அம்மாவின் பிறந்தநாள்
ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாய் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம் பெருமை
ஒத்தவரி சொல்லலையே!
எழுதவோ படிக்கவோ
ஏலாத தாயப்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனே!
எங்கேயோ, எப்படியோ, யாரா சொல்லக் கேள்விப்பட்ட இந்தவரிகளால் மூச்சடைத்துப் போய்
உட்கார்ந்திருந்தேன். திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறியிருந்தது. மனதிற்கு தெரிந்துதான் இருந்தது, இன்றைக்கு வேலை கோவிந்தாவென்று. பக்கத்து கியூபிற்கு வந்து உட்கார்ந்த அந்த காஷ்மீரத்து பெண் என் முகத்தை பார்த்ததுமே புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஒன்றுமே பேசாமலிருந்தாள், முன்பு சிலசமயம் பேசி வதைப்பட்ட காரணமாகயிருக்கலாம். நான் வேலைசெய்யாமல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மேலாளர்,
"என்ன இந்தவாரமும் சனிக்கிழமையா?"
கேட்டுவிட்டு போய்விட்டார், அவருக்கு அதற்குமேல் கேட்க உரிமையளிக்கவில்லை, நான் வேலைசெய்யும் பன்னாட்டு கம்பெனி. ஏதோ ஞாபகமாய் இணைய அஞ்சல் பெட்டியை திறக்க,
தம்பி ஜூலை 22, அம்மாவுக்கு பிறந்தநாள், மறக்காமல் வாழ்த்து சொல்லவும்.
அன்புடன்
அக்கா
இந்த மின்னஞ்சலை படித்ததும் எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை, இருபத்திரண்டு ஆண்டுகள் ஆகிறது, என் குடிகார தகப்பனிடம் வாழ்க்கைப்பட்டும், தன்னை பற்றிய நினைவில்லாமல், எங்களை வளர்த்த அம்மாவிற்கு நான் இதுவரை பிறந்தநாள் வாழ்த்து சொல்லியதில்லை.
நான் நினைத்துப்பார்க்கிறேன், இதற்கு முழுக்காரணமும் நான்தானாவென்று. நிச்சயமாக சொல்லிவிடமுடியாது. எங்கள் வழக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதென்பது இல்லாதவொன்று. அடுத்தநாள் வாழ்க்கையையே யோசிக்கமுடியாத எங்களுக்கு பிறந்தநாள்களை பற்றிய நினைவு மிக அரிது. சிரிப்பாகத்தான் இருக்கிறது, என் தாயின் பிறந்ததினமே எனக்கு பதினாறு பதினேழு வயது வந்தபின்தான் தெரிந்தது என நினைக்கும் போது.
அம்மாகூட சொல்லியிருக்கலாம் இன்று என் பிறந்தநாள், நாளை என் பிறந்தநாள் என்று, ஆனால் சொல்லவில்லை இன்றுவரை. முடிந்த அடுத்தநாளோ இல்லை, அதற்கு அடுத்த நாட்களோ தெரியவந்திருக்கிறது. போட்டோஜெனிக் மெம்மரி இல்லாத காரணத்தாலோ என்னவோ நான் மறந்துவிட்டிருக்கிறேன் அடுத்த வருடமும்.
சிறுவயதில் கேட்கத்தெரிந்திருக்கவில்லை, ஏன் நேற்றே சொல்லவில்லையென்று, வயது வந்தபின்தன்னால் தெரியவந்தது, தெரியவந்ததற்கும் ஒரு பெரிய காரணம் இருந்தது.
அம்மாவை போலவே எங்களுக்கு தெரிந்த இன்னொருவர் வீட்டிலும் இதே போல் கணவனால் பிரச்சனை. கொஞ்சம் பிரச்சனை விவகாரமாக ஆகவிட்ட சூழ்நிலையில், அவருடைய பிள்ளைகள் அப்பாவிற்கு சாதகமாக பேசிவிட பயந்துபோன அம்மா, நாங்களும் அம்மாவிற்கு நடக்கும் கஷ்டங்களும், வேதனைகளும் தெரியாமல் அப்பாவிற்கு சாதகமாக பேசிவிடுவோமோ என நினைத்து, வயது வந்த பின் மிகவும் சாதுர்யமாக, சொற்களின் பின்னல்களால் சொல்லியிருக்கிறாள்.
அம்மாவின் பிறந்தநாட்களைப் போலவே எங்கள் வீட்டு தீபாவளியிலும் ஒரு சோகம் இருக்கும். கஷ்டம் பல இருந்தாலும் மனதிற்கு மகிழ்ச்சி தருவது தீபாவளி. அதுவும் எங்கள் வீட்டில் நாங்கள் கொண்டாடும் ஒரு பண்டிகை. புத்தாடை முதல்நாள் வாங்கி வந்தபோதும், 100 ரூபாய்களுக்கு மேல் பட்டாசே வாங்கியராத போதும். நானும் அக்காவும்(?) சந்தோஷமாகத்தான் இருந்திருக்கிறோம்.
அம்மா சுடும் முருக்கைப்போலவும் அதிரசத்தைப்போலவும், ரவாலாடைப்போலவும் நான் இதுவரை சாப்பிட்டதேயில்லை, இந்த விஷயத்தில் வேண்டுமானால் என்னை பாரதியுடன் ஒப்பிட்டுக்கொள்ளலாம்(?). `உண்மை வெறும் புகழ்ச்சியல்ல'. ஆனாலும் அம்மா சந்தோஷமாக இருந்ததில்லை. அன்றைக்கு காலையில் இருந்தே ஏதோ அணுகுண்டு வெடிக்கப்போவதற்கான அறிகுறிபோல் வீடு அமைதியாக இருக்கும். அம்மா மதியம்போல் நோன்பு எடுக்கபோகவேண்டுமென்று சொன்னவுடன் வெடிக்கும். இத்தனைக்கும் அப்பா கடவுள்மேல் நம்பிக்கை அதிகம் கொண்டவர்.
இதற்கான காரணமும் பிற்பாடு சொல்லப்பட்டிருக்கிறது. நான் எப்பொழுதும் திருவள்ளுவரை
கொண்டாடுபவன். வார்த்தைகளையோ, சொற்றொடர்களையோ ஆராய்ந்து பார்க்கும் ஆர்வம் அதிகமிருந்திருக்கிறது. ஆனால் அம்மா அந்த காரணத்தை ஒரு நாள் சொன்னதும் வருந்தியிருக்கிறேன், இனிமேல் ஆராயக்கூடாதென. அந்தச் சொற்றொடர். `தேவிடியாள் தெவசம் கொண்டினது போல்.'
அம்மா சின்னவயதில் சொல்லநினைத்திருந்தால் இதற்கான அர்த்தத்தையும் கூடவே சொல்லவேண்டியிருக்க வேண்டியிருக்கும். எனக்கென்னவோ தவிர்த்தது நல்லதாகப்பட்டது. நானும் அந்த சொற்றொடரின் விளக்கத்தை அளிக்க முன்வரவில்லை, புரிந்திருக்கும், கேஸ் இல்லாமல் மண் அடுப்பில், விரகுகளை வைத்து அம்மா அவ்வளவு கஷ்டப்பட்டு, சுவையாக எல்லாம் செய்து முடிக்க. அம்மாவின் வேதனை புரியாத மூடனில்லை நான்.
அப்பாவும் அம்மாவும் அவர்களுடைய பிராவிடண்ட் பண்ட்களையெல்லாம் எடுத்து எங்களைப் படிக்கவைக்ககேட்டிருக்கிறார்கள். 'சார் நீங்க சொத்தே சேர்த்து வைக்காமல் இப்படி செலவளஇக்கிறீர்களே'யென்று, அதற்கு அப்பா சொன்னதாக அம்மா எங்களிடம் சொல்லிய, `எங்கள் புள்ளைங்கள் தான் எங்கள் சொத்தென்பது' இன்று உண்மையாகி இருக்கிறது.
ஜூலை 22, போன் செய்தேன்,
"ம்ம்ம், நான்தான்."
"இரு, அம்மாகிட்ட கொடுக்கிறேன்."
"ம்ம்ம், சொல்லும்மா. என்ன விஷயம்."
"இல்லை சும்மாத்தான், உனக்கு இன்னிக்கு பிறந்தநாள்தானே? Happy Birthday."
என்னால் இந்தப் பக்கத்திலிருந்தே அம்மாவின் முகத்தில் இருக்கும் ஆச்சர்யத்தை புரிந்து கொள்ளமுடிந்தது.
அம்மாவின் பிறந்தநாள்
பூனைக்குட்டி
Friday, January 12, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
இது என்னதென்று தெரியவில்லை...
ReplyDeleteஇருந்தாலும்
மனதைத்தொடும் ஒரு பதிவு.
இதுவரை சொல்லாததை சொல்லி ஒரு நல்ல விஷயத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறீங்கள். அம்மாவுடன் மனம் விட்டு மேலும் பல விஷயங்கள் பேச இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டும்.
ReplyDeleteநன்றிகள் அன்பு மற்றும் ரம்யா நாகேஸ்வரன்
ReplyDeletetest
ReplyDeleteஅம்மாவின் பிறந்த நாள், நான் பிறந்து,வளர்ந்து புக்ககம்
ReplyDeleteபோன பின்னால்
'
உனக்கு எப்போ'மா பிறந்த நாள் என்று கேட்டு
பிறகு சொன்னார்.
நாம் தான் சுயநலமாக இருந்தோமா. என்ன என்று புரியவில்லை.
இப்போதாவது கேட்டேனெ என்று மகிழ்ந்து அதற்குப் பிறகு 25
பிறந்த நாளைக்கு இருந்தார்.நல்ல்தொரு கதை மோஹன்தாஸ்.
வல்லி,
ReplyDeleteநானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
ஆனால் சுயநலம் மட்டும் தான் காரணம் என்று சொல்ல முடியாது.
அன்பு மோகன்தாஸ்,
ReplyDeleteஅந்த கவிதை வரிகள் வைரமுத்துவுக்கு சொந்தம் என நினைக்கிறேன்.
கல்யாணம் ஆகி, நமக்கும் ஒரு குழந்தை பிறந்து, முப்பது வயதில் அம்மாவோடு ஒரு தோழமை வருகிறது. அவளுடைய அருமை புரிவதால் உருவாகும் அன்பு மிக கனமானது.
அந்த அன்பை பகிர்ந்து கொள்ள எனது அம்மா இல்லாததால், உங்கள் பதிவு என்னை கொஞ்சம் தொந்தரவு செய்துவிட்டது மோகன்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.