"இன்னிக்கென்ன நாயா? பூனையா?"
இதுதான் என் பொண்டாட்டிங்கிறது. நாம தேடித்தேடி பொய்யெல்லாம் சொல்லணும்னு அவசியமேயிருக்காது. அவளாவே கரெக்டா கண்டுபிடித்துவிடுவாள். ஆனால் கல்யாணம் ஆன புதிதில் இப்படிக்கிடையாது. எங்களுக்கிடையேயான அலைவரிசையில் நிறைய வேறுபாடுகள் இருந்தது. ஆனால் இந்த பத்து வருடங்களில் அவள் என்னை புரிந்துகொண்டது ரொம்ப அதிகம்.
"சொல்லுங்க கேக்குறேன்ல, இன்னிக்கு எந்த நாய், நரி ரோட்டில் அடிபட்டுக்கிடந்துச்சு, அய்யா எந்த ஆஸ்பத்திரிக்கு போய் ரத்தம் கொடுத்துட்டு வர்றீங்க. ஆபிஸ்லேர்ந்து கிளம்புறப்ப போன் பண்ணிட்டுத்தானே கிளம்புனீங்க?"
இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு பத்ரகாளி போன்ற ஒரு உருவகத்தை கொண்டுவர அவள் நினைத்தாலும் அந்த சாந்தமான அழகான முகத்திற்கு ஒத்துவரவில்லை. வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, அவளை நெருங்கிவந்து லேசாய் கன்னத்தை கிள்ளினேன்,
"அம்முன்னா அம்முதான், எப்பிடிடா கரெக்டா கண்டுபுடுச்ச, எவனோ ஒரு லூசுப்பய வண்டியே நாய் மேல ஏத்திட்டான், அது கதறித்துடிக்குது அவன்பாட்டுக்கு கண்டுக்காம போறான். ரொம்ப குட்டிடா இரண்டுமாசம் கூட ஆயிருக்காது, ஒரே ரத்தம் வேற. எனக்கு மனசு கேக்கலை. நம்ம அன்புக்கு இப்படி ஆகியிருந்தா பார்த்துட்டு அப்பிடியே உட்டுருவோமா சொல்லு?"
நான் மெதுவாய் அவளைக் கொஞ்சத்தொடங்க, கையைத் தட்டியவளாய்,
"இன்னிக்கு நம்ம மணீஷோட பிறந்தநாள் ஞாபகமிருக்கா. இவ்ளோநேரம் இங்க வாசல்லயே உட்கார்ந்துக்கிட்டிருந்தா, 'நைனா எப்பவருவாங்க'ன்னு கேட்டுக்கிட்டே. வண்டிச்சத்தம் கேட்டதும் கோபத்தில உள்ள போய் உக்காந்திருக்கா. நீங்களே போய் சமாதானப்படுத்துங்க, நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு. நம்மளால முடியாது,"
கோபம் அம்முவுக்குத்தான் அதிகமிருக்கும் ஆனால் வெளியில் காண்பிக்கமாட்டாள். மணீஷோட பிறந்தநாளுக்கு வெளியில் அழைத்துச்செல்வதாய் ஏற்பாடு. இப்பொழுது எல்லாம் அரோகரா ஆகியிருந்தது. மணீஷ் என்ன சின்ன பொண்ணு, எட்டு வயசாகுது. நாளைக்கு கொஞ்சநேரம் அதிகமா போகோ சேனல் பாத்துக்கோன்னு சொல்லிட்டா சமாதானமாயிருவா. ஆனா இங்க அப்படி முடியுமா? காலைலேர்ந்து ஆரம்பிக்கணும் தாஜா பண்ண, அவளுக்கு முன்னாடி எழுந்திருச்சி காபிபோட்டுத்தந்து, அவள் வேண்டாம் வேண்டாம்னு சொல்லும்பொழுதும் சமையல்ல அவளுக்கு உதவி செஞ்சு, சாயங்காலநேரமாய் அவளுக்குத்தெரியாமல் வெளியில் சென்று மணீஷிற்கு நொறுக்குத்தீனியும் இவளுக்கு மல்லிகைப்பூ வாங்கிவந்து இப்படி நிறைய செய்யவேண்டியிருக்கும் சமாதானப்படுத்த. இதெல்லாம் பண்ணுறமோ இல்லையோ அன்னிக்கு மட்டும் அவள் சமையல்ல நொட்டாங்கு சொல்லாமயிருக்கணும்.
இதையெல்லாம் நினைத்துக்கொண்டவனாய் மணீஷாவை சமாதானம் செய்ய வீட்டிற்கு உள்ளே நுழைந்தேன். அவ என்னைக் கவனித்தாலோ இல்லையோ அன்பு வந்துட்டான் முன்னாடி வாலை ஆட்டிக்கிட்டே. பொண்டாட்டி புள்ளயக்கூட சமாதானப்படுத்திரலாம், அய்யோ இவனை சமாதானப்படுத்த முடியாது. சிலசமயம் கோபத்தில் அம்மு நேரடியாகவே சொல்லிவிடுவாள்.
"உங்களுக்கு என்னையும் என் புள்ளையும் விட இவன்தான் முக்கியம்" என்று.
நமக்கு விளங்குதோயில்லையோ, அன்புக்கு கோபம் வந்திரும். அவளைப்பார்த்து குரைத்து தன் எதிர்ப்பைக்காட்ட, அம்முவின் வேதாளம் சீக்கிரமே முருங்கைமறம் ஏறிக்கும். அவ்வளவுதான் அன்புவின் வாய்க்கு போடவேண்டிய பெல்டை போட்டுட்டுத்தான் மறுவேலைன்னு அம்மு ஒத்தைக்காலில் நிற்க, சாதாரணமா அவனோட கழுத்து சங்கிலியை போட நினைத்தாலே கோபமாகிவிடும் அன்பு; ஒரே ராகமாய் அவளைப்பார்த்து குரைக்கத்தொடங்க, அப்புறமென்ன ரெண்டு வேளைக்கு எனக்கும் அன்புக்கும் வெளியில் தான் சாப்பாடு.
சமையல்கட்டிற்கே போகமாட்டாள், ஆனால் அவளும் அவள் பொண்ணும் மட்டும் எப்படியோ சாப்பிட்டிருப்பார்கள். இத்தனைக்கும் அன்புமேல அம்முவுக்கு பாசமில்லைன்னு எல்லாம் சொல்லமாட்டேன். அவனுக்கு உண்ணி எடுத்து விடுவதில் தொடங்கி, அவனைக்குளிப்பாட்டி, வாக்கிக் அழைத்துச்சென்று எப்பவாவது வீட்டில் அசிங்கம் பண்ணிட்டான்னா கழுவிவிட்டு அத்தனையும் அவள்தான் செய்வாள். என்ன நான் கொஞ்சம் செல்லம் கொடுப்பேன் அவள் மொத்தமாய்க் கண்டிப்புதான்.
ஒருநாள் இப்படித்தான் ஆபிஸில் முக்கியமான வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது இவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு. இரண்டு வார்த்தை பேசமாட்டேங்கிறா, அழுகுறா. எனக்கு தூக்கிவாறிப்போட அவசரஅவசரமாய் வீட்டிற்கு கிளம்பிவந்துபார்த்தால். அன்பு தேமேன்னு ?£லில் படுத்திருக்க பக்கத்தில் அவனைத்தடவிக் கொடுத்தபடியே இவள் அழுதுகொண்டிருந்தாள்.
என்னாடின்னு கேட்டா, அன்புவிற்கு உண்ணி வராமயிருக்கிறதுக்கான ஷேம்புவை போட்டு குளிப்பாட்டிவிட்டிருந்தாளாம். சமையல்கட்டில் ஏதோ அவசரவேலையாய் நன்றாய் கழுவிவிடாமல் விட்டிருக்கிறாள். அன்பு உடம்பை நக்கிவிட்டிருக்கிறான், பிறகென்ன தலைவர் வாந்தியெடுத்து, பெரிய பெரிய பிலிம்மெல்லாம் காட்டியிருக்கிறான்.
இவள் ஒரே அழுகையாய் அழத்தொடங்க, நான் அவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தேன். இவள் அதற்கு பிறகும் நிறுத்தாமல் அழுதுகொண்டேயிருக்க, ஸ்கூல்லேர்ந்து வந்த மணீஷா அம்மா அழுவதைப்பார்த்து அவளும் அழத்தொடங்க, நம்ம ஆளு, ?¦ரோ அன்பு டாக்டர்கிட்ட அழகா ஊசியை போட்டுக்கிட்டு; நல்லா ஒரு பாக்கெட் பிஸ்கெட்டையும் ஒரெயடியாய் விழுங்கிவிட்டு; ஜம்முன்னு வண்டியில் காத்துவாங்கிக்கிட்டே வந்து இறங்கினான்.
உள்ள நுழைஞ்சானோ இல்லை, நேராய் மீன் பொம்மையை எடுத்துக்கிட்டு ஒவ்வொருத்தரிடமாப் போய் விளையாடிக் கொண்டிருந்தான். அம்முவுக்கு அவன் திரும்புவும் ஆடிஓடி விளையாடத்தொடங்கவும் தான் உயிரே வந்தது போல் இருந்தாள். இரண்டு பேர்க்கிட்டையும் முடிச்சிக்கிட்டு என்கிட்ட பொம்மையை எடுத்துக்கொண்டு வர எனக்கு கோபமுன்னா கோபம், பின்ன என் பொண்டாட்டி புள்ளையை அழவச்சிட்டான்ல!!!, நான் விளையாட வரமாட்டேன்னு சொல்ல. உடனே அம்மு,
"அந்தாளு கிடக்குறாரு! நீவாடா குட்டி நாம விளையாடலாம்' னு சொல்லி கொஞ்ச நேரம் சார்கிட்ட விளையாடிக்கிட்டிருந்தாள். பின்னர் டாக்டர் போட்ட ஊசி வேலைசெய்யத்தொடங்க அன்பு அப்படியே தூங்கிட்டான். அப்புறம் மணீஷாவும் தூங்கினதுக்குப்பிறகும் அம்மு அன்பின் பக்கத்தில் உட்கார்ந்து அவனைப் பாவமாய்ப் பார்த்தபடியே தடவிவிட்டுக்கொண்டிருக்க, நான் மெதுவாய்,
"நானும் பாவந்தானே அம்மு, இன்னிக்கு பூரா இவனால ஒரே அலைச்சல்." ஆரம்பிக்க, திரும்பி முறைத்தவள்.
"பேசாமப்போய்ப் படுத்துக்கோங்க, அன்பை அப்படி பார்த்ததிலிருந்து எனக்கு மனசே சரியில்லை, பாவம் புள்ள காலைலேர்ந்து சாப்டதையெல்லாம் வாய்லெடுத்துட்டு கஷ்டமா படுத்துறுக்கான். உங்களுக்கெல்லாம் எப்படித்தான் மனசுவருதோ தெரியலை. மரியாதையாய் போயிருங்க, இல்லைன்னா ஒருமாசத்துக்கு அவ்வளவுதான்..." சொன்னவள் என்னைத் திரும்பிக்கூட பார்க்காமல் அவன் கால்களை நோண்டிக்கொண்டிருந்தாள். அன்பு விழித்திருக்கும் பொழுது காலில் இருக்கும் உண்ணியை எடுக்கவிடமாட்டான்.
எனக்கோ அன்னிக்கு இரவைக் கெடுத்துட்டானே பாவின்னு கோபத்தோட அவனைப்பார்த்தேன். அவனோ, அவள் தடவிக்கொடுக்கும் சொகுசில் ஒரு கண்ணை மட்டும் உயர்த்தி என்னை ஏளனமாகய்ப்பார்த்தான். இப்படியாக அவளுக்கு அன்பு என்று நாங்கள் செல்லமாய்க் கூப்பிடும் அன்பரசன் என்ற லேப்ரடார் கோல்டன் ரெட்ரீவர் வகை நாய்க்குட்டியை ரொம்ப அதிகமாகவே பிடிக்கும்.
அன்பை அப்படியே இரண்டு கைகளாலும் தூக்கிக்கொண்டு மணீஷாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தேன். பின்னர் அவளை பக்கத்தில் இழுத்து உட்காரவைத்துவிட்டு,
"என்னம்மா செல்லம் கோபமா நைனாமேல, பாருடா நம்ம அன்பு மாதிரியே ஒரு குட்டி நாய், ரோட்டில ஒருத்தன் அடிச்சிபோட்டுட்டு போய்ட்டான். பாவமில்லையாடா அது. நம்மள மாதிரி ஒரு உயிர்தானே அதுவும், அதான் நைனா ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுபோய் வர்றேன்."
நான் சொல்லச்சொல்ல மணீஷாவின் கண்களில் நீர்முட்டத் தொடங்கியிருந்தது.
"இல்ல நைனா எனக்குத்தெரியும் இப்புடித்தான ஏதாவதிருக்கும்னு. ஆனா அம்மாத்தான்..." சொல்லிவிட்டு திரும்பியவளை அம்மு முறைக்க மணீஷ் நிறுத்திக்கொண்டாள்.
பின்னர் நானும், அன்பும் மணீஷாவும் சேர்ந்துகொண்டு கொஞ்ச நேரம் அம்முவை வம்பிழுத்துக்கொண்டிருக்க, அவள் நேரமாகியிருந்ததால் வெளியில் செல்லவேண்டாமென்று சொல்லிவிட்டு சமைக்கத்தொடங்கினாள்.
அன்றிரவு,
"என்னங்க நான் உங்கக்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்."
"ஏய் இங்கப்பாரு உங்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன் இந்தச் சமயத்தில் உன்னோட எண்ணங்களை என்மேல திணிக்காதேன்னு." நான் சப்தமில்லாமல் அதே சமயம் கோபமாய்க் கேட்டேன்.
"நான் என்ன அவுசாரியா உங்க பொண்டாட்டிதானே, கண்டதையும் காண்பிச்சு கேக்கணும்ங்ற அவசியம் எனக்கு கிடையாது தெரிஞ்சிக்கோங்க." அவளும் கோபமாய்ச் சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்ள. நான்,
"சரி சொல்லித்தொலை என்ன விஷயம்." கொஞ்ச நேரம் அவளிடம் இருந்து பதிலெதுவும் வரவில்லை. பின்னர் திரும்பிப்பார்த்தவள்,
"நம்ம மணீஷைப்பத்தித்தான். எனக்கு அவ பண்றது சுத்தமாப் பிடிக்கலை."
இதை நான் எதிர்பார்த்தேன்தான். அவள் என்னைப்பற்றியோ என் குடும்பத்தைப்பற்றியோ சொல்ல அதுபோன்ற ஒரு சூழ்நிலையை உண்டாக்க மாட்டாள். ஆனால் மணீஷாவைப்பற்றி குறைசொல்ல மட்டுமே இப்படிச் செய்வாள். அப்பொழுது இவளுக்கு டெலிவரி டைம், அதுவரைக்கும் நார்மல் டெலிவரின்னு சொல்லிக்கிட்டிருந்த டாக்டர்ஸ் அந்த டைம் பார்த்து குழந்தையோட தலை கொஞ்சம் பெரிசாயிருக்கு ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. கடைசியில் அம்மா பொண்ணு இரண்டுபேரும் டெலிவரி முடிஞ்சு நல்லபடியாயிருக்காங்கன்னு சொன்னவுடன்தான் எனக்கு உயிரேவந்தது.
மணீஷா என்னைப்போலவே இடதுகாலில் ஆறு விரல்களுடன் பிறந்திருந்தாள். குட்டிக்குட்டியான கைகள், பஞ்சு போன்ற உடம்பு, பிறந்த கொஞ்சம் நாட்களுக்கு நான் அவளை தூக்கவேயில்லை. எனக்குப் பயம் கீழேப் போட்டுவிடுவேனோ என்று. அதற்குப்பிறகு சில நாட்களில் சரியாகிவிட்டது. அதிலிருந்து இன்றுவரை பெரும்பாலும் அவள் என்னிடம் தான் இருப்பாள். இன்னும் சொல்லப்போனால் அப்படியே அவள் என்னைப்போலவே வளர்ந்துவந்தாள். அதனால் மணீஷாவைப்பற்றி குற்றம் சொன்னாள் எனக்கு பிடிக்காது என்றுதான் அம்மு இத்தனையும் செய்வது.
மணீஷா டெல்லியில் பெரிய வீட்டு குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாள். இந்த வயதிலேயே மணீஷா மூன்று மொழிகளில் அழகாய்ப் பேசுவாள். தமிழும் இந்தியும் நாங்கள் டெல்லியில் இருப்பதால் எங்கள் பேச்சுவழக்கில் வந்தது, பள்ளியில் படிப்பதால் ஆங்கிலமும். என் டெல்லிவாழ் நண்பர்கள் பெரும்பாலோனோர் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர்கள் ஆதலால் அவளுக்கு சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் ப்ரெஞ்சும் சொல்லிக்கொடுத்து வந்தார்கள். மற்ற குழந்தைகளைப் போலில்லாமல், ஓவியம் வரைவது, என்னுடன் செஸ் விளையாடுவது என அவள் படிப்பைத்தவிர மற்றவிஷயங்களில் நன்றாகத்தான் ஈடுபாட்டோடு இருந்தாள். ஆனால் அம்மு எதைச்சொல்லவருகிறாள் என்று எனக்கு புரியவில்லை.
"அம்மு எதைச்சொல்ற, இன்னிக்கு மணீஷாவை நீதான் அப்படி கோபமாயிருக்கும் படி இருக்கச் சொன்னங்கிறத என்கிட்ட சொன்னாலே அதைச் சொல்றியா? அவ சின்ன குழந்தைம்மா இதிலென்ன தப்பிருக்கு சொல்லு?"
"இங்கப்பாருங்க உங்களுக்கு புரியலை, அவளுக்கு இந்த வயசில இருக்கக்கூடாத தௌ¤வு இருக்கு. யார்க்கிட்ட எப்படி பேசினா விஷயம் ஆகும்னு தெரிஞ்சிருக்கா. இன்னிக்கு நடந்தத மட்டும் வைச்சு சொல்லலை, ஆனாலும் பாருங்க இன்னிக்கு நான் உங்கமேல கோபமாயிருந்ததால நீங்க வர்றவரைக்கும் அவளும் உங்க மேல கோபமாயிருக்குற மாதிரி இருந்தா, பின்னாடி நீங்க வந்ததும் உங்களுக்கு ஏத்தமாதிரி பேசுறா.
இந்த டெல்லி சூழ்நிலை எனக்குச் சரியாப்படலைங்க, இந்த வயசுல நான் செய்யத்தயங்குற பல விஷயங்களை ரொம்ப சாதாரணமா செய்றா. எல்லாம் நீங்க கொடுக்குற இடம். நாலு அடிவைச்சா சொல்பேச்சு கேட்டுறுவா. நீங்கத்தான் சிங்கத்துக்கு பிறந்ததால மட்டும் சிங்கக்குட்டி சிங்கமாகிவிடுறதில்லை, சிங்கம் தன் குட்டியை நக்கி நக்கித்தான் சிங்கமாக்குதுன்னு விளங்காத தத்துவம் எல்லாம் சொல்லி அவளை அடிக்க விடமாட்டேங்குறீங்க.
இன்னிக்கு பாருங்க அவங்க ஸ்கூல்ல இவ பிறந்தநாளுக்கு ஒரு கெட்டுகெதர் வைச்சிருந்தாங்க. அங்க வந்த இவ ப்ரண்ட்ஸ்ல யார் இவளுக்கு கிப்ட் கொடுத்தாங்களோ அவங்க கிட்ட மட்டும்தான் போய்ப்பேசுறா. இதுல ஒரு பையன் கிட்ட நேர்லையே கேட்டாகுது. நீ கிப்ட் வாங்கிட்டு வரலையான்னு. எனக்கென்னமோ இது சரியாப்படலை. அப்பிடியே உங்க சாமர்த்தியம், இதை நான் பார்த்ததும் ஒன்னுமே நடக்காதது போல அந்தப் பையனுக்கும் கொண்டு போயிருந்த சாக்லேட்டை கொடுக்குறா.
எனக்கென்னமோ நாம அவளை தப்பா கைட் பண்றமோன்னு தோணுது. எதுக்கெடுத்தாலும் ஒரே பிடிவாதம். தான் சொல்றததான் எல்லோரும் கேட்கணும்னு. அன்னிக்குத்தான் நீங்க பார்த்தீங்களே உங்க பிரண்ட்ஸ்ங்களோட நாம ஏர்ப்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுக்கு சாப்பிடப்போயிருந்தப்ப நடந்தத. இவளாலத்தானே நாமெல்லாம் அன்னிக்கு பனியில உக்கார்ந்து சாப்பிட்டோம். அன்னிக்கே உங்கக்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன் ஆனால் விட்டுட்டேன். இன்னிக்கு இவ ஸ்கூல்ல பண்ணது ரொம்ப ஜாஸ்தி.
டெல்லி மாதிரி எஜூகேஷன் கிடைக்காதுதான் ஒத்துக்குறேன். ஆனா இந்த வயசிலேயே இவளை நாம மாத்திட்டாத்தான் உண்டு. இல்லைன்னா பெரிய பிரச்சனையாயிரும் சொல்லிட்டேன்."
மூச்சுவிடாமல் பேசிவிட்டு நிறுத்தியவள், என்னையே பார்த்தாள். எனக்கும் இது ஒருவாறு தெரிந்துதான் இருந்தது. அப்படியே மணீஷா நார்த் இண்டியன் குழந்தைகளைப்போல் வளர்ந்திருந்தாள். என்னையே சிலநேரம் கோபப்படுத்திவிடும் அளவிற்கு மணீஷாவின் பிடிவாதம் வளர்ந்திருந்தது. இதைப்பற்றி நானும் சில மாதங்களாகவே யோசித்து வந்திருந்தேன். அதை இன்று அம்மு சொல்லவும்.
"சரி இப்ப என்ன பண்ணலாம்னு சொல்ற?" நான் கேட்க. அவள்,
"நாம டிரான்ஸ்பர் வாங்கிட்டு தமிழ்நாடு போய்டலாம், அவளோட பேஸ் நல்லபடியா வந்ததும் வேண்டுமானால் திரும்பும் டெல்லியோ இல்லை நார்த் இண்டியாவில் வேற இடமோ வந்திடலாம். நம்ம ஊரு வழக்கப்படி வளர்ந்தா கொஞ்ச நாளில் சரியாய்டுவா. அவளுக்கு இருக்கிற ஒரே பிரச்சனை இதுதான். ஆனா கொஞ்சம் சீரியஸான பிரச்சனை. மற்றபடிக்கு நம்ம பொண்ணுக்கென்ன என்னைமாதிரி முட்டாளா? உங்களமாதிரியே அறிவுக்கொழுந்து. அதெல்லாம் சரியா பிக்கப் பண்ணிக்குவா..." அம்மு எனக்கு ஐஸ்போட ஆரம்பிக்க அவள் பேச்சை இடைமறித்தவனாய்.
"இங்கப்பாரு இதைப்பத்தி நானும் கொஞ்ச நாளாவோ யோசிச்சிட்டுத்தான் வர்றேன். ஆனா நாம மெட்ராஸ் போனாலும் நான் அடையார் பக்கத்தில் வீடு பாக்கமாட்டேன் நல்லா ஞாபகம் வைச்சிக்கோ. இன்னும் சொல்லப்போனால் அடையாறுக்கு ஆப்போஸிட்டாத்தான் எங்கையாவது வீடு எடுப்பேன். நீ இதை சாக்கா வைச்சு உங்கம்மா, அப்பாக்கிட்ட கொஞ்சலாம்னு நினைச்சேன்னா அதை இப்பவே மறந்திரு. நாம மெட்ராஸ் போனா அதற்கு ஒரே காரணம் மணீஷாவின் பழக்கவழக்கத்தை சரி பண்றதுதான்."
நான் சொல்ல வேகமாய்க் என் கையைக் கிள்ளியவள்,
"எக்கேடோ கெட்டு ஒழிங்க." சொல்லிவிட்டு அந்தப்பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
அவள் சுலபமாய்ச் சொல்லிவிட்டாள் மெட்ராஸ்க்கு டிரான்ஸ்பர் வாங்குங்கன்னு. நான் அதன் சாதக பாதகங்களை கணக்கிடத்தொடங்கினேன். பிறகு சிறிது நேரத்திலேயே இதில் இருக்கும் பாதகங்கள் அனைத்துமே மணீஷாவின் நல்லதுக்குத்தான் என நினைத்தவனாய் தூங்கத்தொடங்கினேன்.
----
Thinnai.com