In டெம்ப்ளேட் ப்ளாக்கர் தீம் ஜாவா ஸ்கிரிப்ட்

ப்ளாக்கிற்கு புது சட்டை உடுத்தின கதை



வெப்சைட் ஒன்றில் இருந்து திருடி(விளக்கமாக சொல்கிறேன்) என் ப்ளாக்கிற்கு புது சட்டை மாட்டினேன். பிரச்சனை அதுவல்ல. புதுச்சட்டை என் ப்ரொக்கிராமர் ஈகோவைத் தொட்டது.

தீம்/டெம்ப்ளேட் இது தான்.

சட்டையை மாட்டிவிட்டு பின்னர் திருத்தங்களைச் செய்து கொண்டிருந்தேன்.(இன்னமும் முடிந்தபாடில்லை). அங்கெல்லாம் பிரச்சனையில்லை, பின்னர் சட்டையின் அடியில் பார்க்கும் பொழுது தான் பிரச்சனை வந்தது, ப்ளாக்கர் டெம்ப்ளேட் தீம் கொடுத்தவன் பெயரில், அதாவது ஃபுட்டரில். 

© 2016Mohandoss. Designed With By Free Blogger Templates

இது தான் மொத்தப் பிரச்சனை, ப்ரொக்ராம் செய்ய ஆரம்பித்திருக்கும் வாண்டுகளைக் கேட்டால் கூட சொல்லும் இதை நீக்குவது பிரச்சனையாய் இருக்காது என்று. அங்கே தான் அந்த ஈகோ டச்சிங் மேட்டர் நடந்தது. 

சுலபமாய் அதை நீக்க முடியவில்லை. 

ஒரு சின்ன டிவ்,


அவ்வளவு தான் மேட்டர், திரும்பவும் வாண்டு பிரச்சனை, அந்த டிவ்வில் இருந்த டெக்ஸ்டை மாற்றினால் சரியாகிவிடும் என்று நினைத்தால் அதுவும் இல்லை. சரி டிவ்வையே மொத்தமாக தூக்கிவிடலாம் என்ற முன்யோசனையின்றி நினைத்த பொழுது தான் பிரச்சனை பூதாகரமானது. டெம்ப்ளேட்/தீம்-ஐ உபயோகிக்க முடியாமல் அந்த டிவ்வை நீக்கியது. என் பதிவு நேராய் அந்த டெம்ப்ளேட் டிசைன் செய்தவர் பதிவுக்குச் சென்றது. 

அப்படியும் முட்டி மோதி சரி ஜாவாஸ்க்ரிப்ட் வைத்துத்தான ஜாலம் காட்டுறீர், வாரும் பிள்ளாய் என்று மொத்த ஜாவாஸ்கிரிப்டையும் நீக்கினேன். எனக்கு தேவையான மாதிரி ஃபுட்டர் வந்தாலும் இந்தச் சட்டையில் நான் ரசித்த விஷயங்கள் இல்லாமல் போனது. அதற்குக் காரணம் நான் மொத்தமாய் எல்லாம் ஜாவாஸ்க்ரிப்டையும் நீக்கியிருந்தது. 

நான் அடைந்த கோபத்தை சொல்லித் தீர்க்கமுடியாது. சரி ஃபுட்டர் தானே ஒரு லைன், நம்ம ப்ளாக்கையே படிக்கமாட்டாங்க ஃபுட்டரையா மதிக்கப்போறாங்கன்னு விட்டிருக்கலாம் தான் ஆனால் ஈகோ விட்டுக்கொடுக்க விடலை. வக்காலி இருங்கடா வர்றேன் என்று ஜாவா ஸ்கிரிப்டை திரும்பவும் நுழைத்து என்ன எழவுதான் எழுதியிருக்கிறான்கள் என்று பார்த்தால். அங்க இருந்தது இன்னொரு டிவிஸ்ட். 

நேரடியான ஆங்கிலத்தில் எழுதாமல் எல்லாவற்றையும் ஹெக்ஸாடெஸிமலில் எழுதியிருந்தார்க்கள். அதாவது இப்படி,

var _0xd162=["\x73","\x72\x65\x70\x6C\x61\x63\x65","\x73\x72\x63","\x61\x74\x74\x72","\x77\x69\x64\x74\x68","\x68\x65\x69\x67\x68\x74","\x65\x61\x63\x68","\x69\x6D\x67","\x66\x69\x6E\x64","\x2E\x61\x76\x61\x74\x61\x72\x2D\x69\x6D\x61\x67\x65\x2D\x63\x6F\x6E\x74\x61\x69\x6E\x65\x72","\x72\x65\x61\x64\x79","\x6F\x6E\x6C\x6F\x61\x64","\x74\x65\x6D\x70\x6C\x61\x74\x65\x63\x6C\x75\x65","\x67\x65\x74\x45\x6C\x65\x6D\x65\x6E\x74\x42\x79\x49\x64","\x68\x72\x65\x66","\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E","\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x77\x77\x77\x2E\x74\x65\x6D\x70\x6C\x61\x74\x65\x63\x6C\x75\x65\x2E\x63\x6F\x6D\x2F","\x73\x65\x74\x41\x74\x74\x72\x69\x62\x75\x74\x65","\x72\x65\x66","\x64\x6F\x66\x6F\x6C\x6C\x6F\x77","\x74\x69\x74\x6C\x65","\x46\x72\x65\x65\x20\x42\x6C\x6F\x67\x67\x65\x72\x20\x54\x65\x6D\x70\x6C\x61\x74\x65\x73","\x73\x74\x79\x6C\x65","\x64\x69\x73\x70\x6C\x61\x79\x3A\x20\x69\x6E\x6C\x69\x6E\x65\x2D\x62\x6C\x6F\x63\x6B\x21\x69\x6D\x70\x6F\x72\x74\x61\x6E\x74\x3B\x20\x66\x6F\x6E\x74\x2D\x73\x69\x7A\x65\x3A\x20\x69\x6E\x68\x65\x72\x69\x74\x21\x69\x6D\x70\x6F\x72\x74\x61\x6E\x74\x3B\x20\x63\x6F\x6C\x6F\x72\x3A\x20\x23\x34\x32\x34\x32\x34\x33\x21\x69\x6D\x70\x6F\x72\x74\x61\x6E\x74\x3B\x20\x76\x69\x73\x69\x62\x69\x6C\x69\x74\x79\x3A\x20\x76\x69\x73\x69\x62\x6C\x65\x21\x69\x6D\x70\x6F\x72\x74\x61\x6E\x74\x3B\x20\x6F\x70\x61\x63\x69\x74\x79\x3A\x20\x31\x21\x69\x6D\x70\x6F\x72\x74\x61\x6E\x74\x3B","\x69\x6E\x6E\x65\x72\x48\x54\x4D\x4C","\x6C\x65\x6E\x67\x74\x68","\x23\x74\x65\x6D\x70\x6C\x61\x74\x65\x63\x6C\x75\x65\x3A\x76\x69\x73\x69\x62\x6C\x65"]

முதலில் இது என்ன எழவு என்று புரிய கொஞ்ச நேரம் ஆனது. பின்னர் புரிந்ததும், நான் இதை இப்படி மாற்றி, வைத்துக்கொண்டேன். 

var _0xd162=["length","random","floor","entry","feed","
","write","$t","title","term","category","link","rel","alternate","href","replies","type","text/html"," ","split","content","summary","...","published","",","","","","onload","templateclue","getElementById","location","http://www.templateclue.com/","setAttribute","ref","dofollow","Free Blogger Templates","style","display: inline-block!important; font-size: inherit!important; color: #424243!important; visibility: visible!important; opacity: 1!important;","innerHTML","#templateclue:visible"]

இடைப்பட்ட காலத்தில் மொத்தப் பிரச்சனைக்கும் காரணம் டிவ்வில் இருந்த, templateclue இந்த ஐடி தான் காரணம் என்பதை உணர்ந்திருந்தேன். பின்னர் இந்த வேரியபிள்களை என்னதான் செய்யறான்கள் என்று பார்த்தால், அதையும் நேரடியாக உபயோக்கிவில்லை பின்னர் அதை இன்னொரு வேரியபிளுக்கு மாற்றி,

_0x1580[0],_0x1580[1],_0x1580[2],_0x1580[3],_0x1580[4],_0x1580[5],_0x1580[6],_0x1580[7],_0x1580[8],_0x1580[9],_0x1580[10],_0x1580[11],_0x1580[12],_0x1580[13],_0x1580[14],_0x1580[15],_0x1580[16],_0x1580[17],_0x1580[18],_0x1580[19],_0x1580[20],_0x1580[21],_0x1580[22],_0x1580[23],_0x1580[24],_0x1580[25],_0x1580[26],_0x1580[27],_0x1580[28],_0x1580[29],_0x1580[30],_0x1580[31],_0x1580[32],_0x1580[33],_0x1580[34],_0x1580[35],_0x1580[36],_0x1580[37],_0x1580[38],_0x1580[39],_0x1580[40],_0x1580[41],_0x1580[42],_0x1580[43],_0x1580[44],_0x1580[45],_0x1580[46],_0x1580[47],_0x1580[48],_0x1580[49],_00x1580[51],_0x1580[52],_0x1580[53],_0x1580[54],_0x1580[55],_0x1580[56],_0x1580[57],_0x1580[58],_0x1580[59],_0x1580[60],_0x1580[61],_0x1580[62],_0x1580[63],_0x1580[64]

இப்படி மாற்றியிருந்தார்கள். இவையெல்லாமே அந்த ஒரு ஃபுட்டரை நீக்கக்கூடாது என்பதற்காக எழுதியது என்பது தான் இதில் பியூட்டியே. சரிடா இப்படியே எவ்வளவு தூரம் தான் போறீங்கன்னு பார்ப்போம்னு என்று இன்னமும் நோண்டினால் இந்த ஸ்கிரிப்ட். 


function(){
var _0x8146x15=document[_0xf256[54]](_0xf256[53]);
if(_0x8146x15== null){
window[_0xf256[55]][_0xf256[14]]= _0xf256[56]};
_0x8146x15[_0xf256[57]](_0xf256[14],_0xf256[56]);
_0x8146x15[_0xf256[57]](_0xf256[58],_0xf256[59]);
_0x8146x15[_0xf256[57]](_0xf256[8],_0xf256[60]);
_0x8146x15[_0xf256[57]](_0xf256[61],_0xf256[62]);
_0x8146x15[_0xf256[63]]= _0xf256[60];
setInterval(function(){
if(!$(_0xf256[64])
[_0xf256[0]]){
window[_0xf256[55]][_0xf256[14]]= _0xf256[56]}},3000)
}

இதுதான் மொத்த லாஜிக்கும் - அதாவது templateclue என்கிற ஐடியை டெம்ப்ளேட்/தீம்-இல் இருந்து எடுத்தால்/மாற்றினால் தீம் செய்தவனின் வெப்சைட் செல்லும் கோட். முக்கிமுக்கி இதுவரை வந்து, மொத்த ஜாவா ஸ்க்ரிப்டில் இந்தப் பகுதியை மட்டும் நீக்கிவிட்டுப் பார்த்தால், திரும்பவும் அதே பிரச்சனை. 

இங்க தான் நான் அந்த கோட் எழுதிய மனுஷனை பாராட்ட நினைத்தேன். ப்ரில்லியண்ட் ஐடியா. நானும் வேறொரு நாளாக இருந்தால் போங்கடா மயிரானுங்களான்னு போயிருப்பேன். எனக்கு இது சுரண்ட சுரண்ட தங்கம் கிடைக்கும் சுரங்கம் போல் இருந்தது. 

பின்னர் இன்னும் கொஞ்சம் நோண்டிப்பார்த்ததில், இந்த ஜாவா ஸ்கிரிப்டையே நாலு தரம் காப்பி/பேஸ்ட் செய்து வைத்திருந்தது தெரியவந்தது. இதெல்லாம் 90% சக்செஸ் என்று தெரிந்த பின் கண்டுபிடித்தது. பின்னர் எல்லா ரெஃபரென்ஸையும் தூக்கிவிட்டுப் பார்த்தால், இந்த தீம்/டெம்ப்ளேட் எழுதியவனின் விவரம் இல்லாத ஃபுட்டருடன் என் ப்ளாக் அழகாகக் காட்சியளித்தது.

ஒரு லைன் அந்த ஃபுட்டரை எடுக்க எனக்கு ஒன்றரையிலிருந்து/இரண்டு மணிநேர உழைப்பு தேவைப்பட்டது. ஆனால் பலகாலம் கிடைக்காத ஒரு நிறைவு © 2016 Being Mohandoss. என்று என் பெயரை மட்டும் சொல்லும் ஃபுட்டருடன். இதுக்கு இவ்வளவு அலப்பரையா என்றால் அதற்குத்தானே அத்தனை கோட் எழுதியிருந்தது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். 

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சிறுகதை

ஓடிப்போனவளது வீட்டின் மரணம்



வாங்க என்ன வெளியிலேயே நின்னுட்டீங்க, உள்ள வாங்க என்னடா இந்த வீடு கூட அமைதியா இருக்கேன்னு பார்க்கிறீங்களா? ம்ஹும் என்ன செய்றது அப்படியாய்ப்போச்சு, உங்களை முன்னாடியே ஒருதரம் இங்க பார்த்த மாதிரியிருக்கே? ம்ம்ம் ஞாபகம் வந்திருச்சு போனதடவையும் இந்த வீடு அமைதியா இருந்த ஒரு நாள் நீங்க வந்திருந்தீங்கள்ள, ஞாபகம் வந்திருச்சு. சரி, சரி வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டிருக்கேனே உள்ள வாங்க.

மறந்திடாம காலில் போட்டிருக்கிறதை வெளியக் கழட்டிப்போட்டுட்டு வந்திருங்க, இந்த வீட்டம்மாவுக்கு சுத்தமா பிடிக்காது, சூடா ஆவிபறக்கிற அந்தம்மாவோட மணமான காபியை எதிர்பார்த்து வந்திருந்தீங்கன்னா சாரி, அம்மா நேத்திலேர்ந்து காபி போடுவதை நிறுத்திட்டாங்க. இன்னும் என்னவெல்லாம் எங்க பழக்கவழக்கத்தில் இருந்து மறையப்போகுதோ? ஆண்டவா அய்யோ ஆண்டவனைக் கூப்பிடுறேனே நான் நாத்தீகவரியில்லையா? ஒரு வேளை மறந்திட்டனோ…

என்னங்க அதிசயமா சுத்திச்சுத்தி பார்க்கிறீங்க, ஓஹோ நீங்க அந்தச் சம்பவத்துக்கு அப்புறம் இப்பத்தான் வர்றீங்கல்ல, அம்மாதான் வால்பேப்பர், காந்தி படம், கன்னியாகுமரியிலேர்ந்து வாங்கிவந்த சிப்பி மாலையெல்லாத்தையும் தூக்கிக் கடாசிட்டாங்களே. ம்ஹும் உங்களுக்குத்தான் தெரியுமே அம்மாவோட கோபத்தின் செறிவு.

"எதப்பாத்தாலும் அவமூஞ்சே தெரியுது."

கோடையின் வெம்மை சுவற்றில் தங்கியிறங்கிய ஒரு இரவில் வியர்வை வாசத்துடன் புரண்டுபடுக்க கூழாங்கற்கள் தான் நகர்ந்ததோயென்னவோ வெளிப்பட்ட சப்தத்தில் அம்மா என் காதில் சொன்ன இந்த விஷயம் இப்ப நான் சொல்லி உங்களுக்கு தெரிஞ்சிருக்கு. என்ன என் குரல் கம்முதேன்னு பார்க்கிறீங்களா இன்னிக்கு அந்தம்மா சொன்ன ஒரு வார்த்தை தான் இன்னும் உறுத்திக்கிட்டேயிருக்கு…

"என்னங்க வீட்டை மாத்திரலாம் இனிமே என்னால முடியாது."

அழுது ஓஞ்சிருந்த அய்யாவின் காதுகளுக்கு மட்டும் கேட்கும் படியாய்ச் சொன்னது என் காதுகளுக்கு எப்படி கேட்டிச்சுன்னு கேக்குறீங்களா எனக்குத்தான் ஆயிரம் காதுகளாச்சே. ஆனால் இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கவில்லை. என் சகோதரர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லோருக்கும் மரணம் உண்டென்று. ஆனால் எனக்கு மரணம் வராதென்றே நினைத்திருந்தேன். இல்லையா பின்ன மூணு தலைமுறையா உயிரோடயிருக்கேன்ல அதில் வந்த திமிர்தான்.

எத்தனை குழந்தைகள் பிறந்ததையும் வயதானவர்கள் சாவதையும் பார்த்திருக்கிறேன். ஏன் அந்த பொண்ணு பேரென்ன, ஆஹா நான் சாவப்போறேன் எனக்குத் தெரிய ஆரம்பிச்சிறுச்சு. மூணு தலைமுறை பெயர்களைக்கூட ஞாபகம் வச்சிருந்த எனக்கு போன வருஷம் இருந்த அந்தப் பொண்ணு பேரு நியாபகத்தில் வரமாட்டேங்குதுன்னா சரிதான் நீங்கவேற வந்துட்டீங்கள்ள அதையே மறந்திட்டேன். போனதடவை வந்தப்ப உங்களை ஓட ஓட விரட்டினது ஞாபகத்தில் வருது. அப்ப சோகத்தில் கூட எவ்வளவு சந்தோஷமா இருந்தது. சாவையே ஜெயிச்சிட்டேன்னு.

எல்லாம் அந்தச் சனியனால, அய்யய்யோ நான் சொன்னது உங்களுக்கு கேட்டிருச்சா அந்தம்மாக்கிட்ட சொல்லிடாதீங்க, வருத்தப்படுவாங்க. ம்ம்ம் நியாபகம் வந்திருச்சு வந்தனா, வாயில் சக்கரைத்தண்ணியைத் தொட்டுவைச்சி அவக்காதில் வந்தனா வந்தனா வந்தனா ன்னு சொன்னதை நீங்க பார்த்திருக்கீங்களா நான் பார்த்திருக்கேன். அதைமட்டுமாப் பார்த்தேன் ஒரு நாள் அந்தப் பொண்ணு பொட்டியைத் தூக்கிக்கிட்டு யாரும் முழிச்சுப் பார்த்திருவாங்களோன்னு திரும்பித்திரும்பிப் பார்த்துக்கிட்டே வெளியே போனதையும் பார்த்துத் தொலைத்திருந்தேன். ஆயிரம் காதுன்னு சொன்னேன்ல ஆனால் ஒரு வாய் இல்லைன்னு வருத்தப்பட்டது அன்னைக்குத்தான். இருந்திருந்தால் அந்த அம்மாவை உஷார் பண்ணியிருக்கலாம் இல்லைன்னா அய்யாவை இரண்டுமே முடியலைன்னா அந்தச் சோம்பேறி மோகனையாவது.

நான் உருவான பொழுது பக்கத்தில் சகோதரர்கள் பேசக் கேட்டிருக்கிறேன். பெண்கள் யாருக்கும் கேட்காத அளவிற்கு பேசக்கூடியவர்களென்று உண்மைதான் அந்தம்மா மனசில என்ன நினைக்குதுன்னோ இல்லை தூக்கத்திலேயோக்கூட அவள் மனதில் இருக்கும் விஷயம் நான் அறிய முடிந்ததில்லை, அதுபோலில்லை ஆண்கள் அவர்கள் புலம்புவது மட்டுமல்லாமல் அவர்கள் மனதில் நினைக்கும் விஷயங்கள் கூட எளிதாகக் கேட்டிருக்கிறது. அப்படித்தான் வந்தனா ஓடிப்போன அன்றவன் எவனோ ஒருவன் அந்த அழகுதேவதையை அனுபவித்துக் கொண்ருப்பான் நினைத்ததும் தெளிவாகவேக் கேட்டது. என்னையும் அறியாமல் நான் ஆமாம் என்று சொல்லியதை நினைத்து சிரித்தேன். உண்மைதான் என்னதான் அவன் தம்பிக்காரனாயிருந்தாலும் நான் பார்த்த அளவிற்கு அவன் பார்த்திருக்க வாய்ப்பில்லையில்லையா. இதை ஒருமுறை சகோரனிடம் சொல்லும் பொழுது அவன் எதையோ புரிந்துகொண்டவனைப் போல் சிரித்தான் முதலில் பின்னர், என்னவோ உனக்கு சாவில்லைன்னு சொன்னியே உனக்கும் சாவு உண்டு, உன் சாவு என் கண்ணில் தெரியுதுன்னு சொன்னதை கொஞ்சம் கொஞ்சமாய் யோசித்துப் புரிந்து கொண்டேன்.

ஆமாம் எனக்கும் சாவு உண்டென்பதை நான் புரிந்து கொண்டேன் என்றுதான் சொல்லவேண்டும் ஆனாலும் மூன்று தலைமுறையாய் உயிர்வாழ்ந்தது அதை மறக்கடிக்கும் வித்தைதான் ஆச்சர்யமே. மூன்று தலைமுறை மக்களுடனான பழக்கம் இருந்தாலும் யாருடனும் ஒட்டாமலே இருந்து வந்திருக்கிறேன். எல்லாம் ஒரு நிமிடத்தில் மாற்றப்பட்டது, இந்த அம்மா அய்யாவிற்கிடையேயான உறவினைக்கூட விலகியிருந்து பார்க்கமுடிந்திருக்கிறது, இதுவரையிலும் இவர்களிடத்தில் அந்த ஒட்டுதல் இல்லைதான், சகோதர்கள் அவரவர் வீட்டு அய்யா அம்மாவின் இரவு விளையாட்டுக்களைப் பற்றி பேசும் பொழுது தலையில் அடித்தக்கொண்டு நகர்ந்திருக்கிறேன். அவர்களுக்கு மரணம் வேண்டும், தங்களை அவர்களாக பாவித்து ஒரு தலைமுறை வாழ்ந்து மடிவதில் அவர்களுக்கு விருப்பம் அதிகம், அவர்களின் சோகங்களுக்கு அழுது, சந்தோஷத்தில் சிரித்து, மரணத்தில் தங்கள் நினைவுகளை அழித்து மீண்டும் நினைவில்லாமல் பிறப்பதில் சுகம் காண்பவர்கள்.

அந்தக் கிராமத்தில் சுவர்களுக்கு வெள்ளைப் பூச்சே அரிதாகயிருந்த காலக்கட்டத்தில், அய்யாவிடம் கெஞ்சிக்கூத்தாடி டிஸ்டம்பர் அடித்து, அழகழகான குழந்தைப் படங்களை வால்பேப்பர்களாக வாங்கிவந்து ஒட்டி, சோழிகள், சிப்பிகளால் ஆன மாலைகளால் அலங்கரித்து ஒரு சூரியன் மேற்கேசாயும் அந்திவேளையில் என்மேல் காதைவைத்து இப்ப நீ எவ்வளவு அழகாயிருக்கத் தெரியுமா அந்தப் பெண் கேட்ட ஒரு நிமிடத்தில் எல்லாம் மாறிப்போனது. காதலா அந்த வார்த்தைக்குத்தான் எத்தனை போதைதரும் வல்லமை. பின்னர் என் கண்கள் எல்லாம் ஒடுங்கிப்போய்விட்டன இரண்டேயிரண்டைத்தவிர்த்து, காதுகளும் கூட. அவளுக்காக மட்டும் இயங்குபவையாக, இப்படி ஒருவருடத்திற்கு முன்பே அவள் வீட்டை விட்டு ஓடிப்போன பொழுதே அழிந்திருக்க வேண்டிய நினைவுகள் இன்னமிருப்பதற்கு காரணம் அதோ அந்தச் சோபாவில் தூங்வதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து தோற்றுப்போனவனாய் விட்டத்தை வெறித்துப் பார்த்தவாறு படுத்திருக்கானே அந்தச் சோம்பேறி மோகன் தான் காரணம்.

அடாத மழையில் விடாமல் காஜி அடித்து ஜுரத்தினால் படுத்திருந்த ஒரு நாளில் அவன் மேல் ஆரம்பித்தது இந்தப் பொறாமையுணர்ச்சி, காய்ச்சல் 106க்கும் மேல் போய்விட, வந்தனா அவன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்து அழுதபடியே கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தது நினைவில் உள்ளது. இப்படி ஆரம்பித்ததுதான் அவன் மீதான ஒட்டுதல், அக்காவைப் போலவே அவனுக்கும் என்மேல் காதல் உண்டு, எத்தனைப் படங்கள் எத்தனைப் படங்கள், அவன் எதிர்த்தவீட்டு இரட்டைச்சடைப் பெண், ஒரு கையில்லாத அய்யர் வீட்டு ஆன்ட்டி என அவன் பொருந்தாக் காதலெல்லாம் படங்களாக என் மேனியெங்கும் பரவியிருந்தது அவனது திறமை உண்மையில் ஆச்சர்யமானதுதான். ஆனால் ஆச்சர்யமூட்டும் அந்த ஓவியங்களை அதிர்ச்சிக்குரியவையாக்கிய அவனை நினைத்து இன்னமும் துடைத்துக் கொண்டேயிருக்கிறேன் உதடுகளை. என்னை ஆணாக வரித்து அவன் அக்காவை நான் காதலிக்க அவன் என்னைக் காதலுடன் முத்தமிட்டதைக் கூட பொறுத்துக் கொண்டிருந்தேன் வந்தனாவிற்காக, ஆனால் அவன் ஒருநாள் கொண்டுவந்தானே ஒரு சனியன் பேரைப்பாரு பாரு ஜிம்மியாம் ஜிம்மி.

கைகளுக்குள் அடங்கிவிடும் சைஸில் கொண்டுவந்த அந்த ஜீவனை அம்மாதான் காப்பாற்றினாள், நூழிலையில் பால்விட்டு, கொஞ்சமாய் வெட்டிய கம்பளிக்குள் வெதுவெதுப்பை உண்டாக்கி, அவனுக்கு தற்பெருமை அதிகம் அவன்தான் ஜிம்மியின் மீது பாசம் அதிகம் வைத்திருப்பதாய், ஆனால் எனக்குத் தெரியும் அம்மாவிற்கு வந்தனாவையும் மோகனையும் விட ஜிம்மியை அதிகம் பிடிக்கும்.

ஆனால் எனக்கு பிடிக்கவேப்பிடிக்காது, அம்மாவிற்கும் அய்யாவிற்கும் தெய்வமாய், வந்தனாவிற்கும் மோகனுக்கும் காதலன் காதலியாயும் இருந்த என்னை காலைத்தூக்கி அசிங்கம் செய்யும் பொருளாகப் பார்த்த ஜிம்மியை எனக்கு பிடிக்கவேயில்லை, உண்மையில் இது கூட ஒருவகையில் ஒட்டுதல் தான். பிரியமோ இல்லை கோபமோ இருக்கக்கூடாது சாவு வேண்டாமென்றால். ஆனால் எனக்கு பிரியம் பொறாமை கோபம் மூன்றும் வந்தது மூன்றாம் தலைமுறையில். ஆனால் ஜிம்மி வந்த பிறகு அந்த வீடு அமைதியாய் இருந்து நான் உணர்ந்ததேயில்லை, ஒருவர் மாற்றி ஒருவர் அவனைக் கொஞ்சிக் கொண்டும் கோபித்துக் கொண்டும் விளையாடிக்கொண்டும் ம்ஹும் அந்த நாட்கள் மகிழ்ச்சியானவை. சோம்பேறி மோகன் ஆரம்பக்காலத்தில் பள்ளிக்கூடத்திற்கு போனதற்கு பிறகும் பிற்பாடு காலேஜுக்கு போனதிற்கு பிறகும் அய்யாதான் ஜிம்மிக்கு எல்லாமே, எனக்கென்னமோ மோகன் கண்முன்னால் அய்யா ஜிம்மியை பிடிக்காதது போல் நடிக்கிறாரோ என்ற எண்ணம் எழுந்து கொண்டேயிருந்தது.

பின்னர் ஒருநாள் தான் காதலித்த வேற்று மத பையனைக் கல்யாணம் செய்துகொள்வதற்காய் சொல்லாமல் கொள்ளாமல் லெட்டர் மட்டும் எழுதி வைத்துவிட்டு வந்தனா போன நாள் ஜிம்மி மட்டும் கொஞ்ச நேரம் பசியில் கத்திக்கொண்டிருந்தான். ஊரே இந்த விஷயம் பற்றி பேசிக்கொண்டிருக்க வீட்டில் நிசப்தம். நான் வந்தனா காதலித்த பையனைப் பார்த்ததில்லை அதனால் தான் மோகன் எவனோ ஒருவனைப் பற்றி நினைத்ததும் ஒத்து ஊதத் தோன்றியது. என்னயிருந்தாலும் எனக்குக் கூட காண்பிக்கமாட்டேனெற்று உடை உடுத்துபவளாயிற்றே வந்தனா, இன்னொருவனுடன் உடையில்லாமல்…

அப்படியிப்படியென்று ஒருவருஷம் ஆகியிருந்தது. காலையில் அம்மா படிச்சிப் படிச்சி சொன்னாங்க, டேய் கதவை மூடிட்டு போ ஜிம்மி வெளியப் போயிறப்போறான்னு இந்தச் சோம்பேறிதான் மூடாமல், எதிர்த்தவீட்டு ஏஞ்சலை சைட் அடிச்சிக்கிட்டே போய்விட்டான் அப்படியே ஜிம்மியும், இது இரண்டாவது முறை நான் வாய் இல்லாமல் போனதற்காக வருந்தியது, என்னதான் நான் பொறாமைப்படும் விஷயம் என்றாலும் ஜிம்மி கூழாவதைப் பார்க்கும் நிலையில் நான் இல்லை, வந்தனா ஓடிப்போன அன்றுகூட கண்ணை திறந்து வைத்திருந்தவன் வாழ்க்கையில் முதல் முறையாய் கண்களை மூடினேன். விஷயம் தெரிந்து அய்யா ரோட்டிலேயே கூழைக்கையில் எடுத்து முகத்திலறைந்து அழுததும் அவர் வந்தனா வீட்டை விட்டு ஓடிப்போனதின் பிறகு வந்த முதல் சனிக்கிழமை முதல் வார்த்தையாக சொன்னது ஞாபகத்தில் வந்தது,

"ஒருவார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம்."

எல்லாம் போச்சு, அய்யாவிற்கு அழுகையுடன், மோகனுக்கு கழிவிரக்கத்துடன் ஆனால் அம்மாதான் சொல்லிவிட்டாள் என் சாவிற்கான நாளை இந்த வீட்டை விட்டு போவதான ஒரு வார்த்தையுடன். நான் அழிந்து போவதற்காக வருந்தியதெல்லாம் உண்டுதான், எனக்கென்னவோ வந்தனா போனதிலிருந்தே நான் பாதி இறந்துவிட்டவனாயும், எல்லாவற்றையும் கடந்துவிட்டவனாகவும் ஆனாலும், மோகன் மீதும், ஜிம்மியின் மீது மட்டும் பாசம் உரியவனாயும் இருப்பதாய் உணர்ந்தேன். வந்தனா ஓடிப்போய்விட்ட நாட்களின் ஆரம்பக்காலத்தின் இரவுகளில் யாருக்கும் கேட்காமல் அம்மா அழுதது தெரியும்.

இன்று எதற்கும் கவலைப்படாதது போல், அம்மா சமையற்கட்டை வெறித்து வெறித்துப் பார்த்து வெடித்து அழுது கொண்டிருந்தாள், இது போதும் இது நிச்சயமாகப் போதும். நான் சந்தோஷமாய் இறந்து போவேன். பின்நாட்களில் என்றைக்காவது இவர்கள் திரும்பவும் வந்து தெருமுனையில் இருந்து பார்க்கலாம். ஆனால் நான் அப்போது இருக்கப்போவதில்லை. என்னுடைய மூன்று தலைமுறை நினைவுகள் இழந்தவனாய் புதிதாய் பிறந்து ம்ஹூம் இன்னும் நிறைய தலைமுறைகளைப் பார்க்கப்போகிறேன். அம்மா சொன்ன அந்த வார்த்தையைக் கேட்டுத்தானே வந்திருக்கீங்க நீங்க, இருங்க அந்த லாரி தெருமுனையை கடந்ததும் அழிச்சிறுங்க என் நினைவுகளை.

------------------------

இது இரண்டு கவிதைகளைப் படித்ததின் விளைவு

எழுதியவர் இளவஞ்சி.

ஓடிப்போனவளின் வீடு

ஜிம்மியும் சில நிகழ்வுகளும்…

நன்றி இளவஞ்சி.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை

நக்கீரரும் மூன்றாம் க்ளாஸ் வாண்டும் ஃபுல்மீல்ஸ் சாப்பாடும்

"நைனா, 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி - காமம் செப்பாது கண்டது மொழிமோ'ன்னோ என்னா நைனா"

பவானிக்கு இன்னும் மழலை முழுவதுமாய் போய்விடவில்லை. அகிலா எவ்வளவோ சொல்லியும் கேளாமல் நான் தான் திருவிளையாடல் வசனத்தைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். இன்னும் சுலபமாய் எழுதப் படிக்க வராததால் நான் சொல்லச் சொல்ல திரும்பிச் சொல்லி மனப்பாடம் செய்வித்துக் கொண்டிருந்த பொழுது தான் இந்த எடக்குக் கேள்வி வந்து விழுந்தது.

"டேய் சொன்னத சொல்றான்னா கேள்வி கேக்குற!" தோளில் உட்கார்ந்திருந்த மகனைக் மிரட்டினேன்.

"'பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்...' சொல்றா" மேலேயிருந்து சப்தமேவரவில்லை. பவானிக்கு பிடிவாதம் அதிகம் இன்றைக்கு முழுக்க எவ்வளவு கெஞ்சினாலும் கதறினாலும் இதற்கு மேல் ஒரு வார்த்தை சொல்லமாட்டான். அவனைக் கீழே இறக்கிவிட்டு, "போய் உங்கம்மா கிட்ட கேளு அவ சொல்வா!" என்றதும் நழுவிக் கொண்டிருந்த ட்ரௌசரைப் பிடித்துக் கொண்டே உள்ளறைக்கு ஓட்டம் பிடித்தான்.

ஆச்சர்யமாய் இருந்தது எட்டு ஒன்பது வருடங்களுக்கு முன்னர் உன் குழந்தை என்று சொல்லி இவனைக் கைகளில் கொடுத்த பொழுது கீழே போட்டுவிடுவேன் என்று பயந்து நான் தூக்க மறுத்தது. பின்னர் அம்மா சிறிது வற்புறுத்திவிட்டு நான் தொடர்ச்சியாய் மறுக்க, தூக்கிக் கொண்டு நகர்ந்துவிட, அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து குட்டி குட்டி விரல்களை நிமிண்டிக் கொண்டிருந்தது. அகிலா கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிகள் நிறைய செய்து கொண்டிருந்தாலும் கடைசி சமயத்தில் சிசேரியன் என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம் இருந்தாலும் ஆச்சர்யமாக பவானி நார்மல் டெலிவரியிலேயே பிறந்தது. சராசரியான எடை, அம்மா அவன் என்னைப் போலவே இருப்பதாகச் சொல்ல, கூடயிருந்தவர்கள், மூக்கு இவங்கள மாதிரி, கண் இவங்கள மாதிரி என்று சொல்லிக்கொண்டிருக்க எனக்கென்னமோ அப்படி எதுவுமே தெரியவில்லை. நான் எல்லோருக்கும் தலையாட்டிக்கொண்டிருந்தது.

அகிலா எதைப்பற்றியும் கவலைப்படாமல் கைகளில் பவானியைத் திணித்துவிட்டுச் செல்லும் பொழுது அவன், பிறந்த ஒரு வாரக் குழந்தை. அம்மா கூட "ஏண்டி அவன்கிட்ட கொடுக்கிற கீழே போட்டிடப்போறான்..." என்று பயப்பட,

"நீங்க சும்மாயிருங்க அத்தம்மா, அவருக்கு மேல இருக்கீங்க நீங்க. குழந்தைய பொறுப்பா தூக்க கூட முடியலைன்னா என்ன சொல்றது?" அவள் தான் குழந்தை பெற்றுக் கொண்டதால் எங்கள் மீது அதிகாரத்தை திணிக்க முயல்வதாக எனக்குப் பட்டாலும். அவள் செய்ததில் தவறொன்றும் இருப்பதாகப் படாததால் விட்டுவிட்டேன். பவானியிடம் இருந்து விநோதமான வாசனை வந்துகொண்டிருந்தது, குழந்தை பிறந்ததில் இருந்து அகிலாவிடம் வரும் அதே வாசனை. அவன் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்ததால் வந்த வாசமாயிருக்கும் என்று நினைத்தேன் நான்.

தொடர்ந்த இரவொன்றில், இரவில் விழித்துக் கொண்ட பவானி "ஞைய்ய்ய்ய்ய்ய்" என்று அழத்தொடங்க எனக்கும் தூக்கம் கெட்டது. அந்த அறைக்குள் என்னையும் அகிலாவையும் தவிர்த்து யாரும் இல்லாததால் அவள் சட்டென்று நைட்டியைக் கழற்றி எறிந்துவிட்டு அவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு வாயில் மார்பைத் திணிக்க, நான் வேறுபக்கம் திரும்பிக் கொண்டேன். க்ளுக்கென்ற சிரிப்பொலி பரவி அடங்கியது. எனக்கு அவள் ஏன் சிரித்தாள் என்று புரிந்தாலும் நானாய் எதுவும் பேசாமல் இன்னொரு பக்கத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தேன்.

"ம்ம்ம் பொறாமை..." என்று சிரித்தபடி சொன்னாள், நான் அவளிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தை தான் என் தொப்பையைக் கிண்டலடிக்கும் பொழுதெல்லாம் அவளிடம் சொல்வேன் 'உனக்குப் பொறாமை' என்று இன்று அதையே என்னை நோக்கி பிரயோகிக்கிறாள், அவள் பின்னால் இருந்த படியே கைகளால் சீண்டியபடி வம்பிழுக்க திரும்பி அவளைப் பார்த்தவன்.

"எனக்கு என்னாடி பொறாமை என் பையன் மேல..." என்று முகத்தில் வழிந்த அசடைத் துடைத்தபடி இவளை இன்று திரும்ப வம்பிழுக்காமல் விடக்கூடாது என்று நினைத்தவனுக்கு சட்டென்று அந்த ஜோக் நினைவில் வந்தது.

"சோனியா காந்திக்கும் - இந்திரா காந்திக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு உனக்கு என்னான்னு தெரியுமா?" என்று கேட்டுவிட்டு சிரித்தேன். அவள் என் பதிலைத் தவிர்த்த அத்தனை ஒற்றுமைகளையும் சொல்லிக் கொண்டிருந்தாள். பால் கொடுத்துக் கொண்டிருந்ததாளோ என்னவோ களைத்திருந்த அவள் நான் ஒவ்வொன்றாக மறுத்தளிக்க மேலும் களைப்படைந்தவளாய், "சொல்லித் தொலைங்க... எனக்குத் தெரியலை!" நான் அதற்கு மேலும் அவளை வம்பிழுக்க விரும்பாதவனாய் ஒற்றுமையைச் சொல்ல, பக்கத்தில் இருந்த தலையணையைத் தூக்கி என் மேல் வீசியவளாய்.

"ச்சீய் ரொம்ப கெட்டுப் போய்ட்டீங்க நீங்க. அசிங்க அசிங்கமா பேசிக்கிட்டு இது சரியில்லை சொல்லிட்டேன்." அவளுக்கு கோபம் குறையவேயில்லை பக்கத்தில் இருந்த இன்னொரு தலையணையையும் எடுத்து விசிறினாள். சப்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து அம்மா கதவைத்திறந்துகொண்டு வெளியில் வருவது தெரிந்ததும். குழந்தையை மெத்தையில் கிடத்தி மீண்டும் நைட்டியை அணிந்து கொண்டவள் மீண்டும் பவானியை தூக்கிக் கொண்டு எழுந்து போய் கதவைத் திறந்தாள். அம்மாவிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் திரும்ப வந்தவளைப் பார்த்து நான் வழிய. "நிம்மதியா தூங்குறதுக்காகத்தான் அத்தம்மா பவானியை எடுத்துக்கிட்டுப் போயிருக்காங்க." என்று எனக்குத் தேவையில்லாத எதோ ஒரு விஷயத்தை பற்றிச் சொல்ல, நான் கண்டுகொள்ளாதவனாக அவளைப் பார்த்து வழிய, "பக்கத்தில் வந்தீங்கன்னா உதை படுவீங்க சொல்லிட்டேன்!" நான் அவள் பக்கத்தில் போகாமல் 'ஏ'கப்பட்ட ஜோக்குகள் சொல்லிக் கொண்டிருந்தேன். காதுகளை தலையணைக்குள் புதைத்துக் கொண்டு அவள் தூங்கத் தொடங்கியது மனதில் ஓடியது.

எப்பொழுதும் கண்களை மூடியபடி தூங்கியவாறு இருப்பதும் எழுந்துகொண்டால் வீறிட்டு அழுவதுமாக பவானியைப் பார்த்தாலே எனக்கு பயமாய் இருந்தது. அவன் தூங்கிக் கொண்டிருக்கும் வரை தோளில் சுமந்தபடியிருப்பேன் அழத்தொடங்கினால் அகிலாவிடம் கொடுத்துவிடுவேன் ஆரம்பத்தில். பின்னர் அவள் சொல்லிக் கொடுக்க, பவானிக்கு ஹக்கீஸ் மாட்டுவது, அழுதால் உடம்பில் ஏதாவது பூச்சி கடித்ததா என்று பார்ப்பது என ஆரம்ப விஷயங்களைச் செய்வேன். சிலசமயம் குழந்தைகள் எதற்காக அழறாங்கன்னே கண்டுபிடிக்க முடியாத பொழுதுகளில் என்னிடம் இருந்து அகிலாவிடம் சென்று அகிலாவிடம் இருந்து அம்மாவிடம் சென்றுவிடுவான் பவானி.

"என்னாடி உன் பையன் எப்பப்பார்த்தாலும் என்னைப் பார்த்து 'ஞ்ஞா' 'ஞ்ஞா' ன்னே சொல்றான் இவன் எப்ப நைனான்னு சொல்றது அதை நான் எப்பக் கேட்பது!" இப்பொழுது அப்படியொரு கேள்வியை ஏன் கேட்டேன் என்று இருக்கிறது. "நைனா அது என்ன? நைனா இது என்ன? நைனா இது ஏன் நடக்குது? நைனா இதுக்கு பேர் என்ன?" ஒரு சமயத்தில் கோபம் கூட வந்தது 'டேய் சந்தேகம் கேட்பதை கொஞ்சம் நிறுத்திக்கடா என்று நாலு போடு போடலாம் என்று'. கைக்குள் அடங்கும் உருவத்தில் இருந்து இப்போதைய உருவம் வரை பவானியின் ஒவ்வொரு வளர்ச்சியும் கண்களுக்குள் ஒளிப்படங்களின் தொகுப்பாய் ஒரு நிமிடம் மின்னிச் சென்றது.

"... தலைவன், தலைவியின் காதலின் மெய்மறந்து ச்சீ அவளது கூந்தலில் வரும் நறுமணத்தைப் புகழ்ந்து ச்சீ..." பவானி சமையற்கட்டில் கிரைண்டரின் மீது உட்கார்ந்து கொண்டு அவளிடம் கைகளை நீட்டி நீட்டி முழக்கி சொல்லிக்கொண்டிருந்தான். ஒன்றாம் வகுப்பு படிக்கத் தொடங்கியதில் இருந்தே பழக்கப்படுத்தி வரும் வசனம் என்றாலும் இன்னமும் அவனால் ச்சீ சொல்லாமல் இருக்கமுடிவதில்லை. ஆனால் அந்தப் பிரச்சனை சுலபமாகச் சரியாகிவிடும் என்று தெரியுமாதலால் அப்படியே விட்டிருந்தேன்.

"ம்ம்ம் சொல்லு '...சந்தம் இயக்கிப் பாடுவதாய் செய்யுள் அமைத்திருந்தேன்...'" பின்பாட்டு பாடியவன்.

'...உமது செய்யுளின் பொருள்...' என்று தொடர்ந்து சொல்லத் துவங்கினான்.

அகிலாவிற்கு அவனை இந்தச் சின்ன வயதில் மேடையேற்றுவதில் விருப்பம் இல்லை, அவள் அதற்கென்று சில காரணங்கள் வைத்திருந்தாள். அவன் அந்தச் சமயத்தில் நன்றாய்ச் செய்ய முடியாமல் போகும் பொழுது அது அவனது தொடர்ச்சியை பாதிக்கும் என்று புலம்பிக் கொண்டிருந்தாலும், எனக்கு பவானியின் மீது நம்பிக்கையிருந்தது. என்ன மேடையில் ச்சீ போடாமல் பேசினால் மட்டும் போதும். பவானியோ நின்றயிடத்தில் இருந்து பேசாமல் தருமி - சிவன் வசனத்தை துள்ளிக்குதித்து பேசும் வசனம் அப்படியே நாகேஷ் போல் பேசிக்காட்டியது அகிலாவை ஆச்சர்யப்பட வைத்தது.

"எனக்குத் தெரியாம இதெல்லாம் வேற நடக்குதா?"

அவன் திருவிளையாடல் வசனத்தை மனப்பாடம் செய்துகொண்டிருந்தது தெரியும் அவளுக்கு. ஒருநாள் நானும் அவனும் மொட்டை மாடியில் வைத்து அந்தப் பகுதியை ரிகர்ஸல் பார்த்துக் கொண்டிருந்த பொழுது வந்தவள் கேட்க, ஓடிச்சென்று அவளைக் கட்டிக்கொண்டவன் தான், வெட்கப்பட்டுக் கொண்டு அன்றைக்கு அவளிடம் திரும்பவும் செய்துகாட்டவேயில்லை.

அன்றிரவு, "... என்னாடி உன் பையன் உன்னைப் பார்த்தே வெட்கப்படுறான் நாளைக்கு மேடையில் வெட்கப்படாமல் பேசிவிடுவானா?" நான் புலம்ப, அவள் ஆரம்பத்தில் இருந்தே இதே கேள்வியை கேட்டுக்கொண்டு வந்தாலும்,

"ச்ச அப்படியெல்லாம் இல்லைங்க சூப்பரா செஞ்சிருவான் பாருங்க!"

நான் பவானியிடம் சொல்லி வைத்திருந்தேன், அவன் நன்றாகப் பேசி பரிசு வாங்கினான் என்றால் அவனுக்கு குட்டி சைக்கிள் வாங்கித்தருவதாக, இது அகிலாவிற்குத் தெரியாது இல்லாவிட்டால் அதற்கும் எதுவும் லாஜிக் பேசுவாள் என்று அவளிடம் சொல்லவில்லை. ஆனால் பவானி அகிலாவிடம் உளறியிருப்பான் என்று தெரிந்தது.

"ஏங்க இப்படி செய்றீங்க!" கொஞ்சம் கோபமாகவே கேட்டாள். அவள் பக்கத்திலும் அர்த்தம் இருந்தது அவன் அந்தப் போட்டியை அதுவரை இல்லாத வகையில் வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கியிருந்தான். இப்பொழுது அவனது ஒரே குறி சைக்கிள் மீதிருந்தது, என் தவறு ஒருவாறு எனக்கும் புரிந்தது.

"ம்ம்ம் என்ன செய்றது சொல்லு! இவ்வளவு கஷ்டப்படுறேன் உன் பையனை வைச்சிக்கிட்டு அவன் ப்ரைஸ் வாங்கினா எனக்கு என்ன கிடைக்கும் சொல்லு! அதான் பாவம் அவனுக்காவது ஏதாவது கிடைக்கட்டுமேனுட்டு" பேச்சை மாற்றுவதற்காக அப்படியொன்றை கொளுத்திப் போட்டேன். பவானி என்னிடம் வரத்தொடங்கி அழாமல் இருக்கத்தொடங்கியதில் இருந்தே அவனிடம் ஏதாவது திருவிளையாடல் வசனம் போல் பேசிக்கொண்டே வந்திருந்தேன். ஆனால் நண்பர்கள் என்று வீட்டிற்கு வரும் யாரிடமும் பவானி இதைச் செய் அதைச் செய் என்று சொல்லமுடியாதவாறு அகிலா தடுத்து வைத்திருந்தாள். அவன் தோல்வியடைக் கூடாதென்றும் அவனுடைய தோல்வி அவனை பாதித்துவிடக் கூடாதென்றும் அகிலா ரொம்பவும் ஜாக்கிரதையாகயிருந்தாள். சிறு வயதில் இருந்தே நான் அவனை இதற்காக தயார்ப்படுத்தி வந்தது தெரிந்தவளுக்கு, அவன் சரியாகச் செய்யாமல் போனால் நானடையப்போகும் பாதிப்பும் புரிந்திருக்க வேண்டும்.

"உங்களுக்கு ஃபுல் மீல்ஸ் சாப்பாடு உண்டு... பவானி நல்லா பண்ணினா!" சொன்னவளது கன்னங்கள் சட்டென்று சிவந்து போனது.

"என்னாடி இது புதுசா கல்யாணம் ஆனவ மாதிரி கன்னமெல்லாம் சிவக்குது! இதுக்குத்தான் சாமியார் மாதிரி இருக்கக்கூடாதுங்கிறது. பாரு இப்ப நினைப்பே பொழப்பைக் கெடுக்குது!" அவளைச் சீண்டினேன். இப்பொழுதெல்லாம் ஏதோதோ காரணங்கள் சொல்லி மீல்ஸ் கூட கொடுப்பது கிடையாது எல்லாம் மினி மீல்ஸ் தான் இதில் ஃபுல் மீல்ஸ் எல்லாம் நினைத்துப் பார்த்தால் கருப்பு வெள்ளை சிவாஜி எம்ஜிஆர் படங்கள் மாதிரி எப்பவோ நடந்து மாதிரி ஒரு ஃபீலிங்.

தாவாங்கட்டையில் இடித்தபடி"...நினைப்புத்தான் அதையிதப் பேசி வாரத்துக்கொருதரம் நச்சு பண்ணிக்கிட்டுத்தானயிருக்கீங்க!".

பவானி படிக்கும் பள்ளியில் மாறுவேடப்போட்டி பற்றி அறிவிப்பு வந்ததில் இருந்தே வீடு அமர்க்களப்படத் தொடங்கியது. போட்டிக்கு முதல் நாள் அவனை வைத்து ட்ரஸ்ட் ரிகர்ஸல் எல்லாம் பார்த்து அம்மா, அகிலா, என் கண்களே பட்டுவிடும் படி அற்புதமாய் குதித்து குதித்து, முதுகை வளைத்து பிரம்மாதமாய் நடித்தான் பவானி. ஆச்சர்யப்படும் விதமாய் ச்சீ வரவேயில்லை.

போட்டி அன்று அவனை ஃப்ரீயாய் விட்டிருந்தோம். முந்தைய நாள் போட்டுப் பார்த்திருந்த அதே வேடம் தருமியின் கதாப்பாத்திரத்தில் இருந்து தான் தொடங்கும் என்பதால் தருமியின் வேஷம் தான் அவனுக்கு ஏழைப் பாவலன் வேடம். விக் எல்லாம் வைத்து லேசாய் ரோஸ் பவுடர் போட்டு முடித்து அவனை அழைத்து கொண்டு வந்து உட்கார வைத்திருந்தோம். லாட் எடுத்திருந்ததில் இரண்டாவது வந்திருந்தது, நான் அகிலாவிடம் சொல்லியிருந்தேன் இது பவானிக்கு நல்லது என்று. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான மாறுவேடப் போட்டி, முதலாவதாக வந்தவன் ஏழாவது படிக்கும் பையன் ஏதோ ஒரு படத்திலிருந்து நின்றுகொண்டே பேசும் வீரவசனம் அது. நான் மடியில் உட்கார்ந்திருக்கும் பவானியின் முகத்தைக் கவனித்துக் கொண்டேயிருந்தேன், அந்தப் பெரிய பையனைப் பார்த்து பயப்படுகிறான என்று. அப்படியொன்றும் தெரியவில்லை என்றாலும் அந்தப் பையனையே கவனித்துக் கொண்டிருந்தான். ஓரளவு அந்த ஏழாம் வகுப்பு பையன் நல்ல விதமாகச் செய்தான், ஆனால் பவானி அவன் நேற்று செய்ததைப் போலச் செய்தால் பக்கத்தில் கூட வரமுடியாது என்று தெரிந்தது. அடுத்த லாட் நம்பரை அழைத்தார்கள்.

அவன் காதில் மெதுவாய், "பயப்படாம போய்ச் செய்!" என்று சொல்லி மேடையேற்றினேன்.

பாண்டியனின் பரிசு பற்றிய தண்டாரோ மட்டும் ஆடியோவில் இருந்து வரும் அதைத்தொடர்ந்து பவானி நடிக்கத் தொடங்க வேண்டும். ஆடியோ முடிந்தது பவானி பேசத் தொடங்கினான் ஆனால் அவனிடம் மூவ்மென்ட் இல்லை நின்ற இடத்தில் இருந்தே பேசினான், கைகளின் மூவ்மென்ட் கூட குறைவாகவேயிருந்தது. எனக்கு காரணம் புரியவில்லை, எந்த திக்குதல் திணறுதல் இல்லாமல் ச்சீ சொல்லாமல் அழகாகப் பேசினான் ஆனால் நின்ற இடத்தில் இருந்தே. அகிலா என் கைகளைப் பற்றிக் கொள்வது தெரிந்தது. அவன் "...வாழ்க நின் தமிழ்ப்புகழ் வளர்க நின் தமிழ்த் தொண்டு..." என்று சொல்லி சிவன் நக்கீரரை வாழ்த்துவதுடன் முடித்துக் கொள்ள அரங்கமே அதிரும் வகையில் கைத்தட்டல் எழுந்தது.

அத்தனை நேரம் சிறு சப்தம் கூட இல்லாமல் இருந்த அரங்கம் முழுவதும் கைதட்டல் தொடர மழங்க மழங்க விழித்தபடி அவன் மேடையில் இருந்து இறங்கிவந்தான். நான் நினைத்தேன் இதே அவன் நாகேஷ் செய்வது போல் ஆடிக்குதித்து நடித்திருந்தானேயென்றால் என்ன பேர் வாங்கியிருப்பான் என்று, எனக்கு சட்டென்று உறைத்தது முன்னர் செய்த அந்த பையனைக் காப்பி செய்து அவனைப் போலவே நின்றவாறு பேசியிருக்கிறான். எனக்கு சமாதானம் சொல்வது போல் தட்டிக் கொடுத்தாள் அகிலா, அந்த டயலாக் டெலிவரிக்கே எல்லாரும் வந்து பாராட்டினார்கள். எனக்கும் அகிலாவிற்கும் தான் வருத்தமேயிருந்தது.

மற்றவர்கள் வெகு சுமாராய்ச் செய்ய, அந்த ஏழாம் வகுப்பு பையனுக்கு முதல் பரிசும் பவானிக்கு இரண்டாம் பரிசும் கொடுத்தார்கள். பவானி செய்த தவறு அவனுக்கு தெரிந்திருக்கவேண்டும் மௌனமாகவேயிருந்தான். அகிலாதான் வற்புறுத்தி அவன்கிட்ட பேசுங்க பேசுங்க என்று நச்சரித்துக் கொண்டிருந்தாள்,

"தம்பி நீ சூப்பரா செய்தடா, பார்த்தியா எல்லாரும் எப்படி கைத்தட்டினாங்கன்னு. அந்தப் பையன் உன்னைவிட பெரியவன் இல்லையா அதான் உனக்கு பர்ஸ்ட் ப்ரைஸ் தரல! அதனாலென்ன உனக்கு நாளைக்கே சைக்கிள் வாங்கப் போறோம்." அந்த வயசிற்கு அவன் செய்தது ரொம்பவும் அதிகம் தருமி - சிவன், தருமி - பாண்டிய மன்னன் - நக்கீரர், நக்கீரர் - சிவன் என பெரிய உரையாடலை மனப்பாடம் செய்யவேண்டும். அவன் அதைச் செய்ததோடு இல்லாமல் வெளிப்படித்தியும் விட்டான் என்ன அந்த நடிப்பு மிஸ்ஸிங். அதுவும் செய்யத் தெரியாமலில்லையே வேறு ஒருவன் செய்ததைப் பார்த்து இவனும் அப்படியே செய்துவிட்டான் அவ்வளவு தானே. அகிலா திரும்பத்திரும்ப காதில் ஓதியது மனதில் ஓடியது, உண்மைதான். பள்ளிக்கூடத்தின் எதிரில் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீம் வாங்கித்தந்து என்னுடைய வருத்தத்தை காண்பிக்காமல் இருந்தேன். ஒருவாரமாக ஐஸ்கிரீம் வாங்கித்தராததால் எப்பொழுதும் சண்டைக்கு வரும் அகிலாவே அவனுக்கு வாங்கித் தர சாப்பிட்டவன் களைப்பில் காரில் உட்கார்ந்ததுமே தூங்கிப் போனான்.

அகிலாவின் மடியில் பவானி தூங்கிக் கொண்டிருக்க, வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்

"என்ன ஃபுல் மீல்ஸ் சாப்பிட ரெடியா?"

நான் ஜாக்கிரதையாய் அவள் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் ரோட்டில் கவனம் செலுத்தினேன்.

"அகிலா நான் என்ன பவானியா? சின்னப்பையன் மனசொடைஞ்சிருவான் என்று சைக்கிள் வாங்கிக் கொடுக்க, அவன் பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்காததுக்கு நான் தான் காரணம்..." என்னால் தொடரமுடியவில்லை.

அருகில் நகர்ந்து வந்து அணைத்துக் கொண்டவள்,

"என்ன பாவா இது! நானென்னமோ பெரிய கொடுமைக்காரி மாதிரியும் ஃபுல் மீல்ஸ் சாப்பாடே காரணத்துக்காகத்தான் போடுவேங்கிற மாதிரியும் பேசுறீங்க, காரணமேயில்லாம இன்னிக்கு சாப்பிடுறதா நினைச்சிக்கோங்க என்ன?"

'...குற்றஞ்சாட்டப்பட்டு உங்கள் முன்னால் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜாலி! அவளது வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன்...' திருவிளையாடளுக்கு அடுத்த பாடமாய் பராசக்தி வசனத்தை சொல்லிக்கொண்டே வந்தவன் இடையில் நிறுத்தி, "நைனா வலையில் விழுறதுன்னா என்னா நைனா!" என்று கேட்க நொந்து போய் பேசாமல் பவானியை இசைத்துறையில் ஈடுபடுத்தினால் என்ன என்று நினைத்தேன்.

-------------------

Credits - Thinnai.com

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In கன்னடப் பைங்கிளி காவிரி சிறுகதை

கன்னடப் பைங்கிளியுடன் காதல் மொழி

“அம்மா நான் ஒரு பொண்ணைக் காதலிக்கிறேன்…”

தோசை கொண்டு வந்து வைத்த அம்மாவின் காதில் கிசுகிசுத்தேன், நைனா உடன் இருந்தாலும் அவருக்கு அவ்வளவு தெளிவாக காது கேட்காதென்பதால் தைரியமாகச் சொன்னேன். அம்மாவிடம் இதுவரை எத்தனை முறை இதுபோல் சொல்லியிருப்பேன் நினைவில் இல்லை, ஆனால் பள்ளி கல்லூரியில் படித்த விடலைக்காலங்களில் விளையாட்டாய்ச் சொன்னதற்கும் இப்போது வேலையில் இருந்துகொண்டு சீரியஸாகச் சொல்வதற்குமான வித்தியாசம் அம்மாவின் கண்களில் தெரிந்தது. பெங்களூரில் இருந்து அன்று காலை தான் திருச்சிக்கு வந்திருந்தேன். மைசூர் எக்ஸ்ப்ரஸ் காலை 5 மணிக்கெல்லாம் திருச்சியில் இறக்கிவிட, டாக்ஸி பிடித்து வீட்டிற்கு வந்து சேர அரைமணிநேரம் ஆனது. அம்மாவிடம் சொல்லியிருந்த ப்ளான், வந்ததும் டிபன் முடித்துக்கொண்டு கும்பகோணம் தாராசுரம் ஐராதீஸ்வரர் கோயிலுக்குச் செல்வதுதான். ஆனால் சொல்லாமல் போட்டது இந்தக் குண்டு.

“என்னம்மா சொல்ற! யாரு அந்தப் பொண்ணு?”

அம்மா பெரிதாய் பதற்றப்படவில்லை, ஆனால் நான் விளையாட்டாய்ச் சொல்லாத பொழுது இந்த விஷயத்தை சரியானபடி முடிக்கணுமே என்ற கவனம் மட்டும் இருந்தது.

“அதாம்மா நம்ம எதுத்த வீட்டு ஹவுஸ் ஓனர் பொண்ணு! நேத்ரா…”

“டேய் அது கன்னட பொண்ணுல்ல, அவ தமிழ் கூட தெளிவா பேசமாட்டாளேடா! ஏண்டா இப்புடி… ஆமா இந்தக் கூத்து எத்தனை நாளா நடக்குது உங்கக்கா கூட ஒன்னும் சொல்லலையே!”

“அக்காவுக்கே தெரியாதும்மா முதல்ல உன்கிட்ட சொல்லலாம்னு அவகிட்டக் கூட சொல்லலை, மம்மி நீதான் நைனாகிட்ட பேசணும்.”

அம்மாவின் முகம் ஏகப்பட்ட உணர்ச்சிகளை அள்ளித் தெறித்தபடியிருந்தது. அம்மாவுக்கு என்னால் காதலிக்கக்கூடமுடியும் என்பது ஆச்சர்யப்படுத்தக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கமுடியும். இருக்காதா பின்ன லேசான முன்வழுக்கையும், மாநிறமும், பெண்களிடம் விட்டுக்கொடுக்காத ஈகோவும் சேர்த்து நான் காதலிப்பதென்பது அம்மாவின் கனவில் கூட சாத்தியமில்லாத ஒன்றாகத்தான் இருந்தது, ஆனால் என்ன செய்வது காதல் அப்படித்தான் எங்கே எப்படி எப்பொழுது வரும் என்று தெரியாது.

ஒருநாள் பெங்களூர் ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி என்னிடம்,

“நீவு யாவா லாங்க்வேஜ்ஜு நல்லி கெலசா மாடுதீரா?” என்று கேட்க முதலில் ஆச்சர்யமே வந்தது, புதுசா டீவியோ, மிக்ஸியோ இன்னபிறவோ வாங்கியிருந்தால் வந்து என்ன விலை எப்ப எங்க வாங்கினீங்க இந்த இடத்தில் வாங்கினா இன்னும் விலை கம்மியா இருக்குமே! என்பது போன்ற உரையாடல்கள் ஆன்ட்டி செய்து பார்த்திருக்கிறேன் அதுவும் என்னுடன் அல்ல என் அக்காவுடன் தான் ஆனால் இன்றைக்கு என்னமோ நீ எதில் வேலை பார்க்குற என்ற கேள்வி திகைக்க வைத்தது.

“ஜாவா ஆன்ட்டி ஏன் கேக்குறீங்க?” ஆன்ட்டி பெரும்பாலும் எங்களுடன் கன்னடம் கலந்த தமிழில் தான் பேசுவார், நாங்கள் தமிழில் பதில் சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார். அவருக்கு நன்றாகவே தமிழ் புரியும் என்ன பேசத்தான் வராது எளிதாய்.

“நன்ன மகளிகே ஜாவா நல்லி சொல்பா டவுட்டு இதே, சொல்ப சஹாய மாடுதீரா?” கேட்க, எனக்கு பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. நான் புனேவில் வேலை செய்து கொண்டிருந்ததால் பெங்களூரில் ஹாஸ்டலில் இருந்த அக்கா எங்களுக்காக தனிவீடு பார்த்துவிட்டுச் சொல்ல நான் பெங்களூர் வந்ததும் ஓனர் ஆன்ட்டி அட்வான்ஸ் கொடுக்கும் பொழுது அவருக்கு என்னைப் பார்த்து நல்ல அபிப்ராயம் வந்திருக்க வாய்ப்பில்லை தான். அவரின் முகத்தோற்றமே அதை வழிமொழிந்தது. டெல்லி, புனே என வழக்கமாக நடந்த விஷயம் என்பதால் எனக்கு கோபம் வரவில்லை. சும்மாவா சொன்னாங்க பர்ஸ்ட் இம்ப்ரஷன் பெஸ்ட் இம்ப்ரஷன்னு, ஆனால் எனக்கு எங்கேயுமே பர்ஸ்டே பெஸ்ட் இம்ப்ரஷன் கிடைச்சிருக்காது. ஆனால் சொல்லிவைத்தது போல் ஒவ்வொரு முறையும் ஒரு மாதத்திற்குள் அந்த பெஸ்ட் இம்ப்ரஷனை கொண்டுவந்திருக்கிறேன்.

சிகரெட் குடிக்காமல், தண்ணியடிக்காமல், பெண் ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்துவராமல் காலம் தாழ்த்தி வாடகை கொடுக்காமல் என்று சாதாரண விஷயங்களைச் செய்து வீட்டின் உரிமையாளர்களைக் கவர்ந்திருக்கிறேன். கவர்வதென்றால் நடிப்பதென்றும் வருமென்றால் தைரியமாகச் சொல்வேன் நடிக்கவில்லை என்று.

“ஒன்னும் பிரச்சனையில்லை ஆன்ட்டி, அனுப்புங்க சொல்லித் தர்றேன்”

காசு கொடுத்து, சாப்பாடு போட்டு, கௌரவத்தைக் கொடுத்து, என்னையும் நாலு பேர் மதிக்கிற மாதிரி செய்த ஜாவா எனக்கு ஒரு காதலியையும் கொடுக்கும் என்று நான் முதலில் நம்பவில்லை தான். நேத்ராவின் காதலுக்கு கண்ணில்லைன்னு தான் சொல்வேன், அதை அவளிடமும் சொல்லியிருக்கிறேன்.

“ப்ரீத்தீ கே கண்ணு இல்லா அதுரே மெதுலு இதே!”

உன் மூளையைத் தூக்கி குப்பையில் போடுன்னு சொல்ல ஆசைதான், ஆனால் அதனுடன் துணைச்செறுகலாக நம்மைப்பற்றிய நல்ல விஷயம் வருவதால் மூடிக்கொண்டு இருப்பதைத்தவிர வேறுவழியில்லை.

“உனக்கு ஏண்டா கண்ணு என்னைப் போய்ப் பிடிச்சது?” கேட்டாலும் பதில் நேராய் வராது.

“அஷ்டேன்னா? நனகே கொத்து நின்னனு யாரு ப்ரீத்திசில்லா! நானு அஷ்டோன்டு கனிஷ்டா நா நினகே! அஷ்டே.” எனக்குமே கூட தெரியாது என்னை நேத்ரா ஏன் காதலித்தாள் என்று, ஜாவாவில் இருந்த இருக்கும் அசத்தலான ப்ரொக்கிராமிங் அறிவாய் மட்டும் இருக்க முடியாதென்றே நினைத்தேன், இன்னொரு நாள் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டிருந்த ஒருநாள், இது அது என்று தனித்தனியாய் இல்லாமல் ஒட்டுமொத்தமாய் உன்னைப் பிடிக்கும் என்று சொன்னாள்.

நான் அவளிடம் உங்க அம்மா அப்பாகிட்ட நம்ம காதலைச் சொல்லிவிடு என்றதும் ஆச்சர்யமாய்ப் பார்த்தாள், அவள் காதலைச் சொல்லி நானும் மறுக்காமல் ஒப்புக்கொண்ட சில வாரங்களில் நான் அவளிடம் இதைச் சொல்லியிருந்தேன். எனக்கு உள்ளூற பயம் இருந்தது, ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி உன்னை நம்பி சின்ன பெண்ணை அனுப்பினால் இப்படியா செய்வது என்று கேள்விவருமென்று. அதனாலேயே சாதாரண காதல் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருந்த பொழுதே அவளிடம் அப்படிச் சொன்னேன்.

மொபைல் “எடுறா டேய்!” என்று நேத்ரா அவளாய்ப் பேசி செட் செய்துகொடுத்திருந்த ரிங்க்டோனில் அலற, பார்த்தாள் அவள் தான் அழைத்துக் கொண்டிருந்தாள். மொபைல் ஃபோனே உபயோகிக்காத என்னை வழுக்கட்டாயமாய் இழுத்துச் சென்று மொபைல் வாங்கித் தந்தவளும் அவளே, எவ்வளவோ வற்புறுத்தியும் பேஸிக் மொபைல் ஒரு கையோடு, ஒரு காலில் நிற்க தொலைந்து போ சனியனே என்று ஒப்புக்கொண்டிருந்தாள்.

“யெகே அஷ்டொண்டு டைம் தொகொண்டியா போன் ரிசீவ் மாடொகே?”

ரெண்டு ரிங்க் தான் முடிந்திருக்கும் மூன்றாவது ரிங்கிற்குள் எடுத்திருந்தேன்.

“சரி சொல்லு…” எதுவும் விளக்கம் சொன்னால் வருத்தப்படுவாள் என்பதை அந்த இரண்டு வாரங்களுக்குள்ளேயே கண்டுகொண்டிருந்தேன்.

“எந்த ஹுடுகா நீனு, ஏனு அஷ்டோண்தா ஹுடுகரு வெய்ட் மாடுதாரல்லா ஹுடுகியரா காலிகே! அவன் அவன் எப்படா பிகருக்கு ஃபோன் போடலாம்னு காத்துக்கிட்டிருப்பான். நீ என்னடான்னா நான் ஃபோன் பண்ணினாலும் ஒழுங்கா பேசமாட்டேங்குற.”

நான் பதிலெதுவும் பேசாமல் “ம்ம்ம்…” என்றேன்.

“இன்னிக்கு மதியானம் லீவு போட்டுட்டு என்னை வெளியில் கூட்டிக்கொண்டு போகணும்.” மூச்சைக்கூட விடாமல் தொடர்ச்சியாய்,

“I know you are too busy, but today no excuses..."

அவளை பேசவிடாமல் இடைபுகுந்தேன், தெரியும் விட்டால் தொடர்ச்சியா சளசளவென்று பேசுவாள் என்று, நான் காலை இரண்டு மூணுமணிநேரமாவது வேலை செய்யலாம் என்று நினைத்தவனாய்,

“சரி சரி நான் வர்றேன் நீ காலேஜுக்கு வெளியில் நில்லு, PM தடிமாடு வர்றேன் நான் அப்புறம் பேசுறேன்…” சொல்லிவிட்டு சட்டென்று கட் செய்தேன். அவளுக்குமே கூட என்னுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதில் அத்தனை விருப்பம் இல்லைதான், எனக்கு நன்றாய்த் தெரியும் அவளுக்கு கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆவதில் விருப்பம் அதிகமென்று. இல்லாவிட்டால் காதலிக்கவோ பைக்கில் இடுப்பில் கட்டிக்கொண்டு ஊர் சுற்றவோ சினிமாவிற்குச் சென்று படிக்கட்டில் உட்கார்ந்து கடலை போடவோ அவள் என்னைத் தேர்ந்தெடுத்திருக்க நியாயம் இல்லை தான். அழகான, அவளுக்காய் என்ன வேண்டுமானால் செய்கிற ஒரு காலேஜ் வாலிபன் கிடைத்திருப்பான் தான், என்னமோ என்னைப் பிடித்துக் கொண்டு சுற்றுகிறாள். நான் நினைத்தேன் இன்றைக்குமே கூட அவள் அம்மா அப்பாவிடம் எங்கள் காதலைச் சொல்லியிருப்பள் என்றே நினைத்தேன் அதனால்தான் இத்தனை தூரம் செல்கிறாள் என்று.

மதியம் தலையை வலிக்கிறது என்று சொல்லிவிட்டு நேராய் அவள் காலேஜிற்குச் சென்றால், நேத்ரா வெளியிலேயே வெள்ளைச் சுடிதாரில் நின்றுகொண்டிருந்தாள். சாதாரணமாகவே எனக்கு அவளைப் பார்த்தால் தேவதையைப் போன்ற ஃபீலிங் வரும், இன்று வெள்ளைச் சுடிதாரில், ஷேம்பு தலைமுடி காற்றில் கவிதை எழுத, சுற்றிப் போர்த்தியிருந்த ஷால் ‘தோ விழுந்துட்டேன்’ என்று நழுவத்துடிக்க அருகில் வந்து நின்றவளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“ஹேகிதே இது!” சுடிதாரைத் தொட்டுக்காட்டிக் கேட்க நான் பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தேன். அவள் என்ன புரிந்து கொண்டாளோ தெரியாது,

“ஒடித்தினி நினகே” என்று சொல்லி தலையில் கொட்டினாள், நான் சிரிப்பை நிறுத்தாமல் “இரு இரு நான் ஏன் சிரிச்சேன்னு தெரியுமா? ப்ரெண்டுஸுங்க எப்பவும் சொட்டத்தலையோட இருக்கிற ஒருத்தன் அழகான பொண்ணைக் கூட்டிக்கொண்டு திரிந்தால், பாருடா அவனுக்கு வந்த வாழ்வை அப்படின்னு புலம்புவாங்க! இன்னிக்கு நம்ம இரண்டு பேரையும் பார்த்து அப்படி எத்தனை பேர் வயிறெரியப்போகுதோன்னு நினைச்சு சிரிச்சேன். ஆமா நீ என்ன நினைச்சு கொட்டின!”

அவள் தலையில் அடித்துக் கொண்டாள்,

“நானு பேர அன்கொண்டிதே…” சொல்லிவிட்டு நிறுத்தியவளை தொந்தரவு செய்து மேலே சொல்ல வைத்தேன்.

“நீவு நன்னனே சுடிதார் இல்லாகே சன்னாகே இத்தேனி அந்தா நெனெசிகொண்டே…”

காதல் என்று சொல்லி இத்தனை நாட்களுக்குள் இவ்வளவு நம்பிக்கை எங்கிருந்த வந்தது என்று தெரியாது எனக்கு அவள் நம்பிக்கை பயத்தை உண்டாக்கியது அதனால் தான் சீக்கிரமே அம்மா அப்பாவிடம் சொல்லிவிடு என்று வற்புறுத்தத் தொடங்கினேன்.

நைனா என்னிடம் நேராய் எதுவும் இந்த முறையும் பேசவில்லை, தாராபுரத்தை டிஜிட்டல் எஸ்எல்ஆரில் சுட்டுக்கொண்டு வந்த அன்று அம்மா தான்,

“நைனா எதுவும் சொல்லலை உன் விருப்பப்படி செய்யச் சொன்னிச்சி, ஆனால் அவங்க வீட்டில் பேசிடுவியாம். அப்புறம் வந்து பார்க்குறேன்னு சொன்னிச்சி.”

அவரிடம் இருந்து நான் எதிர்பார்த்தது தான், இதற்கு மேல் அவர் எதையும் சொல்லமாட்டார் என்றும் நினைத்தேன் வழக்கம் போல், “தண்ணீ நிறைய குடி, கொஞ்ச தூரமாவது நடந்துட்டு வா இந்த வயசிலேயே பாரு எவ்வளவு குண்டா இருக்க…” எக்ஸ்ட்ரா எக்ஸட்ரா அட்வைஸ் மட்டும் தவறாமல் இந்த முறையும் வந்தது. இருவருக்கும் டாடா காண்பித்துவிட்டு மைசூர் எக்ஸ்ப்ரஸில் உட்கார்ந்தால் நேத்ரா நினைவுதான் வந்தது. அவளை அந்த வாரக்கடைசியில் பேசச் சொல்லியிருந்தேன். உள்ளூர ஹவுஸ் ஓனரைப் பார்த்தால் சாதாரணமாகவே எனக்கு உதறும் அதுவும் நாங்கள் காதலிக்கத் தொடங்கினதும் நன்றாகவே உதறியது. அவள் பேசிவிட்டதாகவும் அவங்கப்பா என்னைப் பார்த்து பேசவேண்டும் என்று சொன்னதாகவும் போன் போட்டு பீதியைக் கிளப்பியிருந்தாள். நான் திருச்சியில் இருந்து மைசூர் வரும் வரை அவங்கப்பாகிட்ட எப்படிப் பேசுவது என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசியில் ஒன்றும் உபயோகப்படாமல் போனது.

நேத்ரா அப்பா நேராய் “காவிரி பிரச்சனைப் பற்றி என்ன நினைக்கிற?” கேட்ட கேள்வி என்னை ஸ்தம்பிக்க வைத்தது. நான் என்னென்ன வகையிலோ இந்த உரையாடலை எனக்கு நானே செய்து பார்த்துக்கொண்டிருந்தேனே தவிர இப்படி ஒரு கேள்வியை நிச்சயம் எதிர்பார்க்கலை. என்ன சொல்றதுன்னே தெரியலை எனக்கு, ஒருவேளை என்னைப் பற்றி நன்றாய்த் தெரிந்து நான் தமிழ்நாட்டிற்கு சப்போர்ட் செய்வேன் என்றும் தெரிந்து என்னை வெட்டிவிட இந்தப் பிரச்சனையை இழுக்கிறாரா என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

மனதிற்குள் முழுவதுமாய் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா துரோகம் செய்துகொண்டிருப்பதாக நினைத்தாலும் வெளியில் சொல்லித்தான் என் தமிழ்நாட்டுப்பற்றைச் செய்யணுமா? கர்நாடகா செய்வது தவறில்லை என்று சொல்லிவிட்டு அவரை ஜெயித்துவிடலாமா என்று யோசித்தேன். அவர் கண்களை தொடர்ந்து செல்லும் முயற்சிகளை நிராகரித்தவராய் சலனமில்லாமல் இருந்தது கண்கள். நான் ஆவது ஆகட்டும் என்று நினைத்தவனாய்,

“அங்கிள் கர்நாடகா செய்றது தப்பு அப்படின்னு நான் நினைக்கிறேன், அங்க மக்கள் விவசாயத்திற்கு தண்ணியில்லைன்னு தவிக்கிறப்ப, அது சரின்னு உச்சநீதிமன்றமே சொன்னதுக்கப்புறமும் பிடிவாதமா இப்படி செய்யறது சரியில்லை. நாமெல்லாம் இந்தியர்கள்னு பெருமைக்காகச் சொல்லிக்கிறோம் பக்கத்து மாநிலத்துக்கே தண்ணீர் தரமாட்டேன்னு சொல்லுது. நான் எக்ஸாக்டா கன்னடிகா மக்கள்னு சொல்லலைன்னாலும். கர்நாடக அரசியல்வாதிகள் செய்றாங்கன்னு சொல்றேன்…” சொல்லிவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.

நெருங்கி வந்து முதுகில் தட்டிக் கொடுத்தவர்,

“நீ சொல்றது சரியா தப்பான்னு நான் பார்க்கலை, நீ இப்படி உன் ப்ரண்டுங்க கூட உங்கக்கா கூட ஆர்க்யூ பண்ணிப் பார்த்திருக்கேன். இன்னிக்கு நான் கேக்குறேன்னு மாத்தி சொல்றியா இல்லையான்னு பார்த்தேன். உண்மையா இருக்கிறவனுக்கு மதம் மொழி ஜாதி எல்லாம் தூசி மாதிரி தொடைச்செறிஞ்சிட்டு போய்டலாம்.”

என்றவர் தொடர்ச்சியாய் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், என் வருங்காலப் திட்டங்கள் என்ன என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார். நானும் என் குடும்பமும் நேத்ரா குடும்பமும் எவ்வளவோ வற்புறுத்தியும் நேத்ரா ஆறு மாதம் கழித்துத்தான் கல்யாணம் செய்துப்பேன் என்று சொல்லிவிட்டாள் அவள் சொன்ன காரணத்தால் நானும் ஒப்புக்கொண்டேன்,

“என் முழு பேர் என்ன தெரியுமா தாஸ்?!” வீட்டிலும் சரி வெளியிலும் சரி அவளை நேத்ரா என்று கூப்பிட்டுத் தெரியும் முழுப்பெயர் தெரியாது. அப்படி எதுவும் இருக்காது என்றே நினைத்தேன் நான்.

“ஏன் கேக்குற நேத்ரா! அதுதான் உன் பேரு.”

“நின்ன மொக்கா, நான் ஹெசுரு நேத்ராவதி, இதே நினகே கொத்தில்லா மத்தே நின்னா ப்ரெமினிசி மாதவி மாட்கொண்டே அந்த ஹொரகே ஹேலிதரே எல்லாரு நன்ன ஹொடிதரயோ!” அவள் தலைகீழ் நின்றதால்,

என்ன அரசியலோ ஃபோரமில் இன்னமும் ஓடிக்கொண்டிருந்த முங்காரு மழ தியேட்டரில் பாப்கார்ன் பெப்ஸியுடன் எங்கள் காதல் வளர்ந்தது பின்னணியில்.

…சூரியுவா சோனியு சூசிதே நின்னதே பரிமளா
இனியாரா கனசுலா நீனு ஹோடரே டலமலா
பூர்ண சந்திர ரஜா ஹாகிதா
நின்னய முகவனு கண்டக்ஷணா
நா கைதி நீனே செரெமனெ
டப்பி நன்ன அப்பிகொ ஒம்…மே ஹக்கே சும்மனே…

கன்னடாவில் மிகப்பிரபலமான பாடல் வரிகள் ஓட அவள் எனக்கு அர்த்தம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

- கன்னட பாஷைக்கு உதவிய நண்பர்களுக்கு நன்னி!

Read More

Share Tweet Pin It +1

19 Comments

In சிறுகதை முதலிரவு

முதலிரவு

அவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம்.  கதவு திறக்கும் சத்தம் கேட்டதாலும், இனிமேல் முடியாது என உணர்ந்ததாலும், திறந்த மடிக்கணினியை மூடும் வேலையை செய்யத் தொடங்கினான்.

கொலுசுச் சத்தம், அவள் நெருங்கிவருகிறாள் என்பதை உணர்த்த, திரும்பிப் பார்த்தான், அவர்கள் வீட்டில் கொலுசுச் சத்தம் கேட்பதில்லை. பெண் குழந்தை இல்லாத காரணமோ என்னமோ தெரியாது. அவன் அம்மா அணிந்திருக்கும் கொலுசு சத்தம் தராது. ஆனால் அதற்காக வருபவளை குற்றம் சொல்ல முடியுமா? திருமணம் முடிந்த முதல்நாள் அன்று, என்பதற்காக மட்டும் கிடையாது. ஒருவேளை அவளுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாகக் கூட கொலுசு இருக்கலாம்.

அவளைப் பற்றி என்ன தெரியும் அவன் யோசித்துப் பார்த்தான். பெயர் அலமேலு, படித்தது ஹோலிகிராஸ் கல்லூரியில் முது அறிவியல் கணிப்பொறி பயன்பாட்டியல், அவ்வளவுதான். இதற்கு முன்னர் வெகுசில சமயந்தான் அவளைப் பார்த்திருக்கிறான். ஒரு முறை நிச்சயதார்த்தத்தின் பொழுதும் பிறகு கல்யாணப் புடவை எடுக்க வந்தபொழுதும். பின்னர் இன்று கல்யாண மேடையிலும் பின்னர் திருமணம் முடிந்தபின்னர் கோவிலிலும்.

இருவரும் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ளவில்லை, இடையில் வந்து பரிசளித்த அவன் பக்கத்து உறவினர்களை அவளுக்கும் அவள் பக்கத்து உறவினர்களை அவனுக்கும் அறிமுகம் செய்து வைத்ததைத் தவிர. அவர்கள் வீட்டில் கேட்டுக்கொண்டதற்காக திருமணம் ஷ்யாமினுடைய சொந்த ஊரில் - திருவிளையாட்டத்தில் - நடைபெற்றது. ஆனால் ஷ்யாம் வீட்டு வழமையில், முதலிரவு அவர்கள் வீட்டில்தான் நடைபெற வேண்டுமென உறுதியாக இருந்ததால், அங்கிருந்து காரில் திருச்சிக்கு மீண்டும் பயணித்தார்கள். ஷ்யாம் தனிக் காரில் அவன் குடும்பத்துடன், அலமேலு வேறொரு காரில் அவளது குடும்பத்துடன்.

அன்றிரவு தான் வரமுடியும் என முன்பே தெரிந்தும் தீர்மானித்தும் விட்டதால் வரவேற்பு அடுத்தநாள் மாலைதான். இடையில் வீட்டிற்கு வந்து சேரும் நேரம், நல்ல நேரமாக இல்லாத காரணத்தால் நேராக மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு போகச்சொல்லி ஷ்யாமின் பாட்டி சொல்ல மறுமொழியில்லாமல் கார்கள் மலைக்கோட்டைக்கு நகர்ந்தன.

அதற்குப் பிறகுதான் வீட்டிற்கு வந்தது. கல்யாணத்திற்காக நினைத்த நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதியளித்த ஷ்யாமின் அலுவலகம், ஒரேயொரு கட்டளையிட்டிருந்தது. அது மின்னஞ்சலில் அனுப்பப்படும் பிரச்சனை சார்ந்த கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும்மென்பது. திருமணத்திற்கு முந்தைய நாள் வரை அமைதியாக இருந்த அவன் அம்மா, திருமண நாளன்று மடிக்கணினியை பிடுங்கி வைத்துக்கொண்டது தான் சோகமே. நாள் முழுக்க வந்த அஞ்சல்களைப் படிக்க வேண்டித்தான் அவன் முதலிரவு என்றுகூட பார்க்காமல் மடிக்கணினியை உபயோகித்துக் கொண்டிருந்தான்.

நினைவு தெரிந்ததிலிருந்தே அவன் உபயோகப்படுத்திய அறைதான், சினிமாவில் காண்பிப்பதைப் போன்று பெரிதும் பூத்தோரணங்களால் அலங்கரிக்கப்படாத அவன் உபயோகப்படுத்திய அதே பழைய கட்டில், ஒரேயொரு வித்தியாசம் ஒன்றிற்கு இரண்டாய் தலையணைகளும், சற்றே பெரிய படுக்கை விரிப்பும்.

உள்ளே வந்தவள், மிருதுவாய் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். பயணக் களைப்பு அவள் முகத்தில் தெரிந்தது; கல்யாணப்புடவைதான் அணிந்திருந்தாள்; இது அவன் அம்மாவின் வேண்டுகோளாயிருக்குமென்று நினைத்தான். அவள் முகத்தைப் பார்த்ததிலிருந்தே மணியம் செல்வத்தின் ஒர் ஓவியம் உருக்கொண்டு வந்ததைப் போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. நீண்ட கண்கள், செழுமையான புருவங்கள், அளவான நெத்தி, நீண்ட சடை, கானலை போலில்லாமல் காணும்படியான இடைகள் ஒன்றுதான் வித்தியாசம் அந்த ஓவியங்களுக்கும் இவளுக்கும் என்று நினைத்தான்.

"உங்களுக்கு வேலையிருந்தால் முடித்துவிடுங்கள். பரவாயில்லை." ஓவியம் அசைந்து பேசுவதுபோல் தான் இருந்தது. பின்னர் நினைவிற்கு வந்தவனாய், "இல்லை முடிஞ்சிருச்சு. நிக்கிறியே உட்காரு!" சொன்னவன் மடிக்கணினியை மடியில் இருந்து பிரித்து அந்தப் பக்கம் வைத்தான்.

"இல்லை கொஞ்சம் எந்திருச்சி நின்னீங்கன்னா..."

அவசரமாய், "இங்கப்பாரு இன்னிக்கின்னு மட்டுமில்லை, என்னிக்குமே நீ என் காலில் விழணும் அப்பிடின்னு அவசியம் இல்லை. எனக்கு பிடிக்காத ஒருவிஷயத்தில இதுவும் ஒன்னு. பரவாயில்லை உட்காரு."

"இல்லை அம்மா சொல்லியிருக்காங்க..."

"உங்கம்மாவா, பரவாயில்லை நாளைக்கு கேட்டாங்கன்னா விழுந்தேன்னு சொல்லு, என்கிட்ட கேட்டாங்கன்னா நானும் சொல்றேன்." சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான். கொஞ்சம் குழப்பமாய் இருப்பதாய்ப் பட்டது, மெதுவாக கட்டிலில் அவன் அருகில் உட்கார்ந்தவளிடம், "இன்னிக்கு உன்கிட்ட நிறைய பேசணும், பேசலாமா?" கேட்டான்.

அவனுக்கு அவள் எப்படிப்பட்ட பெண் என்று தெரியாது, அதுமட்டுமில்லாமல், பெண்களுடனான அவன் அறிமுகமும் மிகக்குறைவே, தன் அம்மாவைத்தவிர வேறு பெண்களிடம் நெருக்கமாய்ப் பழகியதில்லை. ஆரம்பத்திலிருந்தே இருபாலரும் படிக்கும் பள்ளி, கல்லூரியில் படித்தாலும் கூடப்படிக்கும் பெண்களுடன் சண்டை போட்டிருக்கிறானே ஒழிய, சாதாரணமாய் பழகியதில்லை. அந்தப் பெண்களிடம் எதிரி போன்ற ஒரு உருவகத்தையே பெரிதும் எடுத்திருக்கிறான்.

"ம்ம்ம்..." அவ்வளவுதான் பதில் வந்தது.

"எனக்கு உன்னைப்பத்தி எல்லாம் தெரியணும், உனக்கு என்னென்ன பிடிக்கும், பிடிக்காது, எதைப் பத்தியெல்லாம் தெரிஞ்சிக்க ஆசைப்படுற, என்னைப் பத்தி என்ன தெரியணும். இன்னிக்கு உன்னைப் பத்தி நானும் என்னைப் பத்தி நீயும் தெரிஞ்சிக்கணும். அதுதான் முக்கியம்."

"நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா?" கேட்டுவிட்டு  அவனையே பார்த்தாள். அந்தக் கண்களின் உள்ளே சென்று பார்க்க நினைத்தான், அந்தக் கண்கள் எதையுமே தனியாக விளக்கவில்லை.

"நிச்சயமா, கேளு!"

"உங்களுக்கு எதாவது கெட்ட பழக்கம் இருக்கா?"  இந்தக்கேள்வி ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. எதிர்பார்த்ததுதான், ஆனால் முதல் கேள்வியாக இருக்குமென நினைக்கவில்லை.

"புரியலை, நீ கெட்ட பழக்கம்னு எதைச் சொல்லவர்ற? சிகரெட் பிடிக்கிறது, இல்லை தண்ணியடிக்கிறதப் பத்தி கேக்கறன்னா, கிடையாது. வேற எதையாச்சும் பத்தின்னா குறிப்பா கேட்டாத்தான் சொல்ல முடியும்." சொல்லிவிட்டு சிரித்தான், ஏனென்றே தெரியாமல்.

"இல்லை நீங்க குறிப்பிட்டதைத்தான் கேட்டேன், ஏன் நீங்க அந்த தப்பையெல்லாம் பண்ணலை?"

ஆச்சர்யமான கேள்வி என்று நினைத்தான் பலர் இந்தக்கேள்வியை அவனிடம் கேட்டதில்லை, இந்தக் கேள்விக்கான பதில் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது,

"உண்மையைச் சொல்லவா?" தூண்டில் போட்டான்.

"அது உங்கள் விருப்பம்." சிரித்தாள். முதல்முறை இப்பொழுதுதான் விகல்பமில்லாமல் அவள் சிரிப்பதாய்ப் பட்டது. கல்யாண மண்டபத்தில் பரிசுப்பொருள்கள் கொடுத்துக்கொண்டிருந்த பொழுது இருந்த அவளுடைய சிரிப்பில் இருந்து தற்போதைய சிரிப்பு வித்தியாசமாய் இருந்தது. அந்தச் சிரிப்பில் ஒரு செயற்கைத்தன்மையிருந்தது.

"சரி சொல்றேன், உண்மையா இல்லையான்னு நீதான் முடிவு பண்ணணும். எங்கப்பா தண்ணியடிப்பாரு, சொல்லப்போனா தினமும் அதனால வந்தப் பிரச்சனைகளை நேரில் இருந்து பார்த்தவன்ங்கிறதால தண்ணியடிக்க முடியலை. சிகரெட் பத்தி கேட்டீன்னா, என் மாமா சிகரெட் குடிப்பான் அவன் அதை நிறுத்த முடியாம தவிக்கிறதை நேரில் பார்த்திருக்கேன். இதெல்லாம் ஆரம்பத்தில் நான் தவறு செய்யாம இருந்ததுக்கு காரணம்; இப்ப வரைக்கும் அது தொடருதுன்னா அதுக்கு காரணம்..." அங்கே நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான். அவள் மிகவும் ஆர்வமாய் அவன் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தாள்.

"எனக்கு நெத்தி கொஞ்சம் பெரிசுங்கிறதால, ஆரம்பத்திலிருந்தே ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. அதனால என்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போற அழகான பொண்ணுக்கு பரிசா எதையாவது கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுதான் இன்னிவரைக்கும் தொடர்ந்துட்டு வர்றேன். இனிமேலும் என்னை நல்லவனா காப்பாதிக்க வேண்டியது உன் பொறுப்பு." சொல்லிவிட்டு சிரிக்க அவள் சிரிக்காமல் அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"நம்ப முடியலையா?"

அவள் அதற்கு பதில் சொல்லாமல் அடுத்த கேள்வியில் இறங்கினாள்.

"நீங்க யாரையாவது காதலிச்சீங்களா?" அவள் வாய்தான் பேசியதேயொழிய கண்கள் அவன் கண்களையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன; உண்மையை மட்டும் உறிஞ்சக் கூடிய அன்னங்களாய்.

"உண்மையைச் சொல்லணும்னா, இந்தக் கேள்விக்கு பதிலளிக்க சில விளக்கம் வேணும், காதலிச்சீங்களான்னு கேட்டா ரொம்ப பொதுவான விஷயம். சின்ன வயசிலேர்ந்தே எனக்கு நிறைய இனக் கவர்ச்சி இருந்திருக்குது, எட்டாவது படிக்கும் பொழுது பக்கத்தில் பரிட்சை எழுதிய ஆறாவது படிக்கிற பொண்ணு, முதல் முதல்ல பாப் அடிச்சு நான் பாத்த எதிர்த்த மாடிவீட்டுப்பொண்ணு, அந்த பொண்ணு வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்த, உன்னை மாதிரியே ஓவியமா தெரிந்த, ஒருகை இல்லாத ஆன்ட்டி, பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சப்ப கூட வாலிபால் விளையாண்ட பொண்ணு, இப்படி பல பெண்ணுங்களை எனக்கு பிடிச்சிருந்தது; இன்னிக்கு வரைக்கும் பிடிக்கும்; ஆனா ஒன்னு ரெண்டு வார்த்தைகளைத் தவிர அதிகமா இவங்க யார்கிட்டையுமே நான் பேசினது கிடையாது. இல்லை, நான் உண்மையிலேயே யாரையாவது காதலிச்சேனான்னு கேட்டீன்னா இல்லைன்னுதான் சொல்வேன்; அதுக்கும் என்னோட தாழ்வு மனப்பான்மைதான் காரணம்னு வைச்சுக்கோயேன்."

அவன் சொல்லச் சொல்ல அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவளின் முகத்தில் உணர்ச்சியே இல்லையாகையால், "ஏய் என்ன நான் சொன்னதை நம்ப முடியலையா?"

"இல்லை இதைப் பத்தி எனக்கு முன்னாடியே தெரியும்; நீங்கதான்னு நிச்சயமான பிறகு என்கிட்ட தொலைபேசலை, எனக்கு ஏன்னு தெரியாது, நான் நினைச்சேன் ஒருவேளை உங்களுக்கு என்னை பிடிக்கலையோன்னு. உங்கம்மாகிட்ட நான் பேசிக்கிட்டுத் தான் இருந்தேன். அவங்க நீங்க சொன்ன அத்தனையையும் சொன்னாங்க, ஒருவரி விடாம. இன்னோன்னும் சொன்னாங்க."

"என்ன சொன்னாங்க?"

"நீங்க இனிமேலும் தண்ணியடிக்காம, சிகரெட் பிடிக்காம இருக்கிறதுக்கு உத்திரவாதம் தர்றதாகவும் ஆனால் இன்னொரு பொண்ணு பின்னாடி போக மாட்டீங்கங்கறதுக்கு உத்திரவாதம் தரமுடியாதுன்னும், நான்தான் காப்பாதிக்கணும்னும் சொன்னாங்க." சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

அவனுக்கும் தெரியும் அவங்கம்மா இதை சொல்லியிருப்பார்கள்தான், அக்காவோ தங்கையோ இல்லாத காரணத்தால் அவன் சம்மந்தப்பட்ட அத்துனை நிகழ்ச்சிகளும் அவன் அம்மாவிற்குத் தெரியும். அதுமட்டுமில்லாமல் அவன் தன் அம்மாவை வம்பிழுக்க சில சமயங்களில் அதிகமாகவே அவனைப் பாதித்த பெண்களைப்பற்றி சொல்லியது கூட காரணமாக இருக்கலாம்.

"நமக்கு நிச்சயம் ஆகியிருந்தாலும், திருமணம் முடிந்தபிறகுதான் பேசவேண்டும் அப்பிடின்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். அது என் கொள்கை சார்ந்த ஒரு முடிவு. சரி என்னைப் பத்தியே கேட்டுக்கிட்டிருக்கியே, உன்னைப்பத்தி ஏதாச்சும் சொல்லு." அவன் கேட்க,

"என்னைப் பத்தி சொல்றதுன்னா, உங்களமாதிரித்தான் எனக்கும் தண்ணியடிக்கிற, தம்மடிக்கிற கெட்ட பழக்கம் கிடையாது. இன்ஃபேக்சுவேஷன், உங்களமாதிரி தூயதமிழ்ல சொல்லணும்னா இனக்கவர்ச்சி இருந்ததுண்டு, அதுவும் உங்கள மாதிரிதான், ஆனா எனக்கு தாழ்வு மனப்பான்மை கிடையாது. மற்றபடிக்கு நிறைய கோவில் குளமுன்னு ஊர் சுத்துவேன், நிறைய கதையடிப்பேன், புஸ்தகம் படிப்பேன். எனக்குன்னு தனியா கொள்கை எதுவும் கிடையாது, அதேமாதிரி கொள்கையைப் பிடிச்சுக்கிட்டு தொங்கமாட்டேன். எனக்காகத்தான் கொள்கை, கொள்கைக்காக நான் கிடையாது. இன்னிக்கு நீளமான தலைமுடியோட இருக்கிறது பிடிக்குதுங்கறதுக்காக வைச்சிருக்கேன், நாளைக்கே தலைவலிக்கிற மாதிரி இருந்ததுன்னா பாப் அடிச்சிட்டு வந்து நிப்பேன்..." அவள் சொல்லிவிட்டு ஷ்யாமையே பார்த்தாள். அவன் இதற்கு பதில் என்ன சொல்றதுன்னு தெரியாம யோசித்துக் கொண்டிருந்தான்.

"இதுக்கு நீங்க பதில் சொல்லணும் அப்பத்தான், உங்களைப்பத்தி நான் புரிஞ்சிக்க முடியும்." அவள் கேட்டும் இவன் யோசித்துக்கொண்டிருந்ததால் தொடர்ந்தவள், "நிச்சயம் ஆன நாள்ளேர்ந்து காத்துக்கிட்டிருந்தேன்; நம்மாளுக்கிட்ட கடலை போடலாம்னு. நீங்க போன் பண்ணாததால், காதல் தோல்வி போலிருக்கு, நம்ம தலையில கட்டிவைக்கிறாங்கன்னுதான் நினைச்சேன். இப்படி லூசுத்தனமான கொள்கையிருக்கும்னு நினைக்கலை." அவள் சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

அவனும் லேசாய் சிரித்துவைத்தான்.

"இங்கப்பாரு நீ இப்படி வெளிப்படையா பேசுறது ரொம்ப பிடிச்சிருக்கு. நீ உன் முடியை பாப் வெட்டிக்கிட்டு வந்தாலும் சரி, இல்லை நான் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்தான் போடுவேன்னு சொன்னாலும் சரி, அது உன்னோட விருப்பம். அதில் எக்காரணம் கொண்டும் நான் தலையிடமாட்டேன். எனக்கு நீ பண்ணவேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னுதான்."

அவள் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று என்பதால் கவனிக்கிறாளா என்று பார்த்துக்கொண்டான்.

"எங்கம்மா பத்தி நான் சொல்லணும், நான் இன்னிக்கு இந்த நிலைமையில் இருக்கேன்னா அதுக்கு ஒரே காரணம் அம்மாதான்; அடுத்தநாள் உயிரோட இருப்பனான்னே தெரியாத நாட்கள் என்னோட வாழ்கையிலே இருந்திருக்கு, அதிலேர்ந்தெல்லாம் மீண்டு நானும் எங்க குடும்பமும் வந்திருக்குன்னா அதுக்கு ஒரேயொரு காரணம் அம்மாதான். அதனால அம்மாவை மட்டும் நீ அனுசரிச்சுப் போகணும். அதுமட்டும்தான் நான் உன்கிட்ட கேக்குறது, எனக்கும் இந்த பெண்சுதந்திரம் அப்பிடிங்கிற விஷயத்தில் எல்லாம் நம்பிக்கையுண்டு."

அவன் சொல்லிமுடித்ததும் பலமாகச் சிரித்தாள்.

"நான் நினைச்சேன், நீங்க சரியான அம்மா புள்ளையாத்தான் இருப்பீங்கன்னு; சரியாத்தான் இருக்கு. இங்கப் பாருங்க எனக்கும் ஒரு அண்ணன் உண்டு; அவனுக்கு கல்யாணம் ஆகி அண்ணி எங்க வீட்டிலையும் இருக்காங்க. அதனால நீங்க பயப்படாதீங்க; நிறைய கதை கட்டுரையெல்லாம் படிச்சு பயந்து போயிருக்கிறீங்கன்னு நினைக்கிறேன். பயப்படாதீங்க உங்கம்மாவை நான் கடிச்சி தின்னுடமாட்டேன். பிரச்சனையே வராதுன்னு சொல்லமாட்டேன், வந்தாலும் நம்ம இரண்டு பேரும் சேர்ந்து சரி பண்ணிடலாம்.

இன்னோன்னு, இந்த பெண் சுதந்திரம் இதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது சந்தோஷமா இருக்கு. கதை கட்டுரையெல்லாம் எழுதுவீங்க போலிருக்கு. ஆனா எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் பாப் அடிப்பேன்னு சொன்னா, நீங்க உங்க பக்கத்து எதிர்பார்ப்பைச் சொல்லணும், இல்லை என் பொண்டாட்டி பாப்பெல்லாம் அடிக்ககூடாதுன்னோ இல்லை பரவாயில்லை அடிச்சுக்கோன்னோ; அதெல்லாமில்லாம அது உன்னோட விருப்பம்னு சொல்றது எனக்குப் பிடிக்காது. உரிமை எடுத்துக்கணும் என்கிட்ட, அதேபோல்தான் நானும், பெர்முடாஸ் போட்டுக்கிட்டு ரோட்டில் ஆம்பளைங்க நடக்கிறது எனக்கு பிடிக்கலைன்னா, உங்களை நடக்க விடமாட்டேன். அந்த உரிமையை நீங்களும் எடுத்துக்கலாம்.

எனக்கு இந்த விவாகரத்து பண்றதுல எல்லாம் நம்பிக்கையே கிடையாது, இனிமே எனக்கு நீங்கதான், நீங்க மட்டும்தான். அதேமாதிரிதான் உங்களுக்கும் நான் மட்டும்தான், உங்கம்மா சொன்னாங்கறதுக்காக எல்லாம் மணியம் செல்வம் ஓவியம் மாதிரியிருக்குறா இல்லை அஜந்தா ஓவியம் மாதிரியிருக்குறான்னு சொல்லிக்கிட்டு வேறபொண்ணை சைட் அடிக்கலாம்னு நினைச்சீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன், பின்னிடுவேன்.

கடைசியா ஒன்னு, நீங்க குறிப்பிட்டதால சொல்றேன். எனக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போடுறது பிடிக்காது." சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.

ஆச்சர்யமாய் இருந்தது, வந்தவுடன், "இல்லை கொஞ்சம் எந்திருச்சி நின்னீங்கன்னா..." அப்பிடின்னு திருதிருன்னு முழிச்சிக்கிட்டே கேட்ட பொண்ணா இவள் என்று யோசித்தான். சந்தேகமாய் இருந்தது, அதேபோல் சந்தோஷமாயும். மனதில் பட்டதை வெளிப்படையாய் பேசிவிடுகிற பெண்கள் எப்பொழுதுமே பிரச்சனையில்லாதவர்கள், அவன் அம்மாவைப்போல்.

அவன் யோசித்துக்கொண்டிருக்க, "என்ன பலத்த யோசனை?" அவள் கேட்டாள்.

"இல்லை, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நல்ல பொண்ணா, கொஞ்சம் எழுந்திருச்சி நிக்கிறீங்களா அப்பிடின்னு கேட்ட பொண்ணா இதுன்னு யோசிச்சேன்." சொல்லிவிட்டு சிரித்தான்.

"கால்ல விழுறதப் பத்தி கேக்குறீங்கன்னா, இப்பவும் கேக்குறேன் எந்திரிச்சு நில்லுங்கோ நமஸ்காரம் பண்ணிக்கிறேன். எங்கள் வீட்டில் நல்லநாள் பெரியநாள்னா பெரியவங்க காலில் விழுவது சம்பிரதாயம் தான், நானும் ஏன் என் அண்ணணுமே இன்னமும் எங்க மாமா, அத்தை காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது உண்டு, அதனால் புருஷனான உங்கள் காலில் விழுவதிலும் எனக்கு பிரச்சனை கிடையாது. இல்லை நான் அதிகமா பேசுறேன்னு நினைச்சீங்கன்னா, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை, பழக்கதோஷம்னு வேண்ணா வைச்சுக்கோங்கோ." முகம் லேசாக வாடத் தொடங்கியிருந்தது. அவன் அவள் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்து கொண்டு, "இல்லம்மா, நான் வேடிக்கையாத்தான் சொன்னேன், நீ உங்கவீட்டில் எப்படி இருப்பியோ அப்படியே இங்கையும் இருக்கலாம். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் குழந்தைகளைப் பற்றி நீ எதாச்சும் யோசிச்சு வைச்சிருக்கியா, வேலைக்கு போறாப்புல எதுவும் ஐடியா இருக்கா?"

"எனக்குத் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தங்க கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க; அவங்க சொன்னாங்க, நம்ம இரண்டுபேருக்கும் குழந்தை பெத்துக்குறதுக்கு இதுதான் நல்ல வயசாம். அதனால தள்ளிப்போடாம பெத்துக்கச் சொன்னாங்க. எங்கம்மாவும் இதைத்தான் சொன்னாங்க; மற்றபடிக்கு நீங்க வேற ஏதாச்சும் யோசிச்சு வைச்சிருந்தா சொல்லுங்க, அதேமாதிரி வேலைக்கு போறாப்புல ஐடியாயெல்லாம் கிடையாது, லட்சியமே அதுதான், நீங்கத்தான் பெரிய கம்பெனியில வேலை பார்க்குறீங்கல்ல. வாங்கிக் கொடுங்க." சொல்லிவிட்டு நக்கலாய்ச் சிரித்தாள்.

"எனக்கும் நாம் சீக்கிரமா குழந்தை பெத்துக்குறதுதான் நல்லதா படுது, உன் வேலையைப் பத்தி கவலைப் படாதே, உனக்கு ஆர்வமிருந்தா போதும், படிப்பு முடிந்தவுடன் வாங்கிரலாம். வேற ஏதாச்சும் கேக்கணும்னா கேளு, இல்லைன்னா ஒரே ஒரு வேண்டுகோள், எனக்கு கொஞ்சம் மின்னஞ்சல் எல்லாம் பாக்க வேண்டியிருக்கு, பத்து நிமிஷம் கொடுததேன்னா பார்த்திடுவேன்." கெஞ்சலாய்ப் பார்த்தான்.

"அப்பவே சொன்னேன்ல பார்த்துக்கோங்கன்னு, ஆனா ஒன்னு உங்க அம்மா சொன்னாங்க லேப்டாப் உங்க முதல் பொண்டாட்டி மாதிரின்னு; அப்பிடியிருக்காதுன்னு நினைக்கிறேன். அப்பிடித்தான்னா உங்க லாப்டாப்புக்கு நேரம் சரியாயில்லைன்னு அர்த்தம், உங்களை நீங்களே மாத்திக்கோங்க." சொல்லி விட்டு மீண்டும் நக்கலாய்ச் சிரித்தாள்.

"அம்மா தாயே லாப்டாப்பை ஒன்னும் பண்ணீராதம்மா, இனிமே இந்த ரூமிற்குள்ளேயே எடுத்துட்டு வரமாட்டேன். இன்னிக்கு ஒருநாள் மன்னிச்சிரு." இரண்டு கைகளையும் கூப்பி அவனும் நக்கலடித்தான்.

"சரி சரி பொழச்சுப்போங்க, முதல் நாள்னு மன்னிக்கிறேன், நான் இந்த புடவையை கழட்டிவைச்சிட்டு நைட்டி போட்டுட்டு வருவேன்; அதுக்குள்ள பாத்து முடிச்சிருக்கணும். என்ன புரியுதா?" அவள் கேட்டுவிட்டு அங்கிருந்த குளியலறைக்குள் நுழைய, அவன், 'ஆகா, ப்ரண்ட்ஸ் எல்லாம் சொன்னதையும் மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்போ?!' என்று யோசிக்க ஆரம்பித்தான்.

Read More

Share Tweet Pin It +1

32 Comments

In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 4

ஞாயிற்றுக் கிழமை, காலையில் மோகன் எழுந்ததிலிருந்து சன் டிவியில் வரும் நிகழ்ச்சிகள் எல்லாம் தொடர்ச்சியாகப் பார்த்துவிட்டு நிமிர்ந்தால் மதியம் மணி ஒன்றாகியிருந்தது, தலைவருடைய தளபதி படம் வேறு போட்டிருந்தான். மோகன் அவனுடைய அப்பா, அம்மா, அக்கா எல்லோரும் உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் அவனுக்கு நினைவில் வந்தது அகிலாவிடம் அவன் அன்றைக்கு லைப்பரரிக்கு வருவதாகச் சொல்லியிருந்தது. உடனே  அவசரமாக கிளம்ப நினைத்தவன், அம்மா "தம்பி, இருடா நைனா பால் வாங்கிட்டு வந்திரும். காப்பி குடிச்சுட்டு போ!" சொல்லவும் அம்மா பேச்சைத் தட்ட முடியாமல் காப்பி குடித்துவிட்டுக் கிளம்பும் போது மணி ஐந்து. அந்த லைப்ரரி ஞாயிற்றுக் கிழமைகளில் ஆறு மணிக்கெல்லாம் சாத்திவிடும். அவனுக்கென்னமோ அவள் வந்திருக்கமாட்டாள் என்று எண்ணம் ஓடினாலும், அவளைப் பார்ப்பதற்காக இல்லாவிடினும் புத்தகம் மாற்றவாவது போகலாம் என்று நினைத்துக் கொண்டு லைப்ரரி சென்றான்.

தூரத்திலிருந்து பார்க்கும் பொழுதே அங்கு, அகிலா உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. ஆகா காலையிலேயே வந்திருப்பாள் போலிருக்கிறது, இன்றைக்கு மாட்டிக்கொள்ளாமல் நாளைக்கு கல்லூரிக்கு வந்து வேறு ஏதாவது சாக்கு சொல்லிக் கொள்ளலாம் என அப்பொழுதுதான் திரும்பியிருப்பான், பின்னால் யாரோ வேகமாக நகர்ந்து அவனை நோக்கி வருவதைப்போல் தோன்றியது. திரும்பினால் எதிரே அவள் தான் நின்று கொண்டிருந்தாள்.

"இல்லை சாரி, மறந்துட்டேன். அடுத்தவாரம் வந்து பண்ணிக்கலாமே?" உண்மையிலேயே மனம் சங்கடப்பட்டது, சமாதானம் சொன்னான்.

"காலையிலேர்ந்து வெய்ட் பண்ணுறேன், இப்பத்தான் வந்தீங்க. என்னைப் பார்த்ததும் ஏதோ பேயைப் பார்த்ததை போல ஓடுறீங்க?" அவள் கண்களில் கோபமில்லை விளையாட்டுத்தனம் இருந்தது ஆனால் என்னயிருந்தாலும் தவறு அவனுடையது என்பதால்.

"அதான் சாரி கேட்டேன்ல..." என்றான்.

"பண்ணறதை எல்லாம் பண்ணீற்ரது, அப்புறம் சாரி கேட்கிறது," வேறு எங்கோ முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னாள். அவள் எந்த நிகழ்ச்சியைச் சொல்ல வருகிறாள் என்று தெரிந்திருந்தாலும் சட்டென பழகிய வார்த்தை மனதில் ஓடியது.

"what do you mean?" வந்துவிட்டது.

"I mean, what I mean!" பெரிய இங்கிலீஷ் ப்ரொபசர் போல் பதில் சொன்னாள், ஆனால் எந்தக் கணத்திலும் கோபம் மட்டும் இல்லவேயில்லை, கண்கள் விளையாட்டாய்ச் சிரித்துக் கொண்டேயிருந்தது.

ரொம்பத்தான் என்று நினைத்துக் கொண்டவனாய், "சரி இப்ப என்ன பண்ணனுங்ற?" அவன் கேட்க,

"என்னைக் காக்க வைச்சதுக்குப் பரிகாரமா, காபி ஷாப் கூட்டிட்டு போகணும்"
என்னடா இது இரண்டு நாளில் தைரியம் அதிகம் வந்துவிட்டது போலிருக்கே என்று நினைத்தபடியே,

"எதுக்கு?" 

"காபி ஷாப் எதுக்கு போவாங்க, காப்பி சாப்பிடத்தான்" சொல்லிச் சிரிச்சாள்.

காபி ஷாப் வந்து சேர்ந்தார்கள். பேரர் வந்ததும் இரண்டு நெஸ்கஃபே ஆர்டர் செய்துவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்னா?" அவனையே தின்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தது சங்கடத்தை அளித்தது. அப்படி வெறுமனே அவள் பார்த்துக் கொண்டிருப்பதற்கு அவளிடம் பேசிவிடுவதே உத்தமம் என்று நினைத்துக் கேட்டான்.

"இல்ல உங்ககிட்ட பர்ஸனலா கொஞ்சம் பேசணும்." என்றாள்.

"எதைப்பத்தி?"

"உங்களைப்பத்தி..."

"என்னைப் பத்தி என்னா?"

"சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னு..." இழுத்தாள்.

"தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்யப்போற?"

"இல்ல சும்மாத்தான், அக்கா உங்களைப் பத்தி நிறைய சொல்லுவாங்க."

"என்ன சொல்லுவா?"

"நீங்க நல்லா படிப்பீங்க, நிறைய ட்ராயிங்க் வரைவீங்க, தனியா ப்ராஜக்ட்டெல்லாம் எடுத்துப் பண்றீங்கன்னு, நான் கூட வரைவேன்..."

"ம்ம்ம், தெரியும். அதுக்கென்ன?"

"இல்ல, நான் வெறும் பென்சில் ஸ்கெட்ச் மட்டும் தான் பண்ணுவேன், நீங்க என்னெல்லாம் பண்ணுவீங்க?"

"நானும் பென்சில் ஸ்கெட்ச் மட்டும் தான் பண்ணுவேன், அதுக்கென்ன?"

"இல்ல, நான் அப்ஸரா 4B பென்சில் தான் உபயோகிக்கிறேன். நீங்க?"

"ஏய்! உனக்கு என்ன கேட்கணும் நேரா கேளு?"

"நீங்க யாரையாவது காதலிக்கிறீங்களா?" கேட்டுவிட்டு தலையைக் குனிந்துகொண்டாள். அவள் எங்கே எதற்கு வருகிறாள் என்பது சரியாய்த் தெரியாவிட்டாலும் இப்படியொன்று இருக்க முடியுமென்று ஊகித்திருந்தான். அவள் கண்களில் தெரிந்த அந்த விளையாட்டு, சுட்டித்தனம் எல்லாம் அதையே வழிமொழிந்தன.

"ஆமாம் காதலிக்கிறேன், என் சொந்தக்கார பொண்ணு ஒருத்தியை"

அதற்குப்பிறகு அவள் எதுவும் பேசவேயில்லை, நான் காபிக்கு காசு கொடுத்துவிட்டு, "கொஞ்சம் வேலையிருக்கு வர்றேன்" என்று சொல்லி வீட்டிற்கு வந்துவிட்டான்.

"அப்பா நிம்மதி", இனிமே தொந்தரவு பண்ண மாட்டாள் என்று நினைத்தான். ஆனால் அடுத்த நாள் இடி ஒன்று தலையிறங்கியது. காலையில் ஃப்ரெண்ட் வண்டியில் கல்லுரிக்கு வந்தான். அகிலாவைப் பார்க்கவேண்டாம் என்பது தான் முக்கிய காரணம். ஆனால் கல்லூரி பஸ் வந்த கொஞ்ச நேரத்திலேயே, கனிமொழி நேராக அவன் கிளாஸ் ரூமிற்கு வந்து என் அருகில் அமைதியாக நின்றாள். அப்படியிருக்கும் பழக்கமில்லாதவள் ஆகையால் அவனே தொடங்கினேன்.

"என்ன கனிமொழி?"

"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..." தயங்கினாள்.

"ம்ம்ம், சொல்லு. என்ன விஷயம்."

"இல்லண்ணே, தனியாத்தான் சொல்லணும்."

"சரி வா, கேன்டீனுக்கு போகலாம்" என்று சொல்லி கேன்டீனுக்கு அழைத்து வந்தான். அங்கே வந்தும் பேசாமல் இருந்தாள்.

"என்னம்மா சொல்லு, எதைப்பத்தி பேசணும் உன் பிரண்ட்டப் பத்தியா, பரவாயில்லை சொல்லு..." அவளை வழிக்குக் கொண்டுவர நினைத்தவனாய்.

"ஆமா அவளைப்பத்தி தான்..."

"என்ன விஷயம்"

"அண்ணே நான் சொல்ரனேன்னு தப்பா நினைச்சுக்க கூடாது, அவ உங்களைக் காதலிக்கிறாளாம். இந்த விஷயத்தை நான் உங்ககிட்ட சொல்லணும்னு ஒரே அடம். நான் எவ்வளவோ சொல்லிட்டேன கேட்கவே மாட்டேங்குறா." ஏறக்குறைய இப்படிப்பட்ட ஒன்று நடக்கும் என்று நினைத்திருந்தான். ஆனால் அத்தனை சுலபமாய் அவளால் இந்த விஷயத்தை நகர்த்த முடியும் என்று நினைத்திருக்கவில்லை. அவளுக்கு அவன் மனம் தெரிந்திருந்தது கனிமொழி மூலமாய் இந்த விஷயத்தை அவனிடம் சொல்ல வைத்ததில் ஒரு தனித்திறமை இருந்தது. அந்தத்திறமை அவனுக்கு கோபமளித்தது. ஆனால் பாவம் கனிமொழி, அகிலா இந்த விஷயத்தில் கனிமொழியை இழுத்திருக்கவேண்டாம் என்றே நினைத்தான்.

"என்னாடி இது வம்பாயிருக்கு, அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து விளையாடுறீங்களா, நேத்திக்கு அவ என்னன்னா வீட்டுக்கு வந்து ‘அத்த என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க’ன்னு எங்கம்மா கால்ல விழுறாள். நீ என்னடான்னா இன்னிக்கு வந்து அவள் காதலிக்கிறான்னு சொல்றே. என்னம்மா இது. அவதான் சின்ன பிள்ளை உளருறான்னா நீயுமா? அதுசரி நேத்திக்கு தான் நான் அவகிட்ட என் சொந்தக்கார பொண்ணை காதலிக்கிறேன்னு சொன்னேனே. அப்புறமும் ஏன் இப்படி சொன்னாள்."

"நான் அவகிட்ட சொல்லியிருக்கேன், உங்க அக்கா, அம்மாவுக்கு பிறகு ஒரு பெண்ணுக்கிட்ட பேசுறீங்கன்னா அது நான் தான்னு. அதனால நீங்க சொன்னத அவ சுத்தமா நம்பவேயில்லை, இதிலே கொடுமையென்னன்னா என்கிட்டையே நீ அவரை காதலிக்கிறியான்னு கேட்டா, ஒரே அறை, ஆனா வாங்கிட்டு சிரிக்கிறா. நான் அவகிட்ட அதுக்குப்பிறகு பேசவேயில்லை, ஆனா ராத்திரி முழுக்க தூங்காம ஒரே அழுகை, பார்க்க சகிக்கலை. அதான், உங்ககிட்ட சொல்லிட்டேன், இனி நீங்களாச்சு, உங்க காதலியாச்சு" அவன் அவளிடம் அதீத கோபம் காட்டாததன் காரணமாய் அவள் அவனைச் சீண்டினாள்.

"அக்கா, தங்கச்சி ரெண்டுபேரும் உதை வாங்கப் போறீங்க, நீ போய் உடனே நான் அவளைப் பார்க்கணும் சொன்னேன்னு சொல்லு."

கால் மணிநேரத்தில் அகிலா கேன்டீனுக்கு வந்தாள்.

"ஏய், கனிமொழிக்கிட்ட என்னடி சொன்ன?" கத்தினான்.

மௌனமாக நின்றாள்.

"கேட்கிறேன்ல, சொல்லமாட்டே, இங்கப்பாரு உனக்கு ஒரு பதினாரு இல்லை பதினேழு வயசிருக்குமா, அதுக்குள்ள உனக்கு காதலா. நீ எப்பிடியோ போ, ஆனா என்னை ஏன் பிரச்சனையில் மாட்டிவிடுற. எனக்கு எத்தனையோ கனவு இருக்கு, உன்னைப்போல யாருண்ணே தெரியாத பெண்ணை - பெண்ணை என்ன பெண்ணை - குழந்தையையெல்லாம் காதலிக்க முடியாது. அதுமட்டுமில்லாம நான் காதலிக்கிறதுக்காக இங்க வரலை. இதனாலத் தான் நான் பொண்ணுங்க கூட பழகுறதேயில்லை. இப்பப் பாரு கனிமொழிக்கு எனக்கும் இருக்கிற உறவையே நீ சந்தேகப்படுற. இதுதான் உனக்கு கடைசி வார்னிங். இனிமே இதைப்பத்தி நீயோ இல்லை யாராவதோ என்கிட்ட பேசினா, நான் உங்க அப்பாகிட்ட சொல்லிடுவேன். அதே மாதிரி என் பின்னாடியே சுத்தறது, என்னையே பார்த்துக்கிட்டு இருக்கிறது, எல்லாத்தையும் நிறுத்தணும் இல்லைன்னா நான் இந்த காலேஜ் விட்டே நின்னுடுவேன். என்ன புரியுதா?"

தலையை மட்டும் ஆட்டினாள்.

"வாயத்திறந்து பதில் சொல்லு..."

"சரி, ஆனா ஒரே ஒரு சந்தேகம். நீங்க என்கிட்ட சொந்தக்கார பொண்ணை காதலிக்கிறேன்னு சொன்னது உண்மையா? பொய்யா?"

"அதெதுக்கு உனக்கு?"

"நான்தான் நீங்க கேட்டதுக்கு சரின்னுட்டேன்ல, சொல்லுங்க?"

"சரி பொய், அதுக்கென்ன?"

"அது போதும்," என்று அவன் தாடையைத் தடவி அவள் உதட்டில் வைத்து "உம்மா.............." என்று சொல்லிவிட்டு ஓடிப்போய்விட்டாள்.

அவன் தலையில் அடித்துக் கொள்ள, கேன்டீனில் டீ விற்கும் கிழவி அவனைப் பார்த்து சிரித்தாள்.

(தொடரும்...)

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 3

அடுத்த நாள் காலையில் மோகன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொழுது, கனிமொழியும், அகிலாவும் ஒன்றாக நடந்து வந்து கொண்ருந்தார்கள். ஆஹா இன்று கனிமொழியிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைத்தவனாய் அருகில் இருந்த ஒரு டீக்கடையில் நுழைந்தான். பெண்கள் டீக்கடையில் டீ குடிப்பதில்லை. கனிமொழி தூரத்தில் இருந்து அவனை கோபத்துடன் பார்த்தாள். ஆனால் கல்லூரிப் பேருந்தில் வந்து உட்கார்ந்ததும் மாட்டிக் கொண்டான்.

கனிமொழி, "சார்லஸ், நீங்க முன்னாடி ஸீட்டில் உட்காருங்களேன்" என்று சார்லஸை எழுப்பிவிட்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள். மனம் பதற்றப்படத் தொடங்கியது.

"என்னம்மா சொல்றா உன் பிரண்ட்?" அவனே ஆரம்பித்தேன்.

"ஆனாலும் அண்ணே, நீங்க பண்ணினது சரியில்லை!"

"எதைச் சொல்ற?..."

"அகிலா நேத்திக்கு பூரா ஒரே அழுகை, நான் பயந்திட்டேன் யாராவது நான் இல்லைன்னு ரேகிங் ஏதும் பண்ணிட்டாங்களோன்னு. ஆனா நம்ம காலேஜூல ரேகிங் கிடையாதுங்கறதால, ஏண்டி அழறேன்னு கேட்டா உங்க பேரைச் சொல்றா, சின்னப் புள்ளையை இப்படியா பயமுறுத்துறது?"

"இதென்னாடி வம்பாயிருக்கு, நான் என்னா பண்ணினேன் உன் ஃபிரண்டை, கூப்பிடு அவளையே கேட்கிறேன்!"

"ம்... இங்கப் பாருங்க, நான் சொன்னேன்னு சொன்ன பின்னாடியும் நோட்ஸ் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்களாமே." அவள் உண்மையில் கோபத்துடன் கேட்டாள்.

"ஏய் இங்கப் பாரு அவ உங்கிட்ட எதையோ மறைக்கிறான்னு நினைக்கிறேன், அவளை காலேஜூல பார்க்கிறதுக்கு முன்னாடி ஒரு பேச்சுப்போட்டியில பார்த்தேன், என்னைப் பத்தி தப்பா பேசினா, அடிச்சிட்டேன், பின்னாடி தப்புன்னு தெரிஞ்சதும் மன்னிப்பும் கேட்டுட்டேன். நீயே சொல்லு அவளோ பர்ஸ்ட் இயர், என்கிட்ட நேரா வந்து நோட்ஸ் கொடுன்னா எப்பிடு கொடுப்பேன், அவ முதல்ல உன் பேரைச் சொல்லவே இல்லை, சொன்ன பின்னாடி கொடுக்கிறேன்னு சொல்லிட்டேன்"

"ஆகா, இவ்வளவு நடந்திருக்கா. கள்ளி என்கிட்ட சொல்லவேயில்லை, ஆமா ஒரு நாள் வந்து உம்முன்னு உட்கார்ந்திருந்தா, அப்பிடியிருக்க மாட்டாளேன்னு, என்னாடின்னு கேட்டேன். ஒன்னுமில்லைன்னுட்டா, சரி யாரோ ஒரு பையனை சாக்கா வச்சு சொன்னீங்களாம் நோட்ஸ் தரேன்னு, அதை ஏன் என்கிட்ட நேரே சொல்லலைன்னுதான் ஒரே அழுகை." பின்னர் குரலை குறைத்து, "அண்ணே, அவளுக்கு அம்மா கிடையாது, அப்பா புரோகிதம் அதனால காசு கிடையாது. +2வில நல்ல மார்க் ஆனாலும் இங்க நம்ம காலேஜூல தான் சீட் கிடைத்தது. அது மட்டுமில்லாம ரொம்ப வெகுளிப் பொண்ணு, ஊரு, ஒலகத்தப்பத்தி ஒண்ணுமே தெரியாது. அவங்கப்பா என்கிட்ட வந்து நீதாம்மா பார்த்துக்கணும்னு சொல்லி விட்டுட்டு போயிருக்காரு, இப்பக்கூட எங்கவீட்டுக்கு தொந்தரவா இருக்க மாட்டேன்னு ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறேங்கிறா; அப்பா இவளை தனியா அனுப்ப முடியாது. வேணுமின்னா நீயும் ஹாஸ்டல்ல தங்கிப் படீங்கிறார். இவளால நானும் இப்ப ஹாஸ்டல்ல தங்கணும்." மூஞ்சை சோகமாக வைத்துக் கொண்டாள்.

"சரி நான் ஏதாவது சொல்லணுமா உன் ஃப்ரெண்ட்டுகிட்ட?"

"அண்ணே, அவ அப்படியே உங்கள மாதிரி தான், நல்லா படிப்பா, நல்லா பேசுவா, நல்லா ஓவியம் கூட வரைவா, நான் நினைச்சேன் நம்ம கூட அவளையும் சேர்த்துக்கிலாம்னு, நீங்கத்தான் உங்களுக்கு ஒத்து வராதவுங்க கூட பழகமாட்டீங்க. இவளோட எல்லாமும் ஒத்துவரும்னாலும் அதுக்காட்டியும் சண்டை போட்டு, அடிச்சுவேறபுட்டீங்க. நான் சொல்றத சொல்லிட்டேன் இனிமே உங்க விருப்பம்." என்று சொல்லிவிட்டு திரும்ப போய் அகிலாவிடம் உட்கார்ந்து கொண்டாள்.

பிறகு அவர்கள் இருவரும் ஏதோ பேசிக்கொண்டார்கள், சிறிது நேரத்தில் அகிலா மீண்டும் அழத் தொடங்கினாள்.

அய்யோ இதென்னடா பெரும் தலை வேதனையாப்போச்சே என்று நினைத்துக்கொண்டே மோகன் கண்களை மூடினான்.

அன்றைக்கெல்லாம் நிறைய வேலை இருந்ததால் வேறு எதைப்பற்றிய நினைவும் வரவே இல்லை அவனுக்கு. சாப்பிடும் நேரத்தில் கனிமொழி அவனைப் பார்க்க வந்திருந்தாள், அவளிடம் அகிலா கேட்ட நோட்ஸ்களைக் கொடுத்து விட்டு, "இங்கப்பாரு உன் ஃபிரண்ட்கிட்ட சொல்லு, அவ உட்கார்ந்து காப்பி எடுப்பாளோ, இல்லை ஜெராக்ஸ் எடுப்பாளோ எனக்குத் தெரியாது, இரண்டு நாள்ல எனக்கு நோட்ஸ் திரும்ப வேண்டும். உனக்காகத்தான் அவளுக்கு நோட்ஸ் கொடுக்கிறேன். எனக்கு ரொம்ப வேலையிருக்கு இன்னொருநாள் உட்கார்ந்து பேசுவோம்" என்று சொன்னதும் அவளும் சென்றுவிட்டாள்.

அடுத்த நாள் சனிக்கிழமை, கல்லூரி கிடையாது என்பதால் வீட்டில் ஆஸ்திரேலியா விளையாடிக் கொண்டிருந்த கிரிக்கெட் மாட்ச் பார்த்துக் கொண்டிருந்தான்.

வெளியே யாரோ கூப்பிடுவது போல் சப்தம் கேட்டது, ரூம் ஜன்னலிலிருந்து பார்த்தால் அகிலா நின்று கொண்டிருந்தாள்.

"அத்தே..."

தன் அம்மாவையா கூப்பிடுறாள் பாவி என்று நினைத்து, உடனே வெளியில் வரலாம் என்று நினைத்தால் அவன் அணிந்திருந்த உடுப்பு பத்தலை, அதனால் மேல்சட்டையைத் தேடி போட்டுக் கொள்வதற்குள், அவன் அம்மா கதவைத் திறந்துவிட்டார்கள்.

"யாரும்மா நீ?"

"அத்தே, இது மோகன் வீடு தானே, எனக்கு அவரைப் பார்க்கணும்..."

"அவன் வீடுதான் நீயாரும்மா?"

"நான் அவர் கூடப் படிக்கிற பொண்ணு, சும்மா பார்த்துட்டு போகலாம்னு வந்தேன், என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தே!" என்று சட்டென்று அவங்கம்மா காலில் விழுந்துவிட்டாள்.

அம்மா உடனே பதற்றமாகி, "என்ன பொண்ணும்மா நீ, கால்ல எல்லாம் விழுந்துட்டு. கூப்பிடுறேன் பேசிக்கிட்டிரு, நான் உனக்கு காப்பி கொண்டு வரேன்" என்று அவளிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குள்ள வந்து அவனிடம் "டேய், உன்னைப் பார்க்க யாரோ பொண்ணு வந்திருக்கு, போய்ப்பாரு" என்று சொல்லிவிட்டு அடுப்பறைக்குள் போய்விட்டார்கள்.

நேராய் அவளிடம் சென்று, "ஏய், இங்க எதுக்கு வந்த?" அவன் கேட்க

"ஏங்க, அந்த சுவற்றில இருக்கிறது நீங்க வரைஞ்சதா, சூப்பராயிருக்கு" வீட்டுச் சுவற்றில் சாக்பீஸ் கொண்டு வரைந்திருந்த ஓவியத்தைப் பார்த்து தான் கேட்டாள்.

"இத சொல்லறதுக்குத்தான் வந்தியா?" ஏறக்குறைய கத்தினான்.

"இல்ல, நீங்கத்தான் கனி அக்காகிட்ட நோட்ஸ் சீக்கிரம் வேண்டும்னு கேட்டீங்களாம். அதான், ஜெராக்ஸ் எடுத்துட்டு அப்பிடியே உங்க வீட்டிலேயே திரும்பி கொடுத்துட்டு வந்திரலாம்னு வந்தேன்."

அடுத்தக் கேள்வி கேட்குறதுக்குள்ள அம்மா காபி டம்பளருடன் திரும்பி வந்து, "கனி அக்காவா அது யாரு? தம்பி, நம்ம கனிமொழியா" அவளிடம் நீட்டினார்கள்.

"ம்ம்ம்... நம்ம கனிமொழிதான், இவ அவளோட தங்கச்சி முறை, அகிலாண்டேஸ்வரின்னு பேரு, நம்ப காலேஜூலத்தான் படிக்குது!"

"அப்பிடியா, நீ பேசிட்டிரு நான் கடைவரைக்கும் போய்ட்டு வந்திர்ரேன்"

அம்மா போனபிறகு, "அதுக்காக, வீட்டுக்கா கொண்டு வரச்சொன்னது? திங்கட்கிழமை காலேஜூல கொடுக்க வேண்டியதுதானே?"

"ஏன் நான் வீட்டுக்கு வரக்கூடாதா?" திரும்பவும் கண்களில் நீர் முட்டிக் கொண்டிருந்தது அவளிடம்.

"சரி கொடுத்துட்டேல்ல, கிளம்புறது" நழுவத் தயாரானான்.

"என்னை துரத்துறதிலேயே இருக்கீங்க..." புலம்பினாள்.

"சரி, என்னாத்தான் பண்ணனும்"

"எனக்கு இங்கிருக்கிற லைப்பிரரியில, மெம்பராகணும். கனி அக்காதான் சொன்னாங்க நீங்க மெம்பருன்னு; நான் மெம்பராகணும்னா, ஏற்கனையே இருக்கிற மெம்பர் யாராவது கையெழுத்து போடணுமாம். அதான் நீங்க போடுவீங்களான்னு கேட்க வந்தேன்." என்னவோ ப்ளான் போட்டுத்தான் வந்திருக்கிறாள் என்று நினைத்தான்.

"நாளைக்கு காலையில வந்து கையெழுத்து போடுறேன், இப்ப கிளம்புறியா?" அம்மா திரும்ப வருவதற்குள் அவளை அனுப்பிவிட வேண்டும் என்று நினைத்தான்.

"அத்த வந்ததும் சொல்லிட்டு போறேன்" பிடிவாதம் செய்தாள்.

இன்றைக்கு உதை வாங்கித்தராம போக மாட்டாள் போலிருக்கே என்று நினைத்துக்கொண்டு, "அம்மாகிட்ட நான் சொல்லிக்கிறேன், நீ கிளம்பு!" என்று சொல்லி அவளை அனுப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகியது அவனுக்கு.

அம்மா வந்தவுடன் முதல் வேலையா அவனிடம் வந்து, "என்னடா அவ அத்தைங்கிறா, எனக்கெங்கையோ உதைக்கிற மாதிரி இருக்குதே?!" என்று ஒரு மாதிரி முகத்தை வைச்சுக்கிட்டு கேட்க.

"எல்லாம் என் தலையெழுத்து வேற என்னா", என்று சொல்லிட்டு மீண்டும் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கினான். அவன் வீடு கொடுத்திருந்த சுதந்திரத்தை அவன் உபயோகித்ததில்லை. மோகன் அப்பா இருந்திருந்தால் கொஞ்சம் வித்தியாசமாக இருந்திருக்கும் கூட ஆனால் அவர் அந்தச் சமயம் வீட்டில் இல்லை.

(தொடரும்...)

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 2

"உங்களோட நோட்ஸ் எனக்கு வேண்டும், கிடைக்குமா?".

மேடையிலிருந்து இறங்கியதும் நேராக ஆயாக்கடைக்குப் போய் சாப்பாடு ஃபுல் கட்டு கட்டிவிட்டு, வகுப்பிற்கு செல்ல படியேறினான். அவன் கல்லூரி இருந்த காட்டில் சாப்பிடுவதற்கான உணவங்கள் அப்பொழுது இல்லை. அவன் கல்லூரியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த பிரபலமான பொறியியல் கல்லூரி அருகில் கூட பெரிய உணவகங்கள் கிடையாது. கிழக்குப் பக்கம் ஐந்து கிலோமீட்டர் மேற்குப்பக்கம் பத்து கிலோமீட்டர் தள்ளித்தான் குறிப்பிடும்படியான ஊர்கள் இருந்தன. கல்லூரி இருந்த இடத்தின் அருகில் இருந்த ரைஸ்மில்லிற்காய் ஒரு தாத்தா பாட்டி நடத்தி வந்த கடை தான். பொதுவாய் டேஸ்காலர்கள் அங்கே உணவருந்த வருவதில்லை, ஆனால் மோகன் டேஸ்காலராக இருந்தாலும் ஆயாவுடனான பழக்கத்தில் அங்கே வருவதை வழக்கமாக வைத்திருந்தான். அவன் திரும்பிப்
 போகின்ற வழியிலேயே நின்று கொண்டிருந்தாள். என்னடா இது இவளைப் பார்க்க வேண்டியிருக்கிறதேன்னு மோகன் நினைத்துக்கொண்டே நகர்ந்தான், அவன் கடக்கும் பொழுது அவள் கேட்டாள்.

உடனே, "முதல்ல நான் உங்களோட சீனியர்ன்னு தெரியுமா, நீங்க முதல் வருடம் படிக்க வந்திருக்கிறீங்க. சொல்லப்போனால் இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் தான் கேட்கணும். எங்கிட்ட கேட்கிறீங்க. நோட்ஸ் என்கிட்டயிருந்தாலுமே யார்க்கு தரணும்னு நான் முதல்ல யோசிக்கணும். உங்களைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது, நான் நோட்ஸ் தருவேன்னு எப்படி நினைச்சீங்க, ஒன்னு சொல்லிக்கிறேன். நீங்க முதலாம் ஆண்டு இந்தக் கல்லூரியில் படிக்கிறீங்க, நான் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். அவ்வளவுதான் நமக்குள்ள உள்ளது. முன்னாடி நடந்ததுக்கு நான் மன்னிப்பு கேட்டாச்சு, அவ்வளவுதான்!" என்று சொல்லிவிட்டு வகுப்பிற்குள் நுழைந்தான்.

அங்கே என்னுடைய இரண்டாம் ஆண்டு ஜூனியர்கள் இருந்தார்கள்.

"ம்ம்ம்... சொல்லுங்கண்ணே!!" என்றான்.

"அண்ணே, எங்க ஜூனியரைப் வரவேற்க போறோம், உங்களையும் கூட்டிக்கிட்டு போகச் சொல்லி பிரின்ஸி சொன்னாரு, வரீங்களா?"

"என்னடா வம்பாப் போச்சு, உன் ஜூனியரை வரவேற்க நான் எதற்கு, பிரின்ஸிக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். ஏனாம்?"

"ராகிங் பிராப்ளம் இருப்பதால் உங்களையும் கூட்டிக்கிட்டு போகச்சொல்லி சேர்மன் சொன்னாராம்."

"சரி வந்து தொலையுறேன், ஆனா ஒன்னும் பேசமாட்டேன். இங்கையே சொல்லிட்டேன்".

எல்லா புதுமுகங்களும் உட்கார்ந்திருந்தார்கள், இவள் முதல் பெஞ்சிலேயே உட்கார்ந்திருந்தாள், முகம் வாடியிருந்தது. அவனைப் பார்த்ததும் தலையைக் குனிந்து கொண்டாள்.

"இவர்களெல்லாம் உங்க சீனியர்கள், இவன் பேரு சுந்தரம், கிளாஸ் ரெப். இனிமே சுந்தரம் உங்ககிட்ட பேசுவான்" மோகன் விலகி பின்னால் சென்று நின்றான்.

அவன் நன்றாகவே பேசினான், பேச்சின் இடையே விஷயம் நோட்ஸ் பக்கம் வந்தது. சுந்தரம் என்னவோ பதில் சொன்னான், அப்போது அவன் எதேச்சையாக அவளைப் பார்க்க அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்து தெரிந்தது.

"அண்ணே..." சுந்தரம் கூப்பிட்டதும் தான் மீண்டும் உணர்ச்சி வந்தது.

"ம்ம்ம்... சொல்லு சுந்தரம்".

"இவங்க சிலபஸ் மாறியிருக்காம், பர்ஸ்ட் செமஸ்டர்ல சி-யும், டேட்டா ஸ்ட்ரெக்சரும் இருக்காம். அது எங்களுக்கும் இப்பத்தான் - மூன்றாம் செமஸ்டரில் இருக்கு. நோட்ஸ் வேண்டுமாம். எங்களிடம் இல்லையே? அதான் என்ன செய்யறதுன்னு..."

இது அவன் எதிர்பாராதது, அவள் இதைத் தெரிந்து கொண்டுதான் அவனிடம்  கேட்டாளா என்று அவன் யோசித்தான், ஐயோ என்னடா இது சோதனை என்று நினைத்துக் கொண்டவனாய்

"ஸ்டுடண்ட்ஸ், இங்கே லக்சரர்ஸ் தற்ற நோட்ஸே போதும், அப்புறம் புக்ஸ் இருக்கும். உங்களுக்கு சீனியர் நோட்ஸ் தேவைப்படாது, தேவைப்பட்டால் உங்க லெக்சரர் மூலமா மூவ் பண்ணுங்க." என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான். இப்பொழுதும் அவள் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிறகு அவர்கள் ஒவ்வொருவருடைய பெயர், ஊர், அப்பாவின் தொழில் இன்னபிற விவரங்களைச் சொன்னார்கள். கேட்காமல் இருப்பது போல் பாவனை செய்துவிட்டு அவள் சொல்லும் விவரங்களை கூர்மையாகக் கேட்டேன். பெயர் அகிலாண்டேஸ்வரி, ஊர் ஸ்ரீரங்கம், அப்பா புரோகிதர்.

இதன் கடைசியில், சுந்தரம் கேட்க கூடாத ஒரு கேள்வியைக் கேட்டான்.

"உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்தா கேட்கலாம்" என்றான்.

உடனே அகிலா எழுந்து "நான் பேச்சுப்போட்டியில் கலந்துப்பேன், அதுக்கு யார்கிட்ட கேட்கணும்?" என்று கேட்டுவிட்டு அவனை வேறு தனியாகப் பார்த்தாள்.

"தாஸ் அண்ணாதான் கல்ச்சுரல் லீட், அவர்கிட்டத் தான் சொல்லணும். ஆனா உங்களுக்கு வாய்ப்பு இருக்காதுன்னு நினைக்கிறேன். ஏன்னா அண்ணா வருஷாவருஷம் கலந்துக்கிட்டு முதல் பரிசு வாங்கி வருவார்," என்று சொல்லி பெருமையாக வேறு அவனைப் பார்த்தான்.

தலையெழுத்தே வம்புல மாட்டிவிட்டுட்டானே என்று நினைத்தவனாய் "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, உங்கள் பெயரையும் பதிவு செய்யலாம். போட்டிக்கு முன்பு கல்லுரியில் ஒரு போட்டி நடக்கும். அதில் வென்றவர்கள் தான் யுனிவர்சிட்டி போட்டியில் கலந்திக்கணும். அதனால உங்கள்ல யார் யாரெல்லாம் நல்லா பேசுவீங்களோ அவங்களெல்லாம் கலந்துக்கலாம். அதுக்கு மாலை நேரத்தில என்னை தனியா பாருங்க" என்று மோகன் சொன்னான். அவளுக்காக என்றில்லாவிட்டாலும், அதுதான் முறை.

என்னடா இது இன்று சுத்தி சுத்தி அடிக்குதே என்று  நினைத்துக்கொண்டவனாய் மீண்டும் வகுப்பறைக்கு வந்தான்.

மாலை ஐந்து மணியிருக்கும், கல்லூரி எப்பொழுதும் நாலே காலுக்கே முடிந்துவிடும், ஆனால் அன்று கொஞ்சம் வேலையிருந்ததால் அவன் கிளம்பியிருக்கவில்லை. ஐந்து மணிக்கு அகிலா பர்ஸ்ட் ப்ளோரிலுள்ள அவன் வகுப்பறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்தாள். அப்பொழுது தான் என்னவோ நினைத்தவனாய் வாசல் பக்கம் திரும்ப நின்று கொண்டிருந்தாள். எப்பொழுதிலிருந்து நிற்கிறாளோ தெரியவில்லையென்று நினைத்து உள்ளே கூப்பிட்டான்.

"மறந்தே போயிட்டேன், கூப்பிட்டுயிருக்கலாம்ல."

"இல்ல இன்னொரு பையனும் வந்தான், இப்ப கீழே போயிருக்கான் வரட்டுமேன்னு பார்த்தேன். அதுமட்டுமில்லாம உங்களை கூப்பிட பயமாயிருந்தது" என்று சொன்னாள்.

அவன் அவள் சொன்ன கடைசி வாக்கியத்தை கவனிக்காதது போல விட்டுவிட்டு.

"சரி சொல்லு, நான் உனக்கு என்ன பண்ணனும்"

"இல்ல நீங்கதான் பேச்சுப்போட்டியில கலந்துக்கணும்னா உங்ககிட்ட சொல்லணும்னு சொன்னீங்க, ஆனா நான் பேச்சுப்போட்டியில கலந்துக்கல; வேற என்ன போட்டியிலெல்லாம் கல்லூரி கலந்துக்கும்னு தெரிஞ்சா, எதிலாவாது கலந்துக்கலாமேன்னுதான்"

வேண்டுமென்றே அவனைக் கிண்டுகிறாள் என்று அவன் ‘ஏன் பேச்சுப்போட்டியில கலந்துக்கலை’என்று கேட்கவில்லை.

"நாங்க அது இல்லாம, ஸ்கிட், மைம் இரண்டுலேயும் கலந்துப்போம், டான்ஸ் மற்றதெல்லாம் என்கிட்ட இல்லை"

"நான் டான்ஸ் ஆடமாட்டேன், நாடகத்தில் கலந்துக்கிறேன், முன்னாடி எங்க ஸ்கூல் நாடகத்திலெல்லம் நடிச்சிருக்கேன்"

மோகன் அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பாமல், "சரி உன் பேரை சேர்த்துக்கிறேன், தேவையிருந்தால் கூப்பிடுகிறேன். நன்றி" என்று சொல்லிவிட்டு என் நோட்டில் நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தேன்.

ஆனா ஒரு இரண்டு நிமிஷம் ஆகியிருக்கும் அவள் கிளம்பாததால்,

"ம்ம்ம்... அப்புறம்?" என்றான்.

அவள், "இல்லை, நோட்ஸ்..." என்றாள் முகத்தை அப்பாவி போல் வைத்துக் கொண்டு.

"நான் உன்கிட்ட முதல்லையே சொன்னேன், பின்னாடி கிளாஸ்லையும் சொன்னேன்... இதுக்கு மேல உனக்கு என்ன தெரியணும்." அவனுக்கு உண்மையிலேயே தெரியாததால் கேட்டான்.

"இல்லை, கனிமொழி அக்காத்தான் உங்க கிட்ட கேட்கச் சொன்னாங்க, அவங்க எனக்கு அக்கா முறை வரும். ஆனா இதை உங்ககிட்ட சொல்றதுக்கு முன்னாடி நமக்குள்ள என்னன்னமோ நடந்திருச்சி, உங்களுக்கும் என்னை பிடிக்காமப் போச்சு..." கொஞ்சம் விட்டால் அழுதுவிடுவாள் என்று தோன்றியது அவனுக்கு.

"கனிமொழியா?" கனிமொழி மோகனுடைய இரண்டாம் ஆண்டு ஜூனியர், சொல்லப்போனால் அவனுடைய ஒரே பெண் தோழி, நாடகத்திலெல்லாம் அவனுடன் நடிக்கும் பெண், இன்னும் சொல்லப்போனால் இந்தக் கல்லுரியிலேயே அவனைக் கிண்டல் அடிக்கக்கூடிய அளவு உரிமையுள்ளவள் அவள் ஒருத்தி தான்.

"கனிமொழிக்கு என்ன ஆச்சு, இன்னிக்கு ஆளையே காணோம்?" பதறியபடி கேட்டான், இவளிடம் நான் நடந்துகொண்டது தெரிந்தால் என்ன கேட்பாளோ என்று நினைத்தபடி. நிச்சயம் வம்பிழுப்பாள் என்று தெரியும் அவனுக்

"உடம்புக்கு கொஞ்சம் சரியில்லை, நாளைக்கு வருவாங்கன்னு நினைக்கிறேன்" இன்னும் அவள் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டுதானிருந்தது. நல்ல நேரம் அவள் சொன்ன அந்த மற்றொரு பையன் வந்தான் இவன் தப்பித்தேன்.

"அண்ணா நானும் நல்லா பேசுவேன், நீங்க நாடகமெல்லாம் போடுவீங்கன்னு கேள்விப்பட்டேன், நானும் நடிக்கலாம்னு தான் உங்களைப் பார்க்க வந்தேன்."

"சரி உன்பேரு சொல்லு, எழுதிக்கிறேன், தமிழ் எச்ஓடி கிட்ட சொல்றேன். வாய்ப்பிருந்தா கூப்பிடுறேன்"

"அண்ணா, உங்க நோட்ஸத்தான் லெக்சரர்ஸ் யூஸ் பண்ணுவாங்களாமே, நோட்ஸ் கிடைக்குமா சி-க்கும், டேட்டா ஸ்ட்ரெக்சருக்கும்"

அவனுடைய நோட்ஸுக்கு அந்தப் பெருமை இருந்தது தான். லைப்ரரி லைப்ரரியாய் அலைந்து அவன் எழுதியிருந்ததை திருத்தி படம் வரைந்து விவரித்திருந்ததை அவன் கல்லூரியில் எல்லோருமே உபயோகித்து வந்தனர் என்றாலும் இன்னொருவர் எழுதியதைப் படிப்பதைவிடவும் அவன் செய்தது போல் உணர்ந்து எழுதிப் படித்தால் தான் தேர்ச்சிக்கு உதவியாய் இருக்கும்.

"யேய், அப்படியெல்லாம் உன்கிட்ட யார் சொன்னா, அதெல்லாம் ஒன்னுமில்லை, என்னடா இது ஜூனியரா வந்த இரண்டாவது நாளிலேயே எனக்கும் என் வாத்தியாருங்களுக்கும் சண்டை மூட்டிவிட்ருவீங்க போலிருக்கே? இந்தப் பொண்ணுக்கிட்ட நோட்ஸ் கொடுக்கிறேன் வாங்கிக்க, எனக்கு கொஞ்ச வேலையிருக்கு அப்புறமா பார்க்கலாம்" என்று சொல்லிட்டு அவளைப் பார்க்க தைரியம் இல்லாமல் திரும்பவும் நோட்ஸ் எழுதத் தொடங்கினான்.

அன்றைக்கென்னமோ கீழே விழுந்து இன்னும் கீழே போய்க் கொண்டேயிருந்தது  போல் தோன்றியது அவனுக்கு.

(தொடரும்...)

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 1

பளீரென்று அவள் கன்னத்தில் அறைந்து மோகன் தன் வாழ்நாளில் என்றுமே சொல்லியிராத ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லி அவளைத் திட்டிவிட்டு பின்னர் கோபமாய் "மரியாதையா நடந்துக்கோ, தெரிஞ்சத மட்டும் பேசு" என்று சொல்லி வேகமாக அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

அன்றைய பொழுதின் நினைவுகள்  மீண்டும் மீண்டும் வந்து அவன் கழுத்தை நெரித்து இரவு தூக்கம் வராமல் செய்யத்தொடங்கியது. கோடை விடுமுறையின் கடைசி நாட்களின் பொழுது பேச்சுப்போட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவன் அன்றைய தலைப்பில் மிக அருமையாகப் பேசி, காந்தி, பாரதி, கண்ணதாசன், பாரதிதாசன் இவர்களின் கருத்துக்களையும் இடையிடையே இட்டு, 'என் சிறுநீரைக் குடித்தால் உனக்கு விடுதலை தருகிறேன்' என்று சொன்ன அமெரிக்க சார்பு பொலிவிய அரசிடம், 'என் தலை மயிறு கூட அந்த சுதந்திரத்தை ஏற்காது' என்று சொல்லி இறந்து போன செகுவாராவின் கருத்துக்களைச் சொல்லி முடித்த பொழுது அரங்கம் அதிரும் கரவொலி.

பின்னால் வந்து பேசிய அவளை அதற்கு முன்பு மோகன் திருச்சியில் பார்த்ததில்லை, பெரும்பாலும் கல்லூரிக்கிடையிலான பள்ளிகளுக்கிடையிலான பேச்சுப்போட்டிகளில் மிகவும் தெரிந்த நண்பர்களே பங்குகொள்வார்கள். ஆனால் இந்தப் பேச்சுப்போட்டி வயது வித்தியாசம் இன்றி எல்லோருக்குமானது - யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ளலாம். அவன் பேசி முடித்தபின் மேடையேறிய அவள், முதல் வரியிலேயே "முன்னால் பேசிட்டு போனாரே, அவரை நேற்று ஒரு பெட்டிக்கடையருகில் கையில் சிகரெட்டுடன் பார்த்தேன், இவரும் இவர் நண்பர்களும் சேர்ந்து அங்கு போகும் பெண்களை எல்லாம் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள், இப்படிப்பட்ட இவருக்கு செகுவாராவைப் பற்றி பேச அருகதையே இல்லை!" என்று சொல்ல, போட்டி நடந்த இடம் ஒரு பெண்கள் கல்லூரி என்பதால் பலத்த கரகோஷம், அதன் பின்பு அவளுக்கு கொடுத்திருந்த தலைப்பிலும் பேசினாள். அவள் பேசிவிட்டு மேடையை விட்டுக் கீழிறங்கும் போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. பெண்களை மதிக்கும் மோகன், அப்படி நடந்து கொண்டது அவனுக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

இதெல்லாம் நடந்து முடிந்திருந்த ஒரு காலையில் மத்தியப் பேருந்து நிலையத்தில் கல்லூரிப் பேருந்திற்காக மோகன் காத்துக்கொண்டிருந்தான், திருவெறும்பூருக்கு அவன் கல்லூரிப் பேருந்து வராதென்பதால் எப்பொழுதையும் போல் இன்னொரு பேருந்து மாறிவந்திருந்தான். விராலிமலை செல்லும் பேருந்துகள் நிற்கும் நிழற்குடை அருகில் நண்பர்கள் ஆசிரியர்களுடன் நின்றுகொண்டிருந்தான். தூரத்தில் வருவது அவனைத் திட்டியவளைப் போல் தோன்றியதால் தூணிற்குப் பின்னால் சென்று மறைந்து கொள்ள உத்தேசித்தான் ஆனால் அவளும் அவர்களுடைய நிழற்குடை அருகில் வந்ததால், இதை இங்கேயே இன்றே முடித்துக் கொள்ள நல்ல வேளையாய்ப் போய்விட்டதே என்று நினைத்தவனாய் நேராய் அவளிடம் சென்று,

"உன்கிட்ட கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும்." அவன் சொன்னதும், கொஞ்சம் விலகி வந்தவள், "ம்ம்ம் சொல்லுங்கள்."

"என்னை மன்னிச்சிருங்க, நேத்து கோபத்திலே திட்டிட்டேன், அந்த வார்த்தை சொல்லி திட்டியிருக்க கூடாதுதான், ஆனால் சொல்லிட்டேன், தயவுசெய்து மன்னித்து விடுங்கள்!" சொல்லிவிட்டு அவள் கண்களையே உறுத்துப் பார்த்தான், அவனிடம் கபடமில்லை.

"நேத்திக்கு நீங்க என்னவோ திட்டினீங்கன்னு தெரியும், ஆனா சத்தத்துல என்ன சொன்னீங்கன்னு கேட்கலை, பரவாயில்லை, எம்மேலையும் தப்பிருக்கே, நீங்க சாதாரணமா எடுத்துப்பீங்கன்னு நினைச்சேன். நீங்க கோபமாய்ட்டீங்க ஆமா உங்களுக்குத்தான் முதல் பரிசு கொடுத்தாங்க, ஆனா வாங்க நீங்க வரலையே?" கேட்டாள்.

"இல்லை மனசு சரியில்லை, அதான் வாங்கலை, அது ஒன்னும் பிரச்சனையில்லை, தயவு செய்து என்னை மன்னிச்சிருங்க!" என்று சொல்லிவிட்டு அவளைவிட்டு நகர்ந்துவந்து நின்றான்.

சிறிது நேரத்தில் கல்லூரிப்பேருந்து வந்து நின்றது, அவனும் நண்பர்களும் ஏறி உட்கார்ந்து கொண்ட சிறிது நேரத்தில் அவளும் வந்து உட்கார்ந்தாள். மோகனால் அவன் கண்களையே நம்பமுடியவில்லை, உடனே சார்லஸிடம், 'டேய் யார்ரா அவ? நம்ம காலேஜா?' என்று கேட்டான்.

“யாருக்குத் தெரியும், ஃபர்ஸ்ட் இயரா இருக்கும், நம்ம பஸ்ல ஏற்றான்னா நம்ம காலேஜாத்தான் இருக்கும்.” இது சார்லஸ்.

அய்யோ இந்த விஷயம் இதோடு முடிந்துவிடும் என்று நினைத்தால் முடியாது போலிருக்கிறதே, இன்னும் ஒரு வருஷம் இவளோட குப்பை கொட்ட வேண்டும் போலிருக்கிறதே என்று அவன் நினைத்தான். ஆனால் வாழ்க்கை வேறு விதமாக நினைத்திருந்தது.

அன்று கல்லூரியில் புதிதாக சேர்வதற்காக மாணவர்கள் வரும் நாள், நிர்வாகம் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது அவர்கள் கல்லூரி நிர்வாகம், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் என்பதால் நடத்தும் பொறுப்பு மோகனுக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும். எல்லா ஏற்பாடுகளும் ஒரு வாரத்திற்கு முன்பே முடிந்திருந்தது, சில கடைசி நேர விஷயங்கள் மட்டும் மீதமிருந்ததன. இரண்டு மணிநேரக் கலைநிகழ்ச்சிகள், 90 சதவீத பொறுப்புகளை இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் கொடுத்துவிட்டு, நடத்துவதை மட்டும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு வாரத்திற்கு முன்பே எல்லா நிகழ்சிகளையும் ரிகர்ஸல் பார்த்தாகிவிட்டது. மேடையும், நிகழ்ச்சியை நடத்துவதும் மோகன் பொறுப்பில் இருந்தது.

காலையில் கல்லூரிக்குள் நிழைந்ததுமே பிரின்ஸிபால் மோகனிடம், "தாஸ், எல்லாம் முடிஞ்சிருச்சா, ஒன்னும் தப்பில்லையே. ஏடாகூடமாச்சுன்னா சேர்மன் கோச்சுக்குவார் பார்த்துக்கோ!".

"இல்லை சார், எல்லாம் சூப்பராக வந்திருக்கு, இந்த வருஷம் அசந்திரப் போறீங்க பாருங்க," என்றான்.

நிகழ்ச்சிகளெல்லாம் மிகச் சிறப்பாக நடந்தது, சொல்லப்போனால் மற்ற ஆண்டுகளைவிட மிகச் சிறப்பாக இருந்தது, மற்ற ஆண்டுகளில் ரிகர்ஸல் பார்க்காமல் வந்து விடுவார்கள், அதனால் கடைசிநேரக் குழப்பங்கள் இருக்கும். இது தெரிந்துதான் மோகன் எல்லா நிகழ்சிகளுக்கும் ரிகர்ஸல் தரவேண்டும் என்று கட்டாயமாகச் சொல்லியிருந்தான், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மிகவும் நன்றாகச் செய்திருந்தார்கள், ஆக மொத்தம் எல்லாம் நன்றாக நடந்தது.

வாழ்த்துரை கூறவந்த சேர்மன், மிகவும் உற்சாகமாகி மேடையில் நின்று கொண்டிருந்த அவனை அருகில் அழைத்து, “இவரு மோகன், மூன்றாம் ஆண்டு கணிப்பொறியியல் மாணவன், வருஷாவருஷம், இவர் மற்றும் இவரோட குழுவால் கல்லுரிக்கு நிறைய பரிசு, நிறைய கேடயங்கள், நல்ல பேரு கிடைச்சுக்கிட்டிருக்கு, எனக்குத் தெரியும் இந்த வருஷம் விழா நல்லாயிருக்குமுன்னு. புது மாணவர்களாகிய நீங்கள் இவரை மாதிரித்தான் வரணும். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இவரை நீங்க கேட்கலாம்” என்று ஒரே பாராட்டு மழை.

பிறகு "உங்கள்ளேர்ந்து - புதிய மாணவர்களிடம் - ஒருத்தர் வந்து விழா எப்படியிருந்தது. நீங்கள் கல்லூரிகிட்டேர்ந்து என்ன எதிர்பார்க்கறீங்கன்னு சொன்னீங்கன்னா இன்னும் சிறப்பா இருக்கும்!" என்று சொல்லி உட்கார்ந்திருந்த புதிய மாணவர்களைப் பார்த்தார். அவனும் அப்போழுதுதான் அவர்கள் அனைவரையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்தான். மூன்றாம் நான்காம் வரிசையில் உட்கார்ந்திருந்த அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதையும் உணர்ந்தான்.

கொஞ்ச நேரம் யாருமே வரவில்லை, கடைசியில் அவன் நினைத்ததைப் போலவே அவள் தான் மேடையேறி வந்தாள்.

நிகழ்ச்சிகள் நன்றாக இருந்ததாகவும், சீனியர்கள், ஜூனியர்களுக்கு உதவினால் இன்னும் நன்றாக இருக்கும் என்றும் கூறிவிட்டுச் சென்றாள். நன்றியுரை கூறவந்த அவன் எல்லோருக்கும் நன்றி கூறிவிட்டு - அவளுக்கும் சேர்த்து - 'நானும் சீனியர் என்பதால் உங்களுக்கு எல்லா விதத்திலும் உதவுவதாக'க் கூறி நிகழ்ச்சியை முடித்து வைத்தான்.

நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களிலேயே அவள் அவனிடம் வந்து அப்படி ஒன்றை கேட்பாள் என்று கனவிலும் அவன் நினைத்திருக்கவில்லை.

(தொடரும்...)

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

ரெக்க ரெமோ மற்றும் தேவி

தமிழ்ப்படங்களப் பத்தில் தமிழில் நாலு வரி எழுதி எத்தன நாளாகுது. தலைப்பின் வரிசை தரவரிசை இல்லை, நான் பார்த்த வரிசை. நான் அப்படியேப் போறேன்.


ரெக்க படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதி சொன்ன மாதிரி, அவர் மனசாட்சி கேட்ட கேள்விக்கான பதில் இந்தப் படத்தில் நடிக்கக்கூடாதுங்கிறது தான். ஆனா இந்த மாதிரி அப்பப்ப ஒரு கல்லு உட்டுத்தான் ஆகணும் இல்லாட்டி முடியாது. இந்த முற கல்லு பட்டு மாங்கா விழல. அதுனால என்ன. தன்னோட திறமைய நல்லா வெளிக்காட்டியிருக்காரு. கதையெல்லாம் தேவையேயில்லைன்னு முடிவு பண்ணி இறங்கியிருக்காங்க. சின்ன கல்லு பெத்த லாபம் ஃபார்முலான்னு நினைக்கிறேன். காசு வந்துடுமாயிருக்கும்.


ரெமோ ஜெனியுனா நல்ல காமடியிருக்குற படம் வெடிச்சிரிப்பு நாலைந்து முறை வந்ததுன்னா படம் முழுக்க எல்லாவிதமான காமடியும் வைச்சிருக்காங்க. யோகி பாபு, ராஜேந்திரன், சதீஷ்னு காமடி நல்லா வொர்க்கவுட் ஆயிருக்கு. இந்தப் படம் பார்க்கும் பொழுது ரெக்க படத்து லட்சுமி மேனன் கேரக்டர் பெரிய லூசா இல்லை ரெமோ படத்து கீர்த்தி சுரேஷ் பெரிய லூசான்னு ஒரு யோசனை. ஆனா நிச்சயமா கீர்த்தி சுரேஷ் கேரக்டர் தான் பெரிய லூசு. அமெரிக்கால சம்மர்ல இந்த மாதிரி ரொமான்டிக் காமடியெல்லாம் தொடர்ச்சியா வரும். ஸ்டாக்கிங் பத்தியெல்லாம் டிவிட்டரில் பெரிய ரெயில் ஓடிக்கொண்டிருந்தது. ஆனா இப்படியே டிரெயின் விட்டிக்கிட்டிருந்தா என்ன படம் தான் எடுக்கிறது. புள்ளைகள நீங்க ஒழுங்கா வளர்த்தா சினிமா பார்த்து கெட்டுப் போக மாட்டாங்க. எனக்கென்னமோ சிவகார்த்திகேயன் ஒரு முழு நீள ஆக்‌ஷன் படத்தில் நடிக்கலாம், போதும் காமடி ஓரியன்டட் மூவிஸ்.


தேவி படத்தோட ட்ரைலர பார்த்தாலே கதை இன்னதுன்னு தெரியும். அதே கதை தான். ஆனால் அந்தக் கதையில் ஸ்கோப் நிறைய இருந்தது. காமடிக்கு ஆக்டிங்கிற்கு என்று. எதையும் உபயோகிக்கவேயில்லை இவர்கள். பிரபு தேவா கேட்கவேவேண்டாம் இயல்பாய் இருக்கிறார், தமன்னா நடித்திருக்கிறார் ஆனாலும் ஒரு டச் மிஸ்ஸிங், அது கேரக்டர் குறைபாடு. தமன்னாவுடையது அல்ல. மூணு லாங்குவேஜில் படமெடுக்குறேன்னு கொலை செய்திருக்கிறார்கள். இந்த இழவை இந்தியிலேயே எடுத்திருக்கலாம். இதை தமிழ்ப்படம்னு சொல்லித்தொலையாதீங்கடா! மணிரத்னம் எடுக்கும் இந்தி/தமிழ் படத்தை விட மோசமாயிருக்கு. ஒரே நல்ல விஷயம் பிரபு தேவா தான். பெண்ணியவாதிகளுக்குப் பிடித்தப் படமாயிருக்கலாம் தேவி, ரெக்க ரெமோவைக் கன்ஸிடர் செய்தால் தேவியில் தமன்னாவின் கேரக்டர் ரொம்பவே தேவலை. கொடுமைக்கென்று ரெக்க ரெமோவை விட தேவி படம் தான். அதன் காரணம் தேவியில்லை, ரெக்கையும் ரெமோவும் தான்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts