In சுய சொறிதல் பெண்ணியம்

கற்றதனால் ஆய பயனென்ன?

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.

"தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை." வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு விக்கி மக்கள் கொடுத்திருக்கும் விளக்கம்.

உண்மையில் கல்வி கற்பது என்பதை நாம் ஒரு விஷயமாக பெரும்பாலான இடத்தில் எடுத்துக்கொள்ளவே முடியாது. அதனால் தான் இன்றுவரை இந்தியாவில் அரசியல்வாதியாவற்கு கல்வி ஒரு கட்டாயமாக்கப்படவில்லை. என்னதான் நீங்கள் ஐஏஎஸ் படித்திருந்தாலும் புத்தக அறிவு என்பது ஒரு மட்டிற்கு மேல் உதவாது. இதை பல சமயங்களில் நான் நேரிடையாகவேப் பார்த்திருக்கிறேன்.

வேண்டுமானால்(அதுவும் கூட சொல்லமுடியாது தான் என்றாலும்) அமேரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இது உதவலாம். நிச்சயமாக ஆசிய நாடுகளில் இதை நீங்கள் எதிர்பார்க்கமுடியாது. இதனால் தான் நாம் பெரும்பான்மையான சமயங்களில் அமேரிக்க மக்களை மனதில் கொண்டு நாம் சொல்லும் விஷயங்கள் இந்திய மக்களிடம் எடுபடுவதில்லை.

நான் நிச்சயமாக இது சரியா தவறா என்பதைப் பற்றி பேசவில்லை, உண்மையில் அமேரிக்க மக்கள் செய்வது சரியாகவும், இந்தியர்கள் செய்வது தவறாகவும் இருக்கலாம். ஒரு இந்தியப் பிரச்சனையை அமேரிக்கக் கண் கொண்டு பார்ப்பதற்கும், இந்தியக் கண் கொண்டு பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இல்லையா? அதுவும் மதம் சார்ந்த பிரச்சனைகள், பெண்ணியம் போன்ற பிரச்சனைகளை அமேரிக்கக் கண் கொண்டு பார்ப்பதில் நிறையப் பிரச்சனை உண்டு.

இதைப் பற்றி யோசிக்கும் பொழுது முன்பொரு காலத்தில் கவனத்தை ஈர்த்த விஷயம் நினைவில் வருகிறது. எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு மூன்று முறைகள் உண்டென்று அமேர்க்கர்கள் சொல்வார்களாம், சரியான வழி, தவறான வழி, இந்த இரண்டு வழிகள் நமக்கும் தெரிந்திருக்கும் மூன்றாவது வழி அமேரிக்கன் வழி. அதாவது In three ways you can solve a problem, right way, wrong way and the american way.

இது சும்மா(எனக்குத் தெரிந்த மொழியென்றும் வைத்துக்கொள்ளலாம்.)

நீ எம்பிபிஎஸ் படித்திருக்கிறாய் வரதட்சணை வாங்குகிறாயே என்று கேட்பது அமேரிக்கன் கண் கொண்டு பார்க்கும் பொழுது சரியானதாகவே இருக்கலாம். இதனாலெல்லாம் இந்தியக் கண் கொண்டு பார்க்கும் பொழுது எனக்குத் இது தவறாகத் தெரிவதாகவும் நான் பழமைவாதியென்று பைத்தியக் காரனென்றும் சொல்வீர்களானால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

என் பதில் வரதட்சணை வாங்குவது தவறு, அவன் படித்தவனாக இருந்தாலும் படிக்காதவனாக இருந்தாலும், அதைப்போலவே பெண்ணியம் சார்ந்த கருத்துக்களும். என் பெண்ணியக் கருத்துத்கள் என்னுடனேயே இருக்கட்டும். ஆனால் ஒருவர் பெண்ணியக் கருத்துக்களைப் பேசுவதாலேயே அறிவுள்ளவர் என்றும், கற்றதனால் ஆய பயனை அடைந்தவர் என்றும் சொல்ல முடியாதல்லவா.

அதே போல் ஸ்டிரிங் தியரிப்படி, நாம் பார்க்கும் பரிமாணங்களை விடுவும் அதிகப் பரிமாணங்கள் இருக்க வாய்ப்பிருப்பதாக நம்பும் இந்த அறிவியல் காலத்தில் பெண்ணியத்திற்கு மட்டும் இரண்டு பரிமாணங்கள் தான் இருக்க முடியுமா? அதாவது பெண்ணியத்தை ஆதரிப்பவர்கள், பெண்ணியத்தை எதிர்ப்பவர்கள்.

பெண்ணியம் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது கருப்பா சிவப்பா, நீளமா குட்டையா என்று அறியாத என்னைப் போன்ற மேல்மாடி காலியானவர்களை என்ன செய்வது. நீங்கள் உங்கள் மனதிற்குள் நினைத்துக்கொள்ளும், அல்லது கோர்வையான வார்த்தைகளால் படிமமிட்டு சொல்லும் ஒன்றை விடவும் விலகியதாக ஏன் பெண்ணியம் இருக்கக்கூடாது. அதாவது உங்களுக்கும் பிடிபடாதா ஒரு பரிமாணமாய்.

பெண்ணியம் பற்றி கட்டுரை கட்டுரையாக எழுதுவதாலேயோ, உங்களுக்கு ஒத்துவராத கருத்துக்களைக் கொண்டவர்களை(இந்த விஷயத்தில்) மூடன் என்று சொல்வதாலேயோ மட்டும் ஒருவர் பெண்ணியவாதி ஆகிவிட முடியாது. அதே போல் பெண்ணியம் பற்றி எழுதும் பொழுதெல்லாம் நக்கல் தரும் பதிலை ஒருவர் தருவதனாலேயே ஒருவரை பெண்ணியம் பற்றிய சிந்தனை இல்லாவர் என்றும் சொல்லமுடியாதில்லையா. ரொலான் பார்த் சொல்வதைப் போல Text ஐ ரீடர்லி டெக்ஸ்ட் ரைட்டர்லி டெக்ஸ்ட் என்று இருவகைப் படுத்தலாம் என்றால். சிலருடைய எழுத்துக்கள் sub-text பொருந்திய ரைட்டர்லி டெக்ஸ்ட் ஆகவும், சிலருடையவை மேம்போக்காக எழுதப்படும் ரீடர்லி டெக்ஸ்ட் ஆகவும் ஆகிவிடுவது அவரவர்களுடைய குற்றம் இல்லை தானே.

நாம் அனைவரும் அவரவர்களுக்குப் பொறுந்தும், கண்ணாடியின் முன் நிற்கும் பொழுது அழகாகக் தெரியும் முகமூடியை அணிந்திருக்கிறோம், அப்படி அணிந்திருக்கிறோம் என்ற உணர்வேயில்லாமல். முகமூடி பெரும்பாலும் கழட்டப்படுவதில்லை, ஏனென்றால் உண்மை நிச்சயமாய் தாங்கக்கூடியதாக இருப்பதில்லை பெரும்பான்மையான சமயங்களில். ஏனென்றால் நமக்கு முகமூடியில்லாத உண்மை முகங்களை பிடிப்பதில்லை, பொய் என்று தெரிந்திருந்தும் அப்படியான ஒன்று உண்மையாகவே இருக்க முடியாதென்று தெரிந்திருந்தும் நாம் முகமூடிகளைத் தான் விரும்புகிறோம் இல்லையா.

முகமூடி இல்லாமல் போய்விட்ட சமுதாயம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் ஒரு காலத்தில் முகமூடி இல்லாமல் இருப்பது தவறுதான். எப்படி குருடர்களை மட்டும் கொண்ட ஒரு நாட்டில் ஒற்றைக் கண் உடையவன் அரசனாக முடியுமோ அப்படி. கடேசியாகச் சொல்லிக் கொள்வது ஒன்றைத்தான் கல்வியை அடிப்படையாக மட்டும் வைத்து எதையும் மதிப்பிடாதீர்கள். அவ்வளவே.

-----------------

இது எழுதப்பட்டதன் நோக்கம் வெளிப்படையாய், கற்றதனால் ஆய பயனென்ன? என்று நண்பரொருவர் எழுதிய தொடர் கட்டுரைக்கு, எழுதிய பின்னூட்டம் பதிவிடப்படாமல் அதற்கான காரணமும் அவரது மொழியில் அதாவது எனக்கு பி(Spelling mistake இல்லை)ரியாத மொழியில் இருப்பதால். அந்தப் பின்னூட்டத்தை இங்கே வெளியிடும் உத்தேசம் அவ்வளவே. உண்மையானப் பின்னூட்டம் என்னிடம் இல்லாத காரணத்தால், நான் சொல்ல விரும்பிய செய்தி மட்டும் இங்கே.

"உங்கள் கட்டுரையை புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு எனக்கு மேல்மாடி காலியென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களின் இந்தக் கட்டுரைக்கு கற்றதனால் ஆய பயனென்ன என்று தலைப்பிட்டுருப்பதற்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் உண்டா? சொல்வீர்களானால் புரிந்து கொள்ள முயற்சி செய்வேன் என்பது."

Related Articles

1 comments:

  1. ஓஹோ இதுதானா அந்தப் பதிவு

    ReplyDelete

Popular Posts