எனக்கு அகதிகளைப் பற்றிய அறிமுகம், போர் பற்றி எரியும் நாடுகளின் எல்லைகளைப் பற்றிய பிரகாசமான அறிமுகம் கிடையாது. அதாவது எப்படியென்றால் புத்தக அறிவைத் தவிர்த்த அறிவைப் பற்றி பேசுகிறேன். மற்றபடிக்கு, இலங்கை, ஈரான் ஈராக் இஸ்ரேல் லெபனான் பற்றிய படிப்பறிவு உண்டு. ஆனால் படிப்பறிவு இந்த விஷயங்களில் பெரும்பான்மையான சமயங்களில் இரண்டு பக்கங்களின் விஷயங்களையும் சொல்வதில்லை. அது மட்டுமில்லாமல் எல்லா விஷயங்களைப் பற்றிய ஒரு முன்முடிவும் எனக்கு இரண்டு பக்கங்களையும் பார்க்கவிடாமல் தடுத்துவிடுகிறது.
மரூன்ட் இன் இராக் படம் அப்படித்தான் எனக்கு இதுவரை தெரியாத ஈராக்கை, ஈரானை இல்லை அவற்றின் ஒரு பகுதியை அறிமுகப்படுத்தியது. படம் ஈரானின் எல்லையில் உள்ள குர்தீஸ்தானில் ஆரம்பிக்கிறது, அங்கே வயதான மிகப்பிரபலமான பாடகரான மிர்ஸாவிற்கு அவருடைய முன்னால் மனைவியைப் பற்றிய செய்தி வருவதில் இருந்து படம் தொடங்குகிறது. அவரது முன்னால் மனைவி இருப்பது ஈராக்கின் குர்தீஸ்தானில், போர் நடந்து கொண்டிருக்கும் சமயம்(அதாவது சதாம் உசேன் பதவியில் இருந்த காலம். அவர் தீவிரமாக குர்தீஸ்களை கொன்று கொண்டிருந்த சமயம், அவர் குர்தீஸ்களைக் கொல்ல கெமிக்கல் ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும் படம் சொல்கிறது.)
அந்தச் சமயத்தில் இவர்கள், அதாவது மிர்ஸாவும் அவருடைய இரண்டு மகன்களும் மிர்ஸாவின் முன்னால் மனைவி ஹனேராவைத் தேடி பயணத்தைத் தொடர்கிறார்கள். இங்கே ஒரு விஷயம் மிர்ஸாவின் இரண்டு மகன்களும் பரட் மற்றும் அயுத்தும் கூட அவர்களுடைய தந்தையைப் போலவே பாடகர்கள், கொஞ்சம் பிரபலமானவர்களும் கூட. இதில் அவருடைய இரண்டாவது பையனுக்கு ஏழு மனைவிகள் பதிமூன்று பெண் குழந்தைகள். அவர் வார்த்தையிலே சொல்ல வேண்டுமானால் தனக்கு ஆண் குழந்தை பிறக்காத வரை அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு பெண்ணையும் விடமாட்டேன் என்று சொல்கிறார், ஆனால் யாரையும் வற்புறுத்துவதில்லை என்பதும் இந்த விஷயத்தை படம் முழுவதும் இயக்குநர் காமெடியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை படத்தில் இசையும் நகைச்சுவை உணர்வும் வழிந்து கொண்டேயிருக்கின்றது.
ஆரம்பத்தில் இரண்டாவது மகன் அயுத் தன் மனைவிகளையும் குழந்தைகளையும் விட்டு தந்தையுடன் இந்த பயணத்தில் வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். ஆனால் தந்தை வற்புறுத்தி இருவரையும் அழைத்துக் கொண்டு போகிறார். மிர்ஸாவின் முன்னால் மனைவி ஹனேரா அவருடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு மிர்ஸா நடத்திய பாடற்குழுவில் பாடிக்கொண்டிருந்த சயீத்-ஐ திருமணம் செய்துகொண்டு இராக்கிற்கு வந்துவிடுகிறார். ஏனென்றால் ஒரு சமயத்தில் இரானில் பெண்கள் பாடக்கூடாதென்று கண்டிப்பு வந்துவிட தொடர்ந்து பாடவேண்டும் என்று நினைக்கும் ஹனேரா சயீத்தை கல்யாணம் செய்துகொண்டு இராக்கிற்கு வந்துவிடுகிறார்(இராக்கில் உள்ள குர்தீஸ்தானிற்கு - அப்பொழுது சதாம் ஈராக்கில் பெண்களுக்கு சில பல உரிமைகளை தந்துவந்துள்ளதாகத் தெரிகிறது).
தற்சமயம் அந்த ஹனேரா தான் ஈரான் ஈராக் எல்லையில் அகதிகளை மகிழ்விப்பதற்காக பாடிவருவதாகவும் அவருக்கு மிர்ஸாவின் உதவி தேவையென்பதும் தான் மிர்ஸாவிற்கு கிடைத்த செய்தி. உடனே தன்னுடைய மகன்களை அழைத்துக் கொண்டு புறப்படுகிறார். இந்த மூவரும் போகும் பயணம் அவ்வளவு சுலபமாக இல்லை. முதலில் இரானிய எல்லையில் இருக்கும் அகதி முகாமில் ஹனேராவின் தற்போதைய கணவர் சயீத்தின் அம்மாவைப் பார்க்கிறார்கள். சயீத் கொடுத்த ஒரு கடிதத்தை அவரிடமிருந்து பெற ஆனால் அந்தம்மா அந்தக் கடிதத்தை எங்கே போட்டார் என்பதை மறந்து போயிருக்கிறார். இப்படியாகத் தொடரும் பயணம் அவர்களுக்கு அவ்வளவு சுலபமாகயில்லை.
தொடரும் அவர்கள் பயணத்தில் அவர்களுடைய பணம், ஓட்டி வந்த வாகனம் போன்றவை கொள்ளையடிக்கப்படுகின்றன. கடைசியில் அவர்கள் நடைபாதையாக ஹனேராவைத் தேடத் தொடங்குகிறார்கள். அவர்கள் கடக்கும் ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் மக்களுக்கும் மிர்ஸாவைத் தெரிகிறது அதே போல் ஹனேரா மிர்ஸாவின் உதவியை நாடியிருப்பதும். இப்படியாக தொடரும் பயணத்தில், முதல் மகன் பரட் ஒரு பெண்ணின் குரலில் மயங்கி அவளை திருமணம் செய்து கொள்ளக் கேட்கிறார். இரண்டாவது மகன் அயுத்திற்கு அகதிகள் முகாமில் இருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் தத்தெடுத்துக் கொள்ளக் கிடைக்கிறார்கள். இப்படி இவர்கள் ஒருவாறு மிர்ஸாவை பிரிந்துவிடுகிறார்கள் பயணத்தின் ஒரு பகுதியில்.
இரண்டாவது மகனை மிர்ஸா தானே ஒரு பகுதிக்கு மேல் வரவேண்டாம் என்று நிறுத்திவிட, பரட் கொஞ்சம் வாட்ட சாட்டமாக இருப்பதால் எல்லைப் படையினர் பிடித்தால் இராணுவத்திற்கு பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள் என்ற பயத்தில் பரட்டை மிர்ஸா தன்னைத் தொடர்ந்து வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.
பின்னர் தன்னந்தனியாக தொடரும் பயணத்தில் ஒருவாறு ஹனேராயிருக்கும்/இருந்த இடத்தை அடைகிறார் மிர்ஸா, ஆனால் அவரை சந்திப்பதோ; ஹனேராவின் தற்காலக் கணவரின் சகோதரி. அங்கே தான் சயீத் இறந்து போன விஷயத்தை தெரிந்துகொள்கிறார் மிர்ஸா. சயீத்தின் கடைசி ஆசையான, மிர்ஸாவுடன் சேர்ந்து பாடவேண்டும் என்ற ஆசையும் நடக்காமல் போய்விட, சயீத் தன் உடலை மிர்ஸா தான் தகனம் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்க அதன் படியே மிர்ஸாவும் செய்கிறார்.
பின்னர் மிர்ஸா ஹனேராவைப் பற்றிக் கேட்க, அவர் கெமிக்கல் தாக்குதலால் பாதிக்கப்பட்டு குரல், முகம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் மிர்ஸாவுக்காக ரொம்ப காலம் காத்திருந்ததாகவும் பின்னர் வேறெங்கேயோ சென்று விட்டதாகவும் செய்தி கிடைக்கிறது. பின்னர் கடைசியில் ஹனேரா மிர்ஸாவிற்காக விட்டுச் சென்ற ஹனேரா/மிர்ஸாவின் பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு ஈராக்கிய எல்லையைத் தாண்டி ஈரானிய எல்லைக்குள் நுழைவதுடன் படம் முடிவடைகிறது.
---------------------------------------------
படம் நானெல்லாம் முழுக்க முழுக்க பாலைவனம் என்று நினைத்துகொண்டிருந்த ஈராக்கில் முழுக்க முழுக்க பனிப்பொழிவில் நடக்கிறது. அதற்கு காரணம் சொல்லும் இயக்குநர், குர்தீஸ்தானில் இயற்கையழகு மிகச் சிறப்பாகயிருக்கும் இதே படத்தை நான் இலையுதிர் காலத்திலோ வசந்த காலத்திலோ எடுத்திருந்தால் பார்ப்பவர்கள் குர்தீஸ்தானின் இயற்கையழகில் கவனத்தை செலுத்தி நான் சொல்லவந்த விஷயத்தை மறந்திருப்பார்கள் என்பதும்.
உண்மைதான் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் ஸ்கிரீன் முழுவதும் வெள்ளைப் பனியாலும், ஒன்றிரண்டு கறுப்புப் புள்ளிகளாக மக்கள் தோன்றுவதையும் காணலாம். இதையும் குறிப்பிட்ட இயக்குநர் சிம்பாலிக்காக மக்களின் துயரத்தை விளக்குவதற்காக இப்படி செய்ததாக சொல்லியிருந்தார்.
படத்தில் ஹனேரா தான் முக்கிய கதாப்பாத்திரம் என்றாலும் ஹனேராவை காண்பித்திருக்கவே மாட்டார் இயக்குநர் காரணம் ஹனேரா தான் முக்கிய கதாப்பாத்திரம் என்றாலும் தான் சொல்லவந்தது குர்தீஸ்தானில் இருக்கும் மக்கள் வாழ்நிலையை அதற்காக எடுத்துக்கொண்ட ஒரு கதை தான் ஹனேராவைப் பற்றியது. மக்கள் ஹனேராவைப் பற்றி யோசிக்காமல் கதையை, மக்களை, அவர்களில் வாழ்வாதரவிற்கான பிரச்சனையைப் பார்க்கவேண்டும் என்றுதான் அப்படி செய்ததாகவும் சொல்வார்.
குர்தீஸ்தான் மக்களின் அடிப்படை வாழ்வியல் விஷயங்களாக இருக்கும் நகைச்சுவை உணர்வையும் இசையையும் கொண்டுவரவே முயன்றதாகச் சொல்லியிருப்பார் இயக்குநர், உண்மைதான் மைல்ட் காமெடியும் இசையும் படம் முழுவதிலும் ஆக்கிரமித்திருக்கிறது.
நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவது அன்றாட விஷயமாகிவிட்ட மக்களிடம் மரணம் என்பது ஒரு விளையாட்டாகயிருப்பதாகச் சொல்வார் இயக்குநர் உண்மைதான், கண்ணிவெடிகளிலும், கெமிக்கல் ஆயுதங்களாலும் மக்கள் கும்பல் கும்பலாகக் கொல்லப்பட அவர்களின் வாழ்க்கையை இன்னமும் நகர்த்திக் கொண்டிருக்க உதவுவது இசையும் நகைச்சுவையுமாகவேயிருக்கும். இருக்க முடியும்.
கதைப்படி எல்லோருக்கும் ஒரு ஹாப்பி எண்டிங் இருக்கும், பரட்டிற்கு அவர் ஆசைப்பட்ட பெண் கிடைப்பாள், அயுத்திற்கு இரண்டு ஆண் குழந்தைகள், மிர்ஸாவிற்கு சயீத்/ஹனேராவின் குழந்தை என இதை விளக்கும் இயக்குநர் தான் ஆப்டிமிஸ்டிக்கா இருப்பதையே விரும்புவதாகச் சொல்கிறார்.
உண்மையில் ஒரு அருமையானப் படம் இந்த "மரூன்ட் இன் இராக்". வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள், அதே போல் இயக்குநரின் பேட்டியையும் கண்களால் சிரித்துக்கொண்டு அந்த மனிதர் படத்தைப் பற்றி விளக்குவது பிரம்மாதம்.
Marooned In Iraq
பூனைக்குட்டி
Monday, April 16, 2007

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
I’d been grinding Visu down for days—teasing, poking—till he broke, voice tight with exasperation. “Fine, but hook me up with a girl I pick ...
-
On a serene Saturday evening, I slowly emerged from the embrace of slumber, rousing from my afternoon repose. Gradually, my senses rekindled...
படத்தைப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது உங்கள் இடுகை.
ReplyDeleteநிச்சயமா பாருங்க அண்ணாச்சி. உங்களுக்கும் பிடிக்கும், டிவிடியில் கிடைத்தால் ஸ்பெஷல் பியூட்சர்ஸ் இருக்கும்.
ReplyDeleteஉங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது.
ReplyDeleteஇராக்கின் வடபகுதி மிக அழகான செழிப்பான பகுதி என நானும் படித்திருக்கிறேன்.
நிச்சயம் பாருங்க அண்ணாச்சி. குர்தீஸ்தான் பத்தி நிறைய தெரிஞ்சிக்கிட்டேன் படம் பார்த்து.
ReplyDeleteநல்ல விமர்சனம்
ReplyDelete