கட்டுடைத்தல் அப்படின்னு சொன்னதும் உங்களுக்கெல்லாம் யார் யார் நினைவுக்கு வருவாங்கன்னு தெரியாது எனக்கு ஆசிப் அண்ணாச்சியும் 'நண்பன்' பீர் முகமது அண்ணாச்சியும் தான் நினைவுக்கு வருவாங்க, குஷ்பு மேட்டர் வந்திருந்தப்ப கட்டுடைத்தலை படம் போட்டு விளக்கினவரு ஆசிப்புன்னா, பின்நவீனத்துவ கவிதை எழுதி விளக்கினவரு பீர் முகமது. சுட்டிகள் தேடிப்போட்டு மீண்டும் உதைவாங்க நான் தயாராயில்லை. இணைய உலகில் வலம் வரும் சில பெயர்களுக்காக கதைகளைப் படிக்க ஆரம்பிப்பதுண்டு, இந்தப் பழக்கம் கவிதைக்கு கிடையவே கிடையாது என்ற நிலையிலிருந்து ஒரு அடி பின்வாங்கினேன் என்றால் அது நண்பனின் கவிதை வரிகளுக்காக மட்டும் தான்.
முதலில் இந்தக் கட்டுரையை அல்லது டைரிக்குறிப்பை அல்லது திரை விமரிசனத்தை 'கட்டுடைத்தலும் ஒன்றிரண்டு கரப்பான் பூச்சிகளும்' என்ற தலைப்பில் தான் எழுத நினைத்திருந்தேன், அதுவும் ஒருவாரத்திற்கு முன்பே பலருக்கு நான் எழுத நினைத்த காரணம் தெரிந்திருக்கும். பின்னர் இன்று காலை படம் பார்த்துவிட்டு வந்ததும் 'கட்டுடைத்தலும் சில பக்வாஸ் ஆத்மிக்களும்' என்ற தலைப்பில் தான் எழுத நினைத்தேன். கடைசியில் எழுத உட்காரும் பொழுது அதையும் மாற்றி தற்சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் 'கட்டுடைத்தலும் கரண் ஜோஹரும்' என்ற தலைப்பில் எழுதுகிறேன். என் பல சிறுகதைகளை அதன் ஒருவரி முடிவை நோக்கி கொண்டுசெல்ல முயலாததைப்/இயலாததைப் போல், தலைப்பை தேர்ந்தெடுப்பதிலும் சில காலமாக நான் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகிவருகிறேன்.
உலகம் மாறுகிறது, நான் திருச்சியில் சினிமா பார்த்த நாட்கள் இன்று நினைவில் வந்தன, மாரிஸில் முதல் நாள் முதல் ஷோ படம் பார்க்க நான் படாதபாடு பட்டிருக்கிறேன். அமர்க்களம் மாரிஸில் ரிலீஸ், நான் காலேஜில் படித்தக் காலம் அது, என்னமோ அஜித் மேல ஒரு கிரேஸ் இருந்தது. சுதந்திர தின ரிலீஸ் என்று நினைக்கினே, மாரிஸ் தியேட்டர் காம்பளக்ஸில் ரசிகர் ஷோ கிடையாது, ஆனால் கிளம்பி வந்து வம்பிழுக்கும் ரசிகர்களைக் கட்டுப்படுத்த போலீஸ் வரவழைக்கப்பட்டிருந்தது. அவர்கள் ரௌடிகளை விட்டுவிட்டு எங்களைப் போட்டுக் காச்சியெடுத்தது நினைவில் வந்தது. இங்கே இரவு பன்னிரெண்டு மணிக்கு ஃபேம் சினிமாஸில், இரண்டு நாட்களில் ரிலீஸ் ஆகப்போகும் கரண்ஜோஹரின், கபி அல்விடா நா கெஹனா(Kabhi Alvida Na Kehna - Dont say Good Bye) படத்திற்கு உட்காரும் ஸீட் முதற்கொண்டு இன்டர்நெட்டில் புக்செய்து, கிரெடிட்கார்டை ஸ்வைப்(இன்டர்நெட்டில்-ங்க) செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு போகும் அளவிற்கு முன்னேற்றம்.
முதல் நாள் முதல் ஷோ, அமிதான் பச்சன், ஷாரூக்கான், அபிஷேக்பச்சன், ராணி முகர்ஜி, பிரீத்தி ஜிந்தா என் ஓரளவு இல்லாமல் நன்றாகவே அறிமுகம் ஆன முகங்கள், அப்படித்தான் கரண் ஜோஹரும், குச் குச் ஹோத்தா ஹை, கபி குஷி கபி கம் போன்ற நான் பார்த்த மிகச்சில இந்திப்படங்களின் இயக்குநர் இவர்தான். இப்படியாக இயல்பாகவே ஒரு நல்ல படத்தை எதிர்பார்த்துத்தான் போயிருந்தோம்.
இன்டர்நெட்டில் தியேட்டரில் கடைசி வரிசையில், நடுவாக புக் செய்ததாக நினைத்துப் போக, நாங்கள் தவறுதலாக இன்டர்நெட்டில் கொஞ்சம் நடுவரிசையில் ஆனால் திரையின் நடுவாக புக் செய்திருந்தது தெரிந்தது. ஆனால் கொடுமையிலும் ஒரு நன்மையாக, மொத்த வரிசையிலேயே நாங்கள் நால்வர் மட்டும் தான் ஆண்கள். இப்படியாக 35 ரூபாய் பெப்ஸி கப்புக்களுடன், பாப்கார்களுடனும் தொடங்கியது சினிமா.
ஆரம்பத்தில் இருந்தே இரண்டு குடும்பங்களை மையமாக கொண்டு கதை வளர்ந்து வந்தது, அதாவது, அமிதாப், அபிஷேக், ராணிமுகர்ஜி ஒரு குடும்பம், ஷாரூக், பீரித்தி ஜிந்தா, கிரண் கெர் இவர்கள் ஒரு குடும்பம்.
கதை இவ்வளவுதான், ஷாரூக் ஒரு கால்பந்தாட்ட வீரர் (ஒரே ஒரு ஷாட்டோடு நிறுத்திவிட்டார்கள் பரவாயில்லை), அவரது மனைவி ஒரு மாடல் மேகஸினுக்காக வேலை பார்ப்பவர், அவரது இருபத்திநாலு மணிநேர வேலை சம்மந்தமாக கணவனுடனான உறவு அவ்வளவு இனிமையாக இல்லை. ஆனால் இருவருக்கும் ஒரு குழந்தை உண்டு பெயர் அர்ஜூன்.
இதேபோல், அமிதாப் குடும்பம், மனைவியற்ற அமிதாப் ஒரு ஜாலிப்பேர்வழி, மகனுக்கு அவர் அப்பாவின் தொழில்களை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ராணி முகர்ஜி, அபிஷேக்கின் மனைவி. எல்லாவற்றிலும் சுத்தத்தை எதிர்பார்க்கும் பார்ட்டி போன்ற லேட்நைட் விஷயங்களில் விருப்பமில்லாத கொஞ்சம் சராசரி இந்திய மனைவி. இவருக்கும் இவர் கணவருக்கும் அவ்வளவு கொஞ்சிக்கொள்ளும் படியான உறவில்லை.
இவர்களுக்கிடையில் சூழழும் கதையின் போக்கில் ஷாரூக்கிற்கும், ராணி முகர்ஜிக்கும் இடையில் ஒரு அஃபயர் வந்து விடுகிறது, இந்தக் காட்சிகள் மிகவும் அருமையானவை, படத்தில் முக்கியமான கதைத்திருப்பதிற்கு காரணமான விஷயங்கள் என்பதால் நுணுக்கமாக எடுத்திருப்பார் கரண். நிறைய விஷயங்களைப் பற்றி பேசவேண்டும் போல் இருக்கிறது இந்தப் படத்தில்.
ஷாரூக்கின் குறும்புகள், அமிதாப்பின் ஆளுமை, கொஞ்சம் வயதாகிவிட்டிருந்தாலும் ராணி, மற்றும் பிரீத்தி ஜிந்தாவின் அழகு என்று இதெல்லாம் மேலோட்டமானவை, கதை சொல்லும் பாணியும் நன்றாக இருந்தது. ஷாரூக்கிற்கும், ராணிக்கும் இடையில் வந்துவிட்ட ஆனால் சொல்லப்படாத அஃபயர் காலத்தில் அவர்கள் நாடகத்தனமாக மீண்டும் தன் கணவன் மனைவிகளுடன் சேர போடும் திட்டம் வேடிக்கையாவதும். ஆனால் உண்மையில் இந்தப் பிரிவை விரும்பாத அபிஷேக் மற்றும் பிரீத்தி போடும் திட்டம் சக்ஸஸ்புல்லாகவும் அமைவதைக் காட்டியிருக்கும் இயக்குநருக்கு ஒரு சபாஷ். உண்மையில் நன்றாக யோசித்து கதை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
தமிழின் மீதிருந்த காதலால், எனக்கு அமிதாப்பைப் பற்றிய ஒரு தவறான முன்முடிவிருந்தது, ஆனால் அவருடைய ஸ்கிரீன் பிரஸன்ஸ் அருமையிலும் அருமை. அதுவும் ஷாரூக்கும் அமிதாப்பும் ஜோக்கடிக்கிறேன் பேர்வழியென குடும்பத்தினரை வம்பிழுக்கும் நேரத்தில் உண்மையில் அவரின் ஆளுமையை உணர்ந்தேன். “குட் ஜோக்” என்று அமிதாப் ஷாரூக் தன்னை ஏமாற்றுவதாய் நினைத்துக்கொண்டு சொல்லும் நேரத்தில் சொல்லும் பொழுது தலைவர் பின்னியிருக்கிறார். எப்பொழுதும் போல் ஷாரூக்கின் திறமை படம் முழுதும் வெளிப்படுகிறது, கையில் இருக்கும் விக்டரி பச்சையை நன்றாக கன்டின்யூ பண்ணியிருக்கிறார்கள்.
இடைவேளைக்குப் பிறகு ஒரு தவறை நான் செய்தேன், அதாவது பெரும்பாலான நேரத்தில் படத்தின் முடிவை ஊகிக்கிறேன் பேர்வழி என்று யோசித்துக் கொண்டு தமிழ்ப்பட பாணியில் நானாய் ஒரு முடிவைக் கற்பனை செய்து கொண்டிருந்தேன். பரவாயில்லை ஓரளவிற்கு நான் ஒத்துக்கொள்ளும் முடிவைத்தான் இயக்குநர் தந்திருக்கிறார். ஆனால் தமிழ்ப்பட பாதிப்பால் எதிர்பார்த்தது வேறு. நல்ல முடிவிற்கு நன்றி இயக்குநரே. கட்டுடைத்தலைப்பற்றி பின்னால் வரப்போகும் பத்திக்கு முன் இதை எழுதி விடுகிறேன். கட்டுடைத்தலை மிக அழகாக அவர்கள் இருக்கும் வாழ்வுமுறையில் சொல்லியிருக்கிறார், ஆனால் நிறைய மசாலாத்தடவி. என்னுடன் வந்த மூன்று பேருமே பக்வாஸ் படம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை நல்ல பாலச்சந்தர், ராம நாராயணன், ஷங்கர் கடேசியாக செல்வராகவன் எல்லோரும் சேர்ந்து இயக்கிய படம் போலிருந்தது. காமெடியும் அருமை. கட்டுடைத்தலை மசாலாத் தடவி சொல்லியிருக்கிறார்கள், இந்தி வசனங்கள் அதிகம், மீண்டும் ஒருமுறை நார்த் இண்டியா பக்கம் வாசனையுள்ளவர்கள் நிச்சயம் பார்க்கலாம். மூன்றரை மணிநேரம் கொஞ்சம் அதிகம் என்றாலும் டீக்கே, ஆசாத்பாய் பாணியில் சல்தா ஹை. இப்போ கொஞ்சம் பழைய கணக்கு...
----------------------------------
ஆரம்பக்காலத்தில் என் மாமாக்கள்(இரண்டுபேர்) சொல்வது தான் வேதவாக்காக இருந்த காலத்தில், அவர்களுடைய கருத்துக்ளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தேன் பெரும்பாலும், வரதட்சணை வாங்கக்கூடாது என்பது அதில் மிகமுக்கியமான ஒன்று, இதில் பெரியவருக்கு அப்படியே தான் நடந்தது திருமணம், தன் பெயருக்குப் பின்னால் டிகிரியைப் போட்டுக்கொள்ள விரும்பாத அவருடைய போக்கை அப்படியே கடைபிடிக்கும் கிளிக்குட்டியாக நான் இருந்தேன், ஆனால் ஒன்றிரண்டு வருடங்களில் வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருந்தது. அம்மாவிடம்,
“கோடிஸ்வர வீட்டுப்பொண்ணை பாருங்கம்மா, வேலை செஞ்சு செஞ்சு அலுத்துப்போச்சு, (மொத்தமாக மூன்றே வருடங்கள்) கல்யாணம் பண்ணினமா, வீட்டோ மாப்பிள்ளையா செட்டில் ஆனமான்னு இருந்திடலாம்னு நினைக்கிறேன், மாமனார் எதாவது பிஸினஸ் வைச்சிருந்தாருன்னா அப்படியே பார்த்துக்கிட்டு... வாழ்க்கையை ஓட்டிடலாம்னு நினைக்கிறேன்”னு சொல்ல வைத்தது.
ஒரு வருடம் கழித்து வீட்டிற்கு வந்த பையன் சொல்வதைக் கேட்ட பழங்காலத்து அம்மா, என் தலைக்கு எலுமிச்சைப் பழத்தால் குளிப்பாட்டி விட்டால் இந்தப் பிரச்சனை சரியாகிவிடும் என்று நினைத்ததில் தவறில்லையென்று நினைக்கிறேன். பாவம் அம்மாவிற்கு கட்டுடைத்தலைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை இல்லையா, வேலை விஷயமாக டிசைன் பேட்டர்ன்ஸ் பற்றி ஒரு செஷன் எடுக்கிறேன்னு மூன்று மாசமா டிமிக்கு கொடுக்கும் எனக்கு, ஒன்றுமே தெரியாத கட்டுடைத்தல் பற்றி அம்மாவிற்கு சொல்லிக் கொடுப்பதில் விருப்பம் இல்லை.
சரி அம்மாவிற்கு கட்டுடைத்தலைப் பற்றித் தெரியாதா? நல்ல கேள்வி, கட்டுடைத்தல் என்ற வார்த்தையில் பின்னால் கோர்க்கப்டும் நிகழ்வுகளைப் பற்றி அந்த வார்த்தையால் தெரிந்திருக்க நிச்சயம் நியாயமில்லை, ஆனால் உண்மை விஷயம், நன்றாகத் தெரியும். மிக நன்றாக, சிதம்பரம், மதுரை என்று சொன்னால் புரிந்துவிடுமா என்று யோசித்தேன், பின்னர் ஏதோ நம்பிக்கை வந்தவன் போல், நம்ம சொந்தக்கார மாமாவைப் பற்றிச் சொன்னால் தெரிந்து கொண்டு போகிறார்கள் என்று நினைத்தேன். தூரத்துச் சொந்தத்தில் உள்ள மாமா ஒருத்தர் இப்படித்தான், அவருக்கு இங்கே அம்மாவும் நைனாவும் வேலை பார்க்கும் பிஎச்யிஎல் ஸ்கூலில் பெல் ஸ்கீமில் வேலை, ஆரம்பச் சம்பளம் 1500 பின்னர் இரண்டு மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1800 ஆக உயர்ந்ததாகக் கேள்வி, ஆனால் அவர் கல்யாணம் செய்து கொண்ட அத்தைக்கு கவர்மெண்ட் உத்தியோகம் அதும் தஞ்சாவூரில் நம்ம மாமாவுக்கு வீடும் அங்கதான், காலையில் கிளம்பி திருச்சி வந்து வேலைசெய்துவிட்டு சாயங்காலம் திரும்பவும் பஸ் பிடித்து திரும்பப் போய்க்கொண்டிருந்தார்.
எங்கக் குடும்பத்தைப் பிடித்த சாபமோ என்னவோ தெரியலை ஏகப்பட்ட சொந்தக்காரங்க டீச்சராவேயிருந்துத் தொலைச்சிருறாங்க. இப்படி இவரு 1800க்கு இந்தப் பக்கம் அந்தப் பக்கம்னு ஆடி ஓடி தெருவில் நின்னப்பத்தான் அவரு சம்சாரம் அதான் எங்க அத்த, ஓய் நீரு இப்படி கிழிச்சது போதும், (இதில மாசச்சம்பளத்தில் பாதி திருச்சி – தஞ்சாவூர்) டிக்கெட் சார்ஜூக்கு சரியா இருந்தது.) அந்த 1800 ரூபாய்க்கு நான் டியூசன் எடுத்து உனக்குத் தந்திர்றேன், வேலைக்கும் போய்கிட்டு, சமையலும் செய்துக்கிட்டு, புள்ளையையும் பார்த்துக்க முடியலை, நீ ஒழுங்கு மரியாதையா வேலையை ரிஸைன் பண்ணிட்டு வீட்டோ வந்து சேருன்னு சொல்லிடுச்சு, மாமனாரும்(மாமாவோட) வீட்டுக்கு முன்னாடி ஒரு பொட்டிக்கடை போட்டுக்கொடுத்திட்டாரு, இவருக்கு இப்ப பொழுது போக்கு, பொழப்பெல்லாம் அவரோட பொண்ணை கண்ணும் கருத்துமா, (பொட்டிக்கடையுமா?) வளர்த்துக்கிட்டு வர்றாரு, மக்களே பொறாமைப் படாதீங்க எங்க இரண்டு பேருக்கும் வயது வித்தியாசம் பதினைந்திற்கு மேலிருக்கும்.
ஆனால் பாவம் அவருக்கு அவர் பண்ணினது கட்டுடைத்தல்னு தெரியாது, எங்கம்மாவிற்கும் தான். பின்ன ஒரு பேட்டி உண்டா, போட்டாகிராப் தான் உண்டா, அச்சு இதழ் வேண்டாம் சார், ஒரு இணைய இதழ், இல்லாட்டி போனா நட்சத்திர வாரத்தில் இலவச இணைப்பு, ஓஹோ அவரு அம்மேரிக்காவில் போய் இந்த ஊழியம் செய்யலையே, தமிழ்நாட்டில் இல்லடா செய்யறாரு அதுவேணும்னா ஒரு காரணமா இருக்கலாம் இல்லையா? ஆனா அம்மாவிற்குத்தான் தன் தூரத்துத் சொந்தக்காரத் தம்பி இப்படி பொண்டாட்டி தாசனா(அவங்களோட வார்த்தை) இருக்கிறதைப் பார்த்தா பிடிக்கிறதில்லை, அடிக்கடி தம்பி இந்த சி, சி++, ஜாவான்னு என்னென்னமா சொல்றியே அவனுக்கும் ஏதாவது இப்படிச் சொல்லித்தந்து, இந்தக் கண்ணாடிக்கிட்டேர்ந்து(அத்தை அந்தக் கால ஆசிரியர் மாதிரி கண்ணாடியெல்லாம் போட்டிருப்பாங்க) காப்பாத்தேம்பான்னு புலம்பிக்கிட்டேயிருப்பாங்க,
நானும் ஒருநாள் எக்குத்தப்பா, மாம்ஸ் நான் வேணும்னா ஏதாவது நல்ல சென்டரில் சேர்த்துவிடுறனே, ஈகாமர்ஸ் அது இதுன்னு இப்ப ஏகப்பட்டது இருக்கு என்ன சொல்றீங்கன்னு கேட்க, அதெல்லாம் வேணாம் மாப்பிள்ளை நான் நல்லா சந்தோஷமாத்தான் இருக்கேன், செல்வியை நினைச்சாத்தான் பயமா இருக்கு எப்படி கல்யாணம் பண்ணிக் கொடுக்கப்போறமோன்னு இருக்குன்னு சொல்ல நான் கிரேட் எஸ்கேப் ஆகி அம்மாவிடம், மம்மி, அந்தாளு சந்தோஷமாத்தான் மம்மி இருக்கிறாரு நீதான் தேவையில்லாம கவலைப்படுற, அதெல்லாம் சரி, நம்ம சொந்தத்தில் இந்த மாதிரி, சாப்ட்வேரில் லண்டன், பிரான்ஸ், ஜெர்மன்ல ஏதாவது பொண்ணுங்க இருந்தாங்கன்னா, சமைக்க துணிவைச்சிப் போட்டு, பிள்ளைகளை வளர்க்க நல்ல கணவனா ஒருத்தன் (நான்) இருக்கான்னு சொல்லி கேட்டுப்பாரேன்னு சொன்னேன், அவர் வீட்டின் பின்புறத்தில் இருக்கும் எலுமிச்சை செடியில் பத்து பதினைந்தாய் காய் பறிக்கச் செல்லும் நேரத்தில் ஒரேயடியாய் பழங்கால தமிழ்நாட்டிற்கு பைபை சொல்லிவிட்டு பின்நவீனத்துவ புனேவிற்கு ரயில் ஏறினேன்.