வருடக்கணக்கில் எடுத்து வந்திருக்கும் படம், விக்ரமுடைய உழைப்பு தெரிகிறது. ஆக்ஷன் படத்தில் நடிப்பதற்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லாவிட்டாலும் கொடுத்தக் கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். இயக்குநரின் தைரியம் பாராட்டுதலுக்குரியது, இது போன்ற க்ளைமாக்ஸ் வைக்கப்போகிறார் என்றால் இடைவேளையில் ஒரு சின்ன க்ரிப் கொடுக்கணும் என்ற அவசியம் இல்லைதான். படம் க்ளாமாக்ஸ் காட்சியை நோக்கி அழகாக நகர்த்தப்படுகிறது. சண்டைக்காட்சிகள் அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளன, மற்றவர்களைப் பற்றித் தெரியாது சண்டைக்காட்சிக்காக, அதுவும் ஒரே ஒரு சண்டைக்காட்சிக்காக நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால் நான் மாட்ரிக்ஸ் 1ம், த லாஸ்ட் சாமுராய் படமும் இப்படி ஒரே ஒரு சண்டைக்காட்சிக்காக, அந்த சண்டைக்காட்சி வரப்போகிற தருணத்திற்காகக் காத்திருந்து பார்த்திருக்கிறேன்.
மாட்ரிக்ஸில் முதன் முதலில் கியானோ ரீவ்ஸ், தனக்கு சண்டை போடத்தெரியும் என்று சொல்ல அதைப் பார்க்கலாம் என்று சொல்லி Laurence Fishburneவும் கியானோ ரீவ்ஸும் இறங்கும் சண்டைக்காட்சி அருமையாக இருக்கும் அதைப் போலவே. லாஸ்ட் சாமுராயிலும் டாம் க்ரூயூஸ் கத்திச் சண்டையைக் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டிருக்கும் பொழுது சாமுராயைக் கொல்லவரும் ஆட்களுடன் சண்டை போடுவது பிரம்மாதமாக அமைந்திருக்கும். இந்த இரண்டு காட்சிகளுக்காக நிறைய முறை இந்தப் படங்களைப் பார்த்திருப்பேன். நீண்ட நாள் கழித்து அது போல் என்று ஒப்பீட்டு அளவில் சொல்லாவிட்டாலும் ரசித்துப் பார்த்த சண்டைக்காட்சி படம் 'பீமா'.
சும்மா வன்முறை அதிகமாயிருக்கு என்று சொல்பவர்கள், லிங்குசாமியின் விக்ரமிற்கான படத்தில் "A" சர்டிபிகேட் எதற்காகத் தந்திருப்பார்கள் என்று தெரியாமல் படம் பார்க்கச் சென்றார்கள் என்றால் ஆச்சர்யமே. கனல் கண்ணன் என்று நினைக்கிறேன் சண்டைப் பயிற்சி பாராட்டுக்கள், சண்டையின் பொழுது லைட்டிங் அருமை - ஒளிப்பதிவாளர் விளையாடியிருந்தார். பாடல்கள் அனைத்தும் முன்னமே வெளிவந்து ரசிக்கவைத்தவை தான். பாடல்காட்சிகளும் அழகாக படமாக்கப்பட்டுள்ளன, பாடல்காட்சிகளின் ஹீரோ ஹீரோயின் உடைகள் அழகாக தேர்வுசெய்யப்பட்டு ஏற்கனவே இருக்கும் விக்ரம்-த்ரிஷா கெமிஸ்ட்ரியில், பிஸிக்ஸ், ஸூவாலஜி எல்லாம் சேர்த்து டோட்டல் சயின்ஸே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.
ஒரு ஆக்ஷன் திரைப்படத்தில் ஹீரோயினின் வேலை என்னவோ அதை மட்டும் த்ரிஷா செய்திருக்கிறார் சும்மா மொட்டைமாடியில் இருந்து திருடன் துப்பாக்கியுடன் கீழே குதித்தால் காதல் வருமா என்றால் இந்தக் காலப்பெண்களுக்கு வந்தாலும் வருமாயிருக்கும் :). நான் காலேஜ் முடித்து ஐந்தாண்டு ஆகிவிட்டது, அப்பொழுது என்னுடம் படித்த பெண்களே கூட இப்படி சிகரெட் குடிக்கிறான், பாத்ரூமில் வைத்து இரண்டு பேரை அடிக்கிறான் என்று காதலித்தப் பெண்ணைத் தெரியும் கடைசியில் "இந்த ஆம்பளைங்களே மோசம்" என்ற ஒரு வரியில் முடிந்துவிட்டது அத்தனையும் மூன்றாண்டிற்குப் பிறகு. பெண்களை முட்டாள் என்று சொல்லவில்லை ;) ரௌடியோ என்ன எழவோ அவர்களுக்குப் பிடித்தவர்கள் அவர்கள் காதலிக்கிறார்கள் அஷ்டே!
பிரகாஷ்ராஜ் - ஒரு அருமையான நடிகன் என்பது எல்லாருக்கும் நன்றாகவேத் தெரியும். இயக்குநர் அவரிடம் இருந்து நல்ல பெர்ஃபார்மென்ஸைக் கொண்டுவந்திருக்கிறார். "பத்மா" பெயரைக் கேட்டதும் வழியிறது, இடையில் தன்னை மீறி விக்ரம் நகரும் பொழுது மிதமான அதிர்ச்சியை வெளிக்காட்டுவது என தன்னுடைய பங்கிற்கு பீமனின் ஒரு கையாக அவரும் இருக்கிறார்.
இயக்குநர் மனதில் க்ளைமாக்ஸ் காட்சி ஆரம்பத்தில் இருந்தே இருந்திருக்க வேண்டும். படம் பார்த்து முடித்த பின்னால் அதை நோக்கி காட்சிகளை இயக்குநர் நகர்த்தியிருப்பது தெரியவரும். மையக் கருவை நோக்கி நகரும் காட்சிகள் அவர் சொல்ல வந்த மையக் கருவை தீர்மானிக்கும் நிறுவும் அனுபவங்கள் என்று அருமையாக நகர்கிறது. ஜெயமோகன் ஒரு தேர்ந்த கட்டுரைக்கான அம்சமாகச் சொன்ன "ஒரு கட்டுரை ஒரே போக்காக போவது நல்லது. நடுவே உடைபட வேண்டுமென்றால் அதிகபட்சம் ஒரு உடைவு. அதற்குமேல் போனால் அக்கட்டுரை சிதறியிருப்பதாகவே தோன்றும்" வரிகள் நினைவில் வருகின்றன. இது திரைப்படத்திற்கும் பொறுந்தும் என்று நினைக்கிறேன். அந்த ஒரு உடைவாக இந்த பீமா படம் க்ளைமாக்ஸ் காட்சியை முன்வைக்கிறது எனவே வேறு இடைவேளை உடைதல்கள் அநாவசியமே.
கதாநாயகன் காதல் வசப்படும் காட்சியும், தடுமாறுவதும், முக்கியமான தீர்மானத்தை முன்னெடுக்கும் காட்சிகளும் நெருடாமல் படத்தின் ஓட்டத்துடனேயே அமைகின்றன.
சுஜாதா எப்பொழுதும் திரைப்படத்திற்கான க்ளைமாக்ஸ் does matters என்று சொல்வார். ஒரு தேர்ந்த சிறுகதை எப்படி அதன் முடிவை நோக்கிச் செல்கிறதோ அப்படி ஒரு தேர்ந்த திரைக்கதை க்ளைமாக்ஸை நோக்கிச் செல்ல வேண்டும்.
முதலில் இந்தப் படம் எந்தப் படத்தைப் போலவும் இல்லை என்பதைச் சொல்லவேண்டும், சும்மா நாயகன் போல், தளபதி போல் இருக்கிறது என்பதெல்லாம் காமெடியாயிருக்கிறது. இனிமேல் காதல் கதை ஒன்றை எடுத்தீர்கள் என்றால் உள்ளூர் சினிமாவோ வெளிநாட்டு சினிமாவிலோ இருப்பதைப் போன்ற காட்சிகள் இல்லாமல் ஒரு கதையை எடுக்க முடியுமா? இயக்குநர் மற்ற படங்களின் பாதிப்பு இருக்கக்கூடாது என்று கவலைப்பட்டிருப்பதும் அக்கறை எடுத்திருப்பதும் தெரிகிறது.
த்ரிஷா வரும் காட்சிகளில் வரும் மெல்லிய நகைச்சுவை படத்தை தொந்தரவு செய்யவில்லை, முன்பே சிவாஜியின் பொழுது சொன்னதுதான் கதாநாயகிகள் ஆறாம் விரல் தான் பாடல்காட்சிகள் ஆறாம் விரலின் நகங்கள் தான். இவை தமிழ்சினிமாவின் நகச்சுத்திகள் போலத்தான் என்றாலும் இதிலிருந்து மீறிவர அதிக துணிவு தேவைப்படுகிறது. "பணம்" முக்கிய இடத்தை வகிக்கும் தமிழ்ச்சினிமாவில் பாலாக்களே சிம்ரனின் மூடப்பட்ட தொப்புள்களை நம்பவேண்டியிருப்பது நிச்சயமாய் ஆரோக்கியமானது இல்லைதான் ஆனால் தொடர்ச்சியாக வந்த ஒரு விஷயம் சட்டென்று நிறுத்திவிட முடியாதது.
இளம்பெண்கள் பெங்களூருவில் உள்ளாடை அணியாமல் உடல் தெரிய மேலாடை அணிந்து மால்களுக்கு வருவது இப்பொழுதைய ஃபேஷனாகயிருப்பது போல் க்ளவேஜ் காண்பிப்பது தற்போதைய தமிழ்சினிமாவின் பேஷன் போலிருக்கிறது :) பீமாவும் த்ரிஷாவும் விதிவிலக்கல்ல. லாஜிக்களை மூட்டைகட்டிவிட்டல்ல லாஜிக்குகளை எடுத்துக் கொண்டு போய் கூட பீமாவைப் பார்க்கலாம். படம் நன்றாகத்தான் இருக்கிறது - முன்னர் வந்த ரௌடி கதைகள் போலில்லாமல்.








