In சினிமா விமர்சனம்

Babel, நான் மற்றும் பின்நவீனத்துவம்

நான் பார்த்த முதல் பின்நவீனத்துவப் படம்.

உண்மையில் திருவிளையாடல் படம் பார்த்துவிட்டு வெறுத்துப் போய்தான் இருந்தேன். என் நினைவில் இருப்பது வரை நான் தமிழ்ப்பட விமர்சனம் என்று இறங்கியதில்லை, நிச்சயமாக அதை திருவிளையாடலில் இருந்து தொடங்க விரும்பவேயில்லை தான். ஆனால் அந்தப் படம் என்னை எழுத வைத்தது. என்னுடைய எட்டு நாள் விடுமுறையை பாதிக்கும் அளவிற்கு அந்தப்படம் என்னுள் விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது உண்மை. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பதைப் போல் நான் ஒரு நல்ல படத்தைப் பார்த்துத் தான் நான் திருவிளையாடல் படத்தைப் பார்த்து என் மனதிற்கு செய்த பாவத்தைக் கழுவ முடியும் என்று நினைத்தேன்.

அப்படி ஒரு படமாய் அமைந்தது தான் பாபெல்(Babel), நியூஇயர் தொடக்கமாய். சரியாய்ச் சொல்லவேண்டுமானால். முப்பத்தொன்றாம் நாள் 10 மணிக்குத் தொடங்கிய இரண்டரை மணிநேர படம். நான் இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்கிறேன், கலைப்படங்களைப் பற்றிய என்னுடைய அபிப்பிராயத்தைப் மாற்றிக்கொள்ள. அப்படி ஒன்றும் தீர்மானித்துச் செல்லவில்லை, நிச்சயமாய் திருவிளையாடல் அளவிற்கு மோசமாய் இருக்காது என்ற நம்பிக்கை மட்டும்தான் இருந்தது.(திருவிளையாடல் படத்துடன் இந்தப் படத்தை ஒப்பிட நேர்ந்ததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.) பிராட் பிட்(Brad Pitt) படத்திற்குச் செல்வதற்கு ஒரு காரணம் என்ற உண்மையை ஒப்புக்கொள்வதுடன், அந்த உண்மை எனக்களித்த நன்மையை நினைத்துப் பார்க்கிறேன்.

என்னுடைய ஆரம்பக்கால விமர்சனங்களில் இருந்தே படத்தின் கதையை சொல்வதில்லை என்ற முடிவில் பிடிவாதமாக இன்றுவரை இருந்து வருகிறேன். ஆனால் இந்தப் படத்திற்கான விமர்சனமாக இல்லாமல் இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த அம்சங்களை பேச நினைக்கும் பொழுது அந்த என் உறுதி பின்வாங்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க நினைக்கிறேன். படத்தின் கதையை சுஜாதா சொல்வது போல் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பஸ் டிக்கெட் பின்னால் எழுதிவிட முடியும்தான். ஆனால் அந்தக் கதையை டைரக்டர் எடுத்தவிதமும். அவர் முயற்சி செய்திருக்கும் விஷயங்களும் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தையளிக்கின்றன. ஒருவேளை என்னுடைய முதல் தரமான ஆங்கிலப்படம் என்பது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

மொராக்கோவின் ஒரு குக்கிராமத்தில் ஆடுமேய்க்கும் சிறுவனுக்கு, அவனுடைய ஆடுகளை நரிகள் கொன்றுவிடாமல் காப்பதற்காக வழங்கப்படும் துப்பாக்கியை அவன் உபயோகப்படுத்த கற்றுக்கொள்ளும் நேரத்தில் எந்த வித நோக்கமும் இல்லாமல், மொராக்கோவை சுற்றிப் பார்க்க வரும் அமேரிக்க தம்பதியில் ஒருவரை சுட்டுவிட நடக்கும் விஷயங்களே இந்தப் படம். எந்தவிதமான நோக்கமும் இல்லாமல் நடைபெறும் ஒரு செயலால் ஏற்படும் தொடர் நிகழ்வுகளால் கட்டப்பட்டது இந்தப் படம். உண்மையில் பாபெல் என்பதற்கான நேரடிப் பொருளும் கூட இதுவேதான். பட்டர்பிளை எபெக்ட் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். அப்படியும் கூட சொல்லலாம்.

நான்கு தனித்தனிக் கதைகளாக, நான்கு வெவ்வேறு இடங்களில் அந்தந்த இடத்தின் மொழி, பண்பாடு, கலாச்சாரம், சூழ்நிலையில் கதை சொல்லப்படுகிறது. நான்கு தனித்தனிக் கதைகளுக்குமிடையே ஒரு தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புதான் கதையின் முக்கிய ஒருவரி விஷயமாக நான் மேலே சொன்ன அந்த துப்பாக்கிச் சுடும் நிகழ்வு. ஜெனநாதன்(இயற்கையின் டைரக்டர்) சொன்னது போல் கோலிவுட்டில், சினிமா எடுப்பது என்பது ஒரு வீட்டைச் சுற்றி, ஒரு கல்லூரியைச் சுற்றி ஒட்டுமொத்தமாக ஒரு கட்டடத்தைச் சுற்றியே கதைகள் பெரும்பாலும் தற்சமயம் உருவாக்கப்படுகின்றன.

தான் இயற்கை பட முதல்காட்சியை விளக்கும் பொழுதே இது நமக்கு சரிவராதுன்னு சொல்லிவிட்டு நகர்ந்த தயாரிப்பாளர்கள் தான் அதிகம் என்று சொல்கிறார் அவர். இந்தப் படத்தில் ஒரு கட்டடிடத்திற்குள் நடக்கும் காட்சிகள் மிகக்குறைவு அப்படிப்பட்ட காட்சிகளில் கூட என்னவோ ஒரு பெரிய விஷயத்தைக் காண்பிப்பதான ஒரு உணர்வுதான் உண்டாகிறது.

இந்தப் படத்தின் கதையைச் சொல்வதால் தவறொன்றும் நிகழ்ந்துவிடாது என்றே முழுமனதாக நம்புகிறேன். ஏனென்றால் இந்தப் படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் இந்தக் கதையை டைரக்டர் எப்படி எடுத்திருக்கிறார் என்பதைக் கவனிக்கவே நேரம் சரியாய் இருக்கும். அதனால் கொஞ்சமாக கதை.

அதாவது பிராட்பிட்டும், அவரது மனைவியும் தங்களின் அவர்களுக்குப் பிறந்த மகன் இறந்துவிட, அதற்குக் காரணம் என்று இருவரும் மற்றவரை மாற்றிச் சொல்லும் நிலையில். தங்கள் திருமணம் இதனாலெல்லாம் முறிந்துவிடக்கூடாதென்பதற்காக, மொராக்கோவிற்கு சுற்றுலாவிற்கு வருகிறார்கள். அவர்களுடைய மற்ற இரண்டு பிள்ளைகளையும் எமிலியா என்ற தங்கள் வீட்டு வேலைக்கார பெண்ணிடம் விட்டுவிட்டுச் செல்கிறார்கள். இந்தப் பெண் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவள்.

இதே நேரத்தில் தான், மொரோக்கோவில் தன்னுடைய ஆடுகளைக் காப்பாற்றுவதற்காக அப்துல்லா(மொரோக்கோ வாசி) ஒரு துப்பாக்கியை வாங்கி, அதை பயன்படுத்துவற்காக தன்னுடைய பையன்கள் இருவரிடமும் கொடுத்துவிட்டுச் செல்கிறார்(பயிற்சி எடுப்பதற்காக). அவர்கள் தான் அஹமது மற்றும் யூசுப். படத்தில் அண்ணன் அஹமதுவை விட யூசுப் எல்லா விஷயங்களிலும் திறமையானவனாக இருக்கிறான்(;)). அதைப்போலவே துப்பாக்கிச் சுடுவதிலும். துப்பாக்கியை விற்றவர் துப்பாக்கி மூன்று கிலோமீட்டர் தூரம் சுடக்கூடியது என்ற சொன்னதை பரிசோதிக்கும் விதமாக அண்ணன் தம்பி போட்டி போட்டுக்கொண்டு சுடப்போக, (அதாவது அவர்கள் வைத்த குறி மலையின் கீழ் பயணம் செய்து வரும் ஒரு பஸ் - கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் இருக்கலாம்) அது அந்தப் பஸ்ஸில் பயணம் செய்யும் பிராட்பிட்டின் மனைவியைத் தாக்குகிறது.

உண்மைக்கதை(சினிமாவில் காட்டப்பட்ட வரிசை கிடையாது.) இங்கிருந்து நான்கு பாதைகளில் பயணம் ஆகிறது. ஒன்று பிராட்பிட் மற்றும் அவருடைய மனைவி இருவரைப்பற்றியது. இரண்டாவது சுட்டுவிட்ட அப்துல்லா குடும்பத்தைப் பற்றியது, மூன்றாவது பிராட்பிட்டின் குழந்தைகளைப் பாதுகாக்கும் எமிலியாவினுடையது. நான்காவது மொரோக்கோ அரசு துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியைப்பற்றி விசாரிக்கும் பொழுது, மொரோக்கோவாசிக்கு துப்பாக்கியை விற்றதாக அறிமுகம் ஆகும் முன்னால் ஜப்பானிய வேட்டைக்காரர் மற்றும் அவருடைய செவிட்டு ஊமையான மகளைப்பற்றியது. இப்படியாக முதல் இரண்டு பாதைகளும் மொரோக்கோவின் இண்டு இடுக்குகளைக் காண்பிப்பது போல, மூன்றாவது பாகமும் நான்காவது பாகமும், முறையே மெக்ஸிகோ மற்றும் ஜப்பானைக் காட்டுகிறது.

ஒவ்வொரு இடத்திலும் மொழிப்பிரச்சனை, அமேரிக்காவிலிருந்து வந்த பிராட்பிட் மற்றும் அவரது மனைவி ஏனைய அமேரிக்கர்களுக்கு பெர்பெர் என்ற மொரோக்கோ மொழி தெரியாது. அமேரிக்காவிலிருந்து, மெக்ஸிகோவிற்கு வேறு வழியில்லாமல், எமிலியின் மகனது திருமணத்தைப் பார்க்கவரும் பிராட்பிட் குழந்தைகளுக்கு ஸ்பானிஷ் தெரியாது. அதே போல் தன் அத்தையை திரும்பவும் மெக்ஸிகோவிலிருந்து அமேரிக்கா கொண்டுவந்து விடும் கேய்ல் கார்சியா பெர்னலுக்கு ஆங்கிலம் அவ்வளவாக பேசவராது. எல்லாவற்றிற்கும் சிகரம் போல் அந்த ஜப்பானியப் பெண்ணிற்கு பேசவேவராது அதைப் போலவே கேட்கவும்.

இதை மொழிப்பிரச்சனை என்று சொல்ல முடியாது. தகவல் பரிமாற்றப் பிரச்சனை. நாமெல்லாம் உலகம் ஒரு குடைக்குள் வந்துவிட்டதாகச் சொன்னாலும் நம்மிடையே இருக்கும் தகவல் பரிமாற்றப்பிரச்சனையை இயக்குநர் அழகாக வெளிப்படுத்துகிறார்.

ஒவ்வொரு தனிப்பட்ட பாகத்தையும் இயக்குநர் படமாக்கியுள்ள விதம் பாராட்டிற்குரியது, ஒரே தியேட்டரில் ஒரே திரைப்படத்தில் நான் வெவ்வேறான கிளைமேட்களில் நடக்கும் அந்த நிகழ்வுகளைப் போலவே நாமும் அலைக்கழிக்கப் படுகிறோம், மொரோக்கோவின் அகன்ற வெப்பமான மலைகளுடன் சேர்ந்த பாலைவனமாகட்டும், கலர்புல்லான ஜப்பானாகட்டும், பிரச்சனை பூமியாய் இருக்கின்ற மெக்ஸிகோ ஆகட்டும் அந்த இடத்திற்கு நாமே செல்வதைப் போன்ற ஒரு பிரமிப்பு.

தேர்ந்த நடிகர்கள், தன் பெண்டாட்டியின் மீது குண்டு பட்டுவிட வேதனையால் துடிக்கும் பொழுதும் சரி, உயிர் பயத்தால் மற்ற அமேரிக்கர்கள் உடனே பஸ்ஸை எடுக்க வேண்டும் என்கிற பொழுது தன் கையாலாகாத்தனத்தை காட்டும் பொழுதும் சரி பிராட்பிட் பிராகசிக்கிறார். அதே போல் அந்த ஜப்பானியப் பெண், விரகதாபத்தில் துடிக்கும் போதாகட்டும். தன் தாயாரைப்போல் தன்னை கவனித்துக் கொள்வதில்லை என்று அப்பாவிடம் கோபப்படுப் பொழுதும் சரி படம் காண்பிக்கிறார். கேய்ல் கார்சியா பெர்னலுக்கு சின்ன வேடம் தான் என்றாலும் அந்த வேடத்தில் வெளுத்துக் கட்டுகிறார், அதே போல் வேலைக்காரியாக நடித்த எமிலியாவும் சரி, தன் பிள்ளைக்களைப் போலவே வளர்த்த பிராட்பிட்டின் பிள்ளைகள் மரணத்தருவாயில் நிற்பதை அமேரிக்கப் போலீஸ்காரர்களிடம் விளக்கப்படாதபாடுபட்டு கண்ணீர் வடிக்கும் பொழுதும் மின்னுகிறார்.

ஒவ்வொரு பேக்ரவுண்டிற்கும் ஏற்றது போல் இசை, மொரோக்கோவில் பெரும்பாலும் ஒற்றை வயலினின் பின்னணியிசையுடன் நிற்கும் பொழுதும் சரி, ஜப்பானில் இரவுநேரப் பார்டிக்கொண்டாட்டத்தில் அலறும் பொழுதும் சரி தனியே ரசிக்க முடிகிறது. அப்படியே கேமிராவும்.

இந்தப் படத்தை நான் ஒரு கதைபோல ஆரம்பம் கடைசி என்று பகுதிபிரித்துத் தந்திருப்பதைப் போல நேரே பார்க்கும் பொழுதிருக்காது, உபபாண்டவத்தையோ, இல்லை ஸீரோ டிகிரியையோ படமாகப் பார்ப்பதைப் போல் தான் இருக்கும். (உபபாண்டவம் ஸிக்ஸாக்காக அடிக்கடி மாறும் காட்சிக் கதையமைப்பிற்கென்றால், ஸீரோ டிகிரி; ஜப்பான் மற்றும் மொரோக்கோவில் நடைபெறும் நிகழ்வுகளுக்காக)

இந்தப் படத்தின் டைரக்டருக்கு பெஸ்ட் டைரக்டர் அவார்ட் கென்னாஸ் பிலிம் பெஸ்டிவலில் கிடைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் 2007லிற்கான அதிகபட்ச கோல்டன் குளொப் அவார்டுக்காக பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.

முறையே Best Picture - Drama, Best Director (Alejandro González Iñárritu), Best Supporting Actor (Brad Pitt), Best Supporting Actress (Adriana Barraza), Best Supporting Actress (Rinko Kikuchi), Best Screenplay (Guillermo Arriaga), and Best Score (Gustavo Santaolalla).

கடைசியாக ஒரு வார்னிங், பின்நவீனத்துவ நாவல்களை ஒரு முறையாவது தொட்டுப்பார்த்திருக்கிறீர்களா, எடுத்துக்காட்டாக ரமேஷ்பிரேமின் சொல் என்றொரு சொல் இல்லை, ஜே ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசுவாமி, அட்லீஸ்ட் எஸ் ராமகிருஷ்ணனின் உபபாண்டவம் (புரிஞ்சிருச்சான்னு நான் கேட்கலை – பாத்து ஒன்றிரண்டு பக்கங்களாவது படிச்சிருக்கீங்களா?) அப்படின்னா மட்டும் போங்க இந்தப் படத்திற்கு, இன்னொரு முக்கியமான விஷயம் நீங்கள் கோணல் பக்கங்கள்(சாரு நிவேதிதாவினுடையது) இல்லை அதைப் போன்றதோ(உடலுறைவையோ இல்லை அதைப்பற்றிய விஷயங்களையோ நேரடியாக எழுதப்பட்டவை) படித்திருக்கிறீர்களா என்றால் இந்தப் படத்திற்குப் போகலாம். இல்லை என்றால் திருவிளையாடல் ஆரம்பம் படம் தமிழ்நாடு மட்டுமல்லாது தமிழ் பேசும் நல்லுலகம் அனைத்திலும் சக்கைப் போடு போடுவதாக அறிகிறேன். அதற்குப் போய்வாருங்கள்.

Directed by Alejandro González Iñárritu; written (in English, Spanish, Japanese, Berber, Arabic and sign language, with English subtitles) by Guillermo Arriaga, based on an idea by Mr. González Iñárritu and Mr. Arriaga;

Cast - Brad Pitt, Cate Blanchett, Gael García Bernal, Koji Yakusho, Adriana Barraza, Rinko Kikuchi, Said Tarchani, Boubker Ait El Caid, Mustapha Rachidi, Elle Fanning, Nathan Gamble and Mohamed Akhzam.

Related Articles

11 comments:

  1. நான் நிச்சயமாக பொழுதுபோக்குப் படங்களைப் பார்ப்பதையோ இல்லை விரும்புவதையோ வெருக்கவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை திருவிளையாடல் ஆரம்பம் குப்பை.

    ReplyDelete
  2. மிக நன்றாக இருந்தது உங்கள் விமர்சனம். இன்னும் பார்க்கவில்லை. ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

    தமிழில் இந்த மாதிரி புதிய உத்திகளுடன் எடுக்கப்பட்ட படங்கள் என்றால் - அந்த நாள் (வீணை பாலசந்தர் இயக்கி, சிவாஜி கணேசன் நடித்த பழைய படம்), ஹே ராம் போன்ற படங்கள் கொஞ்சம் மிஞ்சுகிறது.

    மற்றபடி, ஆய்த எழுத்து, விருமாண்டி போன்ற முழுமை பெறாத முயற்சிகள்தான் அதிகம் என்று நினைக்கின்றேன்.

    ReplyDelete
  3. I did not like this movie much. The Japanese part could have been avoided. Just because the father gave gun to the hunting guide, why the life of daugther needs to be shown at such detail? Did not fit with movie. Can you please tell me, why do u call it a post-modern movie? I would be eager to learn. - PK Sivakumar

    ReplyDelete
  4. பிகேஎஸ் உண்மையிலேயே ஒரு நல்லகேள்வி. இந்த விமர்சனம் எழுதியதிலிருந்து காத்திருக்கிறேன். இது போன்ற ஒரு கேள்விக்கு...

    நான் பதில் சொல்வதை விட தமிழ் கூறும் நல்லுலகுக்கு பின்நவீனத்துவத்தை அறிமுகம் செய்து வைத்த ஒருவர் சொல்வது.

    //‘அமரஸ் பெரோஸில்’ கார் விபத்து. ஒரு விபத்துக்குப் பின்பு அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று கதாபாத்திரங்களின் வாழ்க்கை முன்னும் பின்னுமாகச் சொல்லப்படுகிறது. விபத்து நடப்பதற்கு முன்பிலிருந்து விபத்து வரையிலான ஒரு விவரணை, விபத்துக்குப் பின் நிகழும் இன்னொரு விவரணை_முன்னும் பின்னுமாக அலையும் ஒழுங்கற்ற கதை கூறல் ஆகியவை இப்படங்களின் பின் நவீனத்துவத் தன்மையை உறுதிப்படுத்துகின்றன.// காப்பி - பேஸ்ட், எம்.ஜி.சுரேஷ்.

    மேலும் விவரங்களுக்கு, http://baavaa.blogspot.com/2007/04/blog-post_18.html

    சரி நீங்கள் கேட்கலாம், அமேரோஸ் பெர்ரோஸ்ஸிற்கு சொன்னது பாபெல்லிற்கு எப்படி சரிவரும் என்று. என்னைப் பொறுத்தவரை அமேரோஸ் பெர்ரோஸ்ஸை விட பாபெல் சிறந்த படம்.

    ReplyDelete
  5. உங்களுடைய முதல் கேள்விக்கு, அதாவது ஜப்பானிய பெண்ணைப் பற்றி...

    அதாவது அந்தத் துப்பாக்கி இல்லாவிட்டால் பாபெல் படமே இல்லை இல்லையா? என்றாலும், நிச்சயமாய் ஆடு மாடு மேய்ப்பவர்களுக்கு துப்பாக்கி எப்படி வந்தது என்ற கேள்வி எழும் இல்லையா? அதனால் இங்கே ஜப்பானியருடைய பங்கு மிகமுக்கியமானதாகிறது.

    படத்தில் குடும்பங்கள் ஒருவொருவரைச் சார்ந்து இருப்பதை பிரகாசமாகவே காட்டியிருப்பார் இயக்குநர். குடும்பத்தில் ஒரு நபர் செய்யும் விஷயம் மற்ற குடும்ப நபர்களை பாதிப்பதைத்தான் படம் குறிப்பாய் சொல்கிறது.

    இப்படிச் சொல்லும் பொழுது, அந்த ஜப்பானியரின் வேட்டையாடும் பழக்கத்தால் அவர்கள் குடும்பம் எப்படி பாதிக்கப்பட்டது என்பதைக் குறிப்பிடாவிட்டாலும் உணர்ந்துகொள்ளக் கூடியது இல்லையா? இந்த விஷயம் கொஞ்சம் போல் அதிகம் என்றாலும் இயக்குநரின் இடம்(நாடு) எப்படியிருந்தாலும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஒரேமாதிரியாக இருப்பதை சொல்வதற்காகவே சொன்னதாக நான் நினைப்பதால் அவ்வளவு உறுத்தல்கள் இல்லை.

    ReplyDelete
  6. மோகன்தாஸ்,

    // அந்த ஜப்பானியப் பெண், விரகதாபத்தில் துடிக்கும் போதாகட்டும். //

    என்க்கென்னவோ அப்பெண்ணின் பகுதியில் விரகதாபம் காட்டப்பட்டதாய் தோண்றவில்லை! "எல்லோருக்கும் இருக்கும் ஆண்நண்பன் தனக்கு இல்லையே" என்றும், தனது உடற்குறையால் மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் நிராகரிப்பின் வலியையுமே அழுத்தமாக சொல்லியிருந்ததாகப் பட்டது.

    மற்றபடி இப்படம் பின்நவீனத்துவமா என்பதெல்லாம் எனக்கு தெரியாது! ஏனெனில், படம் முழுமையாக புரிந்தது! :)

    ReplyDelete
  7. Mohandoss, Have you seen the movie "Crash". If not see it, konjam pazhaiya padam. Sandra Bullock, Matt Dillon etc I think. Similar theme. See how gripingly and interestingly it is taken with proper connection to all characters. - PK Sivakumar

    ReplyDelete
  8. இளவஞ்சி, நீங்க சொன்னதே கூட பின்நவீனத்துவத்தின் ஒரு கூறுதான். எனக்கு ஒரு விதமாய்ப் புரிந்தது உங்களுக்கு ஒரு விதமாய்ப் புரியுதில்லையா. அதுதான் மேட்டர்.

    -----------------

    பிகேஎஸ், கிராஷ் பார்த்திருக்கிறேன். ஆனால் பாபெல் அளவிற்கு என்னைக் கவரவில்லை.

    ReplyDelete
  9. மோகன்தாஸ் ஸார்..

    நாலு படம் பண்ணோமா? நாலு காசு சேர்த்தோமா? வீட்டைக் கட்டினோமா? பொண்டாட்டி, புள்ளைகளைக்கு சொத்து சேர்த்தோமா என்பதுதான் இன்றைய பெரும்பான்மையான திரைக் கலைஞர்களின் ஆதர்ஸ லட்சியம்.

    இதில் அதிகப்பட்சம், போட்டியிடுகின்ற அனைவருமே வெற்றி பெற்று விடுகிறார்கள். காரணம் ரொம்ப சிம்பிள்.. தமிழ்.. தமிழ் மொழியேதான்..

    தங்களுக்கு ஆங்கிலப் படங்களைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் ஏன் வந்தது? உங்களுக்கு ஆங்கிலம் தமிழுக்கு மிக அருகாமையில் உள்ளது. உங்களால் தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் எழுத முடியும். படிக்க முடியும் என்பதுதான்.

    ஆனால் தமிழ்நாட்டு ஜனங்களுக்கு ஆங்கிலம் தேவையில்லை என்றல்லாவா பகுத்தறிவு திராவிட சிங்கங்கள் சொல்லி வருகின்றன. இதில் எமது இளைஞர்கள் என்றைக்கு ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டு அதற்குப் பிறகு இப்படியெல்லாம் சினிமா எடுக்க முடியுமா என்று படம் பார்த்துவிட்டு யோசிப்பது?

    முதலில் மொழி தெரிய வேண்டும் ஸார்.. சினிமாவுக்கு மொழி தேவையில்லை என்று சினிமா ஆர்வலன் என்ற முறையில் நீங்களும், நானும் ஒத்துக் கொள்ளலாம். ஆனால் சாதாரண எந்த லட்சியமும் இல்லாத பொது ஜனத்திற்கு..? அவனுக்குத் தேவை ஒரு மூன்று மணி நேர ரிலாக்சேஷன். அதற்காகத்தான் 99 சதவிகிதம் பேர் சினிமாவுக்கு வருகிறார்கள். அது அவனது மொழியிலேயே கிடைத்து விடுகிறது. ஏனெனில் அவ்வளவு திரைப்படங்கள்..

    ஆங்கிலத்திலும் அதிகம் பேசப்படும், பார்க்கப்படும் படங்கள் சண்டைப் படங்கள், சாகசப் படங்கள், திகில் படங்கள் இவைகள்தான்.. ஜாக்கிசான் படங்கள் ஓடிய ஓட்டத்திற்கு சில தமிழ்ப் படங்களே ஓடவில்லை ஸார்..

    நம்மவர்களின் சினிமா பற்றிய நோக்கம் மிகக் குறுகியது. Only Time Pass. இதில் இயக்குநர்களைச் சொல்லவே வேண்டாம்.. ஒரு காலக்கட்டத்தில் தமிழ்ச் சினிமாவில் சும்மா ரோட்டை கிராஸ் செய்யும் பெண்கள்கூட கழுத்தில் தாலி அணிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார்கள் நம்மூர் இயக்குநர்கள்.

    பிற்பாடு பண்பாடு, கலாச்சாரம் என்றார்கள். இதை மீறுபவர்கள் தமிழர்களே அல்ல என்றும் சொல்லிவிட்டார்கள். இப்போது தலைப்பு வைப்பதற்கே பெர்மிஷன் கேட்க வேண்டியிருக்கிறது. பிறகெப்படி பிறிதோர் உலகத்திற்கு இவர்களை அழைத்துச் செல்வது?

    பேபிள் மாதிரியான படங்களை காப்பியாவது அடிக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. இடையில் குத்துப் பாட்டு, குத்து டான்ஸ் வைக்க முடியாது. வேண்டாம் என்பார்கள்.. இன்னும் சிலர் இது வியாபாரம், விக்காது.. என்பார்கள்.. ம்ஹ¤ம்.. தமிழ்ச் சினிமாவிற்குள் சினிமாவை பற்றியே பேசக்கூடாது ஸார்.. Only Buisness..

    ReplyDelete
  10. உண்மைத்தமிழன்,

    உங்கப் பின்னூட்டத்தை தொடராமல் விட்டிருந்தேன். பல சமயங்களில் இப்படிச் செய்திருக்கிறேன் எதுவும் இண்டென்ஷனல் கிடையாது.

    நல்ல படங்கள் வரவேண்டும் என்பதுதான் நம் இருவரின் விருப்பமாகவும் இருக்கிறது. தமிழில் வர கொஞ்சம் காலம் ஆகலாம். :)

    ReplyDelete
  11. நேத்துதான் படம் பார்த்தேன்..இன்னிக்கு தேடியதில் உங்க விமர்சனம் கிடைச்சது..நல்லா இருக்கு உங்க விமர்சனம் (ரொம்பப லேட்டோ!! பின்னூட்டம் :)..படம் முடியும் வரை ஒரே நெஞ்சடைப்பா இருந்த்தது..அதுவும் அந்த பொடிசுகளுடன் அமெலியா பாலைவனத்துல அலைபாயற காட்சிகளும் அந்த பையனின் குளொசப் ஷாட் அழுகைகளும்..கிளாசிக்.

    pks அவர்களோட கேள்விக்கு என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய பதில்..

    /I did not like this movie much. The Japanese part could have been avoided. Just because the father gave gun to the hunting guide, why the life of daugther needs to be shown at such detail? Did not fit with movie.\\

    மொரோக்காவில் நடக்கும் துப்பாக்கி சூடு நிகழ்வு சம்பந்தமாக ஜப்பானியரை விசாரிக்க வரும் டிடெக்டிவ் போலிஸ் மூலம் தான் ஜப்பானிய பெண்ணுக்கு ஒரு சிறிய ஆறுதல் கிடைக்கிறது..அந்த சந்திப்பிற்க்கு பிறகான தெளிவில்தான் அவளுக்கு அவளது தந்தையிடம் பிணக்கு மறைந்து நெருக்கமாகிறாள்..இனி அவளுக்கு ஒரு உண்மையான உறவு உள்ளது so மனதடுமாற்றமோ அல்லது தாழ்வு மனப்பான்மையோ வராது...அவளது இந்த மாற்றத்துக்கு அந்த துப்பாக்கி தான் காரணம் :)

    ReplyDelete

Popular Posts