எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ச்சியாக பலமுறை, பல வருடங்களுக்கு செய்யும் பொழுது ஒவ்வொரு முறையும் அந்த நிகழ்வு வித்தியாசமாய்ப்படுகிறது. வித்தியாசமாய்ப்படுவதற்கு பல காரணங்கள், பொருளாதாரம், பகுத்தறிவு, ஆட்சிமாற்றங்கள், காலங்களுக்கு இடையில் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள். இப்படி பல காரணங்கள்.
இவை அனைத்தும் எனக்கும் வைகுண்ட ஏகாதெசிக்கும் இடையில் வந்தது தான் இந்தப் பதிவை நீங்கள் படிப்பதற்கான காரணங்கள். அதுவும் என் வரையில் நிறைய மாற்றங்கள், முதன் முறை நான் வைகுண்ட ஏகாதெசிக்குச் சென்றிருந்த பொழுது நான் பள்ளiயில் படித்துக் கொண்டிருந்தேன். பத்து ரூபாய் கிடையாது பையில், பெருமாள் மீதான பாசமும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்விற்கு செல்லும் பொழுது இயற்கையிலேயே உண்டாகும் ஒருவித உற்சாகமும் தான் முக்கியக்காரணம்.
அந்த உற்சாகம் இரண்டாவது கோபுரத்தைத் தாண்டியும் சுத்தமாக வாடிப்போனது தான் உண்மை. ஒரு பக்கம் சந்தன மண்டபம், மற்றும் கிளi மண்டபம் சொல்வதற்கான வழியென எழுதப்பட்டு காலியாகக் கிடந்த ஒரு கியூ இன்னொரு பக்கம் பெரிரிரிரிரிரிரிரிரிரிரிரிய கியூ. காலியாகக் கிடந்த கியூவிற்கும், மற்றப்பக்க கியூவிற்குமான வித்தியாசம் இதற்குள் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆறு ஏழு வருடத்திற்கு முன்னர் அந்த மண்டபங்களுக்கு செல்வதற்கான பணம் எவ்வளவு என்று சரியாக நினைவில் இல்லாவிட்டாலும், என்பையில் காசில்லாதது மட்டும் நன்றாக நினைவில் உள்ளது.
பக்திங்கிறது கோயிலுக்குப் போய் நிரூபிக்கும் விஷயமாய் என் குடும்பத்திற்கு இன்றுவரை இருந்ததில்லை, நல்ல நாள் பெரிய நாள்களுக்கு மட்டும் தான் இன்று வரை கோவில்களுக்குச் சென்று வருகிறோம், அதுவும் வருடத்திற்கு இரண்டு மூன்று முறைகள் மட்டுமே. அதனால் நான் ஏகாதெசிக்குச் செல்வதற்கு பர்மிஷன் கிடைப்பதே பெரிய விஷயம். காசு கேட்டால் அவ்வளவுதான். ஆப்வியஸ்லி நான் அந்த கும்பல் நிறைந்த கியூவைத்தான் தேர்ந்தெடுத்தேன். ஒருமுறை அந்தக் கும்பலில் கடந்துப் போய் சொர்க்கவாசலுக்குச் சென்று திரும்பியிருந்தால் உங்களுக்கும் தெரிந்திருக்கும் ஒரு பள்ளிக்கூட மாணவனுக்கு இருக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச உற்சாகத்தையும் தொலைக்கும் வலிமையுள்ளது அந்தக் கியூ என்ற உண்மை தெரிந்திருக்கலாம். உற்சாகம் அனைத்தையும் தொலைத்துவிட்டு, திரும்ப வீட்டிற்கும் போகும் வழியில்லாமல், வேதனையே என்று கியூவில் நின்றேன்.
கிட்டத்தட்ட ஆறு மணிநேரம், தூங்காமல், உட்காரக் கிடைக்கும் சிறிது ஆப்பர்டியூனிட்டியை உபயோகப்படுத்திக் கொண்டு ஒருவழியாக மார்கழி மாதக்குளிரிலும், சட்டையெல்லாம் நனைந்து உள்நுழைந்து மிதித்த சொர்க்கவாசல் நன்றாக நினைவில் இருக்கிறது. ஆனால் இப்பொழுதைப் போலில்லாமல் பெண் உடலின் மீதான காதல் அதிகமாக இருந்த நாட்கள் அவை. நான் பல பிரச்சனைகளுக்கு நடுவில் சொர்க்கவாசலுக்குப் போயிருந்ததற்கு அதுவும் ஒரு காரணம் என்று இப்பொழுது நினைக்கிறேன். அந்த விஷயத்தில் நான் நிச்சயமாய் ஏமாந்து போகவில்லை தான்.
அத்தனையிலும், நான் அன்று சொர்க்கவாசலை மிதித்து விட்டு, உற்சவமூர்த்தியை மட்டும் தான் பார்த்தேன், மூலவரைக் கிடையாது. ஆனால் சாதாரண நாட்களில் பார்த்திருக்கிறேன் என்றாலும் அன்று முத்தங்கி சேவை. ஆனால் அவர்கள் பொது சேவைக்காக திறந்துவிடும் வழி மூலவரை நோக்கிப் போகாது. சொர்க்கவாசலைக் கடந்து கிழக்கு வாசலுக்கு பக்கத்தில் இருக்கும் மணல்வெளிக்கு வந்தால், ரத்தினங்கி அணிந்து சிங்க முக நடனம் ஆடிக்கொண்டிருக்கும் உற்சவமூர்த்தியை பார்த்துவிட்டு வெளியே வந்துப்பார்த்தால் மீண்டும் நீங்கள் ஒரு பெரிய கியூ நிற்கும். சின்ன வயதுதானே எனக்கும் பொறுமையில்லாமல், வீட்டை நோக்கி நடையைக் கட்டியிருக்கிறேன்.
அடுத்த இரண்டு முறையும் நண்பர்களுடன் சென்றிருந்தேன். அதில் ஒரு முறை நல்லா ப்ளான் பண்ணுறேன் பேர்வழியென்று ஒன்பது மணிக்கு முன்பே சென்று உள்சுற்றில் உட்கார்ந்திருந்தோம். ஆனாலும் நாங்கள் எதிர்பார்த்திருந்ததைப் போல் இல்லாமல் ஒரு பெரிய கியூவை மட்டும் தான் தாண்டியிருந்தோம், இரண்டு மணிக்கு மேல் உட்கார்ந்திருந்து பின்னர் கிளi மண்டபத்திற்குள் அனுமதித்தார்கள். அந்த இரண்டு முறையும் நாங்கள் ஒரு பெரிய கியூவில் நிற்கவில்லை, அது மட்டுமில்லாமல், நண்பர்களுடன் சென்றிருந்ததால் அந்த இரண்டு முறையும் குதூகலமாயிருந்தது.இந்தப் பதிவை எழுவதற்கான சப்-டைட்டிலாக போட்ட பெத்தபெருமாள் == பணம். கம்ப்யூட்டர் வழக்கப்படி, வலதுபக்கத்திலிருந்து தொடங்குகிறேன்.
பணம், என் வாழ்க்கையின் இதுவரையிலான காலக்கட்டத்தில் பெரும்பாலான சமயத்தில் என்னிடம் இல்லாமல் இருந்த ஒன்று. பெரும்பாலான சமயம் என்பது இருபது வருடங்களுக்கு மேற்ப்பட்ட காலங்கள். அதனாலேயோ என்னவோ என் இந்த இருபத்தி மூன்று வருட வாழ்க்கையில் நிறைய விஷயங்களை அனுபவித்துவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு அடிக்கடி வருவதுண்டு. (அது அப்படியில்லை என்பது உள்மனதிற்கு தெரியும் பொழுதும் சப்கான்ஷியஸில் அப்படி ஒரு பீலிங்.)
பணத்தைப் பற்றி எனக்கு பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. ஒவ்வொரு வருடமும், வைகுண்ட ஏகாதெசிக்கு செல்லும் பொழுதும். சந்தன மண்டபத்திற்கும் கிளி மண்டபத்திற்கும் செல்வதற்கு காசு கொடுக்க வேண்டும் என்று தெரிந்தாலும், கைவசம் காசில்லை என்ற உணர்ந்தாலும், ஒரு கில்டி பீலிங் இருக்கும் வாழ்க்கையில் எதையோ இழப்பதைப் போல். அந்த இடத்திலேயே ஒரு மணிநேரத்திற்கு மேல் நின்று இன்னொரு கியூவில் உள்ளே செல்பவர்களையே பார்த்துக்கொண்டிருப்பேன். எப்படியும் எனக்குத் தெரியும் அந்த வழி வழியாக உள்ளே போக முடியாதென்பது. இருந்தாலும் போலீஸ்காரர்களின் திட்டுக்களையும் கேட்டுக்கொண்டு அங்கேயே நின்றிருப்பேன். அந்த வருடத்திற்கு தேவையான கோபம் அனைத்தையும் சேர்த்துக்கொள்வதைப்போல.
இந்த தடவைக்கு வருகிறேன், சொல்லப்போனால் கிளி மண்டபத்திற்குச் செல்ல ஆகும் இருநூறு ரூபாயும் ஆகட்டும், சந்தன மண்டபத்திற்கு ஆகும் ஆயிரம் ரூபாயும் பாக்கெட்டில் ஹாட் கேஷாக இருந்தது. ஆனால் டிக்கெட், ம்ஹும் என்னிடம் கிடையாது, நான் ஏகாதெசிக்காக ஸ்ரீரங்கத்திற்கு வந்ததே வெள்ளிக்கிழமை மத்தியானம் தான். பிறகெங்கே வாங்குவது டிக்கெட், ஸ்ரீரங்கத்திற்குள் நுழையும் பொழுது ராத்திரி பதினொன்று. பணமிருந்தும் டிக்கெட் வாங்க முடியாத என் நிலை இப்பொழுது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இங்கே தான் நான் வியக்கும் சில விஷயங்கள் நடந்தது, நான் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவேயில்லை, இந்தப் பக்கம் ஏற்கனவே டிக்கெட் வாங்கியிருந்த நபர்கள் உள்ளே சென்று கொண்டிருந்தார்கள், இன்னொரு பக்கம் பெருங்கூட்டமாய் மக்கள் கியூ வரிசையில் சேர்ந்து கொண்டேயிருந்தார்கள். அதே பழைய நாட்கள் மீண்டும் நினைவில் வந்தது. ஆனால் ஒரேயொரு வேறுபாடு, ஒன்றே ஒன்று, என்னிடம் பணம் இருந்தது. அந்த ஒரேயொரு விஷயம் எனக்கு நான் எழுதமுடியாத அளவிற்கு நம்பிக்கையைத் தந்தது. அந்த நம்பிக்கையை இந்திய தேசத்தின் மீதான என் நம்பிக்கை என்று சொல்லலாம், ஆனால் சரியா என்று தெரியாது.
அந்தச் சமயத்தில் இரண்டு விஷயங்கள் தான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஒன்று போலீஸ்காரர்களுக்கு லஞ்சம் கொடுத்து எப்படியாவது ஒரு டிக்கெட் பெறுவது மற்றது அதே போல் ஐயர்களைக் குறிவைப்பது. பத்து நிமிடத்தில் நம்பிக்கை வந்தவனாய் போலீஸ்காரர்கள் பக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த கேட்கீப்பரை அணுகி விஷயத்தைச் சொன்னேன். மேலும் கீழும் பார்த்தவர், இன்னும் நேரம் இருப்பதாகவும் சற்று காத்திருக்கவும் சொல்ல அங்கேயே நின்று கொண்டிருந்தவனை நோக்கி அடுத்த பத்து நிமிடத்தில் ஒரு நபர் வந்து டிக்கெட் இருப்பதாகவும் வேண்டுமென்றால் நூறு ரூபாய் கூடக்கொடுத்து வாங்கிக்கொள்ளச் சொன்னார். ஆயிரம் ரூபாய் செலவழித்துக்கூட உள்ளே செல்ல ஆவலாய் இருந்த எனக்கு நூறு ரூபாய் எம்மாத்திரம்.
அடுத்த நொடி டிக்கெட் என்கையில், சுத்தமாய் இருந்த முதல் கியூவைத்தாண்டி உள்ளே நுaழந்து அடுத்த அடுக்கிற்குள் நுழைந்தேன், இங்கே தான் இராமாநுஜர் சமாதி இருக்கும். அங்கேயும் ஒரு பெரிய கியூ இருக்கும் எனக்கும் நன்றாகவேத் தெரியும் ஏனென்றால் முன்பு நண்பர்களுடன் சென்ற பொழுது ஸ்கிப் பண்ணியது முதல் கியூவைத்தான், இரண்டாம் கியூதான் நான் மேற்சொன்னது. நான்கு முறை முன்பின்னாக சினிமா டிக்கெட் கியூபோல் சுமார் 60 மீட்டர் தூரமுள்ளது இந்த வரிசை. நான் சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன் மொத்தமாக இந்தக் கியூவை ஸ்கிப் செய்ய அதாவது தாவிக்குதித்த முன்னேற.
என் நேரம், நான் கியூவில் இணைந்ததும் வந்து நிறைய டிக்கெட் இல்லாத மக்கள் அந்தக் கியூவில் இருப்பதால் டிக்கெட் இருப்பவர்கள் நேராய் உள்ளே போகலாம் என்று சொல்ல, அப்பொழுது உள்ளே செல்ல திறந்துவிடப்பட்டுக் கொண்டிருந்த 200 ரூபாய் டிக்கெட் வரிசை மொத்தத்தையும் ஸ்கிப் பண்ணிக் கொண்டு போக எனக்கு வாய்ப்பு. அப்படி கியூவிலிருந்து வெளiயில் குதிக்கும் பொழுது தெரியாமல்(உண்மையிலேதாங்க) ஒரு அம்மா மீது ஒரு விரல் பட்டிருக்கும் அதுவம் ஷாயித் புடவையின் மீது. அந்தம்மா தமிழ் கிடையாது, தெலுங்கு. ஸ்டுபிட் என்று திட்ட வந்த கோபத்தில் நடந்த விஷயத்தைச் சொன்னேன் அவர்களிடம் இந்தியில்(எனக்கு தெலுங்கு தெரியாது. ஆங்கிலம் பேசுவதை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன்.) அந்தம்மாவுடன் வந்திருந்த இன்னும் மூன்று தெலுங்கு பெண்களும் சேர்ந்து கொண்டு நீ மட்டும் கியூவை தாண்டலாமா யோக்கியமா என்று கேட்க நான் சொன்னேன் போலீஸ்காரர்தான் சொல்கிறார் என்று. பின்னர் தான் தெரிந்தது அந்த அம்மாக்களும் 200 டிக்கெட் வைத்திருந்தவர்கள். என்னைப்போல் எகிறிக் குதிக்க முடியாததுதான் கோபத்திற்கு காரணம் என்று.
பின்னர் அடுத்தக் கியூ, இது ஜஸ்ட் மூலஸ்தானத்திற்கு முன் உள்ளது. இங்கே மொத்த கும்பலே கம்மிதான். அதிலும் விஐபி டிக்கெட், 200 ரூபாய் டிக்கெட், அப்புறம் டிக்கெட் இல்லாத நம்ம மக்கள் என்ற மூன்று வகையான மக்களும் நின்றார்கள். டிக்கெட் இல்லாத மக்கள் உள்ளே போகமுடியாது, விஐபி டிக்கெட்டும், 200ரூபாய் டிக்கெட்டும் உள்ளே போக முடியும். அந்த இடத்தைக் கடந்து உள்ளே நுழையும் பொழுது சரியாக மணி பன்னிரெண்டு பதினைந்து. அங்கே வரை கியூவே இல்லாமல் உள்ளே வந்த ஆயிரம் ரூபாய் டிக்கெட் சந்தன மண்டபம் என்று அழைக்கப்படும் மூலஸ்தானத்திற்கு எதிரில் அனுப்பப்பட, அதாவது மூலவர் இருக்கும் இடத்திற்கு சற்று வெளiயில்.
அந்த மண்டபத்தை அடுத்து வருவதுதான் கிளி மண்டபம், இந்த மண்டபத்தில் உட்கார்பவர்களால், மூலஸ்தானத்திலிருந்து சொர்க்கவாசல் திறக்கச் செல்லும் உற்சவரையே கூடப் பார்க்க முடியும். சரியாகச் சொல்ல வேண்டுமானால் சந்தன மண்டபத்தையும் அதனுடன் ஒட்டியவாறு இருக்கும் மூலஸ்தானத்தையும் ஒரு சுற்று சுற்றிவிட்டுதான் உற்சவர் சொர்க்கவாசலுக்குச் செல்வார். இந்த மண்டபத்தில் இதற்கு முன்பே இருந்திருக்கிறேன் எப்படி என்றால் முன்னர் ஒருமுறை தில்லுமுல்லு செய்வதற்காக கிழக்கு வாசலில் நின்ற சமயம், இராமகோபாலன் வர அவருடன் சேர்ந்து அவர் குரூப்பாக உள்ளே சென்றிருக்கிறேன். அவர் சந்தன மண்டபத்திற்குச் செல்ல நான், வேண்டுமென்றே கிளி மண்டபத்தில் உட்கார்ந்தேன். ஆனால் இந்த முறை நான் உட்கார்ந்த சுற்று கிடையாது அதற்கும் வெளியில்.
இந்த முறை கிளிமண்டபத்திற்குள் நுழைந்த நபர்களiல் இருபதாவது ஆளாய் இருப்பேன் என்று நினைக்கிறேன். முதல் முறையாக முத்தங்கி சேவையைப் பார்த்தது இந்த முறைதான். அதே போல் ஆராம்ஸேயாய் சொர்க்கவாசல் சென்றதும் இந்த முறைதான். என்னவோ இந்த முறை வெளியில் வரும் பொழுது பெத்த பெருமாளையே விலை கொடுத்து வாங்கிவிட்டதாக ஒரு உணர்வு எழுந்ததை தவிர்க்க முடியவில்லை. உள்ளே வந்ததற்கும், எந்தக் கியூவிலும் நில்லாமல் சென்றதற்கும், வசதியாய் பார்த்ததற்கும் பணம் தான் காரணம் என்ற எண்ணம் மனசை விட்டு அகலவேயில்லை(பக்தி தான் இல்லையே என்னிடம்).
சின்னப்புள்ளத்தனமாயில்லை, ஆனால் சில விஷயங்கள் உண்மையிலேயே உறுத்துகின்றன. இந்த முறை எல்லா முறையையும் போலில்லாமல், பொது சேவை ஆறுமணிக்கு மட்டும்தான் விட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் முந்தைய நாள் இரவு டிக்கெட்டிற்காக காத்திருந்த சமயத்தில் போலீஸ்காரர்களிடம் சோஷலிசம்(கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் - அவர்களிடம் பணம் இருக்கிறது கொடுத்து போகிறார்கள், எங்களிடம் இல்லை என்ன செய்ய) பேசிக்கொண்டிருந்த ஒரு குரூப் நான் ஒட்டுமொத்த தரிசனமும் விட்டு வெளியில் வந்த பொழுது வெளி கேட்டிலேயே தான் நின்று கொண்டிருந்தார்கள். நிச்சயமாய் அவர்களுக்கு இன்னும் ஐந்து மணிநேரம் எடுக்கும் முத்தங்கி சேவையையோ இல்லை சொர்க்கவாசலுக்கோ செல்ல.
அதே போல் மூன்றரை மணிக்கு மூலஸ்தானத்தை விட்டு வெளியில் வரும் உற்சவர் உடன் செல்லும் அத்தனை மனிதர்களும் அங்கே பணம் கொடுத்து வந்தவர்கள் தான். விஐபி பாஸ் மக்களைக்கூட எங்களுக்குப் பின்தான் விட்டார்கள். மக்கள் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது இந்த முறை பணம் தான் ஏகாதெசியை தீர்மானித்தது என்று. எனவரையில் 100% சரியான வாதம் தான் அது.
அந்த மக்களுக்கு தெய்வபக்தி இருந்திருக்கும், எல்லாம் அவன் செயல் என்று அந்த மக்கள் நினைத்திருக்கலாம், கலிகாலம் முத்திருச்சுன்னு சொன்ன பாட்டியைப் போல(கிளிமண்டபத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் – பிஎஸ்ஸி படித்து முடித்து வேலையில்லாமல் தவிக்கும் பையனைப்பற்றிச் சொன்னதும், மெயில் ஐடி கொடுத்துவிட்டு வந்தேன்.
In Only ஜல்லிஸ் சொந்தக் கதை சொர்க்கவாசல்
பெத்தபெருமாள் == பணம்(photos updated)
Posted on Wednesday, January 03, 2007
பெத்தபெருமாள் == பணம்(photos updated)
பூனைக்குட்டி
Wednesday, January 03, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனா...
-
மதுமிதா இறந்துவிட்டாள் என்ற செய்தியை என்னால் சிறிதும் நம்பமுடியவில்லை, நான் சிறிது சிறிதாக மயக்கமாகிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. o அந...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
HAPPY NEW YEAR
ReplyDeleteThis is my first comment in this blog world.. :)
I like to write blogs in TAMIL like you soon. [ new year resolution ;) ]
I really enjoy your blog Ecellent details./ பிஎஸ்ஸி படித்து முடித்து வேலையில்லாமல் தவிக்கும் பையனைப்பற்றிச் சொன்னதும், மெயில் ஐடி கொடுத்துவிட்டு வந்தேன்./ GOD WILL BLESS YOU.
ReplyDelete