வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதன் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று ஒருவாறு ஊகிக்க முடிந்தும் அந்தச் செயலை செய்வது எனக்கு ஆச்சர்யத்தை அளிப்பது. அன்றும் அப்படித்தான் நடந்தது. நான் இந்த விஷயத்தை எப்படி அகிலாவிடம் சொல்வது என்று முன்னூறு முறை ஒத்திகை பார்த்து அலுத்துப்போய் சொல்லியேவிட்டேன், அவள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும், என்று நினைத்து.
“அகிலா, உன் தங்கச்சியை நான் பார்க்கணும்னு சொன்னேன்னு சொல்லு. ப்ரீயா இருந்தா மொபைலுக்கு கால் பண்ணச் சொல்லு.”
திருமணமாகி இந்த நான்கு வருடங்களில் பல முறை ஜெயஸ்ரீ எங்கள் வீட்டிலேயே கூட தங்கியிருந்த பொழுதும் பெரும்பாலும் நான் அவளிடம் அதிகம் பேசியதில்லை. எங்களுக்கு திருமணம் நடந்த பொழுது ஜெயஸ்ரீ பதினொன்று படித்துக் கொண்டிருந்ததாய் ஞாபகம். பின்னர் +2 வில் நிறைய மதிப்பெண் எடுத்தும், விரும்பி ஆங்கில இலக்கியம் எடுத்து படித்து முடித்துவிட்டு, ஏதோ ஒரு கல்லூரியில் வேலை பார்த்துவருகிறாள்.
அகிலாவைப் போலில்லாமல் ஜெயா வித்தியாசமானவள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆங்கில இலக்கியத்தில் இருந்த அதீத ஈடுபாட்டால், கல்லூரியின் ஆங்கில இலக்கியப்பிரிவின் தலைவராக இருந்ததாகவும், கவிதை எழுதுவது மேடையில் பேசுவது இதிலெல்லாம் ஆர்வம் அதிகம் என்றும் அகிலா பெருமையாக சொல்வாள். அகிலாவிற்கு இதெல்லாம் தெரியாது, பாலமுரளி கிருஷ்ணா, பி. சுசீலா இவர்கள் தான், மியூசிக் பற்றி பேசச்சொன்னால் இன்றைக்கு முழுவதும் பேசிக் கொண்டிருப்பாள். அதைப் போலவே பாடவும். ஒன்று பாட்டு கேட்டுக்கொண்டிருப்பாள் அல்லது சன்னமான குரலில் பாடிக்கொண்டிருப்பாள்.
சிலசமயம் நேரடியாய் அவளிடம் கேட்டிருக்கிறேன்,
“உனக்கு நான் சரியில்லையோ, நீ பாடுறது ரொம்ப நல்லாயிருக்கு ஆனால் எனக்கு அவ்வளவுதான் தெரியும் அதைக் கொண்டாட தெரியாது, புரிஞ்சிக்கத் தெரியாது. நம்ம பிரண்ட்ஸ்களோட கெட்டுகெதரில் பாடும் மத்தவங்களை விட உன்னோட வாய்ஸ் அருமையா இருக்கு.
அந்தந்த புருஷன்மார்கள் அவங்களோட பெண்டாட்டி குரல்வளத்தைப் பற்றி பெருமையா பேசுறப்போ எனக்குத் தோணும், நானும் இதையெல்லாம் சொல்லணும்னு, என் பொண்டாட்டி இதைவிடல்லாம் அருமையா பாடுவான்னு. ஆனா இதுவரைக்கும் சொன்னதில்லை. ஏனோ என்னால முடிஞ்சதில்லை, ஆனா ஒன்னு மட்டும் உறுதி அதில் எந்த ஒரு இடத்திலும் ஈகோயில்லை.
என்னைவிட உன் பாடலை நேசிக்கிறவனை நீ கட்டிக்கிட்டிருந்தா இன்னும் நல்லாயிருந்துருப்பியோன்னு பலதடவை நான் நினைக்கிறதுண்டு தெரியுமா?” என்று, பளிச்சென்று பதில் சொல்வாள்,
“என்ன ஐயா வேற பொண்ணை பார்த்து வைச்சிட்டீங்க போலிருக்கு, என்னை கலட்டிவிடுறதா உத்தேசமா? அதுக்குத்தான் இப்படி ஒரு பில்டப் எல்லாம் கொடுக்குறீங்கன்னு நினைக்கிறேன்.”
ஆரம்பத்தில் எனக்கு அவள் என்னை எத்துனை தூரம் நுணுக்கமாய் கவனிக்கிறாள் என்று தெரிந்திருக்கவில்லை, நான் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் அவள் முணுமுணுக்கும் பாடல்கள் எத்தனை நேர கவனிப்பில் வந்தது எனத்தெரியாது, கோபமாயிருக்கும் பொழுது, சந்தோஷமாய் இருக்கும் பொழுது முணுமுணுப்பவற்றில் கூட அவள் யோசித்து செய்வது. அவள் சினிமாப் பாடல்களை பாடுவாள் என்றால் அது எனக்காக மட்டும்தான் இருக்கும். சில அமைதியான நேரங்களில் நான் இதை உணர்ந்திருக்கிறேன். எனக்கு எந்தெந்த பாடல்கள் பிடிக்கும் என்று தெரிந்து வைத்திருந்து நேரத்திற்கேற்ப அது போன்ற பாடல்களை அவள் பாடுவது எனக்கு சிறிதுகாலமாக தெரிந்துதான் இருக்கிறது.
அவளைப் போலவே அழகான ஒரு பையன், அவனை என் வயதான அம்மா கவனித்துக் கொள்ள இருவரும் வேலைபார்க்க கைநிறைய சம்பளத்துடன் அற்புதமான குடும்பம். ஏற்கனவே எங்க அப்பா சேர்த்து வைத்தது எல்லாம் இருந்ததால் மொத்தமாய் வாழ்க்கை நல்லபடியாக ஓடிக்கொண்டிருந்தது, ஒருநாள் அத்தையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததிலிருந்துதான் இந்தப் புதுப் பிரச்சனை.
“மாப்ளே கொஞ்சம் வீட்டுக்கு வர்றீங்களா உங்கக்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்...” கொஞ்சம் இடைவெளிவிட்டவர் “அகிலாவிற்கு தெரியவேணாம்.” என்று சொன்னதும் முதலில் முடியாதென்று சொல்லிவிட நினைத்தவன் பிறகு என்ன பிரச்சனையோ ஏதோ என்று நினைத்தவனாய், அன்று மாலை பூ பழம் எல்லாம் வாங்கிக்கொண்டு சென்றிருந்தேன்.
அந்த வீட்டிற்கு முதல் முறையாய் அகிலா உடன் இல்லாமல் செல்கிறேன், முதல் முறை பெண் பார்க்க சென்றிருந்த பொழுதும் அவள் உடன் வரவில்லையென்றாலும் அவள் அங்கேதான் இருந்தாள். வீட்டிற்குள் செல்ல கால்வராமல் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த ஜெயஸ்ரீ,
“வாங்க அத்திம்பேர்.” என்று கூப்பிட்டுவிட்டு, கையில் இருந்த பையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள், நான் எப்பொழுதையும் போல் போய் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டேன். எனக்கு நன்றாகத் தெரியும் ஜெயா என்னை வம்பிழுப்பதற்காகவே அத்திம்பேர் என்று கூப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தாள் என்று. ஆனால் அகிலாவை நான் வற்புறுத்தவில்லை பாவா என்று என்னை கூப்பிடுமாறு, ஒருவேளை அம்மா செய்தார்களா எனக்குத் தெரியாது. பெரும்பாலும் தனியே இருக்கும் பொழுது பெயர் சொல்லித்தான் கூப்பிடுவாள், அம்மாவோ இல்லை மற்ற சொந்தக்காரர்களோ இருக்கும் பொழுது மட்டும் பாவா என்று கூப்பிடுவாள்.
ஒருசமயம் அகிலாவும் ஜெயாவும் இதைப்பற்றி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கும் விஷயம் காதில் விழுந்தாலும் எப்பொழுதுதையும் போல் இதையும் கண்டுகொள்ளவில்லை, ஆனால் அகிலாவாக வந்து, “அவ சின்ன பொண்ணு விளையாட்டுக்காக எதையாவது சொல்லுவா நீங்க கோச்சுக்கக்கூடாது.” என்று சொல்ல நான், “அவளுக்கு அப்படி கூப்பிடுவதுதான் பிடிச்சிருக்குன்னா அப்படியே கூப்பிடச்சொல்லு.” நானும் சொல்லிவிட்டிருந்தேன்.
இங்கேயும் வீட்டிற்குள் ஏதோ சண்டை நடந்து கொண்டிருந்தது, எனக்கு என்னவென்று தெரியாது. சிறிது நேரத்தில் கையில் காபித்தம்ளருடன் வந்த அத்தை, என்னிடம் கொடுத்துவிட்டு ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருக்க, நானும் எப்படி ஆரம்பிப்பது என்று முழித்துக் கொண்டிருந்தேன். நான் காபி குடித்து முடிக்கப்போகும் சமயத்தில் வெளியில் வந்த ஜெயா,
“அத்திம்பேர், உக்காந்திருங்கோ, நான் இப்ப வந்திர்றேன்.” சொல்லிவிட்டு வெளியில் போக, அவள் முகத்தில் எதற்கென்றே தெரியாமல் அப்படியொரு சிரிப்பு. நான் இதைக் கண்டு கொள்ளாமல் விட,
“மாப்ள, விளையாட்டுப் பொண்ணு நீங்க தப்பா நினைக்கக்கூடாது.” என்று அத்தை ஆரம்பிக்க. நான்,
“அத்தை நீங்க ஏதோ முக்கியமா பேசணும்னு சொல்லி வரச்சொன்னீங்க.” நான் நேராய் விஷயத்திற்கு வர, சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தவர்கள்,
“மாப்ள, உங்களுக்குத் தெரியாதது ஒன்னுமில்லை, ஜெயாவுக்கு வயசாகிக்கிட்டே போகுது. இப்ப வரன் தேட ஆரம்பிச்சாத்தான் இன்னும் ஒன்னோ இரண்டு வருஷத்திலே அமையும். அதுமட்டுமில்லாம, அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற அளவுக்கு வசதி என்கிட்ட கிடையாதுன்னு உங்களுக்கு நல்லாத் தெரியும்...” அவர் இழுத்துக் கொண்டிருக்கா, இடையில் புகுந்த நான்,
“அத்தே இதில் யோசிக்கிறதுக்கு என்னயிருக்குன்னு தெரியலை, நீங்க பையனை பார்த்து முடிவு பண்ணுங்க, கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நாம பண்ணிடலாம். கல்யாண செலவை நான் பாத்துக்குறேன். இதைக் கேட்குறதுக்குத்தானா என்னை வரச்சொன்னீங்க?” கொஞ்சம் கோபமாய்க் கேட்க,
“மாப்ள கோவிச்சுக்கக்கூடாது, ஏற்கனவே அகிலா சம்பாதிக்கிறது எல்லாத்தையும் இங்க வீட்டுக்கு கொடுக்குறா. ஜெயாவோட சம்பளம் அவள் பஸ் செலவுக்கே போதறதில்லை. இந்நேரத்தில் நான் அவளோட கல்யாண செலவையும் உங்கத் தலையில் கட்டுறேன்னு நினைத்தால் கஷ்டமா இருக்கு. அதுவும் இல்லாம சம்மந்தி வேற என்ன நினைப்பாங்கன்னு தெரியலை? அகிலாவேக் கூட இதுக்கு ஒப்புத்துக்குவாளான்னு தெரியலை. அதனாலத்தான் அவக்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னேன். இந்த வீடு என்பேர்ல தான் இருக்கு. இதை யார்கிட்டயாவது வித்துட்டு ஜெயாவை கட்டிக்கொடுத்துடலாம்னு நினைக்கிறேன்.
இதை அகிலாகிட்டையோ இல்லை ஜெயாகிட்டையோ சொல்றதை விட உங்கக்கிட்டத்தான் சொல்றதுதான் உத்தமம், அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதிலேர்ந்து இந்த வீட்டை நீங்கத்தான் கவனிச்சிக்கிறீங்க, அதுமட்டுமில்லாம நான் யார்கிட்டையாவது விக்கிறேன்னு, என்னை ஏமாத்திருவாங்களோன்னு பயமாயிருக்கு...”
“அத்தை நீங்க பையனை மட்டும் பாருங்க, வீட்டை விக்கிறது அதை விக்கிறது இதையெல்லாம் யோசிக்காதீங்க.” முகத்தில் கொஞ்சம் கோபத்தைக் காட்ட, சிறிது நேரம் எதையும் பேசாமல் இருந்தவர்.
“சரி மாப்ள, அப்படியே ஆகட்டும், உங்களுக்கேத் தெரியும் நம்ம வீட்டில் ஜாதியெல்லாம் பாக்கிறதில்லைன்னு, உங்கப் பக்கத்திலேயும் ஜெயாவுக்கு வரன் இருந்தா பாருங்களேன். நல்ல பையனா இருக்கணும் அதுதான் முக்கியம். உங்களுக்குத் தெரிஞ்ச நல்ல பசங்க யாராவது இருந்தாலும் சொல்லுங்க. உங்க மொதப் பொண்ணா நினைச்சு கட்டி வைச்சிருங்கோ. ஒரு விஷயம் அகிலாவுக்கு இந்த விஷயம் தெரியவேணாம் நானே சொல்லிக்கிறேன். உங்க மூலமா அவளுக்கு தெரியவேணாம்.”
பின்னர் கொஞ்சம் வீட்டு சங்கதிகள் பேசிவிட்டு நான் திரும்ப வீட்டிற்கு வந்ததில் இருந்து தலை மீது ஏதோ ஒரு பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டதாகப் பட்டது. இதைப் போன்ற ஒரு உணர்வு முதன்முதலில் அகிலாவை திருமணம் செய்வதற்கு முந்தைய நாள் வந்தது நினைவில் இருக்கிறது. உடலும் உயிருமாய் ஒருத்தியை முழுவதும் என் பொறுப்பில் விடப்போகிறார்கள் என்ற பொழுது வந்த அந்த உணர்ச்சி பின்னர் ஒரு முழு ப்ரோஜக்ட்டிற்கும் என்னைப் பொறுப்பாய்ப் போட்டு, கீழே வேலை செய்ய ஐம்பது பேர் கொடுத்தபொழுதும் வந்தது. ஆனால் வேலை சம்மந்தப்பட்ட விஷயம் கொஞ்சம் கொஞ்சம் என் திறமையைப் பார்த்து என்னால் முடியும் என்று நினைத்து வந்தது.
ஆனால் இந்த விஷயம் அப்படிக்கிடையாது. வாழ்க்கையில் என்னுடைய நடத்தை ஏற்படுத்திய நல்ல எண்ணத்தால் ஏற்பட்டது. அதுவும் மகளுக்கே தெரியாமல் என்னிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்ததன் வித்தியாசம் புரிந்துதான் இருந்தது. பத்து லட்சம் ரூபாய் கல்யாணத்திற்கு வேண்டும் என்று கேட்டிருந்தால் லோன் போட்டு எடுத்து தருவதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்னை வித்தியாசமான மனிதனாக மாற்றத்தொடங்கியது. இன்று வரைக்குமே, என் அம்மாவிற்கு நான் சிறுவன் தான். சில பல சமயங்களில் அகிலாவும் இப்படியே என்னை நடத்துவதுண்டு. நல்லவிதமாக நடக்கவேண்டுமே என்ற பயம் அப்பொழுதே தொடங்கியது. பெண்கள் சம்மந்தப்பட்ட எல்லாப்பொறுப்புகளுமே இப்படித்தான்.
இதுவரை எந்த ஒரு விஷயத்தையுமே அகிலாவிடம் இருந்து மறைத்தவன் இல்லையாததால் அது மட்டும் தான் உறுத்தியது. ஆனால் எல்லாம் நன்மைக்கே என நினைத்தவனாய் இதைப் பற்றி கொஞ்சம் தீவிரமாய் யோசித்த எனக்கு ஒரு விஷயம் உதித்தது. அதனால் வந்த முடிவுதான் ஜெயாவை நேரில் சந்தித்து இதைப்பற்றி கேட்பது என்று. ஆனால் அவளாய் வந்து பேசியதை விடுத்து நானாய் அவளிடம் இதுவரை பேசியதில்லையாகையால் அகிலாவிடம் சொல்லி ஜெயாவை தொலைபேச சொல்லியிருந்தேன்.
நான் நினைத்தது போலவே விஷயம் திசை திரும்பாமல் நேர்வழியில் சென்றிருந்தது, அன்று நான் அவளை, அலுவலக வாசலில் இறக்கிவிடும் பொழுது,
“மோகன், ஜெயாக்கிட்ட சொல்லியிருக்கேன். இன்னிக்கு கால் பண்ணினாலும் பண்ணுவா.” சொல்லிவிட்டு இறங்கிச் சென்றாள். சொன்னது போலவே ஒரு மணிபோல் ஜெயா தொலைபேசியில் கூப்பிட்டாள்.
“அத்திம்பேர் நான் ஜெயா.” முன்பாவது அவள் சொல்லும் பொழுது ஒரு சிறு உணர்வு இருக்கும் அவள் நக்கலடிக்கிறாள் என்று அது இன்று சுத்தமாய் இல்லாமல் இருந்தது.
“ஜெயா நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.” நான் சொல்ல மறுமுனையில் சிறிது மௌனம் பின்னர்.
“காலேஜக்கு பக்கத்தில் ஒரு காபிஷாப் இருக்கு, ஆனா அந்த இடம் சரிவராது, நாம பக்கத்தில் இருக்கிற விநாயகர் கோயிலில் பேசலாம். சாயந்திரம் ஐந்து மணிக்கு நான் வர்றேன்.”
நான் கொஞ்சம் முன்னதாய்ப் போயிருந்தேன், சரியாக ஐந்து மணிக்கு வந்தாள், கல்லலூரியிலிருந்து நேராய் வருகிறாள் என்று பார்த்தாளே தெரிந்தது, அகிலா அவளைப் பற்றி சொல்லியிருக்கிறாள், ஜெயா அதிகம் அலங்காரம் செய்து கொள்ளமாட்டாள் நன்றாகத் தெரிந்தது. வந்தவள் நேராய்,
“ஒரு ஐந்து நிமிஷம் இருங்கோ பிரகாரத்தை சுத்திட்டு வந்திர்றேன்.” சொல்லிவிட்டு சென்றவள் சரியாய் ஐந்து நிமிடத்தில் திரும்பவும் வந்தாள்.
“இப்ப சொல்லுங்கோ அத்திம்பேர் என்ன விஷயம்?”
“ஜெயா வேற ஒன்னும் இல்லை, உங்கல்யாண விஷயமா கொஞ்சம் பேசணும்.”
“என்ன அத்திம்பேர் எப்ப கம்ப்யுட்டர் வேலையை விட்டுட்டு இந்த வேலையை தொடங்கினீங்க?” அவள் கேட்டு நான் பதில் எதுவும் சொல்லாததலால்,
“சரி சொல்லுங்க என் கல்யாண விஷயமா என்ன பேசணும்.”
“அத்தை என்கிட்ட உனக்கு வரன் பார்க்கச் சொல்லி சொல்லியிருந்தாங்க, அதான் உன் விருப்பம் என்னான்னு கேக்கலாம்னு...’
“என் விருப்பம்னா?” எதிர்க் கேள்வி கேட்டவளை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்துவிட்டு,
“உன் விருப்பம்னா? நீ யாரையாவது காதலிக்கிறியா? இல்லை உனக்கு இந்த மாதிரி மாப்பிள்ளைதான் வேணும்னு யோசிச்சு வைச்சிருக்கிறியா? இங்கிலீஷ் லிட்டரேச்சர் தெரிஞ்சிருக்கணும், இல்லை உங்க சைடில் இருக்கணும் இப்படி...”
நான் கேட்கவந்ததை உணர்ந்திருக்க வேண்டும், கொஞ்சம் நேரம் எதையும் பேசாமல் அமைதியாக இருந்தவள்.
“எனக்கு ரொம்ப பசிக்குது, மத்யானமும் சாப்பிடலை. பக்கத்தில இருக்கிற ஹோட்டல் எங்கையாவது போகலாமா?”
என்ன சொல்ல, சிறிது நேரத்தில் அருகில் இருந்த வசந்த பவனுக்கு வந்திருந்தோம், எனக்கு ஒரு காப்பியும் அவளுக்கு சோலா பூரியும் சொல்லிவிட்டபின்,
“ஜெயா நான் கேட்ட கேள்விக்கு நீ பதிலே சொல்லலை?”
“இந்த விஷயம் அக்காவுக்கு தெரியுமா?”
அவள் நான் கேட்டதற்கு பதில் மட்டும் சொல்லாமல் வேறு வேறு கேள்விகளைக் கேட்டுக்கொண்டேயிருந்தாள்.
“தெரியாது, அத்தை சொல்ல வேண்டாம்னு சொன்னாங்க.” நான் சொன்னதும் நிமிரந்து பார்த்தவள், சிறிது நேரத்தில் மீண்டும் சாப்பிடத் தொடங்கினாள்.
“இங்கப் பாருங்க அத்திம்பேர், அத்தே சொன்னாங்க அவங்க சொன்னாங்கன்னு பொண்டாட்டிக்கிட்ட சொல்லாம இருக்காதீங்க, உங்க விருப்பத்துக்கு பையனைப் பாருங்க பிடிக்குதா இல்லையாங்கிறது அடுத்த விஷயம். முதலில் அக்காக்கிட்ட சொல்லிடுங்க. அப்புறம் ஒரு விஷயம், ஜாதியோ இல்லை மதமோக் கூட பிரச்சனை கிடையாது, நல்லவரா இருக்கணும் அதுதான் முக்கியம். நாளைக்கு பிரச்சனைன்னா மூட்டை முடிச்செல்லாம் தூக்கிக்கிட்டு வந்து உங்க வீட்டில் தான் உக்காந்திருவேன் ஜாக்கிரதை.
அப்புறம் காதலிச்சேனான்னு தானே கேட்டீங்க, நீங்க முதலில் இந்த விஷயத்தை அகிலாக்கிட்ட சொல்லுங்க பின்னாடி நான் என்னோட கச்சேரியை வைச்சிக்கிறேன். ஏங்க வீட்டில் இருந்தது மறந்துட்டது போல...” சொல்லிவிட்டுச் சிரித்தவள் “அப்படி ஒருத்தனையும் நான் பார்க்கலை, உங்களுக்கு ஒரு தம்பி இருந்தா கல்யாணம் செய்திருக்கலாம். நீங்க ஒத்தப்புள்ளையா போய்ட்டீங்க. அதனால அம்மா மட்டும் கிடையாது நானும் எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் உரிமையை முழுமனசா தர்றேன். நல்லப் பையனா பாருங்க.”
வீட்டிற்கு வந்ததும் முதல் வேளையாய் இந்த விஷயத்தை அகிலாவிடம் போட்டு உடைத்தேன். கோபம் வந்தவளாய் தொலைபேசி அத்தையை திட்டினாள். நான் இல்லாம என் புருஷனை எப்படி நீ இதுபோல் வேலையெல்லாம் செய்யச் சொல்லலாம், என்னைத்தான் ஏமாத்தி ஒன்னுமே செய்யாம இவர் தலையில் கட்டீட்டிங்க இப்ப ஜெயாவையும் அப்படியே கட்டி வைக்க பார்க்கிறீங்க போலிருக்கே. அப்படி இப்படியென்று பெரும் சண்டைக்கு பிறகு ஒருவழியாய் சமாதானம் ஆனவள் பின்னர் என்னைப் பிடித்துக்கொண்டாள். அவங்களுக்குத்தான் அறிவில்லைன்னா உங்களுக்குமா, அகிலாக்கிட்ட ஒருவார்த்தை சொல்லீற்றேன்னாவது சொல்லணுமா இல்லையா. நாளைக்கு என்னைப்பத்தி என்ன நினைப்பாங்க.
இதையெல்லாம் சொல்றதுக்கு உங்களுக்கு ஜெயா தேவைப்பட்டிருக்கு, இல்லைன்னா இப்பக்கூட சொல்லியிருக்க மாட்டீங்க அப்படித்தானே. ஆயிரந்தான் அவங்க உங்களுக்கு அத்தை, ஜெயா உங்களுக்கு மச்சினின்னாலும் அவங்கெல்லாம் எனக்குப்பிறகுதானே. அது எப்படி எனக்குத் தெரியாமல் இந்த விஷயத்தில் நீங்கள் செயல்படலாம்.
எனக்காத்தெரியாது அம்மா தன்னோட சாமர்த்தியத்தை காட்டுறாங்க, என்னைப்பத்தி நல்லாத் தெரியும் அவங்களுக்கு உங்களைப்பத்தியும் அதான் இப்படி ஒரு தந்திரம். பொறுப்பை ஒப்படைத்தால் ஒழுங்கா அழகா முடிச்சிக் கொடுத்துறுவீங்கன்னு நல்லாத் தெரியும் அதனாலத்தான் இப்படி செய்கிறார்கள். இவங்களோட சாமர்த்தியத்தை வேற விஷயத்தில் எல்லாம் காண்பிக்காம இதில காண்பிக்கிறது எனக்கென்னவோ சரியாப்படலை. நீங்க என்னான்னா அவங்க சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு வந்திருக்கிறீங்க."
இப்படியெல்லாம் பொரிந்து தள்ளியவள் தான், நான் காட்டிய நான்கைந்து மாப்பிள்ளைகளைப் பத்தி நல்லா விசாரித்து அதில் ஒருவனை ஜெயாவிற்கு மணம் செய்து வைத்தாள். அக்கா தங்கையில்லாமல் ஒற்றையாக பிறந்ததாலும் என்னுடைய திருமணத்தை ஒத்தை ஆளாக நின்று என் தந்தையே நின்று முடித்துவிட்டதாலும், ஒட்டுமொத்தமாக ஒரு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டிய பொறுப்பு வந்ததால் தடுமாறிப் போயிருந்த எனக்கு கடைசியில் திருமணத்திற்கு முன்னர், காலில் விழுந்து என்றைக்கிருந்தாலும் நான் தான் இந்த வீட்டின் முதல் பெண் என்று கண்ணீர் மல்கிய விழிகளுடன் ஜெயா சொன்ன வார்த்தை நான் அவள் திருமணத்தை நடத்த பட்ட அத்தனை கஷ்டத்தையும் போக்கியது.
எல்லாம் முடிந்து ஜெயாவை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்ட இரவு அகிலா வந்து,
“என்னங்க என்னங்க இந்த வருஷம் லீவுக்கு மணாலிக்கு போவோங்க...” அவள் சொல்லவருவதன் அர்த்தம் என்னதான் மாங்காவாய் இருந்தாலும் எனக்கு புரிந்தது.
“அப்ப நம்ம பவானிக்கு ஒரு தம்பி பொறக்கபோகுதுன்னு சொல்லு.” நான் ஆரம்பிக்க, அவள் “இல்லைங்க எனக்கு பெண் குழந்தைதான் வேணும். அவளுக்கும் நம்ம ஜெயாவிற்கு செய்தது போல் பிரமாதமாக கல்யாணம் செய்யணும்.”
ஆகா இன்னும் ஒரு முறையா என்று மனதுக்குள் நினைக்க, பொறுப்பு இன்னும் கூடியதாய் ஒரு உணர்வு திருமணம் முடிந்த ஆறு ஆண்டுகளில் ஒரு இருபத்தியொரு வயது குழந்தைக்கு தகப்பனாகிவிட்டாகியது. அடுத்து ஒரு குட்டிக்குழந்தைக்கு தகப்பனா? மீண்டும் ஒரு பெரும் சுமையை என் தோளில் தூக்கிவைக்க அவள் நினைப்பது தெரிந்தாலும் அந்த சுகமான சுமையை பொறுப்பாக சுமக்க முடிவுவெடுத்திருந்தேன். தஞ்சாவூர் பொம்மையொன்று வீட்டில் இல்லாத குறையை நான் என் தலையை ஆட்டி நிவர்த்தி செய்தேன்.
In இப்படியும் ஒரு தொடர்கதை தொடர்கதை
ஆண் என்னும் தலையாட்டிபொம்மைகள்
Posted on Monday, January 22, 2007
ஆண் என்னும் தலையாட்டிபொம்மைகள்
பூனைக்குட்டி
Monday, January 22, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
தொடர்கதை தொடருமா?
ReplyDelete-Anonymous ஸ்னேகிதி.
நான் இதை இப்ப போட்டதுக்கு காரணமே, மச்சினிச்சியை வச்சி இன்னொரு கதை போடலாம்னு தான்.
ReplyDeleteவெயிட் அண்ட் ஸீ.