In ஆண்டாள் சுஜாதா போர்னோ

கணையாழி கடைசிபக்கங்கள்

ஒரு வாரத்திற்கு முன்பு சமீபத்தில் ஆர்டர் செய்திருந்த பதின்மூன்று புத்தகங்கள் வந்து சேர்ந்திருந்தன. பெரும்பாலும் பொதுபுத்தி புத்தகங்கள் வீட்டு மக்களுக்காக, மனுஷங்க படிக்கிற புக்கெல்லாம் நீ வாங்கவே மாட்டியா என்ற கேள்விக்காகவே வாங்க வேண்டாமென்று நினைத்தேன். அதில் கணையாழி கடைசிபக்கங்களும் ஒன்று. புத்தகக்கண்காட்சியிலேயே வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். நான் சென்றிருந்த அன்று வரவில்லை.



என்ன சொல்வது இந்தப் புத்தகத்தைப் பற்றி, கற்றதும் பெற்றதுமின் ஓல்ட் வெர்ஷன். பொதுமக்களுக்காக இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம்(சில ஆயிரங்கள்) கணையாழி வாசகர்களுக்காக எழுதியதால் கற்றதும் பெற்றதுமைவிட நன்றாகவே வந்திருக்கிறது. மற்றபடிக்கு, சுயபுலம்பல்கள், நேம் டிராப்பிங்கள், ரோடே போடும் அளவிற்கு திறமையிருந்தாலும் ஜல்லியடித்திருப்பது என கற்றதும் பெற்றதுமின் பல விஷயங்களை முன்நாட்களிலேயே செய்திருக்கிறார் சுஜாதா கணையாழி கடைசி பக்கங்களில்.

"சொந்த தங்கையை ஒப்படைக்கலாம் போன்ற என் மூஞ்சியைப் பார்த்துவிட்டு...", "ஜப்பானிய பத்திரிகைகள் எல்லாமே கணையாழி போல. கடைசிப் பக்கத்திலிருந்து படிக்கிறார்கள்...", "'எழுதினால் பிரசுரிக்க ஆள் இருக்கிறது என்று எதையும் எழுதும்' சலுகை, கடிதம் எழுதினவருக்கும் கிடைத்திருப்பதால் புன்னகையுடன் மன்னிப்போம்"

போன்ற உதாரணங்கள் எல்லாம் போதும் என்று நினைக்கிறேன்.

மனிதர் கருணாநிதியில் ஆரம்பித்து, கமலஹாசன், ராஜிவ்காந்தி என்று பெயர்களை நீளமாக அடுக்குகிறார். கூடவே,

"...இந்தத் தரமான வாசகர் கூட்டத்தைக் கொச்சைப்படுத்தாதே என்று ஆதவன் கோபப்பட...", "...இந்திரா பார்த்தசாரதி கிரிக்கெட் ஸ்கோர் என்ன என்று கேட்டார்...", "...என்.எஸ்.ஜே. எனக்கு விஷன் இருக்கிறதா என்று கேட்டார்...", "...வாசந்தி கணேஷ் வசந்த் கதை கணையாழிக்கு எழுதுவீர்களா? என்றார்..."

பெயர்கள், பெயர்கள் மீண்டும் பெயர்கள். மற்றும் நக்கலாக கடைசி நிறுத்தற்குறி வேறு, "...நண்பர் ஜெயராமன் தன் ஒரு வயது பையனுக்கு 'தோபார்ளு இன்டலக்சுவல்' என்று வேடிக்கை காட்ட(ம்) கூட்டம் தொடர்ந்தது..."


மற்றபடிக்கு, அதே பக்கத்தில் இருக்கும்

"...ஒரு இரண்டாயிரம் இன்டலெக்சுவல் வாசகர்களுக்கா, லட்சக்கணக்கான சாதாரண வாசகர்களுக்கா எழுதுகிறான்..."

"'நீ பிரபலமாயிருக்கிறாய், அதனால் உன்னால் இலக்கியம் படைக்க முடியாது.' இப்படிச் சிந்தாந்தத்தை நான் அடிக்கடி சந்தித்துவிட்டேன்."

"...இந்தத் தருணத்தில் சாகாத இலக்கியம் படைக்கப்போகிறேன் என்று கெடிகாரத்தை பார்த்துக் கொண்டு எழுத முடியாது..."

போன்றவைகள் யோசிக்க வைக்கின்றன.

இடையில் Erica Jong ன் The Teacher.

The Teacher stands before the class.
She's talking of Chaucer.
But the students arent hungry for Chaucer.
They want to devour her.
They are eating her knees, her toes, her breasts, her eyes and spitting out her words
What do they want with words?
They want a real lesson.

She is naked before them.
Psalms are written on her thighs.
When she walks sonnets divde
Into octaves & sestets.
Couplets fall into place
When her fingers nervously toy
With the chalks…

Eat this poem.

சுஜாதா எழுதிய ஒரு சைனீஸ் கவிதை

மன்னாரு மெதுவாக வந்து சேர்ந்தான்
மணி பார்த்தான், உட்கார்ந்தான், படுத்துக் கொண்டான்
சென்னை விட்டுத் திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தில் கடந்து செல்லும்.

டைம் பத்திரிகையில் வந்த ஒரு வாசகம் தன்னைக் கவர்ந்ததாகச் சொல்கிறார் படித்துப் பார்த்தால் கொஞ்ச நாள் கழித்து தான் உல்டா செய்த அதே வாக்கியம்,

In the future everybody will be famous for at least fifteen minutes.

"தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன" மனிதர் நிறைய தேடியிருக்கிறார். கண்டும் பிடித்திருக்கிறார்.

"தமிழில் ஆதியிலிருந்தே பார்த்தால் சங்கப்பாடல்கள் செக்ஸ் உணர்ச்சியற்று இருக்கின்றன. சில களவுப்பாடல்களில் உள்ள கலவையைப் பதம் பிரிப்பதற்குள் உயிர் போய் விடுகிறது. திருக்குறளில் காமத்துப்பாலில் உண்மையான காமம் கொஞ்சமே. மற்றவை பெருமூச்சுக்கள், ஊடல், வளை கழல்வது இன்ன பிறவே. தமிழில் ஏகமாகப் பரவிக் கிடக்கிற காவியங்களிலும் பிரபந்தங்களிலும் அவ்வப்போது தோன்றும் பெண்கள் யாவரும்(out of proportion) கொங்கைகளில் ஈர்க்கிடை போகாதாம். இல்லையென்றால் மலைக்குன்றுகளாம். இடை இல்லவே இல்லையாம்(உலோபியின் தருமம்) சமாளிக்கச் சிரமமான பரிமாணங்கள். அருணகிரிநாதர் சில சமயங்களில் Pure Porno.

அருக்கு மங்கையர் மலரடி வருடியும்
கருத்தறிந்து பின் அரைதனில் உடைதனை
அவிழத்தும் அங்குள...
மேலே 'திருப்புகழில்' தேடிக்கொள்ளவும்."

என்று போட்டிருக்கிறது, தேவைப்படுபவர்கள் தேடிக்கொள்ளவும் கண்டுபிடித்தவர்கள் ஒரு பின்னூட்டம் போடவும்.

சரி மனுஷன் சுத்திச் சுத்தி இலக்கியத்தில மாரைத்தான் தேடுறாருன்னு நினைச்சிக்கிட்டே அடுத்த பக்கத்தைத் திருப்பினால். நான் நினைத்ததை ஒரு முப்பத்திரண்டு வருஷத்துக்கு முன்னாடியே கேட்டது மாதிரி அடுத்தப் பக்கத்தில் விளக்கம் தருகிறார்.

"தமிழ் இலக்கியத்தில் போர்னோ என்று நான் தேடுவது முலைகளைப் பற்றிய பாடல்களை இல்லை. ஐம்பெரும்காப்பியங்களிலும் அகத்திலும், புறத்திலும் ஆழ்வார்களிலும் குங்குமம் கழுவின கொங்கைகளுக்குப் பஞ்சமே இல்லை என்பது எனக்குத் தெரியும் நான் தேடுவது இன்னும் கொஞ்சம் Subtle ஆன விஷயம். ஆழ்வார் பாடலிலிருந்தே உதாரணம் சொல்கிறேன்.

'மையார் கண் மடலாச்சியார் மக்களை
மையன்மை செய்து அவர் பின்போய்
கோய்யார் பூந்துகில் பற்றித் தனிநின்று
குற்றம் பலபல செய்தாய்'



என்பது ஆண்டாள் பாடல்களை விட Better Porno."

ஏன் அந்த மாரைப் பற்றிய சந்தேகம் வந்ததுன்னா, தமிழ் சிபியில் முலைகளைப் பற்றிய ஒரு இலக்கியக் கட்டுரை நான் படித்த ஞாபகம் இருக்கிறது அதனால் தான் இதைப் போயா தேடினார்னு நினைச்சேன். ம்ம்ம் மனுஷன் பெரிய ஆள்தான்.

"இந்த நூற்றாண்டின் தமிழ் எழுத்திலும் அதிகம், போர்னோ கிடையாது. பாரதியார் இதைத் தொடவில்லை. பாரதிதாசனின் ஓடைக் குளிர் மலர்ப் பார்வைகள் தான் உண்ணத் தலைப்பட்டன. உடல்கள் இல்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா, போன்றவர்கள் தலைவைத்துப் பார்க்கவில்லை. ஏன் புதுக்கவிஞர்களும் புது எழுத்தார்களும் கூட இந்த விஷயத்தில் ஜகா வாங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடனின் காமரூபம் சற்று வேறு ஜாதி. எடுத்துக்கொண்ட செக்ஸை நேராகச் சொல்வதில் எல்லோருக்குமே தயக்கம் இருந்திருக்கிறது. மார்பகம் விம்மித் தணியும், அதற்கப்புறம் என்னடா என்றால் இருவரும் இருளில் மறைந்தார்கள்? ஏன் மறைய வேண்டும்?"

என்னமோ இப்படி ஆரம்பித்து இப்படியே போய்க்கொண்டிருக்கிறது. சரி போதும் கடைசியாக இதைப்பற்றி,

"கற்றதனாலாய பயனென்கொல் கற்றவனைக்
கட்டி அணைக்கா விடின்" இது என் ஜல்லி கிடையாது, தக்ஷினாமூர்த்தி 'திவ்ய தரிசனம்' இல் எழுதியதாக சுஜாதா சொன்னது.

மற்றபடிக்கு, நிறைய திரைப்படங்களை அறிமுகப்படுத்துகிறார், அதற்கு மொழி பாகுபாடு கிடையாது. கன்னடா, மலையாளம், தெலுகு, ஒரியா, குஜராத்தி என நீள்கிறது அந்த வரிசை. ஜப்பானுக்கு சென்று வந்ததைப் பற்றி, பாரதியின் சுயசரிதைக் கவிதை பற்றி, Aஹுக்கூவை ஸ்கேலால் அளப்பது பற்றி, மணிப்பிரவாளப் பேச்சைப்பற்றி இப்படி நிறைய விஷயங்கள்.

நிச்சயமாய் முப்பதாண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததை சுஜாதாவின் கண்கொண்டு நிச்சயமாய்ப் பார்க்கலாம் இந்த கணையாழி கடைசிபக்கங்களில். சுவாரஸியமாய் இருந்தது. எனக்கு. சுஜாதாவின் பேமஸான நக்கல் மொழியுடனும், ஒரு ஹைக்கூ மற்றும் ஒரு பசுவய்யா(சுரா) கவிதையுடனும் முடிக்கிறேன்.

"ஜப்பானில் பத்து நாட்கள் தங்கிவிட்டு சென்னை வந்த போது கஸ்டம்ஸ் அதிகாரிகளையும், எண்ணெய் போடாமல் முனகும் ஏர்போர்ட் கன்வேயரையும் பார்த்த பொழுது 'திரும்ப ஜப்பான் போகலாமா?' என்று எனக்குத் தோன்றவில்லை. காரணம் ஜப்பானில் ஜப்பானியர்களால் தான் இருக்க முடியும். இந்திய தேசத்தில் சுபிட்சம், சந்தோஷம் இவற்றுக்கெல்லாம் அர்த்தம் வேறு.

எந்த நாட்டில் மாதம் முப்பது ரூபாய்க்கு வேலைக்காரச் சிறுவன் கிடைப்பான்?

எந்த நாட்டில் நினைத்த மாத்திரத்தில் சுவர்களில் சுதந்திரமாக எழுத முடியும் நம்பர் ஒன் போகமுடியும்?

எந்த நாட்டில் லஞ்சத்தால் பெருமாளையே வாங்க முடியும்?

மேரா பாரத் மஹான்."

சில ஹைக்கூகள்.

மூங்கில் நிழல் இரவெல்லாம்
மாடிப்படி பெருக்கிற்று
தூசுகள் அகலவில்லை

மரியாதை செலுத்த விரும்பும்பொழுது
பெற்றோர்
இறந்து விட்டனர்

கூந்தல் போர்த்த உடல்
நெய்யும் தறியில்
காஞ்சிப் பட்டு

-----------------

பசுவய்யா கவிதை

வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிந்தது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல
ஆயுளின் கடைசித் தேசல் போல
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என்
முதுமை...
பின்னும் உயிர்வாழும் கானல்...

Related Articles

7 comments:

  1. தாசு,விரிவான புத்தக அறிமுகத்துக்கு நன்னி நான் வாங்க ஆவலுடன் காத்திருக்கிற புத்தகமய்யா இது. யோசித்துப் பார்த்தால் இப்ப
    நாம் பதிவுன்னு தோணுகிறத எழுதுகிறோம் பாருங்க, அதுப் போல சுஜாதா பீக்குல இருந்த சமயம்,
    ஆவி, குமுதம், குங்கும்ம், சாவி, இதயம் பேசுகிறது, ராணி என்று அனைத்திலும் எழுதிக்
    கொண்டிருந்த நேரம். வணிக பத்திரிக்கையில் எழுதி நாலு காசுப் பார்த்தாலும் கட்டுப்பாடு
    இல்லாத சுதந்திரத்தை, தோணியதை எழுத கணியாழியின் கடைசி பக்கத்தில் எழுதி தீர்த்துக் கொண்டார் போல :-)
    ஆனா, என்னைப் போன்ற சாதாரண வாசகர்களுக்கு கவிதை, கவிஞர்கள், உலக சினிமா என்று பல விஷயங்களை அறிமுகப்படுத்தியது சுஜாதாதான்.

    ReplyDelete
  2. அதெல்லாம் இருக்கட்டும் தலை. ஒவ்வொரு தடவை ஆஸ்திரேலியா மண் கவ்வும்போதும் உம்ம நாடி தாங்குற முகம் மட்டுமே மன்சுல நிக்குதே ஏன்? :-)

    இந்தப்பதிவுக்கும் இதுக்கும் என்னவே சம்பந்தம்னு கேக்கலாம். நான் அடிக்க இருந்த ஜல்லியை நீரு அடிச்சுட்டீருங்குற கோபம்தான். இருந்தாலும் இதே புத்தகத்தை வேறமாதிரி வாசிச்சு தமிழ்மணத்தை மணக்க செஞ்சுடலாம். :-)

    சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  3. //ஆஸ்திரேலியா மண் கவ்வும்போதும் உம்ம நாடி தாங்குற முகம் மட்டுமே மன்சுல நிக்குதே ஏன்?//

    ஓய் மனசே சரியில்லைதான், ஆனாலும் இது உண்மையான ஆஸ்திரேலியா டீமே கிடையாது.

    எல்லாருக்கும் ரெஸ்ட் கொடுத்துருக்காங்க வேர்ல்ட் கப் ஜெயிக்கிறதுக்கு. (அப்படின்னு நானே மனசைத் தேத்திக்கிறேன் போங்க).

    ReplyDelete
  4. உஷா நான் வாங்கினது உயிர்மை வெளியீடு புத்தகம் இல்லை. வேற வர்ஷன்.

    இரண்டு புக்கிற்கும் கண்டெண்ட் அளவில் 25% வேறுபாடு இருக்கிறதா தெரியவந்தா நிச்சயம் அந்தப் புத்தகத்தையும் வாங்குவேன்.

    //ஆனா, என்னைப் போன்ற சாதாரண வாசகர்களுக்கு கவிதை, கவிஞர்கள், உலக சினிமா என்று பல விஷயங்களை அறிமுகப்படுத்தியது சுஜாதாதான்.//

    இன்னமும் எங்கள் பக்கத்தில் ஆனந்தவிகடன் படிக்கிறது, சுஜாதா படிக்கிறது, பாலகுமாரன் படிக்கிறதென்பதெல்லாம் பெருமையான விஷயங்கள்.

    ReplyDelete
  5. //இருந்தாலும் இதே புத்தகத்தை வேறமாதிரி வாசிச்சு தமிழ்மணத்தை மணக்க செஞ்சுடலாம். :-)//

    ஆசிப், இந்தப் புத்தகத்தை வேறுவிதமா வாசிக்கணும் என்று இல்லை சாதாரணமா வாசிச்சாலே நான் தொட்ட விஷயங்களை தள்ளிவிட்டுப் போட ஆயிரம் விஷயங்கள் தேறும்.

    என்னமோ இப்பல்லாம் காமம்/காதல் விஷயங்களில் ஆர்வம் பொங்கிவழியுது. ஹிஹி.

    ReplyDelete
  6. //ஓய் மனசே சரியில்லைதான், ஆனாலும் இது உண்மையான ஆஸ்திரேலியா டீமே கிடையாது//

    இப்படித்தான் சொல்லுவீருன்னு எனக்கு நல்லாவே தெரியும்வே :-)


    //என்னமோ இப்பல்லாம் காமம்/காதல் விஷயங்களில் ஆர்வம் பொங்கிவழியுது. ஹிஹி.//

    வ்யசாகிட்டு போவுதுன்னு அர்த்தம்வே :-)நான் உயிர்மை பதிப்பகத்துல வாங்கி சூடா படிச்சு கவிமடத்துல சுஜாதான்னு பதிவும் போட்டுட்டேன்.

    சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  7. அருக்கு மங்கையர் மலரடி வருடியெ
    கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை
    அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் ...... இருதோளுற்

    றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ
    உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட
    அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென ...... மிகவாய்விட்

    டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய
    சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்
    உறக்கை யின்கனி நிகரென இலகிய ...... முலைமேல்வீழ்ந்

    துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு
    பெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வற
    உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது ...... தவிர்வேனோ

    இருக்கு மந்திரம் எழுவகை முநிபெற
    உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
    இதத்த இங்கிதம் இலகிய அறுமுக ...... எழில்வேளென்

    றிலக்க ணங்களும் இயலிசை களுமிக
    விரிக்கும் அம்பல மதுரித கவிதனை
    இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை ...... புனைவோனே

    செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற
    நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
    திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய ...... குருநாதர்

    திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு
    குருக்க ளின்திற மெனவரு பெரியவ
    திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.

    ReplyDelete

Popular Posts