பொன்னியின் செல்வன் குந்தவை - வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா - சத்தியநாராயணாகத்தான் இருக்கும். இதற்கு நிறைய காரணங்கள் பாலகுமாரன் மேல் அந்தச் சமயத்தில் நான் வைத்திருந்த அபிரிமிதமான பற்று, என் பதின்ம வயது, பாலகுமாரனின் எழுத்து இப்படி நிறைய சொல்லலாம். சொல்லப்போனால் இந்தக் கதை படித்துவிட்டு கல்யாணம் பண்ணினால் விதவைப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்துப்பேன் என்று உறுதிமொழி எடுத்ததெல்லாம் உண்டு. ஆனால் பாலகுமாரனின் வெற்றி என்று அதைத்தான் சொல்வேன் வாழைப்பழத்துக்குள் ஊசி ஏற்றுவதைப் போல் அதை அவர் செய்வார். சொல்லப்போனால் சின்ன வயதில் இருந்த பெண்கள் பற்றிய பொறாமை உணர்ச்சியைப் போட்டு பூட்டிவைத்தவர் பாலா. அவர் பெண்களைப் பற்றி எழுதுவது அவ்வளவு இயல்பாய் வருவதாய் எனக்குத் தோன்றியிருக்கிறது.
சொல்லப்போனால் நான் இன்று வரை சிகரெட், குடி பழக்கத்தை தொடாததற்கு நிச்சயம் பாலாவை ஒரு காரணமாகச் சொல்லலாம். அந்தக் காலத்தில் எல்லாம் அப்படி ஒரு பிரமை அவர் எழுத்தின் மேல்; அழுக்கான என்னை கால்களைச் சுத்தப்படுத்துவது என்று சொல்லி தொடங்கிவைத்தது கூட அவர்தான். எங்க சிவராமன் சார் சொல்வார் இங்கிலாந்தில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள் அவளுக்கு முன் ஆண்கள் உட்கார்ந்திருக்க மாட்டார்கள் என்று இதை மேனர்ஸாக அவர்கள் கருதுவார்கள் என்று. ஆனால் இதைப் போல் பெண்களைப் பற்றி புரியவைத்தது பாலாதான். மாற்றுக்கருத்து இல்லை.
எங்கள் வீடுகளில் பாலா பிராமணர்களை எதிர்த்து அவர்கள் செய்யும் கெட்டதையெல்லாம் எழுதுகிறார் என்பதில் தான் அவர்களுக்கு பிரியமே ஆரம்பித்தது என்று சொல்லலாம். இன்றும் உடையாரைப் பிடித்து தொங்கிக் கொண்டு அவர் அங்கேயும் பிராமணர்களின் தவறுகளை எழுதுறார் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எனக்கென்னமோ அவர் ஆரம்பக்காலக்கட்டங்கள் ஏதோ தேவை காரணமாக தன்னை இகழந்துகொண்டதாகவும் ஆனால் பின்காலங்களின் தேவையால் தன் மீது அப்படிப்பட்ட பிம்பம் விழுவதை தடுக்கவே இப்படி பொய்யாய் சாமியார் வேஷம் கட்டுகிறாரோ என்ற சந்தேகம். அவர் ரொம்பவும் கீழ் வரைக்கும் போனதை எழுதியதால் மீண்டும் அதைச் சரிசெய்யும் சமயத்தில் சாதாரணமாக இருப்பதைக் காட்டமுடியாமல்; அதற்கும் மேல்நிலை என்ற ஒன்றை அவர் வலிந்து அவர் மேல் திணித்துக் கொள்கிறார் என்று நினைக்கிறேன்.
பல சமயங்களில் அவருடைய கதைகளை மீளப்படிக்கும் பொழுது அவர் தான் மணந்த இருதாரத்தை Defend செய்வதற்காகத்தான் இப்பொழுதெல்லாம் அதிகம் எழுதுகிறாரோ என்று கூட படும் எனக்கு. நிறைய உதாரணங்கள் சொல்லலாம். எனக்குத் தெரிந்து நான் பாலகுமாரன் சிபாரிசு செய்து படித்த பல பெண்களுக்கு அவர் எழுத்துக்களின் மீது விருப்பம் வரவில்லை. எனக்கு காரணம் தெரியாது; ஒருவேளை ஆண்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் இருதார மணம் என்பது கொள்கை அளவில் கூட பெண்களுக்கு பிடித்தமானதாக இல்லாததாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ பறந்துவிட்டது பதிவு. பயணிகள் கவனிக்கவும் அவருடைய இந்த எந்தவிதமான சமரசத்திற்கும் உள்ளாகாத எழுத்து என்று நினைக்கிறேன். ஆனாலும் அந்தக் காலத்தில் ஆண் ஒருவன் வாசக்டமி செய்துகொள்வதாகச் சொல்லி முடித்தது பெண்கள் மத்தியில் நல்லபெயர் எடுக்க வேண்டும் என்றோ இல்லை அதை ஒத்ததற்கான ஸ்டன்ட்டோ என்று படுகிறது எனக்கு.
நாவல்கள் எழுதுவதில் இருக்கும் டெம்ப்ளேட் முதலில் எனக்கு பிடிபடவில்லை; ஆனால் இப்பொழுது அவருடைய எந்த நாவலை எடுத்தாலும் முதலில் தென்படுவது அவருடைய டெம்ப்ளேட் தான். ஆனந்தவிகடனில் இந்தக் கதை தொடர்கதையாக வந்தது என்று நினைக்கிறேன் ஆரம்பத்தில் ஸ்டீபன் என்றொரு கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தி அதை ஹீரோ போல் கொண்டுசென்றிருப்பார். ஆனால் சட்டென்று சத்தியநாராயணன் அறிமுகம் ஆனதும் ஸ்டீபன் கதையில் இருந்து மறைந்துவிடுவார். இது எதனால் அப்படி நிகழ்ந்தது என்று தெரியாது. ஒருவேளை ஒருவரை மையமாக வைத்து கதை சொல்லும் வழக்கத்தை பாலகுமாரன் கழற்றி எறிய முயன்றிருக்கவேண்டும். எனக்கென்னமோ அந்த நாவல் சத்தியநாரயணா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதும் தான் சூடுபிடிப்பதாகப்படுகிறது.
அதே போல் நாவலின் background எப்பொழுதும் பாலகுமாரன் கதைகளில் மாறிக்கொண்டேயிருக்கும். அதற்கு அவர் நிறைய நேரம் எடுத்துக்கொண்டு விவரம் சேகரிப்பார் என்று நினைக்கிறேன். இது Sidney Sheltonன் அணுகுமுறை எனக்கு பாலகுமாரன் நாவல்களைத் தொடர்ந்து படித்துவிட்டு சட்டென்று சிட்னியின் நாவல் படிக்க முதலில் பட்டது இதுதான். Sidneyன் த மாஸ்டர் ஆப் த கேமை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம், அதில் சிட்னி ஷெல்டன் மொத்தம் ஐந்து தலைமுறையை அலேக்காக வைரத்தில் வைத்து கொடுத்திருப்பார். அதனுடன் ஒப்பிட்டுப்பார்க்கத் தோன்றும் இதில் பாலகுமாரன் விமானநிலையத்தை மையமாக வைத்து நாவல் அமைத்திருப்பார்.
அந்த விமானநிலையத்தைப் பற்றிய விவரிப்புக்கள் கொஞ்சம் போல் ஒட்டாமல் இருப்பதாக எனக்கு இப்பொழுது படுகிறது. ஆனால் சட்டென்று விரியும் கதையில் எங்கேயும் பாலகுமாரன் சட்னியில் அரைபடாமல் தெரியும் பொட்டுக்கடலை போல் தெரியமாட்டார் என்பது தான் விசேஷம். கவனிக்கவும் இது அவருடைய மற்ற கதைகளுடனான ஒப்பீடே, எனக்கு என்னவோ இரும்புக் குதிரைகளைவிடவும் மெர்குரிப் பூக்களை விடவும் பயணிகள் கவனிக்கவும் பிடித்திருந்தது.
எனக்கென்னமோ பாலகுமாரன் தமிழ் சினிமாக்கள் சாதிக்காததை அந்த நாவலில் சாதித்திருப்பதாக தோன்றும்; எப்படியென்றால் ஒரு கன்னிகழியாத ஆண்(சொல்லகூடாதோ!) திருமணம் நடந்து பிள்ளை பிறந்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாகக் காட்டியிருப்பார். பெரும்பாலான சமயங்களில் அந்தப் பையன் ஏற்கனவே கழிந்தவனாகவேயிருப்பான். இல்லை ஏதாவது கதை சொல்லி அந்தப் பெண் கன்னிகழியாதாவள் என்றொன்றைக் கொண்டு வருவார்கள். நான் மோகமுள் எல்லாம் படித்தது பிறகுதான்.
சரி கதைக்கு வருவோம், ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் விமானநிலையத்தில் பணி செய்பவர்கள். ஜார்ஜினா ஒரு குழந்தையுடன் வசிக்கும் இளம் விதவை. ஜார்ஜினாவின் கணவன் வின்சென்ட் விமானநிலையத்தில் வேலைசெய்து பணியில் இருக்கும் பொழுது நடைபெறும் குண்டுவெடிப்பால் இறந்துவிட ஜார்ஜினாவிற்கு அந்த உத்யோகம் கிடைக்கிறது. சத்தியநாராயணாவும் வின்சென்ட்டும் நண்பர்கள் சத்தியநாராயணன் வின்சென் ட்டின் மரணத்திற்கே தான் தான் காரணம் என்று நினைக்கிறான் - (ஓரளவிற்கு ஒத்துக்கொள்ளக்கூடிய விளக்கமாக எனக்குப்பட்ட இடம் இது) - அதனால் அவனால் ஜார்ஜினாவை வின்சென்ட் இறந்த பிறகு பார்க்கும் பொழுதெல்லாம் மனக்குழப்பம் உருவாகிறது. பின்னர் ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் எதிர்பாராதவிதமாக காதலில் விழுவதும் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்யும் பொழுது வரும் பிரச்சனையும் அதை எப்படித் தீர்த்து கல்யாணம் செய்துகொள்கிறார்கள் என்பதும் தான் கதை. சொல்லப்போனால் கதையை அப்படியே ஒரு முழுநீள திரைப்படமாக எடுக்கலாம் தான். ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் சூப்பராயிருக்கும். இதில் எனக்கு மிகவும் பிடித்தது ஜார்ஜினாவும் சத்திநாராயணாவும் காதலில் விழும் பொழுது நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்கள். உரைநடை ரொம்பவும் நகைச்சுவையாக இருக்கும் சிரித்துக்கொண்டே படிக்கலாம். இந்த உரையாடல் என்னைப் பித்துபிடித்து அலையச் செய்தது என்றால் அது மிகையல்ல. எத்தனை தடவைகள் அந்த உரையாடல்களைப் படித்திருப்பேன் என்று நினைவில் இல்லை. என்னுடைய ஆரம்பகால கதைகளில்(குறிப்பாக - ஒரு காதல் கதை) பாலாவின் உரையாடல் தாக்கம் இருப்பதாக நான் நினைத்திருக்கிறேன் அதுவும் பயணிகள் கவனிக்கவுமின் தாக்கம். நான் டெல்லியில் இருந்த சமயங்களில் உருப்போட்டுக்கொண்டிருந்த உரையாடல்கள் எழுத்தில் பார்க்க ஒன்றரை ஆண்டு ஆயிற்று. அப்படி எனக்கு மிகவும் பிடித்த உரையாடல் பயணிகள் கவனிக்கவுமில் பாலா எழுதியவை.
அதேபோல் ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் எழுதிக்கொள்ளும் கவிதை இரண்டு. பாலா சொல்லியிருப்பார் வார்த்தையைக் கோர்த்து கோர்த்து கவிதை எழுதணும் தனக்கு ஃப்ரீ ஃபோலோவா எழுதினாத்தான் பிடிக்கும் அதனால் தான் கவிதையை விட்டுட்டு நாவல் எழுத வந்ததா! ஆனால் சிறுகதையும் நாவலுமே கூட இப்ப வார்த்தை வார்த்தையா கோர்த்துத்தான் எழுதணும்னு வந்ததால பெட்டர் வார்த்தைகளை கவிதைக்காகவே கோர்த்துப்போம்னு தான் இப்பல்லாம் கொஞ்சம் தீவிரமா கவிதை எழுதுறது. இந்தக் கவிதை அந்தக்காலத்தில் எனக்குப் பிடித்திருந்த கவிதைகள் வரிசையில் நிச்சயம் இருந்த ஒன்று. ஆனால் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் உட்கார்ந்தால் இதைப்போன்ற ஒன்றை நானே எழுதிவிடுவேன்னு நினைப்பதால் அதற்கான பாலாவின் தேவையைப்பற்றிய கேள்விகள் எழுகிறது.
எதிர்பாராதவிதமாக சத்தியநாராயணா அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவனுக்காக ப்ரார்த்தனை செய்யவரும் ஜார்ஜினாவை - சத்தி இயலாமையால் திட்டிவிட்டு எழுதுவதாய் இருக்கும் இந்தக் கவிதை.
என் மனசுக்குள்ளே சில நாய்கள்
புரண்டு கிடக்கும் எனைத் தின்று
என்றோ மூடிய மனக்கதவை
எவரும் திறக்க வரவேண்டாம்
திறக்க நினைக்கும் ஒற்றைகை
ஓசை கேட்டு அவை நிமிரும்
நெருங்க காலடி சத்தத்தில்
நிமிர்ந்து ரத்தப் பல் காட்டும்
என்னைத் தின்ற வெறி நாய்கள்
உங்களைத் துரத்த ஓடிவரும்
நானே கதவைத் திறந்தாலும்
நாய்கள் மடக்கும் வருபவரை
விதியெனும் கிழவன் எனக்குள்ளே
தள்ளிய நாய்களில் நானில்லை
நாய்கள் எந்தன் தலைமேலே
நானோ நாய்களின் காலின் கீழ்
ஒன்றாய் பெருகுது மனத்தீவில்
என்னைத் தின்று கண்மூடி
புரண்டு கிடக்குது என்னுள்ளே
நான் யாரிடம் பேச முயன்றாலும்
இந்நாய்களின் ஊளைத் தடுக்கிறது
என்னுள் விழுந்த இந்நாய்கள்
நான் சாகும் நேரம் தூங்கிவிடும்
அந்தக் கணத்தில் கைகுவித்து
கண்வழி கேட்பேன் மன்னிப்பை
நீர் இருக்கும் இடத்தின் திசை நோக்கி
நானே நானாய் கிடந்தபடி
சத்தி எழுதிய கவிதைக்கு பதிலாய் இதை ஜார்ஜினா எழுதுவாள்.
வெள்ளை அங்கி சுருள் தாடி
ஒரு யூதன் வந்தான் இவ்வுலகில்
வெளிச்சம் முகுந்த வானத்தின்
ஒளியைத் தேக்கி தன் முகத்தில்
மெள்ள நுழைந்தான் பூவுலகில்
கன்னி மேரியின் சிசுவாக,
உலகம் முழுவதும் பல நாய்கள்
மறித்துக் கேட்டன அவனெதிரே,
எதற்கு வந்தீர் இவ்விடத்தில்
என்ன வேலை மானுடத்தில்
மெள்ள சிரித்து யூதமகன்
கரத்தை நீட்ட அவை விலகும்
மனிதன் எங்கள் முழுப்படைப்பு
மக்கள் எங்கள் குழந்தைகள்
உருவம் அற்ற ஒளிப்பிழம்பாய்
இருக்கும் எங்கள் தேவபிதா
உருக்கிச் செய்த மானுடத்தை
நீங்கள் ஆளவிடமாட்டேன்
உலகம் என்னும் ஆலயத்தில்
ஒவ்வொரு மனிதரும் தீபங்கள்
உருட்டிக் கவிழ்க்க நீர் முயன்றால்
உங்களைச் சும்மா விடமாட்டேன்
உரத்துக் கத்தின அந்நாய்கள்
பயந்து நடுங்கின தீபங்கள்
நாய்களை உறுத்து பார்த்தபடி
மெள்ளத் திறந்தான் ஆலயத்தை
இடுப்புக் கயிற்றை அவிழ்த்தெடுத்து
சொடுக்கிப் போட்டான் புவியதிர
ஓடிப்போச்சு நாயெல்லாம்
தீபங்கள் எல்லாம் மகிழ்ந்தாட
ஒற்றைத் தீபம் தலை வணங்கி
யூதனை நோக்கி வினவியது
என்னைப் படைத்த கடவுள்தான்
நாயைப் படைத்தான் இவ்வுலகில்
எதிரெதிர் விஷயம் படைத்துவிட்டு
எதற்கு வந்தீர் விளையாட
துக்கத்தோடு புலம்பியதை
குனிந்து பார்த்தான் கனிவாக
மெள்ளத் திரியைத் தூண்டிவிட்டு
யூதன் சொன்னான் பொதுவாக
நாய்கள் குரைக்கா திருந்திருப்பின்
எம்மை விரும்பி அழப்பீரோ
இருளே இங்கு இல்லையெனில்
உமக்கு ஏதும் மதிப்புண்டோ
விருப்பம் என்பது முதல்கேள்வி
புரியாதிருப்பின் கேளுங்கள்
கேட்டவர்தானே வரம் பெறுவர்
தீபங்கள் வணங்கின தலை குனிந்து
ஏசு ஏசு என்றபடி என்னுள் கேட்டதை நான்
சொன்னேன்
நீயும் கேளேன் என் தோழா
ஆனால் எனக்கு பாலாவின் சத்தி வாஸக்டமி கடைசியில் செய்துகொள்வதாகச் சொல்லும் முடிவு பிடிக்கவில்லை எத்தனையோ முறை இது ஆணாதிக்க சிந்தனையாக இருக்குமோ என்று யோசித்துப்பார்த்திருக்கிறேன் விடை தெரியவில்லை. ஆனால் இப்படி மறுமணம் செய்துகொள்பவர்களுக்கு வாஸக்டமி நிச்சயமான தீர்வாய் இருக்கமுடியாதுதான். ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்த பாலகுமாரனின் நாவல்களில் இது முக்கியமானது.

பயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்
பூனைக்குட்டி
Friday, January 15, 2016


பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
I’d been grinding Visu down for days—teasing, poking—till he broke, voice tight with exasperation. “Fine, but hook me up with a girl I pick ...
-
It was Saturday morning, early 2010, head still thumping from last night’s tequila flood, but I couldn’t stay away—back at Visu’s room like ...
உருகியிருக்கீங்க , எனக்கு அவரை அப்டிக்கும் வாய்ப்பி கிடைத்தும் படிக்க்லைங்க ஆனா அவரை நேர்ல பார்த்திருக்கிறேன்
ReplyDeleteபெரிய்ய கமெண்டா போடணும். இப்போதைக்கு ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுக்கறேன்.
ReplyDeleteபடிக்கும் போது நீங்கள் உங்களை மறந்தீர்கள் என்றால்.. அது நிச்சயம் பாலகுமாரன் கதையாகத்தான் இருக்கும்.
ReplyDeleteபல பெண்களுக்கு இவர் கதை பிடிக்காது என்பது ஓரளவு உண்மை.
பட்டணத்துச் சாலையிலே
ReplyDeleteசேறு வயல் இல்லை
சேறு வயல் தேனியிலே
கெட்டித் தரை காணோம்...
பட்டணத்தில் கால் பொளிய
சேறு சுகம் கேட்கும்
சேறு வயல் மிதித்து வர
கெட்டித் தரை தேடும்..
இங்கிருப்பது அங்கில்லை
அங்கிருப்பது இங்கில்லை
இல்லை என்பதெங்கு என்று
என் மனசு தேடும்..
இல்லாததைத் தேடுவதில்
கெட்ட சுகம் காணும்...
தேடலது என்னவென்று
இன்று கண்டு கொண்டேன்..
தேடுவதை விட்டுவிட்டுத்
தேடலாக நின்றேன்.
:-)
அவர் சித்தர் அப்படினு வேதாந்தம் பேசுகிற வரை கூட படிக்க முடிந்தது.
ReplyDeleteமுதலில் இருந்த ஆர்வம் பிறகு இல்லை.
இரும்பு குதிரைகள் புதிதான ஒரு எழுத்தை அறிமுகம் செய்தது.
பெண்களுக்குப் பிடிக்காது என்றில்லை.
ரொம்பவும் பெண்கள் மூளையையும் மனத்தையும் கசக்குகிறாரோ என்ற எண்ணம் இப்போ வந்துவிட்டது. காலத்திற்கு ஏற்ப நம் எண்ணங்களும் மாறும் இல்லையா.
பயணிகள் கவனிக்கவும் சுறுசுறுப்பாகப் படித்த தொடர்கதை.
அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.. எனக்கு முதன் முதலில் பாலகுமாரன் அறிமுகமானது "மெளனமே காதலாக" வில்தான். முதல் முறை படித்த போது எப்படி இப்படியெல்லாம் ஒரு ஆணால் எழுத முடிகிறதென்று வியந்திருக்கிறேன். உங்கள் பதிவுக்குப் பின் மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.
ReplyDeleteஎனக்குப் பிடித்தவை கரையோர முதலைகள், மெர்க்குரிப்பூக்கள், ஆனந்த வயல், பச்சை வயல் மனது, அகல்யா, பயணிகள் கவனிக்கவும், இனிது இனிது காதல் இனிது, அப்பம் வடை தயிர்சாதம் :-)
ReplyDeleteபாலகுமாரன் குறித்து இவ்வளவு நீளப்பதிவு.. உங்களது அசாத்திய தட்டச்சுத் திறனுக்க பாராட்டுக்கள்.
ReplyDeleteநானும் நிறைய பாலகுமாரன் கதைகள் படித்திருக்கிறேன். குறிப்பாக இக்கதையும். யதார்த்தில் பெண்களுடன் பார்க்க பழக உறவற்ற சவுதி அரேபியா போன்ற ...வறண்ட என்று வைத்துக் கொள்ளுங்களேன்... நாடுகளில் பாலகுமாரனும், தி.ஜா.-வும், கல்கியும் ஒருவகை sublimation ஆக இயங்குபவர்கள். இது உளவியல் சார்ந்தபிரச்சனை. நான் கூற வருவது.. .தற்குமேல் பாலகுமாரனை பின்பற்றும் அளவிற்கு ஒன்றுமில்லை. தவிரவும், பெண கறிதது அவர் உருவாக்கும் அல்லது கட்டமைக்கும் பிம்பம் என்பது ஆண்களின் பார்வை அல்ல male gaze என்கிற காட்சயின்பபத்தை அடிப்படையாகக் கொண்டது. விதவை பிரச்சனை என்பது இதைவிடவும் கல்யாண முருங்கையில் இன்னம் நெஞ்சைத் தொடம் வண்ணம் இருக்கும். பிரச்சனை இவை எல்லாம் பொதுபுத்தியில் கட்டமைக்கும் பெண் பிம்பம் மிக மிக ஆபத்தானது. பெண்கள் குறித்த ஒருவகை obsession தான் பாலாவின் எழுத்துக்கள்.மத்திய தரவர்க்க நிறைவேறா பாலிண்ப ஏக்கம். அது மிகவும் ஆபத்தான ஒரு கட்டமைப்பு.
மோசமான உள்ளடக்கததைக் கொண்ட சிறந்த வடிவம் விஷம் தடவிய மிட்டாய் போன்றது. இவரது எழுத்துக்களும் அப்படித்தான்.
இது உங்கள் ரசனைக்குறித்த விமர்சனம் அல்ல. நானும் நிறைய ரசிப்பவன்தான் பாலாவை. அது எனது உளவியல் பலவீனம்.
கார்த்திக் பிரபு,
ReplyDeleteஇப்ப அவருடைய புத்தகம் மற்றவர்களுக்கு நான் பரிந்துரைக்கக்கூடியது என்ற அளவில் இருப்பது மிகக்குறைவே. என்னைக் கேட்டால் ஆரம்பக்காலத்தில் பாலா எழுதியவற்றைக் குறிப்பிடலாம்.
நந்தா - எழுதுங்க காத்திருக்கிறேன்
ReplyDeleteகுமார்,
ReplyDeleteதமிழில் மேன்மேலே படித்துக் கொண்டே செல்ல பாலாவைப் படிப்பதென்பது தற்சமயங்களில் முடியாத ஒன்றாகிவிட்டது.
தனக்குரிய செட் ஆஃப் மக்களுடன் பாலா ஒதுங்கிவிட்டார் என்றே சொல்வேன்.
பிரகாஷ்,
ReplyDeleteஅதுவும் ஒரு அழகான கிளைக்கதை. நீங்க எங்கையோ எழுதியிருந்தீங்க நினைவில் இருக்கு, பாலாவை முதன் முதலில் நீங்க நேரில் பார்த்தப்ப இலக்கியம் பத்தி பேசுவாங்கன்னு நீங்க நினைச்சப்ப அல்ஸர் பத்தியோ வேற நோய்கள் பத்தியோ பேசினாங்கன்னு. அதைப்பற்றி ஒரு வார்த்தை இழுக்கணும்னு நினைத்திருந்தேன். மறந்திட்டேன். :(
சொல்லப்போனால் புத்தகம் மூலமாகவோ எழுத்தின் மூலமாகவோ நாம் பார்க்கும் பிம்பம் நேரில் பார்க்கும் பொழுது இயல்பாகவே தகர்ந்துவிடுகிறது.
வல்லிம்மா,
ReplyDeleteநீங்க எப்படி அதுவரை படிச்சீங்கன்னு தெரியலை. ;)
எனக்கு அதுக்கு முன்னாடியே அவர் கிட்டேர்ந்து விலக முடிந்திருந்தது. அதுக்கேத்த மாதிரி வேற எழுத்தாளர்கள் கிடைச்சாங்க.
Bee'morgan
ReplyDeleteபடிங்க, ஆனால் அவரைக் கடந்து சென்றுவிட முயலுங்கள் தமிழ் எழுத்துத்துறை பாலாவைக் கடந்து வெகுதொலைவு சென்றுவிட்டது, விட்டிருந்தது.
பாலா ஒரு குறிப்பிட்ட மக்களைக் கவரும் விதத்தில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். அவருக்கென்ன போனியாகுது செய்யறாரு ;)
பாலராஜன்,
ReplyDeleteநீங்கள் சொன்னவற்றில் பெரும்பான்மையானவற்றைப் படித்திருக்கிறேன், சில வருடங்களுக்கு முன்வரை பாலகுமாரன் புத்தகம் எல்லாம் வாங்கிவிடும் வியாதி எனக்கும் இருந்ததுதான். இப்பொழுது இல்லை, இந்த பெங்களூர் புத்தக சந்தையிலும் உடையார் ஐந்து ஆறு வாங்கிவிடுன்னு கை பரபரன்னுச்சு. மனசு வேண்டான்னுடுச்சு.
முதலில் எனக்குள் தூங்கிக் கிடந்த பாலகுமாரன் மற்றும் பயணிகள் கவனிக்கவும் நாவலின் நினைவுகளை கிளறி விட்ட மோகன்தாசுக்கு பலத்த கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDelete//பல சமயங்களில் அவருடைய கதைகளை மீளப்படிக்கும் பொழுது அவர் தான் மணந்த இருதாரத்தை Defend செய்வதற்காகத்தான் இப்பொழுதெல்லாம் அதிகம் எழுதுகிறாரோ என்று கூட படும் எனக்கு. //
ஆமாம். மெர்க்குரிப்பூக்களில் வரும் அந்த இம்மாரல் ரிலேசன்ஷிப் கேரக்டரில் கூட அவருடைய சாயல் நிறைய்யவே இருந்ததாக எனக்கு தோன்றியதுண்டு. இன்னும் இதுமாதிரி பல கதைகளைச் சொல்லலாம்.
//நிறைய உதாரணங்கள் சொல்லலாம். எனக்குத் தெரிந்து நான் பாலகுமாரன் சிபாரிசு செய்து படித்த பல பெண்களுக்கு அவர் எழுத்துக்களின் மீது விருப்பம் வரவில்லை. எனக்கு காரணம் தெரியாது; ஒருவேளை ஆண்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் இருதார மணம் என்பது கொள்கை அளவில் கூட பெண்களுக்கு பிடித்தமானதாக இல்லாததாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.//
நீங்கள் பரவாயில்லை மோகன். இரும்புக்குதிரைகளைப் படித்த பின்பு என்னைத் திட்டித் தீர்த்த தோழிகள் ஏராளம். அந்த காயத்ரி கேரக்டரின் கடைசி அத்தியாய வசனங்கள் அவர்களை ரொம்பவே கோபம் கொள்ளச் செய்தன. ஏதோ சிந்து பைரவி சுஹாசினி மாதிரியே இருக்கும். இதுக்கு காயத்ரியோட அப்பா பேசும் "நீ சரியாத்தாம்மா செஞ்சே" என்று தாங்கிப் பிடித்து பேசிய வசனங்களைப் பிடித்துக் கொண்டு, என்னை காய்ச்சி எடுத்து விட்டார்கள். மெர்க்குரிப் பூக்களையும் கொடுத்திருந்தேன்னா அடி வாங்கியே செத்திருப்பேன்னுதான் நினைக்கிறேன். ஆனால் அவருக்கு பெண் வாசகர்கள்தான் அதிகம் என்று கேள்விப் பட்டேன்..
//ஆனாலும் அந்தக் காலத்தில் ஆண் ஒருவன் வாசக்டமி செய்துகொள்வதாகச் சொல்லி முடித்தது பெண்கள் மத்தியில் நல்லபெயர் எடுக்க வேண்டும் என்றோ இல்லை அதை ஒத்ததற்கான ஸ்டன்ட்டோ என்று படுகிறது எனக்கு.//
இந்தக் கதை என்றில்லை. அவருடைய பல கதைகளில் தன்னுடைய இறுதி கட்ட அத்தியாயங்களில் வாசகர்களுக்கு ஒரு பெரிய்ய ஜெர்க்கை கொடுத்தே ஆக வேண்டும் என்று ஏதேனும் ஒரு தீர்மானம் போட்டு எழுதுவதைப் போல சுற்றும் பொருந்தாத ஒன்றை பொருத்த முயன்றிருப்பார்.
சத்தியாவின் வாசெக்டமி பற்றிய முடிவும் அது போன்ற் ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது.
ஒரு கிறிஸ்துவ விதவையை மணம் முடிப்பது ரொம்ப சிக்கல் வாய்ந்த ஒன்று என்று காட்டி இருக்கிறாரே என்று ரொம்ப வருத்தப் பட்டிருக்கிறேன். இந்த காட்ஃபாதர் கேரக்டருக்கு எனக்குத் தெரிந்து இந்தக் கதையில்தான் மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தது.
ஆனால் உங்களைப் போலவே பாலகுமாரனின் ஒன் ஆஃப்த மாஸ்டர் பீஸாக இந்த நாவல் என்னை ரொம்பவே கவர்ந்த ஒன்று. மறுமணம் செய்து கொள்வது என்ற ஒன்றை கதையின் மையமாய் வைத்து நான் படித்த கதைகளும், பார்த்த சினிமாக்களும் மிகக் குறைவாகவே இருந்த காலகட்டம் அது. அப்படியே எங்கேயாவது அப்படியொரு கருவுடன் வந்திருக்கும் கதைகள் கூட, அந்த பெண் திருமணம் ஆகி இருந்தாலும், பரிசுத்தமானவளாகத்தான் இருப்பது போலவும், அந்தப் பெண்ணை மறுமணம் செய்யும் நாயகன், ஏதோ பெரிய்ய தியாகியைப் போலவும், அவள் மீது ஒரு அனுதாபத்தின் பேரில், இரக்கப்பட்டு திருமணம் செய்ய முன்வருவது போலவேதான் நான் பார்த்திருந்திருக்கிறேன்.
அது போன்ற கதைகளில் நிச்சயம் இது பொன்ற ஒரு காட்சியமைப்பு இருக்கும். ஏதேனும் ஒரு இடத்தில், அந்த நாயகன் "வாழ்க்கை இழந்த ஒரு அபலைப் பொண்ணுக்கு வாழ்வழிப்பதுதான் என் லட்சியமே என்று பல்பேர் கூடி இருக்கும் ஒரு இடத்தில் நடு நாயகமாய் நின்று கொண்டு சொல்லுவார். அப்போது அந்தப் பெண் கண்களில் நீர் துளிக்க, அவனை பெருமிதமாய்ப் பார்த்துக் கொண்டிருப்பாள்".
இது நாள் வரை தியாகமாகவே காட்டி வந்த ஒரு விஷயத்தை காதலுடன் கலந்த ஒரு உணர்வாக இயல்பாக அதைச் சொல்லியுள்ள விதம் என்னை ரொம்பவே கவர்ந்தது. ஜார்ஜினா-ஸ்டீஃபன் கதையிலும் சரி, ஜார்ஜினா-சத்தியா கதையிலும் சரி காதல் இருந்திருக்கிறது. ஸ்டீஃபன் இறந்த போது ஜார்ஜினாவின் கதறலையும், "சுடு சோறையும்" அதில் கலந்துள்ள காதல் உணர்வையும் என்னால் அணு அணுவாய் உணர முடிந்தது.
ஜார்ஜினாவிற்கும், சத்தியாவிற்கும் இடையேயான சம்பாஷனைகளும், உள்ளுக்குள்ளேயே இருவரும் நடத்திக் கொள்ளும் மனப் போராட்டங்களும், இன்ன பிற விஷயங்கள் ஒவ்வொன்றிலும், பால குமாரன் காதல் உணர்வுகளை வாறி இறைத்திருப்பார்.
சொல்லிக் கொள்ளும் படியாக இன்னும் எத்தனையோ விஷயங்கள் இந்த நாவலில் இருந்தாலும் இதற்கு மேலேயும் எழுதினால் இதற்கு விமர்சனம் மோகன் எழுதினாரா நான் எழுத முயலுகிறேனா என்ற சந்தேகம் பலருக்கும் வர வாய்ப்பிருப்பதால், இதோட நிறுத்திக்கறேன்.
ஜமாலன்,
ReplyDeleteஇந்தப் புத்தகம் படித்து ஐந்து ஆறு வருடங்களுக்கு மேல் இருக்கும். பள்ளிப் பருவத்தில் படித்தது.
நான் இந்தப் பதிவில் எழுதியிருப்பவற்றில் சிலவற்றைக் என்னுடைய கடந்தகாலக் கருத்தாகத்தான் பார்க்கமுடியும். அதை வித்தியாசப்படுத்திக் காட்டியிருப்பதாகவே நினைக்கிறேன். நிகழ்காலத்தில் நான் பாலா பற்றி நினைப்பவற்றையும் எழுதியிருப்பதாகவே நினைக்கிறேன்.
விமான நிலைய குடியிருப்பு மொட்டமாடி காட்சி மறக்கவே முடியாதில்ல :)
ReplyDeleteநான் முதல் முதலா ஏர்போர்ட் போனப்ப இந்த நாவலைத்தான் நினைச்சிகிட்டேன்.ஜமாலன் கருத்துக்கள் நிஜம்தான்னாலும் பதின்மங்களில பாலகுமாரன் தந்த கிளர்வுகளும் கனவுத் தன்மையும்தான் இங்கு பலருக்கு ஆதாரம்(நான் உட்பட)..
உண்மைத் தமிழனுக்கு போட்டியா மோகன் :)
//விமான நிலைய குடியிருப்பு மொட்டமாடி காட்சி மறக்கவே முடியாதில்ல :)//
ReplyDeleteநிச்சயமா அய்யனார் ;) ஆனால் அந்தச் சம்பவத்தை நினைக்கும் பொழுதெல்லாம் வின்சென்ட் இறந்ததும் நினைவுக்கு வந்து காதலா/கடமையா/நட்பா/ஜொள்ளா அப்படின்னு ஏகப்பட்ட கேள்விகளை அள்ளி இறைக்கும்.
//.ஜமாலன் கருத்துக்கள் நிஜம்தான்னாலும் பதின்மங்களில பாலகுமாரன் தந்த கிளர்வுகளும் கனவுத் தன்மையும்தான் இங்கு பலருக்கு ஆதாரம்(நான் உட்பட)..//
நான் நிச்சயமாய் மறுக்கலை, ஏன் என்றால் பாலா, இராஜராஜன் விஷயத்திலும் வரலாற்றிலும் இதே போன்ற தன்னுடைய உதவாத கருத்துக்கோள்களை முன்னிருத்தப் பார்க்கிறார்.
//உண்மைத் தமிழனுக்கு போட்டியா மோகன் :)//
சொன்னா நம்ப மாட்டீங்க, ஜார்ஜினாவுக்கு சத்திக்கும் இடையில் ஒரு உரையாடல் நடக்கும் எப்பன்னா ஜார்ஜினா சத்தியை கன்னத்தில் அறைஞ்ச பிறகு நடக்குறது. மொத்தம் நாலு ஐந்து பக்கம் வரும். அதை டைப் பண்ணிப் போடலாம்னு தான் நினைச்சேன்.
தப்பிச்சிட்டீங்க ;)
நந்தா - எனக்கு யோசிக்கச் சொல்லித்தந்தது பாலான்னு சொல்லலாம்; அகம்பாவம்னு ஒரு விஷயம் வரும் சின்ன வயதில் நான் சொல்றது தான் சரி, நான் தான் பெரியவன்னு. அப்படி ஒரு விஷயம் என்கிட்ட இல்லைன்னே நினைக்கிறேன். அப்படி நான் நினைக்கும் சில மிகச்சில விஷயங்களிலும் அதற்கு எதிர்மறையான கருத்து இருக்கும் என்ற அளவுக்காவது எனக்குப் புரிகிறது. அது எந்த ஒரு விஷயமாகயிருந்தாலும் சரி.
ReplyDeleteபாலாவின் கதைகளில் எப்பப்பாரு பார்க்கலாம் நான் தான் பெரியவன்னு சொல்றவனைப் பார்த்து சிரிக்கிற மாதிரி. எப்பப்பாரு சத்தம்போட்டு பேசாமல் அமைதியாக சுற்றி நடப்பதைக் கவனிப்பது என நிறைய விஷயங்களை என்னளவில் இன்னும் செய்ய முயற்சி செய்கிறேன்.
ஆனால் பல சமயங்களில் செயல்படுத்தமுடியாமல் போய்விடுகிறது. கோபம் என்பது இயலாமையால் வருவது என்பதை மறுக்கவே முடியாது.
பாலகுமாரனைப்பற்றி பேசும்போது... தவிர்க்கமுடியாமல் எனக்கு பாக்யராஜ் நினைவுதான் வருகிறது. ஆண் விரும்பும் பெண்ணை பாலாவும்.. பெண் விரும்பும் ஆணை பாக்யராஜீம் படைத்தார்கள். இந்த விருப்பம் பற்றிய உளவில்கூறுகள் முக்கியமானவை.
ReplyDeleteதி.ஜா. படைக்க விரும்பிய நிலவுடமை உன்னதப் பெண்ணை பாலா இந்த நுகர்வுக் கலாச்சார உலகில் படைக்க விரும்பினார். ஜமுணாவை பகுதி பகுதியாக வெட்டி தனது நாவல்கள் முழுக்க ஒட்டவைக்க முயன்று இறுதியில் ஞானராஜசேகரைப் போல அவர் தோற்றதுதான் மிச்சம்.
தங்கள் கருத்துக்கு நன்றி மோகன்தாஸ். அந்த முடிவுக்கு நான் எப்போதோ வந்தாகிவிட்டது. நீண்ட நாட்களுக்குப் பின், சமீபத்தில் 'உடையார்' வாங்கினேன். அவரின் வட்டத்திற்கு வெளியே எழுதப்பட்டிருப்பினும், அவ்வளவாகக் கவரவில்லை. ஆனால் இப்பதிவைப் படித்தபின் மீண்டும் ஒரு ஆர்வம் வந்தது. அதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்..
ReplyDelete//எனக்குத் தெரிந்து நான் பாலகுமாரன் சிபாரிசு செய்து படித்த பல பெண்களுக்கு அவர் எழுத்துக்களின் மீது விருப்பம் வரவில்லை. //
ReplyDeleteஎன் அனுபவமும் இதே தான். ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு. அவரின் அகல்யா என்ற நாவலை கொடுத்த போது பெண்கள் அனைவரும் வெகுவாக ரசித்தார்கள்.
//சொன்னா நம்ப மாட்டீங்க, ஜார்ஜினாவுக்கு சத்திக்கும் இடையில் ஒரு உரையாடல் நடக்கும் எப்பன்னா ஜார்ஜினா சத்தியை கன்னத்தில் அறைஞ்ச பிறகு நடக்குறது. மொத்தம் நாலு ஐந்து பக்கம் வரும். அதை டைப் பண்ணிப் போடலாம்னு தான் நினைச்சேன்.//
ReplyDeleteதப்பிக்க எல்லாம் இல்லை. ஜார்ஜினா சத்தியா உரையாடல்கள் எல்லாத்தையும் டைப் பண்ணி போட்டாக் கூட படிக்க ஆளு இருக்கு.
//பாலாவின் கதைகளில் எப்பப்பாரு பார்க்கலாம் நான் தான் பெரியவன்னு சொல்றவனைப் பார்த்து சிரிக்கிற மாதிரி. எப்பப்பாரு சத்தம்போட்டு பேசாமல் அமைதியாக சுற்றி நடப்பதைக் கவனிப்பது என நிறைய விஷயங்களை என்னளவில் இன்னும் செய்ய முயற்சி செய்கிறேன்.
ஆனால் பல சமயங்களில் செயல்படுத்தமுடியாமல் போய்விடுகிறது. கோபம் என்பது இயலாமையால் வருவது என்பதை மறுக்கவே முடியாது.//
அப்பப்போ உண்மையான மோகண்தாஸ் உங்க எழுத்துக்களில் எட்டிப் பார்த்து விட்டு காணாமல் போய் விடுவார் போல. :)
ஆனால் கூறி இருப்பவை உண்மைதான்.
இதே போன்று மறுமணம் அழகாய்ச் சொல்லப் பட்டிருக்கும் இன்னொரு நாவல் "நிலாவே வா". அதன் இன்னொரு சிறப்பம்சம், ஒரு மங்கலாய்டு சிறுவனைக் கதைக் கருவாகச் சுற்றி புனையப் பட்ட விதம்.
அதிலும் இப்படி நாயகனுக்கும், கணவனை இழந்த நாயகிக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள் கூட அதே போன்ற ஒரு உணர்வுடன் கையாளப் பட்டிருக்கும்.
என்ன அப்பப்போ கொஞ்சம் அதீத்தன்மை எட்டிப் பார்க்கும். ஜமாலன் கூறியிருப்பது போல, மத்திய தர வர்க்க நிறைவேற பாலின ஏக்கமாக நாயகியை ஆட விடும் காட்சியின்பமும் இடம் பெறும்.
ஆனால் இதையும் தாண்டி கதையில் வரும் உரையாடல்கள் இந்தக் கதையை தாங்கிப் பிடித்திருக்கின்றன.
படித்திருக்கிறீர்களா?
தமிழ் எழுத்துலகில் படிப்பவனுடன் பேசி அவனை
ReplyDeleteதன்வயப்படுத்தி இழுத்தது, இரண்டு பேர் தான்:
அவர்கள்: 1. ஜெயகாந்தன் 2.பாலகுமாரன்.
இரண்டு பேர்களும் தங்கள் எழுத்தில், ஒரு விஷயத்தில் சாதக-பாதக விவாதங்களை ஏற்படுத்தி ஒரு முடிவுக்கு வருவதில்
வெற்றி பெற்றவர்கள். இதுவே இவர்களது எழுத்துக்கான வெற்றி.
கணினி வசதிகளெல்லாம் இல்லாத காலத்தில் இவர்கள் இருவரும் கைமூட்டு எலும்புகளில்் வலி ஏற்படுவதையும் மீறி எழுதிக் களைத்தவர்கள் என்பதை மறுக்க முடியாது.
வரவேற்பு இருக்கிறது என்பதற்காக வெற்று குப்பைகளை எழுதியவர்கள் எத்தனையோ பேர்.
இன்னும் பாலா அதற்கு இறையாக வில்லை.
அண்ணாசலையில், சாலையோரங்களில் கடைவரித்திருக்கும் பழைய புத்தக வியாபாரிகளிடம்
கேட்டுப்பாருங்கள். இன்றைக்கும் 'ஹாட் சேல்ஸ்'
பாலகுமாரனின் பாக்கெட் நாவல்கள் தான்.
வெகுஜனப் பத்திரிகைகளும், பாலகுமாரன் தொடர் எழுதுகிறார் என்றால், 50000 பிரதிகள் கூட விற்பனையாவதாகத்தான் இன்றும் சொல்கிறார்கள்.
படிப்பவனை 'கன்வின்ஸ்' பண்ணுகிற மாதிரி பக்கம் பக்கமாக எழுதிக்குவிப்பது என்பது பெரிய வேலை. சிலரால் தான் இந்த சித்து வேலை சாத்தியப்படும் என்பது நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரு உணமை.
//எப்படியென்றால் ஒரு கன்னிகழியாத ஆண்(சொல்லகூடாதோ!) திருமணம் நடந்து பிள்ளை பிறந்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாகக் காட்டியிருப்பார். //
ReplyDeleteDoes கன்னிகழியாத include masturbation and fantasizing as well?
This has perplexed me for a long time.
நானும் ஒரு வயதில் பாலா படித்து இருக்கிறேன் . என் வாழ்நாளில் படம் என்று ஒன்று எடுத்தால் பயணிகள் கவனிக்கவும் முதலிடம். வல்லி சிம்ஹ்ன், ஜமாலன் கருத்தும் மிக சிறப்பாக இருந்தது அவர்கள் கருத்தே என் கருத்தும். எல்லோரையும் தன்பக்கம் கட்டி போட்ட பாலா , எல்லோரும் முன்புபோல் படிப்பதில்லை என்பதையே அனைத்து பின்னுட்டஙக்ளும் நமக்கு தரும் தகவல். ஆனால் சுஜாதாவை அவர் சாகும் வரை நாம் விட வில்லை என்பதை யாவரும் அறிவோம்
ReplyDelete//பிரச்சனை இவை எல்லாம் பொதுபுத்தியில் கட்டமைக்கும் பெண் பிம்பம் மிக மிக ஆபத்தானது. பெண்கள் குறித்த ஒருவகை obsession தான் பாலாவின் எழுத்துக்கள்.மத்திய தரவர்க்க நிறைவேறா பாலிண்ப ஏக்கம். அது மிகவும் ஆபத்தான ஒரு கட்டமைப்பு.
ReplyDeleteமோசமான உள்ளடக்கததைக் கொண்ட சிறந்த வடிவம் விஷம் தடவிய மிட்டாய் போன்றது. இவரது எழுத்துக்களும் அப்படித்தான்.
//
ஜமாலன்,well said.
என்னுடைய கருத்தும் அப்படியே..
ஒருமுறை இக்கருத்தைச-அவரின் ரசிகர்களின் வலைப்பூவில்-சொல்லப் போக பலத்த நிந்தனைகளை சந்திக்க நேர்ந்தது;என்னுடைய விளக்கத்தைக் கூட மட்டுறுத்த மறுத்து ரசிகர்கள் கும்மியடித்தார்கள்..
ஆனால் பாலகுமாரனைப் பற்றிய மிகச் சரியான ஒரு மதிப்பீடு நீங்கள் சொன்னதுதான்.
மோகந்தாஸ் சொன்னமாதிரி,ஆரம்பத்தில் மிகக் கீழான நிலைக்கு இறங்கிவிட்டதால் மிக மேல்நிலையை உருவகப்படுத்தும் செயலைச் செய்கிறார் என்று சொல்வதும் சிந்தனைக்கு சரியானதாகவே தோன்றுகிறது.
வெளியாகி நீண்ட நாளின் பின்னரே பார்க்க கிடைத்தது. பாலகுமாரனின் இன்னொரு தீவிர வாசகரை கண்ட மகிழ்வு. சில சமயங்களில் நான் நினைத்துள்ளேன் இக்கதையை ஒரு திரைப்படமாக எடுத்தால் என்ன என்று....
ReplyDeleteஅற்புதமான கதை.... அதிலும் விதவா விவாதத்துக்கு கொடுக்கும் முக்கியம் சமூகத்துக்கு கட்டாயம் தேவையானது.
ReplyDeleteYour style is very unique compared to other folks I have read stuff from. Thank you for posting when you've got the opportunity, Guess I will just book mark this site. craigslist raleigh