In புகைப்படம்

-/பெயரிலி. க்கு

Snail

புகைப்பட விதிகள் எதற்குள்ளும் இன்னமும் சிக்கிக்கொள்ளாத, -/பெயரிலி.க்கு

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In நாட்குறிப்பு

ட்விட்டிய எண்ணங்கள்

Pride and Prejudice நாவலின் ஒரு டெலிவிஷன் அடாப்டேஷன்(BBC) பார்த்தேன். எல்லாக் காலத்திற்கும் பொருந்தி வரக்கூடிய ஒரு கதை, பெருமையும் முன்முடிவுகளும் எனக்குத் தெரிந்து இல்லாமல் போகக்கூடிய வாய்ப்பேயில்லை. Jane Austenன் நாவல் இன்னும் முழுவதும் படிக்கவில்லை என்றாலும் எனக்குப் பிடித்த காட்சிகளின் எழுத்து வடிவத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். நாவல் சிறந்ததாய் இருந்ததா அடாப்டேஷன் சிறந்ததாய் இருந்ததா என்று சொல்ல முடியவில்லை. நன்றாகச் செய்திருக்கிறார்கள். நடிக / நடிகையர் தெரிவும் கூட அற்புதமாக இருந்தது. Youtubeல் பார்க்கப் பிடிக்காமல் தரவிறக்கம் செய்து பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதால் ஆறு எபிசோட்களும் ஒரேயடியாய் பார்க்க முடியவில்லை, என்னை நானே வற்புறுத்திக் கொண்டு என்றாலுமே கூட அடுத்து என்ன நடக்கும் என்கிற ஒரு விதமான ஏக்கத்தில் இருந்த அந்த நேரங்களை ரொம்பக் காலம் கழித்து மீண்டும் அனுபவித்தேன். நிச்சயமாய் இதைப் பற்றி தனியாய் ஒரு பதிவெழுத வேண்டும் என்று நினைத்திருப்பதால் இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன்.





குந்தவையைப் போல் மனதில் பதிந்து போய்விட்ட இன்னொரு கதாப்பாத்திரம் எலிஸபெத் பென்னட் என்பது மட்டும் உண்மை.

----------------------------------

ட்விட்டிய எண்ணங்கள் எப்படி செயல்படும்னா, ஒரு வாரத்திற்கு ஒரு பதிவு. அந்த வாரம் முழுதும் ட்விட்டியதைக் கொண்டு எழுதலாம்னு நினைக்கிறேன். ஏற்கனவே எழுதி வந்த ‘தொடர்ச்சியற்ற எண்ணங்கள்’இன் தொடர்ச்சியாக இது இருக்கும். இருக்கணும்.

----------------------------------

நடிக - நடிகைகள் எதிர் தினமலர் விஷயம் போன வாரம் முழுதும் போய்க்கொண்டிருந்தது, கொஞ்சம் கொடுமையாய்ப் போய் தினமலர் செய்தி ஆசிரியர் கைதில் முடிவடைந்தது. நடிகைகள் பற்றி எனக்குப் பெரிய நல்லபிப்ராயம் கிடையாது. நானும் இளவஞ்சியும் பேசிக்கொள்ளும் எல்லா சமயங்களிலும் இதைப் பற்றிய பேச்சு வந்திருக்கிறது. அவருக்கு ‘நடிகைகள் பாவம்’ என்று சொல்வது கூட ஆகாது. நடிகைகள் பற்றிய என் கருத்தைச் சொல்லி Misogynist என்ற திட்டு வாங்கிய அனுபவமும் நினைவில் வருகிறது.

குஷ்பு இதைப் பற்றி எதுவும் வாயைத் திறக்கலை என்று ட்விட்டிய நினைவு, பாவம் அவர் மலேசியாவில் தண்ணீரில் கவிழ்ந்து போனதால், தப்பியது ப்ளாக்டோம்.

----------------------------------

ஆஸ்திரேலியாவின் ரெக்கார்ட் எல்லாம் அவ்வளவு தான். ஹைடன், கில்லி, மெக்கிராத்திற்குப் பிறகு ஆஸ்திரேலிய ஒருநாள் அணி அவ்வளவு தான் என்று பேசிய அனைவரும் எங்கே போய் முகத்தை வைத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. சொல்லப்போனால் ஸ்டீவ் வாஹ் தலைமையிலான அணியையும் பாண்டிங் தலைமையிலான முன்னாள் அணிக்கும் இந்நாள் அணிக்கும் ஒப்பீடு செய்தால் தற்போதையஆஸ்திரேலிய அணி 70% கூட பக்கத்தில் வராது. ஆனால் விஷயம் அது கிடையாது அந்த ஆஸ்திரேலிய அணி அருகில் வரக்கூட யாரும் இல்லை என்பது தான் உண்மை.

அது நிரூபணம் ஆகியிருக்கிறது, ICC Championship போட்டி முடிவுகளினால். இந்திய கிரிக்கெட் அணியைப் பற்றிப் பேச எனக்கு எதுவும் இல்லை, என்வரையிலான பெஸ்ட் ‘Choker' சச்சின் தன்னை மீண்டும் அப்படியே நிரூபித்திருக்கிறார். அவ்வளவுதான்.

----------------------------------

‘மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ’ பாடல் வரிகளைத்தான் இப்பொழுதெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ‘விடைகொடு எங்கள் நாடே’ வை விடவும் இந்தப்பாடல் நன்றாய் வந்திருப்பதாய் மனதில் படுகிறது - அந்த வைரமுத்துவின் வரிகளில் விஜ்ய் யேசுதாசின் குரலில் ஏதோ உடைகிறது உள்ளில். ரொம்ப நாளாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று ‘ஆயிரத்தில் ஒருவன்’.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In அரசியல்

இராவணன்

இராவணன்
எனக்குப் பையன் பிறந்தால் இராவணன்னு பெயர் வைப்பேன் என்று அக்காவிடம் சொல்லிக் கொண்டிருந்த பொழுதுதான் எல்லாம் தொடங்கியது(எனக்குப் பையன் பிறந்து இராவணன்னு பெயர் வைக்கவில்லை, நன்மாறன் பொகுட்டெழினி- என்று வைத்திருக்கிறோம்). ஏற்கனவே ஒரு முறை ராமன் தமிழன்னு சொன்னதால் நான் இராவணன் பெயர் சொல்லி அடித்த கூத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். அப்படி பேசிக்கொண்டிருக்கும் பொழுது தான் அக்கா புருஷன் ‘இராவணன்’ தமிழ்ப் பெயர் இல்லையென்று சொன்ன ஞாபகம். இன்னொரு முறை நான் பாரதிதாசனைத் துணைக்கிழுத்தேன். ‘தமிழ்மறைகள் நான்கும் சஞ்சரிக்கும் நாவான்’ தமிழனாவும் இராவணன் தமிழ்ப்பெயராகவும் இல்லாமல் இருக்க வாய்ப்பு கொஞ்சம் கம்மிதான் என்று சொல்லிவைத்திருந்தேன். அதல்ல பிரச்சனை இப்பொழுது,



பேச்சுப்போட்டிகளில் பங்குபெறும் எவருக்கும் பாரதிதாசனும், ‘வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்’ பாடலும் புதிதாய் இருக்காது. சொல்லப்போனால் பாரதிதாசனுடைய வரிகள் பேச்சுப்போட்டிகளில் வீராவேசத்துடன் பேச எப்பொழுதும் துணை நிற்கும், ‘பூட்டப்பட்ட இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது, சிறுத்தையே வெளியில் வா!’ சொல்லாத என் போட்டி அனுபவம் மிகவும் குறைவே. ஆனால் எல்லா இடங்களிலுமே அந்தப் பாடல் வேண்டுமென்றே குறைக்கப்பட்ட வரிகளுடன் சொல்லப்படுவதுண்டு. எனக்குத் தெரிந்த பேச்சுப்போட்டிகளில் பேசும் நண்பர்களுக்குக் கூட முழுமையான அந்தப் பாடலின் வரிகள் தெரியாமல் இருந்திருக்கின்றன. இப்பொழுதெல்லாம் கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கிறதே என்று சனிக்கிழமை இரவுகளில் ’அசத்தப்போவது யாரு?’ பார்ப்பதுண்டு அதில் வந்த பையன் ஒருவன் ‘தென்றிசையைப் பார்க்கின்றேன்...’ என்ற வரிகளுடன் ஆரம்பித்ததும் கொஞ்சம் ஆச்சர்யமாய்த்தான் இருந்தது.

‘வீழ்ச்சியுறு தமிழகத்தின்...’ தொடங்கி பலர் பாரதிதாசனின் ‘வீரத்தமிழன்’ வரிகளை உபயோகிப்பதுண்டு ஏனென்றால் அதில் இருக்கும் ஒரு தந்திரம், ஆனால் ‘வீரத்தமிழன்’ பாடலின் ஆரம்ப வரிகளில் இருந்து பெரும்பாலும் மக்கள் ஆரம்பிப்பதில்லை, பாரதியின் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’உம், ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை’உம், உபயோகப்படுத்தப்பட்ட அளவு அதன் பின்னான வரிகள் உபயோகப்படுத்தப்பட்டதில்லை. ‘உள்ளத்திலே உண்மையொளி உண்டாயின்’ வரிகள் மட்டும் பெரும்பாலும் முழுதாய் உபயோகப்படுத்தப்படும், ‘வீழ்ச்சியுறு தமிழகத்தில்’ வரிகளைப் போல. ஆனால் ‘வீழ்ச்சியுறு தமிழகத்தில்’ வரிகள் எப்பொழுதும் கடைசி இரண்டு வரிகள் சொல்லாமல் விடப்படும். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது, இனி அந்தப் பாடல். பாடலைப் பார்த்தால் நான் அர்த்தம் சொல்ல வேண்டிய அவசியமே கூட இருக்காது.

வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவ ணன்தன்
கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!


விஷயம் புரிந்திருக்கும் இப்பொழுது, இராவணனைத் தவிர்க்க வேண்டி பெரும்பாலும்(என்ன பெரும்பாலும் எல்லோருமே) அந்த வரிகளைத் தவிர்த்து விடுவார்கள், ஏனென்றால் ‘கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!’ என்பது ஒரு முடிவாக அமைந்துவிட்டதால். சன் டிவியில் பேசிய அந்தப் பையன், இந்தப் பாடலை கொலை செய்தான் என்று தான் சொல்ல வேண்டும். முதலில் பாரதிதாசன் எழுதிய முழு ‘வீரத்தமிழன்’ பாடல்.

வீரத் தமிழன்
தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா!
அன்றந்த லங்கையினை ஆண்டமறத் தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்!
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்
இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!

வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை, நல்யாழின் நரம்புதனைத் தடவி
நிறையஇசைச் செவியமுது தரும்புலவன் தன்னை,
வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும் சூழ்ச்சி
விரும்பாத பெருந்தகையைத் தமிழ்மறைகள் நான்கும்
சஞ்சரிக்கும் நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன், மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்!

வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவ ணன்தன்
கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!
’கீழ்ச்செயல்கள் விடவேண்டும்’ என்று சொன்ன வரிகளையே கீழ்த்தனமாய் விட்டுவிடுவது தான் irony இங்கே! சன் டிவியில் வந்த அந்தப் பையன் முதல் பாடலில் மூன்று வரிகள் இரண்டாவது பாடலில் இரண்டு வரிகள் மூன்றாவது பாஅலில் ஆறு வரிகள் என்று சொன்னான். அது யாருக்கும் புரிந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது given that இந்தப் பாடலை முன்னால் அறியாமல் இருந்தால். தங்களுக்கு ஏற்றதைப் போல் பாடல்களை வெட்டி ஒட்டிக் கொள்வது என்பது ’கீழ்ச்செயல் தான்’. ‘கீழ்ச்செயல்கள்’ விட்டுவிடுவோம் ராவ ணன்தன் கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்துவோம்.

பதிவில் உபயோகப்படுத்தியிருக்கும் மற்றப் பாடல்களின் வரிகள்,

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்,
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In கிரிக்கெட்

Go Aussie Go!!!

ஆஷஸ் தோல்வியால் கொஞ்சம் மனம் தடுமாறியிருந்தேன், ஆனால் அடுத்த பத்தாண்டுகளுக்கான ஒரு அணியை உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுதும் நிகழும் (ஏ)மாற்றங்கள் தான் என மனதை தேற்றிக் கொண்டிருந்தேன். அதை இங்கிலாந்து அணியுடன் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் ‘செல்ல’ ஆஸ்திரேலிய அணியினர். ஏழாவது போட்டியை ஜெயிக்கவில்லை என்கிற வருத்தம் கொஞ்சம் அதிகமாய்த் தெரிந்தது, அந்த போராட்ட வெறி பிடித்திருந்தது.

இப்பொழுது சாம்பியன்ஸ் ட்ராபிக்கான போட்டிகளுக்காக சௌத் ஆப்பிரிக்கா வந்திருக்கிறார்கள். கப் எங்களுத்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை, அதுவும் 6 - 1, என்கிற விதத்தில் இங்கிலாந்தை வென்ற பிறகு எந்தக் கவலையுமில்லை. அதுவும் முதல் போட்டி வெஸ்ட் இன்டீஸ் உடனாம், என்ன கொடுமைங்க இது சரவணன். அட்லீஸ்ட் 450 ஆவது அடிக்கணும், அதுக்கு ஆஸ்திரேலியா டாஸ் ஜெயிக்கணும்.

சாம்பியன்ஸ் ட்ராஃபியை வென்று பச்சாப் பசங்களிடம் இருந்து நம்பர் ஒன் ரேங்கிங்கை எடுத்துக் கொண்டு, மீண்டும் நெருங்க முடியாததாய்ச் செய்வார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. மீண்டும் ஒரு முறை பயன்படுத்துகிறேன் என்றாலும், ‘ஷரத் கோடோம்பே லகாதேங்கே கடோர். ஷெகரோம்பே நஹி’ என்பது போல் போட்டிகளிலில்லாத ஆடுகளத்தில் ஆட்டுக்குட்டிகளை அடித்து நகர்த்த வாழ்த்துக்கள்.



இன்னும் ஒரு கோப்பை வைக்கத்தான் இடம் இல்லை ;)

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சினிமா

உன்னைப் போல் ஒருவன்

முதலில் கமல்ஹாசன் எதற்காக இந்தப் படத்தை எதற்கு இந்தியில் இருந்து எடுத்துச் செய்தார் என்று உண்மையிலேயே தெரியவில்லை, மூன்று மாதத்தில் ஒரு படத்தை எடுத்து முடித்து வெளியிட்டு கொஞ்சம் காசுபார்க்கலாம் என்ற எண்ணத்தில் செய்திருந்தால் சரிதான். மற்றபடிக்கு மொக்கையாக இருக்கிறது படம். இதற்கு மேல் எதுவும் சொல்ல விருப்பமில்லை இந்தப்படத்தைப் பற்றி.

PS : நான் A Wednesday படம் பார்க்கவில்லை.

Read More

Share Tweet Pin It +1

22 Comments

In சினிமா

Wanted

உன்னைப் போல் ஒருவன் வெளியாகியிருக்கும் நிலையில், Wanted படத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம். நண்பர்கள் வற்புறுத்த மறுக்கயியலாமல் சென்றிருந்தேன். சில வருடங்களுக்கு முன்பு போக்கிரி பார்க்கலாம் போங்க என்று போக்கிரி படத்திற்கு விமர்சனம் எழுதிய நினைவு இன்றும் நன்றாக இருக்கிறது. அறிவுஜீவிகள் மத்தியில் பொதுவாய் மறுக்கப்பட்ட படம் எனக்கு பிடித்துத்தான் இருந்தது அதை எழுதியும் வைத்திருந்தேன்.



படத்தில் உயிர் இல்லை, சல்மான் வருகிறார், சண்டை போடுகிறார் எல்லாம் சரி தான் ஆனால் அந்த ஃபீலிங் இல்லை, விஜய் போக்கிரியில் ஒவ்வொரு வசனம் பேசும் பொழுதும் அஜித்தை எதிர்த்து பேசுவதைப் போலவும் அடிக்கும் ஒவ்வொரு அடியும் அஜித்தை அடிப்பது போலவும் இருக்கும். அது இங்க மிஸ்ஸிங். இந்தப் படம் பார்த்தப் பிறகு தான் நினைத்துக் கொண்டேன் விஜய்கிட்டவும் ஸ்கிரீன் பிரசன்ஸ் இருப்பதாய். சல்மான் ஆரம்பத்திலிருந்தே எய்ட் பேக்ஸ் மெயிண்டெய்ன் செய்பவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், உடம்பு இன்னும் அவர் சொன்ன பேச்சு கேட்கிறது போல, ஆனால் என்ன டான்ஸ் ஆடத்தான் வரமாட்டேங்கிறது. எல்லா நல்ல போக்கிரி பாட்டும் படு மொக்கையா இருக்கு இந்தப் படத்தில். போக்கிரி படம் எவ்வளவு தேவலாம் என்றாகிவிட்டது.

அசினுடன் ஆயிஷா தாக்கியாவை ஒப்பிட முடியுமான்னு தெரியலை, எனக்கு இரண்டு பேரையுமே பிடிக்காது. அதென்னமோ அசினை ஆரம்பத்திலிருந்தே நான் ரசிக்கலை, கொஞ்சம் தொட்டுக்கொள்வது போல் ரசித்தது என்றாலும் அது தசாவதாரத்திலே தான். தாக்கியா ‘முன்’னாள் அழகி மந்த்ரா வாகு, சில சமயம் க்ளோசப்பில் ‘அது’ மட்டுமே தெரிந்து, அவரைப் பார்ப்பதற்கென்றே சினிமாவிற்கு வந்திருந்த நண்பர்கள் தூக்கத்தை நிச்சயம் கெடுத்திருக்கும். எனக்கு சமர்த்தா இருந்தா தான் பிடிக்கும் அதிகப் பிரசங்கி‘களை’ நான் விரும்புவதில்லை. தமிழில் இருந்ததான்னு ஞாபகம் இல்லை, தாக்கியா - சல்மானிடம் ‘என்னைச் சாப்பிடு’ன்னு சொல்ல நண்பர்கள் எனக்கு எனக்கு என்று அலைந்து கொஞ்சம் ஓவர் தான். சரி தாக்கியாவை கொஞ்சம் சமீரா ரெட்டி, பிரியங்கா சோப்ராவிற்குப் ‘பின்’வரிசையில் வைக்கலாம், பாந்தமாய் இருக்கிறாரே என்றால் வைரமுத்துவின் வரிகள் தான் நினைவில் வந்து படுத்துகிறது. “சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன், ஆஹா அவனே வள்ளலலடி” சரிதான், ஆனால் மீதி மெல்லிடை மட்டும் அல்லாமல் மொத்தமாவே கஞ்சனாயிருந்துட்டான் கடவுள். ஜீன்ஸில் பார்த்தால் ஒன்னையுமே காணோம். அளவு மீறுகிறது இங்கையே நிறுத்திக் கொள்கிறேன் ;).



இசை மிக மோசம், பேக்ரவுண்ட் ஸ்கோர் கொஞ்சம் காதைக் கிழிக்கும் வகையில் இருந்தாலும் போக்கிரி விறுவிறுப்பாய் போக உதவியது. ம்ஹூம் இங்கே பெரும் தலைவலியாய் இருந்தது. இடைவேளைக்குப் பிறகு சட்டென்று வந்தது போலிருந்த க்ளைமாக்ஸ் இங்கே மிஸ்ஸிங், இடைவேளை இழுத்தடிக்கப்பட்டிருப்பதாய்த் தோன்றியதற்கு முக்கியக் காரணம் இசை தான்னு நினைக்கிறேன்.

இயக்கத்தைப் பத்தியெல்லாம் சொல்றதுக்கு ஒன்னுமில்லை, அதே தமிழ் காப்பி. இந்தப் படத்தை தியேட்டரில் போய்ப் பார்ப்பதற்கு போக்கிரியை இன்னொரு முறை டிவிடியில் பார்க்கலாம்.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In வகைப்படுத்தப்படாதவை

சில கேள்விகளுக்கான என் பதில்கள்

காசியண்ணன் என்னிடம் அனுப்பியிருந்த கேள்விகளுக்கான பதில்கள்.

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

நிச்சயமாக இல்லை, நிறைய செய்யலாம். நிறைய விஷயங்களை தமிழில் எழுதலாம். தற்சமயங்களில் எல்லாம் எப்பொழுது ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையைத் தேடினாலும் தமிழிலும் தேட்ப்பார்ப்பதுண்டு, 1% வரை கூட என் தேடல்களுக்கு தமிழில் கட்டுரைகள் இல்லை. கண்டெண்ட் இன்னும் நிறைய செய்யணும், தமிழில், விக்கிபீடியாவிற்கோ இல்லை அதைப் போன்ற ஒன்றிற்கோ என்றில்லாமல் பொதுவாக தமிழில் தரமுள்ள கட்டுரைகளை எழுதினால் கூட போதும்; அது வலைத்தளமாகக் கூட இருக்கலாம். கூகுளாண்டவருக்கு அந்த வேறுபாடு கிடையாது. விக்கியின் பேஜ் ராங்கிற்கு நீங்கள் விக்கியில் எழுதினால் மக்களுக்கு சுலபமாக போய்ச்சேரும் உங்களுக்கான கிரடிட் இல்லாமல். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கிரடிடி பற்றி யோசிக்காமல் தமிழில் கண்டெண்ட் கொண்டுவருவதைப் பற்றி மட்டும் நினைக்க வேண்டும் என்று கருதுகிறேன். என்னிடம் ஐஎஸ்ஐ எதுவும் இல்லை தரத்திற்கு, நான் சொல்லவரும் தரமென்பது கருத்துப் பிழைகள் குறைந்த ஒன்றைப் பற்றி மட்டுமே. இது பொதுவிற்கு எனக்கு நானே வைத்துக் கொண்ட இன்னொரு தர மதிப்பீடு எக்காரணம் கொண்டும் மூடநம்பிக்கைக்கு ஆதரவாய் எழுதாமல் இருப்பதென்று.

இதுதான் என்றில்லாமல் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம், தமிழில் எழுதப்படும் அனைத்துமே முக்கியம் என்று தான் நான் நினைக்கிறேன்.


2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்
அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு,குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

மின்னஞ்சல், மின்னரட்டை தமிழில் பொதுவாக அதிகம் தற்சமயம் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. குறுஞ்செய்தி பற்றி எனக்குத் தெரியாது. மின் வணிகம், அரசாளுமை பற்றியும் எனக்கு அத்தனை அறிவு கிடையாது. கிழக்குப் பதிப்பகத்தில் இணையப்பக்கத்தில் தமிழில் பார்த்த நினைவுண்டு, இன்னும் வரலாம். இதழ்கள் தற்சமயம் பொதுவாக நிறைய மக்களைச் சென்றடைந்திருக்கிறது என்றாலும், தமிழ் பேசும் தமிழறிந்த இணையத்தமிழ் மக்களில் 30% மக்கள் தான் தமிழை இணையத்தில் வாசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த நிலை இன்னும் வளரவேண்டும்.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின்
பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

இணையத் தன்னார்வலர்களின் பங்களிப்பு இணையத் தமிழுக்கு பெரும் பங்காற்றியிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். தமிழ்மணத்தை தனிநபரின் தன்னார்வலத்தால் தொடங்கப்பட்டது என்று கொண்டால், நான் இன்று தமிழில் எழுதிக் கொண்டிருப்பதற்கு மிக முக்கியமான காரணமாக தமிழ்மணம் இருந்திருக்கிறது என்றே சொல்வேன். நான் மட்டுமல்ல இன்னும் பலர் இப்படிச் சொல்வார்களாயிருக்கும். அதுமட்டுமில்லாமல் தமிழ் விக்கி, நூலகம், மதுரைத் திட்டம் போன்ற பல விஷயங்களை தனி நபர்களாலும் குழுக்களாலும் தொடர்ச்சியாகச் செய்யப்பட்டு வந்திருக்கிறது.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச்
சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

எனக்கு அந்த அளவிற்கெல்லாம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிருந்ததில்லை, இது ஒரு கற்பனை சார்ந்ததாய் இருப்பதால் சாய்ஸில் விட்டுடுறேன்.


5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றிய என் பொதுவான கருத்து அத்தனை ஏற்புடையதாக இருக்காது. இன்னும் தமிழ் பதிவுலகம் நிறைய செய்யலாம் செய்ய வேண்டும். இதையே தான் யோசனையாகவும் கூறுவேன். நல்ல கட்டுரைகள் பல இன்னும் தமிழில் எழுதப்பட வேண்டும்.


6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

தமிழ்மணம் பதிவுகளுக்கு நிறைய செய்திருக்கிறது, செய்து கொண்டும் வருகிறது. பதிவுகளை பலருக்கும் சுலபமாக சென்று சேர்க்கிறது என்பதே பெரிய விஷயம் தான். உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும் பொழுது ஏற்படும் பிரச்சனைகள் தமிழ்மணத்தில் இப்பொழுது கொஞ்சம் இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளையும் தமிழ்மணம் தொடர்ந்து செய்கிறது. இப்படியே தொடர வேண்டும்.

தமிழில் நல்ல கட்டுரைகள் எழுதப்படும் பொழுது அதை ஊக்குவித்து இணையப்பக்கத்தில் தகுந்த இடத்தில் இருத்தலாம். ஆனால் நல்ல கட்டுரைகள் என்பது சப்ஜெக்டிவ்வான விஷயம் என்பதால் இப்பொழுது இருந்து கொண்டிருக்கும் முறை கூட பரவாயில்லை தான். இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In நாத்தீகம்

சாருவின் திருவிளையாடல்கள்

ஒருவன் துன்பத்தில் இருக்கும் பொழுது அதைப் பார்த்து சிரிக்கக்கூடாதுதான், ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் பொழுது ‘நான் முன்னமே நினைச்சேன், அப்படியே ஆய்டுச்சு பாரு, இப்ப மாட்டிக்கிட்டியா?’ என்று எகத்தாளம் பேசக்கூடாது தான். ஆனால் சாரு விஷயத்தில் அப்படிச் செய்ய வேண்டியிருக்கிறது.

உஸ்மான் சித்தர் அப்படிங்கிற ஒரு கேரக்டர் பற்றி சாருஆன்லைனில் அப்பைக்கப்ப வரும், நான் பாலகுமாரனையே அன்னம் மாதிரி பாலை மட்டும் படித்தவன், சாருவிடம் பாலாவை கம்பேர் செய்ய இந்த வகையறா இம்சை 10% தான் இருக்கும். ஒதுங்கித்தள்ள முடிந்திருந்தது, ஆனால் மனதின் ஓரத்தில் இந்த ஆள் நல்லா மாட்டிக்கிட்டு எங்கையோ வாங்கப் போறார்னு பட்டுக்கிட்டே இருந்துச்சு.



சாருவின் well-wisher என்கிற வகையில் இதைப்பற்றிய ஒரு வருத்தம் இருந்தது. அது அப்படியே ஆகியிருக்கிறது, நினைத்தால் வருத்தம் தான். தற்சமயம் உஸ்மான் சித்தர் சாருவின் வாசகர்களிடன் காசடிக்கிறார் என்கிற செய்தி தெரிந்தது, கால் தரையில் நிற்கவில்லை. மாட்டிக்கிட்டான்யா! என்று. இப்படித் தான் நடக்கும் என்று நான் நினைத்திருந்தேன் என்று சொல்வதை கேவலமான / அதிகப்பிரசங்கித்தனமான ஒன்றுதான் என்பதைத் தெரிந்தும் இதை எழுதுகிறேன். சாரு இந்தப் பிரச்சனையிலிருந்து வெளிவரவேண்டும் என்கிற எண்ணத்துடன்.

PS: சுஜாதாவைக் கடத்தைப்போறேன் கதையில் சொன்னதைப் போல் ஒருவேளை பைபாஸ் சர்ஜரி செய்தபிறகு கடவுள் எனக்குத் தெரிவாறா என்று தெரியாது!

PS1: நம்புவதற்கு கஷ்டம் தான் என்றாலும் சாருவின் பெயரை பப்ளிசிட்டிக்காக உபயோகிக்கவில்லை, என்னை நன்கறிந்த நாலுபேருக்கு அது தெரியும் ;) அவங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும்.

PS2: பகுத்தறிவை நோக்கி மட்டுமே இந்தப் பதிவு.

PS3: விஷய மற்றும் புகைப்பட தானம் சாருஆன்லைன்.காம்

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In பயணம் புகைப்படம்

சித்ரதுர்கா புகைப்படங்கள்

உரையாடல் ஜன்னல் வழி பழக்கமான நண்பரொருவர் அழைத்ததன் பெயரில் சித்ரதுர்கா சென்றிருந்தேன், சென்னையிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் மக்கள் வந்திருந்தார்கள். அக்காவும் அவங்க ஊட்டுக்காரரும் மற்ற மக்களுடன் டெம்போ ட்ராவலரில் வர நான் மட்டும் என் வண்டியில் சென்றிருந்தேன். குதிரைமுக் சென்றுவந்த பொழுது என் வண்டி கிளப்பிய சில சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு அது அவசியமாகியது. ஒரு அருமையான டீம் அமைந்தது, கலகலப்பாய் நகர்ந்தது பொழுது. நான் தான் பாதி நேரம் ஃபோட்டோ எடுக்கவும் மீதி நேரம் பாத்ரூம் தேடவும் என்று இருந்ததில் அத்தனை தூரம் வந்திருந்த மக்களுடன் பழக முடியவில்லை. நிச்சயம் இன்னொரு முறை வேறு இடத்திற்குச் செல்லும் பொழுது இன்னும் விரிவாகப் பழகிக் கொள்ளலாம் என்று என் தேடலை(அதேதான்) தொடர்ந்திருந்தேன்.



Trip to Chitradurga

IMG_5386

IMG_5416

IMG_5475

Couples

Vanivilas Dam

Chitradurga Fort

Chitradurga Fort

Jason

Portrait

Girl with a cute smile

Chitradurga Fort

Chitradurga Fort

Chitradurga Fort

Chitradurga Fort

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In கவிதைகள்

Dishonest



என் தோல்விக்கான படுகுழியைத்
தோண்டி நானே படுத்துக் கொள்கிறேன்
சிரிக்கும் காலத்தை புறக்கணிக்கும் யத்தனிப்பு
கழட்டியெறியும் ஒன்று
முகமூடியாகத்தான் இருக்கவேண்டுமென்று நகர்கிறேன்
முகமாக இருந்துவிடக்கூடாதென்ற பயத்துடன்
அவிழ்வதெது என்றறிவுடன்
எல்லாம் போலியாகிவிட்ட பொழுதொன்றில்
இல்லாமல் போனது முகமாகிவிடவே விரும்புகிறேன்
முகமூடிகளும் இல்லாமல் போய்விடும்
வியாபாரத் தந்திரத்துடன்
பொருந்தாமல் தடுமாறிய முகமூடியொன்று
முகமில்லாத பொருத்தத்தில் பொருந்தியதை
மொத்தமாய்ப் புறக்கணிக்கிறேன்
நேர்மையற்றவனாய்

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In அரசியல்

புலிக்குட்டியாய் ஒரு வாழ்க்கை

வெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின்
முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை
தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய்
வீரியம் பெறுகிறது என் இருப்பின் மீதான
மற்றவர்களின் கோபம்

அடர்கானகத்தின் வழியேயான
முடிவென்னும் பெருவெளியை நோக்கிய பயணத்தின்
இடையில் இயக்கத்தை நிறுத்த முயலும்
அத்தனைப் பொறிகளையும் சுட்டு வீழ்த்தியவனாய்
நகர்ந்து கொண்டேயிருக்கிறேன்
கடக்கவேண்டிய தொலைவை மட்டுமே கருத்தில் நிறுத்தி

சிறிதும் பெரிதுமாய்
வண்ணக்குழப்பங்களுடன் கூடியதாய்
பல சமயங்களில்
பொருந்தாததாயுமான முகமூடிகள்
பயணத்தின் நடுவே கழன்று விழுகின்றன
பெருஞ்சிரிப்புகளைப் புறக்கணித்தவனாய்
நான்

நண்பர்கள் பகைவர்களாய்
நீலமேகம் நொடியில் நெருப்பு மழை பொழியும்
இருண்மையாய் மாறி பயமுறுத்தும் மாற்றங்கள்
காலைவாறிவிடவே காத்திருப்பவை போல்
எகிறிக்குத்தோ அடியில் குனிந்தோ எப்படியோ
இருப்பை மட்டும் நிச்சயப்படுத்தி
நீளும் என்னுடைய பயணத்தின் முடிவான
பெருவெளியைப் பற்றிய பயமெப்போதும் இருந்ததில்லை
செய்துகொண்டிருக்கும் பயணமே
பெருங்கனவாய் அகலும் சாத்தியக்கூறுகள்
புரிவதால்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சினிமா

அப்பாஸ் கியாரோஸ்டாமி என்னும் திரைக்காதலன்

அபூர்வமான ஒரு சமயம் ஒன்றில் நான் தேர்ந்தெடுத்த தொடர்ச்சியான நான்கு அப்பாஸ் கியாரோஸ்டாமியின்(Abbas Kiarostami) படங்கள், திரைப்படங்கள் பற்றி எனக்கிருந்த எண்ணங்களை வெகுவாக மாற்றியது. எதையெல்லாம் திரைப்படமாக எடுக்கலாம் எப்படியெல்லாம் திரைப்படங்கள் எடுக்க முடியும் என்பதைப் பற்றிய என் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளாக்கியது அவரின் படங்கள்.



Ten, Close-up, The wind will carry us மற்றும் Where is my friends home படங்கள் தான் நான் பார்த்தவை. ஏற்கனவே Mohsen Makhmalbaf, Majid Majidi, Samira Makhmalbaf, Bahman Ghobadi என்று பார்த்துவிட்டு, குர்திஸ்தானெல்லாம் பக்கத்தில் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டிருந்தேன். சினிமா படம் எடுப்பதின் சிற்பிகள் ஈரானிய இயக்குநர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இவர்கள் படங்களில் எது முக்கியம் என்று நான் கருதுகிறேன் என்றால் அந்தப் படங்கள் வெளிப்படுத்தும் சாத்தியக்கூறுகள் தான். Ten போல் ஒரு படம் பார்த்தால் தான் இப்படியும் படமெடுக்க முடியும் என்ற போல என்ற எண்ணம் வருகிறது. எதையும் வலிந்து சொல்லாமல் அதுவாகச் சொல்லச் செய்வது ஈரானியப் படங்களின் மேல் எனக்கு இன்னமும் ஆர்வம் எழச் செய்த ஒரு விஷயம். அகிரா குரோசொவா சொன்ன "Words cannot describe my feelings about them(அப்பாஸின் படங்கள்)" தான் எனக்கும் தோன்றுகிறது. இந்தப் படங்களைப் பற்றி நாலு வரிகள் எழுதுவோம் என்று நினைக்கும் பொழுது.

பிறகென்ன எழுது வந்துக்கிட்டு என்று கேட்கலாம், ஆசைதான். வெளிப்படுத்திவிடமுடியாது ஏக்கங்களை வார்த்தைப் படுத்த முயற்சியாவது செய்யலாமே என்று தான். இன்னும் நாலு பேர் என்னால் இந்தப் படங்களைப் பார்ப்பார்களோ இல்லை தெரிந்து கொள்வார்களோவானால் அதைவிட நான் எதிர்பார்த்துவிடமுடியும் நான் எழுதும் எழுத்திலிருந்து.

Ten

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வண்டி ஓட்டும் ஒரு பெண் சந்திக்கும் பத்து உரையாடல்களை உள்ளடக்கியது இந்தப் படம். நானறிந்த வரையில் பெண்ணியம் பேசும் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக இதைப் பார்க்கிறேன். உரையாடல்களை மட்டும் வைத்து இயக்குநர் சொல்ல வரும் விஷயத்தை ரசிகர்கள் மனதில் ஆழமாய்ப் பதிய வைக்கிறார். விவாகரத்து செய்துவிட்ட தன் கணவரிடமிருந்து மகனை வீட்டிற்கு அழைத்து வரும் பொழுது திரும்ப கொண்டு விடப்போகும் பொழுதும் அவர்கள் இருவரிடம் நடக்கும் உரையாடல் நிச்சயமாய் நாம் சினிமா ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே வராத அளவிற்கு வைத்திருக்கும். அந்த குட்டிப் பையனாகட்டும் உரையாடலின் பொழுது வண்டி ஓட்டிக் கொண்டு வரும் அம்மா மீது கோபப்படுவது சில சமயங்களில் விரக்தியடைவது காட்டுக் கூச்சல் போடுவது என தேர்ச்சியான நடிப்பு. அதே போல் வண்டி ஓட்டும் பெண்ணாக நடித்த Mania Akbari ஆகட்டும் எங்கோ ஒரு வண்டியில் அவர்களுக்கு தெரியாமல் வைத்துவிட்ட காமராவின் வழியாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வரும் வகையில் அத்தனை இயல்பாக படமாக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண் தன் தங்கையுடனும், ஒரு செக்ஸ் வொர்க்கர் உடனும் மசூதிக்கு சென்று வரும் ஒரு பெண்ணுடனும் கொள்ளும் உரையாடல் ஈரான் நாட்டின் தற்சமய நிலையை அழகாக வெளிப்படுத்துகிறது. ஒரு சமகால வரலாற்றை அப்பாஸின் காமரா அழகாக படமாக்கிச் செல்கிறது. மொத்த படமுமே அந்த வண்டிக்குள்ளேயே வைத்து படமாக்கப்பட்டிருக்கிறது, நமக்கு ஒரு அலுப்பு வருவதில்லை ஏனென்றால் வண்டிக்கு வெளியில் மாறும் ஈரானின் நகர்ப்புறம் இரவு நேரம் என காமெரா தன் இன்னொரு பரிமாணத்தையும் அழுத்தமாக பதிவு செய்தபடியே நகர்கிறது.



Close-up

ஒரு உண்மைக்கதையை மய்யமாக்கி எடுக்கப்பட்ட திரைப்படம் இது, வறுமையில் வாடும் ஒரு இளைஞன் ஈரானின் இன்னொரு புகழ்பெற்ற இயக்குநரான Mohsen Makhmalbaf நான் தான் என்று கூறு ஒரு குடும்பத்தில் நுழைகிறான் இதனால் நடந்த விஷயங்களை அப்பாஸ் படமாக்க்யிருக்கிறார். இந்தச் சம்பவத்தில் உண்மையாக இருந்தவர்களையே வைத்து படமாக்கியிருக்கிறார். அந்தப் பையன் கெட்ட எண்ணம் எதுவும் இல்லாதவனாக அதே சமயம் தான் மிகவும் விரும்பும் இயக்குநராக இருக்கும் Makhmalbaf ஆக மாறக் கிடைக்கும் வாய்ப்பை உபயோகித்து அந்த ஐடெண்டிடி மீதான தன் காதலை இப்படி வெளிப்படுத்திவிடுகிறான் என்பது தொடர்ச்சியாக நடக்கும் விசாரணையின் பொழுது தெரிகிறது. கடைசியில் Makhmalbaf அந்தப் பையனைச் சந்தித்து ஒரு பூத்தொட்டியை அந்த பையன் ஏமாற்றிய குடும்பத்தாரின் வீட்டில் சென்று வைப்பதில் முடிகிறது படம். மனிதனின் ஐடெண்டிடியைப் பற்றி நிறைய விஷயங்களைப் பேசுகிறது இந்தப் படம், அதே போல் ஈரானின் சமகால இருப்பையும் கூட.



தொடரும் ------

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In Only ஜல்லிஸ்

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் என் தலைமுடியும்

எக்ஸிஸ்டென்ஷியலிஸம் பற்றி முதலில் தெரிந்து கொண்டது என்றால், நான் வலைப் பதிவில் வந்து சேர்ந்திருந்த சமயம் என்று நினைக்கிறேன். பெரிய ராயர் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் பற்றி க.பெ.வில் கொளுத்திப் போட அது வலையுலகில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. எப்பவுமே என்னமோ நோட்ஸ் எடுப்பது போல க.பெவில் வரும் பெயர்களை எடுத்துக் கொண்டு கூகுளில் தேடும் வழக்கம் உண்டு. அன்றும் அப்படித்தான் சார்த்ர்(Jean-Paul Charles Aymard Sartre) வையும் சிமோன் டி புவா(ர்) Simone de Beauvoir வையும் குறிப்பெடுத்துக்கொண்டவனாய்த் தேடத் தொடங்கினேன். அப்பொழுதெல்லாம் விக்கிபீடியாவில் தேடும் பழக்கம் கிடையாது. இப்படி தேடப்போய் அறிமுகம் ஆனதுதான் எக்ஸிஸ்டென்ஷியலிஸம்.

Existentialism is a philosophical movement which claims that individual human beings have full responsibility for creating the meanings of their own lives. என்பதைத்தான் எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தின் ஒருவார்த்தைக் குறிப்பாகச் சொல்கிறது விக்கிபீடியா. இந்த வரிகள் சொல்லும் மீனிங்கைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். இதைப் பற்றி யோசிக்கும் பொழுதெல்லாம் 'தேவர் மகன்' படத்தில் சிவாஜி கணேசன் சொல்லும்; மரம் பற்றிய வசனம் நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை.

நாம் வாழ்ந்து வரும் சமுதாயத்திற்கு நான் எதுவும் செய்யவேண்டுமா? செய்ய வேண்டுமானால் எப்படிப்பட்டதான ஒன்றை செய்யவேண்டும் என்ற கேள்விகள். சரி இதிலெல்லாம் என் தலைமுடி எங்கே வந்தது என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் இந்த சமுதாயத்தையும், எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தையும், ஒரு பட்டர்ப்ளை எஃபெக்ட்டால் என் தலைமுடியுடன் சம்மந்தப் படுத்திவிடமுடியும் என்றே நினைக்கிறேன்.

நாம் வாழும் சமுதாயத்தை சந்தோஷப்படுத்துமானால் அது நல்ல காரியமாகத்தானே இருக்கமுடியும். அப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்வதால் Meanings of my own life அடைந்துவிட்டதாகச் சொல்லமுடியும்தானே. சர்ரியலிஸம், பின்நவீனத்துவம் போன்ற இன்னபிற விஷயங்களுடனும் என் தலைமுடியை சம்மந்தப்படுத்த முடியுமென்றாலும் இப்போதைக்கு இதை எக்ஸிஸ்டென்ஷியலிஸத்துடன் முடித்துக் கொண்டு பின்னர் தேவைகள் வரும் பொழுது மற்றவைகள் விளக்கப்படும்.

ஏன் இப்படி என்று நினைத்தீர்கள் என்றால் மேட்டர் இவ்வளவு தாங்க ஸிம்பிள், நான் நான்கைந்து மாதங்களாக வளர்த்துவந்து என்னுடைய தலைமுடியை ஒட்ட வெட்டிவிட்டேன். இம்புட்டுத்தான் விஷயம். இப்ப இது எப்படி எக்ஸிஸ்டென்ஷியலிஸத்துடன் சம்மந்தப் பட்டது எனச் சொல்கிறேன். முடிவளர்ப்பதென்பது என்னுடைய தனிப்பட்ட உரிமையில்லையா? அதை ஷார்ட்டா வைத்துக் கொள்வதா இல்லை வளர்த்துக் கொண்டை போடுவதா என்பது யாருடைய பிரச்சனை. தினமும் தலைக்குக் குளித்து, வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு ஷாம்பு, பின்னாடி கன் டிஷ்னர் போட்டு, ஆல்கிளியர் ஹேர் ஜெல்லும், தேங்காயெண்ணையும் தேய்த்து ஆசையாசையாய் வளர்த்துவருகிற என் பிரச்சனையா? இல்லை சந்தர்ப்பவசத்தாலோ இல்லை மற்றதாலோ என்னைச் சந்திக்க வேண்டி வந்தவர்களுடைய பிரச்சனையா?

இது ஒரு முக்கியமான பிரச்சனை; எப்படி "The main threat to existentialism is non-availability of good quality condoms" என்று சாருநிவேதிதா தன்னுடைய பிரச்சனையை எக்ஸிஸ்டென்ஷியலிஸ பிரச்சனையாகப் பார்க்கிறாரோ அப்படி. சரி இப்படி "பாமர" மக்கள் தான் தனிமனித உரிமையைப் புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்கிறார்கள் என்றால் பதிவுலகிலகிலேயே வசிக்கும் பதிவர்களுக்கும் இதே பிரச்சனை தான். கூந்தல் அழகன்னு சொல்றது, என் அக்கா பாசத்துடன் என் தலைமுடியை சம்மந்தப் படுத்திப் பேசுவது, காதுவரைக்கும் முடியிருந்தா என்ன பிரச்சனைன்னு எடுத்துச் சொல்றது(அப்ப அப்துல் கலாமுக்கும் இதே பிரச்சனைன்னு சொல்றீங்க என்ன?), நான் எப்ப முடிவெட்டப்போறேங்கிறது தான் நாளை இந்தியா வல்லரசா மாறுவதற்கு முக்கியமான பிரச்சனை அப்படின்னு பேசுறது எல்லாம் சேர்ந்து தான் சரி, நமக்கான ஒரு தீர்வோ விருப்பமோ இல்லாமல் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் சொல்லும் Nothingness ஆவோ இல்லை புத்தர் சொல்லும் "ஆசையே அழிவுக்கு காரணம்" இருக்கலாம் அப்படிங்கிற நிறைய விஷயத்தை கன்ஸிடர் செய்து முடியை வெட்டி விடலாம் என்ற முடிவிற்கே வந்துவிட்டேன்.

ஆனாலும் ஒரு நல்ல சலூன் தேடி உட்கார்ந்து, சுத்தி பாதுகாப்பு வளையமெல்லாம் கட்டிவிட்ட பிறகு வெட்டி விழுந்த முதல் கற்றை முடியுடன் என் கண்ணீரும் சொட்டாய் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை என்றே நினைத்தேன் முதலில், "என்னா சார் கண்ணில பட்டுடுச்சா!" என்று கேட்ட அந்த கருப்பு மனிதரின் சிகப்பு அன்பு தான் இந்தப் பதிவை தட்டிக் கொண்டிருக்கும் பொழுது மனதெங்கும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. முடிவெட்டிவிட்டு வீட்டிற்கு வந்ததும் அக்கா சொன்ன "அய்யோ என் தம்பியோட டீஷர்ட் பேண்டை போட்டுக்கிட்டு யாரோ வீட்டுக்கு வந்திட்டாங்க" வார்த்தைகள் காதிலே இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கண்ணாடி முன்னால் நின்று பார்த்தால் எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை, இதற்கு ஏதாவது இஸம் சொல்லலாமா என்று தெரிந்தவர்களிடம் கேட்கயிருக்கிறேன்.

நீட்ஷே "இறைவன் இறந்துவிட்டான், இனிமேலும் இறந்தவனாகவேயிருப்பான். அவனை நாம் தான் கொன்றுவிட்டோம்" என்று தன்னுடைய நாவலில் எழுதிய பிரபலமான வரிகளில்; இறைவன் என்பது இறைவனைக் குறித்தால் இங்கே என் தலைமுடியென்பது தலைமுடியைக் குறிப்பதாக வைத்துக் கொள்ளலாம். இப்படி ஒரு பதிவை படிக்க நேர்ந்ததற்காகவோ இல்லை, இந்தத் தலைப்பின் கவர்ச்சியில் உள்ளே நுழைந்தவர்களுக்கும் வருத்தப் படுவதாகயிருந்தால் அதற்கு காரணம் பிரகாஷ், பொன்ஸ், ஆசீப் மீரான் மற்றும் செந்தழல் ரவி தான் என்றும். இந்தப் பதிவின் பின்னாலுள்ள பின்நவீனத்துவத்தைப் புரிந்து கொள்கிறீர்கள் என்றால் நீங்கள், பின்நவீனத்துவம் என்னும் மலையின் முதல் படிக்கட்டை வெற்றிகரமாகத் தாண்டிவிட்டீர்கள் என்று காலரைத் தூக்கிவிடலாம்.

Read More

Share Tweet Pin It +1

19 Comments

In உண்மைக்கதை மாதிரி

கல்யாணம்

கல்யாணம் பற்றிய கனவுகள் இல்லாத யாராவது இருக்க முடியுமா தெரியவில்லை, எனக்கு ஏகப்பட்ட கனவுகள். என்னுடைய பெரும்பான்மையான கனவுகளை நான் மொழிப்பெயர்த்திருக்கிறேன் எழுத்தாக. ஆனால் கனவுகள் தீர்வதாகத் தெரியவில்லை, இதற்கான ஒரே தீர்வு கல்யாணம் செய்து கொள்வதாகத்தான் இருக்க முடியும். கல்யாணத்தையும் பாத்ரூம் செல்வதையும் ஒப்பிட்டு சொல்லப்பட்ட விஷயம் கொஞ்சம் வேடிக்கையானது தான் என்றாலும் யோசிக்கப்பட வேண்டியது. ஏனென்றால் தண்ணியடித்துவிட்டு புலம்பும் எல்லா ஆண்களும் கல்யாணம் ஆனவர்களாகவே இருக்கிறார்கள். என்ன செய்ய?

பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் நிறைய யோசித்து வைத்திருந்தேன், எட்டாவது படிக்க ஆரம்பித்ததிலிருந்து. ஆனால் என்ன கொடுமை எல்லாமே மாறிவிட்டிருக்கிறது, அன்று நான் ஆசைப்பட்டது போன்ற பெண்ணை நான் இன்று நினைத்துக் கூட பார்க்கமுடியாது. எல்லாம் எறக்குறைய எல்லாமே மாறிவிட்டிருக்கிறது, நான் கடைசிவரை மாறவே மாறாது என்று நினைத்தது கூட. அதாவது வேலை செய்யும் பெண்ணை அதுவும் குறிப்பாக சாஃப்ட்வேரில் வேலை செய்யும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள மாட்டென் என்றே நினைத்து வந்திருக்கிறேன். ஆனால் அம்மாவிடம் கடைசியில் ஒரே ஒரு கண்டிஷன் போட்டுவிட்டு வேண்டுமென்றால் சாஃப்ட்வேர் பெண்ணாயிருந்தாலும் பரவாயில்லை என்று சொன்ன நினைவு. கடைசியாய் ஒரே ஒரு கண்டிஷன் தான் வைத்திருந்தேன். ஆனால் கொடுமையென்ன என்றால் அந்த ஒரேயொரு கண்டிஷன் போதும் எனக்கு கல்யாணமே ஆகாமல் போக. அம்மாவிற்கு ஒரு பக்கம் பெருமைதான் என்றாலும் ஒரு பக்கம் வருத்தம். எனக்கு என் கண்டிஷன் எஸ்.வி. சேகருடையதாய்ப் போய்விடக்கூடாதென இன்னமும் கூட எண்ணம் இருக்கிறது, ஆனால் எஸ்வி சேகருடையதைப் போல் மொக்கையானதில்லை என் கண்டிஷன் என்றே நினைக்கிறேன்.

காதலித்து மணமுடிக்க எனக்கு ஆரம்பத்தில் இருந்தே விருப்பம் இருந்ததில்லை, அம்மா அப்பா பார்த்து வைக்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வது என்று சின்ன வயதில் இருந்தே நினைத்து வந்திருக்கிறேன். இன்று வரை அது அப்படியே இருப்பதில் கொஞ்சம் பெருமையும் கூட, அதே போல் ஒரேயொரு பெண்ணைப் பார்ப்பது அந்தப் பெண்ணையே கல்யாணம் செய்து கொள்வது என்பதும் என்னுடைய ஒரு எண்ணமாக இருந்தது. அதுவும் கூட அப்படியே நிறைவேறிவிடும் என்று நான் நினைக்கவில்லை, இன்றைக்கு இருக்கும் நிலையில் அதுவும் நிறைவேறிவிட்டது என்றே சொல்லலாம்.

கல்யாணத்தின் மேல் நான் நிறைய டிபெண்ட் ஆகியிருந்தேன் சில விஷயங்களில், என் வாழ்நாளில் நான் ருசி பார்ப்பதற்காகக் கூட பியர் அருந்தியதில்லை. நான் கல்லூரி ஹாஸ்டலில் இருக்கத் தொடங்கியதில் இருந்து என் நண்பர்கள் பெரும்பாலும் மது அருந்துபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். என்னை இந்த விஷயத்தில் கட்டிப் போட பெரிய கயிறொன்றும் தேவையிருந்திருக்கவில்லை. நான் என்னையும் என் அம்மாவையும் இணைக்கும் ஒரு மாயக்கயிறொன்று இருப்பதாகவே இதுவரை நினைத்து வந்திருக்கிறேன். ஒரு பாண்டிங். அந்தக் கயிறு என்வரையில் நீளும் வரை என்னால் மது அருந்துவது என்பதை விளையாட்டுக்குக் கூட செய்ய முடியாது. இன்று வரையிலும் அப்படியே. என்னிடம் என் நண்பர்கள் வற்புறுத்தலாகவும் சாதாரணமாகவும் இன்னும் பல வகையிலும் மது அருந்தக் கேட்டுக் கொண்டிருந்த பொழுதெல்லாம், ஒரு பழக்கமாக இல்லாவிட்டாலும் ஒரு மூடியளவாவது அருந்திப் பார்க்க வற்புறுத்திய பொழுதெல்லாம் ஒரு புன்னகையில் மறுத்திருக்கிறேன்.

தற்சமயங்களில் மிகவும் நெருக்கமான நண்பர்கள் கேட்கும் பொழுது கல்யாணத்திற்குப் பிறகு மனைவியின் அனுமதியுடன் செய்வேன் அதனால் வெய்ட்டீஸ் என்று விளையாட்டாகச் சொல்லி வந்தாலும். அம்மாவுடைய என் மீதான அந்த லாஜிக்கல் பாண்டிங் கல்யாணத்திற்குப் பிறகு மனைவியுடன் நீளும் என்றே நினைக்கிறேன். ஆனாலும் கூட திருமணத்திற்குப் பிறகு சட்டென்று இது மாறிவிடும் என்று நான் நினைக்கவில்லை, என் அம்மா முன்னால், என்னால், ஒரு முறை மது அருந்திவிட்டு நிற்க முடியாது என்றே நினைத்து வந்திருக்கிறேன். அம்மா வருத்தப் படுவார்களா மாட்டார்களா என்பதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை, என் வாழ்நாளில் ஒரு முறை கூட அம்மா நீ தண்ணியடிக்கக்கூடாதென்று சத்தியம் எதையும் வாங்கவில்லை ஆனால் அதுவும் கூட ஒரு கண்ணுக்குத் தெரியாத உணர்ச்சிகளால் ஆனது.

என்னைக் கல்யாணம் செய்து கொள்ளும் சின்னப் பெண்ணின் மீது நான் எத்தனை பெரிய ரெஸ்பான்ஸிபிலிட்டியை வைக்கப்போகிறேன் என்று எனக்குத் தெரிந்து தான் இருக்கிறது. என் மனதை நானே ஏமாற்றிக் கொள்ளும் செய்கை, அம்மாவிடமிருந்த அந்த மாயக்கயிறு மனைவியிடன் வந்ததாகவும் மனைவியை சம்மதிக்க வைத்து வேண்டியதை செய்து கொள்ளலாம் என்றும் நான் நினைப்பது கூட ஒரு வகையில் என்னை நானே ஏமாற்றிக் கொள்வது தான். ஆனால் தண்ணியடிப்பவர்களின் மீதான எண்ணம் இப்பொழுது அத்தனை மோசமில்லை, இதைப்பற்றி நிறைய பேசியாகிவிட்டது, நிறைய யோசித்தாகிவிட்டது. காலத்தின் மீது பாரத்தைப் போட்டு நகர்கிறேன் என்று சொல்வதில் கூட இன்றளவில் நான் என்னை நானே மாற்றிக் கொள்ள முயல்கிறேன் என்ற எண்ணமே அதிகமாகிறது.

நான் போட்ட கண்டிஷன் பற்றி பேச நினைத்து எங்கெங்கோ சென்றுவிட்டேன், முன்பே கூட கொஞ்சம் பர்ஸனலாய் பேசும் நண்பர்களிடம் இதைப்பற்றி பேசியிருப்பேன். இளவஞ்சி என்னிடம் இதைப்பற்றி சண்டை போட்டது நினைவில் இருக்கிறது. நான் போட்ட கண்டிஷன் “தாலி கட்டமாட்டேன்” “ரெஜிஸ்டர் கல்யாணம்” என்பது தான், அம்மா தேடிப்பிடித்து அவர்களின் சொந்தத்தில் ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தார். என் வருத்தமெல்லாம் அந்தப் பெண்ணின் திருமணம் பற்றிய எண்ணத்தைத் தெரிந்து கொள்ளாமல் என் எண்ணத்தை இந்தக் கல்யாணத்தின் மீது திணிப்பது தான். நான் இளவஞ்சியிடம் சொல்லியிருந்தேன் 95% இந்தக் கல்யாணம் நான் நினைப்பது போல் நடக்கத்தான் வாய்ப்பிருக்கிறது ஆனால் நான் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணின் மனநிலையைப் பொறுத்து 5% மாற வாய்ப்பிருக்கிறது.

Survival of the fittest என்பது தான் இதைப்பற்றி நினைத்ததும் நினைவுக்கு வருகிறது. நான் என்னுடைய சம்பளம், நல்ல பிள்ளைத்தனம், குடும்பம் இவற்றை வைத்து அந்தப் பெண்ணை அவர்கள் குடும்பத்தை என்பக்கம் இழுக்கப்பார்க்கிறேன் என்று நினைக்கத் தோன்றுகிறது. என் சொந்தத்தில் என் போன்ற மாப்பிள்ளைகள் கிடைப்பது கஷ்டமாகயிருந்தாலுமே கூட தாலி கட்டாத திருமணத்திற்கு ஒப்புக்கொள்வார்களா என்ற கேள்வி இருந்தது. இன்னமுமே கூட என் அப்பா இந்த விஷயத்தில் என் பெயரில் கோபமாகவும், என்னை காம்ரமைஸ் செய்துவிடும் எண்ணத்தோடும் இருந்தாலும். செய்தால் இப்படிச் செய்து கொள்வது இல்லை சும்மா இருப்பது என்ற முடிவில் இருக்கும் என்னை அத்தனை சீக்கிரம் அவரால் மாற்றிவிட முடியும் என்று நான் நினைக்கவில்லை.

எனக்கு அந்தப் பெண்ணை உட்காரவைத்து நான் ஏன் இப்படிச் சொல்கிறேன், இப்படி ஒரு கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று விளக்க ஆசை. என்னால் அந்தப் பெண்ணை என் காரணங்கள் சொல்லி கன்வின்ஸ் செய்துவிட முடியும் என்று நினைக்காவிட்டாலும். தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று தெரிந்துகொள்ளவாவது வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் அம்மாவிடம் பேசியதிலிருந்து அதற்கான தேவை கொஞ்சம் கம்மியாக இருக்கும் என்று நினைக்கிறேன். என் அம்மா அப்பாவிற்குப் பெண்ணைப் பிடித்திருப்பதாகச் சொன்னார்கள் நானும் பெண்ணைப் பார்த்தேன், விளையாட்டிற்காக என்று இல்லாவிட்டாலும் வரும் பெண் எப்படிப்பட்டவளாக இருந்தாலும் கவலையில்லை என்ற எண்ணம் தான் இருக்கிறது இப்பொழுது வரையில். நான் என்னுடைய அனுபவத்தை வைத்து தப்புக் கணக்கு போடுகிறேனாகக்கூட இருக்கலாம். ஆனால் இன்று நான் எதை நம்புகிறேனோ அதன் படி வாழவே விரும்புகிறேன், நாளை நான் மாறலாம் என்றாலும் அதற்காக என்னை இப்பொழுது மாற்றிக் கொள்ள விருப்பமில்லை.

நான் கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து என்று நினைக்கிறேன் அம்மாவிடம் சொல்லி வந்திருக்கிறேன் என் கல்யாணம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று. விடலைத்தனத்தில் தோன்றிய இந்தத் தேடல் நான் சம்பாதிக்கத் தொடங்கியதும், நண்பர்களுடைய விமரிசிகையான கல்யாணங்களைப் பார்த்ததும் கூட மாறிவிடவில்லை, சொல்லப்போனால் இன்னமும் கூட அதிகரித்தது. மூன்று விஷயங்கள் “நான் சில வருடங்களுக்கு முன்பு பார்த்த ஒரு கல்யாணம்” “என் அக்காவின் கல்யாணம்” “ஒரு quote" இவை தான் நான் இன்றளவும் நான் இவ்வளவு தீவிரமாய் இதைப் பற்றிக் கொள்ள என்று நினைக்கிறேன். என்னைத் தெரிந்தவர்களுக்கு நான் இந்த விஷயத்தில் இத்தனை தீவிரமாய் இருப்பது கூட ஆச்சர்யமாகயிருக்கும். நான் வாழ்க்கையை அதன் போக்கில் ரசிப்பவன், அதிகமாக அதை என் போக்கில் மாற்றிக் கொள்ள விரும்பாதவன். என் வரையில் செய்யப்படக்கூடிய சிறிய மாற்றங்களை மட்டும் செய்து அதன் போக்கில் ஆனால் மனதளவில் சந்தோஷமாக வாழ்பவன். நான் இந்த விஷயத்தை புஷ் செய்வதால் இந்த வகையில் கூட எனக்குப் பிரச்சனை தான் என்றாலும் அப்படியே தொடர்வதற்கு முக்கியக் காரணம் காந்தி.

ஜெயமோகன் தற்சமயம் எழுதிவரும் இடுகைகளை அதன் ஒரு பாரா படித்துப் பின்னர் பிடித்திருந்தால் தொடர்பவன் என்கிற வகையில் அவருடைய காந்தி பற்றி இடுகைகளை கவனமாகப் படித்து வருகிறேன். ஜெயமோகனின் இடுகைகளை நீங்கள் ஒரு மனநிலையில் இருந்தால் படிக்கலாம்; அதாவது அவர் எழுதுவதைத் தவிர்த்தும் உண்மை இருக்கும் என்றும் அவர் எழுதுவது ஒரு பக்கம் தான் என்றும் தெளிவிருப்பவர்கள் அப்படிச் செய்யலாம். நான் அப்படித்தான் ஜெயமோகனைப் படிப்பது, அவரைப் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே காந்தி பற்றிய படித்த கேட்ட உணர்ந்த விஷயங்கள் எனக்காய் உண்டு அதனால் ஜெமோவின் மோடி மஸ்தான் வேலை என்னிடம் அத்தனை பலிக்காது. காந்தி தான் உண்மையென்று நம்பியதை எத்தனை பாடுபட்டாவது நிறைவேற்றுவதில் குறியாக இருந்தார் என்பது எனக்குத் தெரியும் அந்த மாதிரி ஆட்களால் தான் தான் இப்படிப்பட்ட quotationஐ சொல்லவோ இல்லை செயல்படுத்தியிருக்கவோ முடியும். believe in something, and not to live it, is dishonest. எவ்வளவு பெரிய உண்மை.

நான் என் வாழ்க்கையில் சுயமுன்னேற்ற புத்தகங்கள் படித்தது கிடையாது, எனக்கு அதில் நம்பிக்கையும் கிடையாது. ஆனால் இந்தக் கோட் என்னை நிறைய யோசிக்க வைத்தது. அந்த சமயத்தில் நான் பார்க்க நடந்த நண்பர் ஒருவரின் திருமணமும் என் அக்காவின் திருமணமும் என்னை இதில் என் நம்பிக்கையில் இன்னமும் உறுதியாக இருக்க வைத்தது. அக்காவின் திருமணம் வீட்டில் சிறிய முறையில் தாலி கட்டப்பட்டு பின்னர் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து ரிஷப்ஷன் மட்டும் வைக்கப்பட்டது. வீட்டில் தாலி கட்டும் விஷயம் கூட கடைசியில் மாப்பிள்ளையை கட்டாயப்படுத்தி செய்தது. மாப்பிள்ளைக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்பது என்னை எவ்வளவு சந்தோஷப்படுத்தியிருக்கும் என்பது சொல்லி நம்ப முடியாதது. ஆனால் இதில் காதல் திருமணத்திற்கான ஒரு எட்ஜ் இருந்தது, அக்காவின் புரிதல்கள் என்னை ஒத்தவை என்பதால் இதில் சம்மதம் பெற வேண்டியிருந்தது என் அப்பா அம்மாவிடம் தான் என்பதால் சுலபமாக நடந்துவிட்டாலும் அதுவும் ஒரு முக்கியக் காரணம் நான் என் வழியில் இன்னமும் கூட விடாப்பிடியாக இருப்பதில்.

நான் பார்த்து நடந்த அந்த இன்னொரு திருமணம் நண்பர் ஒருவருக்கும் அவருடைய சொந்தக்காரப் பெண்ணுக்கும் நடந்தது. நண்பர் முழு அளவில் நாத்தீகர் என்று நினைக்கிறேன் அப்படியே நம்புகிறேன், ஆனால் சொந்தக்களுக்காக திருமணம் செய்து கொண்டார். என்னால் அந்தத் தர்மசங்கட நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் நான் நினைத்தேன் என்னளவில் அப்படிப்பட்ட ஒரு முடிவை எடுப்பதில்லை என்று. ஆயிரம் ஆனாலும் நான் இஷ்டப்படுவது போல் தான் திருமணம் இருக்க வேண்டும் என்று, நாம் என்ன தான் மறுத்துச் சொன்னாலும் தமிழகம் இன்னமுமே கூட ஒரு male dominated society தான். ஆனால் என் வரையில் நான் இதை தவறாக உபயோகப்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். தாலி கட்டுவது என்பது பெண்ணை அடிமைப்படுத்துவது என்றே இன்னமும் நினைக்கிறேன். அந்தப் பெண்ணுக்கு இன்று புரியாதாயிருக்கும் அம்மா சொல்கிறார்கள் சித்தப்பா சித்தி சொல்கிறார்கள் என்று செய்து கொள்ளலாம், அப்படி செய்விப்பதில் எனக்கு வருத்தமே என்றாலும் இது நான் நம்புவது; முழு மனதாய் என் மன ஆழத்திற்கு நம்புவது என்னால் அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்கவே முடியாது.

திருமணம் என்பது ஒரு கொண்டாட்டம் தான் நான் மறுக்கவில்லை, இரண்டு பக்கத்து குடும்பங்களும் கலந்து கொண்டு நடக்கும் கொண்டாட்டம் ஆனால் என் வரையில் என் குடும்பத்தில் நான் பார்த்து நடந்த எந்த திருமணமும் அப்படியில்லை, விதியே என்று வந்து விட்டு நகர்வதும் அதற்கான செலவுகளும் நிச்சயம் தேவையற்றதே என்று நினைக்கிறேன். வாழ்க்கையையே கொண்டாட்டமாக வாழ நினைக்கும் எனக்கு ஒரு நாள் கொண்டாட்டம் அவசியமில்லாதது எனக்கு நாட்களின் மீதிருந்த நம்பிக்கை இப்பொழுது இல்லை, பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றை நான் கடந்துவிட்டதாக நினைத்தாலும் இன்னமும் ஒரு சின்னக் குறுகுறுப்பு இருக்கத்தான் செய்கிறது. நான் நினைத்துப் பார்க்கிறேன் எனக்கு நானே உருவாக்கிக் கொண்ட நாத்தீகவாத இமேஜோ இல்லை பார் நான் எப்படி என் இஷ்டம் போல் திருமணம் செய்து கொள்கிறேன் என்கிற ஈகோவோ இதன் பின்னால் இல்லை என்பதை. நான் இல்லை என்று சொன்னாலும் அது இருக்கத்தான் செய்கிறது. ஆயிரம் ஆனாலும் நாம் அனைவரும் முகமூடிகளுக்காகத்தான் வாழ்கிறோம் என்று நினைக்கிறேன். எனக்கு பிடித்தமானதாய் நாத்தீகவாதியாய், கடவுள் மறுப்பாளனாய், ஆணாத்திக்க வாதியாய் அழகான முகமூடியை நான் அணிந்து கொள்கிறேன். முகமூடிகளுக்கான தேவை எனக்கு இல்லை என்பது எத்தனை பெரிய பொய்யாக மட்டும் இருக்க முடியும் என்று நினைத்தபடி.

Read More

Share Tweet Pin It +1

21 Comments

In Only ஜல்லிஸ்

நட்சத்திரக் கேள்விகள்

நண்பர்கள் சிலர் மீள்நட்சத்திரமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு போட்டிருந்தார்கள் என்று சென்ஷி சொல்லிக் கேள்விப்பட்டேன். முன்பே சொன்னது போல் இது தொடர்வதில் எனக்கு இருக்கும் பிரச்சனையே. இசை போட்ட பதிவை நான் ரீடரில் பார்ப்பதற்கு முன்பே சென்ஷி சொன்ன காரணத்தால் போய்ப் பார்த்தேன்.

நட்சத்திரமாக என்னை மறுமுறை தேர்ந்தெடுத்தற்குக் காரணம் தமிழ்மணம் தான் சொல்ல வேண்டும். ஆனால் என்பக்கத்தில் கிளப்பப்பட்டிருந்த அவதூறை மட்டும் இங்கே சரி செய்து கொள்கிறேன். தமிழ்மணம் நீங்கள் முன்னமே நட்சத்திரமாகியிருந்தீர்களா என்று கேட்டிருந்தார்கள் தான். அதற்கு பதிலாக நான் அனுப்பியதை மட்டும் இங்கே பிரசுரித்துக் கொள்கிறேன். இதற்கு தமிழ்மணம் அளித்த பதிலை நான் வெளிவிட முடியாது. அவர்கள் வேண்டுமானால் வெளிவிடலாம்.

அன்புள்ள தமிழ்மண நட்சத்திர நிர்வாகிக்கு,

நான் முன்னமே நட்சத்திரமாக இருந்திருக்கிறேன். இரண்டாம் முறை இருப்பதில் எனக்கெதுவும் வருத்தமில்லை என்பதை நாசூக்காக சொல்லிவிடுகிறேன், நீங்கள் குறிப்பிட்ட தேதி கூட பிரச்சனையில்லை. இனி உங்கள் விருப்பம்.

மோகன்தாஸ்


இதுதான் நான் அனுப்பிய பதில், நான் ஏன் சம்மதம் தெரிவித்தேன் என்ற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது. இதை வைத்து பின்னூட்ட ஜல்லி அடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒன்று மட்டும் "ரொம்ப நாள் கழிச்சு ரசித்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்".

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In பயணம் லதாக் பயணம்

லாமாக்களின் தேசம்

பதினைந்து நாட்களுக்கான ஒரு பயணத்திட்டத்தை எத்தனை நேர்த்தியுடன் செய்ய முடியுமோ அத்தனை நேர்த்தியுடன் செய்யப்பட்ட பயணம் நான் லதாக் சென்று வந்த பயணம். மூன்று நபர்கள் சூப்பர் பைக்கில்(பிரபு, சுமித், சுனில்), ஒரு ஆள் பல்ஸரில்(சேத்தன்) மற்றும் நான் என மொத்தம் ஐந்து பேர். பைக்குகள் நான்கையும் நாங்கள் கிளம்புவதற்கு முன்பே சண்டிகர் அனுப்பிவிட்டு நாங்கள் அங்கே சென்று பிக்கப் செய்து கொள்வதாக ப்ளான். வண்டிக்குத் தேவையான சாமான்களையும் அந்தப் பார்சலிலேயே அனுப்பிவிட்டு, நாங்கள் மட்டும் வெள்ளிக்கிழமை காலை பெங்களூரில் இருந்து டெல்லிக்கு கிளம்பினோம். முன்பே இந்த மக்களுடன் xBhp வழியாய் பயணங்கள் சென்றிருந்தேன் அதுமட்டுமில்லாமல் ஒருவர் என்னுடன் தற்சமயம் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர் மற்றவர் வேலை பார்த்தவர் என்பதால் மிகச்சுலபமாக எங்களால் உரையாட முடிந்திருந்தது. முன்னிரவே கிளம்பிப்போய் விமானநிலையத்தில் பௌர்னமி நிலவை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம்.

டெல்லியில் இறங்கிய பொழுது தான் அந்தச் செய்தி காதிற்கு வந்தது, பைக்குகள் இன்னும் சண்டிகர் சென்றடையவில்லை என்றும், டெல்லியில் இருந்து அனுப்பிவிட்டதாகவுமான ஒன்று. மற்றவர்களைப் பற்றித் தெரியாது, ஆனால் நான் ஆரம்பத்தில் இருந்தே இந்த பதினைந்து நாள் லதாக் பயணம் முழுக்க மொக்கையாக இருக்கப்போகிறது என்று பயந்து கொண்டே இருந்தேன், ஏனென்றால் சூப்பர் பைக்குகள் ஆகட்டும் சாதாரண பைக் ஆகட்டும் பிரச்சனை என்பது எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். ஏதாவது ஒரு பைக்கிற்கு பிரச்சனை வந்தால், அஷ்டே முடிந்தது; ஒரு நாள் பிளான் அவுட். பின்னர் லதாக் பயணத்தை எப்படித் திட்டமிட்டிருந்தோம் என்று சொல்லும் பொழுது ஒரு நாள் ஊற்றிக் கொண்டால் நடக்கும் பிரச்சனை புரியும். எனவே நான் அவர்கள் பைக்குகள் சண்டிகர் சென்றிருக்கும் என்று நினைக்கவேயில்லை பெங்களூரில் இருந்து கிளம்பும் பொழுது, அது அப்படியே நடந்தது. டெல்லியில் இருந்து ஒரு இண்டிகா பிடித்துக் கொண்டு சண்டிகர் கிளம்பினோம், வழியெல்லாம் சுனில் பைக்குகளைப் பற்றி பார்சல் அலுவலகத்தில் விசாரித்தபடி வந்தார்.

ஆனால் மற்றவர்கள் அப்படி இல்லையே, பைக் சென்று சேராவிட்டால் அன்றிரவு மணாலி சென்று சேரும் எண்ணம் பாழ் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். பைக்களை கொண்டு வந்த குட்டி 404 சின்ன ஆக்ஸிடெண்டில் சிக்கிக் கொண்டாதாகக் கேள்விப்பட்டதும் இவர்கள் தலைகீழாக நடக்கத் தொடங்கியிருந்தார்கள், சும்மா கிடையாது எல்லா வண்டிகளும், வண்டிக் காசுக்கு மட்டுமே லட்சங்களை அழுது வாங்கியவை. இருக்காதா பின்ன. சண்டிகரில் ஒரு ஹோட்டல் எடுத்துக் கொண்டு தங்கினோம், பார்சல் அனுப்பி வைத்த கம்பெனியின் தொலைபேசி அலைப்பிற்காகக் காத்திருந்த படி. டெல்லி - சண்டிகர் அதிக தொலைவு கிடையாது நாங்கள் மதிய சாப்பாடிற்கெல்லாம் சண்டிகர் வந்திருந்தோம். மதிய சாப்பாட்டை முடித்ததும், மேற்படி பைக் நண்பர்கள் தங்களுடைய பைக்குகளைத் தேடிச் சென்று வருவதாகச் சொல்லிக் கிளம்பினர். நான் ஹோட்டல் அறையில் சுகவாசியாக தூங்கிக் கொண்டிருந்தேன்.

திங்கட் கிழமை மாலை பைக்குகள் வந்து சேர்ந்திருந்தன, 404 கீழே விழுந்ததாலோ என்னவோ இவர்கள் வண்டியில் அத்தனை ஸ்க்ராட்ச், சுனிலின் லைட் ஒன்று உடைந்துவிட்டிருந்தது, இப்படி சின்னச் சின்ன பிரச்சனைகள். அந்த பார்சல் சர்வீஸ்காரனை நன்றாகத் திட்டித் தீர்த்துவிட்டு வண்டியை எடுத்து வந்திருந்தனர். யார் முகத்திலும் சந்தோஷமேயில்லை, பிரபு அப்படிப்பட்ட ஆள் கிடையாது என்பதால் அவன் மட்டும் சோகமாக இல்லாமல் இருக்க நாங்கள் இருவர் மட்டும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம், எனக்கு உள்ளூற ஆஹா மொத்த டிரிப்பும் இப்படி ஆப்பாவே ஆய்டப்போகுது என்ற கவலை அதிகமாயிருந்தது. அடுத்த நாள் காலை கிளம்பலாம் என்று முடிவானது அதாவது சனிக்கிழமை. இப்பொழுது லக்கேஜ்கள், பெட்ரோல், டெண்ட் வகையறாக்கள் மற்றும் எனக்காக ஒரு டாடா இண்டிகா புக் செய்து கொண்டோம் மணாலி வரைக்கும்.

இண்டிகா டிரைவர் குண்டா செகப்பா பழம் மாதிரி, அருமையா ஓட்டினார். எனக்கு எப்பொழுது டிரைவர்களுடன் ஒரு வேவ் லெந்த் அருமையாக செட் ஆகிவிடும் அந்து இந்த ட்ரிப் முழுவதுமே நடந்தது. சண்டிகரில் இருந்து பிலாஸ்பூர் செல்ல இரண்டு வழிகள் உண்டு, பஞ்சாப் வழியாக ஒன்று ஹரியானாவில் நுழைந்து பின்னர் வரும் வழி ஒன்று. நான் வந்த டாக்ஸிக்கு பஞ்சாப்பில் பர்மிட் இல்லாததால் பைக்காரர்களும் எங்கள் வண்டியும் இரண்டு வெவ்வேறு வழியாகச் செல்வதென்றும் பிலாஸ்பூரில் சேர்ந்து கொள்வதென்றும் முடிவெடுத்திருந்தோம். பைக் ஓட்டுபவர்களுக்கு காட்டு வழி பிடிக்கும் என்பதால் அவர்கள் அந்த வழியில் செல்லத் தீர்மானிக்க நாங்கள் தனியாகப் புறப்பட்டோம், சண்டிகரில் நாய்க்குட்டியொன்றைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த பிகர் ஒன்றை புகைப்படம் எடுத்ததைத் தவிர்த்து இதுவரை நான் படம் எதுவும் எடுத்திருக்கவில்லை. இந்த வழியில் கொஞ்சம் புகைப்படங்கள் எடுத்தாலும், நமக்காக காத்திருக்க வைக்க கூடாது என்று முன்னமே முடிவு செய்து வைத்திருந்ததால் அதிகம் நிறுத்தி புகைப்படம் எடுக்கவில்லை. டிரைவருடன் பேசியபடியே, இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி நாங்கள் பிலாஸ்பூர் சென்று சேர்ந்த பொழுது இவர்கள் முன்னவே வந்து சேர்ந்திருந்தார்கள், இடையில் ஒரு இடத்தில் புதிதாய்க் கட்டிய பாலம் இடிந்து விழுந்திருந்ததால், வண்டியை தண்ணிக்குள் ஓட்டி வேறு வந்து சேர்ந்திருந்தோம்.

இங்கே டிரைவர் ஹிமாச்சலில் இருந்து எதிர் திசையில் கீழிறங்கும் வண்டியிடம் சைகையிலே என்னவோ கேட்டபடியும் பதில் சொன்ன படியும் வந்து கொண்டிருந்தார். பின்னர் தான் தெரிந்தது RTO யாரும் வழியில் நிற்கிறார்களா என்பதையே கேட்டுக் கொண்டு வந்ததாகச் சொன்னார், பின்னர் எப்படி எல்லாம் காசு புடுங்குவார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். பிலாஸ்பூருக்கு பக்கத்தில், சாகர் வியூ என்ற பெயரைப் பார்த்ததும் தோசை கிடைக்கும் என்று நினைத்து சுனில் அங்கேயே டின்னர் முடித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் தோசை தவிர்த்து எல்லாம் கிடைத்தது. பிலாஸ்பூரில் தங்கிவிட்டு விடியற்காலை கிளம்பலாமா இல்லை இரவு பயணம் செய்யலாமா என்ற கேள்வி எழுந்தது, இந்தப் பயணத்திற்கு கிளம்பும் முன்னமே இரவு பயணம் வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தோம் என்றாலும் வண்டி வராததால் தாமதமான ஒருநாளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இரவே கிளம்பி மணாலி போய்ச்சேருவது என்று முடிவெடுத்தோம்.

எட்டு இல்லை ஒன்பது மணியிருக்கும் நாங்கள் பிலாஸ்பூரில் இருந்து கிளம்பிய பொழுது டிரைவர் எங்களுடன் சாப்பிடவில்லை என்பதால் நாங்கள் அதுவரை பைக்குகளுக்கு பின்னாலேயே வந்ததால் அவர் தன்னுடைய இன்ஜினையும் ஓட்டுநர் திறமையையும் நிரூபிக்க நினைத்து அடித்துக் கொண்டு பறந்தார். பெரும்பாலும் நான் என்பக்கத்து கண்ணாடியை ஏற்றி வைத்திருக்க மாட்டேன் அதனால் அந்த இரவில் ஹிமாச்சல் காற்று உடம்பில் பட்டுப் பரவி அதுவரை எங்கோ அடைந்து போயிருந்த பயண உற்சாகம் நிரம்பி வழியத் தொடங்கியிருந்தது என்னிடம். அவருக்குத் தெரிந்த ஒரு ஹோட்டல் அருகில் நிறுத்திவிட்டு அவர் சாப்பிட நான் ஒரு சாயா அடிக்க நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள் அவர்கள் இடையில் ஒரு அணையில் நிறுத்திப் புகைப்படம் எடுத்துவிட்டு பின்னால் வந்தார்கள் தானென்றாலும் இண்டிகாவை இவர் ஓட்டி வந்தது வேகமாய், எப்பொழுது டிரைவர் வேகமாய் வண்டி ஓட்டினால் நான் மெதுவாய் ஓட்டுங்கள் என்று சொல்லவே மாட்டேன் அதை அவர் முழுவதுமாக அனுபவித்தார்.

சுந்தர் நகர், மாண்டி, பாண்டூ வழியாக குல்லு வரும் வரை பைக்களுக்கும் இண்டிகா டிரைவருக்கும் நல்ல காம்படிஷன் சென்று கொண்டிருந்தது. நானாய் எதுவும் சொல்லாமல் மௌனமாய் அதை ரசித்துக் கொண்டிருந்தேன். சில இடங்களில் வேறு வழி எடுக்க வேண்டிய இடங்களில் மாற்றிச் சென்றுவிடாமல் இருக்கும் பொருட்டு அவர்கள் முந்திக் கொண்டு செல்வது என்று அந்த மொத்த இரவும் இப்படியே சென்றது. குல்லுவில் தங்குவதா மணாலி சென்றுவிடலாமா என்ற கேள்வி வந்தது. சண்டிகரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் ஏறத்தொடங்கிய குளிர் நாங்கள் குல்லு வரும் பொழுதெல்லாம் கொஞ்சம் தாங்க முடியாததாய் ஆகியிருந்தது குல்லுவை அடைந்த பொழுது பதினொன்று மணியிருக்கும். பின்னர் மணாலியே போய்விடலாம் என்று நினைத்து அங்கிருந்து ஒரு புஷ். நாங்கள் இடம் கிடைக்கும் என்று நினைத்துச் சென்ற இடத்தில் அறைகள் கிடைக்காமல் பின்னல் Hotel Piccadillyல் தங்கினோம்.

ஒரேயடியாய் சண்டிகரில் இருந்து மணாலி வந்ததால் கொஞ்சம் போல் உடம்பில் எல்லாம் வலியிருந்தது என்றாலும் அதுவரை எடுத்தப் புகைப்படங்களை சுனிலின் லாப்டாபிற்கும் என்னுடைய எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கிற்கும் மாற்றிவிட்டு உறங்கச் சென்றோம்.

பயணத்தில் எடுத்த புகைப்படங்கள் கொஞ்சம்.

Ladakh Landscapes

Ladakh Landscapes

Ladakh Landscapes

IMG_8824

IMG_8812

Ladakh Landscapes

Ladakh Landscapes

Ladakh Landscapes

Ladakh Landscapes

Ladakh Landscapes


தொடரும்...

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In நட்சத்திரம்

நட்சத்திர வாரம்

இணையத்தில் தமிழில் எழுத ஆரம்பித்து நான்கு-ஐந்து வருடங்கள் இருக்குமாயிருக்கும். அத்தனை எழுதுவதில்லை தற்சமயங்களில் என்பதைப் போல் அத்தனை வாசிப்பதுமில்லை, எப்பொழுதாவது தீவிரம் வந்தது போல் இரண்டு மூன்று வாரங்கள் எழுதமுடிவதுண்டு, தொடர முடிவதுண்டு அவ்வளவே. டிவிட்டரில் கொஞ்சக் காலமாய் எழுதுவதாலோ என்னவோ இப்பொழுதெல்லாம் வளவள என்று எழுதமுடிவதில்லை. சரி இந்த வாரம் கொஞ்சம் தொடர்ச்சியாக எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம். நட்சத்திரமாய் இருக்கச் சம்மதமா என்று கேட்டு வந்த மெயிலைப் பார்த்ததும் கொஞ்சம் சந்தேகமாய் இருந்தது தான் என்றாலும், சரி நம்மையும் இன்னமும் மதிக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது கண்களில் நீர் கட்டிக் கொண்டது.

எதெல்லாம் எழுதலாம் என்பதைப் பற்றி பெரிதாய் முடிவு செய்ய முடியவில்லை. இன்னமுமே கூட யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எத்தனை வித்தியாசமாய் எழுத முடியும் என்று தெரியைல்லை, வித்தியாசமாய் எழுதவேண்டும் என்பதில் கூட பெரிய விருப்பம் இல்லை இப்பொழுது. காலையில் புதிதாய் எழுதிய பதிவொன்றும் மாலையில் முன்பெழுதிய பதிவொன்றை மறுபதிவாகவும் தள்ளிவிடலாம் என்று நினைத்திருக்கிறேன். கீழிருப்பது முந்தைய முறை தமிழ்மண நட்சத்திரமாய் இருந்த பொழுது எழுதிய இடுகைகள்.

Read More

Share Tweet Pin It +1

29 Comments

In ரமேஷ் - பிரேம்

கருத்து சுதந்திரமும் பின் நவீனத்துவமும்

எழுத்து என்பது ஒரு வகையில் குற்றச்செயலாக உள்ளது. தான் எழுதும் பகுக்கும் பிரச்சனை நிகழ்வில் உள்ள பொழுது அதைச் சொல்லாடலாக அறிவதன் மூலமும் அதைப் பற்றிய சொல்லாடலை ஆய்வதன் மூலமும் அதற்கப்பாலான ஒரு வெளியை உற்பத்தி செய்து அதற்குள் அதன் சுதந்திரத்தையும் அதன் மூலம் ஒரு அதிகாரத்தையும் செயல்படுத்துகிறது. எழுதும் தன்னிலை இந்த இடத்தில் தப்பிக்கும் தன்னிலையாகவும் எழுதப்படும் தன்னிலைகளுக்கு எதிரான குற்றத்தை நிகழ்த்துவதாகவும் உள்ளது பிரதிநிதித்துவ சொல்லாடல்களைக் கொண்ட பிரதிகள் இந்த இடத்தில் மிகப்பெரும் வன்முறையாக உள்ளது.

குற்றவியல் என்பது சமூகக் கட்டமைப்பின் மிக மையமான கூறாக இருக்கும் நிலையில் எழுதுதல் என்பது தனது குற்றச்செயலைப்பற்றிய மறு சொல்லாடலை உற்பத்தி செய்வதன் மூலம் குற்றம் மற்றும் அதிகாரம் பற்றிய ஒரு விளக்க நிகழ்த்துதலைச் செய்து, மறு தளத்தில் வாசிப்பு என்பதை அதன் எதிர்வாக மாற்றும் சாத்தியங்களையும் உள்ளடக்கி உள்ளது.

எந்த பொருளும் ஏதோ ஒரு அர்த்தத்தை அடைவதற்காக உள்ளது என்பது கருத்தியலின் அதிகபட்ச வன்முறையாகும். வாழ்க்கை அர்த்தம் சாராம்சம் என்ற அனைத்தும் சூன்யத்தைப் போல் எல்லையற்றதும் எல்லையின்மை போல் சூன்யமுமாகவே உள்ளன.

மொழியின் மூலமாக மட்டுமே கட்டப்பட்ட, சமூகவெளிக்குள் செயல்படும் அனைத்தும் மொழிபுகளாக உள்ளன, இதில் உண்மை பொய்மை என்ற எதிர்மைகள் ஒரே பொருளின் இரண்டு பரிமாணங்கள். பரிமாணங்கள் பெருகிவிட்ட நம் காலத்தில் உண்மை என்பது இனி பொய்மையான ஒன்றே.

இவைகள் ரமேஷ் பிரேமின் இங்கும் அங்கும் உடல்கள் அங்கும் இங்கும் கதைகள் என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள். எனக்கு பெரும்பாலும் இவர்களின் எழுத்துக்களைப் பற்றிய நல்ல அறிமுகம் கிடைக்கவில்லை. ஆனாலும் எனி இந்தியனால் புனேவில் இறக்கி படித்த பொழுது. எனக்காய் தோன்றியது ஒரு நல்ல அறிமுகம். பின்னர் கஷ்டப்பட்டு படித்து புரிந்துகொள்ளத் தொடங்கினேன், மனுஷ்ய புத்திரனால் காலச்சுவட்டின் பதிப்பகத்திற்கு பரிந்துரைக்கப் படமுடியாதவையாக இந்த நாவல்கள் இருந்தன என்னும் முன்னுரையும். தமிழினி பதிப்பகத்தின் வசந்தகுமார் இந்த புத்தகத்துடன்(இன்னும் சரியாகச் சொல்லப்போனால் நாவல்களுடன்) தன்னால் உறவுகொள்ள முடியவில்லை என்று சொல்லி திருப்பியனுப்பப்பட்டவை என்பதையும் படித்தபின் அப்படியென்னத்தான் எழுதியிருக்கிறார்கள் என்ற எண்ணம் மேலோங்க படிக்கத் தொடங்கினேன் முதலில்.

சாருவும், தி.கண்ணனும் கூட இந்த நாவல்களை புத்தகவடிவமாக்க நினைத்தார்கள் என்றும் படித்தேன். பின்னர் புரிந்தது சாரு ஏன் இதனை 'ஆய்வி'ற்கும், 'ங்' ற்கும் பரிந்துரைத்து தோல்வியடைந்தார் என்பது.

"பின்நவீனத்துவம், இன்று தமிழிலக்கியப் போக்கில் ஏற்பட்டிருக்கும் தவிர்க்கமுடியாத வளர்ச்சி, இவ்வித வளர்ச்சிக்கு முழு ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர்கள் ரமேஷ்-பிரேம். இவர்கள் இலக்கியத்தின் வளர்ச்சிப்போக்கை அலசி ஆராய்ந்து சரியான பாதையில் தமிழிலக்கியம் வளர தங்கள் பங்களிப்பை அளித்து வருபவர்கள். இன்று ஏற்பட்டிருக்கும் பின்நவீனத்துவ படைப்பிலக்கியத்தின் தேவையை இக்குறுநாவல்களின் தொகுதி மூலமாக பூர்த்தி செய்கிறார்கள்". என்ற புதுப்புனல் குறிப்புடன் வெளிவந்திருக்கும் இந்த "கனவில் பெய்த மழைக்குறிப்பைப் பற்றிய இசைக் குறிப்புகள்" புத்தகம் சொல்லப்போனால் என் படிப்புலக வரலாற்றில் ஒரு பகுதியாகப் பார்க்கிறேன்.

புரியாமல் எழுதுவது பின் நவீனத்துவம் என்றும் இல்லாவிட்டால் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் எழுதுவது தான் பின் நவீனத்துவம் என்று சொல்பவர்களுக்கான பதில் என்னிடம் கிடையாது.

பிரச்சனைகளைப் பற்றி ப்ளாக்குகளின் நடக்கும் பலவிவாதங்களை பார்த்திருக்கிறேன், அதைப் பற்றி நான் மனதில் நினைத்துக் கொண்டிருந்தவைகளை ரமேஷ்-பிரேமின் இந்த வார்த்தைகளின் பின்னால் நான் உணர்ந்தேன். என் சாப்ட்வேர் வாழ்வில் அடிக்கடி இந்த வார்த்தைப் பிரயோகங்கள் உபயோகப்படுத்தப்ப்டும். "Why you are trying to invend the wheel once again." அதே போல் என் எண்ணத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள் கிடைத்த பிறகும் அதை உற்பத்தி செய்ய மனம்வராததால் இப்படி.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சினிமா த்ரிஷா மாமி ஜொள்ளு

சர்வம்

சர்வம் படத்திற்குச் சென்றிருந்தேன், விஷ்ணுவர்த்தன் ஆர்யா என்பதற்காக மட்டுமல்ல த்ரிஷா மாமிக்காகவும் தான். மற்றவர்கள் ஏமாற்றினார்களா மாற்றவில்லையா என்பதைத் தவிர்த்து த்ரிஷா மாமி ஏமாற்றவில்லை என்பதை மட்டும் தெளிவாகச் சொல்லிக் கொள்ள முடியும். அவர் அணிந்திருக்கும் ஆடைகள் அனைத்தும் அற்புதமாக இருக்கிறது, நல்ல செலக்ஷன். ஆனாலும் கூட வாரணம் ஆயிரம் ஷமீரா ரெட்டி தான் பர்ஸ்ட், அடுத்த இடத்திற்கு வேண்டுமானால் மாமியை வைத்துக் கொள்ளலாம். எனக்கு கல்யாணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி காதோரம் கசிந்தது, ஆனாலும் ஜொள்விடும் புத்தி போகவில்லை, கல்யாணத்திற்குப் பிறகும் போகாதென்றே நினைக்கிறேன். சரி ஜொள்ளு விடுவதைத் தவிர்த்துவிட்டு படத்திற்கு வருகிறேன்.



விஷ்ணுவர்த்தனிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை, ஆனால் அவருடைய வெற்றியே இதில் தான் இருக்கிறதென்பேன். வித்தியாசமான கதை, பில்லாவிற்குப் பிறகு இப்படி ஒரு படம். எப்பொழுதும் சொல்வது தான் என்றாலும் இன்னொரு முறை, பாடல்களை வெட்டிவிட்டு இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால் இன்னமும் நன்றாக வந்திருக்கக் கூடிய படம். இப்படி ஒரு படத்தை எடுக்கத் துணிந்ததற்காகவே விஷ்ணுவர்த்தனைப் பாராட்டலாம், இடைவேளைக்கு முன்னால் த்ரிஷா மாமி போன்ற ஹீரோயினைக் கொல்ல எத்தனை இயக்குநர்களுக்கு மனம் வரும். த்ரிஷா பெயர் போட்டதும் தியேட்டரில் ஏக விசில், கவனிக்க நான் பார்த்தது ஃபோரம் தியேட்டரில் ஆடிட்டோரியம் ஒன்றில். இன்றைக்கு ஹவுஸ்புல் தான். தைரியம் தான் இயக்குநருக்கு. இடைவேளைக்குப் பிறகு கற்பனை, பாடல் என்று கொஞ்சம் இடைச்செறுகளாக, த்ரிஷாவை நுழைத்தாலுமே கூட.

விபத்தென்பது எப்பொழுதும் கொஞ்சம் வருத்தம் வேதனையை அதிகம் கொடுக்கக்கூடியதுதான், படம் பார்த்ததும் சட்டென்று மனதிற்கு வரும் 21 க்ராம்ஸ் ஆகட்டும் அமோரஸ் பெர்ரோஸ் ஆகட்டும் விபத்தை மையமாக வைத்து ஆகக்கோர்த்த கதை தான், அமோரஸ் பெர்ரோஸில் தான் ஆசை ஆசையாய் வளர்த்த அத்தனை நாய்களையும் பாவம் என்று சொல்லி அழைத்து வந்த நாய் கடித்துவிட்டதை உணரும் இடம் அற்புதமான பொழுது. எத்தனையோ நாள் எத்தனையோ தடவைகள் நாய் ஒன்றைப் பார்க்கும் பொழுதோ இல்லை நாம் பெரிய சொத்தென்று நினைத்து வந்த ஒன்று இல்லாமல் போன பொழுது மனதைத் தேற்றிக் கொள்ள அந்தப் படத்தை நினைத்துப் பார்த்திருக்கிறேன். படத்தின் கதை புரிந்துவிட்டது என்று நான் நினைத்த நான்கு தடவைகளுமே தவறாகவே முடிந்தது. நல்ல திறமை இயக்குநருக்கு.

சக்கரவர்த்தியா அது என்னவோ போங்க, ப்ர்த்திவிராஜின் அண்ணன் என்று கொஞ்சமே கொஞ்சம் ஆட்கள். தங்கள் பார்ட்டை நன்றாகச் செய்திருக்கிறார்கள், சக்கரவர்த்தி ஒரு ரவுண்ட் வருவாராயிருக்கும் வில்லான நடிக்க விருப்பப்பட்டால் தமிழில். பார்க்கலாம்.

ஆர்யாவிற்கு நான் கடவுளிற்கு பிறகு வரும் படம், நிறைய ஸ்கோப் இருக்கிற படம். கொஞ்சமாய்ச் செய்திருக்கிறார். எத்தனைப் பேருக்கு இடைவேளைக்கு முன் அழகான காதலியை இழக்கும் வாய்ப்பு கிடைக்கும். ம்ம்ம் இன்னும் நன்றாய்ச் செய்திருக்கலாம். அலட்டலில்லாமல், நடிக்கிறேன் பார் என்கிற திமிரில்லாமல் நடிக்கக்கூடியவர் என்றே நினைத்து வந்திருக்கிறேன் ஆர்யாவைப் பற்றி. இந்தப் படமும் அதற்கு இன்னொரு உதாரணம்.

எக்ஸாக்டா நாம் விரும்பும் ஒரு அழகான டம்ப் ஹீரோயினாக த்ரிஷா, கேரக்டர் படி, என்ன தான் டாக்டராயிருந்தாலும் சட்டென்று காதலில் விழுகிறார். முன்பே சொன்னது போல் டாக்டர்களுக்கான காஷ்ட்யூம் போட்ட வலம் வர வைக்க நிறைய யோசித்திருக்கிறார்கள், ஆடைகளில் வித்தியாசம் தெரிகிறது. மேக்கப் முழுவதும் அப்பிக் கொண்டு ஆடும் 'ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கலாமா' வை விடவும் கொஞ்சம் மேக்கப்பில் அழகாகவே இருக்கிறார். மாமியைப் பார்க்கும் பொழுது ஆர்யாவிற்கு மட்டுமல்ல நமக்கும் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன . என்ன செய்ய வயசும் காலமும் அப்படி, என்னமோ போங்க மனசை விட்டே போக மாட்டேங்குறாங்க. த்ரிஷாவைப் போல் பொண்ணு பாருன்னு சொன்னா செருப்படி விழும் முன்னமே கொஞ்சம் கலரா பாருங்கன்னு சொன்னா நீ என்னா கலரு உனக்கேத்த மாதிரி தான் பார்க்க முடியும்னு முகத்திலடித்த அனுபவம் வேறு.

படத்தின் உண்மையான ஹீரோ நீரவ் ஷா தான், செக்ஸி period. அவ்வளவுதான், மனுஷன் அனுபவித்து செய்கிறார். நல்லாயிருக்குது சார். இதில் படம் இடைவேளைக்குப் பின் மூணாறுக்கு போய்விடுகிறது. கேட்கணுமா தலைவர் படம் காண்பிக்கிறார், ஒவ்வொரு காட்சியும் செதுக்கியிருக்கிறார். எங்கடா சில்லவுடைக் காணோம் என்று தேடிக் கொண்டிருந்தேன் ஒரு பாட்டில் அழகாக உபயோகப்படுத்தியிருந்தார். ஆர்யாவும் அந்த குட்டீஸும் ரஹ்மான் இளையராஜாவைப் பற்றி சண்டை போட்டுக் கொள்ளும் பொழுது சட்டென்றூ புருனோ நினைவு வந்தது. இரண்டு முறை வழுவாய் தலையை ஆட்டி அந்த எண்ணத்திலிருந்து வெளியில் வந்தேன். பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. படத்தில் பறவைகளை உபயோகப்படுத்தியிருக்கும் விதம் வித்தியாசமாக நன்றாக இருந்தது, எனக்கு திரைப்படங்களில் பறவை என்று சொன்னால் சட்டென்று நினைவுக்கு வருவது மிஷன் இம்பாஸிபிள் இரண்டில் டாம் க்ரூஸ் க்ளைமாக்ஸில் வேகமாக வரும் பொழுது சட்டென்று பறக்கும் புறாக்கள் நினைவு தான் வரும். இனி ஆர்யா மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்கும் பொழுது பறந்து வந்து உட்காரும் காட்சி நினைவுக்கு வரலாம்.

அந்த நாயைப் பார்த்தால் இயல்பாய் வரவேண்டிய பயம் எனக்கு வரவில்லை காரணம் நாய் ஒன்றை அருகில் இருந்து வளர்த்த காரணமாய் தான் இருக்கணும். எவ்வளவு குரைத்தாலும் ச்ச புள்ளைய இப்படி குரைக்க விடுறானுங்களே பாவின்னு தான் நினைக்கத் தோணுது. ஒட்டுமொத்தமாகச் சொல்வதென்றால் தர அளவில் மத்திய அளவுக்கான படம் தான், ஆனால் நீரவ் ஷாவிற்காகவோ இல்லை த்ரிஷா மாமிக்காகவோ நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In சிறுகதை

மைதிலி

"டேய் மைதிலிக்கு கல்யாணமாம்டா. உனக்குத்தான் மொதப்பத்திரக்கை வச்சிரிக்கா ஒழுங்கு மரியாதையா வந்து சேரு... அவளைக் கல்யாணம் தான் பண்ணிக்க மாட்டேன்னுட்ட, கல்யாணத்தை பார்க்கிறதுக்காகவாவது வந்துசேரு."

அம்மாவிற்கு பச்சை, மஞ்சள், சிகப்பு என்ற மூன்று விஷயங்களில் அடங்கிவிடும், என்னுடைய வேலையின் தீவிரம் புரிந்ததில்லை, உங்கக்காவிற்கு மாப்பிள்ளை பாத்திருக்கோம் வந்து சேரு, சித்திக்கு உடம்புக்கு சரியில்லையாம் வந்து சேரு, அவ்வளவுதான் அமேரிக்காவிலிருந்து நான் கிளம்பிவிட வேண்டும், பணம் என்பது இரண்டாவது பிரச்சனைதான். நான் அங்கில்லாத இரண்டொரு நாட்களில், பச்சையிலிருந்து மஞ்சளுக்கு தாவி, சில நாட்களில் சிகப்பில் படுத்துக்கொள்ளும் ப்ரொஜக்ட் தான் முதல் பிரச்சனை. இந்த முறை எக்காரணமாக இருந்தாலும் வந்துவிடுவேன் என்று அம்மாவிற்கு தெரிந்திருக்கும், ஆனாலும் உறுதி செய்து கொள்வதற்காகத்தான் சொல்லியிருப்பார்கள்.

மைதிலி இந்தப் பெயரை நினைக்கும் பொழுதெல்லாம் மனதிற்கு இயல்பாய் ஒரு மரியாதை வந்துவிடும். சாமி, பூதம், ஹிப்னாட்டிஸம், மனசைப் படிக்கிறது இதிலெல்லாம் எனக்கு எப்பொழுதுமே நம்பிக்கையிருந்ததில்லை. ஆனால் மைதிலியுடன் பழக ஆரம்பித்ததில் இருந்து இப்படிக்கூட ஒருவரால் மற்றவருடைய மனதை புரிந்து கொள்ள முடியுமா என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.

"டேய் அதோ வர்றாளே அந்த பச்சக் கலர் சுகிதார் அவக்கிட்ட போய் ஐ லவ் யூன்னு சொல்லுடா." ரேகிங் செய்வதாக சொல்லிக்கொண்டு சீனியர் ஸ்டுடண்ட் இப்படி செய்யச் சொன்னதும் திரும்பிப்பார்த்தவனுக்கு அங்கே வந்து கொண்டிருந்த பச்சைக் கலர் சுகிதாரைப் பார்த்தால் பரிதாபமாகவும் வேதனையாகவும் இருந்தது. இன்னும் நான்காண்டுகள் இந்தக் கல்லூரியில் குப்பைக் கொட்ட வேண்டுமே என நினைத்தவனாய், பச்சையிடம் பச்சையாகச் சொல்லப் போக கொஞ்சமும் முகம் சுழிக்காதவளாய் என்னைச் சட்டை செய்யாமல் விலகிப்போனது முதலில் ஆச்சர்யப்படுத்தியது என்றாலும் பின்னர் அவளைப் பற்றி கொஞ்சம் தெரிந்ததுமே, அவளுடைய மனம் கணக்குப்போடும் வேகத்திற்கு அன்றைக்கு நான் என் சீனியர்களிடம் இருந்து அரக்க பறக்க வேகமாய் வந்தது, முகத்தில் மறைக்க நினைத்தாலும் முடியாமல் பெருகிவந்து கொண்டிருந்த வியர்வை, அதுவரை பார்த்திராத ஒரு பெண்ணிடம் ஐ லவ் யூ சொன்னது இதையெல்லாம் வைத்து பிண்ணனியை அவள் ஊகித்திருக்காவிட்டால் தான் தவறு.

ரோட்டில் டுவீலர் ஓட்டும் சமயங்களில் எப்பொழுதுமே லைட்டை High Beam போடாமலிருக்கும் நான் சில சமயத்தில் மட்டும் போட்டு, பார்க்கும் அளவிற்கு சாதாரணமானவன் தான். திரிஷாவின் பிட்டு படம் வெளியாகியிருந்த சமயத்தில் அது திரிஷாவா இல்லையா என்பதைப்பற்றி பிஎச்டி செய்யும் அளவிற்கு ஆராய்ந்து விஷயத்தை சேகரித்து வைத்திருந்தவன். இதிலெல்லாம் தவறில்லை தான், ஆனால் இதையெல்லாம் வைத்துக் கொண்டும் நான் அசாதாரணமானவன் என்று நினைத்துக் கொண்டிருந்ததைத் தான் போட்டு உடைத்தாள் மைதிலி.

நான் ஆங்கிலத்தில் ஜீரோவாக இருந்து வந்ததற்கு பெரும்பாலும் சொல்லும் காரணம் தமிழில் ஹீரோ என்பது, அதையும் போட்டுடைத்தாள் ஒருநாள், ரேகிங் தந்த உரிமையிலும் சாரி சொல்லும் சாக்கிலும் சென்ற என்னிடம் மிகச்சாதாரணமாக பேசத் தொடங்க, நான் என்னைப் பற்றி பெருமை பீற்றத் தொடங்கினேன், டிஸ்டிரிக்ட் பர்ஸ்ட், எல்லாவற்றிற்கும் வைரமுத்துவின் சிலவரிகளை எடுத்துவிடும் சாகஸம், ல, ள, ழ வில் காட்டும் வித்தியாசம், எல்லாவற்றையும் சிறிய புன்சிரிப்புடன் புறக்கணித்தவள். தமிழ் இலக்கியத்தைப் பற்றிக் கேட்க நான், சுஜாதாவையும் பாலாவையும் பொன்னியின் செல்வனையும் வைரமுத்துவையும் பற்றிச் சொல்ல, புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது.

"அப்போ சுஜாதா எழுதறதெல்லாம் இலக்கியமே கிடையாதுங்கிறீங்களா?" என்று கேட்டு வந்த என்னை "ஏன் மைதிலி சுஜாதா இப்படியெல்லாம் எழுத மாட்டேங்கிறார்." என்று கேட்க வைத்தில் இருந்த சாமர்த்தியம் அத்துனையும் மைதிலியுடையதே, இந்த விஷயத்தை சாதாரணமாக தமிழ் இலக்கியத்தின் தடம் அறிந்த யாருமே செய்திருக்க முடியும் ஆனால் மைதிலியின் சிறப்பே, இதுபோல் நான் தமிழிலும் தெரிந்து கொண்டது மிகச்சாதாரணமானதே எனத்தெரிந்ததும் எனக்குள் வந்த தாழ்வுமனப்பான்மையை வந்த இடம் தெரியாமல் ஆக்கமுடிந்ததுதான். இது ஒரு பக்கமாகவே இருந்துவிடாமல் அவளைப்பற்றிய என் கருத்துக்களை மறைக்காமல் சொல்லும் உரிமையும் இருந்தது.

"மைதிலி இனிமேல் நீ என் கூட டுவீலரில் வரவேண்டாம்."

நான் சொன்ன இந்த விஷயத்தை மட்டும் வைத்துக்கொண்டே நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்து கொண்டிருந்தாலும்,

"ஏன்?" என்று அவள் சிரித்துக்கொண்டே கேட்டது, நான் சொல்லவருவதை என் வாயால் கேட்கும்

"இல்லை எங்கே மேல பட்டுடுமோன்னு வண்டியின் பின்னாடி உட்கார்ந்திருக்கிறதும், சில நேரம் பட்டுவிடக்கூடிய சமயங்களில் முதுகில் கையை வைத்து தடுத்துற்றதும் கஷ்டமாயிருக்கு, நான் ஒன்னும் அவ்வளவு நல்ல பிள்ளைக் கிடையாதுதான் அதைப்பத்தி ஒன்னும் பேசவேண்டாம், இது சரியா படலை. நான் என்னமோ தப்பு செய்ற மாதிரி ஒரு ப்லீங் வருது தெரியுமா?"

பலமாகச் சிரித்தவள்,

"தெரியும் நீ இதைப் பத்தி பேசுவேன்னு நிச்சயமாத் தெரியும். என்னத்தைச் சொல்லச் சொல்ற, எனக்கென்னமோ உரசிக்கிட்டுப் போறது பிடிக்காதுன்னு வைச்சிக்கோயேன், நீ மட்டுமில்லை, கல்யாணம் ஆனதுக்குப்பிறகு என் புருஷன் கூட போனாலும் இப்படித்தான் போவேன். அதுமட்டும் நிச்சயம்."

சொல்லிவிட்டு நிறுத்தியவள்,

"அப்படியில்லாட்டி இப்படி வைச்சுக்கோயேன், வண்டியிலப் போறப்ப எங்கப் பட்டுற்ற மாதிரி இருந்தா, சின்னப் பையனாச்சே எதாவது கனாக் கண்டுக்கிட்டே வண்டியைக் குடை சாச்சிடுவான்னு பயப்படுறனோ என்னவோ?" கேட்டுவிட்டு பலமாகச் சிரித்தாள், நான் மெதுவாக,

"அப்படியே பட்டுட்டாலும்..." சொல்ல,

நான் எதைச் சொல்ல வர்றேன்னு தெரிந்ததால் அந்தப் பேச்சை அப்படியே விட்டுவிட்டாள். இதே போன்றதொரு உரையாடல் இதற்கு முன்பொறுமுறை வந்திருக்கிறது,

"ஏய் உன் ப்ரண்ட்ஸ் எல்லாம் என்னைப் பத்தி தப்பா பேசுறாங்க."

"என்ன பேசுறாங்க."

"அயர்ன் பாக்ஸ் அப்படின்னு..."

நான் உண்மையில் மைதிலி என்னிடம் இதைப்பற்றிய பேச்சை எடுக்க மாட்டாள் என்றே நினைத்தேன், பல சமயங்களில் எங்கள் பேச்சு பல தளங்களில் பரவியிருக்கும் நேரங்களில் கூட தவறான திசையில் செல்ல ஆரம்பிக்கும் பொழுது சில நேரங்களில் முதலில் முற்றுப்புள்ளி வைப்பவள் மைதிலியாகத்தான் இருக்கும். அதெல்லாம் கொஞ்ச காலம் நாங்கள் பழக ஆரம்பித்த கொஞ்ச காலம் வரைதான் பின்னர் சிறிது பழக்கமான பிறகு, அதெல்லாம் போய் இருந்தது, நான் அந்தப் பக்கம் திரும்பிக்கொண்டு,

"என்னை என்ன பண்ணச் சொல்ற மைதிலி, பசங்கக் கிட்ட அப்படி பேசாதீங்கடான்னு சொல்லவா, இல்லை அவங்க ப்ரண்ட்ஷிப்பை கட் பண்ணச் சொல்றியா இது இரண்டுமே என்னால முடியாதுன்னு உனக்குத் தெரியும். எல்லாரும் என்னை மாதிரி நல்லவங்களா இருப்பாங்கன்னு நீ எப்படி மைதிலி நினைக்கலாம். மற்றபடிக்கு நான் அதை எப்பவுமே ஒரு இஷ்யுவா பார்க்கலை..." என்று பிம்பத்தை உருவாக்க நினைத்து என்னென்னவோ பிதற்ற, கன்னத்தில் இடித்தவள்.

"ரொம்பத்தான், அப்ப அவங்க மேலெல்லாம் தப்பேயில்லேங்கிறியா?"

இதுபோல் பலசமயம் அவள் என்னிடம் கேட்ட விடையில்லா கேள்விகளுக்கு கஷ்டப்பட்டு விடைதர என்றுமே நினைத்ததில்லை, அப்படித்தான் கல்லூரியின் கடைசி வருடத்தில் ஒரு நாள் அவள் கேட்ட அந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தேன்.

"ஏண்டா உங்கம்மாக்கிட்ட என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டியாமே, மோகனா அக்கா சொன்னாங்க." நான் பதிலே சொல்லவில்லை. ஆனால் எங்கம்மாவிடம் நான் சொன்ன விளக்கம் அவள் காதிற்கு வந்திருக்கும் என்று தெரியும் எனக்கு,

சாதாரணமாக பின்னால் சுற்றிக் கொண்டிருந்த பெண்களைப்பற்றியே அம்மாவிடம் சொல்லிய எனக்கு மைதிலியைப் பற்றி வீட்டில் சொல்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. அம்மாவிற்கும் மைதிலியை பிடித்திருந்தது, ஆரம்பத்திலிருந்தே என்னைப் பற்றிய பெரும்பாலான முடிவுகளை பெண்கள் தான் எடுத்துவந்தார்கள்.

"டேய், உன் ஹைட்டுக்கு உனக்கு பேஸ்கெட் பால் நல்லாயிருக்காது, வாலிபால் கோச்சிங்கில் சேர்ந்துக்கோயேன்." அம்மா சொல்ல, ஆசை ஆசையாய் பேஸ்கெட்பால் கோச்சிங்கில் சேர இருந்தவன், மைக்கேல் ஜோர்டன் மற்றும் இன்னபிற ஆட்களை புறந்தள்ளிவிட்டு வாலிபாலில் சேர்ந்தேன்.

"தம்பி மேக்ஸ் உனக்கு ரொம்ப பிடிச்சிருந்தாலும் அதில பெரிய ஆளா வர்றதுக்கு நிறைய உழைக்கணும் அதை நீ பண்ணவே மாட்ட, அதனால சும்மா பீலா உட்டுக்கிட்டு அலையாம, கம்ப்யூட்டர்ஸ்ல சேர்ந்துறு. நல்ல பேக்ரவுண்டும் இருக்கு சாப்ட்வேர்ல பெரிய ஆளா சீக்கிரமே வந்திருவே." கணக்கில் பத்தாம் வகுப்பிலும், பன்னிரெண்டாம் வகுப்பிலும் வாங்கிய சென்டம் அதன் பேரில் ஆர்வத்தைத் தூண்ட ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கப்பட்டு கம்ப்யூட்டர்ஸில் சேர்ந்தேன்.

"தாஸ் ஜாவாவில் எல்லாம் ப்ரொக்கிராம் எழுத ஆயிரம் பேர் வருவான், விண்டோஸ், லினக்ஸில் டிவைஸ் டிரைவர்ஸ் எழுதுறதுக்கு ஆளுங்களே கம்மியாத்தான் இருப்பாங்க, உனக்கு இருக்குற அறிவுக்கு நீ பெரிய ஆளா வருவ அந்த பீல்டில், நான் நினைத்தால் இப்ப படிக்க முடியுமா சொல்லு." மைதிலி சொல்ல, ஆசை ஆசையாய் திட்டம் போட்டு வைத்திருந்த ஜாவா ஜேடுஈ ப்ரோஜெக்ட்டை கைகழுவினேன்.

இதில் அம்மா அக்காவிற்கு சிறிது அதிர்ச்சியிருந்தாலும் சந்தோஷம் தான், எங்கள் குடும்பமும் மைதிலி குடும்பமும் பேமிலி பிரண்ட்ஸ்களா ஆனதில் இருந்து வாரக்கடைசி நாட்கள் பார்ட்டிதான். ஆனாலும் மைதிலியின் அம்மா, எங்க அம்மாக்கிட்ட கேட்டு அம்மா என்னிடம் கேட்டதும் நான் முற்றிலுமாக மறுத்துவிட்டேன்.

"அம்மா மைதிலியை என் பொண்டாட்டியா நினைத்துக் கூட பார்க்கமுடியலை. அவ எனக்கு ஒரு நல்ல பிரண்ட் அவ்வளவுதான். இப்ப நம்ம கிரி மாமா பெண்ணையே எடுத்துக்கோயேன். என் கூடவேத்தான் படித்து வளர்ந்தாள் அவளையும் என்னால பொண்டாட்டியா நினைத்து பார்க்க முடியவில்லை. அது ஏன்னு தெரியலை."

என்னை ஓட்டுவதற்கு மைதிலிக்கு இது ஒரு சாதகமா போய்விட்டது.

"உனக்கெல்லாம் கடலை போடுவதற்கு என்னை மாதிரி பொண்ணு வேணும், கல்யாணத்துக்கு வேண்டாம் அப்படித்தானே. தலையில கொட்டி, தப்பு பண்ணா தப்பை சுட்டிக்காட்டி இதெல்லாம் வேண்டாம், உனக்கும், உனக்கும் நீ சொல்றத கேட்கிற மாதிரி பொண்ணுதான் வேணும் அதானே..."

பின்னர் டிஷர்ட்டை இழுத்து விட்டுக்கொண்டே,

"இல்லை வேற எதாவது காரணம் இருக்கா?" சிரித்துக் கொண்டே கேட்க,

"அசிங்கமா பேசின பல்லை உடைச்சிருவேன்."

உண்மையிலேயே கோபமாக பதில் சொன்னேன்.

"சரி, விஜய் படம் ஏதோ வந்திருக்காம் கலையரங்கத்தில் வர்றியா?"

அழகாக பேச்சை மாற்றினாள், இருந்தாலும் நான் தமிழ்ப்படங்கள் பார்ப்பதில்லை என்று தெரிந்திருந்தும் கேட்பவளைப்பார்த்தால் கோபமாக வந்தது,

"அந்தப் படத்தையெல்லாம் மனுஷன் பார்ப்பான்."

"ஆமாமாம், நீங்கல்லாம், கலைப்படம்னு சொல்லிக்கிட்டு பிட்டுப்படத்தைத் தானே பார்ப்பீங்க, அதுக்கு விஜய் படம் எவ்வளவோ தேவலாம்."

அவள், நான் நகிஸா ஒஷிமாவின், இன் த ரிஆல்ம் ஆப் சென்ஸஸ் படத்தின் டிவிடியை ஆயிரத்திற்கும் அதிகமான விலைகொடுத்து வரவழைத்துப் பார்த்ததைத்தான் அப்படிச் சொல்கிறாள் எனத் தெரிந்தாலும், அது போன்ற என்று சொல்ல முடியாவிட்டாலும் வெளிநாட்டு கலைப்படங்களை அறிமுகப்படுத்தியது மைதிலிதான். நான் சிரித்தபடியே,

"மைதிலி நீ அந்தப் படத்தை பாக்கலையே தரவா?" லேசாய் பயமாய் இருந்தாலும் கேட்க,

"உதைபடுவே படவா."

ஒருவழியாக நான் செய்திருந்த ப்ரொஜெக்டின் பயனாய் நல்ல அமேரிக்கக் கம்பெனியில் வேலை கிடைக்க, அமேரிக்கா வந்து இரண்டு வருடமாகிறது, மைதிலி ஏதோ ஒரு கல்லூரியில் லெக்சரரா இருக்கிறாள், இப்பக் கல்யாணமாம். சந்தோஷமாக இருந்தது என்றாலும் என்னை நானே கேட்டுக் கொண்டிருந்தேன். உண்மையிலேயே மைதிலியை கல்யாணம் செய்து கொள்ளும் விருப்பம் இல்லையா என்று. எல்லா தடவையும் இல்லை என்ற பதில் தான் கிடைத்தது.

அமேரிக்காவிலிருந்து திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கிளம்பி வந்திருந்தேன். நேராய் மைதிலியைப் பார்ப்பதற்கு வீட்டிற்குச் சென்றிருந்தேன். கொஞ்சம் பூசியதைப் போலிருந்தாள் மைதிலி, கல்யாணக் கலை முகத்தில் தெரிந்தது, என்னைப் பார்த்ததும் சிறிது வெட்கப்பட்டாள் எனக்கே கூட ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

"என்னா மைதிலி மாப்பிள்ளை எப்படி போட்டோ எதுவும் வைச்சிருக்கியா?"

"ம்க்கும் அது ஒன்னுதான் குறைச்சல் இப்ப யாரு நான் கல்யாணம் பண்ணிக்கிலைன்னு வருத்தப்பட்டா, இதுக்காக நீ கூட வந்திருக்க பாரு அமேரிக்காவில் இருந்து.

அப்புறம் அந்தப் பையனைப் பத்திக் கேட்டல்ல, எங்கப்பாவோட தூரத்துச் சொந்தம். அப்பாவும் நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னதும், என்கிட்ட இவனைக் கட்டிக்கிறியான்னு கேட்டாரு நான் மறுக்கலை ஆமாம்னும் சொல்லலை."

எனக்கு கொஞ்சம் ஆர்வமாய் இருந்தது மைதிலியின் மாப்பிள்ளையைப் பார்க்க, மனது இல்லை இல்லையென்று சொன்னாலும் அவனுடன் என்னை ஒப்பிட்டுக்கொண்டேயிருந்தது. கொஞ்சம் கல்யாண வேலையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தேன். மாப்பிள்ளை வீட்டிலிருந்து கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு வரவேண்டியது தான் பாக்கி, வந்ததும் மாப்பிள்ளை அழைப்பு பின்னர், இரவு நிச்சயத்தார்த்தம் பின்னர் காலையில் ஆறு பத்துக்கு கல்யாணம்.

ஏழுமணியிருக்கும், மைதிலியின் அப்பா என்னைப் பார்ப்பதற்கு வந்திருந்தார்,

"மோகன், மாப்பிள்ளை கடைசி நேரத்தில் பிரச்சனை பண்றார், யாரோ நம்ம மைதிலியைப் பத்தி தப்பா லெட்டர் போட்டுட்டாங்களாம். இப்ப கல்யாணத்தை நிறுத்தணும்ங்கிறாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை..."

நானும் என் பங்கிற்கு மாப்பிள்ளைக்கு போன் போட்டு பேச, அந்தப்பக்கம் மைதிலியைப் பற்றி ரொம்பவே கேவலமாப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். விஷயம் தெரிந்து மைதிலியின் அம்மா அழத்தொடங்க, மைதிலியின் கண்களில் எந்த விதமான உணர்ச்சியும் இல்லை. நான் மெதுவாக என் அம்மாவின் சம்மதத்தை வாங்கிவிட்டு பின்னர் மைதிலியின் தந்தையிடம்,

"மாமா உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லைன்னா நான் மைதிலியைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்." சொன்னதும் கையைப் பிடித்துக் கொண்டார்.

நான் ஒப்புக்கொண்ட பிறகு அந்தக் கல்யாண மண்டபத்திலும் சரி, மற்றவர்களுடைய முகத்திலும் சரி அப்படியொரு சந்தோஷம், சற்று நேரத்திற்கு முன்பு நடந்த விஷயங்களை அனைவரும் நொடிப்பொழுதில் மறந்துவிட்டது ஆச்சர்யமாகயிருந்தது. நான் நேராய் அம்மாவிடம்,

"அம்மா இங்க நடந்ததில் எதுவும் அரசியல் இல்லையே?"

நான் கேட்க வந்ததை புரிந்து கொண்ட அம்மா, வந்து கன்னத்தில் குத்திவிட்டு,

"ஆமாம் உன்னை கட்டிக்கிறதுக்காகத்தான் மைதிலி செஞ்ச நாடகம் இதுன்னு நினைச்சியா? ஆனாலும் உனக்கு மிதப்பு ஜாஸ்திடா. ஆளைப்பாரு ஆளை, மைதிலியை மாதிரி ஒரு பொண்ணு உனக்கு கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். அந்தப் பையன் கொடுத்து வைச்சது அவ்வளவுதான். உன்னோட இந்த லூசுத்தனமான கேள்வியை அவக்கிட்ட கேட்டு வைச்சிறாதே." சொல்லிவிட்டு காதைத்திருகினார்.

முதலிரவின் பொழுது,

"மைதிலி, இங்கப்பாரு இது எப்படி நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. இதில் எதுவும் உள்குத்திருந்து அதுக்கு நீயோ, இல்லை எங்கம்மா அக்காவோ, இல்லை உங்க வீட்டில் இருப்பவர்களுக்கோ சம்மந்தம் இருந்தால் அது என் பார்வைக்கு வருவதை மட்டும் தவிர்த்துவிடு..." நான் சொன்னதும் மைதிலி சிரித்தாள் எப்பொழுதையும் போல என்னால் இந்தமுறையும் அவளின் சிரிப்பில் இருந்து ஒன்றையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

Read More

Share Tweet Pin It +1

14 Comments

In Only ஜல்லிஸ்

தமிழிஷ் ஓட்டு நம்பகமானதா?

நண்பர் ஒருவர் தமிழிஷ் ஓட்டு காரணமாய் பெரிய சண்டை போகுதே பார்த்தீங்களா என்று கேட்டார், நான் அத்தனை தூரம் பதிவுகளில் தற்சமயம் இயங்காவிட்டாலும் கண்ணில் படத்தான் செய்தது. நான் தமிழ்மண ஓட்டுப்பட்டையைக் களவாடி மகுடும் சூட்டிக்கொண்ட சூத்திரம் தெரிந்தவர் என்பதால் தமிழிஷில் முடிந்தால் செய்து காட்டுங்கள் என்றார். ஆனாலப் பட்ட 32 digit key வைத்து செய்யும் என்கிரிப்ஷனையே உடைத்து களவாடிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் தமிழிஷ் எல்லாம் பெரிய விஷயம் இல்லை என்று சொல்லி விட்டு எப்படி ஓட்டிங் முறை செய்திருக்கிறார்கள் என்று பார்த்தேன். ம்ம்ம் ஓட்டை இருந்தது. அதற்கான டெஸ்டிங்கைத்தான் நேற்றைய பதிவில் செய்தேன்.

அந்தப் பதிவிற்கு ஓட்டுப் போட்டதாகச் சொல்லும் யாரும் எனக்கு ஓட்டுப் போட்டிருக்க நியாயம் இல்லை. sayanthan, sanjaigandhi, jaichan, nandhuu, senthazalravi, fedthemaster இதில் சயந்தன், சஞ்செய் காந்தியிடம் முன்னமே பேசியாகிவிட்டது ஆனால் நான் டெஸ்டிங்கை கொஞ்சம் சீக்கிரம் முடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் வந்ததால் செய்து வந்ததை நிறுத்திவிட்டேன். kks, chuttikurangu, hihi12, kilukku இவர்கள் எல்லாம் நான் டெஸ்டிங் நிறுத்திய பிறகு போட்டவர்கள். ஆனால் ஒரு விஷயம் சொல்ல முடியும், உங்கள் அனுமதியில்லாமலே ஒருவர் உங்கள் பெயரில் தனக்கு வேண்டிய பதிவிற்கு ஓட்டுப் போட முடியும் தமிழிஷில்.

எப்படி என்பதை சொல்ல விரும்பவில்லை.

PS: கள்ள வோட்டு போட உபயோகித்துக்கொண்ட அனைத்து நபர்களிடமும் ஒரு சைலண்ட் மாப்பு கேட்டுக்கிறேன் :(, nothing personal only testing.

Read More

Share Tweet Pin It +1

29 Comments

In Layoff ஈழம்

ஐயோ எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை

சசி ஒரு பதிவெழுதியிருந்தார், அவரளவிற்கு தைரியம் கிடையாதென்பதால் அது போன்றதொரு பதிவை நான் போடவில்லை. அவ்வளவே. 'தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்' என்பதில் இன்னமும் நம்பிக்கை இருக்கிறது, அப்படியே ஸ்டாலினின் 'You cannot make a revolution with silk gloves.' என்பதும். ஆனாலும் மக்கள் இப்படிக் கொத்துக்கொத்தாய் உயிரிழக்கும் பொழுது, நாம் இது வரை மனதில் வைத்திருந்த நியாயங்கள் எல்லாம் அநியாயங்களாய் நீள்கின்றன. அடிப்படைகளையே மாற்றிக்கொள்ளக்கூட மனம் தடுமாறுவதில்லை, மரணம் அத்தனை வலிமையான ஆயுதம். ஆனால் இதைக் கொண்டு தான் இராஜபக்ஷே போன்றவர்கள் ஆரம்பத்தில் இருந்து பயமுறுத்துகிறார்கள் எல்லாவற்றையும் துறந்து விட்டு இழந்து விட்டு ஓடிவிடு இல்லையென்றால் அழிக்கப்படுவாய் எனும் பொழுது எந்தப் பக்கம் பேசுவது என்ற குழப்பமே நீள்கிறது. இந்திய சுதந்திரம் அஹிம்சையால் பெறப்பட்டது என்பதில் எனக்கு இன்னமுமே கூட நம்பிக்கையில்லை, அதேபோல் ஆயுதம் தாங்கிய போராட்டாம் விடுதலை பெற்றுத்தராது என்பதிலும் கூட.

Capgemini ல் இருந்து 1600 நபர்களை வேலையை விட்டு தூக்கிவிட்டார்கள் என்ற செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது, சென்னை, புனே, ஹைதராபாத் என்று Kanbay இருந்த இடங்களில் இருந்து வெளியேற்றம் நடந்திருக்கிறது. Kanbayவின் முக்கியமான க்ளையண்டான HSBC அதனுடைய ப்ராஜக்ட்களை திரும்ப வாங்கிக் கொண்டதால் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம். என்னுடைய நண்பர்கள் சிலருக்கும் இப்படி நடந்திருப்பதாக செய்திகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது, உச்சிக் கொண்டையாகிய சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரியின் ஈறும் பேனும் இது போன்ற லே ஆஃப்கள் ஆனால் தாழம்பூக்களை மனம் இயற்கையாகவே விரும்புகிறது என்ன செய்ய, தனக்கு வந்தால் தெரியும் ஈறும் பேனும் என்று இளக்காரம் பேசும் மக்களுக்கு புன்சிரிப்பை மட்டும் காட்டிவிட்டு நகரவேண்டியிருக்கிறது.



ஜெயமோகனின் அனல் காற்று படித்தேன், ஒரே காரணம் அய்யனார் அதைப்பற்றி எழுதியிருந்த சில வரிகள், முன்னர் யாரோ ஒருவர் பெயர் மறந்துவிட்டது கேட்ட 'படிச்சிட்டீங்களா'விற்கு இல்லை என்றும் படிக்கும் ஆவல் இல்லையென்றும் சொல்லியிருந்தது நினைவிற்கு வருகிறது. அய்யனார் சொல்லியிருந்த ஒன்றிரண்டு வார்த்தைகளுக்காக படிக்க நேர்ந்தது, ம்ஹூம் தூக்கம் வராதா ஒரு இரவில் இன்னும் கொஞ்சம் நேரம் தூக்கத்தை தள்ளிப் போட உதவியது. ஜெயமோகனின் வகையான எழுத்தில்லை இது, என்பதைத் தவிர்த்து, வேறு யாராவது எழுதியிருந்தால் இரண்டாம் பாக முடிவில் தூக்கியெறிந்திருப்பேன். எனக்கு ஆதவன் வாசனை அதிகம் தெரிந்தது, நான் ஆதவனை அதிகம் படித்தது காரணமாய் இருந்திருக்கலாம். ஆதவன் பெரும்பாலும் மத்திய தர வர்க்கத்தைப் பற்றிய் எழுதியதும் காரணமாய் இருந்திருக்கலாம், கொஞ்சம் போல் சாரு வாசனை வந்தது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. எப்பொழுது ஜெமோ எழுத்து படித்தாலும் நான் எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பேன் என்பதைப் போலவோ என்னுடைய கற்பனைகளைப் போலவே இருப்பதைப் போலவோ இருக்கும். அனல் காற்று இதற்கு விதிவிலக்கல்ல. இரண்டு மூன்று முறை Mother Fucker என்று வந்துவிட்ட காரணத்தாலேயே இதை இன்செஸ்ட் வகைக் கதை என்று சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன், என் பெயர் ராமசேஷனில் Mother Fucker வார்த்தைகள் இல்லாமலே அதைப் பற்றிச் சொல்லியிருப்பார். ஒரு எல்லையைத் தாண்டாமல் ஜெமோ எழுதியிருப்பதைப் போலவே தோன்றியது அவராய் வகுத்துக் கொண்ட அந்த எல்லையெல்லாம் தாண்டி மக்கள் எழுதத் தொடங்கி எழுதி காலமாகுது என்று சொல்ல நினைத்தேன். சொல்லிட்டேன்.

இந்தப் பதிவை வைத்து ஒரு டெஸ்டிங் செய்யலாம் என்ற ஒரு ஆசை, செய்யப் போகிறேன். ரிசல்ட் நான் எதிர்பார்ப்பதைப் போல் வந்தால் சொல்கிறேன்.

பசங்க படம் இன்னும் பெங்களூரில் வெளியாகலை நல்லாயிருக்கு என்று மக்கள் சொல்லும் பொழுது பார்க்க ஆசையாகயிருக்கிறது. வெளியாகாமல் போகக்கூட வாய்ப்பிருக்கிறது, இப்படி மிஸ் ஆன படம் தான் சுப்பிரமணியபுரம்.

தலைப்பை பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. புரிஞ்சவங்க புரிஞ்சிக்கோங்க புரியாதவங்க புரிஞ்சவங்களைக் கேளுங்க

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In நாட்குறிப்பு

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

நியூட்டனின் 3ம் விதி படத்திற்குச் சென்றிருந்தேன் எல்லாம் தலைவிதி தான். 'இன்னும் எத்தனை சபர் போக வைப்பாய் என் ரப்பே' என்ற புலம்பலைப் போல இன்னும் எத்தனை திருப்பங்கள் வைப்பாய் 'தாய்முத்துசெல்வா'('ச்'சன்னா கிடையாது இடையில்) என்று கேட்க நினைக்கும் அளவிற்கு திருப்பங்கள். மொக்கையான S.J. சூர்யா படமல்ல என்ற திருப்தி மட்டும் தான். ஹீரோயின் பயப்படும் பொழுது நமக்கு உண்மையிலேயே பயமாய் இருக்கிறது! தமிழ்நாட்டுக்காரர்களின் மூளையே மூளை என்று நினைக்க வைத்த கமெண்டுகள் சில காதில் விழுந்தன, பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்தவரிடம் இருந்து. பாடல் காட்சி ஒன்றில் ஹீரோயின் துண்டொன்றை மட்டும் கட்டிக் கொண்டு வந்து நிற்க, இவர், "பிடிமானமே இல்லாம எப்படி நிக்குது பார்? பெஃபிகால் எதுவும் போட்டு ஒட்டியிருப்பாங்க்யலோ!" என்று கேட்டார் நான் யோசித்துப் பார்த்தேன் 'ஆம்பிள்ளைகளுக்கெல்லாம் நிக்குமே நமக்கென்ன இருக்கு' என்று. அப்பத்தான் ஞாபகம் வந்தது நாமென்னைக்கு மாரோட டவல் கட்டியிருக்கோம் கட்டினா இடுப்பில் தான கட்டுவோம், அங்கத்தான் பிடிமானம் இருக்குமேன்னு. :lol: தேடிப்பிடிச்சிருப்பாங்க்யன்னு நினைக்கிறேன், ஒன்னையுமே காணோம். cleavage காண்பிப்பதற்கு தூக்கி நிறுத்த வேண்டியிருக்கிறது, பாவம் சின்னப்புள்ளைங்ய பார்த்து பயப்படுதுல்ல.



ஜெயலலிதாவின் இந்த மாற்றம் நம்ப முடியாததாக இருக்கிறது என்றாலும் ஜெயலலிதாவின் மூலமாய் ஈழத்திற்கு ஒரு தீர்வு வருமென்றால் அதை நிச்சயம் நான் ஆதரிக்கிறேன் இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஓட்டுப்பொறுக்கி அரசியலின் இன்னொரு முகம் தான் இந்த மாற்றம் என்றால் அதைப் பார்த்து வேதனைப்பட மட்டுமே முடிகிறது. ஈழ மக்களைத் தொடர்ச்சியாக இந்த மூன்றாண்டுகளில் அவதானித்து வந்திருக்கிறேன், பெரும்பான்மையானவர்களுக்கு தமிழக அரசியலில் அத்தனை பெரிய ஈடுபாடு கிடையாது, அதைப்போலவே தமிழக அரசியல் வரலாற்றைப் பற்றியும். நான் அது அவசியம் என்று நினைக்கவில்லை ஏனென்றால் அவர்கள் நிலை அப்படி, ஆனால் தமிழகத்தின் பின்புலத்திலிருந்து ஈழத்தின் நிலையைப் பார்ப்பவர்களுக்கு தற்பொழுது நடைப்பெற்று வரும் தமிழக அரசியல் விளையாட்டுக்களை கவனிப்பவர்களுக்கு ஈழத்தவர்களைப் போல் சடாறென்று ஜெயலலிதாவை நம்பிவிட இயல்வதில்லை. எல்லாவற்றையும் மறந்து ஞானியை ஏற்றுக்கொண்டதைப் போல் ஏற்றுக் கொள்வதற்கு ஜெயலலிதா அருகதை உள்ளவரும் அல்ல.

எதேட்சையாகப் பார்த்த சீமானின் நெல்லைப் பேச்சு சட்டென்று கவர்வதாக இருந்தது, நல்ல தமிழ் வளம் இருக்கிறது அவரிடம் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுபவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், கமல் அளவிற்கு தடுமாற்றம் இல்லாமல் எளிய தமிழில் அவரால் அழகாக பேச முடிந்திருக்கிறது. சீமான் அது இது கைது என்று கிளப்பிவிட்ட பிரச்சனையில் எப்பொழுதையும் போல் அந்தப் பக்கம் தலை வைத்துப் பார்க்கவில்லை. எத்தனை பெரிய மேடை திரண்டிருந்த மக்கள் என்று தெரியாது கேமரா ஒரு பக்கத்தில் இருந்து நகரவில்லை. ஆனால் அவர் மேடையை உபயோகித்துக் கொண்ட விதம் பிடித்திருந்தது.



இந்த விளம்பரங்கள் அனிமேஷன் இல்லை என்று சொன்ன பொழுது என்னால் நம்ப முடியவில்லை தான். இவை மனிதர்களை நடிக்க வைத்து எடுக்கப்பட்டவை என்பது கொஞ்சம் நம்ப முடியாததாகத்தான் இருக்கிறது.

IPL இந்த முறை கொஞ்சம் போல் சீரியஸாக போகிறது. எல்லோரும் ஒரே அளவில் இருக்கிறார்களாயிருக்கும் KKR தவிர்த்து. ஆஸ்திரேலியர்கள் விளையாடும் அத்தனை அணியையும் சப்போர்ட் செய்தாலும் ;) ராஜஸ்தான் ராயலும், சென்னையும் ஃபேவரைட்ஸ். போன முறை இருவரும் ஃபைனல் வந்து நெஞ்சில் பாலை வார்த்தார்கள், இந்த முறை எப்படி நடக்கும் தெரியவில்லை. ஆனால் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணி வீரர்களே IPLல் சிறப்பாக ஆடுவது சந்தோஷமாக இருக்கிறது.

ட்விட்டரில் ப்ரூனோவுடன் சச்சின் டெண்டுல்கர் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு வருடமாக இதைப் போன்ற ஒரு விவாதத்தை அவர் நிறைய பேரிடம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். எனக்கு அத்தனை பொறுமை கிடையாது, முதல் இரண்டாம் முறை எல்லாம் சரியாகப் பேசுவேன் மூன்றாவது முறை செய்த விவாதத்தையே திரும்பவும் இன்னொரு முறை செய்ய மாட்டேன் என் பக்கம் சரியாகவே இருந்தாலும் கூட. சச்சின் விஷயத்தின் என் பக்கம் சரி என்று 100% சொல்ல முடியாது ஆனால் நான் அதைப் பற்றி சொல்ல வந்த விஷயத்தைப் புரிந்து கொள்ள வித்தியாசமான ஒரு அட்டிட்டியூட் வேண்டும் என்று மட்டும் நினைக்கிறேன். சச்சினை அவருடைய ஆட்ட நேர்த்திக்காக பாராட்ட நினைத்தாலும் அவருடைய சுயநல விளையாட்டு அதை முற்றிலுமாக என்வரையில் மறைத்துவிடுகிறது. அவர் இந்திய அணிக்காகவென்று விளையாடி வெற்றி பெறவைத்த ஆட்டங்கள் அவர் தனக்காக விளையாடிக் கொண்ட ஆட்டங்களுடன் ஒப்பிட்டால் மிகக்குறைவாக இருக்கும்.

Read More

Share Tweet Pin It +1

76 Comments

Popular Posts