In வகைப்படுத்தப்படாதவை

தமிழ்மணம் வாசிப்பில்

தமிழ்மணம் வாசிப்பில் என்ற தலைப்பில் எழுத எனக்கு முதலில் அருகதை உள்ளதா என்ற கேள்வி தான் முதன்முதலில் தமிழ்மண நிர்வாகம் எழுதச் சொன்ன பொழுது முதலில் தோன்றியது. ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழ்ப் பதிவுகளில் இயங்கி வருவதால் இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் என்னுடைய தீவிரமான வாசிப்பு என்பது இரண்டாண்டுகளுக்கு முன் தமிழ்மணம் என்னிடம் அறிமுகம் ஆன பொழுதோ இல்லை அதற்கு முன் தமிழ் இணையம் பழக்கத்தில் வந்த பொழுது இருந்தது போன்றோ இல்லாமல் மட்டப்படுத்தப் பட்டதாய் இருக்கிறது. அதாவது என்னுடைய வாசிப்பின் பரப்பளவை நானே சுருக்கிக் கொண்டு, இருந்து வருகிறேன். பல நல்ல பதிவுகளை இதனால் இழந்திருப்பேன், நிச்சயமாய். சரி இந்த வார தமிழ்மணத்தில் வாசித்த மிகவும் பிடித்த சில ஆக்கங்களை வழிமொழிய இருக்கிறேன். சொல்லப்போனால் இத்தனை ஃபார்மலாக இல்லாத விதத்தில் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்க வேண்டிய ஒருவிஷயம். சரி இப்பொழுதாவது எழுதுகிறேன்.

இன்னுது என்று வகைப்படுத்த முடியாதபடி, ஏகப்பட்ட சிவாஜி The Boss பற்றிய விமர்சனங்கள் இந்த வாரத்தில் வந்திருந்தன. அவைகள் ஒட்டுமொத்தமாக வாசிப்பவர்களின் கவனத்தைக் கவர்ந்திருந்தன என்ற உண்மை, சூடான பகுதிகளில் பெரும்பாலும் சிவாஜி பற்றிய தலைப்புக்களே இடம்பெற்றிருந்ததன் ஆதாரம். அடுத்தது அசுரன் தொடங்கிவைத்திருந்த வீரமணி பற்றிய விவாதம், பின்னர் வரவனையான் ம.க.இ.கவின் சந்தேகத்திற்குரிய தலைமை பற்றிய பதில் இடுகையால் சூடுபிடித்தது. சுகுணா திவாகரின் சுந்தரராமசாமி : உதிர்ந்த இலையும் சேர்ந்த குப்பையும் பதிவு நிறைய கேள்விகளையும் அதற்கான மிகச்சில பதில்களை பின்னூட்டங்களில் கொண்டிருந்தது. வைரமுத்துவின் கவிதை வரிகளில், எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போய்விடுங்கள் ஆனால் நாளை உங்கள் கல்லறையைத் தோண்டி கேள்வி கேட்கப்படும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் போன்ற வரிகள் சொல்லும் உண்மை கல்லறையத் தோண்டி எழுப்பப்படுவீர்கள் என்பதில்லை உங்களின் பிரதிகளின் மீதான கேள்விகள் நீங்கள் கல்லரைக்குச் சென்ற பிறகும் இருக்கும் என்பதுதானே!. இங்கே கேள்விகள் கேட்கப்படுவது கூட பிரச்சனையின் ஒரு முகமாகப் பார்க்கப்படுகிறது, கேள்விகளும் இவர்களுக்கு பிடித்தமானதாய்; பதில் உள்ள கேள்விகள் மட்டுமே கேட்கப்படவேண்டும் என்பதைப் போன்ற ஒரு மனநிலை இங்கே தற்சமயம் அதிகம் காணப்படுவதை மேற்சொன்ன பதிவில் உணரமுடிகிறது.

அடுத்து இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளராக விளங்கிய ஜீவாவின் மரணம்; உன்னாலே உன்னாலே பாடல்கள் என்னுடைய ப்ளேலிஸ்டில் இப்பொழுதெல்லாம் இடம்பெற்றிருப்பவை. தற்சமயம் அந்தப் பாடல்களைக் கேட்கும் பொழுது ஏனோ ஒரு மாதிரியாக இருக்கிறது. ஆசீப் மீரானின், அப்துல் ஜப்பார் பற்றிய இடுகைகள் வாசிப்பனுபவம் தாண்டியும் மனதில் தங்கியவை. வாழ்க்கையில் முன்னேற முந்நூறு வழி போன்ற எத்தனை தரமான புத்தகங்கள் வந்தாலும் அதைவிடவும் நிகழ்காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதனின் பதிவுகளாக வரும் பத்திகள் அதிகம் நமக்கும் நம்பிக்கையளிப்பதாகவேயிருக்கின்றன. அதைப் போலவே மா.சிவக்குமாரின் மென்பொருள் தொழில் துடங்கிய அனுபவங்கள் நான் தொடர்ச்சியாக படித்துவரும் ஒரு பகுதி. அலங்காரங்கள் இல்லாமல் எழுதப்படும் இது போன்ற பதிவுகளில் இருக்கும் உண்மை முகத்தில் அறைவதாய் இருக்கிறது; ஏனென்றால் நான் நண்பர்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு இன்னும் இரண்டாண்டுகளுக்குத் தான் ப்ரொக்கிராமிங் அப்புறம் கம்பெனி தொடங்கிவிடுவேன் என்பது. அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்களை மேக்கப் போடாமல் சொல்லும் பொழுது நம்முடைய அனுபவ அறிவு இன்னும் வளமடைகிறது. கீதா சாம்பசிவத்தின் பாரதி கேட்ட மன்னிப்பு பதிவு எனக்கு ஹரியண்ணாவின் பதிவொன்றை ஞாபகப்படுத்தியது.

ஆவியைப் பற்றி பதவியேற்க இருக்கும் ஜனாதிபதி அவர்கள் வார்த்தை விட அதைப் பற்றிய விமர்சனங்கள் பதிவுகளாக இருந்தன. நா. முத்துக்குமார் போன்ற கவிஞர்கள் தீண்டத்தகாதவர்களா என்ற கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு லக்ஷ்மியின் படித்ததில் பிடித்தது; பிடித்தது. நா.முத்துக்குமாரின் அ'னா ஆவன்னா கவிதைத் தொகுப்பைப் பற்றிய விமர்சனமாக இந்தப் பதிவை எடுத்துக்கொள்ளாமல் அறிமுகமாகக் கொடுத்திருந்தார். மைக்கேல் மூரின் SiCKO பற்றிய அறிமுகத்தை மயூரன் கொடுத்திருந்தார், அதனுடன் "இந்தப்படத்தை இலங்கை இந்திய நிலை அரசியல் சூழலின் அடிப்படையில் பார்த்தல் ஆரோக்கியமானது." வரிகள் படத்தின் மீதான பார்வையை ஒழுங்கமைப்பதாகயிருக்கிறது. மங்கையின் நட்சத்திரப்பதிவுகளில் நான் நொறுங்கிய பொழுதுகள் பதிவு ஒரு ஆரோக்கியமான அனுபவப் பகிர்வு, ஏனென்றால் தான் வெற்றி பெற்ற சமயங்களை எழுத விரும்பும் நாம் தோற்ற அனுபவங்களை எழுத முயல்வதில்லை பெரும்பாலும். இதுபோன்ற எல்லைகளை உடைத்து எழுதப்பட்ட ஒரு பதிவு மங்கையினுடையது. வெற்றியை விட தோல்வி நமக்கு தரும் அனுபவங்கள் அதிகமாயிருக்கும்.

கண்ணபிரானின் பெரியாழ்வார் பற்றிய பதிவு அழகாக வந்திருக்கிறது. "தாய் போல் பொங்கும் பரிவு! தாய்ப்பால் பொங்கும் பரிவு!" அதனால் தான் பெரியாழ்வாருக்கு மட்டும் 'பெரிய' ஆழ்வார் பட்டம் என்று விளக்குகிறார். ஆசீப்பின் எனக்குப் பிடித்த சிறுகதைகளில் இந்தத் தடவை அறிவுமதியின் வெள்ளைத் தீ பற்றிய அறிமுகம்; "தமிங்கலத்தில் எழுதினால்தான் யதார்த்தமாகச் சொல்லமுடியுமென்ற அரைவேக்காட்டு எழுத்தாளர்களூக்குச் சாட்டையடி போல கொஞ்சமும் உறுத்தாத தமிழிலேயே அழகாக எழுத முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் முழுக்கத் தமிழிலேயே இருக்கிறது கதை." வரிகள் அவருடைய தமிழார்வத்தையும் அதேசமயம் அறிவுமதியின் பிடிப்பையும் சொல்கிறது. நல்ல ஒரு கதைத் தொகுப்பின் அறிமுகம். iPhone பற்றிய ஸ்ருசலின் விமர்சனமும் பின்னூட்டங்களில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதிலும் நன்றாகயிருந்தன. கானா பிரபாவின் யாழ்ப்பாணத்துச் சமையல் இடுகையும், இளவஞ்சியின் எடின்பரோ கோழி வறுவல் இடுகையும் பிரம்மாதம். நான் இன்னும் சமையல் செய்யத் துவங்கவில்லையென்றாலும் இது போன்ற இடுகைகளை வாசிக்கவும் பிடித்தவற்றை டெலிஷியஸில் சேர்த்துவைக்க மறந்துவிடுவதும் இல்லை. அருள்குமாரின் கூர்க் - இயற்கையின் கொண்டாட்டம் படிக்க கூர்க்கை நோக்கிய என்னுடைய(எங்களுடைய) பயணத்தின் அடுத்த படிக்கட்டை நோக்கி நகர்ந்துவிட்டோம். நல்ல பதிவு.

Related Articles

1 comments:

  1. என் பதிவையும் பரிந்துரைத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete

Popular Posts