக்கும் சாதாரண வார்த்தைப் பிரயோகம்."

"ஆனால் எனக்குத் தெரியாதே சொரூபா, தமிழீழ வார்த்தைகள் மட்டுமில்லை, சில தூய தமிழ் சொற்களோட அர்த்தம் கூட எனக்குத் தெரியாது. உதாரணத்துக்கொன்னு எடுத்துக்கோயேன் நாற்றம் அப்பிடின்னா தூயதமிழ்ல வாசனைன்னு அர்த்தம், அதையே மெட்ராஸ்ல இருக்குற ஒருத்தன்ட போய் அண்ணே உங்க சட்டைலேர்ந்து அற்புதமான நாற்றம் வருதுண்ணேன்னு சொல்லிப்பாரு தெரியும். அதுக்காக தமிழ்நாட்டுக்காரனுக்கு தமிழ் மேல மதிப்பில்லை மரியாதையில்லை ஏட்டிக்குப் போட்டியாய் பேசுறான்னு அர்த்தமா? இதைக்கூட நீ என்னை இன்னும் நல்லா புரிஞ்சிக்கணும்னு தான் சொல்றேன். அதெல்லாமிருக்கட்டும் நான் உனக்கு பெங்களூரில் எவ்வளவோ உதவியிருக்கேன். நான் சொல்லிக் காண்பிக்கிறேன்னு நினைக்கக்கூடாது உனக்கு கடைசியில் என்னைப்பற்றிய நினைவு வரும்பொழுது அந்தப் பெட்டைன்னு நீ சொன்னதுக்காக நான் கோபப்பட்டதுதான் நினைவிற்கு வருதா?" நான் கேட்க என்னவோ பதில் சொல்லவந்தவன் நிறுத்திக்கொண்டு,

"உங்கட அம்மா அப்பாவை நம்பி என்ர தங்கச்சியை விட்டுட்டுப் போனால் நீங்கள் கையைப்பிடிச்சு காதலிக்கிறியா எண்டு கேட்டது மட்டும் சரியோண்ணா?. எங்கடப் பெண்கள் எண்டா உங்களுக்கு அவ்வளவு கேவலமா?" இதைக்கேட்ட பொழுது அவன் கண்கள் கோபத்தில் சிகப்பேறியிருந்தது. சிறிது நேரம் யோசித்தவனாய்.

"உண்மைதான் சொரூபா, ஒரு பதின்ம வயது பெண்ணிடம் ஏற்பட்ட சாதாரண இனக்கவர்ச்சியை தவறா உபயோகப்படுத்திக்கிட்டனோன்னு அப்பவே நினைத்தேன். ஆனால் இதெல்லாம் நாம சந்திராவை கல்யாணம் செய்துக்கிட்டா தப்பாகாதுன்னும் நினைச்சதால சரின்னு நினைச்சிட்டேன். ஆனால் இன்று வரை அதற்கான வாய்ப்பு கிடைக்காததால் நிச்சயமாய் தப்புதான் சொரூபா, தப்புதான்."

இந்த பதில் சொரூபனின் முகத்தில் ஏற்படுத்திய மாற்றங்ளை குறிப்பெடுக்க நினைத்த எனக்கு குறிப்பெதுவும் கிடைக்கவில்லை. அவன் அந்த பதிலை ஜீரணம் செய்துவிட்டவனைப்போல் நகர்ந்துவிட்டான். சிறிது நேரத்தில் அங்கு வந்த சந்திராவை பார்த்த பொழுது முன்பிறுந்த மனநிலையில் எந்தவொருமாற்றமும் இல்லை.

"மோகன் நான் முந்தியே உங்களிட்ட சொன்னானல்லே. ஆரம்பத்திலாவது பிரச்சனை எதுவும் இல்லாமல் இருந்தது. நீங்கள் சொரூபன் அண்ணா உண்டியல் பணம் போட உங்கட வங்கிக்கணக்கை கேக்க நீங்க தரமறுத்து ஏதோ கொலைக்குற்றவாளி போல் பார்த்தீங்களாம்.
உண்டியல் பணம் என்றது கடத்தல் பணமோ திருட்டுப்பணமோ இல்லை தெரியுமோ? நேர்மையான வழியில் சம்பாதிக்கிற பணம்தான்."

"சந்திரா நீ கூடவா என்னை புரிஞ்சிக்கவில்லை. தமிழ்ல கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை அப்படின்னு ஒரு பழமொழியிருக்கு. எல்லாப் பழமொழியையும் போல இதையும் மக்கள் திரிச்சிட்டாங்க. கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனைன்னு, கழு அப்படிங்ற ஒரு வகையான பருத்தி வளர்றப்போ கற்பூரம்போல் வாசனை வரும். அதை அறுவடை செஞ்சு தறியில நெஞ்சு துணியா மாத்தினா அந்த பருத்தியில இருக்கிற கற்பூர வாசனை போயிரும் அப்பிடிங்கிறதுதான் அந்த பழமொழி. ஆனா இப்ப மக்கள் கிட்ட இருக்குற பழமொழியோட அர்த்தம் வேறயில்லையா. அதுமாதிரிதான் உண்டியல் சம்மந்தப்பட்ட என்னோட அறிவும். நான் தமிழ்ல கதை கட்டுரையெல்லாம் எழுதுவேங்கிறதுக்காக இந்த விளக்கத்தையெல்லாம் நான் தெரிஞ்சிருக்கணும் அப்படின்னு நினைக்கிறது முட்டாள்தனம் இல்லையா. அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன் உங்கண்ணனை போலீஸ்கிட்டையா புடிச்சிக் கொடுத்தேன். என் அக்கௌன்ட் டீடெய்ல் தரமுடியாதுன்னுதானே சொன்னேன். அதுல வேற பிரச்சனையேயில்லையா, நாளைக்கே நான் டேக்ஸ் ரிட்டர்ன் காமிக்கிறப்ப அந்த பணம் எதுக்கு வந்துச்சுன்னு கேள்விவராதா. நான் எங்கப்போய் பதில் சொல்வேன். ஒன்னும் தெரியாம குய்யோ முறையோன்னு கத்தக்கூடாது."

"அதைத்தான் நானும் சொல்றன். எங்களுக்குள்ள மொழி முதற்கொண்டு பிரச்சனையிருக்கு. அதால நமக்குள் இடைவெளிகள் அதிகம் என்னதான் முயன்றாலும் எங்களைப்பற்றி உண்மையாக நீங்கள் தெரிந்துகொள்வதில் 1 சதவீதம் கூட உண்மையிருப்பதில்லை. அதனால் நீங்க உங்கள் வழியைப் பார்த்து ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணுங்கோ. ஒருவிஷயம் மட்டும் நீங்க நல்லா புரிஞ்சு கொள்ளுங்கோ நீங்கள் பெங்களூரில் செய்த உதவியை நாங்கள் ஒருநாளும் மறக்கமாட்டம். இன்று நாங்கள் நல்ல நிலைக்கு வந்திட்டதால சொரூபன் அண்ணாவோ நானோ இப்படி கதைக்கிறம் எண்டு நீங்கள் நினைக்கக்கூடாது. ஏதோ மனசை உறுத்திக்கிட்டிருந்தது கேட்டிட்டன் அவ்வளவுதான்."

அவள் முன்னமே முடிவெடுத்துவிட்ட ஒரு நிலையில் இருப்பதையே உணர்ந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் நான் கேட்டதற்கும் அவள் அவ்வளவு சாதகமாய் பதில் சொல்லியிருக்காததால். நானும்,

"இல்லை சந்திரா இதுதான் நல்லவழிமுறை. என்பேர்ல எதாவது குற்றம் இருந்தால் அதை நேரா கேட்டுடணும். என்னால முடிஞ்ச பதிலை நானும் கொடுப்பேன். உன்விரும்பம் அதுதான்னா எனக்கும் பிரச்சனை கிடையாது."

சொல்லிவிட்டு அவளின் தொலைபேசி எண்ணை ஒப்புக்காய் வாங்கியவனாய் தோரபெல்லில் என் காதலை தலை முழுக நினைத்தேன். நினைவுகளை காற்றிலே கரைக்க நினைத்தவனாய் சப்தமாய் மூச்சுவிட்டுக்கொண்டே நான் வந்திருந்த பஸ்ஸை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தேன். என்னவோ ஒன்று நீண்டநாளாய் அரும்பாடுபட்டு காத்துவந்தது உடைந்துவிட்டதைப்போன்றதொறு எண்ணம் உண்டானது. என்னவோ நினைவில் செல்லிடைபேசியை எடுத்தவன் மாமாவின் எண்ணை அழைக்க,

"மாமா, நான் சுமனை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன். உங்க பதிலை எதிர்பார்க்கிறேன்."

"தம்பி அதை நீ சுமன் கிட்டையே கேளு." சொல்லியவுடன் தொலைபேசி இடம்மாற,

"சொல்லுங்க வாவா, என்ன விஷயம்?"

"இல்லை உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு மாமாக்கிட்ட கேட்டேன் அவர்தான் உன்கிட்ட கேக்கச்சொன்னாரு. அதான்"

"வாவா இதென்ன என்கிட்ட கேக்குறீங்க, நைனாக்குத்தான் அறிவில்லைன்னா உங்களுக்குமா. இங்க நேர்ல வாங்க பேசிக்கலாம். ஆமாம் இப்ப எங்க இருக்கீங்க, எப்ப வீட்டிற்கு வர்றீங்க." சுமன் கேட்க, யாரையோ பழிவாங்க நினைத்தவனாய்.

"சுமன் மாமாக்கிட்ட சொல்லீறாத, நான் இப்ப தோரபெல்லில் இருக்கேன். முல்லா ரூஜ் போய்ட்டு இன்னிக்கு நைட் வந்திற்ரேன்."

நிராகரிப்பின் வலி எல்லா சமயமும் அடக்கிவிட முடிவதாய் இருப்பதில்லை, அதன் ரணங்கள் பெரும்பாலும் நேர்மறையான வினைகளையே ஆற்றியிருந்தாலும் சில சமயங்களில் எதிர்மறையான வினைகளும் அதனால் ஏற்பட்டுவிடுகிறது. யுயுத்சு நூறு சகோதரர்களுடனும் ஒரு சகோதரியுடனும் பிறந்தவன் ஆனாலும் அவனுக்கு சமூகத்தில் அத்தனை நபர்களஇன் நிராகரிப்புத்தான் பரிசாய்க்கிடைத்தது. அதேபோல் தான் அம்பையும் பீஷ்மனின் வில்லின் வலிமையில் சால்வன் தன் இயலாமையைக்கண்டதால் நிகழ்ந்த நிராகரிப்பு, பின்னர் கங்கை புத்ரர் வரை தொடர்ந்தது. நிராகரிப்பின் சுழற்சியில் இருந்து வெளிவர நினைத்தவனாய் இந்த பதிலை சுமனிடம் சொன்னேன். மறுமுனையில் அவள் நக்கலாய்ச் சிரித்தபடி தொலைபேசியை வைக்க, என் ஐந்தாண்டு நினைவை மூளை மடிப்புக்களில் உள்ள நியூரான்களிடமிருந்து ஆஸிட் ஊற்றி அழித்துவிட நினைத்தவனாய் முல்லா ரூஜ்ஜை நோக்கி நகர்ந்தேன்.


--------------

மீண்டும் ஒருமுறை ஈழமக்களின் உரையாடலை திருத்தி எழுதிக்கொடுத்தமைக்கு சினேகிதிக்கு நன்றி. :-) :D

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In சிறுகதை சுஜாதா

சுஜாதாவை கடத்தப்போறேன்

பெர்லின் - ஜெர்மனி

"சுஜாதாவை கடத்தப்போறோம்**."

மோகன் சொன்னதும் வந்தியின் முகத்தில் வலது புருவம் உயர்ந்ததை தவிர வேறு எந்த உணர்ச்சி மாற்றமும் நிகழவில்லை.

"என்ன பிளான்? "

"அதே பழைய பிளான்தான்."

"ம்ம்ம்... சொல்லு."

"வழக்கம் போல நம்ம வேலையெல்லாம் முடிஞ்ச கடைசிநாள், கிளம்பறதுக்கு இரண்டு மணிநேரம் முன்னாடி, கடத்தப்போற இடம் கடற்கரை, அரைமணிநேர வேலை, வேலை முடிஞ்சதும் மூணு மணி நேரத்துக்கு ஸ்லீப்பிங் டோஸ் கொடுத்துட்டு கிளம்புறோம். அதுவும் தேவைப்பட்டாத்தான்."

"வெப்பன்ஸ்?"

"ஒரு பிஸ்டல், இம்போர்ட்டட் மாஸ்க், ஒரு கார்."

"மற்றபடி..."

"இந்த முறை ரொம்ப தூரம் போகமுடியாது, எந்த இடமும் வேண்டாம், அதனால நோ புக்கிங், எல்லாமே காருக்குள்ள தான்."

"காருக்குள்ளயா?"

"ஆமாம் காருக்குள்ளத்தான். ஓகே டன். இப்ப உன்நேரம். நெகட்டிவ் கொஸ்ஸின்ஸ். "

"முதல் கேள்வி எழுத்தாளர் சுஜாதாவைக் கடத்தி என்ன செய்யப்போற. பணம்ங்ற பேச்சுக்கே இடம் கிடையாது. நம்மக்கிட்ட இல்லாத பணமா. வேற என்னதான் ரீஸன். "

"கொஞ்சம் கேள்வி கேட்கணும்."

"எதைப்பத்தி?"

"கடவுளைப்பத்தி."

"இதை கடத்திட்டு வந்துதான் கேட்கணுமா? நேரிலே போய்க்கேட்டா ஆகாதா. அவரும் நம்ம
ஆளுதானடா. "

"என்ன ஐயங்கார்னு சொல்றியா."

"அதில்லைடா, அன்னிக்கு படிக்கலை 'யாருப்பா அது மைக்ரோசாப்ட் நாங்கல்லாம் லினக்ஸ்'னு ஒரு ஆனந்தவிகடன்ல. நாமளும் லினக்ஸ்னு சொல்லுவோம். நம்ம பேக்ரவுண்டையும் சொல்லுவோம். நிச்சயமா பேசுவாருடா. அப்ப கேளு உன் கேள்வியெல்லாம். "

"அப்பிடிப்போனா ஒருவேளை அவங்க சொந்தக்காரங்க இருக்கலாம். இல்ல உதவியாளர்ன்ற பேர்ல ஒருத்தராவது இருக்கலாம், அவங்களுக்காக அவர் தன்னோட நிலையை மாத்திச் சொல்லலாம் இல்லியா. அதுனால நம்ம இடத்துல தனியா வைச்சிக்கேட்டா சொல்லுவார்ல. நாமயென்ன மிரட்டப்போறமா இல்ல வேற எதாவது பண்ணப்போறமா. அழகா உட்காரவைச்சி கேட்கப்போறோம். "

"அந்தக் கேள்விக்கு பதில் சொல்லமாட்டேன்னுட்டார்னா?"

"அவர்க்கிட்ட கேட்க கேள்விக்கா பஞ்சம். லினக்ஸப்பத்தி, ழ இயக்கத்தைப்பத்தி,
மைக்ரோசாப்ட், பில்கேட்ஸ், கமல், சங்கர், மணிரத்னம், அவரோட பேரன், இன்கம்டாக்ஸ், மேஜை நாற்காலிகள், க்வாண்டம், ரிலேட்டிவிட்டி, ஐன்ஸ்டீன், வெண்பா, கட்டறை கலித்துரை, ராமானுஜர், அர்த்த சாஸ்திரம், சாண்டில்யன், நாலாயிர திவ்ய பிரபந்தம், கொஞ்சம் டயாபடீஸ், நிறைய பைபாஸ் சர்ஜரி இப்பிடி எவ்வளவோயிருக்கு முக்கியமா அந்த ஒரு எழவும் தெரியாத ஓட்டிங் மிஷினைப்பத்தி. ஆனா ரொம்ப முக்கியம் கடவுள் பத்தியது தான்."

"கடவுளைப்பத்தியென்ன கேட்கணும்."

"எல்லா விஷயத்திலும் முடிவா ஒரு கருத்தை சொல்பவர் கடவுள் விஷயத்தில் மட்டும் ஒரு முடிவுக்கே வரமாட்டேங்குறார். அவர மாதிரி ஜினியஸ்ஸெல்லாம் கடவுள் இல்லைன்னு ஒத்துக்கிட்டா. சொல்லி வாதாடுறதுக்கு ஒரு ஆள் கிடைப்பாருல்ல. தனக்கு புரிந்த, தெரிந்துகொண்ட விஷயத்தை சுஜாதா எல்லார்க்கும் சொல்வார்னு நான் உறுதியாக நம்புறேன். அதனால தான் கேட்கிறேன். எவ்ளோபேர் கேட்டிருக்காங்க தெரியுமா. எங்ககிட்ட உன் நாத்திகத்தையெல்லாம் பேசாதே. சுஜாதா, சுஜாதான்னு சொல்றியே அவரே கடவுளை நம்புறார் தெரியுமான்னு. "

"இங்க பாரு தாஸ், அவரால சில விஷயங்களைத்தான் சொல்ல முடியும். முதல்ல மக்களுக்கு புரியுமான்னு பார்க்கணும். பத்திரிக்கைல ஒத்துக்குவாங்களான்னு வேற யோசிக்கணும். விகடன்லயே சில விஷயங்களை ஒத்துக்கலைன்னு அன்னிக்கு ஆதங்கமா இளமை விகடன்ல எழுதல. அதுமாதிரிதான் இதுவும். அதுவும் இது கடவுள் பத்தியது. ஒரு ஒரு தனிமனிதனுக்கும் இதைப்பத்தி கருத்து வேறயாயிருக்கும். அதான் அப்ப அப்ப சூசகமா எதாவது எழுதவார்."

"என்ன எழுதுறார்?"

"காஸ்மாலஜியைப்பத்தி சொல்லும் போது அதன்மூலமாத்தான் பிரபஞ்சத்தின் ஆரம்ப கணங்களைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது. அது வரை சென்று கடவுள் எங்கேயாவது ஒளஇந்திருக்கிறாரானு தேட முடிந்ததுனு சொல்லிட்டு இன்றுவரை அகப்படவில்லை சொல்லியிருக்காருல்ல, அப்பிடின்னா என்ன அர்த்தம். இல்லைன்னுதானே சொல்லவர்றார்."

"அட நீ வேற ஒரு தடவை இப்பிடித்தான். அரியென்று சொல்வார்... அல்லாவென்று
சொல்வார்... அப்பிடின்னு ஆரம்பிக்கும் ஒரு கவிதை, முடிவுல கடவுள் என்று யாரோ ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் தான் வாழ்கிறேன்னு சொல்லி முடிப்பார் கவிஞர். இந்த கவிதையை குறிப்பிட்டுட்டு கீழே இவர் எழுதுறார் இதே நம்பிக்கையில் தான் நானும் வாழ்கிறேன்னு. இதுக்கு என்ன சொல்ற. அதனால நாம இரண்டுபேரும் பேசிக்கிறதால இதுக்கு தீர்வு கிடைக்கும்னு தோணலை. அது போகட்டும், போன தடவையைப்பத்தி என்ன விவரம் கிடைத்தது."

"இல்ல அந்த நடிகை நடந்ததைப்பத்தி யாருக்கிட்டையும் சொல்லவேயில்லை, சொல்லப்போனா நம்ம இரண்டு பேரையும் ரொம்ப பிடிச்சுபோயிருக்கும்னு நினைக்கிறேன் அதனாலதான் அன்னிக்கு கேட்ட எல்லா கேள்விக்கும் பட்டு பட்டுன்னு பதில் சொல்லிச்சு. நாம மறுபடியும் நேர்ல போய்ப்பார்த்தா, நல்லாவே பேசும்னு நினைக்கிறேன்" சொல்லிவிட்டு வந்தியத்தேவன் சிரித்தான்.

"நாமன்னு ஏண்டா என்னையும் சேத்துக்குற, நீ போய்ப் பார்த்தான்னு சொல்லு, நம்ம அப்பா எப்பிடித்தான் உனக்கு இப்பிடி சரியான பேர் வைத்தாரோ வந்தியத்தேவன்னு சரியான வழிசல்டா நீ. புடிச்சபாரு ஒருத்தியை கடத்துறதுக்கு அதுக்கு நான் எவ்வளவோ தேவலை. "

"சரி சரி, ஆளு ரொம்ப வயசானவரு, ஏதோ இளமையா எழுதுரதால தப்பா நினைச்சுராத. அவரோட பாதுகாப்புக்கு..."

"எல்லாம யோசிச்சாச்சு, அதனாலத்தான் வெளியெடத்துக்கு போகாம காருக்குள்ளயேன்னு சொன்னேன். காரும் ஏதாவது பெரிய ஆஸ்பிடலுக்கு 100 மீட்டருக்குள்ளயே சுத்துறமாதிரி பார்த்துக்கோ."

சென்னை - இந்தியா

"டேய் நல்லா பாத்தியா அதே இடம்தானே." மோகன் கேட்க.

வந்தி சொன்னான் "அதே பெஞ்சும் தான், பேசாம பெஞ்சோட தூக்கிட்டு போய்டுவோமா."

"நக்கலெல்லாம் போதும், நாளைக்கு கடத்தணும் ஞாபகம் இருக்கில்ல. சரி என்ன பண்ணப்போறோம் சொல்லு?"

"நான் கார்ல இருப்பேன், அவர் தனியா இருக்கிற எதாவது ஒரு சமயம், நீ பக்கத்தில போய்.
உன்கிட்ட இருக்கிற பிஸ்டலை எடுத்துக்காட்டி, இந்த மாதிரி உங்களை கடத்தப்போறோம்னு
சொல்லு. அப்புறம் காரைக்காட்டி அந்த வண்டியில இருக்கிற ஒரு நபர்கிட்ட லாங் ரேஞ்ச் ரைபிள் இருக்கு. சுத்தம் போடாம வந்திட்டீங்கன்னா. அரை மணிநேரத்தில விட்டிருவோம். இல்லைன்னா நடக்கிற எதுக்கும் நாங்க பொறுப்பு இல்லைன்னு சொல்லு. வந்துட்டார்னா நீ சொன்ன மாதிரி அரைமணிநேரம் அப்புறம் நேரா ஜெர்மனி. சுத்தம் போட்டுட்டார்னா ரெண்டு வழி. ஒன்னு ரெண்டு பேரும் தப்பிக்கணும். இல்லைன்னா ஒரு ஆள் தப்பிச்சு இன்னொரு ஆளை கேஸ்லேர்ந்து காப்பாத்தணும். சரியா?"

"சரிதான், சத்தம் போட்டுட்டார்னா நான் ஒரு கன் ஷாட் பண்ணுரேன். நீ வந்திடு. ஜன
நடமாட்டம் அதிகமா இருக்கிற இடத்தில என்னை இறக்கி விட்டுட்டு. நீ இன்னொரு இடத்துல இறங்கிட்டு வேஷத்தயெல்லாம் களைச்சிட்டு ஸே·ப்க்கு போய் உன்னுடயதெல்லாம் எடுத்துக்கிட்டு நேரா ஏர்போர்ட் வந்திரு. ஓகே வா?."

ஆறு மணி - சென்னை கடற்கரை

எல்லாம் சரியாக நடந்து கொண்டிருந்தது. சுஜாதா வந்து அந்த பெஞ்ச்சில் உட்கார்ந்து சிறிது
நேரம் ஆகிவிட்டது. அந்த இடத்தை நோக்கி மோகன் போய்க் கொண்டிருக்க, சிறிது நேரத்தி
ல் அந்த இடத்தில் கொஞ்சம் பரபரப்பு மோகன் இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி தூக்கி காட்டுகிறான். இது பிளான் கேன்சல் ஆகிவிட்டதிற்கான சிக்னல். இதையெல்லாம் சிறிது தூரத்தில் காரிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் காரை அந்த இடத்திற்கு அருகில் கொண்டு சென்றான்.

எட்டு மணி - ஜெர்மன் விமானம்

என்ன வேண்டுமெனக் கேட்டக் கொண்டிருந்த ஜெர்மானிய பணிப்பெண்ணிடம் வழிந்துவிட்டு,

"என்னதாண்டா ஆச்சு?" என்று கேட்டான் வந்தியத்தேவன்.

"யாரோ அவரோட செல்போனை சுட்டுட்டாங்க, அந்த இடம் கொஞ்சம் பரபரப்பாகிவி
ட்டது. அதனால இப்ப கடத்தவேணாம்னுதான் கேன்ஸல் பண்ணிட்டேன். எங்க போய்வி
டப்போறார். அடுத்த முறை அந்த பெஞ்சோட தூக்கிருவோம்." சொல்லிவிட்டு சிரித்தான் மோகன்தாஸ்.

"சரி நாம கடத்தி, நீ அந்த கேள்வியை கேட்டிருந்தா அவர் என்ன பதில் சொல்லியிருப்பாருன்னு நினைக்கிற?".

"ரிட்டையர் ஆகி, உனக்கும் பைபாஸ் ஆபரேஷன் பண்ணினா தெரியும்னு சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன்." சொல்லிவிட்டு கீழே தெரியும் கடலைப்பார்த்து மீண்டும் சிரித்தான் மோகன்தாஸ்.

வந்தியத்தேவன் ஜெர்மானிய விமானப்பணிப்பெண்ணிடம் வழிந்து கொண்டிருந்தான்.

** திரு ரங்கராஜன் அவர்கள் ஆனந்தவிகடனில் அவருடைய செல்போன் தொலைந்ததைப் பற்றி சொல்ல, மனதில் தோன்றிய ஒரு சிறு புனைவு. இது ரொம்ப முன்னாடியே எழுதியதுதான்னாலும் திரும்பவும் ஒருமுறை.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சுய சொறிதல்

விசிலடிச்சான் குஞ்சுகளூம் வெளக்கமாத்து கட்டையும்





விசில் அப்படின்னதுமே எனக்கு நினைவுக்கு வருவது. எங்க BHELலில் காலங்காத்தாலயே விசில் அடிச்சு எம்ப்ளாயிங்கள தூக்கத்திலிருந்து எழுப்பிவிடறதுதான், பின்னாடி வீட்டிலேர்ந்து கிளப்பி கம்பெனிக்கு வர வைக்கிறதுக்கு ஒரு விசில். இந்த விசில் சப்தம் நான் பிறந்ததிலிருந்தே கேட்டுவருகிறேன்.



(பிறந்திலிருந்தே கூடவேவருது)


அப்புறம் எங்கப்பா ஒரு பியிடி(PET) அப்பிடிங்கிறதால எங்க வீட்டில் நிறைய விசில் இருக்கும். இதில் எங்கப்பா உபயோகிக்கிற ஒரு அமேரிக்காவிலிருந்து வாங்கிவந்த விசில் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். எல்லா ஆசிரியர்களையும் போல அவர் அந்த விசிலை மற்றவர்கள் உபயோகிப்பதை விரும்ப மாட்டார். ஆனால் நான் எங்க கிளப்பில் நடக்கும் பேஸ்கட்பால் மாட்சுக்கு போய் கலாட்டா பண்ண ஒருமுறை எடுத்துட்டு போய் அப்பாக்கிட்ட பயங்கரமாய் உதை வாங்கியிருக்கேன்.

அந்த மாட்சுக்கு வந்த அப்பாவோட ஒரு பிரண்ட் பின்னாடி நான் வேற ஒரு வாலிபால் மாட்சுல பிரச்சனையே பண்ணாம மாட்டினப்ப 'இவன் தானே நிச்சயம் செஞ்சிருப்பான். விசிலடிச்சான் குஞ்சு தானே இவன்.' அப்படின்னு போட்டுக்குடுத்தார்.(வேற அர்த்தமாயிருக்குமோ ??? :-))

அதிலிருந்து அந்த டெர்ம்மை யார் உபயோகித்தாலும் எனக்கு பிடிக்காது.

பின்னாடி காலேஜ் வந்ததும் சினிமாவுக்கு போனா விசிலடிக்கிறதுக்குன்னே என்னையும் கூட்டிக்கிட்டு போற அளவுக்கு நான் விசில் அடிப்பதில் தேர்ந்திருந்தேன்.

இப்புடி நான் விசில் அடிக்கிறதுல பெரிய ஆள் ஆனதிற்கு எங்கப்பாவும் ஒரு காரணம் அவரு கபடி, கொக்கோ மாட்சுக்கெல்லாம் ஊதுறதுக்கு போவாரு.(சிலசமயம் என்னையும் கூட்டிக்கிட்டு). அப்ப ஏற்பட்ட பழக்கம் தான்.

பின்னாடி நான் இன்டஸ்டிரிக்கு(Software Industry) வந்ததுக்கு அப்புறமும் விசில் என்னை விடலை. இங்க நடக்குற இன்டர் கம்பெனி வாலிபால், டக்வார், பேஸ்கட்பால் மேட்சுக்கெல்லாம் ஊதிக்கிட்டு(விசிலைத்தான்) இருக்கேன்.





அப்புறம் வெளக்கமாறைப்பத்தி, ஒருமுறை இப்படித்தான் டெல்லியில் பார்க்க நார்த் இன்டியன் மாதிரியே இருந்த ஒரு பெண்ணைப்பார்த்து விசிலடிச்சிக்கிட்டே ஒரு பாட்டு பாட நேராய் என்கிட்ட வந்து வெளக்கமாறு பிச்சிறுன்னு சொன்னிச்சே பார்க்கணும் எனக்கு தூக்கிவாறிப்போட்டுறுச்சு.

இப்படியாக எனக்கும் விசிலுக்குமான தொடர்ப்பு நீண்டு நெருக்கமாய் இருக்கிறது. மற்றபடிக்கு இந்த பதிவுக்கும் தற்சமயம் வெளிவந்திருக்கும் எந்தபதிவுக்கும் எந்தச்சம்மந்தமும் கிடையாது.

For more reference on Whistle

http://en.wikipedia.org/wiki/Whistle
http://en.wikipedia.org/wiki/Whistling
(பதிவு ஆழமாயிருக்கணுமில்ல அதான்)

Read More

Share Tweet Pin It +1

22 Comments

Popular Posts