In நாத்தீகம்

நாகார்ஜுனனின் அரசியல்

ஒரு நபர் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் நேரடி அனுபவத்தை விடவும் எழுத்தின் வழி தீர்க்கமாக பதிந்துவிடுகிறது என்றே நினைக்கிறேன். எனக்கு நாகார்ஜுனன் அறிமுகமானது அத்தனை நல்லவிதமாய் இல்லைஜெயமோகனின் இந்த கோணங்கியைப் பற்றிய பதிவில் தான் எனக்கு நாகார்ஜுனனின் அறிமுகம் கிடைத்தது. 'பின் தொடரும் நிழலின் குரல்' பற்றிப் பேசும் பொழுதெல்லாம் சொல்லும் 'ரஷ்ய வரலாறு' அப்படிங்கிற ஒரு ஐட்டத்தை தனிப்பட்ட முறையில் எங்கையாவது படிச்சிட்டு பின்னாடி இந்தப் புத்தகத்தை கையில் எடுங்க என்ற அறிவுரையை எனக்கு நானே திட்டத்தில் செய்து கொள்ளாததன் பிரச்சனை நாகார்ஜுனனைப் பற்றி மனதில் பதிந்து போன இமேஜ். இதில் கொடுமை என்னான்னா, இவரை விடவும் 'அசிங்கப் படுத்தியிருக்கும்' கோணங்கியைப் பற்றி ஜெ.மோவின் பதிவு படிப்பதற்கு முன்னமே கொஞ்சம் தெரியுமென்பதால் ஜெமோவின் கோணங்கி இமேஜ் அத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தலை; ஜெயமோகனின் வயித்தெரிச்சலை பற்றி ஏற்கனவே மனதில் உருவாகியிருக்கும் கோட்டோவியத்தில் இன்னொரு கோடொன்று அதிகமானதைத் தவிர்த்து. நல்ல வேளை 'நவீன தமிழ் இலக்கியம்' எனக்கு ஜெயமோகனின் அறிமுகத்தில் இருந்து தொடங்கவில்லை என்று எப்பொழுதும் நினைத்துக் கொள்வதுண்டு.

என் அரசியலுடன் 95% பொருந்தக்கூடிய அரசியல் கொண்டவராயிருந்தாலும், 'கடவுள் நம்பிக்கை' என்கிற விஷயம் தான் என்னை அந்த நபரின் பேரில் ஈர்க்கவோ விலக்கவோ செய்கிறது. பாலாவினைப் போல ஜெயமோகனும் என் வயதில் ஒரு பகுதியை காவு வாங்காமல் போனதற்கு ஒரே காரணம் அதே பாலகுமாரன் தான், அங்கே பட்டது ஜெயமோகன் விஷயத்தில் கவனமாக இருக்க வைத்தது. இல்லையென்றால் எனக்கு ஜெயமோகனின் எழுத்து பிடித்திருந்த வேகத்திற்கு 'தோ கிடைச்சிட்டார் நம்ம குரு' என்று தான் ஆகியிருப்பேன், தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் தான். இன்றைக்கும் ஜெயமோகனின் எழுத்தின் மீது அதீத பிரியம் உண்டு ஆனால் அவர் சொல்லும் எல்லாவற்றிற்கும் மற்றொரு பக்கம் (நிச்சயமாக) இருக்கும் என்ற நம்பிக்கையுடன். வாழைப் பழத்தின் மேல் ஊசியேற்றுவது என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஜெமோ அதைச் செய்வதில் வெகு சாமர்த்தியசாலி, என்னிடம் இருந்த நாகார்ஜுனனின் பிம்பம் அதற்கு மிக நிச்சயமான உதாரணம்.

என் ignoranceன் விளிம்பிற்குள் மாட்டிக் கொண்டிருந்த நாகார்ஜுனனுடைய பதிவுகளை எப்படியோ(விழிகளின் கதை வழி?!) படிக்கத் தொடங்க, என் இயல்பான பழக்கமான தொடர்ச்சியான மேய்தலில் இரண்டொரு பதிவிலேயே வேறு ஒரு இமேஜை கொண்டு வந்திருந்தார். தொடர்ச்சியான பதிவு வாசிப்பின் வழி, நான் தேடிக் கொண்டிருக்கும் கொண்டிருந்த அறிமுகம் எனக்கு கிடைக்கத் தொடங்கியது. அவருடைய பதிவில் ஒரு மறுமொழி போட்டிருப்பேனாயிருக்கும், நிறைய பதிவுகள் படித்திருந்தேன். ஒரு இரவு 10 மணி போல் அவர் பதிவில் நுழைந்து காலை நான்கு நான்கரை மணிக்கு வெளியேறிய நினைவெல்லாம் உண்டு. நிறுத்தி நிதானமாக படிக்க வேண்டிய பதிவுகள், light reading வகையைச் சார்ந்தவை அல்ல. தொடர்ச்சியான அவர் பதிவு மேயல்களின் வழி, அவருடைய அரசியலானது நான் இப்பொழுது என்னுடையது என்று நம்பிக்கொண்டிருக்கும் அரசியலை ஒத்ததாகவே இருக்கிறது இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் காலம் வரையிலும்.

ஃபூக்கோ பற்றிய, அல்துஸ்ஸார் பற்றிய பதிவுகள் வேண்டுமானால் உதாரணத்திற்குச் சொல்லலாம். ஒரு நிறைவான பணியை அவர் தமிழிணையத்திற்குச் செய்து கொண்டிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். அவர் சில சமயம் வாசகர் எண்ணிக்கை பற்றிச் சொல்லும் பொழுதெல்லாம் பின்னூட்டம் போடலாம் என்று கைகள் அரிப்பதுண்டு இதுவரை பொறுத்துக் கொண்டேயிருந்திருக்கிறேன். தமிழிணையத்தில் நிறைய நன்றாய் எழுதும் மக்கள் இந்த வாசகர் எண்ணிக்கை, பின்னூட்டம் போன்ற அரசியல்களில் தலை கால்களை இட்டு நகர்ந்திருப்பதை அறிவேன். வளர்மதியிடம் நான் எதிர்பார்த்த விஷயங்களை நாகார்ஜுனன் செய்துவருகிறார், வலையுலக மொக்கை அரசியல்களைத் தூக்கியெறிந்துவிட்டு நகர்ந்துவிடுங்கள் என்று வளர்மதியிடம் சொல்லாத நாளில்லை, நாகார்ஜுனன் செய்து வருகிறார். இதையெல்லாம் விட பெரிய அரசியலைச் சந்தித்தவர் என்பதால் இது சாத்தியமாகியிருக்கலாம். இணையத்தில் படிக்கத் தொடங்கிய பின்னர் என் கொள்கைகள் என்று வைத்திருந்தவைகளில் பல சுக்கு நூறாகி நொறுங்கியிருக்கிறது, சிலவற்றின் கனம் இன்னும் அதிகமாகியிருக்கிறது. நொறுங்கியதில் முக்கியமானவை இந்திய தேசம், இந்து மதம், ஜாதி வித்தியாசம் சம்மந்தப்பட்டவை இன்று முற்றிலும் காணாமல் போய்விட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் முன்பிருந்த அளவுகளில் நிச்சயம் இல்லை என்று சொல்வேன்.

அதற்கு முக்கியக் காரணம் கடவுள் நம்பிக்கையின்மை என்பது தான். அதுதான் தொடக்கப்புள்ளி, அங்கிருந்து தான் உடையத் தொடங்கின மேற்சொன்னவை அனைத்தும். கடவுள் நம்பிக்கை உடையவர்கள் உடன் பெரிய பிரச்சனை இல்லை என்றாலும் என்னால் கொள்கை அளவில் அவர்கள் சொல்லும் அனைத்திலும் கடவுள் நம்பிக்கை என்ற கடைசி இழை தொங்கிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. உணர முடிகிறது. கடைசி வரை சுந்தர ராமசாமி கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தார் என்று படிக்க நேரும் பொழுது அவருடைய அரசியல் தாண்டியும் அவரை தொடர முடிகிறது. ஒரு பழக்கத்தைக் கொண்டு ஒருவரை அறியும் முயற்சி படு தோல்வியில் முடியலாம், உதாரணம் ஹிட்லர்; தீவிரமான வெஜிடேரியன். ஆனால் கடவுள் நம்பிக்கையின்மை என்பது அப்படியல்ல என்றே நினைக்கிறேன், நீங்கள் வெளிக்காக நடிக்காமல் உண்மையில் நாத்தீகவாதியாக இருந்தால் நீங்கள் வைத்திருக்கும் எந்தக் கொள்கையையும் கேள்வி கேட்க முடியும். கடவுள் நம்பிக்கையின்மை முதற்கொண்டு, அதனால் தொடர்ச்சியாக நீங்கள் செய்யும் தவறுகளை உணர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

இதைப்பற்றி என் நண்பர்களுடன் பேசும் அத்தனை சந்தர்ப்பங்களிலும் என் பெண்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளும் பின்னூட்டங்களும் சண்டைகளும் நினைவுபடுத்தப்படும். உன் கடவுள் நம்பிக்கையின்மை, பெண்கள் எழுதுவதை எல்லாம்(பெண்ணியத்தை அல்ல) எதிர்ப்பதை தவறென்று சொல்லவில்லையா என்று கேட்கப்படும். நான் கடைசி வரை இதைத்தான் சொல்லி வந்திருக்கிறேன், பெண்ணியம் என்கிற பெயரில் இங்கே பதிவில் அடிக்கப்படும் ஜல்லிகளுக்கு பதில் சொல்வது தவறென்று எனக்கு இன்னமும் படவில்லை. பெண் சுதந்திரம் பெண்ணியம் என்பது என் அளவில் வித்தியாசமானவையாக இன்று இருக்கின்றன, நாளை தொடர்ச்சியான என் வாசிப்பினால் அது மாற்றமடையலாம். அன்று நான் முன்பு எழுதியவை எதுவும் தவறானவை என்ற எண்ணம் எனக்கு வருமென்றால் அதை வெளிச்சொல்வதில் இருக்கும் தயக்கத்தை கடவுள் நம்பிக்கையின்மை போக்கும். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In சிறுகதை தேன்கூடு

அவளை அவன் கண்விடல்

அன்று ஒரு அதிர்ஷ்டமான நாள் என்பதற்கான அறிகுறி காலையிலேர்ந்து தெரியவில்லை, பாட்டரி தீர்ந்திருந்ததால் நின்று போன அலாரம் க்ளாக், தலைநகரின் டிசம்பர் மாதக் குளிரில் குளிக்க அயர்ன் ராட் போட்டுவிட்டு ஞாபகமறதியில் சுவிட்சை அணைக்காமல் சூடுபார்க்கிறேன் பேர்வழி என்று கையில் நறுக்கென்று வாங்கிய மின்சாரக்கடி, இனிமேல் ஆபிஸ் போனாலும் அரைநாள் விடுப்புதான் எனத் தெரிந்தாலும் பார்க்கவேண்டிய வேலை பாக்கிக்காக, அவசரஅவசரமாக எடுத்த பல்ஸர் பெட்ரோல் இல்லாமல் பங்கிற்கு 100 மீட்டர் முன்பே நின்றுவிட நான் நிச்சயமாய் நினைக்கவில்லை இன்று அதிர்ஷ்டகரமான நாளாக இருக்குமென்று. எல்லாம் மாறியது ஒரு நொடியில்.

வெள்ளை சுகிதாரில், குளிருக்கு இதமாய் கருப்புநிற ஸ்வெட்டர் அணிந்த பஞ்சாப் கோதுமை நிற பிகரொன்று ரோட்டோரத்தில் லிப்ட் கேட்க, நான் யோசித்துப் பார்த்தேன் டெல்லி டிபார்ட்மெண்ட் ஆப் ரிஸர்ச் அண்ட் டெவலப்மெண்ட்டில் வேலைக்குச் சேர்ந்த இந்த இரண்டு வருடத்தில் எத்தனை நாட்கள் கனவு கண்டிருப்பேன் இதுபோல் பிகரொன்றை பல்ஸரில் ஏற்றிக்கொண்டு வீதிஉலா வரவேண்டும் என்று, நான் விட்ட பெருமூச்சை அவள் உணர்ந்திருப்பதற்கானச் சாத்தியக்கூறுகள் குறைவுதான். அவளருகில் வண்டியை நிறுத்தினேன் அவள் எங்கே போகவேண்டும் என்கிறாளோ அங்கே போவதற்கான முடிவை எடுத்தவனாய், ஹெல்மெட்டைக் கழட்டினேன்.

“சவுத்எக்ஸ்-பே டிராப் கர்ஸக்தா க்யா? தோடாஸா அர்ஜண்ட் காம் ஹை. பஸ் நை மில்ர” அவள் கெஞ்சும் பாணியில் கேட்க, “நோ ப்ராப்ளம்” என்று சொல்லாமல் தோளைக் குலுக்கிக் காட்டியவனாய் மீண்டும் ஹெல்மட் தலைக்கு நான் மாற்றும் நேரத்தில் பட்சி வண்டியில் கெத்தாய் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து பிடிமானத்திற்காய் தோளில் கை வைத்தாள். சாதாரணமான விஷயமாக அவள் செய்த இதை சாதாரணமா நான் எடுத்துக்கொள்ள நிறைய நேரம் பிடித்தது. நான் அணிந்திருந்த ஜெர்கின், ஆஃப் ஸ்வெட்டர், சட்டை, பனியன் இதையெல்லாம் தாண்டி அவள் உள்ளங்கையின் வெப்பம் உடலைத்தாக்குவதாய்ப் பட்டதை உள்மனம் மட்டும் மாயை என்று சொல்லியது. அதை அடக்கி இன்ஜினை விரட்டினேன்.

கிட்டத்தட்ட ஐஐடி டெல்லி, ஹவுஸ்காஸ் எல்லாம் நொடியில் தோன்றி மறைந்து அய்ம்ஸை நெருங்கும் சமயத்தில் பக்கத்தில் வந்து கொண்டிருந்த மாருதி ஜிப்ஸி ஒன்று இன்டிகேட்டர் சிக்னல் ஒன்றும் கொடுக்காமல் பட்டென்று வலதுபக்கம் திரும்ப டிஸ்க் பிரேக்கையெல்லாம் தாண்டியும் என் வண்டி குடைசாய்ந்தது.

“குத்தே கம்மினே…” நான் திட்டிக் கொண்டே முதலில் அந்த கார்க்காரனை அடிக்கக் கிளம்பினேன், பின்னர் தான் ஞாபகம் வந்தது பின்னால் உட்கார்ந்து வந்துகொண்டிருந்த தேவதையின் நினைவு. அவளும் கீழே விழுந்திருந்தாள் முழுங்கையில் நல்லஅடி நெற்றியில் லேசாய்ச் சிராய்ப்பு. அந்த நிமிடத்தை மீண்டும் நினைவில் கொண்டு வந்த எனக்கு அவள் பின்பக்கமாய் விழுந்திருக்க வேண்டுமென்பது புரிந்தது. பின்பக்கத்தில் நல்ல அடி பட்டிருக்க வாய்ப்புண்டு. சமீபத்தில் சிக்னல் இருந்ததால் கொஞ்சம் ஸ்லோவாய் வந்ததால் பெரிய காயம் ஒன்றும் இருக்க வாய்ப்பில்லைதான். ஆனாலும் பெண்ணல்லவா கையைக் கொடுத்து தூக்கிவிட்டேன்.

“ஸாரிஜி, உஸ்கா கல்தி ஹை.” மன்னிப்பு கேட்கும் மனோபாவத்தில் நான் தாமதித்த சில நிமிடங்களில் ஜிப்ஸிக்காரன் எஸ்க்கேப் ஆகியிருந்தான்.

முழங்கையில் இருந்து வழிந்த இரத்தத்தை துடைக்க ஜீன்ஸிலிருந்து கர்சீப்பை எடுத்துக்கொடுத்தேன். “தேங்க்ஸ்” சொல்லி வாங்கிக் கொண்டவளை, எதிர்பக்கம் இருந்த எய்ம்ஸிற்கு கூட்டிக்கொண்டு வந்தேன். அடுத்த அரைமணிநேரத்தில் டிரஸ்ஸிங் முடிந்து கையிலும், தலையில் கட்டுப் போட்டிருந்த வாக்கில் கேன்டீனில் உட்கார்ந்து டீ ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

“நீங்க தமிழா?”

எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை, அவள் தமிழில் பேசியதைக் கேட்டதும்.

“நீங்க தமிழா? உங்களுக்கு எப்டி தெரியும் நான் தமிழ்னு?”

“நீங்க அந்த மாருதிக்காரனை திட்டினீங்க தமிழில்.”

ஆஹா திட்டினீங்களா, அவனைக் காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தேன். நல்ல தமிழாவா இருக்கும் எல்லாம் மோசமானத் தமிழ் தான். ஒரு பிகரைக் கூட்டிக்கொண்டு போகும் நல்ல சந்தர்ப்பத்தில் இப்படி ஆக்ஸிடெண்ட் பண்ணி மானத்தை வாங்கிட்டானேன்னு நல்ல நல்ல கெட்ட வார்த்தைகளால் திட்டியிருந்தேன். அதுவரை கண்களை மட்டும் பார்த்து பேசிக் கொண்டிருந்தவனுக்கு அதன் பின் கண்களை பார்க்க முடியாமல் போனது. திரும்பத்திரும்ப என்ன கெட்டவார்த்தை ப்ரயோகித்தேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

“எங்க அப்பா ஒரு பஞ்சாபி, அம்மா தமிழ்க்காரங்க அதனால எனக்குத் தமிழ் தெரியும்.” அவள் சொல்ல,

“நீங்க பஞ்சாபியாத்தான் இருப்பீங்கன்னு நினைச்சேன்…” சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டேன். என்னவோ புரிந்தவளாய்ச் சிரித்தவள் “எப்டி அப்டி நினைச்சீங்க…” அவள் கேட்டதற்கு பதிலெதுவும் சொல்லாமல் தரையையும் கையில் இருந்த டீ கப்பையயும் பார்த்துக் கொண்டிருந்தவன், ஏதோ நினைவுக்கு வந்தவனாய்,

“முக்கியமான வேலை இருக்கிறா சொன்னீங்க. இல்லையா?”

அப்படியும் ஈர்க்கும் அந்தக் கண்களைப் பார்ப்பதை தவிர்க்கமுடியாமல் பார்த்தவனுக்கு தெரிந்தது அவளிடம் இருந்த தமிழ் அழகுகள். இதை எப்படி அப்பொழுது கவனிக்காமல் போனேன் என்று நினைத்தேன். பின்னர், பார்க்கவேண்டியதைப் பார்க்காமல் வேற எதையாவது பார்த்துக் கொண்டிருந்தது நினைவில் வந்தது, பார்த்ததை வைத்து மாநிலத்தை மட்டுமல்ல எதையுமே கணிக்க முடியாதென்று நினைத்தவனாய் மெலிதாய் சிரித்தேன்.

என் மனதில் ஓடுவதை படிப்பவளைப் போல் கண்களையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவள்,

“என்ன சிரிக்கிறீங்க?” கேட்க,

“இல்ல அந்த மாருதிக்காரனுக்கு தேங்க்ஸ் சொல்லியிருக்கணும்னு நினைத்தேன் சிரிப்பு வந்தது.” சொல்லிவிட்டு சிரித்தேன்.

கண்களை முடிந்த அளவிற்கு விரித்து, அதன் ஓரத்தில் ஒரு கேள்விக்குறியை நிறுத்தியவளுக்கு பதிலாய்,

“இல்லாவிட்டால் இந்நேரம் உங்களை சவுத்எக்ஸில் இறக்கி விட்டுட்டு ஆபிஸ் போயிருப்பேன். உங்கக்கூட பேசிக்கிட்டிருக்கிற இந்த சந்தர்ப்பம் கிடைச்சிருக்குமா அதான்.”

தாஸ் நீ எங்கேயோ போய்ட்டடா, நீதானா நீதானா இப்படி. மனதின் உள்ளிருந்து எனக்கு மட்டும் காதுகிழியும் அளவிற்கு சப்தமாய்க் கேட்கும் சப்தத்தை உதறித்தள்ளியவனாய், அவளுடைய மறுமொழியை அறிந்து கொள்ளும் ஆவலில் அவளை நிமிர்ந்து பார்த்தேன். அழகாய் உதடு பிரிக்காமல் சிரித்தவள்.

“நல்லா பேசுறீங்க, தமிழ்ல பேசிக் கேட்டு ரொம்ப நாள் ஆகுது. அதுவும் உங்கள மாதிரி வேடிக்கையா பேசிக்கேட்டு ரொம்ப வருஷம் ஆகுது.” சிரித்தாள்.

சிறிது நேரம் இப்படி வேடிக்கையாய் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவனுக்கு அவள் கேட்கப்போய்தான் நினைவில் வந்தது வேலைக்கு போகாமல் இங்கே உட்கார்ந்திருந்தது, என்னதான் இவ்வளவெல்லாம் பேசினாலும் மொபைல் நம்பர் கேட்க தைரியமில்லாமல் குட்பையுடன் முடிந்தது அந்தச் சந்திப்பு.

ஒட்டுமொத்த என்னுடைய ஐந்தாண்டு வெளிமாநில அனுபவத்தில் பெண்களுடன் அதிகப்படியாக பழகியது அதுதான் முதல் முறையாக இருக்கும். எப்படியிருந்தாலும் கொஞ்ச நேரத்தில் பிரியப்போகிறவள் தானே என நினைத்ததால் என்னுடைய ஈகோ கொஞ்சம் உறங்கியிருந்த சமயத்தில் நடந்த சந்திப்பில் முழுதாய் பறிகொடுத்துவிட்டதாய் உணர்ந்தேன் ஏதோ ஒன்றை.

இது நடந்த இரண்டாவது நாளில் மற்றொரு அதிர்ஷ்டமான நேரத்தில் நேரு ப்ளேஸின், இருபத்தைந்தடுக்கு பில்டிங்கின் லிப்ட் ஒன்றில் அவளைச் சந்தித்தேன், அதுவும் தனியாய் நானும் அவளும் மட்டும். ஆச்சர்யங்கள் எப்பொழுதும் நடப்பதில்லைதான் ஆனால் எனக்கு நடந்தது. நான் மனதின் ஓரத்தில் நினைத்ததை தேவர்கள் கேட்டு ‘ததாஸ்து’ சொல்லியிருக்க வேண்டும் லிப்ட் அரைகுறையாய் நின்றது நடுவில்.

என்னைப் பார்த்து அவள் அடைந்த ஆச்சர்யத்தை அவள் கண்கள் படம் போட்டுக் காட்டின.

“வாட் அ ப்ளஸண்ட் சர்ப்ரைஸ், இன்னிக்கு காலையில் தான் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். அன்னிக்கு உங்க போன் நம்பர் கூட வாங்கலைன்னு அதற்குப் பிறகு தான் ஞாபகம் வந்தது.”

அவள் சொல்லச்சொல்ல எனக்கு தேவர்கள் பூமாறி பொழிவதாகத் தோன்றியது, அதன் பிறகு நடந்ததாகத்தான் இருக்க வேண்டும் அந்த ததாஸ்து சம்பவம். நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை, அவளும் கொஞ்சம் கூட பயப்படாமல்,

“இங்க இப்படித்தான் அடிக்கடி லிப்ட் பெயிலியர் ஆயிரும். அஞ்சு பத்து நிமிஷத்தில் சரியாயிரும்.”

என்னவோ நான் அது சரியாக வேண்டும் என்று கவலைப்படுவதாய் நினைத்து. அதைப் பற்றிய ப்ரக்ஞையே இல்லாமல் நான் இரண்டு நாளாக கனவில் அவளுடன் பேசியதில் நினைவாக்க எந்த ஒன்று நன்றாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

லிப்ட் கடகடவென சப்தத்துடன், மெதுவாய் ஒருமுறை ஆட அதுவரை சாதாரணமாய் எதிரே நின்று பேசிக்கொண்டிருந்தவள் பயந்துபோய் அருகில் வந்து ஒட்டி நின்றுகொண்டாள். எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது இருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை, ஆனால் இருவருக்குமே பேச்சு வரவில்லை, சிறிது நேரத்தில் கரெண்ட் கட்டாகிப் போய் இன்னுமொறுமுறை லிப்ட் ஆடத்தொடங்க, பக்கத்தில் நின்று கொண்டிருந்தவள் பயந்துபோய் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள், அந்தப் பயங்கரமான சூழ்நிலையிலும் அவள் போட்டுக்கொண்டிருந்த செண்டின் வாசம் என்னை அலேக்காகத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டது. நான் அவளுக்கு தைரியத்தை ஏற்படுத்த நினைப்பவனாக ஒரு கையை அவள் தோளைச் சுற்றிப் போட்டு இறுக்கிப் பிடித்தேன். அப்பொழுது தான் அவளுக்கும் எனக்குமான உயர வித்தியாசம் தெரியவந்தது அப்படியே எங்கள் இருவருக்குமான நிறங்களின் வித்தியாசமும். அன்று அவள் ஸ்லீங்லெஸ் ஜாக்கெட் அணிந்து புடவை கட்டியிருந்தாள்.

“ப்ரார்த்தனா பயப்படாதீங்க, இதே பில்டிங்கில் நம்ம பிரண்டொருத்தன் இருக்கான் அவனைப் பார்க்கிறதுக்காகத்தான் வந்தேன். ஒரு நிமிஷம் போன் செய்து அவனைப் பிடிக்கிறேன்.”

தோள்களில் இருந்து கைகளை எடுக்காமல் இடது கையாலேயே மொபைலை எடுக்க துரதிஷ்டிர வசமாக சிக்னல் கிடைக்கப்போய், அவனிடம் நாங்கள் இருக்கும் நிலையை விவரித்து, அவன் வருகைக்காகவும் உதவிக்காகவும் காத்திருந்த சமயங்கள் மிகவும் அழகானவை சொல்லப்போனால் போதையானவை. அவளுடைய அருகாமை என்னுள் பெரும் மாற்றத்தை உருவாக்கியிருந்தது. அருகாமையென்றால் ஒருவருடன் ஒருவர் உரசிக்கொண்டு இருந்ததில் எதையோ ஒன்றை இழந்து கொண்டிருந்தேன் என்பது தெளிவாக விளங்கியது.

ஒருவழியாய் லிப்டை மேலே தூக்கி நாங்கள் வெளியில் வந்ததும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூட வெட்கப்பட்ட நாங்கள் ஒரு மணிநேரத்தில் டெல்லியின் பிரபலமான ஒரு ஹோட்டலில் அருகருகே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

“அட நீங்க ஒன்னுங்க லேப்டாப் ரொம்ப செக்யூர்டா இருக்கணும்னு கவர்மெண்ட் செக்யூர்ட் கீ கான்பிகர் பண்ணிக்கச் சொல்லி இங்க அனுப்பினாங்க. அந்த செட்டப் எல்லாம் முடிச்சி இரண்டு மூணு தடவை யூஸ் பண்ணிப் பார்த்துட்டு வர்றதுக்கு ஒரு மணிநேரம் ஆய்டுச்சு. ரொம்ப லேட் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.”

நான் முதல்முறை அவளைச் சந்தித்த பின் தான் நினைவில் வந்தது அன்று லாப்டாப் என்னிடம் இல்லாதது, டிஆர்டிவோவில் லேப்டாப் கொடுத்ததும் சந்தோஷமாய் வாங்கியதற்கு ஒரே காரணம். இனிமேல் ரோட்டில் சீன் போடலாம் என்றுதான். அன்றைக்கென்று பார்த்து லேப்டாப் கையில் இல்லாததை ஒரு பெரிய குறையாக நினைத்தேன். என்னை அவளிடம் சரியாய் லேப்டாப் அறிமுகம் செய்து வைக்கும் என்று நினைத்தே அந்தப் பேச்சை இழுத்தேன். அப்படியே வேலை செய்தது.

செக்யூர்டு கீயை இன்னொரு முறை சோதனை செய்து பார்ப்பவனைப் போல் ஹோட்டலிலேயே அவளுக்கு செய்முறை விளக்கம் செய்து காட்ட அவள் முகம் பிரகாசமடைவதை உணரமுடிந்தது. அவளும் ஆர்வமாய் சில கேள்விகள் கேட்க, அவளுடைய கம்ப்யூட்டர் திறமையை ஆச்சர்யத்துடன் கவனித்தேன். முதல் முறையைப் போலில்லாமல் அவளுடைய பர்ஸனல் விவரங்களை அடுக்கியவள் மறக்காமல் மொபைல் நம்பரை கொடுத்து என்னுடையதை பெற்றுக்கொண்டு சென்ற ஒரு வாரத்தில் எல்லாம் எங்களுக்கிடையேயான இடைவெளி குறைந்திருந்தது, எவ்வளவென்றால் ஆடையின் அவசியம் எங்களுக்கிடையில் இல்லாமல் போகுமளவிற்கு.

இது எனக்கும் ஆச்சர்யமான விஷயம் தான். டெல்லி போன்ற ஒரு சிட்டிக்கு வேலைக்கு வந்து இரண்டு வருடங்களாக பிரம்மச்சரியத்தையும் ஆஞ்சநேயரையும் சைட் அடிப்பது என்ற ஒரே ஒரு எக்ஸம்ஷனுடன் காப்பாற்றி வரும் நான் இப்படி ஆனது வேதனையுடன் சேர்த்து சந்தோஷத்தையும் அளித்தது. யாரிடமோ எதையோ ப்ரூவ் பண்ண நினைத்தவன் வெற்றுடம்புகளின் வெம்மைப் பரிமாற்றத்தில் அதை சாதித்ததாய் உணர்ந்தேன். ஆனால் உள்மனம் யாரோ ஒரு பெண்ணை அவளுடைய பெற்றோரை ஏமாற்றுவதாய் உளறிக்கொட்ட, ப்ரார்த்தனா ஒன்றும் சின்னப் பெண் கிடையாது அவள் செய்வது எத்தகையது என்பதைப் பற்றி அவளுக்குத் தெரியும் என்று சமாதானம் செய்து கொண்டிருந்தேன்.

அத்தனை நாள் பிரம்மாண்டமாய் தோற்றமளித்த அவள் குறிப்பாய் அவள் உடல் பற்றிய எண்ணங்கள் நிர்வாணத்தில் கரைந்து கொண்டிருந்தன. அத்தனை நெறுக்கும் பயத்தையும் அவளின் மீது பச்சோதாபத்தையும் ஏற்படுத்தியது. அசந்து தூங்கிக் கொண்டிருந்தவளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன் எப்பொழுது தூங்கினேன் என்றே தெரியாமல் தூங்கிக்கொண்டிருக்க இன்டலிஜென்ஸ் பீரோ ஏஜன்டுகள் வந்து எழுப்பி “இராணுவ சம்மந்தமான தகவல்களை வெளியானதற்காக” கைது செய்வதாய் சொன்னதும் தான் ஒரு வாரம் நடந்தவைகளை திருப்பிப் பார்த்தேன் ஒரு திருத்தப்பட்ட குறளுடன்.

இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து
“அவளை” அவன் கண்விடல்.

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In Only ஜல்லிஸ்

குத்துங்க எசமான் குத்துங்க

குத்துங்க எசமான் குத்துங்க, இந்த சாஃப்ட்வேர் வேலை செய்யறவனுங்களே இப்படித்தான். குத்தங்க எசமான் என்கிற அளவில் சாஃப்ட்வேரில் வேலை செய்பவர்களையெல்லாம் ஒட்டுமொத்த சமூகத்தை சீரழிப்பதற்கென்றே அவதாரம் எடுத்தவர்கள் என்கிற ரேஞ்சில் அடிக்கடி போட்டு கும்முவது தெரிந்தது தான், அறிவுரை சொல்வதற்கு தகுதி என்கிற பெயரில் ஒன்றும் தேவையில்லை. சிலருக்கு வயதாகிவிட்டதே தகுதி இன்னும் சிலருக்கு 'வேலை விட்டு தூக்கப்பட்ட இரண்டு பேருக்கு' வேலை வாங்கித் தந்ததே தகுதி.

தகுதியைப் பற்றி பேச ஆரம்பித்தால், "கற்றதனால் ஆன பயனென்ன" கருமாந்திரமெல்லாம் நினைவிற்கு வந்து தொலைப்பதால் அப்படியே எஸ்கேப் ஆகிவிடுகிறேன். எழுதி இவன் sexual harassment செய்கிறான் என்று கையெழுத்து வேட்டை தொடங்கிவிடுவார்களோ என்ற பயம். தனக்கு தெரிந்த ஆட்களுக்கெல்லாம் 'மெயில்' அனுப்பி உடனே உதவவும் என்று சொல்லி முடிக்காதவேளையில் எங்கிருந்தோ குதித்து தழல்(:)) எரிக்கும் அன்பர்களைக்கண்டும் பயம் என்று ஆரம்பித்தால் தெனாலி கமலஹாசனைவிடவும் அதிகமாக பயப்படும் விஷயங்களை லிஸ்ட் போட்டு தாளாது.

"மண் புயல் தணிந்துவிட்டது
ஆனால் போர் தொடர்கிறது - இடம் பெயர்கிறது" - என்ற தருமு அரூப் சிவராம்(பிரமிள்) கவிதை தான் நினைவிற்கு வருகிறது.

இன்னும் சுலபமாக,

வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்து தான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா என்ற வரிகளில் சிச்சுவேஷனை விளக்கிவிடலாம்.

எங்கே இல்லை பிரச்சனை எதில் இல்லை குறை, குறை இல்லாத ஒன்றிருக்குமென்றால் அது இல்லாத இறையாகத்தான் இருக்க முடியும். அமேரிக்காவில் நிதி நெருக்கடி வந்ததோ இல்லையோ இங்கே பிங்க் சிலிப் பற்றியும் வேலையை விட்டு நிறுத்துவதைப் பற்றியும் நாளொரு விதமாய்ப் பதிவுகள், அறிவுரைகள் அள்ளி வீசுகிறார்கள். மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், பிரச்சனை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் எங்கே இல்லை பிரச்சனை?

வண்ணநிலவனின் கவிதையோடு முடித்துக்கொள்கிறேன் வாயில் நல்ல வார்த்தையா வருது.
அவரவர் வானம்
அவரவர்க்கே யானாலும்
அடியாமல் படியாமல்
வசப்பட வழியில்லை.

தண்ணியடிக்காமல், சிகரெட் பிடிக்காமல் ஏன் இன்னும் பொம்பளைப் பழக்கம் இல்லாத சாப்ஃட்வேர் மக்களிற்கு...


PS: முதலில் ஊருக்கு இளைச்சவன் சாஃப்ட்வேர் ஆண்டின்னு எழுதலாம்னு நினைச்சேன், ஏற்கனவே அந்த பெயரில் இன்னும் சில பதிவுகள் இருப்பது அறிந்து கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்டுவிட்டேன்.

PS1: இந்த மாதிரி பதிவின் கடைசியில் 'ற்கு...' என்று முடிக்காவிட்டால் இலக்கியவாதின்னு ஒத்துக்க மாட்டாங்களாமே அப்படியா ;)

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In சினிமா விமர்சனம் பெண்ணியம்

கபி அல்விதா நா கெஹ்னா, கட்டுடைத்தல், கரண்ஜோஹர் மற்றும் ஜல்லி

கட்டுடைத்தல் அப்படின்னு சொன்னதும் உங்களுக்கெல்லாம் யார் யார் நினைவுக்கு வருவாங்கன்னு தெரியாது எனக்கு ஆசிப் அண்ணாச்சியும் 'நண்பன்' பீர் முகமது அண்ணாச்சியும் தான் நினைவுக்கு வருவாங்க, குஷ்பு மேட்டர் வந்திருந்தப்ப கட்டுடைத்தலை படம் போட்டு விளக்கினவரு ஆசிப்புன்னா, பின்நவீனத்துவ கவிதை எழுதி விளக்கினவரு பீர் முகமது. சுட்டிகள் தேடிப்போட்டு மீண்டும் உதைவாங்க நான் தயாராயில்லை. இணைய உலகில் வலம் வரும் சில பெயர்களுக்காக கதைகளைப் படிக்க ஆரம்பிப்பதுண்டு, இந்தப் பழக்கம் கவிதைக்கு கிடையவே கிடையாது என்ற நிலையிலிருந்து ஒரு அடி பின்வாங்கினேன் என்றால் அது நண்பனின் கவிதை வரிகளுக்காக மட்டும் தான்.

முதலில் இந்தக் கட்டுரையை அல்லது டைரிக்குறிப்பை அல்லது திரை விமரிசனத்தை 'கட்டுடைத்தலும் ஒன்றிரண்டு கரப்பான் பூச்சிகளும்' என்ற தலைப்பில் தான் எழுத நினைத்திருந்தேன், அதுவும் ஒருவாரத்திற்கு முன்பே பலருக்கு நான் எழுத நினைத்த காரணம் தெரிந்திருக்கும். பின்னர் இன்று காலை படம் பார்த்துவிட்டு வந்ததும் 'கட்டுடைத்தலும் சில பக்வாஸ் ஆத்மிக்களும்' என்ற தலைப்பில் தான் எழுத நினைத்தேன். கடைசியில் எழுத உட்காரும் பொழுது அதையும் மாற்றி தற்சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் 'கட்டுடைத்தலும் கரண் ஜோஹரும்' என்ற தலைப்பில் எழுதுகிறேன். என் பல சிறுகதைகளை அதன் ஒருவரி முடிவை நோக்கி கொண்டுசெல்ல முயலாததைப்/இயலாததைப் போல், தலைப்பை தேர்ந்தெடுப்பதிலும் சில காலமாக நான் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகிவருகிறேன்.

உலகம் மாறுகிறது, நான் திருச்சியில் சினிமா பார்த்த நாட்கள் இன்று நினைவில் வந்தன, மாரிஸில் முதல் நாள் முதல் ஷோ படம் பார்க்க நான் படாதபாடு பட்டிருக்கிறேன். அமர்க்களம் மாரிஸில் ரிலீஸ், நான் காலேஜில் படித்தக் காலம் அது, என்னமோ அஜித் மேல ஒரு கிரேஸ் இருந்தது. சுதந்திர தின ரிலீஸ் என்று நினைக்கினே, மாரிஸ் தியேட்டர் காம்பளக்ஸில் ரசிகர் ஷோ கிடையாது, ஆனால் கிளம்பி வந்து வம்பிழுக்கும் ரசிகர்களைக் கட்டுப்படுத்த போலீஸ் வரவழைக்கப்பட்டிருந்தது. அவர்கள் ரௌடிகளை விட்டுவிட்டு எங்களைப் போட்டுக் காச்சியெடுத்தது நினைவில் வந்தது. இங்கே இரவு பன்னிரெண்டு மணிக்கு ஃபேம் சினிமாஸில், இரண்டு நாட்களில் ரிலீஸ் ஆகப்போகும் கரண்ஜோஹரின், கபி அல்விடா நா கெஹனா(Kabhi Alvida Na Kehna - Dont say Good Bye) படத்திற்கு உட்காரும் ஸீட் முதற்கொண்டு இன்டர்நெட்டில் புக்செய்து, கிரெடிட்கார்டை ஸ்வைப்(இன்டர்நெட்டில்-ங்க) செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு போகும் அளவிற்கு முன்னேற்றம்.












முதல் நாள் முதல் ஷோ, அமிதான் பச்சன், ஷாரூக்கான், அபிஷேக்பச்சன், ராணி முகர்ஜி, பிரீத்தி ஜிந்தா என் ஓரளவு இல்லாமல் நன்றாகவே அறிமுகம் ஆன முகங்கள், அப்படித்தான் கரண் ஜோஹரும், குச் குச் ஹோத்தா ஹை, கபி குஷி கபி கம் போன்ற நான் பார்த்த மிகச்சில இந்திப்படங்களின் இயக்குநர் இவர்தான். இப்படியாக இயல்பாகவே ஒரு நல்ல படத்தை எதிர்பார்த்துத்தான் போயிருந்தோம்.

இன்டர்நெட்டில் தியேட்டரில் கடைசி வரிசையில், நடுவாக புக் செய்ததாக நினைத்துப் போக, நாங்கள் தவறுதலாக இன்டர்நெட்டில் கொஞ்சம் நடுவரிசையில் ஆனால் திரையின் நடுவாக புக் செய்திருந்தது தெரிந்தது. ஆனால் கொடுமையிலும் ஒரு நன்மையாக, மொத்த வரிசையிலேயே நாங்கள் நால்வர் மட்டும் தான் ஆண்கள். இப்படியாக 35 ரூபாய் பெப்ஸி கப்புக்களுடன், பாப்கார்களுடனும் தொடங்கியது சினிமா.

ஆரம்பத்தில் இருந்தே இரண்டு குடும்பங்களை மையமாக கொண்டு கதை வளர்ந்து வந்தது, அதாவது, அமிதாப், அபிஷேக், ராணிமுகர்ஜி ஒரு குடும்பம், ஷாரூக், பீரித்தி ஜிந்தா, கிரண் கெர் இவர்கள் ஒரு குடும்பம்.

கதை இவ்வளவுதான், ஷாரூக் ஒரு கால்பந்தாட்ட வீரர் (ஒரே ஒரு ஷாட்டோடு நிறுத்திவிட்டார்கள் பரவாயில்லை), அவரது மனைவி ஒரு மாடல் மேகஸினுக்காக வேலை பார்ப்பவர், அவரது இருபத்திநாலு மணிநேர வேலை சம்மந்தமாக கணவனுடனான உறவு அவ்வளவு இனிமையாக இல்லை. ஆனால் இருவருக்கும் ஒரு குழந்தை உண்டு பெயர் அர்ஜூன்.

இதேபோல், அமிதாப் குடும்பம், மனைவியற்ற அமிதாப் ஒரு ஜாலிப்பேர்வழி, மகனுக்கு அவர் அப்பாவின் தொழில்களை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ராணி முகர்ஜி, அபிஷேக்கின் மனைவி. எல்லாவற்றிலும் சுத்தத்தை எதிர்பார்க்கும் பார்ட்டி போன்ற லேட்நைட் விஷயங்களில் விருப்பமில்லாத கொஞ்சம் சராசரி இந்திய மனைவி. இவருக்கும் இவர் கணவருக்கும் அவ்வளவு கொஞ்சிக்கொள்ளும் படியான உறவில்லை.

இவர்களுக்கிடையில் சூழழும் கதையின் போக்கில் ஷாரூக்கிற்கும், ராணி முகர்ஜிக்கும் இடையில் ஒரு அஃபயர் வந்து விடுகிறது, இந்தக் காட்சிகள் மிகவும் அருமையானவை, படத்தில் முக்கியமான கதைத்திருப்பதிற்கு காரணமான விஷயங்கள் என்பதால் நுணுக்கமாக எடுத்திருப்பார் கரண். நிறைய விஷயங்களைப் பற்றி பேசவேண்டும் போல் இருக்கிறது இந்தப் படத்தில்.

ஷாரூக்கின் குறும்புகள், அமிதாப்பின் ஆளுமை, கொஞ்சம் வயதாகிவிட்டிருந்தாலும் ராணி, மற்றும் பிரீத்தி ஜிந்தாவின் அழகு என்று இதெல்லாம் மேலோட்டமானவை, கதை சொல்லும் பாணியும் நன்றாக இருந்தது. ஷாரூக்கிற்கும், ராணிக்கும் இடையில் வந்துவிட்ட ஆனால் சொல்லப்படாத அஃபயர் காலத்தில் அவர்கள் நாடகத்தனமாக மீண்டும் தன் கணவன் மனைவிகளுடன் சேர போடும் திட்டம் வேடிக்கையாவதும். ஆனால் உண்மையில் இந்தப் பிரிவை விரும்பாத அபிஷேக் மற்றும் பிரீத்தி போடும் திட்டம் சக்ஸஸ்புல்லாகவும் அமைவதைக் காட்டியிருக்கும் இயக்குநருக்கு ஒரு சபாஷ். உண்மையில் நன்றாக யோசித்து கதை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

தமிழின் மீதிருந்த காதலால், எனக்கு அமிதாப்பைப் பற்றிய ஒரு தவறான முன்முடிவிருந்தது, ஆனால் அவருடைய ஸ்கிரீன் பிரஸன்ஸ் அருமையிலும் அருமை. அதுவும் ஷாரூக்கும் அமிதாப்பும் ஜோக்கடிக்கிறேன் பேர்வழியென குடும்பத்தினரை வம்பிழுக்கும் நேரத்தில் உண்மையில் அவரின் ஆளுமையை உணர்ந்தேன். “குட் ஜோக்” என்று அமிதாப் ஷாரூக் தன்னை ஏமாற்றுவதாய் நினைத்துக்கொண்டு சொல்லும் நேரத்தில் சொல்லும் பொழுது தலைவர் பின்னியிருக்கிறார். எப்பொழுதும் போல் ஷாரூக்கின் திறமை படம் முழுதும் வெளிப்படுகிறது, கையில் இருக்கும் விக்டரி பச்சையை நன்றாக கன்டின்யூ பண்ணியிருக்கிறார்கள்.

இடைவேளைக்குப் பிறகு ஒரு தவறை நான் செய்தேன், அதாவது பெரும்பாலான நேரத்தில் படத்தின் முடிவை ஊகிக்கிறேன் பேர்வழி என்று யோசித்துக் கொண்டு தமிழ்ப்பட பாணியில் நானாய் ஒரு முடிவைக் கற்பனை செய்து கொண்டிருந்தேன். பரவாயில்லை ஓரளவிற்கு நான் ஒத்துக்கொள்ளும் முடிவைத்தான் இயக்குநர் தந்திருக்கிறார். ஆனால் தமிழ்ப்பட பாதிப்பால் எதிர்பார்த்தது வேறு. நல்ல முடிவிற்கு நன்றி இயக்குநரே. கட்டுடைத்தலைப்பற்றி பின்னால் வரப்போகும் பத்திக்கு முன் இதை எழுதி விடுகிறேன். கட்டுடைத்தலை மிக அழகாக அவர்கள் இருக்கும் வாழ்வுமுறையில் சொல்லியிருக்கிறார், ஆனால் நிறைய மசாலாத்தடவி. என்னுடன் வந்த மூன்று பேருமே பக்வாஸ் படம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை நல்ல பாலச்சந்தர், ராம நாராயணன், ஷங்கர் கடேசியாக செல்வராகவன் எல்லோரும் சேர்ந்து இயக்கிய படம் போலிருந்தது. காமெடியும் அருமை. கட்டுடைத்தலை மசாலாத் தடவி சொல்லியிருக்கிறார்கள், இந்தி வசனங்கள் அதிகம், மீண்டும் ஒருமுறை நார்த் இண்டியா பக்கம் வாசனையுள்ளவர்கள் நிச்சயம் பார்க்கலாம். மூன்றரை மணிநேரம் கொஞ்சம் அதிகம் என்றாலும் டீக்கே, ஆசாத்பாய் பாணியில் சல்தா ஹை. இப்போ கொஞ்சம் பழைய கணக்கு...


----------------------------------


ஆரம்பக்காலத்தில் என் மாமாக்கள்(இரண்டுபேர்) சொல்வது தான் வேதவாக்காக இருந்த காலத்தில், அவர்களுடைய கருத்துக்ளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தேன் பெரும்பாலும், வரதட்சணை வாங்கக்கூடாது என்பது அதில் மிகமுக்கியமான ஒன்று, இதில் பெரியவருக்கு அப்படியே தான் நடந்தது திருமணம், தன் பெயருக்குப் பின்னால் டிகிரியைப் போட்டுக்கொள்ள விரும்பாத அவருடைய போக்கை அப்படியே கடைபிடிக்கும் கிளிக்குட்டியாக நான் இருந்தேன், ஆனால் ஒன்றிரண்டு வருடங்களில் வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருந்தது. அம்மாவிடம்,

“கோடிஸ்வர வீட்டுப்பொண்ணை பாருங்கம்மா, வேலை செஞ்சு செஞ்சு அலுத்துப்போச்சு, (மொத்தமாக மூன்றே வருடங்கள்) கல்யாணம் பண்ணினமா, வீட்டோ மாப்பிள்ளையா செட்டில் ஆனமான்னு இருந்திடலாம்னு நினைக்கிறேன், மாமனார் எதாவது பிஸினஸ் வைச்சிருந்தாருன்னா அப்படியே பார்த்துக்கிட்டு... வாழ்க்கையை ஓட்டிடலாம்னு நினைக்கிறேன்”னு சொல்ல வைத்தது.

ஒரு வருடம் கழித்து வீட்டிற்கு வந்த பையன் சொல்வதைக் கேட்ட பழங்காலத்து அம்மா, என் தலைக்கு எலுமிச்சைப் பழத்தால் குளிப்பாட்டி விட்டால் இந்தப் பிரச்சனை சரியாகிவிடும் என்று நினைத்ததில் தவறில்லையென்று நினைக்கிறேன். பாவம் அம்மாவிற்கு கட்டுடைத்தலைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை இல்லையா, வேலை விஷயமாக டிசைன் பேட்டர்ன்ஸ் பற்றி ஒரு செஷன் எடுக்கிறேன்னு மூன்று மாசமா டிமிக்கு கொடுக்கும் எனக்கு, ஒன்றுமே தெரியாத கட்டுடைத்தல் பற்றி அம்மாவிற்கு சொல்லிக் கொடுப்பதில் விருப்பம் இல்லை.

சரி அம்மாவிற்கு கட்டுடைத்தலைப் பற்றித் தெரியாதா? நல்ல கேள்வி, கட்டுடைத்தல் என்ற வார்த்தையில் பின்னால் கோர்க்கப்டும் நிகழ்வுகளைப் பற்றி அந்த வார்த்தையால் தெரிந்திருக்க நிச்சயம் நியாயமில்லை, ஆனால் உண்மை விஷயம், நன்றாகத் தெரியும். மிக நன்றாக, சிதம்பரம், மதுரை என்று சொன்னால் புரிந்துவிடுமா என்று யோசித்தேன், பின்னர் ஏதோ நம்பிக்கை வந்தவன் போல், நம்ம சொந்தக்கார மாமாவைப் பற்றிச் சொன்னால் தெரிந்து கொண்டு போகிறார்கள் என்று நினைத்தேன். தூரத்துச் சொந்தத்தில் உள்ள மாமா ஒருத்தர் இப்படித்தான், அவருக்கு இங்கே அம்மாவும் நைனாவும் வேலை பார்க்கும் பிஎச்யிஎல் ஸ்கூலில் பெல் ஸ்கீமில் வேலை, ஆரம்பச் சம்பளம் 1500 பின்னர் இரண்டு மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1800 ஆக உயர்ந்ததாகக் கேள்வி, ஆனால் அவர் கல்யாணம் செய்து கொண்ட அத்தைக்கு கவர்மெண்ட் உத்தியோகம் அதும் தஞ்சாவூரில் நம்ம மாமாவுக்கு வீடும் அங்கதான், காலையில் கிளம்பி திருச்சி வந்து வேலைசெய்துவிட்டு சாயங்காலம் திரும்பவும் பஸ் பிடித்து திரும்பப் போய்க்கொண்டிருந்தார்.

எங்கக் குடும்பத்தைப் பிடித்த சாபமோ என்னவோ தெரியலை ஏகப்பட்ட சொந்தக்காரங்க டீச்சராவேயிருந்துத் தொலைச்சிருறாங்க. இப்படி இவரு 1800க்கு இந்தப் பக்கம் அந்தப் பக்கம்னு ஆடி ஓடி தெருவில் நின்னப்பத்தான் அவரு சம்சாரம் அதான் எங்க அத்த, ஓய் நீரு இப்படி கிழிச்சது போதும், (இதில மாசச்சம்பளத்தில் பாதி திருச்சி – தஞ்சாவூர்) டிக்கெட் சார்ஜூக்கு சரியா இருந்தது.) அந்த 1800 ரூபாய்க்கு நான் டியூசன் எடுத்து உனக்குத் தந்திர்றேன், வேலைக்கும் போய்கிட்டு, சமையலும் செய்துக்கிட்டு, புள்ளையையும் பார்த்துக்க முடியலை, நீ ஒழுங்கு மரியாதையா வேலையை ரிஸைன் பண்ணிட்டு வீட்டோ வந்து சேருன்னு சொல்லிடுச்சு, மாமனாரும்(மாமாவோட) வீட்டுக்கு முன்னாடி ஒரு பொட்டிக்கடை போட்டுக்கொடுத்திட்டாரு, இவருக்கு இப்ப பொழுது போக்கு, பொழப்பெல்லாம் அவரோட பொண்ணை கண்ணும் கருத்துமா, (பொட்டிக்கடையுமா?) வளர்த்துக்கிட்டு வர்றாரு, மக்களே பொறாமைப் படாதீங்க எங்க இரண்டு பேருக்கும் வயது வித்தியாசம் பதினைந்திற்கு மேலிருக்கும்.

ஆனால் பாவம் அவருக்கு அவர் பண்ணினது கட்டுடைத்தல்னு தெரியாது, எங்கம்மாவிற்கும் தான். பின்ன ஒரு பேட்டி உண்டா, போட்டாகிராப் தான் உண்டா, அச்சு இதழ் வேண்டாம் சார், ஒரு இணைய இதழ், இல்லாட்டி போனா நட்சத்திர வாரத்தில் இலவச இணைப்பு, ஓஹோ அவரு அம்மேரிக்காவில் போய் இந்த ஊழியம் செய்யலையே, தமிழ்நாட்டில் இல்லடா செய்யறாரு அதுவேணும்னா ஒரு காரணமா இருக்கலாம் இல்லையா? ஆனா அம்மாவிற்குத்தான் தன் தூரத்துத் சொந்தக்காரத் தம்பி இப்படி பொண்டாட்டி தாசனா(அவங்களோட வார்த்தை) இருக்கிறதைப் பார்த்தா பிடிக்கிறதில்லை, அடிக்கடி தம்பி இந்த சி, சி++, ஜாவான்னு என்னென்னமா சொல்றியே அவனுக்கும் ஏதாவது இப்படிச் சொல்லித்தந்து, இந்தக் கண்ணாடிக்கிட்டேர்ந்து(அத்தை அந்தக் கால ஆசிரியர் மாதிரி கண்ணாடியெல்லாம் போட்டிருப்பாங்க) காப்பாத்தேம்பான்னு புலம்பிக்கிட்டேயிருப்பாங்க,

நானும் ஒருநாள் எக்குத்தப்பா, மாம்ஸ் நான் வேணும்னா ஏதாவது நல்ல சென்டரில் சேர்த்துவிடுறனே, ஈகாமர்ஸ் அது இதுன்னு இப்ப ஏகப்பட்டது இருக்கு என்ன சொல்றீங்கன்னு கேட்க, அதெல்லாம் வேணாம் மாப்பிள்ளை நான் நல்லா சந்தோஷமாத்தான் இருக்கேன், செல்வியை நினைச்சாத்தான் பயமா இருக்கு எப்படி கல்யாணம் பண்ணிக் கொடுக்கப்போறமோன்னு இருக்குன்னு சொல்ல நான் கிரேட் எஸ்கேப் ஆகி அம்மாவிடம், மம்மி, அந்தாளு சந்தோஷமாத்தான் மம்மி இருக்கிறாரு நீதான் தேவையில்லாம கவலைப்படுற, அதெல்லாம் சரி, நம்ம சொந்தத்தில் இந்த மாதிரி, சாப்ட்வேரில் லண்டன், பிரான்ஸ், ஜெர்மன்ல ஏதாவது பொண்ணுங்க இருந்தாங்கன்னா, சமைக்க துணிவைச்சிப் போட்டு, பிள்ளைகளை வளர்க்க நல்ல கணவனா ஒருத்தன் (நான்) இருக்கான்னு சொல்லி கேட்டுப்பாரேன்னு சொன்னேன், அவர் வீட்டின் பின்புறத்தில் இருக்கும் எலுமிச்சை செடியில் பத்து பதினைந்தாய் காய் பறிக்கச் செல்லும் நேரத்தில் ஒரேயடியாய் பழங்கால தமிழ்நாட்டிற்கு பைபை சொல்லிவிட்டு பின்நவீனத்துவ புனேவிற்கு ரயில் ஏறினேன்.

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In புத்தகங்கள் பெங்களூர்

பெங்களூர் புத்தகக் கண்காட்சியை புறக்கணித்த பதிப்பகங்கள்

தொடர்ச்சியாய் இது மூன்றாவது வருடம் நான் பெங்களூர் புத்தகக் கண்காட்சிக்கு போவது, ஆனால் இந்த முறை ஒரு வித்தியாசம். நான் விரும்பி புத்தகம் வாங்கும் பதிப்பகங்கள் இந்தக் கண்காட்சிக்கு வரவில்லை. குறிப்பாய் உயிர்மை, கிழக்கு மேலும் கண்ணதாசன், நர்மதா, அல்லயன்ஸ், கலைஞன் இப்படி நிறைய வந்த பதிப்பங்களை சுலபமாகச் சொல்லிவிடலாம்.

வழமை போல் காலச்சுவடு, விகடன், திருமகள், வானதி, நாதம் கீதம், NCBH, பிறகு மேலும் ஒரு தமிழ்ப் பதிப்பகம். அவ்வளவு தான் தமிழில் மொத்தமே. NCBH சில கிழக்கு புத்தகங்கள் வைத்திருந்தார்கள் அத்தனையும் பழசு. மொத்தமே ஐந்து பத்து எண்களுக்குள் தான் இருக்கும். மற்றவர்கள் வராததற்கு காரணமாக கடந்த முறை விற்பனை மோசமாக இருந்ததைக் குறிப்பிட்டார்கள்.

நான் காலச்சுவட்டில் மட்டும் புத்தகங்களை தட்டிக் கொண்டுவிட்டு கொஞ்சம் புகைப்படம் எடுத்துவிட்டு நகர்ந்துவிட்டேன். நான் காலச்சுவட்டில் வாங்கிய புத்தகங்களை புத்தகப் பையில் அடுக்கிக் கொண்டிருந்த பொழுது, துப்பறியும் சாம்பு புத்தகம் கேட்டு காலச்சுவட்டில் வந்து நின்ற பெரியவர் வருத்தத்துடன் நகர்ந்தார். சுஜாதாவின் புத்தகங்கள் வாங்கவும் மக்கள் அலைந்தது தெரிந்தது. நான் 2004 டெல்லி புத்தகக் கண்காட்சியில் காலச்சுவட்டிடம் சுஜாதா, பாலகுமாரன் புத்தகமெல்லாம் எடுக்காம ஏன் சார் வர்றீங்க என்று கேட்ட நினைவு நிழலாடியது. நான்கு வருடங்களில் என்னிடம் தான் எத்தனை மாற்றம் என்று நினைத்தவாறு புத்தகங்களை மூட்டைக் கட்டிக் கொண்டு வந்து சேர்ந்தேன்.

மொத்தத்தில் பெங்களூர் புத்தகக் கண்காட்சியை இந்த முறை பதிப்பகங்கள் புறக்கணித்துவிட்டன என்றே சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

வாங்கிய புத்தகங்கள்

ஆத்மாநாம் படைப்புகள்
புனலும் மணலும்
ஜி. நாகராஜன் ஆக்கங்கள்
நினைவுப் பாதை - நகுலன்
சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை - ராஜமார்த்தாண்டன்
ஜி. நாகராஜன் - சுந்தராமசாமி நினைவோடை
தி. ஜானகிராமன் - சுந்தரராமசாமி நினைவோடை
சி.சு. செல்லப்பா - சுந்தரராமசாமி நினைவோடை
க.நா.சு - சுந்தரராமசாமி நினைவோடை
சொல்லில் அடங்காத வாழ்க்கை - காலச்சுவடு சிறுகதைகள்
நடந்தாய்; வாழி, காவேரி! சிட்டி - தி. ஜானகிராமன்
தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை - தமிழில் சுந்தர ராமசாமி
செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை - தமிழில் சுந்தர ராமசாமி
தூர்வை - சோ. தர்மன்
நிழல் முற்றம் - பெருமாள் முருகன்

சில புகைப்படங்கள்








Read More

Share Tweet Pin It +1

2 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

வாரணம் ஆயிரம்

வாரணம் ஆயிரம் படத்திற்கு நேற்று முன்பதிவு செய்யும் பொழுது வெறும் 2 சீட்டுகள் தான் மீதமிருந்தது. சூர்யாவிற்கும், காக்க காக்கவினால் கௌதம் மேனனுக்கும் நல்ல மவுசு பெங்களூரில் என்று நினைத்துக் கொண்டேன். இன்று காலையில் டிவிட்டரில் என் விருப்பமில்லாமல் கண்ணில் பட்டுவிட்ட, வாரணம் ஆயிரம் 'பச்சைக்கிளி முத்துச்சரம்'த்தைவிட கேவலம் என்ற ரிவ்யூ காண்டாக்கியது என்னவோ உண்மை. நானாய்ப் போய் பார்க்காமல் தானாய் வந்து விழுந்த இரண்டு வரி விமர்சனம் எரிச்சலைக் கிளப்பியது. அதனால் இரண்டு டிவிட்டு டிவிட்டி விட்டு ஓய்ந்தேன். என் நல்ல நண்பர் ஒருவருக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகயிருக்கிறது, அவர் அளித்த பேச்சுலர் பார்ட்டியில் இருந்து பாதியில் தப்பித்து வந்து 'வாரணம் ஆயிரம்' படம் பார்த்தேன்.

நிச்சயமாய் கௌதம் மேனனின் படம் போல் இல்லை தான், ஒரு காக்க காக்கவையோ, வேட்டையாடு விளையாடுவையோ நினைத்துக் கொண்டு வந்திருந்தால் படம் அப்படியில்லை. ஆனால் நான் ரசிக்கக் கூடிய அளவிற்கு படமிருந்தது. இதற்கு மேல் கதை ஆங்காங்கு தட்டுப்படலாம். அதனால் படம் பார்க்க நினைக்கிறவர்கள் இங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுவது நல்லது.

படம் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டு பின்னர் அசாதாரணமாக நகர்ந்தாலும் கடைசி வரையிலும் சாதாரண மனிதர்களையே தூக்கிப் பிடிப்பதால் பரவாயில்லை. நான் சொல்லவருவது அப்பா கேரக்டரை, இந்தக் கேரக்டரின் காதல் காட்சிகள் தவிர்த்து மற்றவைகள் பரவாயில்லை ரகம். சூர்யாவின் முதல் காதல் ஒவ்வொரு 'சிறுகதை ஆசிரியர்'ன் கனவிலும் வந்து போயிருக்கக்கூடிய ஐஸ்கிரீம் காதல், அந்தப் பெண் அழகாக இருக்கிறாள், அழகாக சிரிக்கிறாள், ரொம்ப நாள் கழித்து எனக்கு ஒரு சினிமா ஹீரோயின் பிடித்துப் போயிருக்கிறாள். இந்தப் பெண் நடித்த மற்ற படங்களைப் பார்க்க விரும்பவில்லை - மோகமுள் படத்தில் வரும் ஜமுனா கதாப்பாத்திரம் போல்.

அந்தப் பெண்ணின் ட்ரெஸ்ஸிங் செலக்ஷன் பிரம்மாதம், மொத்த படத்தின் காஸ்ட்யூமுமே தேர்ந்தெடுத்து செய்திருக்கிறார்கள் என்றாலும், இந்தக் கதாப்பாத்திரம் செதுக்கப்பட்டிருக்கிறது, உடல்மொழியின் வழி, ஆடைகளின் வழி எல்லாவற்றிலும்.

சூர்யா நிறைய உழைத்திருக்கிறார் நன்றாகத் தெரிகிறது, அதுவும் முதல் காதலின் பொழுது - அந்தப் பெண் தன் காதலைச் சொன்ன பிறகு, நல்ல முன்னேற்றம். சிக்ஸ் பேக்ஸ் காண்பிக்கிறார், ஆர்மி உடையில் கச்சிதமாகப் பொறுந்துகிறார். வயதான கெட்டப்பில் கொஞ்சம் மேக்கப் பிசிறு தட்டினாலும் 'தசாவதாரம்' அளவிற்கு இல்லை. உடம்பைக் குறுக்கி கண்களைக் குறுக்கி உடல் மொழியை மாற்றி நன்றாகச் செய்திருக்கிறார்.

படத்தில் கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாலும், கமர்ஷியலாக இந்தப் படம் பெயிலாகாமல் இருக்கச் செய்திருக்கிறார்கள் என்று தள்ளி வைத்துவிடலாம். நம் பக்கத்து வீட்டில் நடப்பதைப் பார்ப்பது போலவே இருக்கிறது.



ஒளிப்பதிவு எனக்குப் பிடிக்கவில்லை, ப்ரீஸ் செய்யும் பொழுது பிசிறு தட்டுவது தெரிகிறது என்ன பிரச்சனை? கௌதம் மேனனின் ரிச்னஸ் பாதி படத்தில் இல்லாமல் இருக்கிறது. ஒரு வேளை தெரிந்தே செய்தார்களா தெரியாது. இடையில் திருச்சி REC, மூகாம்பிகை கல்லூரி எல்லாம் வருகிறது; கொஞ்சம் போல் மனசு குறுகுறுத்தது.

மூன்று மணி நேர படத்தை கொஞ்சம் தட்டியிருக்கலாம், முதல் நாள் என்பதால் ஓட்டினார்களாயிருக்கும். நாளையிலிருந்து ஆப்பரேட்டர் கைவைத்துவிடுவார். ஆனால் கொஞ்சம் அலுப்பாய் இருந்தாலும், எப்படா இண்டர்வெல் விடுவார்கள், எப்படா முடிப்பார்கள் என்று இருந்தாலும் இந்த முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும். நல்ல டிரை.

இந்தப் படத்தின் ஏதோ ஒரு பகுதியில் நீங்கள் உங்களை உணர்வீர்கள், எனக்கு அது போல் நிறைய இருந்தது. உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சூர்யாவையும், கௌதமையும் பிடிக்குமென்றால் நிச்சயம் பார்க்கலாம்.

Credits - For Photos

Read More

Share Tweet Pin It +1

21 Comments

In Only ஜொள்ளூஸ்

Bond கேர்ள்-உம் பொல்லாத இருத்தலியமும்



நேற்று Quantum of Solace படத்திற்குச் சென்றிருந்தேன், இரண்டு வருடங்களுக்கு முன் நான் தற்சமயம் வேலை செய்யும் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த அன்று ரிலீஸாகியிருந்த - Casino Royale பார்த்த நினைவு; இரண்டு வருடம் ஆகிவிட்டது.

அதிரடி ஆக்‌ஷன் பட ஆர்வலர்களுக்கான படம் - அவ்வளவு தான். எனக்குப் பிடித்திருந்தது.

Hi-fi கார்களின் பயணம் செய்யும் பாண்ட், ஓட்டை அம்பாஸிட்டர் வகையறா கார்களிலும், BMTCயை விடவும் கேவலமான பஸ்ஸில் பயணம் செய்திருப்பதும் ஆச்சர்யமான விஷயம். ஹீரோயினிக்காக இன்னொரு முறை படம் பார்க்க உத்தேசம்.

மேலிருக்கும் பாண்ட் கேர்ள் படம் இங்கிருந்து சுடப்பட்டது, மேலும் படங்களுக்கும் க்ளிக்கலாம். தாராளமாய். ரொம்பக் காலம் கழித்து ஒரு வீக் எண்ட் ஜொள்ளு பதிவு.

இதுவயது வந்தவர்களுக்கு மட்டும்

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In Only ஜல்லிஸ்

கேர்ள் ஃப்ரண்ட் தேவையா

முதலில் ஒரு டிஸ்க்ளெம்பர், இது எந்தப் பதிவிற்கு பதில் சொல்லும் விதமாய் எழுதப்பட்ட பதிவில்லை; நல்ல ஒரு நாளில் இந்த விதமான எண்ணம் கொண்ட ஒரு பதிவெழுத முடிந்ததற்கு வேண்டுமானால் அந்தப் பதிவிற்கு நன்றிகள். நேரடியாய் விஷயத்திற்கு வருகிறேன்.

என்னிடம் கூகுளில் சாட்டிக் கொண்டிருக்கும் நண்பர்கள் அடிக்கடி சொல்வார்கள். முதலில் உன்கிட்ட இருக்கும் ஈகோ போனால் தான் உனக்கு பெண் நண்பர்கள் கிடைப்பார்கள் என்று. சொல்லப்போனால் இது நான் புலம்பியோ(எனக்கு கேர்ள் ப்ரண்டேயில்லை) இல்லை அவர்களிடம் அட்வைஸ் கேட்டோ(கேர்ள் ப்ரண்டு எப்படிங்க கிடைப்பாங்க) கிடைத்த அட்வைஸ் கிடையாது. சரி போவுதுன்னு கிட்ட நெருங்கி அது என்னய்யா ஈகோ என்று கேட்டால் சொல்கிறார்கள்,

"வேறொன்னுமில்லை, ஏற்கனவே இதயத்தைக் கேட்டு வேலைசெய்ய ரஜினி இருக்காரு நான் மெலெருக்கிறதைக் கேட்டு வேலை செய்வேன்னு சொல்றியே! அதுதான் பிரச்சனை."

"அப்ப மேலிருக்கிறதை நம்பி வேலை பார்த்தால் கேர்ள் பிரண்டு கிடைக்க மாட்டாங்களா?"

"யோவ் மேலிருக்கிறதை நம்பினா, நீ முட்டாளை முட்டாள்னு சொல்லணும், அழகில்லாததை அழகில்லைன்னு சொல்லணும், பிடிக்காததை பிடிக்கலைன்னு சொல்லணும், நல்லாயில்லாததை நல்லாயில்லைன்னு சொல்லணும் இல்லையா?"

"ஆமாம் அதுக்கென்ன..."

"அதனால் தான் உனக்கு கேர்ள் பிரண்டு கிடைக்க மாட்டேங்குது."

இப்படிப்பட்ட பதில் வரும் ஒவ்வொரு சமயமும் நான் ஒரு விஷயம் சொல்லுவேன்.

"இங்கப்பாருங்கய்யா அதெல்லாம் கிடையாது, எல்லாம் நம்ம லுக்கு தான் காரணம். இந்த மொகரக்கட்டையைப் பார்த்தா எந்த பிகரு பிரண்டாகும். இருக்குற நாலு முடியும் கொட்டுறதுக்குள்ள கல்யாணம் பண்ணி வைச்சிடுங்கன்னு சொன்னா(அவரு எனக்கு ஒரு விதத்தில் உறவினர்) அதைக் கேட்காம கேர்ள் பிரண்டு புடின்னு சொன்னா எப்படி"

"இங்கத்தான் நீ தப்பு பண்ணுற, பொண்ணுங்களை தப்பா எடை போடுற. பொண்ணுங்க உன் தலையில் எத்தனை முடியிருக்குன்னு கணக்கு போட்டு பிரண்டாவதில்லை; மூளை இருக்கா இல்லையா அப்படிங்கிறத கணக்குப் போட்டுத்தான் பிரண்டாவாங்க."

"அப்படின்னா?"

"மூளை இல்லைன்னா ஓக்கே இருந்தா ரிஜக்டட். அதுவுமில்லாமல் நீ பேச ஆரம்பிச்சா கேப்பே விடாம பேசிக்கிட்டேயிருப்ப; அப்புறம் உன்கூட பொண்ணுங்க எப்படி சிநேகிதமாகும். சொல்லு. ஏன்னா இது ஒரு வழிப்பாதை மாதிரி பொண்ணுங்க பேசுவாங்க நீ பேசக்கூடாது, அவங்க கேள்வி கேட்பாங்க நீ பதில் சொல்லக்கூடாது.

அதுவும் அவங்க செஞ்ச எதையாவது ஒன்னை காண்பிச்சு நல்லாயிருக்கான்னு கேட்டா; அதைப் புகழந்து அரைமணிநேரம் பேசணும். நீயோ குத்தம் குறையெல்லாம் சொல்லிட்டு கடைசியில் இத்தனையிருந்தாலும் உங்க பதிவு நல்லாயிருக்குன்னு அடிக்கிற ஜல்லியெல்லாம் அங்க நடக்காது."

"அப்ப இன்டலக்சுவல் ப்ரண்ட்ஷிப் அப்படிங்கிறதே இல்லையா?"

"யோவ் நீ உதை வாங்கப்போற - பொண்ணுங்கக்கிட்ட இன்டலக்சுவலா பேசின அப்புறம் அவ்வளவுதான். கனவுலகத்திலேயே இருக்காதய்யா வெளிய வா! பறந்து விரிந்திருக்கும் இந்த உலகத்தைப் பார். எவ்ளோ பொண்ணுங்க இருக்கு உனக்கு ஏன் ஒரு கேர்ள் பிரண்ட் இல்லைன்னு யோசிச்சுப் பார்."

"சரி இவ்வளவும் செய்றேன்னே வைச்சுப்போம் அதனால எனக்கு என்ன யூஸ்"

"ஆரம்பிச்சிட்டான்யா? உனக்கு கேர்ள் பிரண்டிறது முள் கீரீடமாயிருந்தாலும். வெளியில் இருந்து பார்க்கிறவனுக்கு அது மலர்க்கிரீடம். அதுவும் கொஞ்சம் அழகான ஸ்டைலான பிகர் மாட்டிக்கிச்சுன்னு வையேன். 'யோவ் இவனுக்கு வந்த வாழ்வைப் பாருய்யான்னு' பொழம்புவாங்கய் பாரு. அப்ப கிடைக்கிற திருப்தி 'உங்களோட அந்தக் கதையைப் படிச்சேன். ச்ச எப்படிங்க அப்பிடி எழுதினீங்க சான்ஸேயில்லை.' அப்படின்னு சொல்றதை விடவும் அதிகமாகயிருக்கும். ஏன்னா 'நீங்க எழுதின கதையிலேயே அது ஒன்னு தான் தேறிச்சு' அப்படிங்கிற உள்குத்து அதில் இருக்கும். ஆனால் உள்குத்தே இல்லாமல் பொறாமைப் படவைக்கும் கேர்ள் பிரண்ட் இருந்தால்."

"அப்ப கேர்ள் பிரண்ட் வைச்சுக்கிறது மத்தவனை பொறாமப் பட வைக்கத்தானா?"

"இல்லையா பின்ன, எப்படியிருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கப்போறதில்லை. நைனா கழுத்தில் அருவா வைச்சிடுவார் இல்லையா. அதுவுமில்லாமல் கேர்ள் பிரண்ட்களை கல்யாணம் செஞ்சிக்கக்கூடாது. இல்லேன்னா கல்யாணத்துக்கப்புறம் டாமினேட் செய்ய முடியாது பாரு."

"ஆனாலும் இதெல்லாம் மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துன கதையா இல்ல ஆய்டும் போலிருக்கு?"

"இங்கப்பாரு இந்த மூட்டைப் பூச்சி வீட்டைக் கொழுத்துறது மாதிரி விஷயத்தை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டுட்டு கேர்ள் பிரண்டு பிடிக்கிற வழியைப்பாரு."

இப்படியெல்லாம் நண்பர்கள் அட்வைஸ் ஆயிரம் கொடுத்தாலும், நம்ம மூளை ஒத்துக்கவே மாட்டேங்குது. எனக்குத் தெரிந்து என்னுடன் சாட்டும் நண்பர்கள் அனைவருமே எனக்கு கேர்ள் பிரண்ட் கிடைக்காததற்கு ஆயிரம் காரணங்கள் இன்னமும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ;)

Read More

Share Tweet Pin It +1

21 Comments

Popular Posts