In சினிமா விமர்சனம்

ஆந்தனி கோன் ஹை

நான் ஆரம்பத்தில் ப்ளாக் உலகத்தில் கால்வைத்த பொழுது பதிவுகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வந்துகொண்டிருந்தன. பெரும்பாலும் இயல்பு வாழ்க்கையைப் பற்றிய குறிப்புகள். சுருக்கமாகச் சொல்லப்போனால் ஆன்லைன் டைரிக்குறிப்புகள் அவ்வளவுதான். ஆங்கிலத்தில் எழுதும் ஆர்வமும் திறமையும் இல்லாத காரணத்தால் விட்டு வேகமாக நகர்ந்துவிட்டேன். பின்னர் மரத்தடி நாட்களில், சில மக்களின் பதிவுகளைப் படிப்பதற்காக வருவேன். அப்பொழுது அங்கே தெரியும் தமிழ்மணம் பட்டனைக் கிளிக்கியதில்லை, காரணம் பெரும்பாலும் வெப்சைட்களில் கொடுக்கப்படும் லிங்குகள் தேவையற்ற இடங்களுக்கே செல்லும் என்ற நம்பிக்கையிருந்தது.(மூடநம்பிக்கையின்னு கூட வைச்சிக்கலாம்.)

அதுமட்டுமில்லாமல், மரத்தடி மெயில்களைப் படித்ததில் இருந்து ப்ளாக் உலகில் பெரும்பாலும் ஒரு குரூப் குரூப்பாத்தான் இருப்பாங்க, நீங்க பின்னூட்டமிட்டா உங்களுக்கு பின்னூட்டம் கிடைக்கும் என்பதைப் போன்ற எண்ணம் மனதில் தோன்றியிருந்தது, அதற்கு மரத்தடி காரணம் கிடையாது ஒருவேளை நான் படித்த மெயில்களாக இருக்கலாம், லிங்குகள் தேடவில்லை. எனக்கென்னவோ எழுதிப்பழகும் இடமாக மரத்தடியைப் பார்க்க பிடிக்கவில்லை, அதனால் தான் விலகினேன், நல்ல கதைகளை எழுதிப்பழகி பின்னர் வரவேண்டுமென்று நினைத்து. படிப்பதை விட எழுதுவது அதிகமாக இருந்த நாட்கள் அவை.

அப்படியாக நான் பதிவுலகத்திற்கு வந்த பொழுதும் இதை ஒரு டைரியாக எழுதும் எண்ணம் தான் முதலிலிருந்து இருந்தது. அப்படி இல்லாமல் போனதிற்கு இரண்டு காரணங்கள், நான் பார்த்த பெரும்பாலான பதிவுகள் அப்படி இல்லாமல் போனது, மற்றது நான் சாப்ட்வேர் இன்டஸ்டிரியில் வேலை பார்த்து வந்தது, இங்கே புதியவிஷயங்கள் கிடையாது. அதுமட்டுமில்லாமல் நான் அனுபவிக்கும் விஷயங்கள் அனைத்துமே மற்றவர்கள் அனுபவித்த ஒன்று அதனால் அந்த எண்ணத்தை கைவிட வேண்டியிருந்தது. இன்னுமொன்று உண்டு அது அந்த நோக்கத்தில் எழுதப்பட்ட சில பதிவுகள் கவனமற்று இருப்பதாகப் பட்டதும் ஒரு காரணம். அப்பொழுதெல்லாம் ஒரு பதிவு கவனம் பெறுகிறது என்பதற்கு நான் வைத்திருந்த ஒரே ஒரு அளவுகோல் பின்னூட்டம் என்பது, பின்நாட்களில் அது எவ்வளவு தவறான ஒருவிஷயம் என்பது புரிந்தது.

பின்னூட்டம் அதிகம் பெரும் பதிவுகளைக் குறை கூறவில்லை, அந்த மாதிரி நமக்கு எழுதவரவில்லை அவ்வளவுதான் என்று விட்டுவிட்டு நகர்ந்து போய்விடவேண்டும் என்பதும், பின்னூட்டம் அதிகம் பெருவதற்காக மட்டுமே எழுதப்படும் பதிவுகளில் இருக்கும் என் பல பதிவுகளில் இருந்த ஒரு நாடகத்தன்மை பின்நாட்களில் மீண்டுமொறுமுறை படித்துப் பார்த்த பொழுது விளங்கியது. ஆரம்பக்காலத்தில் இருந்தே ஒரு விஷயத்தில் குறியாக இருந்தேன், அது, நான் தவறு செய்வதாக யாராவது சுட்டிக்காட்டினால் கோபப்படுவது மட்டும் செய்யாமல் நல்ல மூடிருக்கும் ஒரு நாள் உண்மையில் யார் பக்கம் தவறென்று யோசிக்கவும் செய்வேன், என் பக்கம் தவறிருந்தால் ஒப்புக்கொள்வேன் என்னளவில். சுட்டிக்காட்டியவருக்குக் கூட தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பது எனது எண்ணம்.

ஏன் இவ்வளவு புலம்பல்கள் என்றால், இன்று காலை ஒரு இந்திப் படத்திற்குச் சென்றிருந்தேன். எங்கள் வாழ்க்கையில் இது ஒரு பெரிய நிகழ்ச்சி இல்லாவிட்டாலும், முக்கியமானதைப் பற்றி மட்டும் தான் எழுதவேண்டுமா என்று யோசித்துப் பார்த்த பொழுது மனதில் பட்டதைக் கொட்டியிருக்கிறேன்.

புரோஜக்ட் இன்டகிரேஷன் டெஸ்டிங்கில் இருப்பதாலும், மெயின்பிரேம் தனியாக, நாங்கள் ஜாவா ஆட்கள் தனியாகவும் ப்ரோக்கிராம் எழுதி இந்த ஒன்றிரண்டு வாரக்காலத்தில் இரண்டையும் இணைக்க வேண்டிய கட்டாயமும் இருப்பதால், கொஞ்சம் ஆளை அசரடிக்க வைக்கும் வேலை, ஜிமெயிலில் என்னுடன் சாட்டுபவர்களுக்குத் தெரிந்திருக்கும் இந்திய மணிநேரம் இரவு ஒன்று இரண்டெல்லாம் அசாதாரணமாக அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதும், சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கடனாய் அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பது.

நேற்றிரவு அப்படிப்பட்ட ஒருநாள், ஏழரை மணிக்கு 'ஆப்ஷோரில்' செய்யப்பட்ட 'பில்ட்'(Build), ஊத்திக்கொள்ள, கடைசியாக செக்கின்(Check-in) பண்ணியவன், தன்னால் இல்லை இன்டகிரிட்டி செர்வர் தவறால் தான் படுத்துக்கொண்டது பில்ட் என்று ஒற்றைக்காலில் நிற்க, கிளயண்ட் விவோஅய்பியில்(VOIP) அலற, மீண்டுமொறு முறை பில்ட் செய்யும் பொறுப்பு என் நண்பனிடம் ஒப்படைக்கப்பட்டது, எல்லா ப்ரோஜக்ட்களையும் மீண்டும் ஒருமுறை சானிட்டி செக்கிற்காக(Sanity Check) என் லோக்கல் சிஸ்டத்தில் பில்ட் செய்யும் இடைவெளியில் இரவு சாப்பிட்டு விட்டு வந்தோம்.

பின்னர் அப்படியிப்படி 'இன்டகிரிட்டி சர்வர்'(MKS Integrity Server) ப்ரோப்ளம், ஸ்லோ என்று காலை ஆறு மணிக்கு பில்ட் ஒருவாறு சக்ஸஸ்புல்லாக முடிய, பொட்டியை மூடிவிட்டி கிளம்பிய நாங்கள் வழியில் டீக்கடையில் உட்கார்ந்த பொழுது வந்த ஐடியாதான் படம் பார்க்க செல்வதென்ற ஒன்று. சமீபத்தில் வெளியாக ஓடிக்கொண்டிருக்கும் ஓங்காரா என்ற படத்திற்குத்தான் போவதாக முடிவு. மொத்தம் இரவு தங்கிய மூன்று பேருமே இந்த விஷயத்தில் வீக் என்பதால், நாங்களாக கற்பனை செய்து கொண்டு போன நேரத்தில் படம் தொடங்கியிருந்தது. மல்டிபிளக்ஸ் என்பதால் அடுத்த இரண்டு மணிநேரத்தில் படம் பார்த்துவிடலாம் என்றால் படம் பார்த்துவிட்டு, பார்க்க வேண்டிய வேலை நினைவில் வந்தது.

சரி போனால் போகிறதென்று இந்தப் படம், "ஆந்தனி கோன் ஹை"ற்கு சென்றோம். எனக்குத்தெரிந்த நடிகர் "சஞ்சய் தத்" மட்டுமே, சஞ்சய் தத், விளம்பரத்தில் துப்பாக்கியுடன் உட்கார்ந்திருப்பதைப் போன்ற பார்த்ததும். கொஞ்சம் சங்கடமாகத்தான் உணர்ந்தேன், பெரும்பாலும் வீம்புப்பிடியாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படத்தை பார்த்தே தீருவது எனப் பார்த்த விஜய் படங்களினால் வந்த தலைவலியின் காரணமாக கொஞ்சம் பயந்தேன். ஆனால் கூடவந்தவர்கள் படம் காமெடிப்படம் என்று சொல்லியதும் சமாதானம் ஆனேன். படத்தின் கதை ஒன்றும் பிரமாதமானது இல்லை.



சஞ்சய் தத், தாய்லாந்தில் ஒருவனைக் கொலை செய்வதற்காக, அவன் இருக்கும் ஹோட்டல் அறைக்குள் நுழைந்து "ஆந்தனி கோன் ஹை" என்று ஹீரோவிடம் கேட்க ஹீரோ நான்தான் ஆந்தனி என்று சொல்ல முகத்தில் குத்துவதுடன் படம் தொடங்குகிறது. பின்னர் ஹீரோவை தலைகீழாகத் தொங்கவிட்டு கொலை செய்ய பணம் கொடுக்கவேண்டியவனிடம், பணத்தை டிரான்ஸ்பர் செய்யவேண்டுமாறு கேட்க அவன் கொடுக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்ள அந்த சமயத்தில், டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் படம் எதுவும் பிடிக்காமல், ஹீரோவிடம் சரி நீ யாருன்னு சொல்லு என்று கதை கேட்க, ஹீரோவைக் கதைச்சொல்லியாகக் கொண்டு படம் நகரத் தொடங்குகிறது.

அநாயாசமான திருப்பங்கள், வெட்டுக்குத்து, படபடவென்று சுடுவது, கட்டிவைத்து பத்து பக்க வசனம் படிப்பது என்றில்லாமல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்றது கதை. இந்த வகையான கதை சொல்லும் பாங்கு எனக்கு ரொம்பவும் பிடித்தமானது. அதுவும் கூட ஒரு காரணம் இந்தப் படத்தைப் பார்த்து எனக்கு தலைவலி வராததற்கு.

'பில்ட் டென்ஷன்', 'கோட் ஃபட்ற', போன்ற பிரச்சனைகளில் இருந்து கொஞ்சம் விலகி மூன்று மணிநேரம் நிம்மதியான, ஏசிக்காற்றில் உண்மையான டிஜிட்டல் சவுண்டுடன், அலட்டலில்லாத இந்தப் படம் ஒரு நல்ல மாறுதலாக இருந்தது. பாடல்கள் நன்றாக இருந்தன, பட ஆரம்பத்தில் மியூஸிக் ஸ்கோர் ஸமீர் என்று பார்த்த ஞாபகம் இருந்தது. கடைசியில் தலைவர் வந்து மைக்குடன் தோன்றவும் முதலில் ஆச்சர்யப்பட்டேன் பின்னரும் ஆச்சர்யப்பட்டேன்.

மியூசிக் ஹிமேஷ் ராஷ்மியா, மக்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் தசாவதாரத்திற்கு தலைவர் தான் மியூஸிக் என்று. தெரியவில்லை கமல் படத்திலும் மைக் பிடிப்பாரா என்று ஆனால் தமிழில் நல்ல இசையில் மூக்கு நுனியில் இருந்து நல்ல இரண்டு பாடல்களுக்கு நான் உத்திரவாதம்.



படம் முடிந்ததும் திரும்பவும் அலுவலகத்திற்கு வந்து ஓட்டிய பில்டில் வந்து கொண்டிருக்கும் பக்ஸ்களை பிக்ஸிக்கொண்டிருக்கிறேன். என்னவோ இன்று டைரியைப்போல எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. எழுதுகிறேன். நார்த் இண்டியா பக்கம் வாசனையுள்ள மக்கள் சென்று நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம். ஆனால் என் மனதில் நகைச்சுவைப் படத்திற்குண்டான இடம் எப்பொழுதும் உண்டென்பதால் ஜாக்கிரதை.

மோட்டரோலா V3I உபயோகித்து இரண்டு பாடல்களைப் போட்டுத்தள்ளிக் கொண்டுவந்தேன் முதலில் .3gp பைல்களாக இணைக்கத்தான் நினைத்திருந்தேன் பின்னர் வேண்டாமென்று விட்டுவிட்டேன். வேண்டுபவர்கள் தனிமெயில் அனுப்புக, குறிப்பு பாடல்கள் - இந்திப் பாடல்கள்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In Only ஜல்லிஸ்

கருத்துச் சுதந்திரம்

கியூபாவில் நடக்கும் விஷயத்தைப் பற்றி யாரும் எழுதிய பாடைக் காணோம். அதுதான் ஒரு சின்ன உறுத்தலாகவேயிருந்தது.

பிடல் காஸ்ட்ரோ பதிவியிலிருந்து விலகி பதவி அவரது தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் வந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. சில செய்திகள் பரப்பும் விஷயங்களை நம்பவேண்டாம் என்று மனம் சொல்கிறது பார்க்கலாம். 1959 ற்கு பிறகு நடக்கும் முதல் ஆட்சிமாற்றம் இது கியூபாவில். எந்த பத்திரிக்கை தகவலையும் நம்ப முடியவில்லை, எல்லாவற்றிலும் அமேரிக்க ஏகாதிபத்தியமே தலைவிரித்தாடுவதாகவே உணர்கிறேன்.

மற்றபடிக்கு இந்த வாரம் எழுதுவதாக உத்தேசித்திருக்கும் தலைப்புகள்,

1) கட்டுடைத்தலும் ஒன்றிரண்டு கரப்பான் பூச்சிகளும்.
2) யானை எலி மற்றும் பின்நவீனத்துவம்.

எப்படியோ குப்பை கொட்டுறதுன்னு முடிவு பண்ணியாச்சு, அதனால கருத்து சுதந்திரத்திற்கும் மதிப்பளித்துவிடலாம் என நினைத்து, பின்னூட்டப்பெட்டியை திறக்கிறேன்.(யாரவது போடுவாங்களான்னா அது தெரியாது.)

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In Only ஜல்லிஸ் சுஜாதா பாப்லோ நெருதா

நெருடாபுருடா

சுஜாதா மீண்டும் தன்னுடைய வழமையைத் தொடங்கியிருக்கிறார்.(சரிதானா வாக்கியம்.)

"அலைகள்
பூக்கள்
குழந்தை
நண்பர்கள்
கவிதையும்கூட
அவ்வப்போது
அலுத்துப்போகிறது’

என்று சொல்லும் கனிமொழி, சென்ற தேர்தல் பிர-சாரத்தின்போது தமிழகமெங்கும் தன் தந்தையுடன் சுற்றுப்பயணம் செய்தபோது, மக்கள் முகங்களில் கண்ட ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் பார்த்துப் பிரமிப்பாக, ஏன் பயமாகக்கூட இருந்தது என்கிறார். கொதிக்கும் மத்தியான வெயிலில், தலைவரின் ஒரு செகண்ட் தரிசனத்துக்காகக் காலையிலிருந்து காத் திருக்கும் இளைஞர்களையும், புதுசணிந்து வாசலில் வந்து நிற்கும் பெண்களையும் கவனித்து, ஒரு நீண்ட கவிதையாக எழுதியிருக்கிறார். படித்துப் பார்த்தேன். அலுக்கவில்லை.

அரவிந்தன் வழக்கம் போல் அட்டை போட்டு, ‘Bill Bryson-ன் ‘A Short History of Nearly Everything’ என்ற புத்தகத்தை அன்பளித்தார். ஸபானிஷ் மொழியில் இளங்கலை படிக்கிறார்.

‘தமிழ்க் கவிதைகளை ஸ்பானி-ஷில் மொழிபெயர்ப்பது எளிது. அங்கிருந்து இறக்குவதுதான் கஷ்டம். அதில் reflexive verbs ஏராளம்’ என்றார்.

இப்படி யாராவது உண்மை-யாகவே ஸ்பானிஷ் படித்து, தமிழில் உலவும் நெருடாபுருடாக்களைத் தெளிவாக்கலாம்."

எல்லாருக்கும் புரிதா இந்த நெரிதா மேட்டர். - இது நான்.

மொத்தம் பதினேழு ஓட்டுக்கள் ஆச்சர்யமாகயிருக்கிறது, ஒரு நபர் தனக்கு அந்தக் கதை சுத்தமாகப் புரியவில்லையென்று சொன்னதும் நினைவில் வருகிறது. ஓட்டுப்போட்ட அத்தனை நபர்களுக்கும் நன்றி.

முன்பு தமிழோவியத்திற்காக எழுதிய செகுவாரா பற்றிய குறிப்புகளையும் சேர்த்து.

என்ன ஒரு தொடர்பு, செகுவாராவிற்கு பாப்லோ நெருதாவை பிடிக்குமாம். அதிகம் படிக்கவும் செய்வாராம். ஆனால் பாப்லோ நெருதா ஒரு பாடிஸ்டாவின் ஆதரவாளராம். வேடிக்கை....

-----------------------செகுவாரா---------------------------


எனக்கு எப்பொழுதுமே ஒரு விஷயம் எப்படி எனக்கு தெரியக்கிடைத்தது என்பதனை யோசித்து ஒருவாறு உறுதிசெய்து கொள்வேன். அதாவது முதன் முதலில் எனக்கு செகுவாராவை தெரிந்ததெப்படி என்பதைப் போன்ற கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள சில மாலை நேரங்களை இழப்பதைக் கூட அனுமதிப்பேன் இப்படித்தான் ஒருமுறை செகுவாராவை எனக்கு எப்படி தெரியவந்தது என யோசித்துக் கொண்டிருந்தேன். ஆரம்பக்காலத்தில் இருந்தே கொஞ்சம் அமேரிக்கா என்றால் அலர்ஜி அதன் ஒரு பக்கமாய் தெரிந்து கொண்ட கியூபா நாட்டு சரித்திரமும் அதன் பின்ணணியில் இருந்த பிடல் காஸ்ட்ரோவும், செகுவாராவும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.

த பைசைக்கிள் டைரிஸ் படம் பார்ப்பதற்கு முன்பே கொஞ்சம் அறிமுகம் இருந்தது. என்றாலும் எப்படி த ப்யூட்டிபுல் மைண்ட் பார்த்தபின் ஜான் நேஷ்ஷைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்ததோ அதைப்போல் இந்தப் படம் பார்த்தபின்னர் செகுவாராவைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பினேன். சன்டிவியின் டாப்டென் மூவிஸில் சொல்வதைப் போல் இந்தப் படத்தை ஏற்கனவே ஏகத்திற்கு அலசிவிட்டதால் நேராய் விஷயத்திற்கு வருகிறேன்.

உலகம் முழுவதும் இப்பொழுதெல்லாம் புரட்சி என்ற சொல்லுக்கு அர்த்தம் கற்பிக்க முயலும் எல்லோரும் உபயோகப்படுத்தும் ஒரு வார்த்தை அல்லது ஆள் செகுவாரா(சேகுவாரா - ஆரம்பத்தில் இருந்து அப்படியே பழகிவிட்டேன் தவறிருந்தால் மன்னிக்க.) ஆனால் இதற்கெல்லாம் அவர் தகுதியானவர் தானா? உலகத்தின் எல்லா மூலைகளிலும் விடுதலைக்கான போர் என்பது நடந்து கொண்டேயிருக்கிறது. ஒருவருக்கு விடுதலைப்போராகப்படும் விஷயம் மற்றவருக்கு வேறுவிதமாகவும் இருக்கிறது. அப்படியிருக்க எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கியூபாவின் வெற்றிகரமான விடுதலையில் பங்கு கொண்டதற்காக இவருக்கு உலக அரங்கில் இருக்கும் மரியாதை இவருக்கு உரித்தானதுதானா? அப்படியென்ன சாதனையை செய்துவிட்டார் செகுவாரா? கியூபாவைத் தவிர்த்து அவர் போராட்டத்தில் இறங்கிய பொலிவியா மற்றும் காங்கோவில் அவருடைய போராட்டம் தகர்க்கபட்டது மட்டுமல்லாமல், அவர் உறுதியாக நம்பிக்கொண்டிருந்த அவர் வகையான கொரில்லாப் போரும் தோற்றுப்போனதுதானே. பின்னர் எந்தவகையில் அவரை உலகம் மிகப்பெரும் போராளியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கேள்விக்களுக்கான விளக்கங்களைத் தேடி அலைந்த சமயங்களில் எனக்கு கிடைத்த அல்லது நான் தெரிந்து கொண்டதாய் நினைக்கும் சில குறிப்புக்களை உங்களுக்கு கொடுக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் மட்டுமல்ல உலக அரங்கிலும் கியூப நாட்டு அதிபர் பிடல் காஸ்ட்ரோவைப் போன்றே கம்யூனிஸவாதியாக தவறாக கருத்தில் கொள்ளப்பட்டவர் செ, உண்மையில் செகுவாரா கம்யூனிஸ்டா என்றால் நிச்சயம் கிடையாது இதை அவரது மனைவியின் வார்த்தைகளிலும் இன்னும் ஏன் பிடல் காஸ்ட்ரோவின் வார்த்தைகளில் இருந்துமே அறிந்து கொள்ளலாம். ஆனால் இங்குதான் நாம் செகுவாராவின் வாழ்க்கையை நன்றாகக் கவனிக்க வேண்டும்.

கியூபா செகுவாராவின் சொந்தநாடு கிடையாது, அவர் அர்ஜென்டினாவில் பிறந்தவர். அந்த நாட்டில் போராடிக் கொண்டிருந்தவர்கள், அவருக்கு வேறு எந்தவிதத்திலும் உறவும் கிடையாது. ஆனால் தனது மிகப்பிரபலமான லத்தீன் அமேரிக்க பைக் பயணத்தில் அவர் கண்டுகொள்ளும் மக்களின் இன்னல்கள் செவின் மனதை பாதிக்கின்றது. மக்களுக்காக போராடுவதற்காக செகுவாரா களத்தில் இறங்குகிறார். இன்னுமொறு விஷயம், செகுவாரா இளம் பிராயத்திலிருந்தே ஒரு ஆஸ்துமா நோயாளி.

இப்படி செகுவாரா தன்னுடைய போராட்டத்தை மக்களுக்காகத் தொடங்கியதால் தான், கியூபாவில் கிடைத்த வெற்றிப் பின்னர் கிடைத்த அரச உத்தியோகத்தை விடவும் மீண்டும் மக்கள் போராட்டத்தை உற்சாகமாய்த் தேர்ந்தெடுக்க உதவியது. கியூபாவின் விடுதலைப் போருக்குப் பின்னர், அந்த நாட்டின் இரண்டாவது மிகப்பெரும் தலைவராக இருந்து வந்த செகுவாராவிற்கும் முதலாவதான பிடல் காஸ்ட்ரோவுக்கும் சித்தாந்தந்தகளின் அடிப்படையில் சில கருத்துவேறுபாடுகள் இருந்துவந்தது. என்னதான் கம்யூனிஸ ரஷ்யாவின் உதவியால் மட்டுமே இயங்கக்கூடிய நிலையில் கியூபா இருந்தாலும். விடுதலைக்குப் பின் நேரடியாய் கியூபாவை கம்யூனிஸ நாடாக மாற்றுவதில் இருந்த பிரச்சனைகளை செகுவாரா உணர்ந்திருந்தார், மக்களுக்கு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முதலில் செய்து விட்டுத்தான் அவர்களை கம்யூனிஸ்ட்களாக மாற்றவேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்துவந்தார்.

கியூபன் மிஸைல் கிரைஸில் எனப்படும், ரஷ்யாவின் அணுஆயத ஏவுகணைகள் கியூபாவில் கொண்டு வந்து வைத்திருந்து அமேரிக்காவை அலறடித்ததில் செகுவாராவின் பங்கு அபரிமிதமானது. ஒரு பேட்டியில் அந்த ஏவுகணைகளை இயக்கும் வாய்ப்பும் அனுமதியும் இருந்திருந்தால் (அவரிடம்) அந்த ஏவுகணைகள் அமேரிக்காவின் மீது நிச்சயமாய் வீசப்பட்டிருக்கும் என்று சொன்னவர் செ. அப்பொழுது மிகப்பிரபலமான ஒன்றாக பேசப்பட்டு வந்த மாவோயிஸத்தை (ரேபிட் இன்டஸ்டிரியலைஷேஷன்) கியூபாவில் நடைமுறைப்படுத்த நினைத்தார் செகுவாரா. ரஷ்யாவோ தங்களுடைய கம்யூனிஸ முறைகளை நடைமுறைப்படுத்துமாறு அவர்கள் காஸ்ட்ரோவை வற்புறுத்தினர். உண்மையில் ரஷ்யா மற்றும் சீனாவிற்கிடையேயான பிரச்சனை கியூபாவிலும் செகுவாராவால் நீண்டது.

இந்தப் பிரச்சனையால் தான் செகுவாரா கியூபாவில் இருந்து வெளியேறி காங்கோவிற்கு சென்றாரர் என்றாலும், பிடல் காஸ்ட்ரோவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, கியூபாவிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் சுகமாய்க் கழித்திருக்க முடியும். அது மட்டுமில்லாமல் எந்த விதமான் ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்தவர் செகுவாரா. (பாடிஸ்டாவின் ஆர்மி தவிர்த்த ஆட்களையும் கொன்றார் என்பதற்கான காரணங்கள் வேறுஉண்டு.)

ஒரு மருத்துவராக வாழ்க்கையைத் துவங்கி, போராளியாகி அதில் வெற்றியும் பெற்று, அந்த நாட்டின் இரண்டாம் பெரும் தலைவராகவும் இருந்தவருக்கு மீண்டும் போராளியாக மாற வேண்டிய கட்டாயம் நிச்சயம் இல்லைதான். அதையும் மீறி மக்களுக்குக்காக போராளியாக முடிவெடுத்து அந்த போராட்டத்திலேயே உயிரையும் மாய்த்துக் கொண்டவர் செகுவாரா. அதற்குப் பின்னால் இருந்த அமேரிக்க தலையீட்டை மறைக்க முடியாது. தனியாளாக (சிறிய கும்பலுடன்) அமேரிக்க ஆதரவு பொலிவிய ராணுவத்தை எதிர்த்து போராடும் நம்பிக்கையை அவருக்கு அளித்தது கியூப விடுதலைச் சரித்திரம். அதைப் பொறுத்தவரையில் ஒரு இடத்தில் நடந்தது இரண்டு இடங்களில் நடக்கவில்லை அவ்வளவே. ஆனால் இன்று பொலிவியாவின் ஆட்சியில் நடந்த மாற்றம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் செகுவாரா விட்டுச்சென்ற கொரில்லா யுத்தத்தின் காரணத்தாலே.

இன்றும் கியூபாவை அடக்கிவிடத் துடிக்கும் அமேரிக்காவிற்கும், அது பிடல் காஸ்ட்ரோ உயிரோடு இருக்கும் வரை நடக்காது என்பது தெரிந்துதான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் செகுவாராவின் பேருக்கும் புகழுக்கும் முழுமையான தகுதியுடையவர் அவர்.


Credits, Vikatan.com, Tamiloviam.com.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In

தாமதமாக வந்துசேரும் அறிவு

ஆனாலும் ஒருதுளி

துளியெனும் ஒரு சொல்லில்
அடங்காதெத் துளியும்
கடலெனும் ஒரு சொல்லில்
கண் விழிப்பதுண்டு பெருங்கடல்
இடைவெளிவிட்டே எழும் சிறு ஓசையில்
என்னைப் பிடியெனச் சொல்லித் தப்பிக்கும்
காந்தமுள்ளில் அலைவுறும் திசைகள்
நடுவில் இருளையும் விளிம்பில் ஒளியையும்
வைத்து விளையாடும் சோதியின் மோனம்
படிகத்துள் சிக்கிய பசும்புல் நுனியில்
உறைந்த ஒரு வெற்றிடம்
பனியோ நிறம்மாறும் சூரியனோ என
யூகிக்க நீளும் இத்தவம்

என்றாலும் ஒற்றைத் துளியை
உச்சரித்துவிட முடியாமல்
ஒவ்வொரு துளியாய் வீணில் கழிகிறது
உடல்கலம் எங்கும் சேமிக்கப்பட்ட
உயிர்த் தளும்பும் மொழி.

மழை பற்றிய செய்தி

மழை பற்றிய செய்தியைக் கேட்டுக் காத்திருந்தோம்
மழை வருகிறதென்ற செய்தி தாமதமாக
வந்த ஒரு நாளின் பின்
மழை வந்தது தாமதமாக
மழை பொழிந்ததின் வரலாறு
மரங்களில் உச்சிக் கிளைகளில்
செடி கொடிகளின் இலைகளில்
கிளைகளில் சற்றே கீழிறங்கி
வேர்களில் மண்ணில் என் உள்ளோடி
வளர்ந்தது வரலாற்றுப் பிரதிகளின் பக்கங்கள்
நீரான எழுத்துக்களால்
மழையைப்பற்றிய செய்திகள்
இவ்வளவுதான்
காரணம் வரலாறு என்பது என்றைக்கும்
தாமதமாக வந்துசேரும்
அறிவுதானே.

பாவனை

அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில்
அசைவற்று மிதந்துகொண்டிருக்கும் நிலாவை
பொத்துக்கொண்டுத் துள்ளியது மீன்
நீருக்கு மேலே ஒரு கண வெட்டவெளி
கலங்கிய நிலா அதிர்வுகளடங்கி
தன்னைச் சரிசெய்து தணிவுகொண்ட
கால அளவில் தன்னை நீந்தி நிரம்பிய மீன்
ஐம்பது மீட்டர் நீளம் கொண்டதாய் மாறி
எனது தூண்டில் முள்ளில் சிக்கிப் புரண்டது
முள் தைத்த நீரின் பரப்போ ஒரு துளி ஆறு

இளம் விடியலில்தான் தெரிந்தது
மணலடர்ந்த ஆற்றில் மிதந்து அமிழ்ந்தது
நிலாவல்ல சிறு கூழாங்கல் என்பது
ஆனால் எனது ஐம்பது மீட்டர் நீள மீனை
ஊர்க்கூடி அதிசயித்ததே
அதுபோதும் எனக்கு.


இவைகள் ரமேஷ்-பிரேமின் பேரழகிகளின் தேசம் என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள். வெளியீடு மருதா. எனக்கென்னமோ இன்று படித்த இந்த நிலா கவிதை 'நீலவான ஆடைக்குள் முகமறைத்து நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை' என்ற பாரதிதாசனின் கவிதை வரிகள் நினைவில் வந்தது.

அந்தக் கவிதை முழுவதுமே பாரதிதாசன் உவமைகளின் பின்னியிருப்பார்.
"வானச்சோலையிலே பூத்த தனிப்பூவோ"
"சொக்கவெள்ளிப் பாற்க்குடமோ"
"அமுத ஊற்றோ"
"காலை வந்த செம்பருதி கடலில் மூழ்கி கனல் மாறி குளிரடைந்த ஒளிப்பிழம்போ."

கல்லூரி படிக்கும் பொழுது எனக்கு தமிழாசிரியர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பாரதிதாசனின் கவிதை எனக்கு மிகவும் பிடித்தமானது. கவிதை வரிகள் உரியவர்களுக்கே சொந்தமானவை. நன்றிகள் ரமேஷ்-பிரேம், மருதா.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In உண்மைக்கதை மாதிரி சுய சொறிதல்

ஒரு சிறு அறிமுகம்

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் திருச்சியில் தான். அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள். என்னைப்பற்றிய அறிமுகம் என் கதைகளின் மூலமாக ஏற்கனவே நிறைய எழுதிவிட்டதால் கொஞ்சம் வித்தியாசமாய், என் பதிவுலக ஆரம்பம் வளர்ச்சி என சில வரிகள்.

நான் முதன்முதலில் இணையத்தளத்தை வலம் வர தொடங்கிய பொழுது என் மாமாவெல்லாம் தமிழில் கவிதை எழுதிக் கொண்டிருந்தனர் (அதேதான் நிலா, காதல், மற்றும் இன்னபிற - அவர்களை எல்லாம் பார்த்தால் ஆச்சர்யமாய் இருக்கும் இதையெல்லாம் கூட கவிதையாய் இப்படியெல்லாம் எழுதலாமா என்று :-)). அதனால் ஏஞ்சல் பயர் அறிமுகமாகி, அப்புறம் காப்பி பேஸ்ட் டெக்னாலஜிக்களை வைத்து முதன்முதலில் ஒரு இணையத்தளத்தை ஏஞ்சல் பயரில் தொடங்கினேன். பின்னர் ஜியோசிட்டியில் ஒன்று. பிறகுதான் கொஞ்சம் அளவாய் கதை எழுதுகிறேன் பேர்வழியென்று. கீதம்.நெட்டை கொஞ்ச காலம் வாட்டி வதைத்தேன்.

பின்னர் போதும் நீ கீதத்தில் கிழித்தது என்று நானே நினைத்துக் கொண்டிருந்த சூழ்நிலையில், தான் காலச்சுவட்டில் ஜேபி சாணக்யாவின், ஆண்களின் படித்துறையை படித்து விட்டு, ஜேபி யை கூகுளில் தேட அது பிகேசிவக்குமாரின் வலைபதிவிற்கு சென்றது. இலக்கியத்தேடல் எனக்கு இருந்ததுன்னு இப்பவாவது ஒத்துக்கோங்க மக்களே, வேற வழியேயில்லை. அங்கே போட்டேன் முதல் பின்னூட்டத்தை. ஆனால் அவர் அதை கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை. அதனால அப்படியே விட்டுற்றதா, நான் யாருன்னு காண்பிக்காம விடறதில்லைன்னு மரத்தடிக்கு போனேன்.

பின்னர் அப்படியே கொஞ்ச நாள் மரத்தடியில் ஓசி காஜி அடித்துவிட்டு, தொடங்கியது தான் என்னுடைய வலைத்தளம். (கேவிஆர், நடராசன், ஆசாத் பாய், மீரான் அண்ணாச்சி போன்றோர் இனிமேல் கதையெல்லாம் எழுதினே கையக்காலை உடைச்சிறுவேன் பயமுறுத்தியதால் தான் நான் மரத்தடியை விட்டு(அந்தப் பழம் புளிக்கும்) வலைத்தளம் தொடங்கினேன் என்பதெல்லாம் வதந்தி என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.)

அப்படியே தமிழ்மணத்திற்கு தொடுப்பு கொடுத்துவிட்டு பார்த்தால், பெரிய பெரிய விஷயமெல்லாம் நடத்துக்கிட்டு இருந்தது தமிழ்மணத்தில். சரி இதையும் ஒரு கை பார்ப்போமுன்னு களத்தில் குதித்தேன். இருக்கவே இருந்தது விகடன்.கொம். வெள்ளிக்கிழமை சுடச்சுட விகடனிலிருந்து மாவெடுத்து தோசையை நான் என் வலைபதிவில் சுட, பின்னூட்டம் வந்துச்சோ இல்லையோ கவுண்டரு எப்பப்பாரு ஆயிரம் பேரு வந்தாங்க வெள்ளிக்கிழமைன்னு சொல்லிக்கிட்டேயிருந்துச்சு.

சரி இப்படியே உட்டால் அப்புறம் சரி வராதுன்னு, நம்ம பழைய கதையை எல்லாம் விட்டேன் இதையும் யாரும் கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை. அப்ப முடிவெடுத்தது வாத்தியாரோட பிரம்மாஸ்திரம், ஜல்லியடிக்கிறதுங்கிறதை. கொஞ்ச நாள் நானும் நல்லாத்தான் ஜல்லியடித்துக் கொண்டிருந்தேன். ஒரு வழியா இவ்வளவு நாளா நான் புரொஜெக்டில் என்னத்த கிழிக்கிறேன்னு தெரிஞ்சிக்கிட்ட கம்பெனி, ஒட்டுமொத்தமா ப்ளாக்கரையே பேண்ட் பண்ணிட்டாங்க. அப்புறம் கொஞ்ச நாள் மூடிக்கிட்டிருந்த நான் இப்பல்லாம் அதிகமா பொலம்பாம அப்பப்ப புலம்பிக்கிட்டிருக்கேன்.

நானும் கதையெழுதுகிறேன் பேர்வழியென்று எழுதிக் கிழித்துக் கொண்டிருக்கிறேன். இன்றும் கூட என் கல்லூரியை மையமாக வைத்து ஒரு நாவல் மாதிரி எழுதுகிற ஐடியாவெல்லாம் உண்டு. (பைவ் பாய்ண்ட் சம்திங்கின் தாக்கம்) ஆரம்பத்தில் இருந்தே சொல்லிவந்தது போல் கிடைக்கும் நேரம் குறைவாக இருப்பதால் அதை மறந்து விட்டேன். (எழுதினாலும் அச்சில் எல்லாம் இப்போதைக்கு கொண்டுவரமாட்டேன் பயப்படாதீர்கள். கல்யாணத்திற்கு வாங்கும் வரதட்சணையை வைத்து தமிழுக்கு என்னாலான உதவியை(அச்சில் கொண்டுவருவது) செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன். எல்லாம் வல்ல எங்கம்மாவும் அக்காவும் இதற்கு உடன்பட வேண்டும் (கேவிஆர் - இங்கேயும் இழுத்துட்டேன்)) மற்றபடிக்கு தற்சமயம் நிறைய விஷயங்களை படித்துக்கொண்டும், சில விஷயங்களை எழுதிக்கொண்டும் இருக்கிறேன்.

நான் எழுதியவைகளில் தேவதையின் காதலன் என்ற சிறிய தொடர்கதை எனக்கு பிடித்தமானது. நான் பைவ் பாய்ண்ட் சம்திங் போல் ஒன்று எழுதினால் அது இந்தக் கதையின் விரிவாகத்தான் இருக்கும்.

Thanks: Tamiloviam.com

PS: நான் பிகேஎஸ் பதிவைப்பற்றி எழுதியிருந்ததற்கு பிகேஎஸ் தமிழோவியத்தில் பதிலளித்திருந்தார். பார்க்கவேண்டுமானால் மேலேயுள்ள லிங்கை கிளிக்கவும்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In வகைப்படுத்தப்படாதவை

பார்த்தலில்... கேட்டலில்... படித்ததில்...

பார்த்தலில் கேட்டலில் படித்ததில் என்று சுரேஷ் கண்ணன் எழுதியிருந்து பின்னர் விருப்பப்படுபவர்கள் தொடருமாறு சொல்லியிருந்தார். சோம்பேறித்தனத்தில் ஒன்றாம் நம்பரான எனக்கு இதைப்பற்றி எழுதும் ஆசை இருந்ததாலும் எதையாவது எழுதவேண்டும் போல் இருப்பதாலும் தொடர்கிறேன்.

எனக்கான பிடித்த விஷயங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன, எப்படி பொன்னியின் செல்வனில் தொடங்கி சாண்டில்யன் வழியாக, சுஜாதா பாலகுமாரன் என படித்து இப்பொழுது, ரமேஷ் பிரேம், ஜேபி சாணக்யா, சாரு நிவேதிதா, சுரா, ஜெயமோகன், எஸ்ரா என்று மாறிக்கொண்டேயிருக்கிறது. இது மொத்தமும் தமிழில் நான் உணர்ந்தவை ஆங்கிலம் முடிந்தால் இன்னுமொறு பதிவில்.

படித்ததில் பிடித்தது,
ஒரு புளியமரத்தின் கதை,
உபபாண்டவம்
ஜெயமோகன் குறுநாவல்கள் (குறிப்பாக லங்காதகனம்)
ஜூனோ இருபாகங்கள் (சுஜாதா என்று சொல்லவும் வேண்டுமா)
பயணிகள் கவனிக்கவும் (பாலகுமாரன், ஏறக்குறைய அத்தனையையும் படித்திருப்பேன் உடையார் 5 வரை. இது மிகவும் பிடித்திருந்தது. காரணமெல்லாம் கேட்டால் சொல்லத்தெரியாது.)
ஸீரோடிகிரி (சாரு நிவேதிதா - உவ்வே என்று வந்தாலும் பிடித்திருந்தது)
சொல் என்ற ஒர் சொல்(பின்நவீனத்துவத்தை உண்டு இல்லைன்னு பார்த்திர்றதுன்னு ஒத்தக் காலில் நின்று படித்த புத்தகம் அப்படியே வாங்கிய அவர்களின் நாவல்களின் தொகுப்பு.)
மரப்பசு தி.ஜானகிராமன் (மீண்டும் ஒரு முறை வாங்க வேண்டும். யாரோ எடுத்து சென்று விட்டார்கள்.)
சரி சரி பொன்னியின் செல்வன்(இதனுடன் நான்கைந்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்)
மற்றது, கடல்புறா மொத்தமாக இதுவும் நான் சின்ன வயதில் படித்திருந்ததால் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட ஒன்று.

கேட்டதில் (எனக்கும் பாடல்களுக்குமான விருப்பம் ரொம்பவே வித்தியாசமானது. இதில் வேறெதையும் எதிர்பார்க்காதீர்கள்.)

நெஞ்சினிலே நெஞ்சினிலே (உயிரே..)
தங்கத்தாமரை மகளே(மின்சாரக் கனவு)
இது ஒரு பொன்மாலைப் பொழுது..
வெண்மதியே வெண்மதியே நில்லு
முன்பனியா முதல் மழையா
தொம் தொம் (சிந்து பைரவி)
ரோஜா ரோஜா (காதலர் தினம்)
எங்கே எனது கவிதை (கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்.)
என் வானிலே (ஜானி ஜானி ஜானி)
லஜ்ஜாவதியே (4 த பிரண்ட்ஸ்)

பார்த்ததில் பிடித்தது நான் கமல் ரசிகன் அல்ல இது ஒரு முக்கியமான குறிப்பு

நாயகன்
குருதிப்புனல்
தளபதி
மைக்கேல் மதன காமராஜன்
திருவிளையாடல் (சிவாஜி)
அதே கண்கள்(ரவிகுமார் நடித்தது)
எதிர் நீச்சல்(நாகேஷ் படிக்கட்டு கீழிருந்து படிப்பதாக வருமே அது இந்தப் படம் தானே.)
வீடு
அவள் அப்படித்தான்(இது முழுக்க முழுக்க ரஜினிக்காக பின்னியிருப்பார் அப்படியே ஸ்ரீப்ரியாவும்)
அப்புறம் கட்டக் கடேசியா புதுப்பேட்டை.

சுரேஷ் சொன்ன பல படங்களை நானும் சொல்லியிருக்கிறேன், என்பது கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் அவை அத்தனையும் நல்ல படங்கள். அதேபோல் தான் இதுவும் விரும்புபவர்கள் தொடரலாம்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ்

கொஞ்ச நாளைக்கு லீவில் போறேன்

ஏற்கனவே லீவில் இருப்பது போலத்தான் இருக்கேன். இருந்தாலும் கொஞ்சம் சங்கோஜமா இருந்தது. ஆத்தில் இறங்குறதுனா இறங்கணும் இல்லை சேற்றில் நிற்பதுன்னா நிக்கணும். அதைவிட்டுட்டு ஆத்தில் ஒரு கால் சேத்தில் ஒரு கால் வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

அதனால் கொஞ்ச நாள் என் கம்ப்யூட்டர் வேலையை கருத்தில் கொண்டு நீண்ட ஓய்வில் செல்லலாமென்றிருக்கிறேன். அப்படியே ஒரு விஷயம் இந்த வாரம் தமிழோவியத்தில் சிறப்பு ஆசிரியராக நான்கு விஷயங்களை எழுதியுள்ளேன்.அந்த வாய்ப்பை கொடுத்ததற்கு தமிழோவியத்திற்கும் கணேஷ் சந்திராவிற்கும் நன்றி.

வருகிறேன்.

(இந்த பதிவிற்கு வரும் பின்னூட்டங்கள் பதிவிடப்படாது. அதனால் கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்னூட்டமிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.)

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ்

பொன்னியின் செல்வனும் என் பொடலங்காய் ஐடியாவும்

பொன்னியின் செல்வனைப் பற்றி இப்பொழுது வலைப்பதிவுகளில் சில விஷயங்கள் பேசப்பட்டுவருகிறது.

நானும் பொன்னியின் செல்வனைப் படித்திருப்பதால் அதைப்பற்றிய என்னுடைய புடலங்காய் ஐடியாவையும் தரலாம் என்று உத்தேசம்.

என்னைப் பொறுத்தவரை வந்தியத்தேவனுக்கு சரியான சாய்ஸ் ரஸல் குரோ, கிளாடியேட்டர் படத்தில் உணர்ச்சியைக் கொட்டி நடித்திருப்பார்.



பிறகு குந்தவைக்கு கொஞ்சம் பொறுத்தமான சாய்ஸ் ஏஞ்சலினா ஜூலி. அலெக்ஸாண்டர் படத்தின் காரணமாய். மகனுக்கு அறிவுரைகள் சொல்லும் அவரை தம்பிக்கு அறிவுரை சொல்பவராக ஆக்கிவிடலாம்.

அப்படியே பொன்னியில் செல்வருக்கு கொலின் பெரல்,
ஆதித்த கரிகாலனுக்கு டென்சல் வாஷிங்க்டன்
பிரம்மராயருக்கு டாம் ஹாங்ஸ் (என்னைப் பொறுத்தவரை மிகச்சரியான பொறுத்தம்)



டாம் குருஸைத்தான் அக்காமொடேட் பண்ணமுடியாது, வேண்டுமானால் பொன்னியின் செல்வன் கதையில் நந்தினி கதாப்பாத்திரக் கற்பனைப்போல படத்தில் வேறு ஒருவரை போர்வீரனாக் போட்டு அதில் டாமை தள்ளிவிடலாம், சாமுராய் படத்தில் போட்டுத்தாக்கியிருப்பார்.

வானதிக்கு என்னைப்பொறுத்தவரை கொஞ்சம் இளசாய் விளையாட்டுத்தனத்துடன், ட்ரூ பாரிமூர் சரியாகவருவார்.

நந்தினியாக ஷெரன் ஸ்டோன், பழிவாங்கும் கதாப்பாத்திரம் கனகச்சிதமாக பொறுந்துவார் இல்லையென்றால் மடோனா.

என்ன பட்ஜெட் கொஞ்சம் இடிக்கும் ஆனால் இன்டெர்னேஷனல் படமாக இருக்கும் என்பதால் விட்டுப்பிடிக்கலாம், என்னது கமல்ஹாசனை மறந்திட்டனே, வேண்டுமானால் ரவிதாஸன் கிரமவித்தன் கதாப்பாத்திரம் சரிவரும் அவருக்கு. அடப்போங்கப்பா!

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In Only ஜல்லிஸ் சுய சொறிதல்

நன்றி! நன்றி!! நன்றி!!!

சிலரின் வேண்டுகோள்களுக்கு இணங்க முந்தய பதிவு வாபஸ் வாங்கப்படுகிறது.

தேன்கூடு போட்டியில் மூன்றாவது இடமாம், கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் கொஞ்சம் சந்தோஷமும் இருக்கிறது.

ஒட்டு போட்டவர்களுக்கும்(?) தேன்கூட்டிற்க்கும் நன்றி.

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In வகைப்படுத்தப்படாதவை

இவங்கல்லாம் பேசுறதக் கேளுங்க








Spiro Agnew - Hippies

Anwar al-Sadat - Peace

Apollo 11 - The Eagle Has Landed

Apollo 11 - One Small Step For Man

Apollo 13 - Houston We Have a Problem

P.T. Barnum - 1890 Commercial

Battle of Midway - Eyewitness Account

Marlon Brando - Offer He Can't Refuse

William Jennings Bryan - The Republic

George Bush - Death of Communism

Johnny Carter - Nomination

Fidel Castro - Ambition

Fidel Castro - Cuban Revolution

Fidel Castro - We Have The Power

Neville Chamberlain - Meeting With Hitler

Winston Churchill - Finest Hour

Bill Clinton - Renewal

Calvin Coolidge - America and the War

Calvin Coolidge - Duty of Government

James Dean - Tearing Me Apart

John Dulles - Free People Will Never Remain Free

Amelia Earhart - Aviation

Amelia Earhart - Women

Thomas Edison - Electricity and Progress

Albert Einstein - E=mc^2

Albert Einstein - Non-Violence

Albert Einstein - Nuclear Weapons

Albert Einstein - World Peace

Robert Frost - Fire and Ice

Mahatma Gandhi - Soldier of Peace

Bill Gates - Vision

Lou Gehrig - Luckiest Man

Hermann Goering - Dimitrov

Hermann Goering - Prussian State Council

Hermann Goering - Stalingrad

Samuel Gompers - Labor's Service to Freedom

Che Guevara - Speech 1

Che Guevara - Speech 2

Che Guevara - Speech 3

Al Gore - Internet

Adolf Hitler - Announcement of his death

Adolf Hitler - War Declaration

Lyndon Johnson - All Men Are Equal

Edward Kennedy - Eulogy for Robert

John F. Kennedy - Cuban Missile Crisis

John F. Kennedy - Announcement that he had been shot

John F. Kennedy - Announcement of his death

Robert Kennedy - What We Need

Dr. Martin Luther King Jr. - I Have a Dream

Vladimir Lenin - 1918 Speech

The Life Alert Commercial "Help I've fallen and I can't get up!"

Charles Lindbergh - No Intervention (1941)

Charles Lindbergh - Seeing Europe

Douglas MacArthur - Fade Away

Malcolm X - Conditions in the Ghetto

Malcolm X - By Any Means

Malcolm X - Open Revolt

Malcolm X - No Unity

Malcolm X - White Man is the Enemy

Nelson Mandela - Freedom For All

Joseph McCarthy - Jackals

Joseph McCarthy - One and the Same

Joseph McCarthy - Traitors are not Gentlemen

Margaret Mead - Women's Work

Richard Nixon - 1971 State of the Union Address

Al Pacino - Scarface

Pearl Harbor Attack - BBC Announcement

Pearl Harbor Attack - CBS Announcement

Pearl Harbor Attack - NBC Announcement

Robert Edwin Peary - North Pole

John Pershing - Fighting For You

Dan Quayle - Representative

Ronald Reagan - Government is the Problem

Paul Reubens - Take a Picture

John D. Rockefeller Jr. - Address

Eleanor Roosevelt - Freedom and Justice

Franklin Delano Roosevelt - Declaration of War Against Japan

Franklin Delano Roosevelt - Inaugural Address

Franklin Delano Roosevelt - 1940 Democratic National Convention Speech

Franklin Delano Roosevelt - Announcing Beginning of World War 2

Franklin Delano Roosevelt - Requesting War on Japan

Theodore Roosevelt - Social and Industrial Justice

Theodore Roosevelt - The Right of the People to Rule

Ernest Shackleton - My South Polar Expedition

Josef Stalin - Address

Josef Stalin - Fight Fascists

Josef Stalin - Germany

Gloria Steinem - Humanism

William Howard Taft - The Rights of Labor

Margaret Thatcher - Falkland Islands

President Truman - Atomic Bombing of Japan

President Truman - Threatening Japan

Woodrow Wilson - 1915 Speech to Indians

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In கவிதைகள் சுய சொறிதல் சொந்தக் கதை

எதையோ மிதித்ததைப்போல்...

ஆச்சர்யத்திற்கு
உட்படுத்துவதாகவேயிருக்கின்றன
என்னைப்பற்றிய
அக்காவின் புரிதல்கள்
வெகுதூரத்தில் கேட்கும்
வண்டிச்சத்தத்தில்
என் பிம்பத்தை
உணரும் நாய்க்குட்டியைப் போல்

தகர்த்தெறியப்பட்ட
மனநாற்றம் தூக்கியெறிகிறது
இரவில் காலுறையை கழற்ற
மறுப்பதைப்போன்ற
முயற்ச்சிகளை அவளின்
ஒற்றைப்பார்வை

சிரித்தபடியே
ஒவ்வொருமுறையும்
முகத்திலறைவதற்காய்
காத்திருக்கும் அவள்
பின்னியிருக்கும் புதைகுழியில்
தெரிந்தே ஆழத்திற்குள் விழுந்தவனாய்
கூசித்தான் போகிறேன்
என்னை மறுத்தவளின்
நிலையறிந்ததும்
மகிழும் மனவுணர்வுகள் புரிய
எதையோ மிதித்ததைப்போல்...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சுய சொறிதல் சுஜாதா தேன்கூடு

சுஜாதாவும் என் கதைக்கான சில விளக்கங்களும்

தொடர்கதை தொடரா வந்தா படிக்கிறதில்லைன்னு ஒரு முடிவில் இருந்தேன், ஆனால் வாத்தியார் முடிவை மாத்த வைச்சிறுவாரு போலிருக்கு. ஆனால் அந்தக் காலத்தில் இருந்த அளவிற்கு கணேஷ் வசந்த் கிரேஸ் இப்ப இல்லைங்கிறது உண்மை. பிரகாசமா மெக்ஸிகோ சலவைக்காரியுடன் ஆரம்பித்திருக்கிறார்.

தேர்தல் முடிஞ்சிருச்சு. என்னமோ நான் நினைச்சது நடக்கலை, கலைஞர் வருவார்னு தெரியும் ஆனால் தனியா வருவார்னு நினைத்தேன். ஒரு விதத்தில் ரோசாவசந்த் எழுதியிருந்ததில் எனக்கும் உடன்பாடு உண்டு. இதே ஜெயலலிதா பதவிக்கு வந்திருந்தால் இரண்டு நாளைக்கு சோறு தண்ணீர் இறங்காது. இதை நான் போனமுறை உணர்ந்திருக்கிறேன். ஆனால் காரணமெல்லாம் தெரியாது. மனசு ஏனோ அலைபாயும். இதை நான் ஆரம்பக்காலங்களில் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் தோற்றாலும் உணர்ந்திருக்கிறேன்.

எனக்கு பெரும்பாலும் தேன்கூடு நடத்துவதைப்போன்ற போட்டிகளில் விருப்பமிருந்ததில்லை, மக்களை தேர்ந்தெடுக்க சொல்லும் இதுபோன்ற போட்டிகளில் இருக்கும் குழப்பம் எனக்கு பிடித்ததில்லை. ஆனால் கொஞ்ச நாளாகவே மனதிற்குள் சுற்றிக்கொண்டிருந்த ஒரு விஷயத்தை எழுத கிடைத்த வாய்ப்பாக இதை நினைத்தேன். அதனால் தான் எழுதினேன். சிலர் அந்தக் கதையில் சில பாதிப்புகள் இருப்பதாக சொன்னார்கள். நான் பாதிப்புகள் இல்லாமல் இருப்பதற்காக பெரும்பாலும் உட்கார்ந்து திருத்துவதில்லை. என்னைப்பொறுத்தவரை, எந்த கதையின் தாக்கமும் இல்லாமல் தான் எழுதினேன்.

எங்கள் கம்பெனியின் இமெயில் முகவரியில் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது, இதுபோல் உங்கள் ப்ளாக்கை படிப்பேன் தற்சமயம் தான் தெரிந்தது நீங்கள் இங்கே வேலை செய்கிறீர்கள் என்று சந்திக்கலாமா என்று கேட்டு. கேட்டு வந்த கடிதம் எழுதியவர், ஒரு ப்ளோர் மேலே தான் உட்கார்ந்திருந்தாலும் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏற்கனவே ஞானசேகர் என்ற ஆர்இசி யில் படித்த மாணவர் ஒருவர் என் கம்பெனியில் இருந்து தமிழில் வலைபதிகிறார். சிலசமயம் நாங்கள் சந்தித்து வலைபதிவு நிலவரங்களை பேசுவதுண்டு. (புனே வலைபதிவர் வட்டம்.)

இரண்டொறு நபர்களை உள்ளே இழுத்துவிட்டேன், ஆனால் அவர்கள் தமிழ்மணத்தைப் பற்றி கேட்கும் சில கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கட்டாயப்படுத்தாமல் விட்டுவிட்டேன். அதே தேர்தல் 2060 தலைப்பிற்கு ஒரு நகைச்சுவை கதை எழுதலாமா என்று யோசித்து வருகிறேன். அவ்வளவு பிரகாசமாக வராதென்று தெரியும் ஆதலால் தற்போதைக்கு விட்டு வைக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In திரில்லர் தொடர்கதை

கொலைத்தொழில் வல்லவன் - 3(New)

“இதில் பேசவேண்டாமே, பத்து நிமிடத்தில் உங்களைச் சந்திக்கிறேன்.”

ஒரு சில வார்த்தைகளில் அவள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்ட, இந்திரஜித் என்ற அவள் தந்தையின் நண்பர், சொன்னது போல் பத்து நிமிடங்களில் வந்து சேர்ந்தார். நன்கு வாட்ட சாட்டமாக இருந்தாலும் அவர் நடை உடை பாவனைகளில் ஒரு உளவாளியைப் போன்ற சிறு அறிகுறிக்கூட அவரிடம் தெரியவில்லை அவளுக்கு.

“உங்களுக்கே தெரிந்திருக்கும் என் அப்பா இறந்துபோன விஷயம். அவர் இறக்கும் முன் எனக்கு அனுப்பிய கடைசிக் கடிதத்தில் என்னுடைய உயிருக்கும் ஆபத்திருப்பதாகவும். உங்களிடம் உதவி கேட்குமாறும், சுவிட்சர்லாந்திற்கு போய்விடுமாறும் சொல்லியிருந்தார்.”

தீபிகா மெதுவாய்ச் சொல்லிவிட்டு, அந்த மனிதரிடம் ஏதாவது முகமாற்றம் ஏற்படுகிறதா எனக் கவனித்தாள், கண்களுக்கு ஏற்கனவே கூலிங்கிளாஸ் அணிந்திருந்ததால், அவர் முகபாவாத்தைக் கொண்டு ஒன்றும் உறுதிசெய்ய முடியவில்லை.

“உங்கக்கிட்ட ஏற்கனவே பாஸ்போர்ட் இருக்கா?” கேட்ட இந்திரஜித் சிறிது யோசித்துவிட்டு, “சரி வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் சுவிஸ் செல்வதற்கு தயாராக இருங்கள்.” சொல்லிவிட்டு போயேவிட்டார்.


அவளுக்கும் தெரியும் தந்தை தன்னிடம் சொல்லியதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் அவரால் தன்னிடம் கேட்கமுடியாதென்பது, அவர்கள் வழக்கப்படி, வார்த்தை தான் முக்கியம். ஆனால் அதே நேரத்தில் அப்படி தன்னையும் தன் வார்த்தையையும் நம்பும் ஒருவரை ஏமாற்ற வேண்டியிருக்கிறதே என நினைக்கும் பொழுதே தீபிகாவிற்கு கண்களில் நீர் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. ஆனாலும் தன் மனஉறுதியை குலைக்கும் எந்த விஷயத்தையும் அனுமதிக்காமல் எல்லாம் நன்மைக்கே என்று இந்திரஜித்திற்காக காத்திருக்கத் தொடங்கினாள்.

.

செய்தி,

உள்துறை அமைச்சர் சந்தகோஷ் முகோபாத்யாய் ராஜினாமா.

சொந்தக்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் தனக்கும் பிரதமர் அவர்களுக்கும் சிண்டுமுடிக்கும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அதை முற்றிலும் தவிர்க்கும் நோக்கமாக தன்னுடைய உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் அந்த கடிதத்தை பிரதமமந்திரிக்கு அனுப்பிவிட்டதாகவும் தெரிகிறது.

பிரதமர் உள்துறை அமைச்சரின் ராஜினாவை ஏற்றுக்கொள்ளக் கூடாதென்று, மத்திய மந்திரிகள் பலர் பிரதமரின் இல்லத்தின் முன்னர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்கள்.

.


ஸ்யூரிச் விமானநிலையத்தில் வந்திறங்கிய தீபிகாவை வரவேற்க, இந்திரஜித் சொல்லியிருந்ததைப் போன்றே சற்று நடுத்தர வயதுள்ள ஒரு மனிதர் கையில் பெயர்ப்பலகையுடன் காத்திருந்தார். அவரிடம் எந்தெந்த விஷயங்ளை சொல்லலாம், எதைச் சொல்லக்கூடாதென்று அவளுக்கு சொல்லப்பட்டிருந்தது. அந்த நபர் சுவிட்சர்லாந்தில் ஒரு உணவகம் நடத்துபவர் என்பது மட்டும் அவளுக்கு தெரியும். அதிலும் அந்த நபர் ஒரு தமிழ் தெரிந்தவர் என்பது தீபிகாவிற்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

அவரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவளுக்கு, விமானநிலையத்திலிருந்து அவர் வீடு செல்லும் வரை, தான் கடைசியாக இந்திரஜித்துடன் பேசியது தான் நினைவில் வந்துகொண்டேயிருந்தது.

.

“தீபிகா, உங்க அப்பா ஏன் அப்படிச் சொன்னார் என்பது தெரியாது எனக்கு. உங்களுக்கும் ஜகதாவிற்கும் இருக்கும் தொடர்பு என்னைத்தவிர யாருக்குமே தெரியாது.

ஆனால் எங்கள் பழக்கவழக்த்தில் சிலதடவை மனம் சொல்லும் விஷயத்திற்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும். அதேபோல் உங்கள் தந்தையும் ஏதோ அவர் மனதில் பட்டதால் இப்படி சொல்லியிருக்க வேண்டும் அதனால் எவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து சென்றுவிடமுடியுமோ சென்றுவிடுங்கள். உங்களுக்கான பணம் ஏற்கனவே வங்கியில் இருக்கும். என்னிடம் கேட்பதற்கும் தயக்கம் வேண்டாம்.

நீங்கள் சுவிட்சர்லாந்தில் என் தூரத்து சொந்தக்காரர் ஒருவரின் வீட்டில் தங்கலாம். உங்களுக்கு விருப்பமிருந்தால் அவருடைய உணவகத்தில் வேலைக்கூட செய்யலாம். அவர்கள் உங்களைப்பற்றிய விவரங்களை கேட்க மாட்டார்கள். நீங்கள் சொல்லவேண்டாம். மற்றபடிக்கு சிறிது காலத்திற்கு பிறகு நீங்கள் மறுபடியும் இங்கே வருவதற்கு விருப்பப்பட்டால் அதுவும் நிறைவேற்றப்படும்.”


ஆனால் கடைசிவரை ஆந்தனியைப்பற்றிக் கேட்க நினைத்த தீபிகாவால் அந்த விஷயத்தைக் கேட்க முடியவில்லை, அசாதாரணமான அறிவுடைய உளவாளிகள், மற்றவர்கள் பேசும் ஒவ்வொருவார்த்தையையும். கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என நன்கறிந்த தீபிகாவிற்கு அவள் இந்த சமயத்தில் ஆந்தனியைப் பற்றிக் கேட்பதில் இருக்கும் சிக்கல் தெரிந்துதான் இருந்தது.

.

ஆந்தனிக்கு கியூபாவில் இருக்கும் ஒரு அமேரிக்க எதிரியைக் கொல்வதற்கான அசைன்மெண்ட் வந்திருந்தது. கியூபாவின் பொருளாதாரத்தில் இருக்கும் நிலையால், உளவாளிகளின் வேலைகள் வெகுசாதாரணமாக நடக்கும் ஒரு நாடுதான் என்ற பொழுதும். அவனுக்கு அசைன்மெண்ட்டாக கொடுக்கப்பட்டிருக்கும் நபர். கியூபாவில் மிகவும் பாதுகாப்பான பகுதியில் இருப்பவன், பயங்கரமான சாமர்த்தியசாலியான அவனை, அமேரிக்காவில் இருக்கும் பொழுதே போட்டுத்தள்ளிவிட நினைத்த அமேரிக்காவின் சிஐஏவை ஏமாற்றி விட்டு தற்பொழுது கியூபாவில் அடைக்கலம் புகுந்திருக்கிறான்.

அவனைப்பற்றிய விவரங்கள் அடங்கிய சிடி ஆந்தனிக்கு வந்து சேர்ந்த பத்தாவது நாளை ஆந்தனி, தன்னுடைய டார்கெட்டாக் வைத்திருந்தான். அவனுடைய திட்டத்தின் படி சரியாக எட்டாவது நாளே ஹவானா விமானநிலையத்தில் வந்திறங்கிய அவன். தன் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமாக மாறப்போகும், அந்த பத்தாவது நாளுக்காக காத்திருக்கத் தொடங்கினான்.

.

வந்ததில் இருந்தே அங்கிருக்கும் ஆட்களிடம் அதிகமாக பேச்சுக் கொடுக்காமல் தீபிகா இருக்க, உணவகத்தின் முதலாளி கண்ணன், முதலில் வலியச்சென்று பேச்சுக்கொடுத்த பொழுதும். இவள் மௌனம் கடைபிடிக்க அவரும் அவர் குடும்பத்தினரும் சரி, புது இடம் பழகினால் சரியாய்ப் போகும் என நினைத்து விட்டிருந்தனர்.

ஆனால் தீபிகாவிற்கு அவள் சுவிட்சர்லாந்து வந்ததின் அர்த்தமே தான் ஆந்தனியை சந்திப்பதில் இருக்கிறது என்பது சரியாகத் தெரிந்திருந்ததால். அவளின் எண்ணம் முழுக்க அதைப்பற்றியே சுற்றிவந்தது. தன்னால் அவனை தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்ளவே முடியாதென்பது அவளுக்கு தெரிந்துதான் இருந்தது. இரண்டு மூன்று நாட்கள் தீவிர யோசிப்பில் மீண்டும் அவளுக்கு ஏதோ ஒரு யோசனைத் தட்டுப்பட்டதைப் போலிருக்க, மீண்டும் ஒரு முடிவுக்கு வந்தவளாய்.

அந்த எண்ணுக்குத் தொலைபேசினாள்,

“ஹுலோ இந்திரஜித், எனக்கு பயமாயிருக்கிறது. என்னைத் தொடர்ந்து இங்கேயும் கொல்வதற்கு ஆட்கள் வந்திருப்பதாய்ப்படுகிறது. ஒரு ஆள் என்னையே சுற்றிச்சுற்றி வருவதாய்ப் படுகிறது. நீங்கள் தான் உதவவேண்டும்.”

முந்தைய அந்தியாயங்கள்
கொலைத்தொழில் வல்லவன் 1 & 2

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை தொடர்கதை

பிரிவென்னும் மருந்து

அப்படியொரு சம்பவம் நடக்குமென்று யாரும் அதற்கு முன்னர் நினைத்துக்கூட பார்க்கவில்லை, ஆனால் நடந்தது. நன்றாக நினைவில் இருக்கிறது அந்த ஒன்றிரண்டு மாதங்கள், ஒவ்வொன்றும் பசுமையாக இன்று நினைத்துப்பார்க்கும் பொழுது சிரிப்பாக வந்தாலும் அன்றைய என்னுடைய நிலைமை எனக்குத் தெரிந்துதான் இருந்தது.

இனிமேல் முடியாது என்பதான ஒரு நிலைக்கு நானும் வந்திருந்தேன், அகிலாவும் வந்திருந்தாள். நாங்கள் நடத்திக்கொண்டிருந்த நாடகத்திற்கும் ஒரு முடிவு வேண்டுமே. அந்த நாளும் வந்தது.

"மோகன் உங்கக்கிட்ட ஒரு விஷயம் தனியா பேசணும்."

யார் முதலில் இந்தப் பிரச்சனையை ஆரம்பிப்பது என்று குழம்பிக்கொண்டிருந்த நிலையில் என்றைக்கும் போல் அவள்தான் ஆரம்பித்து வைத்தாள். அவள் ஒரு இரவு பீடிகை போட எனக்கும் அவளிடம் கொஞ்சம் பேசவேண்டியிருந்ததால்,

"ம்ம்ம் சொல்லு."

"இங்கப்பாருங்க இதுக்கு மேல என்னால முடியாது, வாழ்க்கையில ஒரு தப்பு பண்ணிட்டேன். அதென்ன அவ்வளவு பெரிய தப்பா, நீங்க யாரையாவது இதுக்கு முன்னாடி காதலிச்சிருக்கிறியான்னு கேட்டப்ப, ஆமாம்னு சொல்லாம இல்லைன்னு சொல்லிட்டேன் அவ்வளவுதான் நான் செய்தது. அன்னிக்கே ஆமாம்னு சொல்லித் தொலைத்திருக்கணும். உங்களைப் பத்தி கொஞ்சம் தெரியும். ஆனா இவ்வளவு நல்லவரா இருப்பீங்கன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறமாத்தான் தெரியும்.

உங்களுக்கு என்ன தெரியணும் நான் யாரையாவது காதலிச்சேனான்னு தானே, ஆமா ஒரு மடையனை காதலிச்சேன் வேற யாரும் இல்லை என் மாமா பையன்தான் அது. அதுவும் நானா ஆரம்பிச்சது கிடையாது. அவனை தான் எனக்கு கட்டுறதா இருந்தாங்க அதனால கொஞ்சம் பழக்கம் அவ்வளவுதான். அது காதலான்னு கேட்டீங்கன்னா தெரியலை. ஏன்னா எனக்கு காதலோட அளவுகோள்கள் தெரியாது. ஆனா அவனைப் பார்க்கணும்னா ரொம்ப பிடிக்கும். அவன்கிட்ட பேசகிட்டிருக்கணும்னு தோணும். அதுக்காகவே அவங்க வீட்டுக்கு அடிக்கடி போவேன். அவ்வளவுதான். வேற எந்த மாதிரியான தொடர்பும் எனக்கும் அவனுக்கும் கிடையாது. அது பத்திய சந்தேகம் உங்களுக்கு இருக்காதுன்னு தெரியும். உங்களைப் பொறுத்தவரை நான் பொய் சொன்னது தான பெரிய பிரச்சனை.

இப்ப சொல்றேன் ஆமாம் அவனை காதலிச்சேன். ஆனா அதுக்காக இப்ப வருத்தப்படலை. அன்னிக்கு நடந்தது நடந்தது தான். இன்னிக்கு அவன் மேல ஒரு துளி கூட ஆசையே வேற எந்த எழவுமோ இல்லை.

வரதட்சணை கம்மியாக் கொடுப்பாங்கன்ற ஒரே காரணத்துக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் போனவன் அவன், உங்க அம்மா சொன்னாங்கங்கிறதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டவர் நீங்க, அதுவும் ஒரு பைசா வாங்காமல், அவனைப் பற்றிய நினைப்பையெல்லாம் தூக்கியெறிந்து பலவருஷம் ஆச்சு, முதல் காதல் கடைசி வரைக்கும் அழியாது அது இதுன்னு சும்மா சொல்லுவாங்க அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை என் விஷயத்தில். உங்கக்கூட அவனை கம்ப்பேர் பண்றதைக் கூட தப்பா நினைக்கிறேன் நான். "

கொஞ்சம் நிறுத்து முச்சு விட்டுக் கொண்டவள்,

"ஆனால் இந்த ஒரு மாசமா நீங்க பண்ணது இருக்கே, அப்பப்பா என்னால் தாங்க முடியலை சாமி. உங்க பொண்டாட்டி தானே நான் இரண்டு வருஷம் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன் நமக்கு கல்யாணம் ஆகி ஒரு வார்த்தை, ஒரு வார்த்தை ஏண்டி அப்படியா உன் மாமாப் பையனை காதலிச்சியான்னு நேரடியா கேட்டிருக்கலாம்ல. அதுக்குள்ள என்னென்ன பிரச்சனை, ஒரே நாள்ல பேசுறது முழுசா நிறுத்திக்கிட்டு, நான் ஏதாவது பேசினால் பதிலும் பேசாமல், எவ்வளவு கொடுமை. சரி எப்பவாவது இதுக்கு முன்னாடி இப்படி நடந்திருந்தா கூட பரவாயில்லை, முந்தானையை பிடிச்சிக்கிட்டு பின்னாடியே அலையற புருஷன் ஒரே நாளில் பேசுறதை முழுசா நிறுத்திட்டா பயம் வராதா? நான் எவ்வளவு பயந்திட்டேன் தெரியுமா, உங்களுக்கு உடல்நிலையில ஏதாச்சும் பிரச்சனையா இல்லை.

அத்தம்மாக்கு ஏதாச்சும் உடம்புக்கு சரியில்லையா ஒன்னுமே புரியலை. இதில நான் ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டது போல் பெரிய பார்வை வேறு, உங்க அம்மாக்கிட்ட சொல்லும் சில வார்த்தைகளிலும் பொடிவைத்து பேசி, நான் சாதாரணமா சொல்ற ஒவ்வொரு வார்த்தையையும் வேற அர்த்தத்துல தப்பா புரிஞ்சிக்கிட்டு, பெரிய கொடுமை பண்ணீங்க நீங்க, ஆபிஸில் வேலையே செய்யலை நான், எப்பப்பாரு அழுதுக்கிட்டேயிருக்கிறதப் பார்த்து பக்கத்தில் வேலை செய்றவங்கெல்லாம் விசாரணை வேற, இந்த கடைசி ஒரு மாசம் தூங்கியிருப்பேன்னு நினைக்கிறீங்க. ஒரு மணிநேரம் கூட தூக்கம் வரலை. நான் உண்மையிலேயே உங்களுக்கு உடம்புக்கு ஏதாவது ஆயிருச்சுன்னே நினைச்சேன்.

நேத்திக்கு எதேச்சையா நீங்க எங்க சொந்தக்காரர் ஒருவரை பார்த்ததாகச் சொல்ல, நான் அவருக்கு போன்போட்டு கேட்டதும் தான் விஷயமே புரிஞ்சிச்சு, அவரு பாவம் பயந்திட்டார் நாம ரொம்ப அன்னியோன்யமா இருக்கிறதப் பார்த்துட்டு நான் முன்னமே இதைப்பத்தி பேசியிருப்பேன்னு நினைச்சி சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டதும் வந்துச்சே கோபம் உங்கமேல, இந்த சின்ன விஷயத்தக்கா இப்படி ஒரு டிராமா பண்ணீங்கன்னு பளார் பளார்னு கன்னத்துல அறையணும்னு நினைச்சேன். ஆனா முடியலை. என்னால புரிஞ்சிக்க முடியுது உங்களுடைய எந்த விஷயத்தையும் என்கிட்டேர்ந்து நீங்க மறைச்சதில்லை, இது நான் மறைச்சிட்டேங்கிறதால வந்த கோபம், புரியுது. ஆனாலும் நீங்க பண்ணது ரொம்ப அதிகம்.

இப்ப உங்களைப் பார்த்தால் அந்த பழைய முகம் ஞாபகம் வரவேமாட்டேங்குது. என்னை முறைக்கிற எதையும் சந்தேகமாப் பார்க்கிற, இப்ப இருக்குற இந்த புதிய முகம்தான் ஞாபகத்துக்கு வருது. அதனால நான் ஒரு முடிவு பண்ணிட்டேன், நான் கொஞ்ச நாளுக்கு எங்க அம்மா வீட்டுக்கு போறேன். நீங்க பண்ணதுக்கும் நான் பண்ணதுக்கும் சேர்த்து நான் கொடுத்துக்குற, கொடுக்குற தண்டனை இதுதான். உங்களை பிரிஞ்சி உங்கக்கூட பேசாம இருக்குறதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் எனக்கு நான் கொடுக்கும் அதிகபட்ச தண்டனை, அப்படியே உங்களுக்கும் இந்த பிரிவு நம்ம இரண்டு பேரையும் பத்திய நல்ல விஷயங்களை நினைவுக்கு கொண்டுவர உதவும் உதவணும். நான் வர்றேன்."

அவள் வெளியே சென்று கொண்டிருக்க எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திருமணம் முடிந்து ஒன்றிரண்டு ஆண்டுகள் முடிந்திருக்குமென்று நினைக்கிறேன், எதிர் எதிரான கருத்துக்கள் கொண்டிருந்தாலும். ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால் நானோ இல்லை அகிலாவோ சுலபமாக விட்டுத்தந்து விடுவோம் என்பதால் எப்பொழுதுமே பிரச்சனைகள் பெரிதாக ஆனதில்லை. ஆனால் அந்தப் பிரச்சனை கொஞ்சம் சிக்கலானது, என்னைப் பொறுத்தவரை என் மனைவியிடம் இருந்து நான் எதை எதிர்பார்க்கவில்லையோ அது நடந்திருந்ததால்; என்னால் இந்தப் பிரச்சனையில் விட்டுத்தர முடியவில்லை. எங்கள் திருமணத்திற்கு முன்பே நான் அவளிடம், நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா என்று கேட்டிருந்தேன்.

அவள் இல்லையென்று சொன்னதை முழுமனதோடு நம்பியிருந்த காரணத்தால், ஒரு முறை எதேச்சையாக பார்த்த என் தூரத்து உறவினர், அகலாவிற்கும் அவள் மாமா பையனுக்கும் நிச்சயம் செய்வதாய் இருந்ததாகவும், இருவரும் கொஞ்சம் அன்யோன்யமானவர்கள் என்றும் பின்னர் ஏதோ ஒரு பிரச்சனையால் அந்த நிச்சயமும் திருமணமும் நடக்கவில்லையென்றும் சொல்ல எனக்கு இந்த விஷயம் தெரியாமல் இருந்தது

மனதிற்கு கொஞ்சம் கனமாகத்தான் இருந்தது.

எவ்வளவுதான் மறக்க நினைத்தாலும் அந்த விஷயத்தை சுத்தமாக மறக்கவே முடியாமல் அவளிடம் கேட்கவும் முடியாமல் எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. நான் இதுவரை அவளிடம் எதையுமே மறைத்ததில்லை அதைத்தான் நானும் அவளிடம் எதிர்பார்த்தேன். அவள் இந்த விஷயத்தில் பொய் சொல்லியிருந்தது என்னில் அதிக கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அவள் வீட்டைவிட்டு போய்விடுவாள் என்பதையெல்லாம் நான் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் அவள் சொன்னதைப் போல எங்களிடம் ஏற்பட்டிருந்த இந்த ஒன்றிரண்டு மாத வித்தியாசங்களை இந்த பிரிவு சரிசெய்துவிடுமென்றால் சரிதான் என்றே நானும் நினைத்தேன்.

முதலில் சில மாதங்களுக்கு அகிலாவை நான் பார்க்கவேயில்லை, எனக்கே கூட ஆச்சர்யம் தான் ஆனால் அவள் வேண்டுமென்றே என்னை சந்திப்பதைத் தவிர்த்துவந்தாள் என்று மட்டும் தெரிந்திருந்தது. சிலசமயம் அவள் வீட்டிற்கே கூட சென்றிருந்தேன். அவங்கம்மாவும் தங்கை ஜெயஸ்ரீயுமே பேசி திருப்பி அனுப்பிவைத்தார்கள். அலுவலகத்திற்கு தொலைபேசினாலும் பேசாமல் தவிர்த்துவந்தாள். பின்னர் நானும் அவளாய் வழிக்கு வரட்டும் என்று விட்டுவிட்டேன். பின்னர் சாயங்கால வேளைகளில் அவளாகவே வீட்டிற்கு வரத்தொடங்கியிருந்தாள். வந்தாளும் என்னுடன் பேசமாட்டாள் அம்மாவிடம் சென்று பேசிக்கொண்டிருப்பாள், அம்மாவிற்கு அவள் மீது கோபமிருந்தாலும் அதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் பேசிவந்தார்கள். அந்த சமயங்களில் மாலை நேரங்களில் காப்பி கொண்டுவந்து கொடுப்பாள், அதுதான் எனக்கும் அவளுக்குமான தொடர்பாக இருந்தது. எனக்கு இந்தப் பிரச்சனையின் ஆரம்பத்திலேயே முழுப்பிரச்சனை என்னுடையது தான் என்று தெரிந்தாலும் என்னால் அவள் பக்கத்தில் இருந்த தவறை ஒப்புக்கொள்ள முடியவேயில்லை,

ஆனால் இப்பொழுது அவள் என்னிடம் செய்து கொண்டிருந்தது கொஞ்சம் கொடுமையான விஷயம். கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கும் வரை வந்திராத ஒரு விரக்தி, சில மாதங்களாக என்னில் வரத்தொடங்கியிருந்தது, அது என் அலுவலக வேலையை பெரிதாக பாதிக்கத்தொடங்கியிருந்தது. சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலேயே வந்துவிடுவாள், அம்மாவுடன் கோயிலுக்கு செல்வது இன்னபிற விஷயங்களில் உதவுவது என்று இருந்தாலும் பெரும்பாலும் என்னுடன் பேசமாட்டாள் என்றால் முழுவதுமாக என்று சொல்லமுடியாது. ஏதாவது இரண்டொறு வார்த்தைகள் வரும் அவ்வளவுதான். ஆனால் எக்காரணம் கொண்டும் வீட்டில் தங்கமாட்டாள், இரவு வீட்டிற்கு சென்றுவிடுவாள், பலசமயங்களில் என்னையே கொண்டுவந்து விடவும் சொல்வாள். இதெல்லாம் அந்த ஒன்றிரண்டு மாதங்கள் நான் செய்ததற்கான தண்டனையாக நான் முழுமனதாக ஏற்றுக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் சாதாரணமாக பேசத்தொடங்கியிருந்தோம்.

அதன் பிறகு நடந்தது தான் எங்கள் வாழ்க்கையின் பொற்காலங்கள். திருமணம் செய்துகொண்டு இரண்டு வருடங்கள் கழித்து நாங்கள் காதலிக்கத் தொடங்கியிருந்தோம். எங்கள் வாழ்க்கையில் ஒருமுறை நடந்த இந்த சம்வத்தால் நாங்கள் இன்னும் இன்னும் அன்யோன்யமாகியிருந்தோம். நானும் அவளும் மாற்றி கடிதம் எழுதியது, ஐஸ்கீரிம் பாரில் ஐந்து மணிநேரம் சாப்பிட்டது. அலுவலகத்தை கட்டடித்துவிட்டு, சினிமாவிற்குப் போனது. கொழுத்தும் பன்னிரெண்டு மணிவெய்யலில் கடற்கரை மணலில் உட்கார்ந்து கதையடித்துக் கொண்டிருந்தது. இப்படி காதலர்களாக இருந்து செய்ய முடியாததை கல்யாணத்திற்கு பிறகு செய்துகொண்டிருந்தோம். ஒரு வருடம் போல் தாம்பத்யம் இல்லாததை இப்படி சில சில சில்மிஷங்கள் செய்து சரிசெய்து கொண்டிருந்தோம்.

பின்னர் ஒரு வழியாக சமாதானம் ஆகி வீட்டிற்கு வந்ததும், இருவீட்டாரின் கண்டிப்பான உத்தரவின் பேரில், இங்கே கட்டடித்துவிட்டு செய்து வந்ததை, லீவெடுத்து மணாலியில் செய்யச் சென்றோம், குழந்தைக்காக வேண்டி. கழுதை வயதான பிறகு காதல் செய்ய ஆரம்பித்தாலும் நீண்ட யோசனைகளுடன், முழுவதும் தீர்மானிக்கப்பட்டபடி, எங்கள் இரண்டாவது தேனிலவு மணாலியில் முடிந்த பத்தாவது மாதத்தில் அகிலா எதிர்பார்த்தபடி, நான் எதிர்பாரதபடி பிறந்த ஆண்குழந்தைக்கு ஏற்கனவே தீர்மானித்து வைத்திருந்த பவானி என்ற பெயரையும் வைத்தோம்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ்

யார் இந்த நபர்??? Guess

யார் இந்த நபர்,



1. உலகம் முழுதிற்கும் ஒரே கரென்ஸி வேண்டும் என சிந்தித்தவர்.
2. இவரை கௌரவிக்கும் நோக்கில் தபால்தலையை இந்திய அரசாங்கம் வெளிவிட்டுள்ளது.
3. இவர் இறந்த பிறகு இவரை புதைத்த இடத்தில் இருந்து இவரது சடலம் தோண்டியெடுக்கப்பட்டது சில திருடர்களால், இவர் குடும்பத்தினரிடம் மிரட்டி பணம் கேட்க நடந்த இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. பிறகு ஆறடி சிமெண்ட்டால் இவரது சமாதி மீண்டும் செய்யப்பட்டது இது போன்ற மற்றொரு சம்பவம் நடைபெறாமல் இருக்க.

இதெல்லாம் இவரைப்பற்றிய தேவையில்லாத குறிப்புகள், இருந்தாலும் இவர் யார் என தீர்மானிக்க இது தேவைப்படாது என்றே நினைக்கிறேன்.

இவரைப்பற்றிய ஒரு கட்டுரைக்கு ஒரு சிறிய முன்னுரை அவ்வளவே.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In Only ஜல்லிஸ்

நரேந்திர மோடி உண்ணாவிரதம்.

நரேந்திர மோடி உண்ணாவிரதம்.



நர்மதாவின் சர்தார் சரோவர் அணைக்கட்டின் உயரத்தை உயர்த்துவதை பற்றி நடந்த இன்றைய மீட்டிங்கில், இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையானவற்றை செய்துவிட்டபின் உயர்த்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதுவரை வேலையை நிறுத்துமாறு பணிக்கப்போவதாக நீர்வளத்துறை அமைச்சர் பிரதமரை கேட்டுக்கொள்ளப்போவதாகவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து குஜராத் முதல்வர் நாளை இரண்டு மணியில் தொடங்கில் 51 மணிநேர உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். மேதாபட்கரின் உண்ணாவிரதம் இவ்வளவு விளைவுகள் ஏற்படுத்துமானால் மோடியின் உண்ணாவிரதம் இன்னும் பெரிய சினிமாவாக இருக்கும்.

இந்த நர்மதாவை உபயோகப்படுத்தும் மூன்று மாநிலங்களுமே பிஜேபியால் ஆட்சி நடத்தப்படும் மாநிலங்கள். இதனால் இந்தப் பிரச்சனை புது வடிவத்தை இப்போதைக்கு அறிவித்துள்ளது.

இதற்கு பிறகு குஜராத்தில் நடக்கப்போவதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு என்று அறிவித்துள்ளது கொஞ்சம் ஆர்வத்தை தூண்டுவதாக இருந்ததால் வேலைவெட்டியில்லாமல் இதை பதிகிறேன்.

மொத்தமாய் 200 இன் ஜினேயர்கள் இதில் தற்சமயம் வேலை பார்த்து வருகின்றனர். இதில் ஏற்கனவே 32,000 கியூபிக் சிமெண்ட் அளவிற்கு வேலை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.

இதேவிஷயத்தின் கீழ் அமீர்கானின் மேதாபட்கரின் ஆதரவை எதிர்த்து குஜராத்தின் போராட்டம் நடந்துள்ளது. இதனை குறிக்க சுட்டிகளை தேடியும் கிடைக்காததால் அப்படியே சொல்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சுய சொறிதல் சொந்தக் கதை நட்சத்திரம்

நட்சத்திரம் - நன்றிகள் பல

இது போன்று தமிழ்மணத்தின் நட்சத்திரமாய் இருக்க ஒரு அருமையான வாய்ப்பை நல்கிய தமிழ்மண நிர்வாகிகளுக்கு முதற்கண் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் இத்தனை நேர சிக்கல்களுக்கும் இடையில் 14 பதிவுகளைக் போட்டிருக்கிறேன் என நினைக்கும் பொழுது முன்பிருந்ததைப்போல் கொஞ்சம் வேலை குறைவாக இருந்திருக்குமேயானால், என்னால் தமிழ்மண வாசகர்களின் நிலையை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. :-)

இந்த வாரம் மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக என் பதிவுகளை படித்துவரும் மக்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பாக இதை எடுத்துக்கொண்டு, இதுவரை ஆதரவளித்து வந்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி! நன்றி!! நன்றி!!!

உங்களிடம் கூகுளின் அனலைடிக்ஸ்ஸைப்(google.com/analytics) பற்றி முன்பே சொன்னவன் ஆதலால் அதனால் கிடைக்கும் ஒரு பயனாக கீழ்வரும் ஒரு ஸ்ட்டாட்டிஸ்டிக்ஸ் விவரத்தை அளிக்கிறேன். எத்துனை பேர் இதை பயன்படுத்திவருகிறீர்கள் என்பது தெரியாது ஆனால் முன்பே சொன்னது போல் ஒரு அற்புதமான் டூல் இது. அதன் ஒரு எடுத்துக்காட்டாக இந்த ஒருவாரமாக என் பதிவைப்பற்றி விவரங்களை தருகிறேன்.

அதற்கு முன் உங்களில் பலருக்கு கூகுளின் வீடியோவைப்(video.google.com) பற்றி தெரிந்திருக்கும். அதை அமெரிக்காவைத் தவிர்த்த வெளிநாடுகளில் இருந்து உபயோகிப்பதில் உள்ள சிக்கலைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். அதை மீறியும் கூகுளின் இந்த வீடியோ சேவையை பயன்படுத்த ஒரு வழிமுறையைத் தருகிறேன். இதுவும் சொல்லப்போனால் கூகுளில் இருக்கும் ஒரு பக்(BUG) கே.

1. இதற்கு முதலில் உங்களுக்கு தேவையான கூகுளின் வீடியோ உரல் தெரிந்திருக்க வேண்டும், உதாரணமாக கீழே உள்ள உரலை எடுத்துக் கொள்ளுங்கள்:
http://video.google.com/videoplay?docid=-4319256606292930218

2. உங்களால் இந்த உரலை நேரடியாக உபயோகிக்க முடியவில்லை என்றால் கீழே குறிப்பிட்டுள்ளது போல் கூகுளின் டிரான்ஸ்லேட்டர் சர்வீசை உபயோகித்து: http://www.google.com/translate?langpair=en|en&u=(url of the video)

3. அதாவது:
http://www.google.com/translate?langpair=en|en&u=http://video.google.com/videoplay?docid=-4319256606292930218

4. சந்தோஷமா இருங்க.


பாரதியின் தீவிரதாசனாய் கீழேயுள்ள கவிதை வரிகளுடன் இந்த நட்சத்திர வாரத்தை இனிதே நிறைவு செய்கிறேன்.

தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?


-----------------------


Read More

Share Tweet Pin It +1

24 Comments

In கிரிக்கெட் சினிமா புத்தகங்கள்

நட்சத்திரம் - சினிமா, கிரிக்கெட் மற்றும் புத்தகங்கள்

"யாராச்சும் சரியான `சினிமா கிறுக்கு’ன்னு சொன்னால் கோபமாய்த்தான் வரும். சினிமா பார்ப்பவர்களெல்லாம் அறிவில் கொஞ்சம் மட்டமானவர்கள் என்ற வியாக்கியானத்தை உடைய கோஷ்டி ஒன்று உள்ளது. சினிமா பார்ப்பவர்களின் அறிவு எதனால் குறையுமென்று அவர்களால் விளக்க முடிவதில்லை. இன்னொரு கோஷ்டி தமிழ்ப் படங்கள் பார்ப்பவர்களெல்லாம் காட்டான்கள் போலவும் ஆங்கில அல்லது பிற மொழிப் படம் பார்ப்பவர்களே அறிவு ஜீவிகள் என்பது போலும் பேசித் திரிவார்கள். மொழி வேறு அறிவு வேறுன்னு புரியாத அவர்களின் விமர்சனம் தேவையற்றது."

தாணு அவர்கள் அவர்களுடைய நட்சத்திரப் பதிவில் இப்படிச் சொல்லியிருந்தார்கள். இப்படி சில விஷயங்கள் சிலருக்கு ஒன்றாய் இருப்பதைப் பற்றி நான் நினைத்து வியந்திருக்கிறேன். ஆங்கிலப்படங்கள் பற்றி விமர்சனங்களை செய்தவன் என்ற முறையில் சில விஷயங்களை தெளிவுபடுத்தவும் இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொள்கிறேன்.

சினிமா

எங்க வீடு ஒரு மிடில்கிளாஸ் வீடு என்பதால், தொலைக்காட்சிப்பெட்டி எங்கள் வீட்டிற்கு வந்தது ரொம்பநாள் கழித்துத்தான். அப்பொழுதும் சில குடும்ப பிரச்சனைகளால் படத்தின் கிளைமாக்ஸ் வரை(இல்லை அதற்கு சற்று முன் வரை) பார்த்துவிட்டு கிளைமாக்ஸ் பார்க்கப்படாமல் விட்டிருக்கிறேன். இதனால் நான் கிளைமாக்ஸ் மட்டும் பார்க்காத படங்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும். இதனாலெல்லாம் சின்னவயதில் ஒரு வெறி சினிமா பார்ப்பதென்றால்!

உங்களிடம் நீங்கள் உங்கள் அப்பா, அம்மா மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் சினிமாத் தியேட்டர் சென்று பார்த்த படங்களை பட்டியலிடச் சொன்னால் முடியுமா ஆனால் என்னால் முடியும்.

காரணம் கொஞ்சம் ஸ்ட்ரிக்டான அப்பா அம்மா என்பதால், நாங்கள் எங்கள் ஏரியாவிற்கு, பிலக், சாந்தி படம் வந்தால் மட்டும் தான் அழைத்துச் செல்லப்படுவோம். அதாவது முதன்மை தியேட்டர்களில் படம் வந்து ஓடி, பிறகு இரண்டாம் தன்மை தியேட்டர்களில் ஒடும் பொழுது அப்பொழுதும், குறிப்பாக ரஜினி படங்கள் மட்டும் தான் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறோம். இதற்கு சில மிகச்சில விதிவிலக்குகள் உண்டு, அஞ்சலி, சேரன்பாண்டியன் போல், மொத்தம் ஒரு பத்து படங்கள் தான் நாங்கள் பார்த்திருப்போம் குடும்பமாக மீதி எட்டுபடங்கள் ரஜினியினுடையதே. மற்றபடிக்கு அந்த படங்கள் சன்டிவியில் காட்டப்படும்வரை காத்திருக்கவேண்டும்.

இப்படியிருந்த எனக்கு காலேஜ் வாழ்க்கை இன்னொரு பரிமாணத்தைக் காட்டியது என்றாலும் காலேஜை கட் அடித்துவிட்டு செல்லும் மாணவர்கள் தவறானவர்கள் என்பது போல் போதிக்கப்பட்டிருந்ததால் இது ஆரம்பித்தது இரண்டாம் ஆண்டில் தான். பிறகு மூன்றாம் ஆண்டில் பிராஜக்ட் ஏற்கனவே செய்துவிட்டு அதற்காக கொடுக்கப்பட்ட கல்லூரி நேரத்தில் சினிமாத்தியேட்டரில் குடித்தனம் நடத்தியிருக்கிறேன்.

அதன் பிறகு வேலைக்கு செல்ல ஆரம்பித்த நாட்களில் ஆரம்பித்தது சினிமாவின் மீதான பைத்தியம் என்றால் அது கொஞ்சமும் மிகையல்ல, நான் பார்த்த படங்கள் கொஞ்சம் அதிசயமாகவே இருக்கும், சன், ராஜ், ஜெயா,கே போடப்படும் எல்லா படங்களையும் பார்த்துவிடுவேன், எல்லாப்படங்களையும்.

எங்க அம்மாவும் அக்காவும் எப்பிடிடா இந்தப்படத்தையெல்லாம் பார்க்குற என்பது மாதிரியான படங்கள் அந்த லிஸ்டில் அதிகம்.(இப்படித்தா இருக்கும் எனத்தெரிந்தும் தீபாவளி முதல் நாள் பார்க்கும் விஜய் படங்கள் உள்ளிட்டு.) யார் இயக்குநர், யார் நடிகர் என்று பார்க்காமல் படம் பார்த்திருக்கிறேன். இதில் மொழிமாற்றப்பட்ட பூதப்படங்கள், சில ஆந்திரமொழி டப்படங்கள் என எல்லாம் அடக்கம். படங்களின் வரிசை தரவில்லை அவ்வளவுதான்.

ஆனால் ஆங்கிலப்படங்களின் தாக்கம் என்னிடம் அதிகமாகத்தான் இருந்தது, எச்பிஒ வும் ஸ்டார் மூவிஸ்ம் பின்னர் சன்,ராஜ், ஜெயா, கேயை அடக்கிவத்திருந்தாலும் நேற்றுவரை இரவு 10.30 க்கு கேடிவியின் படத்தை பார்த்துவருகிறேன். இதில் எனக்கு எந்த பிம்ப உடைதலும் நிச்சயம் கிடையாது.

ஒரு காலத்தில் ஞாயிற்றுக்கிழமையில் சன்டிவியில் போடப்படும் நான்கு மணிப்படத்தை பார்க்கவிட்டால் என்னமோ ஞாயிற்றுக்கிழமை வீணாய்ப்போய்விட்டதாய் நினைத்த காலம் உண்டு. இன்று கொஞ்சம் மாறியிருக்கிறது ஏனென்றால் இன்று நான் தனிக்காட்டு ராஜா, அதிகம் காசு, டிவிட் ப்ளேய்ர், டிவிடி, விசிடி கலெக்ஷன் என்னிடம் பெரிதாக உள்ளது அதனால் படங்கள் பார்ப்பது குறைந்தது கிடையாது.

பிரச்சனைகளின் மத்தியில் நடமாடிக்கொண்டிருப்பதால் சினிமா எல்லாவற்றையும் மறந்துவிட்டு கொஞ்ச நேரம் நிம்மதியாக நடமாட வைத்திருக்கிறது. இதில் நான் தாணுவின் கூற்றை முற்றிலுமாக ஒப்புக்கொள்கிறேன். மிடில்கிளாஸ் மக்களின் பொழுதுபோக்கில் முக்கியமானது சினிமாதான்.

கிரிக்கெட்

இரண்டாவது விஷயம் கிரிக்கெட், இந்திய இளைஞர்களின் இன்னொரு பொழுதுபோக்கு, விளையாடுவது இல்லை பார்ப்பது. வாழ்க்கையில் காலங்கார்த்தாலை அஞ்சுமணிக்கு நான் எழுந்து படித்ததா சரித்திரமேக் கிடையாது ஆனால் அலாரம் வைத்து முந்தைய நாளே, நொறுக்குத்தீனி வாங்கி வைத்திருந்து எழுந்து பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அதிகம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் எனச் சொல்வதற்கு காரணம். நான் ஒரு ஆஸ்திரேலிய அணியின் பைத்தியக்காரத்தனமான விசிறி. ஒரு நிகழ்ச்சி நடந்தது எங்கள் வீட்டில் அதை சொல்லவேண்டு இந்த நேரத்தில்,

நான் ஒரு மாலை நேரம் விளையாடிவிட்டு, இரவு வீட்டிற்கு வந்திருந்தேன் அக்கா என் அம்மாவின் முன்நிலையில், "தம்பி உனக்கு ரொம்பவும் பிடித்த கிரிக்கெட் ஆட்டக்காரங்கள் யார்" என்று கேட்க, நான் கொஞ்சமும் தயங்காமல் "மார்க் வா, ஷைன் வார்ன்." சொல்லிட்டு மார்க் வா ஒரு நேட்சுரலி கிப்டட் எலகண்ட் ப்ளேயர், அப்புறம் ஷைன் வார்ன், இந்த நூற்றாண்டின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்னு ஆரம்பிக்க, அக்காவும் அம்மாவும் சிரித்தபடியே, அன்று மார்க்கும் வார்னேவும் ஒரு கிரிக்கெட் ஊழலில் மாட்டியிருந்ததை சொல்லி சிரித்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

எனக்கு ஆஸ்திரேலிய அணியை பிடித்திருந்ததற்கு காரணம் அவ்வளவு நிச்சயமாகத் தெரியவில்லயென்றாலும் ஒரு க்ளூ கிடைத்திருக்கிறது. ஆனால் அது வேண்டாம் இங்கே. சினிமாவின் மீதான மோகம் இன்று வரை தொடர்வதைப்போன்று கிரிக்கெட்டின் மீதான மோகம் இன்று இல்லை.முன்பெல்லாம் சினிமா போலத்தான் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாபே விளையாடும் ஆட்டத்தைக் கூட பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தை நேரில் பார்க்கும் சந்தர்ப்பங்களும் மிகச்சிலவே.

இதற்கு ஒரு முக்கிய காரணம். பல நாட்களில் வீட்டிலோ இல்லை நண்பர்களிடமோ என்னால் வாக்குவாதத்தில் இறங்க முடிந்திருப்பதில்லை, அந்த மாட்ச் பார்க்கவேண்டுமென்று. மற்றபடிக்கு விவரங்கள் இன்று வரை நுனிவிரலில் தான் (ஆஸ்திரேலிய கிரிக்கெட் மட்டும். Thanks to baggygreen.com indeed cricinfo.com) உண்மையில் கிரிக்கெட் மீதான பித்து குறைந்தததைப்போல் சினிமா மீதான் பித்தையும் குறைத்துவிட அதிகம் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். முடிவதில்லை. முடிந்தால் ஒன்று மட்டும் நிச்சயம் நான் இப்பொழுது இருப்பதை விட நல்ல இடத்திற்கு சென்றுவிடமுடியும். ஏனென்றால் டிவியும் திரைப்படங்களும் மனிதவாழ்க்கையில் One of the Time Eating habits.

புத்தகங்கள்

ஆசிரியர்கள் வீட்டில் இருந்ததால் புத்தகங்களின் அறிமுகம் மிக எளிதாகக் கிடைக்கக்கூடியதாக இருந்தது. இன்றும் நன்றாக நினைவில் இருக்கிறது நான் முதன் முதலில் படித்த புத்தகம், அது மீண்டும் ஜூனோ. முதல் பாகம் படிக்காமல் இரண்டாம் பாகம் படித்ததற்கு காரணம் ஏதோ ஒரு பத்திரிக்கையில் வந்து அதை பைண்ட் செய்து வைத்திருந்தார்கள் அதனால் தான். ஆனால் அந்தப் புத்தகம் முதலில் படிக்கும் பொழுது ஒன்றுமே புரியவில்லை, நல்ல சூப்பரான ஓவியங்கள் இருக்கும் அழகான நாய்க்குட்டி அவ்வளவுதான்.

பின்னர் அம்மாவால் அறிமுகம் செய்யப்பட்டது இருவர் ஒருவர், பாலகுமாரன் மற்றவர் எண்டமூரி வீரேந்திரநாத். எங்கவீடுகளில் சில எழுத்தாளர்களின் புத்தகங்களை அந்தக் காலத்தில் காசுகொடுத்து வாங்குவார்கள் என்றால் அது இவர்கள் இருவர் தான்.

பின்னர் தான் என் வாழ்வில் மறக்க முடியாத லைபிரரியன் ஒருவரை சந்தித்தேன். அந்த நாட்களில் எல்லாம் லைப்ரரியனாக ஆகிவிடவேண்டும் என்ற ஆசை கூட இருந்தது :-). அவர் தான் எனக்கு வரிசையாக அறிமுகப்படுத்தினார். எப்படி, சி, சி++, ஜாவா என்று படித்தால் கொஞ்சம் நன்றாய் இருக்குமோ அதுபோல் எனக்கு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார் வரிசையாக,

அவர் தான் தேர்ந்தெடுத்து தருவார் புத்தகங்களை பொன்னியின் செல்வர், சிவகாமியின் சபதம், கடல் புறா, யவனராணி இப்படி ஆரம்பத்தில் எப்படி என்னுடைய புத்தக ஆர்வத்தை வளர்க்க முடியுமோ அப்படி வளர்த்தாவர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் சோதனை முயற்ச்சியாக சில நாவல்களை தருவார் பின்னர் நாங்கள் அதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருப்போம். அப்படி சோதனை நாவலாக தந்தது அலை ஓசை. அதை அவர் என்னிடம் தந்த பொழுது நான் பள்ளியில் தான் படித்துக்கொண்டிருந்தேன் அதாவது பன்னிரண்டாம் வகுப்புக்கு கீழ் ஏதோ ஒன்று. அதிகமாய் புரிந்திருக்குமா என்று கேட்டால் சந்தேகம் தான் ஆனால் அந்த அனுபவம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

இப்படி எனக்கு எல்லா நேரத்திலேயும் நல்ல ஆசிரியர்கள் கிடைத்துவிட்டார்கள். பின்னர் தான் தமிழ் இலக்கியங்களுக்கு வழிகாட்டினார் அந்த லைப்ரரியன். அது ஒரு சுகமான அனுபவம் அதைப்பற்றி அப்புறம்.

ஆனால் இத்தனையிலும் நான் ஆங்கில நாவல்கள் படித்ததுகிடையாது. லைப்ரரியன் வற்புறுத்திய பொழுதும் வேண்டாமென்று மறுத்திருக்கிறேன். காரணம் ஒரு இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ். எனக்கு கொஞ்சமாவது புரிந்து படிக்க வேண்டும். மேலோட்டமாக படிக்க பிடிக்காது. அதனால் கொஞ்சம் வற்புறுத்தி லைப்ரரியில் வைக்கப்பட்டிருக்காத சில ஆங்கில நாவல்கள் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதிலும் ஒரு வழமையான தொடக்கம், இதை நானும் மற்றவர்களுக்கு வழிமொழிவேன் நீங்கள் ஆங்கில நாவல்களோ இல்லை கதைகளோ படிக்கும் வழக்கத்தை ஆரம்பிக்க விரும்புகிறீர்களா? சிட்னி ஷெல்டனில் இருந்து ஆரம்பியுங்கள். இது என்வரை நன்றாக உதவியது. பதின்ம வயது ஆட்களுக்கு ஏற்ற மாதிரியான் ஒரு ஆங்கில நாவல்களின் தொடக்கம் இதில் இருக்கும்.

இப்படி ஒரு சரியான ஆரம்பம் இல்லாமல் சுந்தரராமசாமியை படிக்க முடியாதோ அது போல் ஒரு நல்ல ஆரம்பத்தை எனக்கு ஆங்கிலத்தில் ஏற்படுத்திக்கொடுத்தது சிட்னி ஷெல்டன். ஒரே ஒரு புத்தகத்தைப் பற்றி மட்டும் நான் இந்த நேரம் பேச விரும்புகிறேன். யாரவது ராகிராவின் ஒரு புத்தகம் பெயர் பட்டாம்பூச்சு என்று நினைக்கிறேன். ஒரு ஆங்கில நாவலின் மொழிப்பெயர்ப்பு நாவல் அது. நாயகன் செய்யாத குற்றத்திற்காக நாடுகடத்தப்பட்டு சிறையில் இருந்து தப்பித்து பிறகு மாட்டிக்கொண்டு சிறையில் இருந்து தப்பித்து என்று ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்ட நாவல் அது.

என் வாழ்க்கையில் ஒரு நாவலை எடுத்துவிட்டு தொடர்ச்சியாக படிக்கவும் முடியாமல், படிக்காமல் இருக்கவும் முடியாமல் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திய நாவல் அது. யாரவது அந்த நாவல் படித்திருக்கிறீகளா? உங்களுக்கு எப்படி இருந்தது அந்த அனுபவம். ப்ளீஸ் சொல்லுங்களேன்.

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In சோழர் வரலாறு சோழர்_வரலாறு நட்சத்திரம்

சோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்

கொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்டியன் தன்னுரிமையுடன் ஆண்டுவந்தான். சேவூர்ப் போரில் பராந்தகன் தன் பகைவர்களின் யானைகளை வெட்டிவீழ்த்தி, இரத்த ஆறு ஒடச்செய்தான் என்றும் அவனது மகன் ஆதித்தன் சிறுவனாய் இருந்தும் சிங்கம், யானையுடன் போரிடுவதுபோல், வீரபாண்டியனை எதிர்த்துப் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன.

புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்தனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.

இரண்டாம் ஆதித்தன்

இரண்டாம் ஆதித்தனைத் தவிர, மேலும் இருவர், வீரபாண்டியனை வெற்றிகண்டதாகக் கூறுகின்றனர். இவரில் ஒருவன், பார்த்திவேந்திர வர்மன்.

வட ஆற்காடு தென் ஆற்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் பார்த்திவேந்திரவர்மன் என்பவன் யார்? என்று தெளிவாக அறிய முடியவில்லை. இவன் பராந்தகனுக்குக் கட்டுப்பட்டிருந்த கங்க மன்னன் இரண்டாம் பிரதிவீபதியே என்று கருத்து நிலவுகிறது. இக்கருத்து பிரதிவீபதி, பார்த்திவேந்திரவர்மன் என்ற இரு பெயர்களுக்கு இடையே இருப்பதாக நம்பப்படும் ஒற்றுமையின் அடிப்படையில் ஏற்பட்டதாகும்.

இரண்டாம் ஆதித்தன் மற்றும் பார்த்திவேந்திரவர்மன் ஆகியோரது கல்வெட்டுக்களை ஆராய்ந்த கிருஷ்ணசாஸ்திரி கீழ்கண்ட முடிவுகளுக்கு வந்துள்ளார்.

"இவ்விரு மன்னருமே, 'பாண்டியன் தலைகொண்ட' அல்லது 'வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் என்ற விருதுகளைப் பெற்றனர். இரண்டாம் பராந்தக சுந்தர சோழ மன்னனுடன் போரிட்ட பாண்டிய மன்னனே இவ்வாறு குறுப்பிடப்படுகிறான். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் மிகக்குறைவே. தென்பகுதியில் மட்டுமே கிடைக்கும் இக்கல்வெட்டுகள். இவனுடைய 5-ம் ஆட்சி ஆண்டுமுதல் ஏற்பட்டன.

பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுகள் ஏராளமாகத் தொண்டை மண்டலத்தில் காணப்படுகின்றன. இவை 13-ம் ஆண்டு முதல் ஆனவை. பார்த்திவேந்திர ஆதித்த வர்மன், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசனாக இருந்து, தொண்டை மண்டலத்தின் பிரதநிதியாக இருந்திருக்கக்கூடும். ஆதித்த கரிகாலனே உண்மையில் அரியணை ஏறியவனாக தோன்றுகிறது. "

பாண்டிய தலைகொண்ட பரகேசரியின் கல்வெட்டுகள் மிகக்குறைவு என்று கூற முடியாது. அதோடு அவை தெற்கே மட்டுமே, அதாவது தொண்டை மண்டலத்திற்கு வெளியே தென்பகுதியில் மட்டுமின்றி, பிற பகுதிகளிலும் கிடைக்கின்றன. பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுக்கள் ஆதித்தனின் கல்வெட்டுகளிலிருந்து, அவை கிடக்கும் இடங்களைப்பொறுத்து மட்டுமே வேறுபடுகின்றன.

இவனது மூன்றாம் ஆண்டு கல்வெட்டில் பார்த்திவேந்திர ஆதித்த பருமர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான். இவனது பட்டத்தரசியார் உடையார் தேவியார் வில்லவன் மாதேவியார், பெருமானடிகள் தேவியார், தன்மப் பொன்னார் ஆகிய திரைலோக்கிய தேவியார் போன்ற பட்டங்களைப் பெற்றவராவார். கரிகாலக்கண்ணன் எனப் பெயருடையவன், இரண்டாம் ஆதித்தனின் மகனாய் இருக்கலாம், இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் அப்படியொருவன் இருந்ததாய் தெரிகிறது.

எனவே இவன் சோழர் அதிகாரத்திற்கு உட்பட்ட மன்னனாக இராமல், இவனே ஒரு சோழ மன்னனாக இருத்தல் கூடும். ஆதித்தன் என்ற பெயரும் பரகேசர் என்ற விருதும் பெற்ற இம்மன்னனே, ஆதித்த கரிகால பரகேசரி என்பதைத் தெளிவாக்குகிறது. பார்த்திவேந்திர ஆதித்திய வர்மன் என்ற பட்டமும், சில சிறு மாற்றங்களுடன் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் பட்டமும், இவன் பார்த்திவேந்திரவர்மன் என்ற பட்டத்தை ஏற்றதைக்காட்டுகின்றன.

சோழர்கள் புகழ்ச்சியான பட்டங்களை விரும்பி ஏற்றனர். மேலும் ஒவ்வொரு மன்னனும் பல பட்டங்களையும் சூடிக்கொண்டனர். இவனது கல்வெடுகள் 13ம் ஆண்டிலிருந்தே தொடங்குவதால் இவன் தந்தை சுந்த்ர சோழன் அரியணை ஏறியதும் இவன் இளவரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். சிறுவனாக இருந்தபோதே வெற்றியுடன், வீரபாண்டியனைத்தாக்கியவன் என்று லெய்டன் பட்டயம் புகழ்வதால், இது உண்மை என்று தெரிகிறது இதற்குப்பின்னர், சோழ நாட்டின் வடபகுதிய ஆட்சி செய்யும் பொறுப்பை இவன் ஏற்றான். தந்தையின் வாழ்நாளிலேயே இவன் மரணமடையவே, இவனுக்கு பதிலாக பரகேசரி உத்தமசோழன் இளவரசன் ஆனான்.

இந்தக் காலத்தின் வரலாற்றைச் சொல்லுமுன் இதுவரை நாம் தெரிவித்ததின் முடிவுகளைச் சுருங்கச்சொல்லுவோம்.

இராஜகேசரி கண்டராதித்தன் கிபி 949/50 - 957
பரகேசரி அரிஞ்சயன் கிபி 956 - 957
இராஜகேசரி சுந்தரசோழன் கிபி 956 - 73
இரண்டாம் ஆதித்த பரகேசர் பார்த்திவேந்திர கரிகாலன் கிபி 956 - 969.

பரந்தூர்க் கல்வெட்டு

பார்த்திவேந்திர வர்மனின் 15ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு செங்கற்பட்டு மாவட்டத்தில் கிடைத்துள்ளது. இக்கல்வெட்டு அழிந்திருப்பதாலும், இதைக் கூர்ந்து ஆராயும் பொழுது இரு விவரங்கள் உறுதிப்படுகின்றன. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள் ஆண்டு பதினைந்து, இதில் காணப்படும் எழுத்துக்கள் நன்கு செதுக்கப்பட்டிருந்தாலும், இவை எழுதப்பட்டுள்ள கல் பாழ்பட்டுள்ளது.

அக்கால எழுத்து வடிவங்களுடனான இக்கல்வெட்டின் உண்மையை சந்தேகிப்பதற்கான காரணம் ஒன்றும் இல்லை. 15-ம் ஆண்டு என்று ஒப்புக்கொள்வோமேயானால் இரண்டாம் ஆதித்தனே பார்த்திவேந்திர வர்மன் என்ற அடிப்படையில் நாம் மேலே கொடுத்திருக்கும் அட்டவணை பெரும் மாற்றத்திற்குள்ளாகும். உத்தமசோழன் வருவதற்கு முன்னும் 15ஆண்டுகளைக் கணக்கிட இயலாது 13 ஆண்டுகளைக் கணக்கிட்டாலே கால வரையறையை மீறுவதால், சுந்தர சோழன் தன் ஆட்சி தொடக்கத்திலேயே ஆதித்தனையும் உடன் வைத்துக் கொண்டு அவனுடன் ஆட்சிப் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொண்டான் என்ற கருத்தை ஏற்கச் செய்துள்ளது. அதே சமயம் பரந்தூர்க் கல்வெட்டு மட்டுமே, பார்த்திவேந்திரனுக்கு 13க்கு மேற்பட்ட ஆட்சி ஆண்டைத் தருகிறது. 13ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் பல இருந்தாலும் 14ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றேனும் இல்லை. 15-ம் ஆண்டுக் கல்வெட்டு இது ஒன்றே.

எனவே மேலே குறிப்பிட்ட முடிவுக்குத்தான் வர இயலும் பார்த்திவேந்திரந்தான் ஆதித்தன் என்று ஏற்காவிடில், இவ்விருவரிடையே கண்ட பல ஒற்றுமைகளை நாம் அறவே ஒதுக்கிவிட முடியாது. இவ்வொற்றுமைகள் அனைத்துமே எதிர்பாரா வகையில் காணப்படுபவை அல்ல.

ஆகையால் பரந்தூர்க் கல்வெட்டில் காணப்படும் ஆட்சி ஆண்டில் "இ" என்று இரண்டாவது எண் தவறாக பொறிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை ஏற்கலாம். 13-ம் ஆட்சி ஆண்டிற்கு மேற்பட்ட வேறு கல்வெட்டுகள் இனிக் கிடைக்கும் வரை, இக்கல்வெட்டை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.

நாம் இதுவரை ஏற்ற வாதங்களுடன் மற்றொரு முடிவான வளத்தையும் காண வேண்டியுள்ளது. ஆதித்தனும் பார்த்திவேந்திரனும் ஒருவரே என்று ஏற்காவிடில், ஆதித்தனின் வீரபாண்டிய பரகேசரி கல்வெட்டுகளில் மிக அதிகமானது கிபி 969/0 உத்தம சோழ அரியணையில் அமருவதற்கு முன்பாக இந்த ஐந்தாண்டுகள் என்று நாம் கருத வேண்டும். இந்த அடிப்படையில் ஆதித்தனுடைய ஆட்சி ஏறக்குறைய கிபி 694 - 5ல் தொடங்கியிருக்க வேண்டும்.

இதுவே மேலே கொடுக்கப்பட்ட கால அட்டவணைப்படி சுந்தர சோழனின் 8 அல்லது 9 வது ஆண்டாகும். தன் ஆட்சியின் 7-ம் ஆண்டிற்கு முன்பே பாண்டியனுடனான போரில் பெரும் வெற்றி பெற்றான் என்ற விவரமும் இப்போரில் செவ்வூர் என்னுமிடத்தில் நடைபெற்ற தாக்குதலில் சிறுவனான ஆதித்த கரிகாலன் பங்கேற்றான் என்று லெய்டன் கூறுவதிலிருந்து. சுந்தரசோழனின் ஆட்சித் தொடக்கத்திலேயே, ஆதித்தன் துணை அரசனாக விளங்கினான் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. ஆயினும் இதை முழுக்க முழுக்க நம்ப முடியாது. ஏனெனில் துணை அரசனாக இல்லாமலேயே ஆதித்தன் இந்தப் போரில் பங்கேற்றிருக்க முடியும்.

இரண்டாம் ஆதித்தன் கொலை

குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கச் சபை மேற்கொண்டதாக, இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது.

உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே. மகனை இழந்த சுந்தரசோழன், ஒன்று மனம் நொந்து இறந்தான் அல்லது தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான்.

சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தரசோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூட்ம் என்பது புலனாகிறது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,

"விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்)" கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன.

நாம் முன்பே இராஜகேசரி, பரகேசரி பிரச்சனைகளைப்பற்றி பார்த்துள்ளோம். அதைப்போலவே, சுந்தர சோழனால் இரளவரசுப்பட்டம் அளிக்கப்ப்ட்ட இரண்டாம் ஆதித்தன் தன் தந்தையின் வாழ்நாளிலேயே மரணம் அடையவே, இராஜகேசர் சுந்தரசோழன் இறந்தபிறகு, அரியணையேறிய மன்னன் நியதிப்படி ஒரு பரகேசரியாகவே ஆட்சி செய்தான்.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In சோழர்கள் தொடர்கதை நட்சத்திரம்

நட்சத்திரம் - ஒரு சோழ பரம்பரைக் கதை - இறுதிப்பகுதி

சிறிது நேரத்தில் இராஜேந்திரனை அழைத்துக் கொண்டு குந்தவை சென்றுவிட. இராஜராஜரும் வந்தியத்தேவரும் மட்டும் அங்கிருந்தனர். அந்த இடத்தில் நிலவிய மௌனம் இருவருக்குமே விசித்திரமாய் இருந்தாலும், இருவருமே அதை முடிவுக்கு கொண்டுவரும் மனநிலையில் அப்பொழுது இல்லை.

பிறகு சிறிது நேரத்தில் இராஜராஜரே அந்த மௌனத்தைக் கலைத்தார்.

"தேவரே நீங்கள் எனக்கு ஒரு உறுதிமொழியளிக்க வேண்டும். எனக்குப் பிறகு இராஜேந்திரனே பட்டத்திற்கு வருவான் என்ற உறுதிமொழி வேண்டும்."

"அருண்மொழி என்னயிது???"

சாதாரண சந்தர்ப்பங்களில், வந்தியத்தேவர் 'மன்னரே' என்று தான் விளிக்கும் வழக்கம் இருந்தாலும் இருவருக்கும் இடையில் இருந்த நட்புறவும், குந்தவை தேவியை மணந்ததால் வந்த உறவும் வந்தியத்தேவருக்கு அருண்மொழி என்று அழைக்கும் உரிமையை அளித்திருந்ததது இருந்தும் அதுநாள் வரை அப்படி விளித்திருக்காத அவர் அருண்மொழி என்று அன்று விளித்ததற்கு காரணம் அவரிடம் கேட்கப்பட்ட வாக்குறுதி.

இன்னும் சொல்லப்போனால் இராஜராஜர் அப்படிக் கேட்பதற்கான காரணமும் வந்தியத்தேவருக்கு நன்றாகவே விளங்கியது. இருந்தாலும் அப்படியொரு கேள்வி தன்னிடம் கேட்கப்படாது என்றே நினைத்துக்கொண்டிருந்தவரை அந்தக் கேள்வி அதிகமாய்த் தான் அசைத்தது.

"தேவரே இந்தக் கேள்வியை உங்களிடம் நான் கேட்கக்கூடாதுதான். இருந்தாலும் இந்த ஒன்று மனதில் அடியில் இருந்து உறுத்திக் கொண்டிருக்கும் பொழுது என்னால் மற்ற அரசியல் விவகாரங்களில் முழுமனதாக ஈடுபடமுடியாமல் செய்துவருகிறது. உங்களுக்குத் தெரியாததென்ன,

இன்னும் பாண்டியர்கள் கூட முழுமையாக நம் கட்டுப்பாட்டில் வரவில்லை, ஈழதேசத்தின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாண்டியன் உதவி கிடைத்ததும் நிச்சயம் பிரச்சனையளிப்பான்.

கீழைசாளுக்கியத்தின் தாயாதிப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருந்தாலும், மேலைச்சாளுக்கியம் தொடர்ந்து பலம்பெற்றுவரும் நிலையில் என்றைக்கிருந்தாலும் அவர்களால் பிரச்சனையிருக்கிறது. இவை மட்டுமல்லாமல் என்னுடைய கனவான ஒரு கடற்படையை உருவாக்கி பலநாட்களை நோக்கி செல்லவேண்டும்.

இப்படி நாளாப்பக்கமும் பிரச்சனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான் ஒருவரிடம் குறிப்பாக உங்களிடமாவது நம்பிக்கை வைக்கவேண்டுமில்லையா? பல சமயங்களில் அந்த நம்பிக்கை விட்டுப்போய் என்னை பாடாய்ப்படுத்துகிறது. உங்களுக்குத் தெரியாததல்ல, பதினாறு வருடம் நான் பட்டபாடு.

சிறுவயதில் சேவூர்ப்போர்க்களத்தில் பகைவரை சொல்லிச்சொல்லி அடித்த தமையனாரையே, சில ஆட்கள் பின்னணியில் இருந்த பலத்தால் மட்டுமே கொன்று, நியாயமாயும் தர்மப்படியும் எனக்குவரவேண்டிய பட்டத்தை உத்தமசோழனால் பறிக்கமுடியுமென்றால்..." முடிக்க முடியாமல் இராஜராஜர் இழுத்துக்கொண்டிருக்க, வந்தியத்தேவருக்கு மன்னருடைய நிலை நன்றாகத் தெரிந்துதான் இருந்தது.

வந்தியத்தேவர் எதையோ சொல்ல வாயெடுத்தார், ஆனால் அவரைத்தடுத்த இராஜராஜர்,

"தேவரே நான் முடித்துவிடுகிறேன், அரியணைக்கு எல்லா உரிமையும் உள்ள, தமையனாரின் மகன், கரிகாலக்கண்ணன், இராஜேந்திரனுக்கு எதிரியாய் கொண்டுவரப்படுவானோ என்ற அச்சம் என்னை அலைக்கழிக்கிறது. கரிகாலக்கண்ணன் அப்படியொரு ஆசைவசப்படுவானாயின் என்னால் கூட அவனை மறுத்து பேசயியலாதே, தந்தையில்லாமல் வளர்ந்தவனுடைய ஆசையை நிறைவேற்றமுடியாத சிற்றப்பனாய் இராஜேந்திரனை அரியணையில் அமர்த்தும் அளவிற்கு கல்நெஞ்சக்காரனா நான்.

நீங்கள் தான் இராஜேந்திரனை வளர்த்து வருகிறீர்கள், உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கக்கூடாதுதான் என்றாலும் அப்படியொரு சமயம் வரும்பொழுது நீங்கள் என் மகனுக்கு சாதகமாக இருப்பீர்களா?"

முதன் முதலில் வந்தியத்தேவருக்கு, இராஜராஜர் இந்தக் கேள்வியை கேட்க ஆரம்பிக்கும் பொழுது சிறிது வருத்தம் இருந்தாலும். தற்பொழுது சிறிது சந்தோஷமாகக்கூட இருந்தார். உண்மைதான் இரண்டாம் ஆதித்தனின் மகனான, கரிகாலக்கண்ணனுக்கு இராஜேந்திரனுக்கு இருப்பதைப் போன்று அரியணையின் மீது அத்துனை உரிமையும் இருந்தது.

சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தின் பொழுதே ஆதித்த கரிகாலனும் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது, முதலில் துணை அரசனாகயிருந்து பின்னர் அரசனாகவும் பதின்மூன்று ஆண்டுகள் தொண்டைமண்டலத்தை ஆட்சிசெய்தவர். இதனால் முறைப்படியோ இல்லை தருமப்படியோ கரிகாலக்கண்ணன் ஆட்சிப்பொறுப்பைக் கேட்டால் மறுக்க முடியாதுதான்.

இராஜராஜரின் அருகில் வந்து கட்டிப்பிடித்துக் கொண்டவர். சிறிது நேரத்தில் விலகிவிட்டு,

"மன்னரே உங்களின் நிலை எனக்கு நன்றாகப் புரிகிறது. இன்னும் சொல்லப்போனால் எனக்கு நீங்கள் இன்று கேட்ட வாக்குறுதியை நினைத்து கொஞ்சம் நகைப்பாய்க் கூட இருக்கிறது. இதே போன்றதொறு வாக்குறுதியை நான் உங்களிடம் கேட்பதற்காக எத்தனை முறை முயற்சிசெய்து பின்னர் அமைதியாகியிருக்கிறேன் தெரியுமா.

எங்கே உங்கள் தமையனாரின் மேல் பாசமில்லாதவனாக, பக்தியில்லாதவனாக சித்தரிக்கப்படுவேனோ என நினைத்து எழுந்த கேள்விகளை அப்படியே உள்ளுக்குள் கட்டிவைத்திருக்கிறேன். புரியவில்லையா?

நான் உங்களிடம் எக்காரணம் கொண்டும் இராஜேந்திரனைத் தவிர்த்த ஒருவரை அடுத்த மன்னராக அரியணையில் ஏற்ற நீங்கள் நினைக்கக்கூடாது என்று உறுதிமொழி வாங்க நினைத்திருந்தேன். நீங்களே இன்று கேட்டுவிட என்னைப்போல் மகிழ்ச்சியாய் இருப்பவன் இந்த உலகத்தின் யாருமே இருக்கமுடியாது. இதனாலெல்லாம் கரிகாலக்கண்ணனின் மேல் எனக்கு பாசம் கிடையாது என்பதில்லை. இராஜேந்திரன் ஒரு கண் என்றால் கரிகாலக்கண்ணன் மற்றொரு கண்ணைப்போன்றவன்.

வீரத்திலும் விவேகத்திலும் இராஜேந்திரனை அடித்துக்கொள்ளும் ஒருவனை இந்தப் பிறவியில் நான் இன்னும் பார்க்கவில்லை. நம்மையெல்லாம், நம் சாதனைகளையெல்லாம் தூக்கி சாப்பிடப்போகிறான் இராஜேந்திரன். என் மனதை உறுத்திக் கொண்டிருந்ததெல்லாம். நியாய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் என்று எதையோ ஒன்றை சொல்லி உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தின் எங்களில் கைகளை கட்டி வைத்திருந்ததைப்போல் இப்பொழுது நடந்துவிடக்கூடாதென்று தான். அப்படியொரு சூழ்நிலை வந்திருந்தால் உங்களைக் கைது செய்துவிட்டு என் மருமகனை அரியணையில் அமரச் செய்திருப்பேன்."

வந்தியத்தேவர் சொல்லிமுடித்ததும் இராஜராஜர் வந்தியத்தேவரின் முதுகெலும்புகள் உடையும் படி கட்டிப்பிடித்துக்கொள்ள,

"என்னது என் தம்பியைக் கைது செய்வதா? அதற்கு இப்படியொரு உபசரிப்பா? என்ன நடக்கிறது சோழ தேசத்தில் என்று கேட்டவாறு குந்தவை உள்ளே நுழைய, வந்தியத்தேவர் மகிழ்ச்சி சாகரத்தில் நீந்திக்கொண்டிருந்தவர், விளையாட்டாக,

"தேவி நீ ஆள்வதற்கு நாடு கேட்டாயல்லவா? போரிட்டு வேறு நாடுகளைப் பிடித்து நிறைய ஆண்டுகள் ஆகும் வேலையது. பேசாமல் இராஜராஜரை சிறைபிடித்து விட்டு, நாமிருவரும் ஆட்சிசெய்தால் என்ன என்று நினைத்தேன், அதைப்பற்றி மன்னரிடம் ஆலோசனைக் கேட்கத்தான் சந்தோஷமாய் ஆளுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார் அதற்குள் நீயும் வந்துவிட்டாய்."

வந்தியத்தேவர் வேடிக்கையாய் சொல்ல, சோழ வரலாற்றில் பெரும் பெயர் எடுக்கப்போகும் அந்தச் சிறுவன் வந்தியத்தேவருக்கும், இராஜராஜருக்கும் இடையில் நடந்தவற்றை அறியாதவனாய், குந்தவைதேவி வந்தியத்தேவரின் மீது காட்டிய பொய்க்கோபத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

Popular Posts